anti - piracy

Post Page Advertisement [Top]

 அல்லியங்கோதை 

(தீபாஸ்)



அத்தியாயம் 01

மேற்கு கங்க வம்சத்தின் அரசன் முதலாம் பிரிதிவிபதி ஆட்சி செய்த கங்காவடியின் தலக்காட்டு அரண்மனையில் அந்த இரவு ரகசியக் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது.. திருப்புறம்பியம் போரில் வீரமரணம் அடைந்த கங்கனின் இறுதிக் காரியத்தில் கலந்து கொள்ள வந்தவர்களில் முக்கியமானவர்கள் இவர்கள்.

அக்கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒவ்வொருவரின் முகத்திலும் பலவிதமான உணர்ச்சிகள் ததும்பி நின்றன அரசனின் வெற்றிடத்தையடுத்து செய்ய வேண்டியதென்ன என்ற ஆலோசனைக்காக கூடியிருந்தனர்.

அரசவையின் ஆஸ்தான ஜோதிடப் பண்டிதர் கபாலநாதனின் ஆலோசனைக்கு அனைவரும் காத்திருந்தனர். அவரின் முகமோ உணர்வுகளை வெளிக்காட்டாமல் வெறுமையைப் பூசியிருந்தது.

கங்கனோ தனது பேரன் பல்லவ அபராஜிதனுக்காக முன்னெடுத்தப் போரில் வீரமரணம் அடைந்திருந்தார். ஆனாலும் போரில் அவருக்கு துணை நின்ற சோழ இளவல் ஆதித்த சோழனின் வீரத்தால் வெற்றிக்கனி அபராஜிதனுக்கே எட்டியிருந்தது. ஆகவே நாளை மறுநாள் பல்லபீடத்தில்  அபராஜிதன் முடி சூட உள்ளான்.

கூடியிருந்த அனைவரும் கபாலநாதன் உதிர்க்கும் வார்த்தையை செவிமடுப்பதற்காக அவரையே பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள்.

சந்தடி ஏதும் இல்லாத முன் இரவு வேளையது. அரண்மனையின் நடுக்கூடத்துக்கு வலதுபுறம் இருந்த ஆலோசனை மண்டபம்,  இரண்டு ஆட்களின் உயரம் கொண்ட  நிலைக் கதவுகளால் அடைக்கப்பட்டிருந்தது. உள்ளிருந்த காற்று கூட வெளியேறாமல் காற்றோட்டம் கூட நுழையாத வகையில்லாது காலதர்களின் கதவுகளும் மூடப்பட்டு இருந்தது.

அதன் நான்கு மூலைகளிலும் தொங்கும் மண் விளக்குகளில் வழிந்த மஞ்சள் ஒளி தேனென நிறைந்திருந்தது. இருபது பேருக்கு தோதாக நாற்காலிகள் வட்டமாக அடுக்கப்பட்ட இருக்கைகளில் ரகசிய ஆலோசனையின் பொருட்டு ஐவர் மட்டுமே அமர்ந்திருந்தனர். அவர்களுடன் சேர்ந்து வெறுமையாக இருந்த இருக்கைகளின் நிழலும் அறையினுள் வீற்றிருந்தது.

கங்கனுக்கென்றே அமைக்கப்பட்ட அரசு ஆசனத்தில் இப்போது அவரின் மகள் வழிப் பேரன் அபராஜிதன் அமர்ந்திருந்தான்.  அதற்கு நிகரான  வேலைப்பாடுகள் கொண்ட இருக்கையில், கங்க மன்னின் பெரும் மதிப்பைப் பெற்றிருந்த கபாலநாதன் அமர்ந்திருந்தார்.

பிரிதிவிபதியின் மகள் விஜயா மற்றும் அவளின் கணவர் பல்லவ கம்பலவர்மன், மாமன் விட்ணு கோபால், நண்பன் பாணன் ஆகியோரும் அங்கிருந்தனர்.

அரசனாய் முடிசூடப்போகும் அபராஜிதனுடன், நல்லுறவைத் தொடர விரும்பி அவனுக்கு தோள் கொடுக்க காத்திருந்தனர்.  அவர்களிடம் ஜோதிடன் கபாலநாதன் சொன்ன ஆலோசனையைக் கேட்டவர்களால் சட்டென அதனை ஏற்க முடியவில்லை.

அதில் ஆளுக்கொரு அபிப்ராயத்தை கொண்டிருந்தனரே ஆனாலும் அவற்றை முன் வைக்க தயங்கினர்.

அத்தயக்கம் சிறிதும் இல்லாத அபராஜிதனோ...

ராஜகுருவே கள்வரன் கோ கண்டன் வீர நாராயணன் மகள் அல்லியங்கோதையையா சொல்கிறீர்கள்!?”

ஆம் மொழிப்பெயர்ந்தேயன் கலி அரசன் களப்பாளன் குலமகளைத் தான் சொல்கிறேன்உக்கிரமாய் பதில் கொடுத்தார்.

அவனின் மனமோ ஆஹா... இந்த பிராந்தியத்தின் அழகியென வியந்து பார்க்கப்படும் அரசகுமாரி அல்லியல்லவா அவள்! அவளை நான் மணக்க வேண்டுமா?! எனக்கு அவள் மனைவியானால் ராஜயோகம் நிலைக்கப் பெற்று பெரும் ராஜ்யத்தை நான் கொள்ளும் யோகம் கிட்டுமாமே...  கரும்பு உண்ண கசக்குமா எனக்கு...?’ என்று எண்ணினான்.

அவனின் முகக்குறிப்பைக் கொண்டே உள்ளக் கிடங்கை உணர்ந்தார் கபாலநாதன்.

அந்த நேரத்தில் மூலையில் திரை மறைவில் நின்று கொண்டிருந்த அபராஜிதனின் மனைவி கவுண்டினியா நெஞ்சம், இந்த உரையால் குத்தி வலிக்கச் செய்து கண்களில் கண்ணீர் துளிர்த்தது. எனக்கு பிள்ளை பாக்கியம் இல்லையேஇருந்திருந்தாலாவது கணவனின் மீதான உரிமையைத் தக்க வைத்துக் கொள்ளலாம்... அல்லியங்கோதை அவருக்கு மனைவியாகிப் பிள்ளைப் பாக்கியம் உண்டானால், தான் மூலையில் எதுக்கும் உதவாத பிண்டமாய் இருக்க நேரிடும் என்ற உண்மை அவளைச் சுட்டுப் பொசுக்கியது.

ராஜ காரியங்களுக்காகவும், புத்திர பாக்கியத்துக்காகவும் அரசர்கள் பலதாரமணம் புரிவது அவசியம் தானேஎன்று எண்ணி தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டாள்.

அப்பொழுது பல்லவ அரசனும் அபராஜிதனின் தந்தையுமான கம்பவர்மன்,ஜோதிடன் கபாலனை  யோசனையாகப் பார்த்தபடி ராஜகுருவே... கள்வரன் குல மகளை நாங்கள் முறைப்படி பெண் கேட்டால் தர மறுக்கவே வாய்ப்புள்ளது. இருந்தும் துணிந்து பெண் கேட்டு தரமுடியாதென மறுத்தால் அது நமக்கு அவமானத்தையல்லவா உண்டாக்கும். எங்கள் இரு நாடுகளுக்கும் இடையே அரசாங்க ரீதியாக பகை உள்ளதல்லவா?”

ராஜாகுருவோ புன்முறுவலுடன் பல்லவ மன்னா…. அல்லியங்கோதை உங்கள் மகனுக்கு மனைவியாக வேண்டுமென்றால் முறைப்படி பெண்கே ட்டு எடுத்தல் மட்டுமே வழியாகாது. தனது திறத்தால் செய்யப்படும் தந்திர கைப் பிறட்டு வேலைகள் பல உள்ளன. வீரியம் பெரிதா? காரியம் பெரிதா? என்று பார்த்தால் காரியமே பெரிது என்பார்கள்...

ஜோதிடரின் பதில் திருப்தி அளிக்காததால் முகம் தெளியாமல் அமர்ந்திருந்தார். அவரைத் தெளியவைக்கும் பொருட்டு,

கண்டன் வீரநாராயணனின் பதிபத்தினி ஈசனிடம் பிள்ளைக்கனி வரம் வேண்டி கடும் விரதமிருந்து... ஈசனின் அருள்பாளித்து குழந்தைப் பேறு உண்டாகி பிறந்தவள் அல்லியங்கோதை. குழந்தைப்பேறு கிடைக்க  சில முக்கிய கிரக கிரகணங்களின் சேர்க்கைகள் தேவைப்படுகின்றது. ஈஸ்வரன் அருளினால் அத்தம்பதி இருவருக்கும் பத்தாம் வீட்டுக்கு அதிபதி இலக்கனத்தில் இருக்கும் போது குழந்தை ஜனித்ததாள். ஆகவே அவள் ராஜயோகம் குன்றாது பிறந்தவளானாள். அவளைத் துணைவியாக கொண்டவனின் ராஜயோகம் நிலையானதாகவும் பேரரசனாகும் பாக்கியமும் அடைபவனாகிறான்என்றார்.

ஜோதிடரின் இப்பதிலில் பல்லவனின் முகம் லேசாகத் தெளிவதைக் கண்டு திருப்தியுடன் பேச்சைத் தொடர்ந்தார்.

ஆனால் அபராஜிதனின் கிரகநிலை இப்போது கிட்டியிருக்கும் இந்த அரசமுடி இவனின் சிகையைக் கொய்யும் சாதகமே தந்திருக்கிறது... பேரனின் நன்மையை தனது நன்மையாக சிரமேற்ற பிரதிவிபதியின் மரணமே அதற்கான அத்தாட்சி...என்றவரின் பேச்சை இடைமறித்து

ஜோதிடரே போதும்... தந்தை வீரமரணம் அடைந்து நம்மை விட்டு நீங்கிச் சென்ற துக்கம் தாளாது வேதனைப் படுவது போதும்... அவரின் மரண செய்திக் கேட்டப் பின்னும் என் உடலில் உயிர் நிற்பதற்கு காரணம் நான் ஈன்றெடுத்தவனே ஆவான். அபராஜிதனை ஆட்சி பீடத்தில் ஏற்ற பெரும்பாடுபட்ட  தந்தையாரின் ஆசையை நிறைவேற்றி வைக்கும் கடமை எனக்குள்ளது. என் மகனின் ராஜ பரிவாரங்களை கண் குளிர காண வேண்டும் என்ற நெஞ்சுரத்தோடு நிற்கிறேன். அம் மணிமுடி அவனின் சிகையை வாங்குமென்று ஜோதிட சாஸ்த்திரத்தின் ஆசான் நீங்கள் சொல்வதைக் கேட்கவே என் குலை நடுங்குகிறது...

பல்லவ ராணி விஜயாவின் தவிப்புக்கு குறையாத அளவு கணவன்  கங்கனின் மனமும் மகனுக்காகத் தவித்தது, கலங்கிப் போனது.

அச்சம் வேண்டாம் தாயே... அதற்கான உபாயத்தைத் தான் நான் ஆலோசனையாக கூறியிருக்கிறேன். அபிராஜிதனின் இந்த கிரகணத்தின் நிலை மாற... ஈசனின் அருள் முழுவதுமாய் பெற்ற அல்லியங்கோதை உன் மகனின் சரிபாதியாக வேண்டும். அதுவும் நாளை மறுநாள் பல்லவ நாட்டுக்கு அரசனாய் அபராஜிதன் முடிசூடி பன்னிரெண்டு மாதங்களுக்குள் அல்லியங்கோதை உங்கள் குலமகளாக வேண்டும்

அப்போது விட்ணு கோபால் சிரித்த படி என் மருமகனின் குலக்கொழுந்து அபராஜிதவர்மன்  சாமானியப்பட்டவனா? அரச குலத்தில் பிறந்தவன் பெண்ணை கந்தர்வம் கொள்ள வைப்பது முடியாத காரியமா!?”  என்றார்.

குறுநில மன்னராகிய பாணரோ  நாளை மறுநாள் முடிசூடி அரசபரிவாரங்களுடன் பல்லவன் அபராஜிதன் தயாராகயிருக்கட்டும். அல்லியங்கோதை அரண்மனை விட்டு

வெளியேறிச் செல்லும் நேரம், இடம் எல்லாம் அறிந்து சொல்கிறேன்என்றான்.

*****

வைகாசி இளவேனிற் காலமாதலால் இருள் வேகமாக விலகி வெளிச்சம் புகத் துவங்கியிருந்த காலை வேளையில், அந்தப் பகுதியில் இருந்த மரம், செடி, கொடிகளெல்லாவற்றிலும் மலர்கள் பூத்துக் குலுங்கி இயற்கையாக நந்தவனத்தை உருவாக்கியிருந்தது. அதன் நடுவில் இருந்த வாவியில் நீராடிக் கொண்டிருந்த மூன்று பெண்களின் கலகலப்பான சிரிப்பொலியை மீறி தூரத்திலிருந்து வந்த குதிரையின் குளம்பொலி அப்பெண்களின் காதில் விழுந்தது. சூழலை அவதானிக்க சட்டென சிரிப்பினை நிறுத்தினர் அப்பெண்கள்.

அல்லி, அன்றைக்கு வந்த அதே குதிரையாக இருக்குமோ... அது அன்று போல இன்றும் இங்கே வருவது போலல்லவா உள்ளதுஎன்றாள் வருவாய்த்துறை அதிகாரி களப்பாளராயன் மகள் மந்தாகினி.

இல்லடி... அது செக்காட்டான் ஆலயத்தை நோக்கிச் செல்கிறது. கூர்ந்து கேள் அப்பாதையில் அல்லவா அது பயணிக்கிறதுஎன்றாள் அல்லியங்கோதை.

என்ன பேசுகிறீர்கள் இருவரும்? என்றைக்கோ... ஏதோ... குதிரை குளம்பியின் ஓசை, அது இதுவென பேசுகிறீர்களே... எனக்குத் தெரியாத விஷயத்தைப் பேசுகிறீர்கள். என்னவென எனக்கும் சொல்லுங்களேன்!?” என்று கேட்டாள் இளைய கண்டனும், படைத்தளபதியுமாகிய கண்டன் இரவியின் புதல்வி இரவிக்கோதை.

சட்டெனத் தான் வாய் விட்டு விட்டதை உணர்ந்த மந்தாகினி, விழித்தபடி நெஞ்சில் கை வைத்தாள். அவளைக் கண்களால் மிரட்டி இயல்பாக்கிக் கொண்டே  இரவிக்கோதையிடம் அதொன்றுமில்லை அக்கா,  ஒரு வயதான யாத்திரிகர் வழிமாறி அரசகுலப் பெண்களாகிய நாம் குளிக்கும் நந்தவனம் பக்கம் வந்துவிட்டார். நம்நாட்டு பழக்கவழக்கம் தெரியாமல் வந்தவரை,  இனி இந்த வழி வரக்கூடாதெனச் சொல்லி அனுப்பிவிட்டோம்.  அதைத் தான் சொல்கிறாள்

வயதான பயணி எனச் சொல்கிறாய். ஆனால் இப்பொழுது செல்லும் குதிரையின் குளம்பொலி, வாலிப வீரனொருவன் பாய்ந்து போகும் படியான ஓசையெழுப்பியல்லவா  போகிறதுசந்தேகமாய் கேட்டாள் இரவிக்கோதை.

குதிரையின் குளம்படியோசையை வைத்து அதன் வயதையும் தின்மையையும் தான் உணர முடியும் அக்கா. குதிரையைச் செலுத்தும் நபர் பற்றி எப்படி கணிக்க முடியும்? சரி பேச்சை விடுங்கள், இப்படி நாம் பேசிக்கொண்டே இருந்தால் சூரியன் உச்சிக்கே வந்துவிடுவான். நந்தவனப் பூக்களை கொண்டு போய் பூஜைக்கு கொடுக்கணும் நாழியாகிவிட்டதுஎனச் சொல்லிக் கொண்டே வாவியை விட்டு வெளியேறினாள் அல்லியங்கோதை.

எழுந்து செல்லும் அக்குமரியின் பிட்டம் தாண்டி நீண்டு அடர்த்தியாய்... பளபளப்புடனும் நெளிவுநெளிவாக மயில் தோகையாய் படர்ந்திருந்தது கூந்தல், அக்கார் கூந்தல் அவளின் பின் பக்கத்தை மறைக்க முயன்றது... அதை மீறி வெளிப்பட்ட அவள் மேனியின் சிலை வடிவமும் வாழைத் தண்டு நிறத்தையும் கொண்ட இளவரசியும் தனது தோழியுமாகிய அல்லியின் அழகை எப்பொழுதும் போல வியந்துப் பார்த்துக் கொண்டே மந்தாகினி வெளியேறினாள். இருவரும் கரைக்கு போனதால், அல்லியின் கூற்றுக்கு எதிர்வாதம் வைக்க முடியாமல் இரவிக்கோதையும் அவர்களைத் தொடர்ந்து தண்ணீரை விட்டு வெளியேறி கரைக்கு வந்தாள்.

முன்னாள் சென்று கொண்டிருந்த அல்லியோ மனதினுள் அவராக இருக்குமோ...? ஆலயத்துக்குப் போனால் தெரிந்து கொள்ளலாம்...என்று எண்ணினாள். இருவரிடமும் நிதானமாக உடை மாற்றச் செல்வதாகக் காட்டிக் கொண்டு நடந்தவளுள் ஆலயத்தை விட்டு குதிரைக்காரன் செல்லும் முன் தான் அங்கு சென்று விடவேண்டுமேஎன்ற பரபரப்பு தொற்றியிருந்தது.

நந்தவனத்துக்கு இடையில் இருந்த பெரும்பாறையைக் குடைந்து உருவாக்கி இருந்த உடை மாற்றும் அறையில் சென்று துரிதமாக ஈரவுடையைக் களைந்தாள் ஏற்கனவே அவளுக்காக அங்கே கொண்டு வந்து வைத்திருந்த புத்தாடையை உடுத்திக் கொண்டிருந்தாள் அல்லி. அப்பொழுது அவள் காது கூர்மையுற்றது, நந்தவனத்துக்குள் மேலும் பல குதிரைகளின் குளம்பொலிச் சத்தம் கேட்டத்தில் யோசனையானாள் ஆகவே...

தழைய தழைய உடுத்திக் கொண்டிருந்த புடவைக் கட்டை உருவி எடுத்துத் திருத்தி.... போர் பயிற்சியின் போது கட்டுவது போல கட்டிக் கொண்டாள். வெளியில் செல்லும் முன் தன் பாதுகாப்புக்கென வைத்திருக்கும் வாளை உறையிலிருந்து உருவிக் கைகளில் பிடித்த படி சத்தமில்லாமல் வெளியில் வந்தவளுக்கு, அங்கே கண்ட காட்சியில் சினம் உண்டானது.

திடகாத்திரமான அரசனுக்கு உண்டான அடையாளங்களுடன் இருந்தவனின் வாளின் முனையில் அவளின் அக்கா இரவிக்கோதை நின்று கொண்டிருந்தாள்.  மந்தாகினியோ ஏதும் செய்ய வகையில்லாது, கைகளைப் பிசைந்து கொண்டிருப்பதைக் கண்டவள் சரட்டென்று ஒரே பாய்ச்சலில் சென்று, கோதையை ஒரு கையால் பற்றி இழுத்து மறுபுறம் நிறுத்தினாள். கண் இமைக்கும் நேரத்தில் அவற்றை செய்தவள், அவ்வாலிபனை எதிர்கொள்ள தோதாய் வாளைக் கையில் ஏந்தி நின்றாள்.

---தொடரும்----

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib