அல்லியங்கோதை
தீபாஸ்
அத்தியாயம் 02
அல்லியங்கோதை அப்படி பாய்ந்து நின்றதில்
ஆச்சரியம் இல்லை. சிறுமியாக இருந்த போது தனது தாயை இழந்தாள். அதன் பின்பு அவளை வளர்த்தது தந்தை இரவின் நாராயணன். அவருடன் கழித்த காலமெல்லாம் வாள் சண்டை, குதிரை ஏற்றம், வேட்டையாடுதல், மரம் ஏறுதல், மலை ஏறுதல் எனப் போர் திறன்களால் அவளை
நிறைந்திருந்தது.
பாடல், நடனம், அலங்காரம் போன்ற இளவரசிகளின் வழக்கமான
பொழுதுபோக்குகளில் அல்லிக்கு விருப்பமில்லை. போர் பயிற்சிக்கு இடையூராக இருப்பதால் ஆவணங்களையும்
அவள் விரும்பவில்லை. சிற்றன்னை தேவகியின் கட்டாயத்தால் கழுத்து, கை, காதுகளில் ஒவ்வொன்றை மட்டும் அணிந்து இருந்தாள். அந்த எளிமையிலேயே அவளின் அழகு மிளிர்ந்தது. எனவே அவைகளில் ஒவ்வொன்றை மட்டும் அணிந்து இருப்பாள்.
குதிரை வீரர்களோடு வாளேந்தி வந்து வாளேந்தி நின்றவனுக்கு, சாதாரண பிரஜைகளைப் போல எளிமையான கோலத்திலும் மிளிரும் அழகுடன் தன்னை
எதிர்த்து வாள் பிடித்து நின்ற அல்லியங்கோதையைக் கண்டவன்
புருவம், அவளின் தோரணையிலும் அழகிலும் வியந்து
மேலே உயர்ந்தது. இருந்தாலும் அவளை மெய்காப்பாளருள் ஒரு
பெண்ணென்றே கணித்தான். அவன் பல்லவ அரசன் அபராஜிதன்.
பல்லவ அரசனாக முடிசூடி ஆட்சி பீடத்தில் அமர்ந்த அபராஜிதவர்மன், கடந்த பத்து தினங்களில் அரசபரிவாரங்களை ஏற்று தனக்கு விசுவாசமாக
இருக்கும் நபர்களை. அரசு அதிகாரத்தில் நியமித்து ஆட்சி
நடைபெற ஆயத்தங்களைத் தொடங்க விளைந்த போது ஒன்றை உணர்ந்தான்.
இவனுக்கு முன்பு பல்லவத்தின் தலைநகரான காஞ்சியை பெரியப்பா ‘நிருபதுங்க பல்லவன்’ ஆட்சி செய்தார். “மூன்றாம் நந்திவர்மனின்” மூத்த மனைவிக்கு பிறந்தவர் பெரியப்பா*நிருபதுங்கன்.
‘மூன்றாம் நந்திவர்மனின் இரண்டாவது மனைவி ‘பழுவேட்டையாரின்’ புதல்வியான மாறன்பாவையார் ஆவார். இந்த மாறன்பாவையாருக்கும் மூன்றாம் நந்திவர்மனுக்கும்
பிறந்த மகன் ‘பல்லவ கம்பவர்மன்’. இக் கம்பவர்மன் கங்கநாட்டு மன்னன் பிரிதிவிபதியின்
மகள் விஜயாவை மணந்திருந்தார்.
கங்க மன்னன் மகள் விஜயாவுக்கும், மூன்றாம் நந்திவர்மனுக்கும் பிறந்த புதல்வன்
அபராஜிதவர்மன். இவன் தந்தை கம்பவர்மன், பல்லவ நாட்டின் வடபகுதியை ஆட்சி புரிந்து வந்தார். பெரியப்பா நிருபத்துங்கன் ஆட்சி செய்த பல்லவத்தின்
தென்பகுதியான தஞ்சையையும் சேர்ந்து ஆட்சி புரிய எண்ணிய அபராஜிதன் வாரிசு உரிமைப்
போரை துவங்கினான்.
கம்பவர்மனுக்கு பெண் கொடுத்த கங்க மன்னன் ‘பிரதிவீபதி’ பேரன் அபராஜிதனின் ஆசையை, தனது சிரமேற்கொண்டு போரை முன்னெடுத்தார். தன்னுடன் போர்க்களத்தில் உதவுமாறு சோழ மன்னன் விஜயாலயானிடம் உதவி கேட்க... சோழ மன்னன் விஜயாலயன் அப்போரினால் தங்களுக்கு ஆதாயம்
கிடைக்க வகையுள்ளதை உணர்ந்தார். சோழ இளவரசன் ஆதித்தியனும் அதனை மனதில் கொண்டே பல்லவருக்கு உதவ முன் வந்தார்கள்.
காஞ்சியைத் தலைமையகமாக கொண்டு ஆண்ட
பல்லவன் நிருபத்துங்கன், அபராஜிதனை எதிர்கொள்ள, பாண்டிய மன்னன் வரகுணனையும் முத்தரையரையும் கூட்டுச்சேர்க்க
போருக்கான மேகம் சூழ்ந்தது.
கொள்ளிடத்தின் கரையிலுள்ள வயல்களும்
ஆலமரத்தோப்புகள் சுற்றிலும் அமைந்திருக்கும் பகுதியில் இப்போர் நிகழ்ந்தது. போரின் முடிவில் அபராஜிதன் சோழ இளவரசன் ஆதித்தியனின் உதவியில் வெற்றி பெற்றான். போரின் முடிவில் ஆராய்ந்த போது போரின் காரணமாய் படைபலம் மற்றும் செல்வபலம்
ஆகியவற்றை இழந்து வளம் குன்றிய மன்னனாய் தான் நிற்பதை உணர்ந்தான்.
பெரிய அளவில் இருக்கும் பல்லவ நாட்டின்
மீது ஆதிக்கம் செலுத்த தேவையான வளங்கள் தற்போது குன்றிய காரணத்தாலும்... சோழ இளவல் ஆதித்தனின் உதவியில் போரில்
வெற்றிகொண்டதற்கு நன்றி செலுத்தும் விதமாகவும்... தனது முன்னோர்கள் முன்பு போரிட்டு சோழர்களிடம் இருந்து
கைப்பற்றிய நிலபரப்புகளை திரும்ப அவர்களுக்கே உரியதாக ஒப்படைக்க முன்வந்தான்.
இதனால் சோழர்களின் ராஜ்ஜியம் விரிவடைய
ஆரம்பித்தது. அவர்களின் கை ஓங்கியது. சிற்றரசராக இருந்த சோழர்கள் ஒரு பெரிய ராஜ்யத்தை
சம்பாதிக்க திருப்புறம்பியம் போர் அடித்தளமிட்டது.
மொத்த பல்லவ சாம்ராஜ்யத்துக்கும்
முடிசூடிக்கொண்ட அபராஜிதன் தங்கள் நிலை உணர்ந்து அதை சரிசெய்ய ஜோதிடர் கபாலநாதனின்
உபாயத்தை செயல்படுத்த முடிவெடுத்தான். எனவே அல்லியங்கோதையை கவர்ந்து சென்று, தனது மனைவியாகக் கொள்ள வந்திருந்தான். கொங்கு தேசத்தில் களப்பிரர் மன்னன் கோகண்டன்
வாரிசுகள் ஆட்சி புரிந்த குறும்பொறை நாட்டின் தலைநகரான
விடாரபுரம் வந்திருக்கிறான்.
களப்பிரன் குல மகள் அல்லியங்கோதையின்
அழகைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தான். இதுவரை நேரில் பார்த்திராத அவளை, அவள் இருக்குமிடம் பற்றி குறுநிலமன்னன் பாணர் கூறிய
தகவல்களின் அடிப்படையில் தேடி வந்தவனுக்கு, கண்முன்னால் நின்ற பெண்களில் அரசகுமாரிகளுக்கான
அடையாளங்களுடன் நின்ற இரவிக்கோதை தென்பட்டாள். அவளே அல்லியங்கோதையெனத் தவறாக கணித்து
கவர்ந்துசெல்லத் துணிந்தான்.
*****
அத்தியாயம்
02
அபராஜிதன் தன் முன்பு வாளேந்தி நின்ற இளம் பெண்ணை ரசனையுடன் பார்த்தபடி மனதினுள் ‘களப்பிரர் குலத்தில் அரசிளங்குமாரிகள் மட்டுமல்ல
அவர்களின் மெய்க்காப்பாளராக இருக்கும் பெண்கள் கூட மயக்கும் அழகிகளாக
இருக்கிறார்களே!’ என்று வியந்தவன்…
“அழகான பெண்களின் கையில் வாள் எதற்கு? கடைக்கண் பார்வையையே உங்களின் ஆயுதமாக்கலாமே?” என்றவனின் கண்ணியமில்லாதப் பேச்சால் அவனை வெறுப்பாய்
நோக்கினாள்.
அவனின் வார்த்தைகள் இன்னுமே அவளின்
சினத்தைத் தூண்டியது. கையில் பிடித்திருந்த வாளை லாவகமாகச் சுழற்றி, அவனின் கையில் இருந்த வாளைத் தட்டி தூக்கிப் போட முயன்றாள். அவளிடம் இருந்து இத்தனை திறமையான வாள் வீச்சை எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் கடைசி நிமிடத்தில் சுதாரித்து அவளி வாளை
தடுத்து நிறுத்தினான்.
ஒரு பெண் தனது வாளைத் தட்டிவிட
வருகிறாளா!? அவமானம் அவனின் கோபத்தைத் தூண்டியது. மூர்க்கமாய் தாக்கத் தொடங்கினான். அவளோ திடமாக நின்று லாவகமாக அவனின் வாளை எதிர் கொண்டாள்.
அதே நேரம் அல்லி மந்தாகினிக்கு கண்ஜாடை செய்தாள்.
அவளின் கண்ஜாடையைப் புரிந்து கொண்ட மந்தாகினி இரவிக்கோதையிடம் “வாருங்கள் இளவரசி”எனச் சொல்லி அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றாள்.
“அல்லியை இப்படி விட்டுவிட்டு எப்படியடி
போக..?” என்றவளைப் பார்த்து
“அவர்களுக்கு தங்களை காத்துக் கொள்ள முடியும்... வாருங்கள் நாம் சென்று காவலர்களை அழைத்து வரலாம்” எனச் சொல்லி மந்தாகினி அவளை இழுத்துச் சென்றாள்.
பல்லவ புரவி வீரர்கள், அவர்கள் இருவரின் வழியை மறிக்க முயன்றனர். மந்தாகினி நழுவி அவர்களின் இடையில் புகுந்து கையில்
இரவிக்கோதையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினாள்.
அங்கு வளர்ந்து நிற்கும் முட்களுடன் உள்ள புதர்செடிகள் இயற்கை வேலியாக இருமருங்கிலும் அமைந்திருக்க... அதன் இடையில் உள்ள ஒற்றையடிப் பாதையில் குதிரை வீரர்கள் அவர்களை இலகுவாய் தொடர முடியாமல் திணறினார்கள்.
அபராஜிதனோ, தன்னிடம் வாள் கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருப்பது அல்லியங்கோதை என்று உணராமல்... அங்கிருந்து ஓடிச் செல்லும் இரவிக்கோதையைத் தான்
அல்லியென எண்ணினான். ஆதலால் அவளைத் தப்ப விடக்கூடாது என்று பரபரத்தான். அதற்குத் தடையாய் வாள்சண்டை தொடுக்கும் அல்லியின்
வாளோடு வாளை மோத விட்டபடி பின்னடைந்தான்.
குதிரை வீரர்களில் சிலர் அந்த
ஒற்றையடிப் பாதையில் ஓடிய பெண்களை, குதிரையின் மேல் அமர்ந்து பிடிக்கச் செல்ல முயன்று
தோற்றனர். எனவே சிலர் புரவியை விட்டு குதித்தார்கள். ஆள் உயரத்திற்கு புதர்கள் வளர்ந்து நிற்க, அதன் இடையில் வளைந்து நெளிந்து செல்லும் ஒற்றையடிப்
பாதையில் சென்ற இரு பெண்களைத் தொடர்ந்து போய் பிடிக்க முயன்றனர். அபராஜிதனுடன் வாள் சண்டையிட்டுக் கொண்டே பின்னடைந்தபடி அந்த ஒற்றையடிப் பாதைக்கு
அருகில் வந்துவிட்டான்.
பெண்கள் இருவரையும் தொடர்ந்து
சென்றவர்களின் கண்களை விட்டு சட்டென அந்தப் பெண்கள் இருவரும் மாயமாய் மறைந்து
போனார்கள். அதைக் கண்டு திகைத்து எங்கு போனார்களென்று கண்டுபிடிக்க முடியாமல் குழம்பி
நின்றனர் வீரர்கள். அதனை அபாராஜிதனிடம் தெரிவிக்க “அரசே... அரசே அப்பெண்கள் இருவரும் மாயமாய் மறைந்து விட்டார்கள்!”என்று கூச்சலிட்டார்கள்.
அதனால் அவனின் கவனம் சிதறியது. சமயத்தைப் பயன்படுத்திய அல்லியங்கோதையின் வாள் அவனின்
முகம் தொட்டு கோடு இழுத்தது.
அரசிளங்குமாரியை தவறவிட்ட ஆத்திரம் மற்றும் காயத்தால் உண்டான எரிச்சலும் சேர்ந்து
கொதித்தான். “ஏய்” என்ற கர்ஜனையுடன் வாளை முழு வலிமையுடன் வீசினான்.
அவன் வீசிய வாளோடு தன் வாளை மோதி விட்டு உண்டான ‘கிளிங்’ என்ற சத்தத்தோடு அவனைத் தடுத்து நிறுத்த முயன்றாள்
அல்லி.
அவனோ தனது முழுபலம் கொண்டு அவளை பின்னோக்கிச்
செலுத்திக் கொண்டே முன்னேறியவன், “யாருக்கு எதிராய் வாளை வீசுகிறாய் தெரியுமா? பல்லவ அரசன் அபராஜித வர்மனோடு மோதுகிறாய். பெண்களை என் வாள் காயப்படுத்த விரும்பாது. ஆனாலும் அதன் பொறுமைக்கும் ஒர் அளவு உண்டு” என்று கர்ஜித்தான்.
அவன் தள்ளுவதால் பின்னோக்கி சென்று கொண்டிருந்த அல்லியங்கோதை இகழ்ச்சியாய் சிரித்த படி ,கால்களை முயன்று ஊன்றி நின்று கொண்டே “ஆமாம்.. ஆமாம்... இவரோடு வாளேந்தி போரிடும் பெண்களுடன் எல்லாம்
துணிந்து எதிர்க்க தைரியம் அற்றவர் தான் பல்லவ அரசன் என்று தெரிகிறதே... நிராயுதபாணியில் இருக்கும் பெண்ணைக் கடத்திக் கொண்டு போக முயன்ற பெண் பித்தர் தானே... பல்லவ அரசர்களுக்கு இது வழக்கம் தானோ!?” என்றாள்.
அவளின் வார்த்தை சினமூட்டியது ஆனால்
அப்போது தங்களை நோக்கி ஏராளமான காலடிகள் நெருங்கும் சத்தம், காலால் படை வருவதை அறிவுறுத்தியது. குறைவான வீரர்களுடன் வந்திருக்கும் தான், அங்கிருந்து செல்வது தான் அப்போதைக்கு புத்திசாலித்தனம் என்று உணர்ந்தான்.
“உன்னுடைய இத்தகையச் செயலுக்கும், பேச்சுக்கும் விரைவில் அதற்கான தண்டனையைத் தருவேன்” என்று உறுமிய படி பாய்ந்து புரவியில் ஏறி குதிரை வீரர்களுடன்
பூங்காவை விட்டு வெளியேறினான்.
அங்கு விரைந்து வந்த குதிரை
வீரர்களிடம் அபராஜிதன் சென்ற பக்கம் கைநீட்டி சுட்டி “இந்தப் பக்கம் தான் செல்கிறார்கள், தொடர்ந்து போய் பிடியுங்கள்” என்று கட்டளையிட்டாள்.
அரசகுடும்பத்தார்கள் மட்டும்
அறிந்திருந்த முட்புதர்களுக்கு இடையில் இருக்கும் ரகசிய சுரங்கப்பாதையில் புகுந்து
போய்க் கொண்டிருந்தனர் மந்தாகினியும் கோதையும். அப்பாதை எளிதில் மற்றவர்களின் கண்ணுக்கு புலப்படாது.
சுரங்கப்பாதையில் பயணித்து சொக்கட்டான்
ஆலயத்தின் அர்த்தமண்டபத்தை வந்தடைந்தனர் பெண்கள் இருவரும். இரவிக்கோதையோ, கோவிலின் மண்டப வாசலில் இருக்கும் அரசாங்க காவலர்கள்
மூலம் நந்தவனத்தில் வாள்சண்டை போட்டுக் கொண்டிருக்கும் அல்லியங்கோதைக்கு துணையாக
போர் வீரர்களை உடனே அனுப்புமாறு ஆணையிட மறுநொடியே அங்கிருந்து கிளம்பிய வீரர்களின்
குழு ஒன்று நந்தவனத்துக்கு விரைந்தது. கணிசமான தொகையுள்ள வீரர்கள் நந்தவனத்தை அடைவதற்குள்
குதிரையில் ஏறி அபராஜிதன் தப்பித்துச் சென்று விட்டான்.
வீரர்களை தொடர்ந்து பூங்காவுக்குள்
வந்த மந்தாகினியும், இரவிக்கோதையும் வேகமாக அல்லியிடம்
வந்தார்கள், “அல்லி... உனக்கொன்றும் இல்லையே இதற்குத் தான் அரண்மனையிலேயே நீராடலாம் என்றேன் கேட்டீர்களா?” என்றாள் இரவி.
“அக்கா, ஏனிந்த பதட்டம். ஆபத்தைக் கண்டு அஞ்சி அரண்மனைக்குள்ளேயே பதுங்கி
இருக்க நாமென்ன பதுமைகளா? அதோடு நம் நாட்டில் நமக்கென்ன ஆபத்து
வந்து விடப்போகிறது என்று எண்ணினேன். வந்ததால் தானே தெரிகிறது நமக்குத் தெரியாமல் நம் நந்தவனத்துக்குள்
பிறர் நுழைந்து விடும் படி காவலில் மெத்தனம் இருப்பது தெரிய வந்திருக்கிறது” எனச் சொல்ல அதை மற்ற இருவரும் கேட்ட படி நடந்து அரண்மனையை வந்தடைந்தார்கள்.
அரண்மனையில் அந்தப்புர வாசலிலேயே தேவகி
நின்றிருந்தார். அவர் மிகவும் பதட்டத்துடன் இருந்தாள். பெண்கள் இருவரையும் கண்டதும் “பத்திரமாக இருவரும் வந்துவிட்டீர்களா...? நந்தவனத்தில் அன்னியர்கள் புகுந்து விட்டதாகவும் அல்லி அவர்களுடன் வாள் சண்டையிடுவதாகவும் சேதி வந்ததும் நான் பயந்தே போய் விட்டேன்” என்றாள்.
அப்பொழுது ஒரு காவலர் அங்கு வந்து “வணங்குகிறேன் தாயே, இளவரசிகள் இருவரையும் அரசர் உடனே தன்னை வந்து சந்திக்க சொன்னார்” என்று பணிவுடன் தேவகியிடம் சொல்லவும், “இதோ அனுப்பி வைக்கிறேன்” என்றவர் “ம்... உடனே செல்லுங்கள்” என்றார் மகள்கள் இருவரையும் பார்த்து.
*****
.jpeg)
No comments:
Post a Comment