anti - piracy

Post Page Advertisement [Top]


                 நீல நிலா! (ஆதன்-னின்)
                                             
                                                             பாகம்-1

                      அத்தியாயம் -04
                       
        
 அன்பின் குடில்!   

வெற்றியும் அறிவும் வீட்டு வாசலை அடையும் நேரத்தில் வேலுச்சாமி வேப்ப மரத்தடியில் கட்டிலில் அமர்ந்திருக்க வெளிக்குடிசையில் மரகதம் சமையல் வேலையில் இருந்தாள்.

"அடடே வாங்க செந்தாங்கல் இளவரசர் அறிவழகனே சரியான நேரத்திக்குத்தான் வந்துருக்கிங்க கொழம்புல கொதிக்கற கோழி நேத்தே உங்களுக்கு தகவல் சொல்லிருச்சி போல"னு அறிவிடம் வழக்கமான விளையாட்டு பேச்சை ஆரம்பித்தார் வேலுச்சாமி.

"என்ன வேலு சொல்றிங்க கோழிக்கொழம்பா? டே வெற்றி அப்பவே மனசு சொல்லிச்சுடா அதான் வெரசா உன்ன இழுத்துட்டு வந்தன்"

" வந்து சாப்டுக்கலாம் அறிவு. பஞ்சாயத்து ஆபிஸ்ல மதிய சோத்துக்குனு நகர்ந்தாங்கனா பியூன தவிர ஒருத்தர் இருக்கறதில்ல வா வெரசா போய்ட்டு வந்திருவோம்" னு வெற்றி வண்டிய தள்ளியப்படி வர…..

" ஏய்யா வெற்றி கத்தரிக்கா கொழம்பு சட்டியில கொதிச்சாலே இளவரசரு அப்புடி இப்புடி நகர மாட்டாப்ல. கோழிக்கொழம்புக்குலாம் வாய்ப்பே கெடையாது. எதுக்கு பூனைய மடியில கட்டிக்கிட்டு நீயா போய்ட்டு வந்துருனு" வேலுச்சாமி சொல்ல வெற்றி வண்டிய உதைத்து கிளம்பினான்.

" மரகதம் நல்லெண்ணதான ஊத்தி செய்ற?! கொஞ்சம் வெரசா பாத்துவுடு வயிறு கத்துது"னு அறிவு சமையல் கொட்டாய்க்குள் நுழைந்தான்.

" இன்னும் வெரசா வேகனும்னா எங்காலையும் கையையும் அடுப்புல துணிச்சாதான். நீ இங்க நின்னா கொழம்ப வாசம் புடிச்சே ருசி இல்லாம பண்ணிப்புடுவ அப்பன்கிட்ட போய் உட்காரு. ரெண்டுக்கும் சரியா இருக்கும்"னு மரகதம் அறிவ தள்ளாத கொறயா தொரத்த…….

" ஐய்யய்யோ என்ன வார்த்த சொல்லிப்புட்டவ இளவரசரோட என்னை ஈடு வைச்சி பேசலாமா. அவரு வாழ்க்க என்ன வாழ்ற பவுசென்ன. கஞ்சிக்கி செத்த நான் எங்க"னு வேலுச்சாமி ஆரம்பிக்க……

" எதோ பாவமேனு ரெண்டு துண்டு கறியாவது மிச்சம் வைக்கலாம்னு நெனைச்சன் வேலுக்கு அதுக்கும் கொடுத்து வைக்காது போல. இப்புடி பேசற வாய்க்கு கறி போட்டா ஓவராயிடும் மரகதம், அப்புறம் நம்ம ரெண்டு பேரையும் வூட்டவிட்டு தொரத்தி விட்ருவாங்க சொல்லிட்டன்"னு கொதிக்காத கொழம்புக்கு வடிக்காத சோத்துக்கு கை கால கழுவ ஆரம்பித்தான் அறிவு.

" ஏன்டா இந்த ரெண்டு கிலோ மீட்டர் ஊர இத்தன வருசமா சுத்தியும் உனக்கு அலுக்கலயா? கருக்கல்ல வயலுக்கு தண்ணிக்கட்டனும் அதுவும் ஒத்தாசைக்கு வாடானுதான சொல்லி வைச்சன். எங்கபோய் சுத்துன"

" அட நீ வேற வேலு பெருமாளு வர வர மோசம் ஆய்ட்டு நைட்டு ஊட்டுக்கு போனா சோறாக்கலனு எரநூறுவா குடுத்து கடையில தின்னுக்கோன்ருச்சி. அதான் கடை சோறு ஒத்துக்கல அசந்து தூங்கிட்டன்"

" ஏன்டா அப்ப மரகதத்துகிட்ட நல்லா இருக்கு இன்னும் ஊத்துனு நைட் வாங்கித் தின்னியே கருவாட்டு கொழம்புல ரெண்ட தட்டம் சோறு அது எந்தக் கணக்குல வருதாம்?"

"வூட்டுக்கு நடந்துபோறதுக்கே அது தப்பாது. நீ மொதல்ல நான் சாப்டறப்ப வூட்ல இருக்காத, உன் கண்ணே சரியில்லாத கண்ணு வேலு"

"நீ திங்கறப்ப வூட்ல நான் இருக்கக் கூடாதுனா நான் வூட்ல எப்பவுமே இருக்க முடியாதுடா"னு வேலுச்சாமி முடிக்க மரகத்தின் குரல் வந்தது.

"கைக்கால கழுவுங்க சாப்புடுவிங்களாம். ஏய்யா அறிவு அப்பனுக்கும் உனுக்கும் வெற்றிக்கும் எலை அறுத்திக்கிட்டு வாய்யா"னு மரகதம் முடிக்க தயாரா இலையோட அறிவு நின்னான்.

கட்டில  ஓரந்தள்ளிட்டு வேப்ப மரத்தடியில பலகையில இலைய போட்டு பரிமாற ஆரம்பிச்சா மரகதம்.

"இந்தா மரகதம் நான் வேற கூட போவுல. கொலவெறியில இருப்பான் வெற்றி பய. அப்பன் இருக்கறதால பேசாம போய்ட்டான். எனக்கே எல்லாத்தையும் கொட்டி அவனுக்கு கொறைச்சி வைச்சிராத"னு சொன்ன அறிவ பாத்தப்ப வேலுச்சாமிக்கு பழைய ஞாபகங்க வரவும் அத உதறிட்டு தட்டுல கை வைக்கவும் வெற்றி வரவும் சரியா இருந்தது…….

"ஏய்யா போவலயா வந்துட்ட?"

"இல்லப்பா வழியில குட்ட முருகன பார்த்தன். அவனும் பஞ்சாயத்து ஆபிஸ் போய் ஆளில்லனு வந்துட்டனு சொன்னான் அதான் வந்துட்டன்"

"வெற்றி கைக்கால கழுவிட்டு வாயா சாப்பிடுவ"னு மரகதம் சொல்ல வெற்றி தண்ணித்தொட்டிக்கு போனான். வெற்றிய நிமிர்ந்து பார்த்துட்டு அறிவு வழக்கம்போல பேச்சு மூச்சில்லாம காரியத்துல கண்ணா இருந்தான்.

" டே அறிவு உங்க தெருவுல மூனு கம்பத்துல லைட் எரியறதில்ல வூட்டுக்கு போறப்ப தலைவர் வூட்ல சொல்லிட்டு போ"

" என்னா தலைவரு ஜப்பானுக்கா? அவனும் ஆளும் மண்டையும். கதிரேசனு பேரவுட்டு சொல்லு வேணும்னா சொல்லிட்டு போறன்.மச்சான் நீ என்னைக்கு இருந்தாலும் பாரு கதிரேசன் மவன் குணசேகரன் செம வெளு எங்கிட்ட வாங்கபோறான். ஊர் புள்ளைங்கங்கிட்ட அந்தபய நடக்கறதே சரியில்ல"

"கைய ஒடிச்சி வுட்ரனும்டா அறிவு"னு வேலுச்சாமி சொன்ன நொடிக்கு…..

"எதுக்கு எலக்சன்ல எதிர்த்து நின்னு தோத்து போனதால எம்பையன் மேல பாய்ஞ்சுட்டானுங்கனு அந்த மனுசன் ஊரெல்லாம் சிவாஜி வேசம் போடவா? நேரம் வரும் புள்ளைங்க விவகாரமா இருக்கு அவங்கவங்க அமைதியா இருந்தா போதும்"னு கொஞ்சம் நறுக்குனே சொன்னான் வெற்றி….. வெற்றி சொன்னா காரணமிருக்கும்னு வேலுச்சாமி கொஞ்சம் வருசமா நேரடியா பார்த்து அனுபவப்பட்டதால மறுபதிலேதும் பேசல.

" பார்டா! என்ன மச்சான் கதிரேசன் புள்ள சுமதி வெறக்கி வெறக்கி உன்ன பாக்குதேனு ஒரு எரக்கமா"னு அறிவு சொன்னதுமே வெற்றிக்கு முன்னால வேலுச்சாமி சட்டுனு "டே வெங்கப்பயலே சோத்த தின்னு எத பேசனும்னு வெவஸ்த இல்லாம"னு அதட்டிட்டு அமைதியானார்……

" இப்பதான் ஊர் புள்ளைங்களுக்காகனு ஐயா வீரமா தியாகம்லாம் பேசினாரு. இப்ப கதிரேசன் புள்ளைனதும் கண்டதையும் பேசறாரு. இதான்டா உங்க நியாயம். திருந்தறது ரொம்ப கஷ்டம் அறிவழகன் நீங்களாம். அம்மா மிச்ச கறி இருந்தா போடு தின்னுட்டு திரியட்டும்"னு சொன்னப்படியே வெற்றி மறு சோறு வேணாம் போதும்னு எந்திரிச்சிட்டான்.

ஆனால் அறிவு சொன்னது உண்மைதான். பஞ்சாயத்து தலைவர் கதிரேசன் மகள் சுமதிக்கு வெற்றி மேல ஒருவித ஈர்ப்பு இருப்பது நிசம்தான். அத காதலாவும் இருக்கலாம். பி,ஏ தமிழ் இலக்கியம் முடிச்சிட்டு அப்பாவுக்கு அரசியல்ல வலதுகரமா இருக்கறதே சுமதிதான். அறிவான எதார்த்தம் புரிஞ்ச பொண்ணு. என்ன வெளிய மகன் குணசேகரன்தான் தெரிவான்.

அறிவு சொன்னது உண்மையா இருந்து வெற்றிக்கும் ஒரு எண்ணம் இருந்தா அதைவிட பெரிய சந்தோசம் வேலுச்சாமிக்கும் மரகததுக்கும் கிடையாது. ஆனா வெற்றி வழியில அவனோட ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல வேலுச்சாமி விரும்பினாலும் தலையிட முடியல.  அவனோட எண்ணம் செயல்பாடு சுயஒழுக்கம் ஆளுமை அப்படியாக இருந்தது.

" அப்பா நாளைக்கு காடு ஓட்ட வண்டி வந்திரும். எலை தழைலாம் வெட்டி சேர்த்தன வரை போதும். பெருமாள் அப்பாகிட்ட சொல்லியிருங்க. காட்ட ஓட்டற வேலை முடிஞ்சு நாத்தவுட்டுட்டா நேரம் சரியா இருக்கும்.

டே அறிவு முன்ன மாதிரி ரெண்டு அப்பங்களுக்குமே முடியறதில்ல அங்க இங்க ஓடாம வேலை முடியற நாள்வர வரை வயல்ல நில்லு. ஆறு ஏக்கருக்கு உழைப்ப போட்டாவனும். மறுபடியும் சொல்லமாட்டன்.

ஏதாவது எடக்கு பண்ணிட்டு சுத்திக்கிட்டு இருந்தனா எம்போக்குல போயிருவன் சொல்லிட்டன். உன் வயச நீயே யோசி நீ பண்ணிக்கிட்டு அலையற வேலையவும் நீயே யோசி"னுட்டு ஊர்கோவில் திடலுக்கு நடக்க ஆரம்பித்தான் வெற்றி.

" ஏய்யா அறிவு வெற்றி இப்புடிலாம் பேசாது அது இப்புடி பேசுதுனா உன் விசயத்துல ரொம்ப பொறுமையா இருந்திருக்குனு அர்த்தம். உன் நல்லதுக்குத்தான் சொல்லும் நீ எதும் மனசுல வைச்சக்காதய்யா"னு சொன்ன மரகதத்த பார்த்த அறிவு……..

"ஹஹஹ எம்மோய் என்ன ஒளறிட்டு இருக்க வெற்றி பேசி எப்ப நான் கோவிச்சிருக்கன். நீயா ஒன்ன பேசிக்கிட்டு சில்ற அம்பது ரூவா குடு"னு வாங்கிட்டு வெற்றி நடந்த இடத்துக்கு கிளம்பினான் அறிவும்.

" வெற்றிய சரியா வளத்த முடிஞ்ச என்னால இந்த அறிவு பயல வளத்த முடியல. பெருமாளுக்கிட்டயும் உங்கிட்டயும் எவ்வளவோ சொல்லியும் அம்மா இல்லாத பையனு இன்னமும் அப்டியேதான் அவன ஊர்மாடா வைச்சிருக்கிங்க" னு அக்கறைல சலிச்சிக்கிட்ட வேலுச்சாமிய மரகதம் சன்னமா சிரிச்ச முகத்தோட………

" அறிவு ஐயா உங்கள என்னனு கூப்டறாரு. ஏங்கப்பா என்னங்கப்பானா? பேரச்சொல்லித்தான ஏன் ஆதியில கண்டிக்கறது? யார் வேணானது? உடம்பு வலினு சாக்குல குடிச்சிட்டு வரப்ப,

ஒரு பயல ஒழுக்கம் அது இதுனு வளத்திப்புட்டன் கிட்டவே நெருங்கவே மாட்டங்கறான். இந்த பயதான் நெஞ்சுல தூங்குது அதா முத்தம் தருது அதா அடிக்குதுனு பாதிக்கு கண்டிக்காம கெடுத்தது யாரு நீங்கதான?

இதா இப்பவும் இங்க தூங்கற நாள்ல ஒரே கட்டில்ல உங்கக்கூடத்தான அது தூங்குது. அவனோட பாசம் எல்லாருக்கும் வேணும் ஆனா பழி மட்டும் எனக்கும் அண்ணனுக்கும் நல்ல நியாயம்தான். பொலம்பாம போங்க வெற்றி பாத்துக்குவான்"னு வீட்டுக்குள்ள புகுந்தாள் மரகதம்.

ஊர்கோவில் திடலில் குட்டில் உட்கார்ந்திருந்த வெற்றிக்கு பக்கத்துல உட்கார்ந்த அறிவு ஆரம்பித்தான் " இப்ப என்ன வயல்ல வேலை முடியற வரை கூட நிக்கனும் அதான மச்சான் சரி வுடு இருக்கறன்"னு …….

" ஓ வயல் வேலை முடிஞ்சதும் மறுபடியும் ஆரம்பிச்சிருவ அதான. இங்க பாரு இந்த முறை நான் சொன்னது இனிமே நீ பொறுப்பில்லாம அலையக்கூடாதுனுதான் புரியுதா"

அறிவுக்கு வெற்றி வழக்கம்போல சொல்லலைனு நல்லாவே புரிஞ்சது. காரணம் வெற்றியோட முகம். பஞ்சாயத்து ஆபிஸ் போறனு போய் பாதியில வந்தப்ப இருந்த அதே முகம். அறிவுக்கு ஏதோ மனசுல குத்த ஆரம்பிச்சது. ஏதோ இருக்குனு மனசு உறுதியாய் நம்பியது. எவ்வளவு அறிவு தப்பு செஞ்சாலும் வெற்றி கோவப்பட்டாலும் முகம் இப்படி இருக்காது. இது கவலை கோபம் ஏன் பயமும் கலந்த மாதிரியான முகம்.

"என்ன பிரச்சினை என்ன நடந்திச்சி"னு நேரடியாவே கேட்டுட்டான் அறிவு.

"என்னடா சம்பந்தமே இல்லாம பேசற"

"நான் முட்டாள் பொறுப்பில்லாத ஊர்சுத்தி என்ன வேணா இருக்கட்டும். வெற்றி உன் விசயத்துல நான் அப்புடி இருக்க மாட்டனு உனக்கே தெரியும். எதா இருந்தாலும் சொல்லிடு நானா தெரிஞ்சிக்கற மாதிரி பண்ணிடாத"

"டே பைத்தியக்காரா ஒன்னுமே இல்லடா"னு சொன்ன வெற்றியோட குரல்ல தடுமாற்றம் இருந்தது.

"மறுபடியும் சொல்றன் நீயா சொல்லிடு இல்ல நானா தெரிஞ்சிக்கறதுக்கும் ஊரையே நிம்மதியா இருக்க விடமாட்டன். தெரிஞ்ச பின்னாடி ஏதாவது தப்பா இருந்தது ஒருபய உயிரோட இருக்க மாட்டான். வெதப்பு வெள்ளாமைனு நாளைக்கு நம்ம நெலத்தில எதுவம் நடக்காது. என்னைக் கோவப்படுத்தாம சொல்லிரு"

" நாலு பேருக்கு நல்லது செய்றம். நாலு எதிரி இருக்கத்தான் செய்வான். வேலைய பாரு"

"ரைட்டு அப்ப நான் நினைச்ச மாதிரி ஒன்னு நடந்திருக்கு சொல்லி முடிச்சிரு  ரெண்டுபேரும் சேர்ந்து பொறுமையா நம்ம வேலைலாம் முடிஞ்சப் பின்னாடி யார் என்னனு பாத்து முடிப்போம் இது உம்மேல சத்தியம் எம்மேல சத்தியம் பண்ணி நடந்ததை மட்டும் சொல்லு"

அறிவு சத்தியம் பண்ணதும் வெற்றிக்கு நம்பிக்கை வந்தது. ஏன்னா வெற்றி மேல சத்தியம் பண்ணிட்டு மீறிச்செய்ய மாட்டான் அறிவு.

" சரி உம்மேல சத்தியம்டே. . நான் சின்னப்புரம் காட்டுரோட்டுல போய்க்கிட்டு இருந்தன். வண்டி வீல் பக்கமா ஓரளவுக்கு சன்னமான தடி வேகமா வந்து விழுந்திச்சி. ஆனா வண்டி ரன்னிங்னால முன்ன போயிருச்சி அடுத்த பத்தடியில கனமான கட்டை தலைக்கு கொஞ்சம் மேல பறந்துச்சி.

வண்டியக்கவுக்க அடுத்து ஆளக்கவுக்க வேலை நடக்குதுனு விசயம் புரிஞ்சிருச்சி. அதான் வீலுக்கு சன்னமாவும், தலைக்கு கட்டையும் வந்துச்சி. வந்தவனுங்களுக்கு உயிர எடுக்கறதே குறி. வண்டிய நிறுத்தி ரோட்டு புதர்ல ஆளு யாரு என்னனு பாக்கறது செட்டாவாது. வண்டிய அப்படியே மேல வுட்டு தண்ணிடேங்க் வழியா சுத்திக்கிட்டு வீட்டுக்கு வந்தன்"

"இங்க பாரு வெற்றி இது இதுவரை நடக்காத விசயம் . நாம யாருக்கு என்னடா தப்பு பண்ணோம்? உன் உயிர நான் இருக்கப்ப எடுக்க முடியும்னு நம்புனவங்கள பாத்தே ஆவனும்டா மச்சான்"

"என்னை பத்தி உனக்கு தெரியாதா அறிவு ஆறப்போடுவன் ஆனா விடமாட்டன். ஒருவேள அங்க ஏதாவது நடந்திருந்தா, நீயும் பொறுப்பில்லாம இருக்க அதான் என்கவலை.
நீ எதையும் புதுசா உருவாக்காம இரு போதும். நான் சொல்றத மட்டும்  செய் பாத்துக்கலாம்"

"தப்பு என்மேலதான்டா மச்சான் நான் கூட வந்திருக்கனும். இனிமே நீ சொல்லாத நானே என்னை மாத்திக்கறன்."

"நீ வராதது நல்லதுதான்டா அறிவு. ரெண்டுல ஒன்ன தட்டியிருப்பானுங்க. என்ன வண்டியோட தப்பிச்சா என்ன பண்றதுனு பி பிளான் இல்லாம வந்துருக்கானுங்க" என்ற வெற்றியின் குரலில் இரைக்கு காத்திருக்கும் ஒரு புலியின் பொறுமை இருந்தது.

தூரத்துல யாரோ புதுமுகங்க நாலைஞ்சி பேரோட தென்னந்தோப்புக்குள்ள அவசரமா போய்க்கிட்டு இருந்தான் குணசேகரன்! இத வெற்றியும் அறிவும் கவனிக்கத் தவறல.

சரால்னு எழுந்த அறிவ கையப்புடிச்சி நிறுத்திய வெற்றி " இப்ப சந்தேகம் மட்டும் படு. ஆனா இவங்கதான் செஞ்சிருப்பாங்கனு யாரையும் உறுதியா நினைக்காத. அப்படி நினைச்சா கவனம் ஒருத்தங்க மேல போயி, உண்மையான நம்மோட எதிரி தப்பிக்கவோ இல்ல நம்மள ஏதாவது பண்ண நாமளே கத்திய எடுத்து குடுத்த மாதிரி ஆய்ரும்"னு சொல்ல அறிவு வாழ்க்கையில முதமுறை ஒரே பேச்சுல பொறுமை ஆனான்.

  Episode 03                       ......தொடரும்…..               Episode 05

3 comments:

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib