anti - piracy

Post Page Advertisement [Top]


             மீரா தாத்தா வயது 16 !(ஆதன்-னின்) 
                                            அறிவடி - 06
                                              


நிகழ்காலம்!

அதா புல்லட் தடதடக்கற சத்தம் கேக்குதா?!
ம் நாட்டுச் சாராயம் வாங்க போன நம்ம மீரா ஊருக்குள்ள வந்துக்கிட்டு இருக்காப்ல!!! புல்லட் சத்தம் கேட்டு வூட்டுக்குள்ள இருந்து எட்டி பார்த்தான் சந்தோசு! செல்லாயி அண்ணன் மவன்தான் இந்த சந்தோசு!

செல்லாயி அண்ணங்காரனுக்கு 54 லேட்டாதான் கல்யாணம் முடிச்சான் லேட்டாதான் புள்ளையும் பெத்தான்….. மொதல்ல பொறந்தது பொண்ணு…. பக்கத்து ஊர்ல கட்டிக் குடுத்து இப்ப அதுக்கொரு மூனு வயசு பொண் கொழந்த இருக்கு…..

 சந்தோசு இளையவன், கவர்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜ்ல பி.ஏ இங்கிலிஷ் லிட்டரேச்சர் ரெண்டாம் வருசம் படிக்கறான்….. அடுத்து லா படிக்க போறான்….. இந்த பய வளர்ந்ததே மீரா-செல்லாயிக்கிட்டதான்….. சரி இந்த பொடியன பத்தி எதுக்கு இவ்வளவு டீடெய்ல்னு தோணுதா?! இந்த மீராவின் வாழ்க்கை பயணத்துல இவன்தான் முக்கியமான திருப்பத்த உண்டாக்க போறவனே……. இப்ப இந்தபய பி,ஏ இங்கிலீஷ் லிட்டரேச்சர் படிக்கறதே அடுத்து லா படிச்சி ஹைகோர்ட் லெவல்ல போகனும்னுதான்….. அங்கதான் நம்ம தமிழ் செல்லாதே அதான் இங்கிலீஷ். இந்த விருப்பம், ஐடியா எல்லாமே படிக்காத மீராவோடது!

மீரா-செல்லாயிக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு!
பையன் பேரு சிவா, படிச்சது எம்.சி.ஏ, படிப்பு முடிஞ்ச ரெண்டாவது வருசம் கல்யாணமும் முடிஞ்சு இப்ப பெங்களூர்ல பொண்டாட்டி, நாலு வயசு பொண்ணோட செட்டில் கைநிறைய சம்பளத்தோட…..

பொண்ணு பேரு சுந்தரி, படிச்சது பி.காம், அப்பா அம்மா செல்லம், படிப்பு முடியறதுக்குள்ள காதல், நேரா வீட்ல சொல்லிட்டா சுந்தரி, மீரா பையனை கூப்ட்டு குடும்பத்த பத்தி விசாரிச்சிட்டு, தொழில் பொருளாதாரத்த பாத்துட்டு, அவங்க வீட்டு சம்மதத்தோட கல்யாணமும் பண்ணி வைச்சிட்டாரு…… சுந்தரிக்குத்தான் கல்யாணம் முதல்ல நடந்தது….. 5 வயசுல ஒரு பையன் 2 வயசுல ஒரு பொண்ணு, விவசாயம்னு நாமக்கல்லுல செட்டில்…..  மீராவுக்கு 60 கி.மீ தூரம்….. மருமகனும் மாமனாரும் நல்ல க்ளோஸ்!

மருமக பேரு நித்தியா, மருமகன் பேரு சபரி!
பெத்த ரெண்டு புள்ளைங்களோட கல்யாணமும் காதல் கல்யாணமே! மீராவை பொறுத்தவரை காதலி இல்ல காதலிக்காத ஆனா குடும்பத்தை நகர்த்த நிரந்தரமான ஒரு தொழில் இருக்கனும். அப்பதான் காதலை ஏத்துக்குவாப்ல. காசு இல்லனா எல்லாம் கசக்கும்டா முட்டா பயலுகளானு போய்ருவாப்ல…… சரி வாங்க விட்ட இடத்துல இருந்து கதைக்குள்ள போவோம்!

வாசலுக்கு வெளிய இருந்து ஹாரன் அடிச்சாப்ல மீரா……

" என்ன மாமா"

" டே வாடே ஊருக்கு வெளிய வேலை இருக்கு போயிட்டு வந்துருவம் பொழுது வேற சாயுது"னு மீரா கூப்ட வண்டியில ஏறுனான் சந்தோசு….

" எங்க மாமா போறம்?!"

" நாட்டுக்கோழி ஒன்னு வாங்கனும்டே வாங்கியாந்தரலாம்"

" என்ன திடீர்னு நாட்டுக்கோழிலாம் சொந்தங்காரங்க வராய்ங்களா"

" இல்லடே வூட்ல நாட்டுக்கோழி ஆக்கி சாராயத்த தொட்டு ரொம்ப நாள் ஆச்சு அதான்"

சந்தோசு எதுவும் பேசல, கோழிய வாங்கிட்டு இவங்க வூடு வரப்ப கருப்பன் எங்கையோ இருந்து சாராய கேன்னோட வூட்ல இருந்தான்!

" டே கருப்பா சந்தோசு பயக்கூட சேந்து இந்த கோழிய பொசுக்கு"னு அப்படினுட்டு டிராயரோட தொட்டி தண்ணிய மோந்து ஊத்திக்க ஆரம்பிச்சாப்ல மீரா……

கறிய ஆக்கி வூட்டு வாசல்ல கட்டில போட்டு உட்காந்த மீரா கருப்பனோட மெதுவா குடிக்க ஆரம்பிக்க சந்தோசு எதிர்ல அமைதியா உட்கார்ந்திருந்தான்…….

" ஏன்டா டே பொண்டாட்டி வுட்டுட்டு போனவன் மாதிரி இருக்க"

" ஒன்னுமில்ல நீ குடி"

" அட சொல்லுடே என்னா விசயம்"

" வயசாவுதுல்ல எதுக்கு இதெல்லாம்"

" இது ஒடம்புக்கு கெடுதி இல்லடே"

" அப்ப நானும் குடிக்கவா?!"

" அடிங் அடிச்சி பல்ல ஒடச்சி புடுவன். போய் சோத்து சட்டி, தட்டு, தண்ணிலாம் கொண்டா"னு அவன அனுப்பி வைச்ச மீரா……

" டே கருப்பா போதும்…. கொண்டுபோயி கொல்லையில வைச்சிரு. இனி பய முன்னாடி வேணாம்"னு சொல்ல சந்தோசு வந்தான்…. மூனு பேரும் சாப்ட்டு காலி பண்ண, கருப்பனும், சந்தோசும் எல்லாத்தையும் கழுவ எடுத்துக்கிட்டு போனாங்க…… மீரா அப்பப்ப சமைச்சி, சாப்ட்டு கழுவி வைக்கற ஆளு! இல்லனா கோவம் வந்துரும்!

இப்ப காட்டை ஆளுங்கள வைச்சிதான் மீரா பாத்துக்குது…… முன்ன மாதிரிலாம் காடே கதினு கெடக்கறதில்ல….. சோத்த தின்ன மீரா அப்டியே வெளிய கட்டில்ல கண்ண மூடுச்சு!

விடிஞ்சி சந்தோசு கண்ணு முழிக்கறப்ப மீரா சமையல் ரூம்ல உருட்டிக்கிட்டு இருந்திச்சி…..

"வாடே குண்டாவுல டீ இருக்கு ஊத்திக்கோ, கறிய மறுபடியும் பெரட்டியிருக்கேன், சோறு வைச்சி தாரேன் மத்தியானத்துக்கு சாப்டுக்க"

" ம் ம்" னு கொட்டாவி வுட்ட சந்தோசு தண்ணித் தொட்டிக்கு போனான்…..

குடிசையா இருந்த வூட்ட புள்ளைங்க பொறந்து வளர்ந்த கொஞ்ச நாள்லயே இடிச்சிட்டு தார்சு வூடா எடுத்துக் கட்டிட்டாப்ல மீரா பாத்ரூம்லாம் வைச்சு…… ஆனா வாசலும் மரங்களும் அப்படியே இருக்கு!

சந்தோசு காலேஜிக்கு கெளம்பி நிக்க மீரா புல்லட்ட எடுத்தாப்ல பஸ்ஸ்டாப்புல கொண்டுபோய் விட……

" என்னடே ஏதோ சொன்னியே எதோ இங்கிலீஷ்னு"

" ஸ்போகன் இங்கிலீஷ் கிளாஸ் மாமா"

" எப்ப போறதா இருக்க?!"

" இந்தா வெயில்கால லீவ் வருதுல்ல அதுல போறன்"

" சரி இப்டி படிக்கற படிப்புக்கு, படிச்சிட்டு போவ போற வேலைக்கு முன்கூட்டியே ஏதாது செய்யனும்னா சொல்லிரு, எனக்கு இதுலலாம் வெவரம் கெடையாது"

"ம்"

" என்னடே ஆம்பளை பய நீ?! கலகலனு பேசறதில்லயா ஆளும் சொக்காவும்"

பஸ்ஸ்டாப் வர தப்பிச்சம்னு எறங்கினான் சந்தோசு! காலேஜ், ஸ்கூலு, வேலைக்குனு போக பஸ்டாப்புல ஆளுங்க இருக்க……

" ஏ முருகேசன் மவ செல்வி"

" என்ன மீரா சட்டலாம் பளபளக்குது"னு வம்பிழுத்தா செல்வி…… 11 வது படிக்கற புள்ள…..

" உங்கப்பன் சோறு எதாது போடறானா, இல்ல மாட்டு கொட்டாய்ல கட்டிப்போட்டு சோளத்தட்ட போடறனா ஆத்தா"

" ம் ஏன் பிரியாணி வாங்கித்தர போறியா"னு செல்வி கேட்க பஸ்ஸ்டாப்ல இருந்ததுங்க சிரிக்க ஆரம்பிச்சது……

" கட்டிக்கறனு சொல்லு ஊருக்கே பிரியாணி போட்ருவோம் என்ன ஒங்கப்பன்கிட்ட பொண்ணு கேக்க வரட்டுமா"

" ஐய்ய"

" வயசு புள்ள நல்லா தின்னு தெடமா இருக்க வேணாமா?! எதோ சோளத்தட்டுக்கு துணி மாட்டிவுட்ட மாதிரி"

" ம்கூம் காலையிலயே சாவடிக்காத பஸ் வந்துருச்சி ஸ்கூலுக்கு போய்ட்டு வந்து பேசிக்கறன்"னு பஸ்வர செல்வி எல்லாரும் ஏறினார்கள்……..

சிரிச்சப்படியே மீரா புல்லட்ட ஒதைச்சி ஊருக்குள்ள கெளம்பினாப்ல!

நேரா கருப்பன் வூட்டுக்கு போயி கூட்டிக்கிட்டு காட்டுக்கு போய் ஒரு எட்டு பாத்துட்டு ரோட்டோர டீ கடைக்கு வந்து புல்லட்ட நெழல்ல போட்டாப்ல மீரா……

" என்ன மீரா டீயா காபியா"னு நாப்பது வயசிருக்க டீக்கடைக்காரன் கேட்க……

" அந்த வெசத்த உம்பொண்டாட்டி வாய்ல வூத்துடே செத்த நேரம் அது பேசாமயாவது இருந்து தொலைக்கட்டும்"

" ஏன் நான் என்ன உன் வூட்ல வந்தா பூந்துக்கிட்டேன் என்னையச் சொல்ற"னு டீ கடைக்காரன் பொண்டாட்டி வர……

" ஓ பார்ரா இந்த புள்ளைக்கு அப்புடி வேற ஒரு எண்ணம் இருக்குது போல கருப்பா"

" யோவ் மீரா என்ன வேணும்னு சொல்லு"

" கருப்பனுக்கு ஒரு டீய போடு, எனக்கு ஒரு மோர (மோர்) குடு"னு சொன்ன மீரா வாங்கி குடிச்சப்படியே கருப்பன பார்த்தாப்ல…..

கருப்பனுக்கு கொழந்தைங்க இல்ல…… வள்ளியும் நோவுல வுழுந்து போய் சேந்துட்டா…. இந்த பய பொறந்ததுல இருந்து இப்பவரை கஷ்டத்த தவிர எதையும் பாக்கல. மனுசன் வாழ்க்கைலாம் ஒரு வாழ்க்கையானு மனசுக்குள்ள சலிச்சப்படி……

" ஏன்டா கருப்பா முடிய வெட்டி சேவிங்க பண்ணாதான் என்ன?! ரெண்டாவது கல்யாணத்துக்கு எதும் பழனிக்கு வேண்டியிருக்கியா"னு மீரா வழக்கமான சேட்டை பேச்சோட கேட்க….

" அது ஒன்னுதான் கொற, அப்பறமா பண்ணுவம்"

" உனக்கு மலைய சாய்க்கற வேலைலாம் இல்ல, இந்தா காசு போய் எந்திரிச்சி பண்ணிக்கிட்டு வா"னு காச திணிச்சி அனுப்பி வைச்சாப்ல மீரா…..

தன் வாழ்க்கையில செல்லாயிங்கற ஒருத்தி இல்லாம இருந்திருந்தானு யோசிச்ச மீராவால, இப்ப செல்லாயி இல்லையே வுட்டுட்டு போய் பத்து வருசம் ஆச்சேனு நினைக்கத் தோணல!

செல்லாயி அவர பொறுத்தவரை அவரோடதான், அதுவும் அவளுக்காக கட்டிக்குடுத்த சாமி செலைக்கு கீழ புதைச்ச இடத்துலதான் இருக்கா!

                                                   அறிவடி தொடரும்!


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib