anti - piracy

Post Page Advertisement [Top]

மீரா தாத்தா வயசு 16 (ஆதன்-னின்)
அத்தியாயம் 07 & 12
                                                                           

நிகழ்காலம்
                                                                     
பஸ்சிலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்த கூட்டத்தில் சந்தோசும், செல்வியும் பின்தங்கி பேச ஆரம்பித்தார்கள்…

" எப்டிடா மீராவ சமாளிக்கிற" என்றாள் செல்வி.

"வெரி சிம்பிள் அமைதியா சிரிச்சிட்டே போயிருவன்" என்றான் சந்தோசு.

"நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் எப்டியாவது தனியா போயிரனும்டா"

"அப்டி ஒரு ஐடியா இருந்தா இப்பவே பழசலாம் மறந்துட்டு உன் வழிய பாத்துட்டு போயிரு. அது என் மாமன் மட்டுமில்ல என் அப்பனும் அதான். பெத்த அப்பன விட என்னைய பாத்துக்கற மனுசன்"

"என்னடா பொசுக்குனு இப்டி சொல்லிட்ட வெளையாட்டுக்கு சொன்னன்டா கேன"

" வெளையாட்டுக்கு கூட அப்டி சொல்லாத! நீ எப்டி சொன்னாலும் நான் இதத்தான் சொல்லுவன்." என்றான் சந்தோசு.

"ரொம்ப பண்றடா சின்ன விசயத்துக்கு!"

" இது உனக்கு சின்ன விசயம், ஆனா உலகத்திலயே இதான் எனக்கு பெரிய விசயம்!
ஆமா என்ன சாப்பாடு மதியத்துக்கு?"

"கீரை ரசம்"

" அந்த மனுசன் இன்னைக்கு ஜிம் பக்கமே போகல, லேட்டா எழுந்திருக்கும் போல ஆனா உப்புல பொறட்டுன நாட்டுக்கோழி பெரட்டி குடுத்துருக்கு இதான் அது பாசம்
சம்மர் லீவ்ல என்ன பண்ணுவ?!

"வீட்ல இருப்பன் பெரியப்பா அத்தை வீட்டுக்கு போவன்"என்றாள் செல்வி.

" ஆனா நான் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசுக்கு போவன் ஏன் தெரியுமா?!

"ஏன்"

"அடுத்து நான் லா படிக்கனும். ஹை கோர்ட் வக்கீலாகனும் அதுக்கு எனக்கு இங்கிலீஷ் சரளமா வரனும். அதுக்குத்தான் இங்க இங்கிலீஷ் லிட்ரேச்சர் எடுத்ததே! இதெல்லாம் சுத்தமா படிக்காத மீராவோட ஐடியா"

"எப்பா டே  சாமி தெரியாம சொல்ட்டன். மீராவா எனக்கும்தான்டா புடிக்கும். இந்த வருசம் முடிஞ்சதும் மீராக்கிட்ட நம்ம லவ்வ சொல்லிருவோம்டா"

"கண்டிப்பா ஆனா கல்யாணம்லாம் பண்ணி வைக்காது. உங்க வீட்ல உன்ன படிக்க வைக்கச் சொல்லி என்னையும் படிக்க விட்டுத்தான் கல்யாணத்துக்கு சம்மதிக்கும். ஆனா ஊரே போர்க்களமா மாற போவுது"

"இந்த சாதிய கண்டுபுடிச்சவன செருப்பால அடிக்கனும்"என்றாள் செல்வி……

வகுப்பு துவங்கவே அவரவர் வேலையை அவரவர் பாத்தார்கள்.

போன வருசம் அரும்பிய காதல் இந்த வருசம் சுட்ட களிமண் பொம்மையாய் இறுகி போச்சு.
கடைசியா இதெல்லாம் மீரா தலையிலத்தான் விழும்!

டீக்கடைக்காரன் பொண்டாட்டிய வம்பிழுத்துக்கிட்டு மீரா இருக்க. கட்டிங் சேவிங்க பண்ணி தெளிவா வந்தான் கருப்பன்.

"பார்ரா மாப்பிள்ளை மாதிரி ஆய்ட்டான்" என்று கருப்பன் பக்கம் பேச்சை திருப்பிய மீரா…

"போலாமாடே கருப்பா"

"போலாம் போலாம் ஒரு டீய குடிச்சிட்டு வந்திடறன்"னு சொல்ல

"விசத்த விரும்பி குடிக்கறவன் நீதாம்டே"

"ஒரு டீ போட்டுக் குடுய்யா தம்பி" என்று மீரா சொல்ல டீ வந்தது கருப்பனுக்கு…..

டீ கடைக்காரன் மீராக்கிட்ட பேச்சை வளர்த்தான்.

"நாலு வயசு பொண் கொழந்தய ஒருத்தன் நாசம் பண்ணியிருக்கான் மீரா"

"வெறும் சவுக்காலயே மாத்தி மாத்தி அடிச்சிக் கொல்லனும்டே அவனலாம்" என்றது மீரா….

"இந்ந பம்பாய் மாதிரி இங்கையும் விபச்சாரத்த சட்டமாக்குனா இந்த மாதிரி நடக்குறதுலாம் குறையும்னு காலையில இங்க பேசிக்கிட்டாங்க. அப்டி செய்யலாமா மீரா?! என்றான் டீ கடைக்காரன்….

" சட்டமாக்கலாம் சரிதான், ஆனா தன் தேவைக்கு ஆம்பள போற மாதிரி, இதுல திருப்தி அடையாத பொண்ணுங்க போறதுக்கும் இடம் வைச்சி சட்டமாக்கறதுதான சரியான நீதியா இருக்கும்" என்று மீரா பேச டீ கடைக்காரன் மூஞ்சி சுருங்கி போச்சி ஆனா டீக்கடைக்காரன் பொண்டாட்டி முகம் மலர்ந்திருந்து மீராமேல மரியாதை கூடியிருந்தது.

கருப்பன் டீ குடிச்சி முடிக்க மீராவும் கருப்பனும் கிளம்ப டீ கடைக்காரன் நிம்மதியாக, அவன் பொண்டாட்டி மீரா இன்னும் கொஞ்ச நேரம் இங்கையே இருந்திருக்கலாம்னு நினைச்சா!

வீட்டு வாசல் நிழல்ல பைக்க நிறுத்தியது மீரா.

" மீரா வூட்டக்கு தண்ணீய ஊத்திக்கிட்டு வந்திடறன்" என்று கருப்பன் சொல்ல….

"தேவையில்ல இங்கையே குளி என் துணிய போட்டுக்க, குளிச்சிட்டு வர மொளாகா போட்டு ஒரு பருப்பு கொழம்ப வை "

"சரி சரி வைச்சிட்டா போச்சி"னு குளிக்க போனான் கருப்பன்….

அரிசிய கழுவி ஊற வைச்சி குக்கர்ல சோத்த வைச்சி, முட்டை நால வேக போட்டு. குழம்புக்கு தேவையானதை கருப்பன் வரதுக்குள்ள செஞ்சி வச்சிருச்சி மீரா ……

டே கருப்பா மூனு விசில் வந்ததும் இறக்கிடு. குழம்பு நைட்டுக்கும் வராமாதிரி வை, முட்டைய இறக்கிடுனு சொல்லிட்டு குளிக்க போச்சி மீரா….

சமைச்சி சாப்டுட்டு ஒரு முக்கால் மணி நேரம் தூங்கறது மீராவோட வழக்கம். வெளிய புங்கை மரத்தடி கட்டில்ல படுத்து கண்ண மூடிச்சி நம்ம மீரா….

ஃபேன போட்டு ஹால்ல படுத்த கருப்பன் மீரா இல்லனா தன் வாழ்க்கை என்ன ஆகியிருக்கும்னு யோசிச்சபடியே படுத்திருந்தான்….

மீரா காட்டுல வெளைஞ்ச காய்கறிங்கள கொறைஞ்ச வெலைக்கி குடுத்து டவுன் மார்க்கெட்ட கடை போடவும் இடம் புடிச்சி குடுத்திருந்தாரு அப்ப. தேவைக்கு மேலயே அப்ப கருப்பனுக்கு வருமானமும் வந்துச்சி. ஒரு வருசத்துல காச நோய்ல பொண்டாட்டி விழ நிலைமை மோசமாகி அவளும் போய் சேர்ந்த பின்ன கருப்பனோட வாழ்க்கை முழுசா மாறிப்போய் கெடந்துச்சி…..

ரெண்டாங் கல்யாணத்துக்கு மீரா வற்புறுத்தியும் கருப்பன் ஒத்துக்கல. கடைசியில குடும்பத்துல ஒருத்தனாவே கருப்பன வைச்சிக்கிட்டு நல்லது கெட்டத பார்த்துக்குது நம்ம மீரா…

மீரா ஒரு மணி நேரம் போய் எழுந்து  மொகத்த கழுவிக்கிட்டு வீட்டுக்குள்ள வர கருப்பன் தூங்கிக்கிட்டு இருந்தான். எழுப்ப வேணாம்னு சுக்கு டீ வைச்சிட்டு கருப்பன உசுப்பி விட்டுச்சி…….

"லே மைனரு எழுந்திரு டீயக் குடி"

கருப்பன் சரியான டீ பைத்தியம். உடனே எழுந்தான். மீரா குடுத்த சுக்கு டீய குடிச்சிட்டு எழுந்த போய் மொகம் கழுவி வந்து கண்ணாடிய பார்த்தான் மனசுக்கு ஒரு திருப்தியா இருந்துச்சி……

புங்கை மரத்தடி கட்டிலில் ரெண்டுபேரும் வறுத்த கடலைய வாய்ல போட்டபடி பேச வெயில் ஏறி இறங்கி இருந்தது……

"கருப்பா குப்பன் பெயிண்ட் கடை வரைக்கும் போய்ட்டு வந்திருவோமா"

"எதுக்கு மீரா வூடு நல்லாதான இருக்கு?!"

"லூசு பயலே பெயிண்டுனா வூட்டுக்குத்தான் அடிப்பாங்களா?!"

" பின்ன"

ஜிம்முல சாமானத்த எடுத்து வெளையாடிட்டு அங்கங்க போட்டுட்டு போயிடறானுங்க. இப்ப வைகாசி வெயிலுக்கு பூமி சூட்டைக் கிளம்ப தூறி வைக்குது. தண்ணி பட்டு சாமான்லாம் துருப்புடிக்குது அதுக்குத்தான் வா போலாம்"னு வீட்ட பூட்டிபுட்டு புல்லட்ட ஒதைச்சது மீரா….

புல்லட் மெயின் ரோட்டுக்கு வரவும் சந்தோசும் செல்வியும் பஸ்ஸ விட்டு இறங்கவும் சரியா இருந்துச்சி. யாரோ எவரோ போல நடந்தார்கள்….,

"ஆத்தா செல்வி"னு மீரா கூப்ட..

"பொண்ணுக்கேட்க எப்ப வரட்டும்"னு கேட்கறியா மீரானு சொன்ன செல்வி சந்தோச பார்க்க அதில் அர்த்தம் இருந்தது….,

" பார்ரா நீ வேணா சந்தோச கட்டிக்கோ பொண்ணு கேட்டு வரன்"னு சொல்ல….

ரெண்டு பேரும் அதிர்ச்சியாக செல்வி விடு விடு போயா மீரானுட்டு நடக்க ஆரம்பிச்சுட்டா…..

"டே சந்தோசு இங்கையே இரு குப்பன் கடை வரை போய்ட்டு வந்திடறன். வேணும்னா மோர் வாங்கி குடி"னு சொன்ன மீரா குப்பன் கடைங்கற ரமேஷ் ஹார்டுவேர் & பெயிண்ட் கடைல நின்னது. இந்த கடைய வைச்சது ரமேசோட அப்பன் குப்பன். அதனால குப்பன் கடைனு ஆகிபோனது.

" லே ரமேசு பச்சைபெயிண்ட் ஒரு அரை லிட்டர் , ஒரு சின்ன மட்டமான பிரசு, துருப்பு எடுக்க உப்பு அட்டை ஒரு அஞ்சு, நாலைஞ்சி ரெண்டு இன்ஞ் ஆணி குடு"னு வாங்கிட்டு பணத்தக் குடுத்துட்டு புல்லட்ட கிளப்பி சந்தோசையும் ஏத்திக்கிட்டு வீட்டுக்கு விட்டார் வண்டிய…..

"லே சந்தோசு சிமெண்ண பாட்டில இருக்கு முன்னால எடுத்துக்கிட்டு வா"னு சொல்ல சந்தோசு எடுத்துட்டு வந்து கருப்பன் கையில் குடுத்தான்!

" சரி லே மொகம் கை கால கழுவிக்கிட்டு துணிய மாத்திக்கிட்டு வெரசா ஜிம்முக்கு வந்துரு சேரு"னு சொல்லிட்டு ஜிம்முக்கு புல்லட்ட விட்டார். ஜிம் வீட்டுக்கு பக்கத்துலயேதான்….

ஜிம்முல 150 கிலோ இரும்பு பிளேட்டுகள் 5, 10, என எடை அளவில் இருந்தது. தம்புல்சுகள் 2, 4, 6 , 8 என இரண்டு ஜோடிகளாக ரெண்டு செட் இருந்தது. இதில்லாம பார் கம்பி, தண்டால் கட்டை, கர்லா கட்டை என இருந்தது….

சந்தோசு வர துருவ உப்பு பேப்பரால துடைக்கற வேலை ஆரம்பிச்சது!

                                                      அறிவடி தொடரும்!
அறிவடி- 8

நிகழ்காலம்!

துருப்ப தேச்சிக்கிட்டே பேச்சு ஆரம்பிச்சது.

"நாளையோட காலேஜிக்கி கடைசி நாளாலே"

"ஆமா மாமா" என்றான்.

"எதும் பெயில் கியில்னு வராதே"

"ஹஹ அதெல்லாம் வராது! நீதான் பி.எல் படிக்க ஸீட்ட புடிக்கனும்"

"அதெல்லாம் ஈஸியா கிடைச்சிரும்டே உன்னதான் படிப்புல மேலனு இயற்கையும் சாதில கீழனு மனுச பயலுகளுங்களும் வைச்சிருக்கானுங்களே" என்றார் சலிப்புக் கலந்த சந்தோசத்தோட மீரா…

"விடு மாமா படிப்பு போதும் எல்லாம் மாறும். நீயிருக்கப்ப எனக்கென்ன கொற" என்றான் சந்தோசு..,..

மீராவுக்கு பெருமையில, பாசத்துல மீசை துடிச்சது!

ஒரு வழியா துருப்ப தேய்ச்சி முடிச்சி பழைய ப்ரஷ் ஒன்ன மீரா எடுக்க சந்தோசு ஒரு பிரஷ எடுக்க, கருப்பன் பெய்ண்ட்ல சிமெண்ணைய்ய கலந்து லூசாக்கினான். ரெண்டு பேரும் பெயிண்ட் அடிக்க கருப்பன் பெயிண்ட் அடிச்சத ஓரங்கட்டி வைச்சான்.

ஏழு மணி வாக்குல வேலை முடிய ஜிம்முக்குனு பொருள் வைக்கற ரூம் கதவுக்கு வாங்கிட்டு வந்த ஆணியை அடிச்சி ஆடாம நல்ல ஸ்ட்ராங்கா பண்ணினார் மீரா. ஊர்ல திருட்டு பயம் கிடையாது. அதனால பிரச்சினை இல்லை

அப்டி இப்டினு ஏழரை மணிக்கு வீட்டுக்கு வந்தவங்க ஒரு குளியல தொட்டியில போட்டுட்டு சோறு வைச்சி, முட்டை பொறிச்சி, கொழம்ப சூடு பண்ணி சாப்பிட உட்கார்ந்தாங்க….

"மாமா நாளைக்கு காலேஜ் கடைசி நாளு"

"அதுக்கு" என்றார்.,....

"அதனால பசங்களாம் சேர்ந்து சினிமாவுக்க போறம் ஹோட்டல்ல சாப்பாடு வீட்டுக்கு வர எட்டு மணி ஆய்டும்"

"நீ சொன்ன மாதிரினா சந்தோசம்லே ஆனா இந்த பீர், பிராந்தி, சிகரெட்டு, பொம்பளைங்க புள்ளைங்கனு இல்லாம இருந்தா சரி. செலவுக்கு எவ்வளவு வேணும்?"

"500" என்றான் சந்தோசு

" யார் அப்டி போனாலும் நான் போவ மாட்டன் மாமா"

"அது தெரியும்"ன சமாளிச்ச மீரா "செலவுக்கு ஆயிரமா தரேன் சந்தோசமா கொண்டாடிட்டு வா"னு சொல்ல கருப்பன் சாப்ட்டு முடிச்சி பாத்திரங்களை கழுவ போக சந்தோசும் கூட போக ஒரு கிங்ஸ் பில்டரை பற்ற வைத்த மீரா அவர் வைச்ச அம்மன் சிலைக்கிட்ட போய் நின்னார்……

"செல்லாயி உன் கனவா நீ சொன்னதுல உன் அண்ணன் பையன படிக்க வைச்சி முன்னேத்தி உடனும்னு, அதுல முக்கா கெணத்த தாண்டிட்டன். ஆத்தா நீ போனப்ப நானும் கூட வந்திருப்பேன். ஆனா வாழறப்பவே பல சத்தியங்களை வாங்கிட்ட உசாரா….

நம்ம பையன் மாதிரி வளத்தி இருக்கேன். அது என்னமோ தெரியல நம்ம புள்ளைங்க முகத்துல, குணத்துல நீ இல்ல. சந்தோசு முகம் குணத்துலதான் நீ இருக்க. 

அவனை ஒரு வக்கீலா உருவாக்கி கல்யாணம் ஒன்ன பண்ணி வைச்சி இந்த வீட்ட அவன் பேருல எழுதிக்குடுத்துட்டு அவன் கூடயே தங்கி செத்து போய்ருவன். சரி நீ தூங்கு புள்ள"னு சொன்னபடி கட்டில்ல விழுந்து ஆகாசத்த பாத்த படி தானா சிரிச்சிக்கிட்டார். 

இந்த அம்மன் சிலைக்கு கீழத்தான் செல்லாயியை புதைச்சிருக்கார். அதுக்கும் எதிர்ப்பு இருந்தது. ஆனா காளியாத்தா மாரியாத்தா எல்லாம் வாழ்ந்து செத்து போனவங்களைத்தான் நாம சாமியா கும்பிடறோம் போங்கடானுட்டு புதைச்சி மேல சிலையை வைச்சார். 

ஆனா அம்மன் சிலையை நேரங் கிடைக்கறப்பலாம் செல்லாயி துணிகள் போட்டு அலங்கரிப்பார். கல்யாண நாள் அன்னைக்கு குடிக்காம சிலைக்கு பக்கத்திலிருக்க திண்ணையிலயே யார் கூடவும் பெருசா பேசாம அமைதியா உட்கார்ந்திருப்பார்."

மீரா பேசினதலாம் கேட்ட சந்தோசு நாம நல்ல வக்கீலா உருவாகிக் காட்டறதுதான் அத்தைக்கும் மாமனுக்கும் செய்ற கடமைனு மனசுக்குள்ளயே சொல்லிக்கிட்டவனின் கண்ணுல தண்ணி!

எல்லா வேலையும் முடிய கருப்பன் படுக்க,
செல்விக்கு சாட் பண்ண ஆரம்பிச்சான்.

"நாளைக்கு  நாம தனியாத்தான படத்துக்கு போறம்"னு செல்வி கேட்க,

"யோசிப்ப்பம்"னு சந்தோசு அனுப்பினான்…..

இப்படியே சாட்டிங் வளர இறுதியாக குட்நைட் ஸ்வீட் டிரிம்ஸ் கிஸ் ஸ்மைலியென சாட்டிங் முடிந்து உறங்கினார்கள். 

விடியலுக்கு முன்னமே எழுந்து ஜிம்முக்கு போயிருந்தது மீரா….

ஜிம்முக்கு பசங்க ஒரு ஏழுபேர் வராங்க. ஏழு பேரும் வரவும். லைட்டா மீராவும் உடற்பயிற்சி செஞ்சி முடிச்சி பசங்களுக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சது. 

"லே ஜிம்ல வெளையாடறது முக்கியமில்ல நல்லதா நல்லா திங்கனும். அப்புறம் தின்னதை ஜிம்ல வெளையாண்டு கரைக்கனும்" 

இதான் மீரா வழக்கமா சொல்றது பசங்களுக்கு!

சந்தோசும் ஜிம்முக்கு வந்து சேர்ந்திருத்தான். வார்ம்அப்புக்காக தண்டால் அடிச்சிட்டு பார்கம்பி ஏறி முடித்தான்

"லேய் முடிச்சிட்டியா?! என்றார் சந்தோச மீரா.

"முடிஞ்சது மாமா காலேஜ் கிளம்பனும்"

"சரி காலேஜ் கடைசி நாள் வேற வேணும்னா புல்லட்ட எடுத்துட்டு போயேன்"

"இல்ல வேணாம் மாமா"னு கறாரா மறுத்துட்டான் சந்தோசு!

ஏன்னா லோக்கல்ல செல்வியோட அவனால பைக்ல சுத்த முடியாது அதனால்தான். பசங்களோடு போய் தியேட்டர்ல தனியா செல்வியோட போயிரலாம்னு ஐடியாவுல இருந்தான்…

வீட்ல சந்தோசு தயாரா இருக்க…….

மீரா வந்து குளிக்காமக் கூட புல்லட்ட எடுத்தது 
"வாடா சந்தோசு பஸ் ஸ்டாப்ல விடறன் இந்தா காசு"னு ஆயிரம் ரூவாய பாக்கெட்ல வைச்சாரு…. கருப்பனும் ஏற புல்லட் தடதடத்தது.

பஸ் ஸ்டாப்வர சந்தோசு இறங்கிக்கொள்ள செல்வி காத்திருந்தாள்…. பஸ் வர ஏறிக்கொண்டார்கள். 

வழக்கமான டீ கடை நிழல்ல வண்டிய நிறுத்திட்டு "லே மகேசா ஒரு டீ ஒரு மோர்" என்று சொல்லிட்டு பேப்பரை மேய்ந்தார் மீரா….

டீ கடைக்காரன் பொண்டாட்டி சந்திரா எடுத்து வந்த டீ ய கருப்பன் வாங்க மோரை மீரா வாங்கி ஒரே மடக்கில் குடிச்சிட்டு சந்திராக்கிட்ட உடனே கிளாசை கொடுத்தார்……

"லே மகேசு ஊராட்சிக்கு மட்டும் தேர்தல் அறிவிச்சிருக்காங்க"

"ஓட்டுக்கு ஆயிரம் தேறுமா மீரா"

"அட சின்னப்புத்தி பயலே. நாடு அவனுங்களால உருப்படாமா போச்சா இல்ல உங்களால நாசமா போச்சானே புரியலடே பத்து நாள்ல தேர்தல்டே" என்றார் மீரா….

"வழக்கம் போல பழனிச்சாமி ஐயா வகையறாவுல யாராவதுதான் ஊராட்சி தலைவரா வருவாங்கல மீரா?"

"அதென்னடா அந்த லுச்சா பய பழனிச்சாமிக்கு ஐயா, யோக்கியன் நான் மீராவாடே?! நல்லவனுக்கு காலம் இல்லடே" என்று மீரா பொய்யா சலிச்சிக்க…

"மீராங்கறது உரிமை மீரா" என்றான் மகேசு.

"இப்படியே நெஞ்ச தடவிவிட்டு தப்பிச்சிக்கோங்கடா" என்றார் மீரா..

"ஏன் மீரா பழனிச்சாமி வகையறா பாஸ்கர், வாசு இவங்க மேல உனக்கு எப்பவும் கோவம் ஏன்"

"பின்ன என்னடே சரியான இடதுக்கு லைட் கம்பம் இல்ல, சரியான சாக்கடை, குடிக்கற தண்ணி வசதினு எதுவுமே இல்லை ஆனா குறவன் பட்டியத் தவிர எல்லா இடத்திலயும் ஓரளவாவது இருக்கு. திருட்டு பசங்க. இவனுங்களாலதான் ஊருக்குள்ள சாதி வளருது. இவனுங்க பொழைக்க சாதியை ஊதி ஊதி நெருப்பாக்கறானுவ டே" என்று சலிப்பான கோவத்தில் கத்தாத கொறையா பேசி முடிச்சார் மீரா….

"எதிர்த்து நிக்கறவங்க யாரும் வெய்ட்டா இல்லையே மீரா?"

"இதெல்லாம் பேசி வைச்சி செய்றதுடா. மூனு பேருல ஒருத்தன்தான் ஜெயிப்பான். திருடறதுல பங்கு போட்டுக்குவானுங்க"

"இப்டி வேற இருக்கா?! என்று வாய பொளந்தான் மகேசு. இவன் பொம்மிடியில் இருந்து இங்க பொழைக்க வந்தவன் வேற்று சாதிக்காரன். ஆனா மீராக்கிட்ட கரெக்ட்டா இருப்பான். அவசரத்துக்கு கடன் வாங்குவான். சரியா திருப்பி தருவான். வட்டினு ஒன்னும் கிடையாது.

"எங்கடா போச்சு உம்பொண்டாட்டி? ஓயாம பேசுமே!"

"கொழந்தைக்கு உடம்பு சரியில்ல அதான் உள்ள இருக்குது"

"காசு ஏதாவது வேணுமாடே"

" இல்ல மீரா இருக்கு."

"தேவைப்பட்டா கேளுடே"

"சரி மீரா"

இந்த நேரத்துல குடிச்ச டீ பத்தாம கருப்பன் இன்னொரு டீ சொல்ல மீரா அவன திட்றதா அடிக்கறதானு புரியாம இருந்தாப்ல…..

காலேஜ் பஸ் ஸ்டாப்பில் பஸ்நிற்க எல்லாரும் இறங்க வழக்கம் போல பேச்சை ஆரம்பித்தார்கள். 

"என்ன படத்துக்குடா போலாம்?"

" படமா முக்கியம் உன் கூட இருக்கறதுதான முக்கியம்"

சந்தோசு பேச்சில் செல்வி நெகிழ்ந்திருந்த நேரமும் அந்த காலி வகுப்பறை வரவும் சரியா இருந்தது………

செல்வி கையை இறுகப்பிடித்து சந்தோசு நிறுத்த அவள் மலங்க மலங்க விழித்தாள்.

சட்டென கதவின் மூலைக்கு அவளை இழுத்த சந்தோசு அவள் இதழில் தன் இதழை ஒரு நொடியில் ஒற்றி எடுத்துவிட்டான். அதிர்ச்சியில் உடல் நடுங்க நின்றிருந்தாள் செல்வி. இது மாதிரி ஏற்கனவே முத்த பரிமாற்றம் நடந்திருக்கு. ஆனா இப்படி அவள் பயந்ததில்லை. 

இப்ப ஏன் இப்படி என்று அவன் குழப்பத்திலிருக்க, அவள் கண்ணு போன திசையை பார்த்த சந்தோசும் அதிர்ச்சியானான்!

அங்கே அவர்கள் ஊரைச்சேர்ந்த பி.காம் முதலாமாண்டு படிக்கும் சுஜாதா இவர்களை பார்த்தப்படியே நின்றிருந்தாள்!


அறிவடி தொடரும்!...


அறிவடி- 9

நிகழ்காலம்!

நடுங்கிக்கிட்டு செல்வி நிக்க சுஜாதாவே  வந்தாள்.

"அக்கா பயப்படாத நான் யார்ட்டயும் சொல்ல மாட்டேன். சொன்னா எவ்ளோ பெரிய சண்ட வரும்னு தெரியும்" என்றாள் சுஜாதா!

"சத்தியமா சொல்ல மாட்டியா?" என்றாள் செல்வி!

"நம்ம ஊர் சாமி மேல சத்தியமா சொல்ல மாட்டன்கா பயப்படாதிங்க"

"ரொம்ப தேங்க்ஸ்டி செல்லம்"னு கன்னத்த கிள்ளி வைச்சா செல்வி

"நான் இதை சொன்னனா கடைசியில நீயும் இப்டி பண்ண மாட்டனு என்ன இருக்குனு காலேஜை விட்டு எங்க வீட்ல நிறுத்தியிருவாங்கக்கா, பயப்படாதிங்க நான் இத என் ப்ரன்ட்கிட்ட கூட சொல்ல மாட்டேன்" என்ற சுஜா வகுப்புக்கு போக…..

மரத்தடியில் செல்வியும் சந்தோசும் உட்கார்ந்தனர்!

செல்வியின் குடும்பநிலை பற்றி சொல்லியாகனும். செல்லாயிக்கு அடுத்து இவதான நாயகி!

செல்வி அப்பன் முருகேசனுக்கு காடுனு ஏதும் கிடையாது. ஆனா எல்லா காட்டு வேலையும் செய்வான். வெள்ளிக்கொலுசு வேலைக்கு சேலம் டவுனுக்கு போறான். அம்மா பேரு சித்ரா. சித்ரா உள்ளூர்ல காட்டு வேலைக்கு போவா. சொத்துனு ஒத்த வீடு ரெண்டு ரூமோட இருக்கு ஓட்டு வீடு. அதே மாதிரி செல்வியும் ஒத்த புள்ள அந்த ஒத்த வீட்டுக்கு.

செல்வி கல்யாணத்துக்காக ஒரு அஞ்சு பவுன் நகை, சீட்டு போட்டு அப்படி இப்படினு லட்ச ரூவாய்க்கு வைச்சிருக்காங்க. மீராவுக்கு அவுங்க குடும்பத்து மேல மரியாதை உண்டு. ஏன்னா புள்ளய உடனே கட்டிக்குடுக்காம காலேஜிக்கு அனுப்பி வைச்சதால……

முருகேசன் ஊருக்குள்ள எந்த பிரச்சினைக்கும் தலை வைக்க மாட்டான். வெள்ளி வேலை டல்லா இருக்கப்ப யாரோட காட்டுலயாவது வேலை செஞ்சிக்கிட்டு இருப்பான். குடும்பத்துக்கு பொறுப்பான ஆளு! இதுதான் செல்வி குடும்ப வரலாறு.

மீராவும் கருப்பனும் பழைய சோத்துல தயிர ஊத்தி கரைச்சி ஆளுக்கொரு குண்டாவ சின்ன வெங்காயம் சுட்ட கருவாட்டோட அடிச்சிட்டு வீட்டு வாசல்ல புங்கை மரத்தடியில ஒக்காந்து இருக்க குடிகார சரவணன் வந்தான்.

"மாமா"னு சரவணன் கை நடுங்க கூப்ட…..

மீரா கண்டுக்காம ஒக்காந்து இருக்க மறுபடியும் சரவணன் கூப்பிட…
,
"சொல்லுடே"

"ஒரு நூறு ரூவா காசு குடுத்திங்கனா நாளைக்கு தாரேன்!

"திருப்பித்தர தொர எங்க வேலைக்கு போறாரு டாஸ்மாக்குக்கா?! என்றார் மீரா, கருப்பன் எதுவும் பேசல.

கை கால் நடுங்க கெஞ்சாத குறையா நிக்க முடியாம மறுபடியும் " தந்திடறன் மாமா ரொம்ப முடியல மாமா குடு மாமா"னு கேட்க மீராவுக்கு மனசு எறங்கி போச்சு….

"டே கருப்பா பெரிய டம்ளர்ல ஒரு டம்ளர் சாராயத்த இவனுக்கு குடுலே. லே சரவணா  மீரா மாமன் சாராயம் குடுத்துச்சினு ஊருக்குள்ள சொன்ன உசிர் இருக்காது ஆமா"னு மெரட்ட இல்ல மாமா யார்கிட்டயும் சொல்ல மாட்டேனு சத்தியம் பண்ணாத கொறயா சொன்னான் சரவணன்.

கருப்பன் சாராயத்த கொண்டு வந்து குடுக்க நடுங்கிய கையில வாங்கி மேல கீழ சிந்தி குடிச்சான். கருப்பன் கையிலிருந்த ஊறுகாய கூட தொடலை. ஒரு கால் மணி நேரம் போக சகஜநிலைக்கு வந்தவன் எந்திரிச்சி போக பார்த்தான்.

"உட்காருடே" என்று மீரா அன்பா சொல்ல உட்கார்ந்தான்.

"ஏன்டா அப்பனும் இல்ல அம்மாவும் இல்ல இப்ப பொண்டாட்டியும் இல்ல என்ன பண்றதா உத்தேசம். எனக்கு முன்னாடி சுடுகாட்டுக்கு போயிடலாம்னு யோசனையா?! என்று மீரா பேச. அமைதியாய் இருந்தான்.

"இன்னைக்கு இங்கையே இரு உன் பிரச்சினைக்கு ஒரு முடிவு பண்றேன்"

" அவ யாரையோ கூட்டிக்கிட்டு ஓடி போன அவமானத்தாலதான் இப்டி குடிச்சி நிலைமை ஆகிப்போச்சி மாமா"

"செருப்பால அடிப்பேன் ஊதாறி நாயே. நீ கண்டபடி குடிச்சதாலதான் அவ அவனோட போனா?! நீ ஒழுங்கா இருந்திருந்தா அவ ஏன் போகனும் கெட்டபேரு வாங்கனும்?!னு மீரா சீற அமைதியானான்…..

"உன்னால குடிச்சி குடிச்சி காலும் நிக்கல ப் ச்சை இவனால வாயில கெட்டவார்த்த வருது.
வயசுப்புள்ள அவளால படுக்காம இருக்க முடியல. இனி அவ ஓடி போனானு சொல்லாத, ஓடி போக வைச்சனு சொல்லு அதான் சரி. புரியுதா? என்ற மீரா தன் போனை கருப்பனை எடுத்துட்டு வரச்சொல்ல விவோ ஆன்ட்ராய்டு போனை கொண்டு வந்துக் குடுத்தான்…..

போன்ல………. "வணக்கம்யா தம்பி"

"வணக்கங்கையா நல்லா இருக்கிங்களா?"

"எனக்கென்ன நல்லா இருக்கேன். நம்ப தங்கச்சி மவன் ஒருத்தன்தான் முடியாம கிடக்கான்"

"அனுப்பி உடுங்கையா பார்த்துக்கலாம்"

"அட்மிட் பண்ணனும் தம்பி"

"அதெல்லாம் நான் பார்த்துக்கறன் அனுப்பிவிடுங்க"

"நன்றி தம்பி"

"நன்றிய விடுங்க பேசன்ட் பேரும் அப்பா பேரும் சொல்லுங்க"

"சரவணன் அப்பா பேரு கந்தசாமி"

"சரிங்கையா நான் பார்த்துக்கறன். ஓபியில பேர், அப்பா பேர சொல்லச் சொல்லுங்க! நான் வைக்கறங்கையா"னு போன் வைக்கப்பட்டது.

சரவணனும் கருப்பனும் முழிக்க மீரா சொன்னாப்ல…

"பேரு ரவி, சேலம் ஜி.எச்ல நரம்பு சம்பந்தமா டாக்டரா இருக்காப்ல, ஊர் ஏற்காடு, சொந்தக்கார புள்ள விவகாரம் அப்புறம் நம்ம ஆளுங்களை வைச்சி பேசி முடிச்சிக் குடுத்தேன். அந்த வகையில பழக்கம்.

லேய் இன்னைக்கு ரெண்டு கோட்டர் வாங்கி தரேன் குடிச்சிப்புட்டு அட்மிட் ஆகி படுத்து தூங்கிடு. காலையில கை கால் நடுக்கம் வரப்ப மருத்து மாத்திர ஊசி குளுகோஸ்னு ஏத்தி சரி பண்ணிடுவாங்க. நைட் தூக்கம் வராது அதுக்கு ஊசி இருக்கு போடச் சொல்றேன். புரியுதா உன்கூட கருப்பன் இருப்பான். அங்க போய் அடங்காம ஓடி வந்தனா ஊருக்குள்ளயே உட மாட்டன் தெரிஞ்சிக்கோ. லே கருப்பா இவன காப்பாத்தி மனுசனா கூட்டிக்கிட்டு வரது உன் பொறுப்பு" 

"சரி மீரா நான் பார்த்துக்கறன்"னு கருப்பன் சொல்ல ரெண்டுபேர் கால்லயும் விழுந்திட்டான் சரவணன்.

"மாமா எனக்கு குடிக்கனும்னு ஆசையில்லை. ஆனா உடம்பு முடியாம போறப்ப குடிக்காம இருக்க முடியறதில்ல"னு சரவணன் அழ கருப்பன் தயிர் சோத்த கொஞ்சம் கொண்டாந்து தந்தாப்ல……

"தங்கச்சி பையனா போய்ட்ட கண்ணுல பாத்துக்கிட்டு இருக்க முடியல. ஆஸ்பத்திரிக்கி போய்ட்டு வா, சோறு, மூலிகைனு நம்ம வூட்ல இருக்கு நான் தேத்தி உடறன். முழுசா சரியாவட்டும் அந்த புள்ளய போய் கூப்ட்டு பாக்கறன். வந்தா நீ வைச்க்கனும் ஏன்னா தப்பு உன் மேல, வரலனா ஒரு புள்ளய பார்த்து கட்டி வைக்கறன்"னு மீரா சொல்ல கையெடுத்து கும்பிட்டான் சரவணன்.

"அடச்சை கைய எறக்கு இது நீங்க எங்களுக்கு செய்ற வயசுடா"னு கண் கலங்கிட்டாப்டி மீரா. இதுதான் மீரா மனுசங்களோட கஷ்டத்த தாங்க மாட்டாப்ல!

நேரம் போக சாயந்தரமா செலவுக்கு பணம் குடுத்து கருப்பன்கிட்ட தன் நம்பர எழுதிக் குடுத்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைச்சார்!

பழனிச்சாமி வீட்டுல வாசு. பாஸ்கர் கூடியிருக்க தேர்தல் ஆலோசனை ஆரம்பிச்சது……

"என் கட்சி சார்பா எனக்கு ஸீட் உறுதி, நீங்க ரெண்டுபேரும் உங்க கட்சி சார்பா உங்க சீட்ட உறுதிப்படுத்திக்கோங்க"

"எங்க பேருக்கும் ஸீட் கன்பார்ம். மாவட்டச் செயலாளர்கிட்ட ஏற்கனவே பேசி உறுதிப்படுத்தியதுதான்"னு வாசு சொல்ல…..

"பணம்னு வாரிலாம் இறைக்க வேணாம். எப்படியும் நம்ம மூனு பேர்ல ஒருத்தருக்குத்தான் ஓட்டு போடுவானுங்க. பலமான சுயேட்சை இங்க கிடையாது. சுயேச்சையா நின்னாலும் ஜெயிக்கற ஓட்டுலாம் வாங்கிட முடியாது"னு பாஸ்கர் சொல்ல…... 

சாதிக்காரன் ஓட்டுக்கு சமமா மத்த சாதிக்காரன் ஓட்டும் இருக்கு அதனால தேர்தல் முடியற வரை எந்த சாதி பிரச்சினையிலும் தலையிட வேண்டாம்" என்றான் பழனிச்சாமி அதை மத்த ரெண்டுபேரும் சரிதானு தலையாட்டினார்கள். 

"இந்த மீரா ஏதாவது தொந்தரவு பண்ணுவானா?"னு வாசு கேட்க,

"வாய்ப்பே இல்லை. அவன் பொண்டாட்டியோட அண்ணன் பையனுக்கு லா காலேஜ்ல சீட் வாங்கறதுல ஏதாவது பிரச்சினைனா உதவி பண்ணனும்னு கேட்டிருக்கான்." னு பழச்சாமி சொல்ல மத்த ரெண்டுபேரும் நிம்மதியானார்கள். 

நாளை மறுநாள் நாமினேசன் தயாரா இருங்கனு பழனிச்சாமி சொல்ல சரினு சொல்லிட்டு வாசுவும் பாஸ்கரும் கிளம்பினார்கள்…..

சினிமா முடிந்து ஹோட்டலில் சாப்ட்டு விட்டு சந்தோசும் செல்வியும் மற்றவர்களோடு சேர்ந்துக் கொண்டார்கள். சேலம் புது பஸ் ஸ்டான்டில் யார் யார் அடுத்து என்ன பண்ண போறாங்கனு பேச்சு வார்த்தை முடிந்து அவரவர் ஊருக்கு பஸ் ஏறினார்கள்.

காலையில் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து செல்வியும் சந்தோசும் மீண்டு இயல்பாக இருந்தார்கள். எட்டு மணிக்கு முன்னவே இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்!


கத்திரிக்கா முத்தினா சந்தைக்கு வந்துதான ஆகனும். எப்ப முத்தும் அப்படினுதான் தெரியல. மிகப்பெரிய காரியங்களை செய்ய வேண்டிய நிலையில் இருந்தார் அறியாமலே மீரா!....

அறிவடி - 10

நிகழ்காலம்!

இப்படியாக அஞ்சி நாள் ஓடியிருக்க தேர்தல் பிரச்சார வேலைகள் சூடு பிடிச்சிருந்தது. முத்தான் மகன் செந்திலை சத்தமில்லாமல் தேர்தலில் நிக்க வெச்சாரு மீரா….. செந்தில் தமிழ் எம்.ஏ படிச்ச பட்டதாரி. இயற்கை விவசாயத்தில் ஆர்வம் அதிகம். ஆரம்பத்தில் இலாபம் இல்லாவிட்டாலும் போகபோக இயற்கை விவசாயம் இலாபம் தருமென்பதை உணர்ந்து தன்னோட ஆறு ஏக்கர்ல இயற்கை விவசாயம் பண்ணி வந்தான். 

விளையும் பொருட்களை டவுனில் கடை பிடித்து சொந்தமா விற்று வந்தான் எனவே இலாபம் இருக்கவே செய்தது. ஏழைகளும் வாங்கும் அளவிலும். பணக்காரர்களுக்கு டோர் டெலிவரியும் செய்து வந்தான். நல்ல பேச்சாளன்.

அவன்கிட்ட பேசி பேசி கடைசியாக சம்மதிக்க வைத்து தேர்தல் களத்தில் இறக்கி விட்டுட்டார் மீரா. தன்னோட சொந்த காசுல, எங்கெங்க லைட் கம்பங்கள் வேணும், சாக்கடை வசதி எப்படி இருக்கனும்., எங்கெங்க தண்ணி பைப்புகள் வேணும். மேலும் குறவன் பட்டிக்கு ஒரு நூலகம் வேணும் இதை யார் ஒரு வருசத்துல செஞ்சித்தரனு கோயில்ல வைச்சி சத்தியம் பண்ணித் தராங்களோ அவங்களுக்கு ஓட்டு போடுங்கனு நோட்டிசை ஊர் முழுக்க குடுக்க வைச்சாரு.

இவர் சொன்னதையெல்லாம்  ஊர் மேப்ப நோட்டீசா அடிச்சி லைட் கம்பங்கள். சாக்கடை வசதி. எங்கெங்க குடிநீர் பைப்புகள் வரும்னு, நூலகம் எங்க வரும்னு தெளிவா அச்சடித்துக் குடுத்து அசத்தினான்…. மக்களுக்கு அவன் நோட்டிசே ஒரு கனவை உருவாக்கி இருந்தது. மினி ஆட்டோ ஒன்ன வாடகைக்கு எடுத்து வீதி வீதியா சந்துக்கு சந்து தன் பேச்சுத் திறமையைக் காட்டினான்.

"லே செந்திலு, ஓட்டுக்கு பணம் தர மாட்டேன் அப்படினு, ஓட்டுக்கு பணம் வேணும்னா ஊர்க்காச கொள்ளைத்தான் அடிப்பேனு எல்லா இடத்திலயும் நகைச்சுவையா பேசு."னு மீரா சொல்ல….

" மீரா நான்லாம் உன்னை பார்த்து வளர்ந்த பையன் எத்தனையோ படிப்பிருக்க தமிழ் இலக்கியம் எடுத்து படிச்சேன். கவலைப்படாத பிச்சி எடுத்திடறன்" என்றான் செந்திலு….

" இங்க பாரு லேய் செந்திலு மற்ற ஊராட்சியில என்னென்ன வசதிகள் இருக்கு இங்க என்னென்ன இல்லனு பட்டியல் போட்டு பேசு" என்றார் மீரா…

"சரி வா மீரா முக்கூட்டியில பிரச்சாரம் பண்றேன் வந்து பாரு உன் வளர்ப்ப என்றான்" செந்திலு..

"நான் மக்களோடு மக்களாத்தான் இருப்பேன். நீயும் மக்கள்ல ஒருத்தனா பேசு. கோயிலை கொஞ்சமா பெருசு பண்ணிக் கட்டித் தரனு சொல்லி வை" என்றார் மீரா

"நீ வந்து பாரு மீரா அப்புறம் சொல்லு" என்ற செந்தில் பிரச்சாரத்துக்கு கிளம்பினான். கொஞ்ச நேரம் போய் மீரா புல்லட் கிளம்பியது!

மினி ஆட்டோவுல நின்னு சாதரணமாக பேச ஆரம்பிச்சி மக்களோட கவனத்த ஈர்த்து நிக்க வைச்சி கூட்டம் சேர்ந்ததும் மெய்ன் மேட்டர்களை பேச ஆரம்பிச்சான். 

" சுத்துப்பட்டுல முதன் முதலா பஞ்சாயத்து டி.வி வந்தது குறவன் பட்டிக்கு அப்ப சுப்பராயன் தாத்தா ஊராட்சி தலைவரா இருந்தாரு. தன் கட்சி பெரிய ஆளுங்கக்கிட்ட சண்ட போட்டு டி.விய புடுங்காத குறையா தலையிலயே தூக்கிட்டு வந்தாரு ரோட்ல இருந்து. ஏன்னா ஊரும், ஊர் மக்கள் மேல அவர் வைச்சிருந்த பாசம் அப்படி.

இன்னைக்கு மற்ற ஊராட்சிகளோட நம்ம ஊராட்சிய பார்த்தா தீரா நோய் வந்த ஆள போல பாவமா இருக்கு.

மற்ற ஊராட்சிகள்ல வீதிக்கு ஒரு நல்ல தண்ணி வர பைப் இருக்கு, பெரிய வீதியா இருந்தா ரெண்டு இருக்கு!

நைட்ல மற்ற ஊராட்சிக்கு போனா நைட்டா பகலாங்கற அளவுக்கு லைட் கம்பங்கள். இதில்லாம சூரிய வெளிச்சாதால எரியற லைட் கம்பங்கள்.

ஏத்த இறக்கம் பாத்து சிமென்ட்டால கட்டின நிக்காம ஓடற சாக்கடை. ஆனா இங்க பேருக்கு மட்டுமே அதுவும் ஏத்த இறக்கம் பாக்காம கட்டின கழிவுத்தண்ணி தேங்கி நிக்கற சாக்கடைகள். சிக்கன் குனியாவால, டெங்கால அதிகம் பாதிக்கப்பட்டது நம்ம குறவன்பட்டி ஊராட்சிதான். நமக்கு வைத்தியம் பார்த்த சுடலைமுத்து டாக்டரு புதுசா இப்ப ரெண்டு மாடி வீட்ட கட்டியிருக்காரு.

படிக்கற நம்ப புள்ளைங்க கோலி. கிரிக்கெட்டுனே பொழுதனைக்கும் விளையாடுது நல்ல விசயங்கள் படிக்கறதுக்கான வாய்ப்பே இல்ல. பல நல்ல விசயங்களை சின்ன வயசுலயே தெரிஞ்சிக்கிட்டு ஒரு இலட்சியத்தோட வாழ்ற, அதன்படி நடக்கற இளைய தலைமுறையை உருவாக்க நிச்சய நான் இங்க லைப்ரரியை கொண்டு வருவேன். இல்லனா நானே சொந்த காசுலயே கட்டித் தருவன்." சொல்லி நிறுத்தியதும் கூட்டத்துல பயங்கர கைத்தட்டல். 

டக்குனு மினி ஆட்டோவுல மீரா ஏறியதும் மக்கள் ஆச்சரியமா பார்த்தாங்க.

"என் மவன் செந்திலு ஜெயிச்சி வந்தா நிச்சயம் சொன்னதை செய்வான். சிகரெட், குடினு எந்த கெட்டப் பழக்கமும் இல்லாத தங்கமான பையன். அவன் கட்டப்போற நூலகத்துக்கு என் சார்பா இப்பயே முப்பதாயிரம் தரேன்"னு செக்கை குடுத்தார் மீரா இது செந்திலே எதிர்பார்க்காதது. கூட்டமே கொண்டாட்டமா மாறியது. உடனே வண்டிய விட்டு கீழிறங்கிய மீரா மக்களோட போய் நின்னுக்கிட்டார்……

செந்தில் பேச்சை தொடர்ந்தான்.

"பெரியப்பா மீராவுக்கு நாம மனதார நன்றி சொலிக்குவோம். அப்படியே நம்ம கோவிலையும் புதுப்பிச்சி தரேன். இது நம்ம அம்மன் மேல சத்தியம்" பேச மக்கள் உணர்ச்சிவசத்திற்கு தள்ளப்பட்டார்கள்.

" முன்ன இருந்தவங்களூக்கு திறமை இல்லை, திருடிட்டாங்க அப்படிலாம் பேச விரும்பல போனது போனதா இருக்கட்டும். இனி நடக்கறது நல்லதா சரியா நடக்கட்டும். மறுபடியும் சொல்றேன் ஓட்டுக்காக ஒரு பைசா தரமாட்டேன். நம்பி ஓட்ட போட்டிங்கனா உங்களோட அத்தனை தேவையையும் செஞ்சி தருவன். உங்களோடவே இருப்பன். மத்திய. மாநில அரசுகள் ஊராட்சிக்கு தந்திருக்கற திட்டங்கள் எல்லாத்தையும் இங்க கொண்டு வருவேன்"என்று பேசி முடிக்க உண்மையாகவே மனதார மக்கள் கைத்தட்டி வரவேற்றார்கள். 

செந்தில் எந்த ஒரு இடத்திலும் சாதியை சொந்தத்தை வைச்சி பேசல. மீராவ பெரியப்பானு சொன்னது மட்டும்தான். அது பிரச்சினை இல்லை. ஏன்னா மீராவுக்கு சாதி, மதம், கிடையாது….

ஊர்ல இருக்க மூனு டீ கடைகளிலும் செந்தில், மீரா இவர்கள் அச்சடிச்ச நோட்டிச பத்திதான் பேச்சு. 

" மீரா வேலையை காட்டுருச்சி பாத்தியா?"னு ஒருத்தன் சொல்ல….

"நல்ல பையனைத்தான நிக்க வைச்சி நல்லத பேச வைக்குது"னு மற்றவன் சொல்ல இப்படியே ஊருக்குள்ள பேச்சும் இருந்தது நாளையோட பிரச்சாரம் முடியுது.

பழனிச்சாமி, வாசு, பாஸ்கர் ஆரம்பத்தில் சாதாரணமாக நினைச்சானுங்க. இப்ப வயிறு கலங்கி போய் நிக்கறானுங்க… மூனு பேருக்குமே ஏறக்குறைய மீரா வயசுதான்!

"பழனிச்சாமிணே பாத்தியா மீரா வேலையைக் காட்டிட்டான்"னு வாசு சொல்ல…..

"இத நான் கொஞ்சம் எதிர்பார்த்தேன் வாசு, ஆனா இந்த அளவுக்கு பீல்டுல வேலை செய்வானுங்க, பேசுவானுங்கனு நினைக்கல மீராவ தப்பா கணக்கு போட்டுட்டேன். மொத்த அனுபவத்தையும் களத்துல எறக்கி மெரட்டிட்டான். பணத்தை புல்லா இறக்கறத தவிர வழியில்லை என்றான்" பழனிச்சாமி…

"வேற வழியில்லை" என்றான் பாஸ்கர்…..

சந்தோசின் மொபைல் சிணுங்கியது. அழைப்பில் செல்வி…..

" டே என்னடா பண்ற" என்றாள் செல்வி 

" வீட்ட சுத்தம் பண்ணி மீன் குழம்பு வைச்சிக்கிட்டு இருக்கேன்"என்றான் சந்தோசு.

" நான் குடுத்து வைச்சவடா"னு சிரிச்ச செல்வி தொடர்ந்தாள்.

" இங்க பாரும்மா எங்க வீட்ல அத்தை வீட்டுக்கு 11 மணிக்கு போறாங்க சும்மா.  பயப்படாத அத்தைக்கு பையன் இல்லை. ப்ரி யா இரு நான் போன் பண்றன்" னு செல்வி சொல்ல குசியானான் சந்தோசு.

"சரிம்மா வைக்கிறன் பாத்ரூம்ல இருந்து பேசறன்"னு சொல்லி கட் செய்தாள்.

"ஏங்க இவ தனியாத்தான இருக்கா இவளையும் கூட்டிக்கிட்டே போவம். இவ அத்தையும் இவள பார்த்து நாளாச்சுனு புலம்பறா"னு செல்வி அம்மா சொல்ல முருகேசன் செல்வியை ரெடியாகச் சொல்ல மறுக்க முடியாம குளிக்க போனாள் செல்வி.

வீட்டில் சோறு மீன் குழம்ப ரெடி பண்ணிட்டு மணியை பார்க்க மணி 11.15 ஆகியிருந்தது சரி செல்விக்கு போன் அடிப்பம்னு அடிச்சான். அங்க செல்வி குளிக்க போயிருந்தாள். 

சரண்யாங்கற பேர்ல போன் வர செல்வி அம்மா போனை அட்டன்ட் பண்ணி "ம் சொல்லும்மா" என்றாள்!!! இப்படித்தான் செல்வியும் போன்ல பேசுவாள்!

எதிர்முனையில் சந்தோசு " அப்பா அம்மா போயிட்டாங்க போல அப்புறம் ஏன்டி போன் பண்ணல. மீராவும் பிரச்சாரத்துக்கு போயிருச்சி வர ரெண்டு மணி ஆவும்"னு சந்தோசு பேசி முடிக்க,

செல்வி அம்மா சித்ராவுக்கு நெஞ்சு வலியே வந்திருச்சி ஏன்னா பேசினது சந்தோசுனு அவளுக்கு புரிஞ்சிருச்சி. மொபைலை ஆப் பண்ணி கையில வைச்சிக்கிட்டு முருகேசனிடம் தகவலைச் சொல்ல அவன் கண்ணுல தண்ணியே வந்திருச்சி….

குளிச்சிட்டு வந்த செல்விக்கிட்ட நீ இங்கையே இரு நாங்களே போயிட்டு வரோம்னு சொல்லிட்டு செல்வி மொபைலை எடுத்துக்கிட்டு முருகேசனும் சித்ராவும் பழனிச்சாமி வீட்டில் நின்றார்கள். 

விசயத்தை கேட்டுக்கொண்ட பழனிச்சாமி பிரச்சினையை நான் பார்த்துக்கறேனு டீ குடுத்து அனுப்பி வைச்சான். வாசுக்கும், பாஸ்கருக்கும் குசியோ குசி. 


மீராவின் தலை உருளும் நேரம் வந்தாச்சி! கத்திரிக்கா முத்தியிருச்சி!

அறிவடி- 11

நிகழ்காலம்!

வாசுக்கும் பாஸ்கருக்கும் தாளமாட்டாத சந்தோசம் இதை சாதி பிரச்சினையாக்கி தேர்தல்ல மூனு பேருல ஒரு ஆளு ஜெயிச்சிரலாம்னு திட்டம் போட்டானுங்க…

"இதனால நமக்கு எந்த பிரயோசனமும் இல்ல"னு பழனிச்சாமி சொல்ல வாசுக்கும் பாஸ்கருக்கும் அதிர்ச்சி!

"என்னணே சொல்றிங்க?! என்றான் பாஸ்கர்!

"நம்ம சாதி ஓட்டுக்கு சமமா மத்த சாதிக்காரனுங்க ஓட்டு இருக்கு அதுல தாழ்தப்பட்டவங்க ஓட்டு அதிகம். நம்ம சாதி ஓட்டு நமக்கு மூனு பேருக்கும் பிரியும். ஆனா தாழ்த்தப்பட்டவங்க ஓட்டு மொத்தமா மீரா நிறுத்தற செந்திலுக்கே போகும். மற்ற சாதிக்காரன் ஓட்டும் சிலது போகும். ரொம்ப சுலபமா ஜெயிச்சிருவான் செந்திலு. அதனால இதை தேர்தல் முடிஞ்சி மீரா தலையை உருட்ட வைச்சிக்குவோம்"என்று தெளிவான அரசியலை சொல்லி பழனிச்சாமி முடிக்க ஏற்றுக்கொண்டார்கள் ரெண்டு பேரும்.

பழனிச்சாமி தொடர்ந்தான்.

"இந்த பிரச்சினைய சமாதானமா போற மாதிரி பண்ணக்கூடாது புரியுதா"

"ம்" என்றார்கள் இருவரும்…

ஏன்டா இவனுங்களுக்கு மீரா மேல இவ்வளவு வெறுப்புனு தோணலாம். இந்த வெறுப்புக்கு காரணம் மீராவோட ஆண்மை, நடத்தைதான் காரணம். 

இந்த மூனு பேரும் காலேஜ் வர போனவனுங்க.
ஆனா இவனுங்க வாலிப காலத்துல பள்ளிக்கூடத்துக்கே போகாத மீராதான் ஹீரோ. ஊர் திருவிழாவில் இருந்து நல்லது கெட்டதுனு பலரோட பார்வை மீரா மேலத்தான் இருக்கும்.

எந்த பொண்ணும் மீரா தன்கிட்ட பேசமாட்டானானு ஏங்கிய காலங்கள் அது. உண்மைய சொல்லனும்னா நீ யாரா வேணா பாரு ஆனா என்கூட பேசுனு நினைச்ச கல்யாணமான பொம்பளைங்களே அப்ப உண்டு……

ஊர்வேலை. போட்டி அது இதுனு எல்லாத்தைலயும் மீராதான். மீராவோட ஸ்டெட் கட்டிங், பெரிய காலர் டைட்டான சட்டை, பெல்பாட்டம் பேண்ட், வார் செருப்புனு ஹீரோவே தோக்கற ரேன்ஞ்சுலதான் இருப்பாப்ல.

இவனுங்க ஒரு புள்ள தன்னை பாக்கறதா நினைக்கறப்ப அந்த புள்ள அடுத்த வாரம் மீராவோட பேசிட்டு இருக்கும்!

ஒருமுறை பழனிச்சாமியோட முறைக்கார புள்ளைக்கிட்ட எதார்த்தமா மீரா பேசிக்கிட்டு இருக்க, பழனிச்சாமி டென்சனாகி தப்பான வார்த்த விட்டு எட்டி உதைச்சிட்டான். அவ்வளவுதான் 80s சினிமாவுல வர ஸ்டண்ட்  ஸீன் மாதிரி அடிச்சி துவைச்சி காய வைச்சிருச்சி மீரா. 

முறைக்கார புள்ள முன்னாடி அடிபட்ட அவமானம் இன்னும் அவன் மனசுல அப்படியே இருக்கு. அந்த புள்ளளதான் இப்ப பழனிச்சாமியோட பொண்டாட்டி… வாசுக்கும், பாஸ்கருக்கும் இப்படியே ஆனா அடி வாங்குனதில்ல மீராக்கிட்ட. மீராவும் தேவையில்லாம யார் மேலயும் கை வைக்காது.

"டே வாசு மீராவுக்கு போன் போட்டு குடுறா"னு சொன்னான் பழனிச்சாமி!

போன் ரிங் போக மீரா லைனுக்கு வந்துச்சி 

"சொல்லு வாசு என்ன பிரச்சினை என்ன உதவி வேணும்"னு நக்கலாக கேட்க,

"பிரச்சினை எனக்கில்லை பழனிச்சாமி அண்ணன் உன்கிட்ட பேசனுமாம்" என்றான் வாசு….

"சரி சரி குடு குடு என்னனு கேட்போம்"என்றார் மீரா!

போனை வாங்கிய பழனிச்சாமி பேச ஆரம்பிச்சான்.

"ஒரு முக்கியமான விசயமா பேசனும் வீட்டு 
வரை வந்துட்டு போ மீரா"

" தேர்தல் சம்ந்தமானா விசயம்னா வரமாட்டன் பழனிச்சாமி"

"இல்ல மீரா வரப்ப சந்தோச கூட்டிக்கிட்டு வா"

"அவன் எதுக்கு"

"நேர்ல வா சொல்றன்"னு சொல்லி போனை வைத்தான் பழனிச்சாமி. இதை வைச்சி தேர்தல்ல மீராவ சைலன்ட்டா வைக்கலாம்னு கணக்கு போட்டான் பழனிச்சாமி!

நேரா வீட்டுக்கு போன மீரா சந்தோச பாக்க அவன் முகம் வாடி இருந்தது செல்வி நம்பர் ஸ்விட்ச் ஆப்ல இருக்கறதால…..

"என்னடா பொண்டாட்டி ஓடி போனவன் கணக்கா மூஞ்சிய வைச்சிருக்க சாப்டியா?"

"ஒன்னுமில்ல மாமா சாப்டனும்" என்றான் சந்தோசு! 

மீரா தொட்டியில ஒரு மினி குளியல் போட்டுட்டு வீட்டுக்குள்ள வர சந்தோசு ரெண்டு பேருக்கும் சாப்பாட்ட எடுத்து வைத்திருந்தான்.

"உட்காருடே" என்றார் மீரா…..

சந்தோசு உட்கார அவனுக்கு இவரே சோத்த தட்டுல நிறைய போட்டு  மீனையும் அள்ளி வைச்சி சாப்டுறானு சொல்லிட்டு தனக்கும் போட்டுக்கிட்டு ஒரு கட்டுக் கட்டினார். சந்தோசும் வேற வழி இல்லாம போட்டத எல்லாம் தின்னான். ரெண்டுவேள சோத்துக்கு வைச்ச மீன் குழம்பும், மீனும் காலியாகி இருந்தது.

மீண்டும் வாசு மீராவுக்கு போன் பண்ண,

"மத்தியான சோத்துக்கு அப்புறம் ஒரு குட்டித் தூக்கம் போடறது வழக்கம். சந்தோசு செல்லாயி கணக்கா ருசியா வைச்சிருந்தான் புல்லா தின்னுட்டேன்! தூங்கி எந்திரிச்சி வரனு உங்க தலைவர் பழனிச்சாமிக்கிட்ட சொல்லு! என்று நக்கலா பேசிட்டு தூக்கம் போட கண்ணை மூடுச்சு நம்ம மீரா!

"என்னையா சொல்றான் மீரா"னு பாஸ்கர் கேட்க.

"யோவ் அவன் நக்கல் பண்றான்யா புல்லா தின்னுட்டானாம் லைட்டா தூங்கனுமாம். தூங்கி எந்திரிச்சி வரானாம். ரோப்பு புடிச்சவன்"னு வாசு சொல்ல……

பழனிச்சாமிக்கும் பாஸ்கருக்குமை சுர்னு ஏறிக்கிச்சி!

தூங்கி எழுந்து மொகத்த கழுவிக்கிட்டு சுக்கு டீ குடிச்சிட்டு புல்லட்ட ஒதைச்சி சந்தோச ஏறுடா வண்டியிலனு ஏத்துன மீரா வண்டிய விட்டு இறங்காம பழனிச்சாமி வீட்டு வாசல்ல நின்னுச்சி….. பழனிச்சாமி பொண்டாட்டி கோகிலாத்தான் வாசலுக்கு வந்து உள்ள வாங்கனு கூப்டவே மீரா வண்டிய ஒத்த கையால இழுத்து சென்டர் ஸ்டேன்ட்ட போட்டுட்டுட்டு உள்ள போச்சு.

ஹால்ல பழனிச்சாமி, பாஸ்கர், வாசு மூனு பேரும் உட்கார்ந்திருக்க அவனுங்கள கண்டுக்காம சந்தோச உட்காரச் சொல்லிட்டு கால் மேல கால் போட்டு உட்கார்ந்தது!

" ம் அப்புறம் சொல்லுங்கையா என்ன பிரச்சினை எதுக்கு எம்மாப்பிள்ளைய கூட்டிக்கிட்டு வரச் சொன்னிங்க?! அவ்ளோ பெரிய வீடு வாசல் மரம்னு வைச்சிருக்கேன் உங்களுக்கு  தேவைனா நீங்கதான வரனும்?! எங்கள கூப்ட்டு அனுப்பற அளவுக்கு கெளரவம் ஏறி போச்சானு கொட்டாவி விட்டப்படி" நியாயம் பேசியது மீரா..

"தேவையில்லாம பேசாத மீரா. விசயத்துக்கு வந்தரலாம்" என்றான் பழனிச்சாமி!

"சரி வந்தரலாம் அது பிரச்சினை இல்லை மூனு பேர்ல ஒரு ஆள்தான் பேசனும்! யார் பேசறது?! என்றது மீரா!

"நானே பேசறன்" என்றான் பழனிச்சாமி!

"சரி பேசு சாயங்கால பிரச்சார வேலைலாம் கெடக்கு"

" முருகேசன் மவ செல்வி இருக்காளே….."

" ஆமா தட்டுக்குச்சி புள்ள அதுக்கென்ன?!

" அந்த புள்ளைக்கிட்ட காதல் அது இதுனு சந்தோசு போறான். அவங்க அப்பனும் ஆத்தாளும் ஏதாவது நடந்தா சாவறத தவிர வழியில்லனு கதறிட்டு போயிருக்காங்க எங்கக்கிட்ட"

எங்க இருந்து மீராவுக்கு கோவம் வந்துச்சினே தெரியல சந்தோச ஓங்கி அடிச்சிருச்சி. பையன் கட்டா இருந்தாலும் மீராவின் மல்யுத்த அடிக்கு சுவத்து ஓரமா போய் வுழுந்துட்டான். மீராவுக்கு கண்ணு கலங்கியிருச்சி. அங்க இருந்த எல்லாருக்கும் அதிர்ச்சி மீரா இத எதிர்ப்பாருனு யாரும் நினைக்கல. 

மீரா சந்தோச பார்த்து பேச ஆரம்பிச்சது. சந்தோசு அப்படியே சுவத்துல சாஞ்சி அடி தாங்காம உட்கார்ந்து இருந்தான்.

"ஏன்டா அறிவுக்கெட்ட நாயே இந்த விசயத்த நீதான முதல்ல சொல்லிருக்கனும் கண்டவன் சொல்லி கேட்னுமா நானு. பி.எல் ரெண்டு வருசம் முடிஞ்சதும் ஜாம் ஜாம்னு கல்யாணத்த பண்ணி வைச்சிருப்பன். 

அந்த புள்ளையோட அப்பன் மூளையைக் கழுவி அந்த புள்ளையவும் லா காலேஜ்ல சேர்த்தி உட்ருப்பன்"னு சொல்லி கையை நீட்ட கைய புடிச்சி எழுந்து சிரிச்சிக்கிட்டே சோபாவுல உட்கார்ந்தான். மூனு பேருக்குமே செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது!

"கடைசியா என்ன சொல்ற மீரா"

"ஒத்துக்கிட்டா படிப்பு ரெண்டு வருசம் முடிஞ்சதும் கல்யாணம், இல்லனா கோர்ட்ல கேச போட்டு அந்த புள்ளய என் வூட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்திருவேன். சந்தோச காட்ல இருக்க வூட்டுக்கு தொரத்திடுவேன்"

பழனிச்சாமிக்கும் இதான் தேவைப்பட்டது. சாதி சனம் முன்னால தேர்தல் முடிஞ்சதும் பஞ்சாயத்தக் கூட்டி மறுபடியும் இவனுங்கக்கூட யாரும் பொலங்காத மாதிரி பண்ணிடனும்னு கணக்கு போட்டான்.

சோபாவிலிருந்து எந்திரிச்ச  மீரா…..

"எட்டு மணிக்கு புள்ளைய கூட்டிக்கிட்டு இங்க வரனும் அவங்க. நானும் பையனோட வரன். இல்லனா உங்க மூனுபேர் மேலயும் கேசு குடுப்பேன் புள்ளைய கடத்தி வைச்சிருக்கிங்கனு. நான் பழைய மீரா கிடையாது புரியுதா? ஏற்பாட்ட பண்ணி வைங்க" என்ற மீரா சந்தோச புல்லட்ட எடுக்கச் சொன்னது!

சந்தோசு ஆச்சரியமா புல்லட்ட ஒதைச்சி உட்கார்ந்தான். மீரா ஏற புல்லட் நகர்ந்தது…..

பின்னாடி ஒக்கார்ந்திருந்த மீரா சந்தோசு காதுல இப்படி சொன்னது!


" இந்த புல்லட்ட ஓட்டற தகுதி உனக்கு வந்துருச்சிலே"!!!!


அறிவடி- 12

நிகழ்காலம்!

இரவு எட்டு மணி…… பழனிச்சாமி வீடு!

முருகேசன், சித்ரா, செவ்வி. மீரா. சந்தோசு. பழனிச்சாமி, பாஸ்கர். வாசு, கோகிலா என எட்டு பேர் ஹாலில் உட்கார்ந்து இருக்க முதலில் யார் ஆரம்பிப்பதென்ற  தயக்கம் அங்க நிலவிய அமைதி எடுத்துக்காட்டியது……. அந்த வீடு எப்பவும் இப்படித்தான் இருக்கும் பழனிச்சாமி கோகிலாவிற்கு குழந்தைகள் கிடையாது.

மீரா வழக்கமான தன் ஸ்டைலில் ஆரம்பித்தார்.

" ஒரு நல்ல காரியமா பேச வந்துட்டு எல்லாரும் இப்டி தொண்டையில கல்லு அடைச்ச மாதிரி இருந்தா எப்படி"னு மீரா கேட்க கோகிலா களுக்னு சிரிச்சிட்டா…

பழனிச்சாமிக்கோ இந்த வயசிலயும் இவன் அடங்க மாட்டங்கிறேனேனு கடுப்பு. 

"இங்க பாரு இத நல்ல காரியம்"னு நீயா சொல்லக்கூடாது"னு பழனிச்சாமி கடுக்க….

"அப்ப பேசித் தொலைங்கையா"னு சட்டை கையை மடக்கி விட சந்தோசுக்கு வந்த சிரிப்பை அடக்க முடியாமல்…….

"மாமா நான் கொஞ்சநேரம் வெளிய நிக்கறன் நீங்க பேசுங்க"

" அட எவன்டா இவன் கோட்டி பயலா இருக்கான். கட்டிக்க போற புள்ள இருக்குது கண்ணால பேசுவமா காதல வளத்துவமானு இல்லாம வெளிய போறானாம் முட்டா பய"னு மீரா சொல்ல……..

கோகிலா. செல்வி. சந்தோசு சத்தமாகவே சிரித்து விட்டார்கள். முருகேசன் மலங்க மலங்க விழிக்க மற்ற எல்லாருக்கும் பயங்கர எரிச்சல். செல்வி அம்மா ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சிட்டா மீராவோட உறுதியான பேச்சால்…

"டே மாப்ள சந்தோசு வெளிய யாரையாவது அனுப்பறதா இருந்தா உன் மாமியாவ அனுப்பு என்னமோ எழவு வூடு மாதிரி அழுதுக்கிட்டு"னு மறுபடியும் மீரா பேச , இதுக்குமேல இங்க இருந்து சிரிச்சம்னா பழனிச்சாமி டைவர்ஸ் பண்ணிடுவானு ஹால்ல இருந்து கிச்சனுக்கு டீ போட போடற சாக்கில் போனாள். அந்த காலத்துல ஒன்சைடா மீராவ லவ் பண்ணுன ஆளுங்கள்ல கோகிலாவும் ஒரு ஆள். வெள்ளை மனம் படைச்ச இரக்கக்காரி!

மீரா பேச்சைக் கேட்டு….

"இதெல்லாம் சரியில்ல மீரா கண்ட சாதி பயலுக்குலாம் நம்ம சாதி புள்ளய குடுக்க முடியாது"னு பாஸ்கர் எகிறினான்……

" ஸ்ஸப்பா காலேஜிக்கு முழுசா போவாத நீ நாளைக்கு பெரிய வக்கீல் ஆவப்போறவன சாதிய வைச்சி பேசற, அதிருக்கட்டும் கீழ வளவுல இதே கண்ட சாதியில ஒருத்திய இந்த வயசுலயும் வைச்சிருக்கியே அப்ப தெரியலையா சாதி. மூடிக்கிட்டு ஒக்காருடே எட்டணா பயலே"னு இடுப்பைத் தடவிக் காட்டினார். இடுப்புல சூரியோட வந்திருக்கனு சொல்லாம சொல்ல மறுபடியும் கப்சிப் ஆனார்கள்கள். மீரா பேச ஆரம்பிச்சாப்ல…..

"ஆயிரம்தான் இருந்தாலும் இங்க பேச ஆளுங்கள கூட்டினது பழனிச்சாமி. ய்யா பழனிச்சாமி புள்ளய பெத்தவங்கக்கிட்ட பேசிக்க அனுமதி வேணும்"னு அமைதியா கேட்டார் மீரா….

" சரி பேசு மீரா"னு பழனிச்சாமி சந்தோசமாவே சொன்னான். அவனுக்குத் தேவை இந்த பிரச்சினை இங்கையே முடிக்கக்கூடாது. தேர்தல் முடிஞ்சி பஞ்சாயத்துக்கு போவனும். சாதி சனம் மீராவ ஒதுக்கனும் இதான் அவன் திட்டம்"

"புள்ளய பெத்தவங்க நெலம புரியுது. ஆனா சாதிக்காக இந்த மாப்ளய வேணாம்னு சொன்னிங்கனா ஜில்லா எங்க தேடுனாலும் இவன மாதிரி அறிவான. ஆரோக்கியமான மாப்ள சிக்காது. குடி, சிகரெட்னு சுத்தற பசங்க மத்தியில நல்லபடியா எம் பொண்டாட்டியும் நானும் வளத்தி இருக்கோம். நீங்க மேற்கொண்டு சொல்லுங்க நான் அப்றமா பேசுறனு" மீரா சொல்ல…..

"புள்ளய பெத்தவங்க பேசுங்கப்பா அதான் மீரா நியாயமா பேச்சில் இருந்து ஒதுங்கிப்டாப்லயே" என்றான் பழனிச்சாமி……

செல்வி அம்மா சித்ராதான் மொதல்ல பேசினா,

" இப்படி ஒன்னு நடந்துச்சுனா எங்கள சாதி சனம் தள்ளி வைச்சிருங்க நல்லது கெட்டதுனு எங்கையும் போக்குவரத்து இருக்காதுங்க"னு நிறுத்தினாள்.

முருகேசன் ரெண்டே வார்த்தைதான் பேசினான். " இது சரி வராதிங்கையா"

" நீ சொல்றத சொல்லு மீரா" என்றான் பழனிச்சாமி!

மீரா ஆரம்பிச்சார்……

"ஏ தட்டுக்குச்சி எங்க வூட்டுக்கு வந்து ஒடம்ப தேத்தறியா இல்லை உங்க வூட்ல நோஞ்சானாவே இருக்கியா"னு சூசகமா காமெடியா மீரா கேட்க……

"நான் உங்க வீட்டுல சந்தோசுக்கூட வாழ விரும்பறன் மீரா" என்று நிறுத்தினாள் செல்வி . மறுபடியும் அழுவ ஆரம்பிச்சா சித்ரா…

சித்ரா அழுது முடிக்கற வரை பொறுமையா இருந்த மீரா இறுதியா உறுதியா பேசினார்.

"நான் இப்ப இருக்க வீடு சந்தோசுக்கு. அந்த வூட்ல ரெண்டு குடும்பம் குடும்பம் நடத்தலாம். வாசல் நிலம் எம் பசங்களுக்கு. எனக்கிருக்க மூனு ஏக்கர்ல ஒரு ஏக்கர் சந்தோசுக்கு! யோசிச்சி சொல்லு சித்ரா…. பய ரெண்டு வருசத்துல வக்கீல் ஆய்ருவான். நீ சரினு சொன்னா செல்வியவும் வக்கீல் ஆக்கறது எம் பொறுப்பு. நல்ல ஜோடியா சந்தோசமா வாழும்மா நீ விட்டனா, அத கெடுத்தறாத தாயி"னு குரல் தழு தழுக்க கேட்க சந்தோசால தாங்க முடியல…..

" மாமா எனக்கு எந்த இதுவும் வேணா..  நீ எதுக்கு வாழ்க்கைனா என்னனே தெரியாத இவுங்க முன்னால கண் கலங்கற, நீ வா போலாம். உங்க பொண்ண நீங்களே வைச்சிக்கோங்க. எம் மாமன் எறங்கி போய்த்தான் எதுவும் ஆகனும்னு இங்கில்லனு" நிறுத்த, அவன அமைதியா உட்காரச் சொன்ன மீரா சித்ராவ பார்க்க….

சித்ரா சாதி சனம்னு இழுத்தா……

"ஏ ஆத்தா இருக்கறது ஒரு புள்ள அது நல்லபடியா வாழ்றது முக்கியமா இல்ல எதுக்கும் உதவாத சாதி முக்கியமா? நாளைக்கு 
புள்ள வறுமையில வாழ்ந்தா சாதிக்காரனுங்க வந்து ஒதவிடவா போறாங்க. வாழறதுக்கு அன்பும் காதலும் காசும் ஆத்தா இந்த மூனும் இங்க இருக்கு, நீ நாலுபேருக்காக புள்ள வாழ்க்கையை கெடுக்கற?! யோசி தாயி"னு மீரா பேச்சை நிறுத்த கோகிலா எல்லாருக்கும் டீ ய கொண்டு வந்து தந்தாள்……

எல்லாரும் டீ குடிச்சி முடிக்க…. பழனிச்சாமி 
 செல்வி அப்பா அம்மாவிடம் கடைசியா என்ன  சொல்றிங்கனு கேட்க.

"இது சரி வராதுங்க"னு சித்ரா சொல்ல ஆமானு தலையாட்டுனான் முருகேசன். சித்ராவின் இந்த பிடிவாதத்துக்கு ரெண்டு காரணம் இருந்தது. இப்டி சொந்தத்துல ஒரு புள்ள போக, அந்தக் குடும்பத்த போற எடமெல்லாம் பொறம் பேசி பூரிச்சி போனா. அடுத்து அவ சைடு சொந்க்காரங்களோட இருந்து கடைசிக் காலத்த ஓட்ட எதிர்காலத்துக்கு முடிவு பண்ணியிருந்தாள்.

"நீ என்னப்பா சொல்ற மீரா"னு இந்த பக்கம் வந்தான் பழனிச்சாமி!

" இதான் முடிவுனா ரெண்டு பேரையும் கூட்டிக்கிட்டு போய் அடிவார முருகன் கோயில்ல தாலியக்கட்டி ரிஜிஸ்தர் ஆபிசில பதிவு பண்ணிட்டு போய்ட்டே இருப்பன்.
சாதிக்காக கல்யாணத்த யாராவது தடுத்தா உள்ளத்தான் போகனும். நேரா போலீஸ் ஸ்டேசன் போயிடுவன். அப்பாவிங்கள எதுக்கு அலைய விடனும்னு பாக்கறன். 

நான் முடிவு பண்ணிட்டன், சந்தோசும். செல்வியும் சேர்ந்துதான் வாழ போறாங்க சேர்ந்துதான் படிக்க போறாங்க ஆனா ஒரே வீட்ல இல்ல. கோர்ட்ல கேச போட்டு கார்டியனா இருந்து புள்ளய என் வூட்ல வைச்சிக்குவேன். ஆஸ்பத்திரியில இருந்து நல்லா தேறி வர சரவணனை சந்தோசோட காட்டு வூட்டுக்கு படுக்க நைட்டு அனுப்பிடுவேன். இல்லனா கல்யாணத்த பண்ணிட்டு புள்ளய மூனு வருசம் கழிச்சி பெத்துக்க சொல்வனு" சினிமா கதை சொல்ற மாதிரி முடிச்சாரு மீரா!

"அப்புறம் எதுக்கு ஊரு, சாதிசனம், பஞ்சாயத்துலாம்"னு பழனிச்சாமி  காரியமா அலுத்துக்கிட்டான்…..

" உனக்கு தேவை ஊரக்கூட்டி பஞ்சாயத்து. சாதிக்காரனுங்க முன்னால என்னை ஆகாதவனா காட்டனும். அப்புறம் எவனும் எங்கக்கிட்ட பேச பொலங்கக் கூடாதுனு ஒரு தீர்ப்பு இதான உன் எண்ணம். சரி நடத்து. உலகம் கொஞ்சமாவது மாறி இருக்கறத நான் காட்டறன்"னு தெளிவா பேசினார் மீரா..

பழனிச்சாமிக்கு சுருக்குனு இருந்துச்சி "கடைசியில ஏன்பா என் தலையில கல்ல போடற"

" ஏன் உனக்கு சட்டம் தெரியதா பழனிச்சாமி" என்றார் மீரா உள்குத்தா…

"தெரியும் இருந்தாலும் ஊர்முறைனு ஒன்னு இருக்குல மீரா" என்றான் கெஞ்சலா பழனிச்சாமி!

"சரி பஞ்சாயத்த நாளை கடைசிநாள் பிரச்சாரம் முடிஞ்சி வைங்க. அங்க சாதியைப் பத்தி நீங்க பேசறதையும் இவங்க கல்யாணத்தை சாதிக்காக தடுக்கறதையும் வீடியோ எடுத்து எந்த வெடலை பையனாவது வாட்ஸ்அப்ல போட்டு விடட்டும். எல்லோரும் உள்ள போங்க. ஆத்தா சித்ரா புள்ளய எங்கையாவது கொண்டு மறைக்கலாம்னு நினைச்ச அடுத்த நாளே வூட்டுக்கு போலீஸ் வரும் புரியுதா. டே சந்தோசு வண்டிய எடுத்து டவுன்ல நல்ல பிரியாணி கடைக்கு போய் வாங்கிட்டு வா. கொஞ்சம் சாராயத்த உள்ள எறக்கிட்டு இதுங்களலாம் என்ன பண்றதுனு யோசிக்கறன் கெளம்புடே"னு சந்தோசு வண்டிய எடுக்க மிடுக்கா ஏறி போனார் மீரா!


பஞ்சாயத்த நினைச்சி கடைசியா இவனுங்க பயப்பட ஆரம்பிச்சிட்டானுங்க இதான் அறிவோட அடிக்கற அறிவடி!...

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib