anti - piracy

Post Page Advertisement [Top]

மெல்ல திறந்தது மனது [ஆதன்-னின்]
                                                    

அத்தியாயம் 39 

பஜாஜ் ஷோரூமிற்குள் நுழைந்த மூவரில் நாச்சியாவும், விக்கியும்தான் வண்டியைப் பற்றிய விவரங்களை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்
தேவா அங்கு நடப்பவைகளை யாருக்கு வந்த விருந்தோவென்று அமைதியாகவே இருந்தான். சந்திரசேகர் அவனுக்கு அறிவுரையாகச் சொன்னதெல்லாம்தான் அவன் மனத்திரையில்
ஓடிக்கொண்டிருந்தது!
இதுப்போல் குழப்பத்தில் உழன்றுக்கொண்டிருந்தவனை

"தேவா பல்சர் உனக்கு ஓகே வா வந்து பாரு" என்ற நாச்சியாவின் குதுகலக் குரல் அவனை நடப்பிற்கு இழுத்து வந்தது…..

தேவா ஏனோ தானோவென்று மேலோட்டமாய்ப் பார்த்து வண்டியை ஓகே செய்தான்!

வண்டி புக் செய்யப்பட்டு உடனடியாக மொத்தப் பணமும் கட்டப்பட்டு அப்பொழுதே டெலிவரி எடுக்கப்பட்டது!

தேவா புதுவண்டியை ஓட்ட மூவரும் அவரவர்கள் வண்டியில் கிளம்பினார்கள். வரும் வழியில் ஒரு கோவில் முன் நிறுத்தி பூசை போட்டு புது மாலை போட்டு வண்டியை நேராகக் கடைக்கு ஓட்டி வந்தனா்!

தன் வீட்டு மாப்பிள்ளைக்குத் தங்கள் பணத்தால் வாங்கிக்கொடுத்த முதல் சீா் வரிசையைக் காணக்காண பெருமையும், சந்தோஷமும் பிடிப்படவில்லை சண்முகத்திற்கு, இப்படி எல்லாருமே சந்தோசமாய் இருக்கத் தேவா மட்டும் மௌனமாகவே இருந்தான். விக்கிக்கே இது ஆச்சரியமாய் இருந்தது. சொந்தமாக வண்டி வாங்க வேண்டுமென்பது தேவாவின் நெடுநாள் ஆசை!

"வண்டி பிடிச்சிருக்குங்களா தம்பி" என்று மகிழ்வானக் குரலில் சண்முகம் கேட்க,

"வண்டி எல்லாம் ஓகேங்க மாமா, ஆனா இன்ஸ்டால்மென்ட்ல எடுத்திருக்கலாம்" எனத் தேவா தன் மனதை மறையாமல் சொல்ல….

வண்டி வாங்க கிளம்பியதில் இருந்தே தேவாவின் போக்கை கவனித்து வந்த நாச்சியாவுக்குத் தேவாவின் இந்த வார்த்தை கோபத்தைக் கிளரிவிட்டிருந்தது!

"கையில பணம் இருக்கப்ப எதுக்குத் தேவா இ.எம்.ஐ போடனும்" என்று கொஞ்சம் கோபமாகவே படபடத்த நாச்சியாவை கையமா்த்தியவன்

" நான்தான் வேலைக்குப் போகப் போறனே என் பணத்தில் இ.எம்.ஐ கட்டி இருப்பேன்" என்று தேவாவும் கொஞ்சம் கடுமையாகச் சொல்ல, நாச்சியாவால் இந்தப் பதிலை தாங்கிக்கொள்ள முடியவில்லை….

"இதை நீ இலவசமா பார்க்க தேவையில்லை தேவா, கல்யாணத்திற்கான சீதனமா பாரு" எனப் பட்டென்று பதில் சொன்னவள் கடைக்குள் புகுந்து வீட்டின் மேல் அறைக்குச் சென்றுவிட்டாள்!

நிலைமை ஒரு மாதிரியாக மாறுவதைப் பார்த்த விக்கி தேவாவை வண்டிய எடுக்கச்சொல்லி வழக்கமான மரத்தடி சிமெண்ட் பெஞ்ச்சிற்கு ஓட்டி போனான்!

"டே தேவா அவங்க எவ்வளவு ஆசையா வாங்கித் தந்தாங்க, நீ பதில் சொன்ன விதம் தப்புடா, திடிர்னு ஏன் இப்படி மாறிட்ட?" என்று விக்கி கேட்க,

"எல்லாம் ஆரம்பத்துல இப்படித்தான் இருக்கும் விக்கி, ஆரம்பத்துலயே நாம சரியா இருந்துட்டா பின்னாடி பிரச்சினை இருக்காது, இல்லனா மத்தவங்க சொல்றதுக்கு நான் ஆடற மாதிரி ஆயிடும்" என்று சொன்ன தேவா இன்னொரு சந்திரசேகராய் மாறி இருந்தான்!

பேசறது தேவாதானா என்று விக்கி சந்தேகப்படற அளவுக்கு இருந்தது தேவாவின் பேச்சு!

வீட்டின் மேல் அறைக்குச் சென்ற சண்முகம் படுக்கையில், நடந்து முடிந்தவைகளை எண்ணி ஆற்றாமை, கோபமென உட்கார்ந்திருந்த நாச்சியாவை
ஆறுதலாய் பாா்க்க, நிமிா்ந்து தன்னைப் பெற்றவரை பாா்த்தவளின் கண்களில் மெல்ல நீர் கோர்க்க ஆரம்பித்திருந்தது! நாச்சியா மனமுடைந்ததின் அடையாளமாய்...

"விடும்மா நம்ம பணத்தை வைத்து வாழாம சொந்தக்கால்ல நிக்கனும்னு நினைக்கற மாப்பிள்ளை கிடைச்சது எனக்குச் சந்தோசம்தான். நீ தேவையில்லாம மனச போட்டுக் குழப்பிக்காத" என்றவர் ஆதரவாய் அவள் தலையை நீவ, நாச்சியா அமைதியாய் படுத்துக்கொண்டாள்!

விக்கியிடம் பேசிக்கொண்டிருந்த தேவா கிளம்பலாம் எனச் சொல்ல விக்கி தேவா கடையில் கொண்டுவந்து இறக்கிவிட்டுக் கிளம்பினான்!

"மாமா நாச்சியா எங்க வீட்டுக்கு கிளம்பிருச்சா?" என்று தேவா கேட்க,

"இல்லங்க தம்பி மேலதான் தலைவலினு படுத்திருக்கு" என்று சமாளித்துப் பதில் சொன்ன சண்முகம், தேவா மேல போகக் கடைக்குள் வழியைவிட்டு ஒதுங்கினார்!

மேல் அறைக்குள் போன தேவா கோதை, கோதை என்று நாலைந்து தரம் கூப்பிட்டும் நாச்சியாவிடம் இருந்து பதிலில்லை. ஆனால் அவனைக் கண்டுவிட்டதின் அறிகுறியாகப் படுத்திருந்தவள் எழுந்து பெட்டில் அமர்ந்தாள்…..

"உனக்கென்ன பிரச்சினை ஏன் இப்படி இருக்க?" என்று தேவா கேட்க,

"இது நான் கேட்க வேண்டிய கேள்வி தேவா. ஆனா இப்ப நடந்த இனி நடக்கற பிரச்சினைகளுக்கு என்னைக் காரணம் காட்டி பேசாத, இந்தப் பழக்கம் எனக்குப் பிடிக்காது" என்று நாச்சியா சொல்ல.

"அப்படி என்ன நான் தப்பா சொல்லிட்டன்???, நான் சம்பாதிக்கற பணத்துல வண்டிக்கான இ.எம்.ஐ கட்டுவேனு சொன்னது தப்பா நாச்சியா?!"

"அது தப்பில்லை ஆனா அப்படிச் சொல்லறதுக்கு உங்க மனசுக்குள் ஒரு காரணம் இருக்கு பாருங்க அதான் தப்பு தேவா"

" என் மனசுல எந்தக் காரணமும் இல்லை"

"இதைக்கூடப் புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு நான் மக்கு இல்ல தேவா. உங்கப்பாக்கிட்ட பேசிட்டு வந்ததுல இருந்தே நீ சரியில்ல. மனசுக்குள்ள ஒன்ன வைச்சிக்கிட்டு வெளிய ஒன்ன பேசாத அது என்னைக்கு இருந்தாலும் ஆபத்து, அது நம்ம உறவுக்கு நீ தர மரியாதையா இருக்காது"என்று நாச்சியா தன் ஆதங்கத்தைக் கொட்ட,

"சரி வா வீட்டுக்குப் போகலாம்" என்றான் தேவா!

"அப்பாவுக்கு நைட் சமைக்கனும். தலைவலி வேற, நீ வீட்டுக்கு போ, நான் நைட் இங்கையே சாப்டுட்டு வரேன்"

"சரி ரெண்டு பேரும் ஒன்னாவே போகலாம்"

"நான் வர நைட் ஒன்பது ஆகும் தேவா, அதுவரை இங்க இருக்க முடியுமா உன்னால, உனக்கு அது கெளரவக் குறைச்சலா தெரியுமே! என்று நாச்சியா குத்தலாய் கேட்க. தேவா எதுவும் பேசாமல் படுக்கையின் ஒரு மூலையில் அமர்ந்தான்!

கடைக்குக் கீழ போனவள் நைட்டுக்கு சாப்பிட கடையில் வாங்கிக்கலாம்னு சண்முகத்துக்கிட்ட சொல்லிட்டுக் கடையில் கீழயே தங்கிவிட்டாள்!

இரவு நாச்சியா வீட்டிலயே சமைப்பதாய் இருந்திருந்தால் அவள் வாழ்க்கையில் நல்லதும் கெட்டதுமாய் நிறைய விசயங்கள் நடந்திருக்காது!...

அத்தியாயம் 40 

இன்டர்வியூக்கு போன
தேவாவையும் காணல, கடைக்குப் போன நாச்சியாவையும் காணலனு, மீனாட்சி தேவாவுக்குப் போன் அடித்தாள்!

" ஹலோ சொல்லுமா?"

"எங்கடா இருக்க?!"

"இங்க நாச்சியா வீட்லமா ஏன்?"

"இல்ல காணமேனு கேட்டன் சரி போன வேலை என்னாச்சு?"

"ம் திங்கள் கிழமையில இருந்து வேலைக்குப் போகனும்மா! சம்பளம் ஆரம்பத்துல ஒரு 12,000 வரும்"

"சரிப்பா சரிப்பா நாச்சியா ஏன் வரல?"

"அம்மா சொல்ல மறந்துட்டேன். இங்க மாமா புதுசா பைக் வாங்கித் தந்திருக்கார். பைக் வாங்க வெயில்ல போயிட்டு வந்ததால நாச்சியாவுக்குத் தலைவலி அதான் படுத்துருக்காமா"

"சரி சரி படுக்கட்டும்"

"அம்மா நைட் இங்கையே சாப்டுட்டு வந்திடறோம் எங்களுக்குச் சேர்த்து சமைக்காதிங்க"னு தேவா சொல்ல சரி என்ற மீனாட்சி போனை கட் பண்ணினாள்!

நாமளே நம்ம பையனுக்கு ஒரு பைக் வாங்கி வந்துருக்கலாம். ஆனா இந்த மனுசன் அதையெல்லாம் நினைச்சாதான! இப்படி மாமனார் வீடு பார்த்து பார்த்து அவனுக்குச் செஞ்சா நம்ம மேல எப்படிப் பாசம் இருக்கும் என்று மீனாட்சியின் மனதிற்குள் எண்ணங்கள் ஓட ஆரம்பித்தது. ஆனால் அங்குத் தேவா வேறு மாதிரி நாச்சியா, சண்முகத்தின் அன்பை புரிந்துக்கொள்ளாமல் ஈகோவால் தள்ளாடிக்கொண்டிருக்கிறான் என்பதை மீனாட்சி எப்படி அறிவாள்!
………..

அருள் கால் பண்ண அட்டென்ட் பண்ணிய ரேகா,

"ஹலோ அருள் சொல்லுங்க"

" நான் சென்னைக்குக் கிளம்பிட்டேன் ரேகா. தங்கச்சி வீடு அடையாறுல, அவங்கள பார்க்கத்தான் வரேன். அதை இன்னைக்கு முடிச்சிட்டு நாளை ஈவ்னிங் உங்கள பார்க்க வீட்டுக்கு வரேன்" என்று அருள் சொல்ல,

"தாரளமா வாங்க வரப்ப சொல்லிட்டு வாங்க சிம்பிளா ஒரு விருந்த ரெடி பண்றேன்" என்று பேச்சு வளர அப்படியே சென்றது அவர்கள் பேச்சு வார்த்தை!


அருளிடம் பேசிவிட்டுப் போனை வைத்தவள் வாட்ஸ்அப்பில் சந்துரு ஒரு போட்டோ அனுப்பி இருந்தான் ஜிம்மிலிருந்து ஹெல்த் இஸ் வெல்த் அப்படினு…..

வேதாளம் முருங்கை மரம் ஏறிய கணக்காய் சந்துரு இவளை பேச்சில் சந்தோசமாய் வைத்திருந்த நாட்களை அசைப்போட ஆரம்பித்து விட்டாள்.

சந்துரு சொன்ன வேலைக்குப் போவதை பற்றிச் சந்திரசேகரிடம் இன்றைக்குப் பேசிவிடுவதாய் இருந்தாள்!
………….

சந்திரசேகர் ஆபிசிலிருந்து வரவும் மீனாட்சி அவருக்குக் காபி கொடுத்துவிட்டு தேவாவுக்குப் புதுப் பைக் வாங்கி இருக்க விசயத்தையும் தேவாவுக்கு வேலை கிடைத்த விசயத்தையும் சொல்ல,

" மாட்டுக்கு மூக்கனாங்கயிறு போடற வேலைதான் இது. எப்படியும் அவனை அவங்க பேச்சுக்கு அசையற மாதிரி பண்ணியிருவாங்க"னு சந்திரசேகர் நக்கலாய் சொல்ல. மீனாட்சிக்கு அடக்க முடியாத கோபம் வந்துவிட்டது!

"அப்படினா அவனுக்கு நாம வாங்கிக் கொடுத்துருக்கனும்" என்று படீரென்று பேசிவிட்டாள் மீனாட்சி!

"படிக்கத்தான் வைக்க முடியும் மீனாட்சி எல்லாத்தையும் நாமளே செஞ்சா எப்படி அவனுக்கு வாழ்க்கையோட கஷ்டம் புரியும். நான்லாம் சொந்தமா படிச்சிக்கிட்டே வேலை செஞ்சி வந்த காசுலதான் முதல் சைக்கிளையே வாங்கினேன்" என்று சந்திரசேகர் அவர் வரலாறை பேச ஆரம்பிக்க,

"உங்க காலம் வேற இந்தக் காலம் வேற, அவனுக்கு வேலைக்குப் போகனும் அப்படினாலும் ஒரு வண்டி வேணும்" என்றவள் அங்கு நிற்க பிடிக்காமல் சமையலைறைக்குச் சென்று விட்டாள்!

இவர்களது பேச்சுவார்த்தையைக் கேட்டுக்கொண்டிருந்த ரேகாவுக்குத் தேவாவுக்குப் பைக் வாங்கிய விசயம் அவளது நாச்சியா மீதான பொறாமையைத் தூண்டி விட்டது!

ஆனால் உமாவோ ரொம்பச் சந்தோசமாக நாச்சியாவுக்குப் போன் அடித்தாள்!

உமாவின் நம்பரை போனில் பார்த்த நாச்சியாவிற்கு மனதிற்குள் திடிர் என்று ஒருவித சந்தோச உணர்வு ஒட்டிக்கொண்டது. இப்போதைக்கு நாச்சியாவுக்குத் தோழி, தங்கை எல்லாமே உமாதான்!

"ஹலோ சொல்லு உமா"

"பார்த்திங்களா அண்ணி அண்ணனுக்கு வண்டி வாங்கினதை எங்கிட்ட கூடச் சொல்லலை" என்று செல்லமாய்க் கோபித்துக்கொண்டாள் உமா!

"இல்லடாமா ஒரே தலைவலி அதான் பேசாம படுத்துட்டேன்"னு நாச்சியா சொல்ல,

அச்சச்சோ இப்ப எப்படி இருக்கு அண்ணி, மாத்திரை போட்டீங்களா??
என அன்பால் கேள்விகளையடுக்கி நாச்சியாவை துளைத்து எடுத்துவிட்டாள்…..

"சரி இருங்க அண்ணி நான் கடைக்கு வரேன்" என்று உமா சொல்லவும், உமாவின் அருகாமை இந்த மனநிலைக்கு ஒரு மருந்தாய் இருக்குமென்று நினைத்த நாச்சியா அவளை வரச்சொன்னாள்..,..

"அம்மா அண்ணிக்கு உடம்பு முடியல போல, நான் போய்ப் பார்த்துட்டு வந்திடறேன்"னு கிளம்பிய உமாவிடம்,

"ரொம்ப முடியலனா கணபதி கிளினிக்குக்குக் கூட்டிட்டு போயிட்டு வந்துடு உமா" என்று மீனாட்சி சொல்ல,

சரிம்மா என்றவள் ஓட்டமும் நடையுமாய் நாச்சியாவை பார்க்கச் சென்றாள்!

உமா வருவது மனதிற்குக் கொஞ்சம் இதமாய் இருக்கக் கடையிலிருந்து வீட்டு சமையலைறைக்குள் நுழைந்த நாச்சியா காபி போட ஆரம்பித்தாள்!

காபி தயாரானதும் கடையில் சண்முகம், வாசுவுக்குக் குடுத்துவிட்டு தேவாவுக்குக் கொடுக்க மேல சென்றாள் நாச்சியா!

நடந்தவகளை மறந்தவளாய் கண்ணை மூடியிருந்த தேவாவை தலையில் செல்லமாய்த் தட்டி காபியைத் நாச்சியா தர, தேவாவுக்குச் சற்று மனநிம்மதியாய் இருந்தது!

இதற்குள் நாச்சாயாவை தேடிக்கொண்டு மேலே வந்துவிட்டாள் உமா!

உமாவை பார்த்த நாச்சியாவும் தேவாவும் அவளைக் கூப்பிட்டுப் பெட்டில் உட்கார வைக்க,

"இதெல்லாம் இருக்கட்டும் எப்பணா ட்ரீட் தர போற" என்று உமா கேட்க,

"முதல் மாசம் சம்பளம் வாங்கினதும் தரேன் உமாம்மா" என்றான் தேவா,

"உமா உங்கண்ணன் சம்பளம் வந்ததும் தரட்டும், நான் நைட் டின்னர் உனக்கு வாங்கித் தரேன் ஓகேவா" என்ற நாச்சியா அவளைக்கேட்க டன் என்றாள் உமா!

இவர்களுக்கான பல பூகம்பங்களைத் தேக்கி வைத்துக்கொண்டு அந்த ஹோட்டல் எதிர்பார்த்துக் காத்திருந்தது!

அத்தியாயம் 41 

மணி இரவு எட்டு ஆகியிருக்கச் சோபாவில் சாய்ந்திருந்த சந்திரசேகரிடம் பேசுவதற்காக ரேகா வந்து மெதுவாகச் சோபாவில் அமர்ந்தாள்!

"அப்பா" என்றாள் குழைவாக ரேகா!

"ம் சொல்லு என்ன தேவைப்படுது?!" என்று அவள் நோக்கம் அறிந்தவராய் சந்திரசேகர் கேட்க,

"நான் வேலைக்குப் போகலாம்னு இருக்கேன்பா?!"

"ஓஹோ சரி என்ன வேலை யார் வேலை இருக்குனு சொன்னாங்க?"என்று சந்திரசேகர் கேட்க, யாரைச் சொல்வதென்று ஒரு நிமிடம் திணறி ரேகா, அப்படியே சமாளித்துச் சொல்ல ஆரம்பித்தாள்….

"என் பேஸ்புக் ப்ரன்ட் ஒருத்தர் சொன்னாங்கப்பா, லோக்கல் கவுன்சிலர் மகனோட ஒன் கிராம் ஜூவல்லரி கடையிலதான்பா வேலை" என்று சொல்லி முடித்துச் சந்திரசேகரை பார்க்க….

"சரி போயிட்டு வா" என்ற ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டார் சந்திரசேகர்!

"அப்பா……அது...வந்து...அப்புறம்"
என்று மறுபடியும் இழுத்தாள் ரேகா..

"மறுபடியும் என்ன"

"கொஞ்சம் பணம் கட்டி ஸ்கூட்டர் டைப்ல ஒரு வண்டி வாங்கித் தந்திங்கனா நான் என் சம்பளத்துல இ.எம்.ஐ கட்டிக்குவேன்பா" என்று தயங்கி தயங்கி பேசி முடித்தாள் ரேகா….

"சரி நாளைக்கு மதியமாய் வீட்டுக்கு வண்டி வரும், அது பிரச்சினை இல்லை முதல்ல லைசென்ஸ்க்குப் பதிவுப் பண்ணு" என்று சந்திரசேகர் சொல்ல ரேகாவினால் நம்ப முடியவில்லை, மீனாட்சிக்கோ இது நம்ம புருசன்தானானு சந்தேகமே வந்திருந்தது!

உண்மையில் தேவாவுக்கு நாச்சியா வீட்ல வண்டி வாங்கித்தராம இருந்திருந்தா, மீனாட்சி கோபமாய் அதை வைத்துப் பேசாமல் இருந்திருந்தால், ரேகா வண்டி கேட்டதும், முதல்ல நீ வேலைக்குப் போய்ச் சம்பளம் வாங்கு பின்னாடி பேசிக்கலாம் என்றிருந்துப்பார் சந்திரசேகர். இதுதான் பேமிலி பாலிடிக்ஸ்!
……………

அருளுக்குப் போன் அடித்தாள் ரேகா!

"சொல்லுங்க ரேகா" என்று அருள் தொடர்புக்கு வர,

"அருள் நாளைக்கு லன்ஞ்சுக்கு வந்திட முடியுமா?! ஏன்னா நான் முக்கியமா வெளிய போற வேலை இருக்குனு பொய் சொன்னாள் ரேகா!

லன்ஞ் டைம்னா வீட்ல சந்திரசேகர் இருக்க மாட்டார் அதான் இந்தப் பொய்க்குக் காரணம்! மீனாட்சிக்கிட்ட ஏதாவது சொல்லி சமாளிச்சிக்கலாம் என்று நினைத்தாள்!

"ஓகே ரேகா லன்ஞ்சுக்கே வரேன் பெருசா ஒன்னும் எனக்காக ரெடி பண்ண வேணாம்"னு அருள் சொல்ல, ரொம்ப நன்றிடா தெய்வமேனு மனதிற்குள் நினைத்தவள், இல்ல அப்படிலாம் முடியாதுனு பில்டப் பண்ணிட்டுப் போனை அணைத்தாள்…..

அருள் வருவதைச் சந்துருக்கிட்ட சொல்ல வேண்டாம்னு அவள் மூளை சொல்ல, ஏன் சொல்லக்கூடாது என்று யோசித்தவள். கடைசியாகச் சொல்ல வேண்டாம் என்று முடிவுச் செய்தாள். இப்பவும் சந்துரு மேல்தான் அவளுக்கு க்ரஷ் இருந்தது!
…………

"உமா மணி எட்டு மணிக்கு மேல ஆச்சு டின்னருக்கு வாங்க ஹோட்டலுக்குக் கிளம்பலாமா"னு நாச்சியா கேட்க,

"கிளம்பலாம் அண்ணி" னு குஷியாகக் கிளம்பினாள் உமா,

மேல் அறையிலிருந்து கீழ் இறங்கிய நாச்சியா.

"டே வாசு உனக்கும் சாப்பிட சேர்த்திதான் வாங்கிட்டு வரபோறேன். அப்பா ஹோட்டல் வரைக்கும் போய்ட்டு வந்திடறன்" என்றவள் ஏதோ மறந்தவளாய் மேலே போனாள்…..

"ஹேய் மேன் உன் புதுவண்டி சாவியைக்குக் குடு" என்றாள் தேவாவை பார்த்து, நாச்சியா இயல்பாகி இருந்தது தேவாவுக்கு நிம்மதியாய் இருந்தது.

"இந்தா பார்த்து போ. என் மாமனார் எனக்காக வாங்கிக்குடுத்தது"னு கேலியா சொல்லி தேவா வண்டி சாவியைக் கொடுக்க, தேவா இயல்பாகி இருந்தது நாச்சியாவுக்கு நிம்மதியாய் இருந்தது!

கடைய விட்டு வெளியே வந்தவள் புதுப் பல்சரை ஸ்டார்ட் பண்ண உமா ஏற. ஸ்டைலா வண்டிய உறும விட்டு நாச்சியா ஓட்ட,

"அண்ணி எப்படிப் புல்லட் வரை ஓட்டறிங்க எனக்குச் சைக்கிளைத் தவிர வேற எந்த வண்டியும் ஓட்டத் தெரியாது" என்றாள் உமா!

"நான் இருக்கப்ப நீ ஏன் கவலைப்படற உமா, அதான் சைக்கிள் ஓட்டத் தெரியுமே அதே போதும். நாளைக்கு நம்ம ஸ்கூட்டிய ஈவ்னிங்ல ஓட்ட கத்து தரேன் ஓகேவா" என்றாள் நாச்சியா!

"ஓகே அண்ணி வண்டி ஓட்டக் கத்துக்கிட்டு ஒருநாள் வண்டியில காலேஜ் போகனும், என் ப்ரன்ட்ஸ் நிறையபேர் வண்டியிலதான் வராங்க" என்றாள் ஏக்கமாக உமா!

" நீ அடுத்த வாரம் கூட ஸ்கூட்டியில காலேஜ் போலாம் ஆனா அதுக்குமுன்ன லைசென்ஸ்க்கு அப்ளை பண்ணு. சீரியசாத்தான் சொல்றேன். நானே உனக்கு லைசென்ஸ் ரெடி பண்ணித் தரேன்"னு நாச்சியா சொல்ல ஹோட்டலுக்கு வந்திருந்தார்கள்….

"ஹாய் மணி மாஸ்டர்" என்று வண்டிய ஸ்டேன்ட் போட்டப்படி நாச்சியா சொல்ல,

கடையின் உரிமையாளரான மணியும் "ஹாய் நாச்சியா கல்யாணத்துக்கு அப்புறம் கடைக்கு வரதில்ல"னு கேட்க, மணியின் மனைவி சுந்தரியும் அன்று அதிசயமாகக் கடையில் இருந்தால். அதைவிட முக்கியமாகக் கடையில் சந்துருவும், சிவாவும் சாப்பிட்டுக்கிட்டு இருந்தானுங்க……

நாச்சியா மணிக்கிட்ட ஆர்டரை சொல்லிக்கிட்டே அவனுங்களை அலட்சியமா பார்க்க, சிவா முகத்தைத் திருப்பிக்கொண்டான். சந்துருதான் அவளைப் பார்த்தப்படியே சாப்பிட, நாச்சியா அவனைப் பார்த்து நீயெல்லாம் ஒரு ஆளா என்கிற மாதிரி பார்த்துட்டு மணிக்கிட்ட பேச ஆரம்பித்தாள். உமா அவனுங்கள பார்த்ததுமே இவனுங்க அவமானப்பட்ட வீடியோ ஞாபகத்துக்கு வர சிரித்துவிட்டாள்.

மணியின் மனைவி மெதுவாகக் கடையில் இருந்து வெளியே வந்து நாச்சியாக்கிட்ட பேச்சுக்குடுத்துக்கிட்டே கடையை விட்டு நகர்த்திக் கூட்டி வந்தாள்! உமாவும் கூடவே வந்தாள்!

"நாச்சியா உன்கிட்ட ஒரு விசயம் சொல்லனும் மனசோட வைச்சுக்கோ"னு சுந்தரி சொல்ல.

"சொல்லுக்கா" என்றாள் நாச்சியா குழப்பத்தோட,

"கடைக்குள்ள சாப்பிட்டுக்கிட்டு இருக்கானுங்களே உன்கிட்ட அவமானப்பட்ட பொம்பள பொறுக்கிங்க அதுல சிவப்புச் சட்டை போட்டிருக்கச் சந்துருவோட உன் நாத்தனா ரேகாவை ரெண்டுதடவை பார்த்தேன். உசாரா இருந்துக்கச் சொல்லு. இவனுங்க ரொம்ப மோசமானவனுங்க" என்றாள் சுந்தரி….

"சரிக்கா" என்று நாச்சியா சொல்ல, சந்துரு என்ற பெயர் உமாவின் மூளையில் மின்னலாய் வெட்டியது!

"உன்கிட்ட மனசுவிட்டு சில விசயங்கள பேசனும் நாச்சியா ஆனா அதுக்கு இது டைமில்ல, இப்போதைக்கு நான் சொன்னத ஞாபகத்துல வைச்சுக்கோ ஒருநாள் நான் பேசறேன்" என்றவள் நாச்சியா நம்பரை வாங்கிக்கொண்டாள்…..

இதற்குள் நாச்சியா குடுத்த ஆர்டர் ரெடி ஆகி இருக்கப் பணத்தைக் குடுத்துவிட்டுக் கிளம்பினார்கள் நாச்சியாவும் உமாவும்
சுந்தாி சொன்னவற்றை மனதில் அசைப் போட்டபடி!!..

அத்தியாயம் 42 

அடுத்த நாள் பொழுது விடிய நாச்சியா வழக்கம்போல் குளித்துக் கடைக்குப் புறப்பட்டுப் போயிருக்க, மீனாட்சி சமையல் வேலைகளை முடித்துச் சந்திரசேகரையும், உமாவையும் அனுப்பி வைத்திருந்தாள்!

அருள் வருவதைப் பற்றிய தகவலை மீனாட்சியிடம் மெதுவாகப் பேச ஆரம்பித்தாள் ரேகா!

"அம்மா"

"என்னடி புதுசா அம்மானு எல்லாம் கூப்பிட்டு ஆச்சரியப்படுத்தற, அதோட அதிசயமா வேலைக்குப் போறேங்கற, உங்கப்பாக்கிட்டயே பேசி புது வண்டிக்கும் ரெடி பண்ணிட்ட என்னதான்டி நடக்குது என்றாள்" மீனாட்சி…,.

"மீனு என் பேஸ்புக் ப்ரன்ட் ஒருத்தர் இன்னைக்கு நம்ம வீட்டுக்கு லன்ஞ்க்கு வரேனு சொல்லி இருக்கார்"னு இழுத்தாள் ரேகா….

"அதான பார்த்தேன் உன் குடுமி சும்மா ஆடாதேனு, அப்பாவுக்குத் தெரிஞ்சா பெரிய பிரச்சினை ஆயிடும்டி" என்ற மீனாட்சி பாத்திரங்களைக் கழுவி வைக்கச் சமையலறைக்குள் போக, பின்னாடியே ரேகாவும் போனாள்.

"மீனு அவர் செம டீசன்ட் டைப். நாமக்கல்லுல சொந்தமா கோழிப்பண்ணை வைச்சிருக்காரு, நம்மளவிடப் பெரிய இடம். எனக்கு நல்ல ப்ரன்ட். அவர் அட்வைஸ் பண்ணித்தான் நான் வேலைக்குப் போற முடிவுக்கே வந்தேன். ப்ளிஸ் கொஞ்சம் கருணை காட்டேன்" என்று ரேகா கெஞ்ச மனமிறங்கினாள் மீனாட்சி!

" சரி சரி வரட்டும் போய்த் தேவாவை எழுப்பிக் கூட்டிக்கிட்டு வா, சமைக்கறதுக்கு ஏதாவது கறியோ, மீனோ வாங்கலாம்" என்று மீனாட்சி சொல்ல,

"எம்மா தெய்வமே அவன் வேண்டவே வேண்டாம், கொஞ்சம் பொறு விக்கிக்கு போன் அடிக்கிறேன்" என்றவள், விக்கிக்கு போன் அடித்தாள்….

"என்ன மேடம் அதிசயமா எங்களுக்குலாம் போன் பண்றிங்க?!" என்று விக்கி கேட்க,

"விக்கி இன்னைக்கு வீட்டுக்கு தெரிஞ்சவங்க ஒருத்தர் வராங்க ஸோ ஒரு கிலோ மட்டனும், முட்டையும் வாங்கிட்டு வரீயா"னு அவனிடமும் கெஞ்சலா கேட்க,

"சரி சரி ரொம்பக் குழையாத அசிங்கமா இருக்கு, வாங்கிட்டு வரேன் காசை எடுத்து வை" என்றான் விக்கி!

"தாங்க்ஸ் டா நீ வாங்கிட்டு வா மீனு காசு தரும்" என்றவள் போனை கட் பண்ணிட்டு அருளுக்குப் போன் அடித்தாள் ரேகா!

"ஹலோ அருள் கிளம்பிட்டிங்களா?!

"இல்ல இனிதான் கிளம்பனும் ரேகா"

"சரி நான் வாட்ஸ்அப்பில் லொகேசன் அனுப்பி இருக்கேன் அதைப் பாா்த்துக் கார் புக் பண்ணிக்கோங்க ஈஸியா இருக்கும்"

"சரி அப்படியே செய்றேன். இன்னும் பத்து நிமிடதில் கிளம்பிடுவேன்"

"சரி வாங்க" என்றவள் போனை கட் பண்ணிட்டு மீனாட்சியிடம் போனாள்!

"மீனு நான் ஏதாவது ஹெல் பண்ணட்டுமா?" என்றவளை,

"ம் போய்ச் சோபாவில் சாய் அதே எனக்கு நீ செய்ற பெரிய உதவிதான் என மீனாட்சி சொல்ல சந்தோசமாக வந்து சோபாவில் சாய, சந்துரு போன் அடித்தான்!

"ஹலோ" என்றபடியே அறைக்குள் போனாள்!

"ஹலோ ரேகா சும்மாதான் போன் பண்ணேன், என்ன பண்ற"

"வீட்டுக்குக் கெஸ்ட் வராங்க ஸோ கொஞ்ச பிஸியா இருக்கேன்" என்ற ரேகா வேகவேகமாகப் பேசினாள்!

"ஈவ்னிங் பார்க்ல மீட் பண்ணலாமா ரேகா?"

"ம் ஸாரி சந்துரு நாளைக்கு மீட் பண்ணலாமே"

"ப்ச் ஒரு அழகோட தரிசனத்துக்கு ஒருநாள் வெய்ட் பண்ணனுமா?" என்று மெதுவாய் கொக்கியை போட்டான் சந்துரு…

"ஹஹஹ ரொம்பத்தான்" என்றவள் அதை இரசிக்கவே செய்தாள்……

"சரி ஓகே பை ரேகா நாளைக்கு மீட் பண்ணுவோம் காபி ஷாப் போவோம்" என்றவன் அவள் சம்மதம் கேட்காமலே போனை கட் பண்ணினாள்!

மட்டன், முட்டையை வாங்கிட்டு வந்து விக்கி மீனாட்சியிடம் கொடுக்க, நாச்சாயாவும் கடையில் சமையல் வேலை முடிந்து வந்திருந்தாள்!

விக்கியை பார்த்த நாச்சியா ஹாய் என்க, பதிலுக்கு விக்கி ஹாய் என்றுவிட்டு, தேவாவை விசாரிக்க,

"ஸார் தூங்கிட்டுத்தான் இருப்பாரு போய் நீங்களே எழுப்புங்க உங்க ப்ரன்டை என்றவள் கிச்சன் பக்கம் போனாள்!

"வா நாச்சியா" என்ற மீனாட்சி மட்டனை கழுவி சுத்தம் பண்ண,

"என்ன அத்தை திடீர்னு மட்டன் பையன் வேலைக்குப் போறாருனா?! என்றாள் குறும்பாக,

"இல்ல நாச்சியா ரேகாவோட பேஸ்புக் ப்ரன்ட் யாரோ வராங்களாம் அதான் மதிய சாப்பாட்டுக்கு ரெடி பண்றேன்" என்று மீனாட்சி சொல்ல கிச்சனுக்குள் தூங்கி எழுந்து வந்த தேவா ம்மா காபி இருக்கா என்றான்…..

நாச்சியா அவனுக்குப் புதிதாய் காபியைக் கலந்து தந்துட்டு, மீனாட்சி சொன்ன விசயத்தை அவனிடம் சொல்ல ஓஹோ என்றவன்,

"அவ விசயத்துல தலையிடாத நாச்சியா, தேவையில்லாம நமக்கு டென்சன், அவ என்னமோ பண்ணிட்டு போகட்டும்"னு தேவா சொன்னான்…..

மட்டனுக்கு நறுக்க வேண்டியதை எல்லாம் மீனாட்சி எடுத்து வந்து நாச்சியாவிடம் தந்துவிட்டு, அவ வேலைக்குப் போகப் போற விசயத்தையும், சந்திரசேகர் அவளுக்கு வண்டி வாங்கித்தரப் போற விசயத்தையும் சொல்ல இருவருக்குமே பயங்கர ஆச்சரியம்……

"ஏம்மா இதே நான் கேட்டிருந்தா அப்பா வாங்கித் தந்துருப்பாரா"னு தேவா மெதுவாய் ஆரம்பிக்க,

"ஏன்டா உனக்குத்தான் உன் பொண்டாட்டி எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்றாளே அப்புறம் என்ன" என்று மீனாட்சி சொல்ல நாச்சியாவுக்கு ரொம்பச் சந்தோசம்.

"இதுக்குத்தான் நாச்சியா நான் இ.எம்.ஐ ல வாங்கியிருந்தா நல்லதுனு சொன்னேன். இப்ப ஏதாவதுனா அவ நான் உழைச்சி வாங்குன வண்டி, நீ ஓசியில வாங்கின வண்டினு பேசுவா! ஏன்னா அவ புத்தியும் வாயும் அப்படி"னு தேவா சொல்ல, கடுப்பான நாச்சியா,

"இப்பவும் ஒன்னும் குறைஞ்சு போயிடலங்க, நீங்க மாசம் மூனாயிரத்த வண்டிக்கான ட்யூவா அத்தைக்கிட்ட குடுத்திருங்க நான் வாங்கிக்கறேன்" என்று நறுக்குன சொல்ல தேவாவின் ஈகோ வெளிவர ஆரம்பித்தது!

"நான் வண்டி வாங்கினது உன்கிட்ட அம்மாகிட்ட எதுக்குப் பணத்த தரனும்?"

"இந்த வீட்டோட நிர்வாகத்த பாக்கறது அத்தைதான் ஸோ அத்தைக்கிட்ட கொடுங்க நான் வாங்கிக்கிறேன்" என்று அழுத்திச் சொல்ல மீனாட்சிக்கு நாச்சியா வார்த்தைகள் சந்தோசத்தைத் தந்தாலும் ஏதாவது வாய்ச்சண்டை வந்துவிடுமோ என்று இருவரது பேச்சிலும் இடைப்புகுந்தாள்……

"சரி சரி விடுங்க முதல்ல வேலைக்குப் போய்ச் சம்பளத்த வாங்கட்டும் அப்பறம் மத்ததைப் பாத்துக்கலாம்" என்று மீனாட்சி சொல்ல,

தேவாவோ இதை விடுவதாகத் தெரியவில்லை,

"நான் பணத்தை மாசமானா மாமாகிட்டதான் கொடுப்பேன்"னு சொல்ல…..

வெங்காயத்தை உறித்துக்கொண்டிருந்த நாச்சியா அதை மொத்தத்தையும் கையில் எடுத்துக்கிட்டு,

"எங்கப்பாக்கிட்ட கொடுத்தாலும் சரி, கோயில் உண்டியல்ல போட்டாலும் சரி உங்க பணம் உங்க விருப்பம்" என்ற படியே வெடுக்கென்று அறைக்குள் போய்விட்டாள்!...

                                                      ----தொடரும்----

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib