anti - piracy

Post Page Advertisement [Top]

மெல்ல திறந்தது மனது (ஆதன்-னின்)                                                


அத்தியாயம் 27 

அடுத்த நாள் பொழுது விடியும் முன்பே மார்க்கெட்டுக்கு ஓடிய நாச்சியா ஆறு மணிக்கு முன்பே கடைக்குத் திரும்பி இருந்தாள்.

வாங்கி வந்த காய்கறி, கீரைகளை மரப்பலைகையில் அடுக்கி வைத்து, பால் பக்கெட்டுகளை முறையாய் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டு வாசுவை எழுப்பிக் கடையைத் திறந்துவிட்டாள். டீ மட்டும் போட்டு வாசுவுக்குக் கொடுத்துவிட்டு தானும் குடித்துவிட்டுக் கடை வேலைகளைக் கவனித்தவள். காலை உணவை கடையில் வாங்கி வாசுவுக்கு வைத்துவிட்டு இவளும் சாப்பிட்டுத் தயாராகித் தேவாவுக்குப் போன் அடித்தாள்…..

"ஹலோ" என்று தூக்க கலக்கத்தில் உளறினான் தேவா…..

"அடப்பாவி நான் இங்க விடியறதுக்கு முன்ன இருந்து எழுந்து வேலைகளை முடிச்சிட்டுப் பத்திரிக்கை வைக்கத் தயாராயிட்டு இருக்கேன் நீ இழுத்து போர்த்திக்கிட்டு தூங்கறியா?! வாட்ஸ்அப்பில் ஒரு குட்மார்னிங் மெசேஜ் இல்லாதப்பவே டவுட் பட்டேன்" என்று கோதை செல்லமாகச் சலித்துக்கொள்ள,

"ஸாரிமா நேத்து மிட்நைட் வரை விக்கிக்கூடப் பேசிக்கிட்டு இருந்ததால அசந்து தூங்கிட்டேன்" என்றான் தேவா!

"இட்ஸ் ஓகே உனக்கு அரைமணி நேரம் டைம் தரேன். அதுக்குள்ள ரெடியாகி வர" என்று நாச்சியா பேசிக்கொண்டிருக்கும் போதே….,

"நான் ஹலோ சொல்லும்போதே பாத்ரூம் வந்துட்டேன். நீ போனை கட் பண்ணா நான் ரெடி ஆய்டுவேன். ரெடி ஆகிட்டு கால் பண்றேன், புல்லட்டை எடுத்துட்டு விக்கி வீட்டுக்கு வந்துடு" என்று தேவா சொல்லிவிட்டு கைப்பேசியை அணைத்தான்!...
…………

காலை ஏழு மணிக்கே அடுக்களை வேலைகளை முடித்த மீனாட்சி அவளிருக்கும் வீதிக்குப் பத்திரிக்கை வைக்கும் வேலையை உமாவோடு சேர்ந்து ஆரம்பித்து விட்டாள்…..

ஒவ்வொரு வீட்டிலும் அவருக்கு ஆபிஸ் வொர்க் அதிகம் அதனால அழைக்க வர முடியலை என்ற வார்த்தைகளைச் சொல்லிச் சொல்லியே பத்திரிக்கை வைத்து அழைத்தாள் … அந்தப் பகுதியில் பெரும்பாலும் எல்லாரும் சொந்தமாக வீடுக்கட்டி குடி இருப்பர்கள்தான்.
வீதி அம்மன் கோவில் திருவிழாவின் போது பெரும்பாலும் ஒருவருக்கொருவர் பாா்த்து பேசியதின் பயனாய் முகம் அறிமுகமாவது இருந்தது…

"கல்யாணத்தைச் சிம்பிளா வடபழனி கோயில்ல நடத்தறோம். வரும் ஞாயிறு அன்னைக்கு ரிசப்சன் வைச்சிருக்கோம் தவறாம வந்துடுங்க" என்று மீனாட்சி சொல்லிச் சொல்லியே அவளுக்கு வாய் வலியே வந்துவிட்டது!

ஒரு வழியாக மீனாட்சி தன் வீதி முழுதும் எல்லாருக்கும் பத்திரிக்கை வைத்து முடித்திருந்தாள்!
…………..

தேவா போன் அடிக்க நாச்சியா வந்து சேர்ந்தாள்…..

"தேவா மதியம் வரை நிக்காம எவ்வளவு முடியுமோ அவ்வளவு பத்திரிக்கை வைக்கிறோம். அடுத்து ஈவ்னிங் 5 மணிக்கு திரும்பவும் ஆரம்பிக்கறோம். நடுவுல பிளவுஸ் தைக்கக் கொடுக்கப் போகனும் சீக்கரம் சீக்கிரம் "என்று பரபரத்தாள் நாச்சியா!

இருவரும் ஒவ்வொரு வீடாகப் பத்திரிக்கை வைக்க ஏறி இறங்க ஆரம்பித்தார்கள்…

ஏறி இறங்கிய அத்தனை வீடுகளிலும் அப்பாக்கள் இருவரும் சொந்த ஊர்களுக்குப் பத்திரிக்கை வைப்பதில் பிசியாக இருப்பதால் அவா்கள் அலைச்சலைக் குறைக்க நாங்களே பத்திரிக்கை வைக்கறோம். ரிசப்சனுக்குத் தவறாம வந்துடுங்க, டைமில்ல கிளம்பறோம்னு தண்ணி, கூல்டிரிங்ஸ், டீ, காபி எல்லாவற்றையும் அன்பாகச் சொல்லி தவிர்த்துட்டு வேகமாகப் பத்திரிக்கை வைக்க ஆரம்பித்தாா்கள்…..

நேரம் மணி ஒன்றைத் தொட்டிருக்கப் பத்திாிக்கை வைத்த வரை போதும் பிளவுஸ் தைக்க டைலர் கடைக்குக் கிளம்பலாமெனத் தேவாவிடம் சொல்ல, டைலர் கடைக்குச் சென்றார்கள்…… டைலர் கடை ஓனர் பெண்தான். பெயர் மலர், நாச்சியாவுக்கு நல்ல அறிமுகம்தான்…

மலருக்குப் பத்திரிக்கை வைத்துவிட்டு விபரத்தை சொல்லி பிளவுஸ் தைப்பதற்கான துணிகளை மலரிடம் திணித்தாள் நாச்சியா.. ப்ளவுஸ் டிசைனை தோ்வு செய்யச் சொல்லி மலர் சொல்ல தேவாவே நல்ல அழகான டிசைனைத் தோ்வு செய்ய முன்வர.. மலர் நாச்சியாவை பார்த்து கண்ணடித்து மெச்சுதலாய் சிரித்தாள்….

தையல் கடைக்குப் பக்கத்திலயே இருந்த சின்ன ஜவுளிக்கடையில் வாசுவோட அம்மாவுக்கு ரெண்டு சேலைகளை எடுத்தவள், பசி வயிற்றைக் கிள்ளவே மூன்று பேருக்கும் பிரியாணியை வாங்கிக்கொண்டு தேவாவை தங்கள் கடைக்குப் போகச் சொன்னாள் …

"வாசு ஓடிவா ஓடிவா டைமாச்சு நீ முதல்ல சாப்பிடு" என்று பிரியாணி பொட்லத்தை அவனிடம் குடுக்கப் பத்து நிமிசத்தில் சாப்பிட்டு முடித்திருந்தான் வாசு அவனுக்குப் பசி போல….

நைட்டிக்கு மாறிய நாச்சியா கடை ஓரத்திலயே உட்கார்ந்து தேவாவை உட்காரச் சொல்லி இருவரும் ஒன்றாகச் சாப்பிட ஆரம்பித்தார்கள்…

"டே வாசு உங்க அம்மாவுக்குச் சேலை எடுத்துட்டேன் அந்தப் பையில இருக்கு. நைட் கொண்டுபோய்க் கொடுத்துட்டு வந்துடு" என்று நாச்சியா சொல்ல.

அம்மாவுக்கு முதல்முறையா தன் பக்கமா இருந்து புதுச் சேலை தருவது அவனுக்குப் பெருத்த சந்தோசமாகவும், தான் பெரியவன் ஆகிவிட்டேனென்ற உணர்வும் ஏற்பட்டது!

…………….

தன் சொந்த ஊரான சேலத்தில் சொந்த பந்தங்களுக்குச் சண்முகம் பத்திரிக்கை வைக்கின்றபொழுது உண்மைச் சூழ்நிலையைச் சொல்லியே வைத்தார்….

அப்படிச் சாதி பாக்கற குடும்பத்துக்குப் போனா நம்ம பொண்ணு நிம்மதியா இருக்குமா? நம்ம சாதியில சொந்த பந்தத்துல மாப்பிள்ளையே இல்லையானு பலபேர் வருதத்தோட சலிச்சிக்க.
பொண்ணு பையனை விரும்பிட்டாள், மாப்பிள்ளையும், அவர் அம்மா, தங்கச்சியும் நல்ல மனசுக்காரங்க அவங்க நாச்சியாவ நல்லபடியாகப் பார்த்துக்குவாங்க என்று முடித்துக்கொண்டார் சண்முகம்…..

தன் பங்காளி பையனை டூவீலரில் அழைத்துக்கொண்டு முதல் நாள் காலை விரைவாகவே பத்திரிக்கை வைக்க ஆரம்பித்தவர் இரவு வரை ஓய்வில்லாமல் பத்திரிக்கை வைத்து முடிப்பதிலேயே குறியாய் இருந்தார்….

அடிக்கடி வலது கை வலியும் திடீரென மரத்துப் போவதெனத் தொந்தரவு செய்ய ஆரம்பித்திருந்தது. சற்று நாளாகவே அவருக்கு இந்தத் தொந்தரவு இருக்கிறது.
ஆனால் நாச்சியாவிடம் இதைச் சொல்லாமலே மறைத்து வைத்திருந்தார்!

இதனால் ஏற்படப் போகும் விளைவுகளை அவர் அறியவில்லை!

அத்தியாயம் 28 

ஒருவழியாகப் பத்திரிக்கை வைக்கும் படலம், வரவேற்புக்கான ஏற்பாடுகள் எல்லாம் முடிந்து கல்யாணத்திற்கு முந்தின நாள் இரவும் வந்தது!

கடைக்கு வெளியே பெரிய பிளக்ஸ் போர்டில் தேவா வெட்ஸ் கோதை நாச்சியார் என்ற எழுத்துக்கள் பொறித்திருக்க, தேவா நாச்சியா சிரித்தபடி நின்றிருந்தார் ப்ளக்ஸ் போர்டில்!

இதைக் கடந்து போன சிவாவும், சந்துருவும் இவா்களைப் பழிவாங்காம விடக்கூடாதென்று மனதிற்க்குள் கருவிக்கொண்டார்கள் ஒரு
சுப நிகழ்வு நடக்கஇருக்கும் வேளையில் இந்தச் சல்லித்தனமா ஆட்களைப் பற்றி எதற்கு நினைக்கனும்?!! நாம் நடக்கப்போகும் திருமணத்தைப் பற்றிப் பார்ப்போம்!

வடபழனி முருகன் கோவிலில் திருமணம் செய்ய முடிவாகி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது!

சேலத்திலிருந்து வந்த உறவினர்கள் இருபது பேருக்கு வட பழனியிலேயே தங்கும் அறைகள் புக் செய்யப்பட்டுத் தங்க வைக்கப்பட்டனர். மூகூர்த்தம் 8 டூ 9 என்பதால் சிரமம் இல்லாமல் இருந்தது….

இங்கிருந்து நாச்சியா, தேவா, விக்கி, வாசு குடும்பம்தான் விடிந்தால் கிளம்ப வேண்டியதாய் இருந்து…. இரண்டு கார்கள் விக்கி ஏற்பாடு செய்திருந்தான்…..

அன்று இரவே உமா நாச்சாயாவுக்கு அலங்காரம் பண்ண நாச்சியா வீட்டுக்கு வந்துவிட்டாள்…. தேவா போனில் இறங்கி வந்து பேச ரேகாவும் கல்யாணத்துக்கு வர சம்மதித்து இருந்தாள். சந்திரசேகர் ஒரே வார்த்தையில் வர முடியாது என்று சொல்லிவிட்டார்!

ஆனால் மனதிற்குள் தான் செய்வது சரியா தப்பா என்ற கேள்விகள் அவரை அழுத்திக்கொண்டிருந்தது. வேலைவெட்டி இல்லாமல் கல்யாணம் செய்கிறான், சொந்த பந்தங்கள் நாலுவிதமாய்ப் பேசும் என இது போன்ற காரணங்களை இவரே மனதிற்குள் எண்ணிக்கொண்டு, தான் செய்வது சரியே என்று சுய ஆறுதல் தேடிக்கொண்டார்…...

இரவு ஆக ஆகக் காலையில் எடுத்துச் செல்லும் பொருட்கள், துணிமணிகள் எல்லாமே நாச்சியாவின் மேற்பார்வையில் எடுத்து வைக்கும் வேலைகள் நடந்தது!
…………

விக்கி வீட்டில் தேவாவுக்கு வேஷ்டிக் கட்டி பழக்கி சோர்ந்து போனார் முருகேசன்….. கடைசியாக நாச்சியாவுக்குப் போன் அடித்துக் கேட்டுவிட்டுப் பேண்ட், சர்ட்டில் தாலிக் கட்டுவதென்று முடிவானது!
………..

விடிந்து சரியாக ஆறு மணிக்கு எல்லாரும் கிளம்பி காரில் ஏறினார்கள்….. முகூர்த்தத்திற்கு நிறைய நேரம் இருக்கும் முன்பே கோவிலுக்குப் போய்ச் சேர்ந்திருந்தார்கள்…. வட பழனியில் தங்கியிருந்த நாச்சியாவின் சொந்தக்காரர்களும் நேரத்திற்கு வந்து சேர்ந்தார்கள்….

நேரம் ஆகச் சிவாச்சிரியார் வர தமிழ் முறைப்படி திருமணச் சடங்குகள் துவங்க ஆரம்பித்தது!

முகூர்த்த நேரம் நெருங்கும் பொழுது சந்திரசேகர் உமாவுக்குக் கைப்பேசியில் அழைத்தார், நம்பரை பார்த்த உமாவும் ஆச்சரியமாகி அழைப்பை எடுத்தாள்..

"ஹலோ அப்பா"

" தாலி கட்டியாச்சாமா?!

"இல்லப்பா கட்ட போறாங்க"

"சரிம்மா நான் ஒன்னு சொல்றேன் ஆனா யாருக்கிட்டயும் நீ சொல்லக்கூடாது"

"சொல்லமாட்டேன் சொல்லுங்கப்பா"

"நான் வாட்ஸ்அப் வீடியோ கால் பண்றேன் அங்க நடக்கறத காட்றியாமா?! என்று சந்திரசேகர் கேட்க, உமா கண் கலங்கி போனாள்….

"கண்டிப்பா பண்றேன்பா. நீங்க வாட்ஸ்அப் வீடியோ காலுக்கு வாங்க" என்றவள் போனை கட் பண்ணிட்டு தானே வாட்ஸ்அப் கால் பண்ணினாள்…..

அட்டன்ட் பண்ணிய சந்திரசேகர் நடப்பதை பார்க்க ஆரம்பித்தார்…..

தாலிக்கட்டும் நேரம் நெருங்கியதும் சிவாச்சிரியர் தாலி எடுத்துக்கொடுக்க நாச்சியா கழுத்தில் தேவா கட்ட. சண்முகம், மீனாட்சி கண்களில் கண்ணீர் மின்ன அட்சதை தூவினா்… இங்குச் சந்திரசேகர் யாருமற்றுத் தனிமையில் இருந்ததால் கண்ணீர் கரக் கர என்று கண்களில் இருந்து கொட்ட ஆரம்பித்தது….

கோவிலில் கல்யாண வேலைகள் எல்லாம் முடிந்திருக்க, வந்தவர்களுக்கு ஓலாவில் கார்கள் புக் செய்யப்பட்டு, வட பழனியில் பிரலமான ஹோட்டல் ஒன்றில் காலை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அனைவரும் சாப்பிட்டு முடிக்க ஐயப்பன் தாங்கலுக்குக் கிளம்பினார்கள்.

பொண்ணு மாப்பிள்ளை வண்டியில் ரேகா, உமா விக்கி அமர, மற்றவர்கள் கிடைத்த கார்களில் ஏறிக்கொள்ளக் கார்கள் கிளம்பியது!

உமா "அண்ணா" எனக் கூப்பிட.

"சொல்லு உமா" என்றான் தேவா,

"வண்டியை நம்ம வீட்டுக்கு விடச் சொல்லுங்கணா"

"ஏம்மா"

"ஏன்னு கேட்டா அப்ப அப்பாக்கிட்ட ஆசீர்வாதம் வாங்க வேணாமா. அப்பா தப்பே பண்ணியிருந்தாலும் சுத்தமா அவாய்ட் பண்றது தப்புணா" என்றாள் உமா பொிய மனுஷியைப்போல் அழுத்தமாக….

"ஸாரிடா உமா போலாம்" என்று தேவா சொல்ல, இது ஏன் நமக்குத் தோணவில்லை என நாச்சியா தன்னைத்தானே மனதிற்க்குள் திட்டிக்கொண்டாள்!

ஸாரி உமாம்மா இது எனக்கும் தோணல" என்று நாச்சியா சொல்ல…..

"இதெல்லாம் எப்படி உங்களுக்குத் தோணும்?! என்று ரேகா ஆரம்பிக்க,

"பரவாயில்லை அண்ணி நீங்க பீல் பண்ணாதிங்க, அப்பா ஆசீர்வாதம் பண்ணுவாருனு எனக்குத் தோணுச்சி அதனால சொன்னன்" என்று ரேகாவுக்குப் பிரேக் போட்டாள் உமா!

மற்ற வண்டிகள் நாச்சியா வீட்டுக்கு போக,
பொண்ணு மாப்பிள்ளை இருந்த வண்டி சந்திரசேகரை பார்க்க போனது!

காரிலிருந்து இறங்கிய உமா காலிங்பெல்லை அழுத்தும் போதுதான் அப்பா இன்னைக்கு வேலைக்குப் போகாம லீவ் போட்ருக்கார் என்பதே தேவாவுக்குப் புரிந்தது!

கதவை சந்திரசேகர் திறக்க அனைவரும் உள்ளே போக,

தேவாவும் நாச்சியாவும் அவர் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பண்ணுங்கப்பா என்று கேட்க,

இருவர் தலையிலும் கை வைத்தவர் நல்லாயிருங்க என்று வாழ்த்த உமாவைத் தவிர அனைவருக்கும் ஆச்சரியமாய் இருந்தது!

நாச்சியா வீட்டின் மேல் புதிதாய்க் கட்டப்பட்டிருந்த அறை முதலிரவுக்காக ஒதுக்கப்பட்டிருக்க, நாச்சியாவின் உறவுக்கார பெண்கள் மற்றும் உமாவும் சோ்ந்து அந்த அறையை அலங்கரிக்க ஆரம்பித்தனா்!.....

                                                ----தொடரும்-

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib