விழியிலே மலர்ந்தது..!! உயிரிலே கலந்தது..!!
அத்தியாயம் 03
அந்த வீட்டின் முன்பு இருந்த கூட்டத்தை பார்த்து என்ன
தகராறா இருக்கும் என யோசித்தபடி ஆட்டோவில் பயணமாகிய ஓவியாவை இட்டிலிக்கடை
சுப்பமாவின் வீட்டின் முன்னிருந்த அந்த கூட்டம் அருகில் போய் இறக்கிவிட நின்றது ஆட்டோ..
அதில் தன்னிலையடைந்தவள் தனது லக்கேஜை
எடுத்துக்கொண்டு கீழிறங்கி ஆட்டோ பயணத்திற்கான பணத்தை தனது பர்சினுள்லிருந்து
எடுத்து அவரிடம் கொடுத்துவிட்டு கூட்டத்தை விலக்கிக்கொண்டு அந்த வீட்டுவாசலுக்கு
போனவள் கண்டகாட்சியில் விளைந்த அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
ஓங்குதாங்கான ஒருவன் அடித்து...துவைத்ததில்
முகம்வீங்கி வலியில் உடல்தளர்ந்து இன்னும் ஒருஅடி அவன் உடம்பில்பட்டால்
மயங்கிவிழுந்துவிடும் நிலையில் இருந்தான் மற்றொருவன்.
அடிவாங்கியவன் “அண்ணே அடிக்காத..! இனி
இந்தப்பக்கமே தலைவச்சு படுக்கமாட்டேன்” என்று அழுகுரலில்
கெஞ்சிக்கொண்டிருந்தான்.
ஆனாலும் கோபம் அடங்காமல் ஒங்குதாங்குமாக இருந்தவன், அடுத்த அடியை அடிக்க கை ஓங்கியதைக் கவனித்து அதிர்ந்து அவனின்முன்
கூட்டத்தை விலக்கிக்கொண்டு வந்துநின்ற ஓவியாவைக் கண்டவன் ஓங்கியக்கையை கீழிறக்கி
யோசனையுடன் ஓவியாவைப் பார்த்தபடி
“ஏலேமணி.. இனி ஒருதடவை என்கண்ணுல நீமாட்டுன அன்னைக்கு முழுக்க உனக்கு ஏழரைதான். என் கண்ணுலப்படாத இடத்துக்கு ஓடியேப்போயிடு” என்றான்.
அப்பொழுது வீட்டின்வாசலில் நின்றுகொண்டிருந்த
சுப்பம்மா ஓவியாவிடம் “யாரும்மா நீயி இந்த தெருவுக்கு புதுசாயிருக்க” என்றார்.
அவரிடம் ஓவியா “சுப்பம்மான்றது....." என்று
இழுத்ததும். “நான்தான் சுப்பம்மா” என்று சொன்னார்.
அங்கு கூடியிருக்கும் மக்கள் அவர்களின் உரையாடலை
ஆர்வத்துடன் பார்ப்பதில் சங்கடமடைந்த ஓவியா “நான் உங்களைத்தான்
தேடிவந்துருக்கேன் வீட்டுக்குள்ளப்போய் பேசலாமா ஆன்ட்டி” என்றாள்.
அவள் சொன்னதைக்கேட்ட வெயில் “ஹலோ... நீங்க தேடிவந்திருக்கவங்க வேற சுப்பம்மாவாயிருக்கும்.
உங்கள போல ஆட்களுக்கும் எங்கவீட்டுல
உள்ளவங்களுக்கும் சம்பந்தமிருக்க வாய்ப்பில்லை. பார்த்தீங்கதானே இங்க நடந்ததை ” என்றான்.
அவன் அப்படிப்பேசுவது அவளுக்குப் பிடித்தமில்லை
என்ற பாவனையை முகபாவத்தில் காண்பித்தபடி சுப்பம்மாவை கைநீட்டி சுட்டிக்காட்டிய
ஓவியா “நான் இவுங்கக்கூடப்பிறந்த சீனிவாசனோட மகள்” என்றாள்.
அவள் அவ்வாறு சொன்னதும் சுப்பம்மா “என்னது என் அண்ணன் பெத்தமகளா நீ?"
என்று அவளருகில் வந்து "அதுதானே எங்கயோ
பார்த்த ஜாடை தெரியுதுன்னு நினைச்சேன்.
இப்பயாவது எங்களையெல்லாம் பார்கணும்'ற நினைப்பு
வந்ததே.
நீ வாடிம்மா உள்ள,
அவன் கிடக்குறான் கூறுகெட்டவன்.
இது உன்வீடுதான்” என்று நெகிழ்ந்து பேசியபடி அவளை உள்ளே
கூட்டிச்சென்றாள்.
அதன்பின் வெயில் தனக்குள் யோசனையுடன், ஓடிப்போன என் மாமனின் மகள்ன்னு சொல்லிகிட்டு இத்தனை வருஷம்கழிச்சு
வந்துருக்கா..!!
நான் பத்தாவது படிக்கும்போது ஒரு நாள்முழுக்க, அண்ணன் செத்ததுக்கு கூட சொல்லி அனுப்பலையேன்னு அம்மா அழுதுச்சே. அந்த மாமா பொண்ணா இது.
இத்தனை வருசத்துக்குப்பிறகு இப்போ இந்த புள்ள இங்க
வந்துருக்குதுன்னா ஏதாவது வில்லங்கமா இருக்குமோ? என்ற யோசனை அவனுக்குள்
ஓடியது.
அதே வேளையில் அந்த தெருவின் மற்றொரு மூலையில் விந்தியாவும்,
மேகலாவும் தங்களுக்குள் பேசிக்கொண்டே ரம்யா வீட்டைநோக்கி
நடந்தனர். விந்தியா, மேகலா, ரம்யா மூன்றுபேரும்
தோழிகள்.
அவர்களின் தெருவில் இருக்கும் வெயில்காத்தம்மன்
கோவிலின் பொங்கலுக்கு இன்னும் இருதினங்களில் கொடியேற்றம் நடக்கயிருக்கிறது.
அம்மூவரும் பெரியபெண்களாகும் முன்புவரை
முளைப்பாரிக்கு காப்புக்கட்டி ஒருவாரம் நோம்பிருந்து தினமும்மாலை கோவிலில்
பெண்களெல்லோரும் கூடி அம்மனுக்கு கும்மிப்பாட்டுப்பாடி நிறைசெம்பு நடுவில்வைத்து
அதைச்சுற்றிக் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்து வந்தவர்கள்.
விருதுநகர் டவுனென்றாலும் அங்குவசிக்கும் மக்கள்
பெரும்பாலும் சமூகம் சமூகமாக வாழ்ந்துவருபவர்கள். அவர்களின்
வழிபாட்டு முறையை இன்றளவும் ஓரளவு முன்னெடுத்து வருபவர்களே.
இவர்கள் வாழும் பகுதியில் இருக்கும்
வெயில்காத்தம்மனுக்கு பங்குனியில் வருடாவருடம் கொடிச்சாட்டி பூப்பெய்யாத சிறுமிகள் முளைப்பாரி வளர்க்க தலா ஓர்பானையில்
வைக்கோல்போட்டு அதற்குமேல் வறட்டியை உதிர்த்துவிட்டு நீர்த்தெளித்து
முதல் நாளே ஏழுவகை தானியங்களை ஊறவைத்து
முளைக்கட்டி வைத்திருந்ததை இந்த வைக்கோல், எருபோட்டு வைத்திருக்கும் பானைகளில்
தூவிவிட்டு வெயில்படாமல் பூசாரி ஒருவரைத்தவிர மற்றயாரின் கண்படாமல் அவரின்
பொறுப்பில் அதை வளர்த்து எடுப்பார்கள்.
அவ்வாறு வளர்க்கும் ஏழுநாட்களும் முளைப்பாரி தூக்கும்
பெண்டிரெல்லாம் நிறைச்செம்பு அம்மன்கோவில் முன்வைத்து கும்மிப்பாட்டுபாடி அதை
சுற்றி கும்மியடிப்பர்.
அவ்வாறு கும்மியடிக்க குழுமும் அச்சிறுமிகளும்
அவர்களின்வீட்டு பெண்கள் மற்றும் அத்தெருவில் இருக்கும் இளமங்கைகள் எல்லோரும்
கோவில்முன் கூடுவர்.
அவ்வாறு வரும் பெண்களெல்லோரும் ஒருவருக்கொருவர்
போட்டிப்போட்டு தங்களை அழங்கரித்துகொண்டு தலைநிறைய பூவைத்துகொண்டு வளம்வரும் அழகோ...அழகு..!!
அவ்வாறு காப்புக்கட்டி ஏழுநாள் கும்மியடிக்கும்
பெண்களுக்கு அத்தெருவிலிருக்கும் வீடுகளிலிருந்து தினமும் பலகாரங்கள்செய்து
சாமிக்குப்படைத்து கும்மியடிக்கும் பெண்களுக்கும் அங்கிருக்கும் மற்றோருக்கும் தட்டுநிறையப் பிரசாதமாகக்கொடுப்பர்.
வீட்டில் ஆயிரம்பலகாரம் செய்து சாப்பிட்டாலும்
கோவிலில் பூந்தி, கொழுக்கட்டை, சுண்டல், புளியோதரை என்று கலவையாக பலகாரங்களை எடுத்துக்கொண்டுவரும்
கிண்ணங்களில், முன்டியடித்துக்கொண்டு வாங்கி சாப்பிடும் ருசி
இருக்கே அட..அட..அட...
மேலும் கும்மியடிக்கும்போது அங்கிருக்கும் பெண்களை
பார்த்தும் பார்க்காதது போல குழுமியிருக்கும் இளவட்டங்களும். மற்றவரறியாமல்
தன்னைப் பார்பவனை இனம்கண்டு முறைக்கும்கன்னிகள்.
தன்னை நோக்கும் ஆண் மனதுக்குள் வரித்தவனாக இருந்தால் கடைகண்ணில் சேதிசொல்லும் அழகிகள்
என்று கனவுப்பட்டறையின் முதல் படியானக் காதல் களைகட்டும் அங்கு.
எனவே அம்மூன்று கன்னிகளும் பொங்கல் திருவிழாவிற்கு
தங்களை அழகுபடித்திகொள்ள தேவையான பொருட்களை கடை வீதிக்குப்போய் வாங்கவே
விந்தியாவும் மேகலாவும் செல்லும் வழியில் இருக்கும் ரம்யாவை அழைத்துக்கொண்டு
செல்லுகையில் என்னென்ன வாங்கலாம் எனப்பேசிக்கொண்டே நகர்ந்தனர்.
ரம்யாவின் வீட்டருகில் போகும்போது மொபைலில் அவளை
அழைத்த மேகலா “ஏய்...ரம்யா இன்னும் வீட்டுக்குள்ள என்னடீ
செய்ற..! நாங்க உன்வீட்டுவாசலுக்கு வந்தாச்சு, வெளில வா” எனச்சொல்லி மொபைல் இணைப்பைத் துண்டித்தாள்
ரம்யாவின் அம்மா இவர்கள் இருவரும்
வருவதைப்பார்த்து உள்ளிருக்கும் அவளின் மகளை “ரம்யா.... விந்தியாவும் மேகலாவும் உன்னைக்கூப்பிட்டுபோக
வந்துட்டாங்க .நீ உள்ள இன்னுமென்ன செய்ற..??”
என்று கேட்டுக்கொண்டிருக்கும்போதே உள்ளிருந்து
கிளம்பி வந்துகொண்டே “இதோ வந்துட்டேன்மா” என்றாள் ரம்யா.
ரம்யாவின் அம்மா “இரண்டுபேரும்
உள்ளேவாங்கம்மா” என்றதும் விந்தியா ”இல்லயிருக்கட்டும் ஆண்ட்டி.
இதோ ரம்யா கிளம்பிவந்துட்டாள்ல நாங்க ஷாப்பிங் முடிச்சிட்டு வரும்போது
டைமிருந்தால் வாறோம்" என்றாள்.
ரம்யாவும் “அம்மா நாங்க போயிட்டுவாரோம்” என்று சொல்லிக்கொண்டே வாசலுக்கு வந்து அங்கிருக்கும் தனது மிதியடியை
காலில்போட்டுக் கொண்டு மூவரும் கடைவீதியை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
நடக்க ஆரம்பித்ததும் ரம்யா “ஏய் விஷயம் தெரியுமாடி உங்களுக்கு” என்று பேசப்போனவளை
தடுத்தால் விந்தியா.
வெயில் மணிகண்டனை அடித்த விஷயம்
கேள்விப்பட்டிருந்த விந்தியாத்தனது தோழி அதைத்தான் கூறப்போகிறாள் என்று நினைத்து வெயிலைப்பற்றிய அதிர்ப்தியை இருவரிடமும் கொட்டினாள்.
”ரம்யா.., நீ உங்கண்ணன் வெயிலைப் பத்திதானே சொல்லப்போற!.
ஏற்கனவே எங்க வீட்டில, போயும்...போயும் அந்த ரவுடியையா நீ காதலிக்கிறன்னு எங்க விஷயம்
தெரிஞ்சதில் இருந்து எதுக்கெடுத்தாலும் கரிச்சுக்கொட்டிட்டு இருக்காங்க.
இந்த நேரத்தில வெயிலுக்கு இந்த வம்பெல்லாம் தேவையா?. போச்சு.!. இந்தவிஷயம் தெரிஞ்சதும் என் அப்பா வேறயிடத்திலிருந்து நல்லாப்படிச்ச,
நிறைய சம்பளம்வாங்குற மாப்பிள்ளையாத் தேடிப்பிடிச்சு என்முன்ன நிறுத்தப்போறார்.
நான் அவர்கிட்ட வெயிலோட எந்தப் பிளஸ்பாய்ன்ட்டை
சொல்லிவாதாட.
உங்க வெயிலண்ணன் நல்லா உடம்பை மட்டும் வளர்த்துவச்சிருக்காரு, கொஞ்சம் கூட புத்தியேயில்லை.
இவர் உலகத்தை திருத்தவா பொறந்துருக்கார்.?? எத்தன தடவச்
சொல்லியிருக்கேன் உங்கண்ணன்கிட்ட,
இந்த அடிதடியெல்லாம்
விட்டுருங்க வெயிலு.
அப்பத்தான் என் வீட்டில நம்ம கல்யாணத்தைப் பத்தி
நான் பேசமுடியும்'னு படிச்சுப்படிச்சு சொன்னேன். ஆனா திருந்துறமாதிரி தெரியல” என்று புலம்பினாள்.
அவள் பேசுவதைக்கேட்ட அவளின்தோழி கோகிலா “என்னடீ இப்படிச்சொல்ற.
அந்தமணிய வெயிலண்ணன் அடிபின்னி எடுத்ததுக்கு நான் எம்புட்டு
சந்தோசப்பட்டு கிட்டு இருக்கேன்.
தெருக்குள்ள போறவாற பொண்ணுங்களை எல்லாம்
தப்பாப்பார்க்குற பாவிக்கிட்ட மாட்டிக்கிட்டு அந்தக்கிறுக்கச்சி என்னப்பாடு
பட்டாளோ...!
இவனையெல்லாம் இப்படி வெயில்அண்ணன்
அடக்கி வைக்கலைன்னா, நாம நம்மத் தெருக்குள்ளேயேயிருக்குற அந்த மணியால
வீட்டு வாசலில்கூட வந்து நிக்க முடியாது” என்று ஆதங்கத்தில்
புலம்பினாள்.
ரம்யாவுக்கு அவளின் பெரியம்மாமகனாகிய
வெயிலின் மீதும் அவனின் குணத்தின்மீதும் அத்தனைப்பிரியம்.
‘தனது தோழி விந்தியாவின் செவத்தத்தோலில் இந்த அண்ணன் விழுந்துருச்சு’ என்ற வருத்தம் அவளுக்கு வந்தது.
இவர்கள்மூவரும் ஐந்தாம் வகுப்பிலிருந்து ஒன்றாக தோழிகளாக பழகிவருபவர்கள்.
விந்தியாவின் சுயநலகுணத்திற்கும் வெயிலின்
பொதுநலப் பார்வைக்கும் எப்படி ஒத்துபோச்சு என்ற கேள்வி ரம்யாவுக்குள் இவர்களின் காதல் தெரிந்த புதிதுலேயே எழுந்தது.
இருந்தாலும் தோழியே தனக்குப் பிடித்த அண்ணனின்
வருங்கால மனைவியாக வந்தால் தக்களுக்குள் காலத்துக்குள் நெருக்கமான பழக்கமிருக்கும்
என்ற எண்ணம் கொண்டு, இருவருக்கும் பிடிச்சிருக்கு எல்லோரும் சொல்வதுபோல
எதிர்த்துருவம் ஈர்த்திடுச்சோ..! என்னவோ..!’ என்று நினைத்திருந்தாள்.
ஆனால் காதலின் அடுத்தக்கட்ட கல்யாண நடவடிக்கைகளை வெயில் எடுத்தப்பிறகு தனது அண்ணனுக்கும் அவனின் காதலியான தனது தோழிக்கும் உருவாகியிருந்த கருத்து மோதல்கள் ரம்யாவுக்கு கவலையைக் கொடுத்தது என்பதைவிட கொஞ்சம் இருவருக்கான கல்யாண வாழ்க்கை எப்படியிருக்குமோ என்ற கேள்வியை அவளுக்குள் விதைத்தது.
அவளின் பாசமான அண்ணனைப்பற்றி விந்தியா இப்பொழுது
குறை கூறியதை கேட்டதும் அவளின்மேல் கோபம் உண்டானது.
எனவே விந்தியாவிடம் “அப்படி ஒன்னும் சலிச்சுக்கிட்டு நீ என் அண்ணனை கல்யாணம்
செய்யவேண்டாம். அவனோட தன்மையே அடுத்தவங்களுக்கு கெட்டது செய்றவங்களை கண்டுட்டா
அடிச்சு நொறுக்குறதுதான். ஏனோ உன் செவத்தத்தோலைப் பார்த்து ஸ்டெடியா இருக்குற என்
வெயிலண்ணனும் கூட கொஞ்சம் தடுமாறிடுச்சு.
கொஞ்ச நேரத்துக்கு முன்னால என் அண்ணன் வீட்டுக்கு
அதோடச்சொந்த தாய்மாமா மக வந்துருக்கா. அப்படியே தொட்டா செவந்துடும்ற கலர்ல
மூக்கும் முழியுமா வந்து இறங்கியிருக்கா.
என் அண்ணனுக்கு அந்த அப்ரசையே நாங்க கல்யாணம்
செய்து வச்சிக்குறோம்” என்றாள்.
ரம்யா அவ்வாறு சொன்னதும் விந்தியாவுக்கு தன்னைவிட
அழகா கலரா ஒருத்தியா..? அவளைப் பார்த்ததும் வெயிலுக்கு தன்மேல இருக்கிற
காதல் தொலைஞ்சுடுமோ..! என்ற எண்ணம் உருவாகி அவள் மனதை அலைக்கழிக்க ஆரம்பித்தது.
ஆனாலும் அவளிடம் கெத்தை விட்டுகொடுக்காம “நான் ஒன்னும் உன் அண்ணன்
பின்னாடிப்போய் என்னைக் காதலின்னு தொங்கிகிட்டு அலையல.
அவர்தான் என் பின்னாடி வந்து என் மனசைக்கரைச்சு
அவர்கிட்ட காதலுக்கு என்னைச்சம்மதம் சொல்லவச்சாரு.
உனக்கு என்னத்தெரியும்..? அவருக்கு என் மேலயிருக்கிற லவ்வைப்பத்தி...!
அதெல்லாம் என்னைத்தவிர வேற யாரையும் உன் அண்ணன்
திரும்பிக்கூட பார்க்காது” என்று அவளிடம் சொன்னாள்.
விந்தியாவிற்கு அவளின் அழகின்மீது ஒரு பிரம்மை
எப்பொழுதும் உண்டு தன்னைவிட யாரும் அழகென்று அவள் இதுவரை ஏற்றுக்கொண்டதில்லை.
எப்பொழுதும் அடர் நிறத்தில்தான் அவள் உடையை
தேர்வுசெய்வாள். அதே அடர் நிறத்தை ரம்யா தேர்வு செய்யும்போது ‘எனக்குத்தான் இது நல்லாயிருக்கும், நீ இன்னும் கருப்பாத்தெரிவ’ என்று சொல்லிக் காண்டாக்குவாள்..
என்னைத்தவிர வேறயாரையும் உன் அண்ணன்
திரும்பிக்கூடப் பார்க்காது என்று விந்தியா சொன்னதைக்கேட்டு ரம்யா மனதினுள் ‘கடவுளே இவளோட ஆணவத்துக்கு ஒரு புல்ஸ்டாப் வரணும்’ என்று நினைத்துக்கொண்டாள்.
எப்பொழுதும் ஜாலியாக அரட்டையடித்துகொண்டே கடை
வீதிக்கு போகும் அம்மூவரும் அன்று அமைதியாகவே கடைவீதி நோக்கிப் பயணித்தனர்.
----தொடரும்----

No comments:
Post a Comment