anti - piracy

Post Page Advertisement [Top]

             கோடையில் மழையாகும் அமுதகீதம் 

               ( தீபாஸ்)

                                 


அத்தியாயம் 01


ந்த பிரமாண்டமான ஹோட்டலில் டி.எஸ்.பி அமுதன் கீதாவுடன் ரிசர்வ் செய்த அந்த டேபிளில் அமர்ந்திருந்தான். அவர்கள் வந்து காத்திருக்க ஆரம்பித்து பத்து நிமிடத்திற்கும் மேலாகிவிட்டது . இன்னும் கீதாவின் காதலன் விமல் அங்கு வந்து சேராததால் “விமலிடம் எத்தனை மணிக்கு வரச் சொன்ன?” எனக் கேட்டான்.


“பன்னெண்டு மணிக்குன்னு சொல்லிட்டேன். வந்துருவார். உங்க போன் தாங்க கால் பண்ணி பார்க்கிறேன்” எனச்சொல்லி அமுதனிடமிருந்து கைப்பேசியை வாங்கி விமலின் எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள்.


அழைப்பொலி நீண்ட நேரம் சென்று அழைப்பை ஏற்காததால் நீங்கள் அழைக்கும் நபர் அழைப்பை எடுக்க விரும்பவில்லை. சிறிது நேரம் சென்று முயற்சிக்கவும் எனச்சொல்லி தனது பணியை முடித்துக்கொண்டது கைப்பேசி.  


அமுதனிடம் போனை நீட்டியவள் “அட்டன்பண்ணலை. ஒருவேளை இங்க வர வண்டி ஓட்டிகிட்டு இருக்கிறதால்  போன் பேசமுடியாம இருக்கலாம்” எனச் சொன்னாள்.


அவளிடம் பதில் எதுவும் சொல்லாமல் தனது கை பேசியை வாங்கி உள்ளே வைத்துக்கொண்டான் அமுதன். அவனுக்கு இருக்கும் ஆயிரம் ஜோலிகளை விட்டுவிட்டு கீதாவின் பிரச்சனையை முடித்து வைத்துவிடலாம் என நினைத்த அமுதனை விமல் வராமல் காத்திருக்க வைத்து பொறுமையை சோதித்தான்.


இருந்தாலும் இன்று அவனைப் பார்த்து தனது  வீட்டிலிருக்கும் கீதாவை  அவனுடன் முறையாக கல்யாணம் செய்து வெளியேற்றிவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தான் அமுதன்.


தன் வீட்டில் இரண்டுநாளாக இருக்கும் கீதா, விமலுடன் தனது வீட்டிலிருந்து மொபைலில் கலந்து பேசிவிட்டு “நாளைக்கு விமல் அவர் கூட வந்துருன்னு சொல்றாங்க மாமா” என்றாள்.


அவள் தயங்கித் தயங்கி தன்னிடம் அவ்வாறு சொன்னதால் “அவன் நம்பர் சொல்லு” எனக் கேட்டுவாங்கி தன் மொபைலிருந்து விமலின் எண்ணுக்கு டயல் செய்தான்.

அழைப்பை ஏற்று “ஹலோ? “ என்ற விமலிடம்.


“டி.எஸ்.பி அமுதன் பேசுறேன். நாளைக்கு கீதாவை கூப்பிட்டுகிட்டு நான் ஹோட்டல் ரெடீசியலுக்கு வந்துடுறேன். நீங்க வந்துருவீங்க தானே?” என்றான்.


விமல் திடீரென்று அமுதன் பேசவும் சற்று பயந்து போனான் “சார்..சார்...நீங்களா. மிதுலா கூட நீங்களுமா வாறீங்க? ஹோட்டல் ரெடீசனுக்குத்தானே சார்!. எத்தனை மணிக்குன்னு சொன்னீங்கன்னா  டயத்துக்கு அங்க வந்துருவேன் சார் “ என டென்சனுடன் பேசினான்.


“டயம் இன்னும் முடிவு பண்ணல விமல், டேபிள் புக் பண்ணிட்டு கீதாகிட்ட சொல்றேன், அவ சொல்ற நேரத்தில் வந்துருங்க“ எனப் பேசியிருந்தான். ஆனால் சொன்ன நேரம் தாண்டியும் அவன் வராததால் அவனுள் பல கேள்வி எழுந்தது.


அரைமணி நேரம் காத்திருந்து பொறுமையிழந்த அமுதன் கிளம்பலாம் என நினைக்கும் போது அரக்க பறக்க அங்கு வந்து சேர்ந்தான் விமல்.


அமுதன் வரச்சொன்ன நேரத்தில் விமல் வராமல் காத்திருக்க வைத்ததால் கீதாவுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.


இப்படி லேட்டா வந்தா விமல் பத்தி அமுதன் மாமாவுக்கு அதிருப்தி வந்திருக்கும். இப்படி பொறுப்பில்லாதவனை நம்பி வீட்டை விட்டு வந்திருக்கப் பாருன்னு என்னையும் தாளிப்பாரே என்ற சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது, விமலை பார்த்ததும் அப்பாடா என்ற எண்ணத்தில் மலர்ந்த சிரிப்பு ஒன்றை உதிர்த்தாள்.


வந்தவன் தன்னை நோக்கி பளிச்சென்ற சிரித்த கீதாவிடம் சங்கடமான சிரிப்பை மட்டுமே பதிலாக உதிர்த்தான்.


“ம்...உட்காருங்க விமல்” என்று அமுதன் சொன்னதும். எதிரெதிராக டேபிளில் உட்கார்ந்திருந்தவர்களிடம் வந்த விமல், இருவருக்கும் பக்கமிருந்த காலியான இருக்கையில் உட்காராமல் இடையில் இருந்த பக்கம் தனித்து அமர்ந்தான்.


தன் அருகில் வந்து அமர்வான் என்று கீதாவும், கீதாவின் அருகில் அமர்வான் என்று இயல்பாய் பார்த்திருந்த அமுதனுக்கும் எதோ சரியில்லையே என விமல் தனித்து அமர்ந்ததும் நினைத்துக்கொண்டனர்.


யார் பேச்சை முதலில் ஆரம்பிக்க என்ற குழப்பத்தாலோ என்னவோ மூவரும் அமைதிக்காத்தனர்.


மூவரின் அமைதியை அமுதனே உடைத்து “அப்பறம் சொல்லுங்க விமல். என்ன பிளானில் வந்திருக்கீங்க? நீங்க வந்து கீதாவை உங்கக்கூட கூட்டிக்கிட்டு போயிடுவீங்கன்னு சொன்னா” என்றான்.


“நான் அப்படி எங்க சொன்னேன்? ம்...வா நான் வெயிட் பண்றேன்னு தானே சொன்னேன். அதாவது அவகிட்ட பேசுறதுக்கு காத்திருக்கேன்ற அர்த்தத்தில் தான் சொன்னேன். அதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டா போல” என்றான்.


அவன் அவ்வாறு சொன்னதும் தன்னுடைய சூழல் காரணமாகவே காலேஜ் போக விடாமல் வீட்டில் நிறுத்தியபின் அவன் தன்னிடம் பேச முயற்சித்தப்போது தன்னால் பேசாமுடியாமல் போய்விட்டது.


தன்னுடைய சூழலை மூன்று நாளாக ராஜித்தை வீட்டுக்கு வந்த பிறகு தெளிவா விமல்கிட்ட சொல்லிட்டேனே. நான் இப்போ இருக்கிற நிலை புரிந்துகொள்ள மூடியாத அளவு அவன் தத்தி ஒன்றும் இல்லையே! பிறகேன் இந்த விமல் இப்படி பேசுறான்! இன்னைக்கு இவன் புதுசா இருக்கான். பேச்சும் சரியில்லையே...! என்று கீதா நினைத்தாள்.


“ஓ...நீ என் கூட பேசத்தான் வந்தியா விமல்? சரி சொல்லு என்ன பேசப்போற? பேசு நான் கேக்குறேன்.” என்றாள் கீதா.


“உன்னை யார் அவசரப்பட்டு வீட்டைவிட்டு வெளிய வரச்சொன்னது கீதா?” என்றான்.


“நீ என்னை வரச் சொல்லலை தான்...! ஆனா நான் இல்லாமப் போனாலோ நான் உனக்கு கிடைக்காமப் போனாலோ உன்னால் வாழவே முடியாது செத்துருவேன்னு என் கிட்ட நீ அடிக்கடி சொன்னேல்ல. அதை உண்மைன்னு நினைச்சு நீ சாகக் கூடாதுன்னு நான் வீட்டை விட்டு வந்தேன்” என்றாள்.


“அது... அது... லவ் பண்ணும் போது எல்லோரும் அப்படி சொல்வதைத்தானே நானும் சொன்னேன்” என்றான்.


“ஆஹா... அப்போ நான் கிடைக்காட்டி நீ சாக மாட்ட. அதனால காதலிச்ச உன்னை நம்பி நான் வீட்டை விட்டு வெளிய வந்தது தப்புன்னு சொல்றயா விமல்” என்றாள்.


“என்ன கீதா...? வீட்டை விட்டு வந்துரு நாம கல்யாணம் செய்துக்கிடலாம்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.


உன் கிட்ட பேசமுடியாம எப்படி தவிச்சுப் போய் உன் வீட்டையே சுத்தி சுத்தி வந்துருக்கேன். அப்போ வீட்டை விட்டு வரச்சொல்லி உன்கிட்ட பேச யாசிகாவை உன் வீட்டுக்கெல்லாம் அனுப்பினேன்.


அப்பவே நீ வந்திருக்கணும். வந்திருந்தா நாம சேர்ந்திருக்கலாம். ஆனால் நான் வந்து உன்னை பார்க்க முடியாத சூழலில் இருக்கிற இப்போ, வீட்டை விட்டு வெளிய வந்துருக்க. இப்போ முன் மாதிரியா! எல்லாம் மாறிருச்சு”.என்றான்.


“எல்லாம் மாறிருச்சுன்னா? எனக்குப் புரியலை, மாற்றம்னு நீ எதைச் சொல்ற விமல்?” என்றாள்.


“இவர் வீட்டில் நீ மூணு நாள் தங்கிட்ட. இனிமேல் எப்படி என்னால் உன்னையக் கல்யாணம் செய்ய முடியும்?” என்றான்.


“ஏய்... சீ...இப்படி சொல்ல உன் நாக்கு கூசலை?, இவ்வளவு சீப் மைன்ட் உனக்கு இருக்கும்ன்னு நான் யோசிக்கவே இல்லை” என்றாள்.


அவ்வளவு நேரமும் அவங்க ரெண்டு போரையும் பேசவிட்டு பார்த்துக்கொண்டிருந்த அமுதன்.


“விமல் நீங்க தப்பா பேசுறீங்க. அவளுக்கு அவங்க வீட்டில் வேற ஆள் கூட  கல்யாண ஏற்பாடு செஞ்சிட்டாங்க. அந்த ஏற்பாட்டை நிறுத்த  அவ வீட்டிலப் பேசி போராடிப் பார்த்துட்டா. ஆனா இவளால அவங்களை கன்வீனியன்ஸ் பண்ண முடியலை.


நாளைமறுநாள் கல்யாணம்’ற சூழலில் இவ உங்களுக்காக மூணு நாள் முன்னாடியே  வீட்டை விட்டு வெளிய வந்து என் வீட்டில் தங்கி உங்ககிட்ட அவ நிலையைச் சொல்லி கூட்டிட்டுப் போகச் சொன்னாள்.


அப்படிப்பட்டவளை என்கூட சேர்த்து வச்சுப் பேச உனக்கு எம்புட்டு நெஞ்சழுத்தம் இருக்கணும். நீ இப்போ சொன்ன வார்த்தையை வேற யாராவது என் முன்னாடி பேசியிருந்தா கன்னம் பழுத்திருக்கும்.


நீ என்னோட கேரக்டரையும் லோவா கொண்டுபோகப் பார்க்குற. எனக் கண்கள் சிவப்பேற அவனின் கோபத்தை அடக்கியபடி பேசினான் அமுதன்.


“சார் நீங்க பெரிய போலீஸ் ஆபீசரா இருக்கலாம் ஆனா உங்க பேமிலி பத்தி வெளியில நல்ல பேர் இல்ல. அப்படி இருக்க உங்க வீட்டில் வந்து இவ தங்குனதுக்குப் பின்ன..”என்று சொல்லிக்கொண்டிருக்கையில் சத்தமாக


“ஸ்டாப்பிட் விமல். என்னச் சொன்ன? யாரைப் பார்த்து குடும்பம் அது இதுன்னு வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுற?


இவர் யார் தெரியுமா? எப்படி பட்டவர் தெரியுமா? என் ராஜி அத்தையைப் பற்றி அவங்க மகனை பத்தி இன்னும் ஒரு வார்த்தை என் முன்னாடி குறைச்சுப் பேசுன உன்னைய கொன்னுருவேன்.


நீ எல்லாம் இவரோட கால் தூசிக்குக் கூட பெற மாட்ட விமல். இனி நீ எனக்கு வேணாம். நீ என்னடா சொல்ற, நான் சொல்றேன் கேட்டுக்கோ. ஆமா நான் என் மாமா வீட்டுல தான் இருந்தேன். இனிமேலேயும் இருப்பேன். அதுவும் எப்படி அவர் பொண்டாட்டியா அங்கதான் வாழப்போறேன். என் கண் முன்னாடி நிக்காத போயிறு இங்கிருந்து , போயிறு விமல் “


என்று சத்தமாக அங்கிருந்த எல்லோரும் அவர்களை நோக்கி திரும்பிப் பார்க்கும் படி அமுதன் அவளை “ஏய்.. கீதா..,. மெதுவா..மெதுவா... ஏய்..” என்று அவளை அடக்க அடக்க அவனின் கையையும் அவனின் பிடியையும் உதறிக்கொண்டு விமலை பார்த்து பேய் புகுந்தவள் போல ஆத்திரத்தில் கத்தினாள்.


அமுதன் அவள் கடைசியா சொன்ன “என் மாமா வீட்டுல தான் இருந்தேன். இனிமேலேயும் இருப்பேன். அதுவும் எப்படி அவர் பொண்டாட்டியா அங்கதான் வாழப்போறேன்” போ...போ...என்று அவள் கத்தவும். பொதுயிடம் என்றும் பாராமல் அமுதன் அவளின் கன்னத்தில் பளார் என்று ஓர் அரை விட்டான்.


அதில் அவள் சத்தம் அடங்கி கன்னத்தை கைகளில் பிடித்தபடி அமுதனை விழி விரித்துப் பார்த்தாள்.


அமுதனோ கண்கள் இரண்டும் கோவத்தில் சிவந்து சத்தத்தை மட்டும் குறைத்து, வார்த்தைகளை கீதாவினை நோக்கி வீசினான்.


“கோபம் வந்தா என்ன வார்த்தை பேசனும்ற நிதானம் கிடையாதா உனக்கு. . உன் வயசு என்ன ? என் வயசு என்ன? இப்படி நீ பேசி அவன் இல்லாததை சொன்னதை நீ உண்மையா மத்தவங்க நினைக்க வைக்கிற” என்றான்.


விமல் இவர்கள் இரண்டுபேரின் வார்த்தைகளை கேட்டு “நல்லா ஆக்ட் கொடுக்குறீங்க ரெண்டுபேரும், ‘வெல்லம் திங்கிறவன் ஒருத்தன் விரல் சூப்புறவன் இன்னொருத்தனா’ என்றதும்.


“ஏய்... விமலு ஒழுங்கா போயிரு. இதுவரை நான் நீ சொல்றது போல என்  மாமாவை நினைச்சுக்கூட பார்க்கலை. ஆனா இப்போச் சொல்றேன் கேட்டுக்கோ. உனக்கு என் மாமா ஆயிரம் மடங்கு உசந்தவர். அந்த நல்ல மனசுக்காரர் கூட என்னைய நீ சேர்த்துவச்சுப் பேசியதை நான் உண்மையாக்கப் போறேன். இனி அவர் தான் என் புருஷன்” என அமுதனின் கோபத்தையும் பொருட்படுத்தாமல் கூறினாள்.


வர்கள் பேசிக்கொண்டிருந்த அதே நேரம் வ.உ.சி பூங்காவில் அமுதனின்  அம்மா ராஜேஸ்வரி, தொழிலதிபர் ஹாசிப் உசேனுக்காக காத்துக்கொண்டிருந்தார். இருவரும் நேரில் சந்தித்து கிட்டத்தட்ட இரண்டரை வருடமாகியிருந்தது.


ராஜேஸ்வரியின் வாழ்வில் நடந்த நல்ல,கெட்ட நினைவுகளின் குவியலில் ஹாசிப்பின் பங்கு நிறையவே இருக்கும். தன்னை அவரின் உறவு மீட்டெடுத்ததா? அதலபாதாலத்தில் தள்ளியதா? என்ற கேள்விக்கான விடை இரண்டுமாகவே இருந்தது.


அவரின் நினைவுகளில் மூழ்கியிருந்தவளின் முன் வந்து “ராஜீ... எப்படிம்மா இருக்க?” என்று என்றைக்கும் பிரதிபலிக்கும் அவரின் குரலில் இருக்கும் காதல், துளி கூட குன்றாது இருந்தது.


ஏனோ அவரை கண்டதும் அவள் விழிகளும் கலங்கியதை இதற்கு முன்பு எல்லாம் மறைத்து வைக்கும் ராஜேஸ்வரிக்கு ஏனோ இன்று மறைக்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை.


ஹாசிப்பிற்காக அவளின் கண்களில் இத்தனை வருடம் தான் தேடிய தேடலுக்கான விடை கண்டவருக்கு உலகையே தனது கைகளுக்குள் அடக்கிய மகிழ்வு உண்டானது.


“அழாதம்மா... அதான் நான் வந்துட்டேன்ல. அழக்கூடாது” என்று சொல்லியவர் அவளின் அருகில் அமர்ந்து தனது தோளில் ராஜேஸ்வரியின் தலையை சாய்த்தவர் அவரின் கன்னத்தில் வடிந்திருந்த கண்ணீர் துளிகளை கைகளில் துடைத்தார்.


“நீங்க எப்படி இருக்கீங்க? தளர்ந்து தெரியிறீங்க. ஹெல்த்தை கவனிச்சுக்கோங்க. என் கண் மூடும்வரை நீங்க எப்பவும் ஆரோக்கியமா இருக்கிறதை மட்டும் தான் நான் பார்க்கணும்”. என்றார்.


“உனக்காக நான் எதுவும் செய்வேன் ராஜி, என்னை பார்த்துக்க மாட்டேனா?. நீ இருக்கிற வீட்டுக்கு என்னை வரக்கூடாதுன்னு சொன்னதால் அங்க வந்து உன்னை பார்க்கிறதில்லை.. அதேபோல நீ வரச்சொல்லாம நீ இருக்கும் பக்கம் தலை வைக்கக் கூடாதுன்னு சொன்னதால் இரண்டரை வருஷமா இந்தியாவுக்கும் வரலை.


சரி அதை விடு. நான் நல்லா இருக்கேன் ராஜி. ஆமா நீ  போனதடவை பார்த்ததை விட ரொம்ப மெலிஞ்சிட்ட. உடலுக்கு எதுவும் முடியலையா? என் கிட்ட நீ எதையும் சொல்றது இல்ல. உனக்காக நான் இருக்கேன்ற எண்ணம் உனக்கு இல்லாம போயிருச்சா?.


நீ சொல்லாம உன்னை பார்க்க வரமாட்டேன்னு சொல்லி துபாய்க்கு போயிட்டேன். .இங்க  வந்தா என்னால உன்னை பார்க்காம போக முடியாதுன்ற காரணத்துக்காக இங்கிருக்க பிஸ்னஸ் எதையும் நேரில் பார்க்கக் கூட நான் வருறதில்லை.


ஒவ்வொரு தடவை நீ மொபைல்ல என் கூட பேசும் போதும் வாங்களேன்  உங்களைப் பார்க்கணும் போல இருக்குதுன்னு ஒரு வார்த்தை நீ சொல்லிட மாட்டியான்னு ஏங்குவேன்.


நீ சொல்லியிருந்தா உடனே ஓடி வந்துருப்பேன். இப்பவும் நம்ம அமுதனைப் பத்தி பேசணும்னு சொன்னதாலத்தான் நீ வாங்கன்னு சொன்ன. அந்த கோபம் எனக்குள்ள இருந்துச்சு.


ஆனா எப்ப உன் கண்ணுல என்னை பார்த்ததும் இத்தனை நாள் பிரிவுக்கான தேடலும் கண்ணீரும் பார்த்தேனோ... அத்தனை கோபமும் பட்டா பறந்து போயிடுச்சு ராஜி! ஐ...லவ் யூ ராஜி” என்றார்,


ராஜேஸ்வரி பொங்கிய கண்ணீரை துடைத்துகொண்டே “நாற்பத்தி இரண்டு வருஷத்துக்கு முன்னாடி சொன்ன அதே காதல் துளி குறையாம இன்னைக்கும் உங்க வார்த்தையில தெரியிதுங்க.


நான் இந்த வார்த்தைக்கு தகுதியானவளான்னு எனக்குத் தெரியலை. ஆனா நீங்க இல்லாட்டி நான் இல்ல. என்னோட வாழ்கையில் நம்ம மகன் அமுதனுக்கு அடுத்து என்னோட நினைவுல எப்பவும் இருக்கிறது நீங்க தான்” என்றார் ராஜி.


“இது போதும் ராஜி. இந்த ஒரு வார்த்தை போதும். என்னோட விருப்பத்துக்காக உன்னோட சூழ்நிலையை பயன்படுத்திக்கிட்டேன்ற உறுத்தல் எனக்கு இருந்துக்கிட்டே இருந்தது.


ஒரு தடவையாவது நீ என்னை மனசால் ஏத்துகிட்டேன்ற வார்த்தையை உன் வாயிலிருந்து  கேட்காமலே போயிடுவேனோன்ற பயம் என்னை தினம் தினம் கொன்னுச்சு.  இனி நான் நிம்மதியா சாவேன்”.என்றதும்


“என்ன வார்த்தை சொல்றீங்க. என் உயிர் இருக்கிறவரை இதுபோல சாவுன்ற வார்த்தையை சொல்லகூடாது” என்றார் ராஜி.


அவளின் பதட்டம் கண்ட ஹாஷிப் நிறைவான சிரிப்பை உதிர்த்தபடி எழுந்தும் ராஜியும் அன்னிச்சை செயல் போல உடன் எழுந்து அவருடன் இணைந்து நடந்து வந்தார்.


இருவரும் சேர்ந்திருக்கும் நொடிகளை மகிழ்வுடன் அமைதியாக ரசித்தபடி பூங்கா வாசலுக்கு வந்ததும் அங்கு நிறுத்தியிருந்த ஹாசிப்பின் கார் கதவை ராஜி ஏறுவதற்காக திறந்து வைத்தார் .


ராஜி ஏறி அமர்ந்ததும் கதவை மூடிவிட்டு மறுபுறம் சுற்றி வந்து டிரைவர் இருக்கையில் அமர்ந்தவர் காரை ஸ்டார்ட் செய்துகொண்டே  “அமுதன் எப்படி இருக்கான் . அவன் இருக்கான்ற தைரியத்தில் தான் நான் உங்களை விட்டு தள்ளி இருந்தாலும் நிம்மதியா இருக்கேன்.


வருஷம் ஓரு தடவை அதுவும் அவனோட பிறந்தநாளுக்கு நான் விஷ் பண்ணும் போது மட்டுமே என் கிட்ட பேசுறான். என்னை விட்டு ரெண்டுபேரும் தனியா போறதுக்கு முன்னாடி அப்பா..அப்பான்னு எவ்வளவு பாசமா இருந்தான். அதுக்கு பிறகு ரொம்ப மாறிட்டான்.


கல்யாணம் செய்றதை பத்தி என்னதான் சொல்றான்.? கல்யாணத்துல அப்பா எங்கன்னு கேட்டா நான் முன்னாடி வந்து நிப்பேன்னு சொல்றேன்ல. நம்ம லைப் பத்தி விமர்சிக்கிறவங்களை இவன் ஏன் மையின்ட் பண்றான். அதை நினைச்சு இவன் வாழ்கையை தொலைச்சுகிட்டு நிக்கிறது ரொம்ப வருத்தமா இருக்கு ராஜி.


நாம நல்லா இருக்கும் போதே இவனுக்குன்னு லைப் அமைச்சுக் கொடுக்கணும்னு நினைக்கிறன். இந்த தடவை அவனை நேரில் பார்த்து அதுக்காக பேசணும்.


அதோட மினிஸ்டர் ரெங்கராஜன் என்கிட்ட போன் செய்து ஒரு விஷயம் சொன்னார். அதிலிருந்து அமுதனை நினச்சா எனக்கு கவலையா இருக்கு” என்றார்.

“என்ன விஷயங்க?” என்று கேள்வி கேட்ட ராஜியிடம்.


அவன் இப்போ எடுத்து நோண்டிகிட்டு இருக்கிற கனிஹான்ற பொண்ணோட மர்டர் கேஸ்ல இருந்து அவனை விலகிக்கிடச் சொல்றார். முக்கியமான அரசியல் தலைகள் பிஸ்னஸ் பீப்பில்ஸ்  எல்லோரும் அதில் சம்பந்தப்பட்டிருக்காங்கலாம்.


குளோஸ் பண்ணிய அந்த கனிஹா பைலை திறம்ப இவன் எடுத்து நோண்டுனா அவனோட உயிருக்கே பெரிய ஆபத்து வரும் ஒதுங்கிக்கிடச் சொல்லுங்கன்னு என்கிட்ட  சொல்லச் சொன்னாங்க” என்றார்.


அவர் அவ்வாரு  சொன்னதும் “இல்லங்க என்னால அவனோட டிப்பார்ட்மென்ட் விஷயத்தில் தலையிட முடியாதுங்க. எப்படி உங்க பிஸ்னஸ் உங்களோட மற்றொரு வாழ்க்கை இதெல்லாம் பத்தி நான் கேட்கிறது இல்லையோ. அதே போல அவனின் உத்தியோகம் சம்பந்தமான எதிலேயும் நான் தலையிடுறதில்லை”. என்றார் ராஜி.

                      ---தொடரும்---

                                                                                             Episode 2

3 comments:

  1. அருமை அருமை அம்மா ♥️♥️♥️♥️♥️♥️

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் ப்பா. மிக்க மகிழ்ச்சி♥☺

      Delete

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib