இனிக்கும் விஷம்
(தீபாஸ்)
07 அவனை சந்தித்து தேன்மொழியினை பற்றி விசாரித்தல்
இரவு முழுவதும் அசதியில் கண்கள் இரண்டும் மூடி இருந்தாலும் கனி மொழியால் தூங்க முடியவில்லை.
அவளின் தூக்கத்தில் யாரோ அவளை துரத்துகிறார்கள். பயந்து ஓடுபவள் ஒருவரின் மீது மோதி நிற்கிறாள். காப்பாத்துங்க, பிளீஸ் காப்பாத்துங்க என்று கதறியபடி அவனின் முகம் பார்த்தால் அது கோரமான முகமாக இருக்கிறது.
அவனின் கையை கடித்துவிட்டு தப்பிக்கும் அவளை வேறு ஒருவன் துரத்தி வருகிறான். அவன் யாரென ஓடிக்கொண்டே திரும்பி பார்த்தா, அந்த டிரைவர் செபாஸ்டின், அவனின் கையில் துப்பாக்கி உள்ளது, அவன் தன்னை குறிபார்த்து சுடப்பார்கிறான்.
பயத்தில் வீலென கத்தியபடி எழுந்தவளுக்கு வியர்த்து கொட்டியது, சரியான தூக்கமின்மையால் கண்கள் இரண்டும் செவ்வண்ணம் பூசியிருந்தது, நேரத்தை பார்த்தால் விடிகாலை மணி 5 எனக் காட்டியது.
இனி தூக்கம் வராது எனப் புரிந்தவள் ரிஷிவர்மன் தன்னை தேடி காலையிலேயே வந்துவிடுவான் என்று சொல்லியது நினைவில் நின்றது.
மனதிற்குள் ஒரு வேளை அந்த ரிஷி வர்மனும் கெட்டவனாக இருந்தால்? என்ற கேள்வி எழுந்தது.
சே...ச்சே... இருக்காது அப்படி இருந்தால் தேன்மொழி அவனோடு கல்யாணம் வரை வர நினைத்திருக்க மாட்டாள்.
அக்ஸரா என்னை ரூமில் தேடிப் பார்த்து காணோமென்றதும். என் மொபைலில் தொடர்பு கொள்ள முயன்ற போது. நான் அவளின் அழைப்பை எடுக்கவில்லை. அதனால் ரிஷிவர்மனை வச்சு என்னைய பிடிக்க இப்படி பொய்யா என்கிட்டே யாரையோ ரிஷி மாதிரி பேச வச்சிருப்பாளோ? என்ற எண்ணம் எழுந்தது.
ம்...கூம் அன்றைக்கு ஒரு தடவை நான் தேன்மொழிக்கு போன் பண்ணியபோது மொபைலை அட்டன் பண்ணி பேசிய ரிஷியின் அதே பட படவெனப் பேசிய குரலே தான் இதுவும்.வேறு ஆளோட வாய்ஸாக இருக்காது.
அந்த வாய்ஸ் கொஞ்சம் யுனிக்கா கம்பீரமா அதே நேரம் வேகமா இருந்தது. நான் கேட்டது அதே ரிஷியின் குரல்தான். என தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.
இனி தூங்க முடியாது என்று எண்ணியவள் அறையினை மின்விளக்கால் ஒளிரூட்டினாள். அங்கிருந்த அந்த ஆளுயர டிரஷிங் டேபிள் கண்ணாடியில் தெறிந்த அவளின் உருவம் கண்டவள் ஒரே நாளில் எதோ பஞ்சத்தில் அடிபட்டவள் போன்று தான் இருப்பதைக் கண்டாள்.
மேலும் மண்ணில் படுத்து தவழ்ந்து வந்ததில் அவளின் உடையின் முன் பகுதி முழுவதும் மிகவும் அழுக்காகியிருந்தது அவளின் தலை முடி பம்பை பரட்டையாக காட்சி தந்தது.
இந்த தோற்றத்தை ரிஷப்சனில் இருந்தவங்க சரியா பார்க்கலை போல நல்லா பார்த்து இருந்தா எனக்கு ரூம் கொடுக்க யோசிச்சிருப்பாங்க. முதலில் கொஞ்சம் ரெப்ரஷ் ஆக்கணும்
என நினைத்து தான் உடுத்தி இருந்த உடையை களைந்து அதை சல்லென்று உதறிப் பார்த்தாள் ஆனால் அவ்வுதரலால் பெரிதாக அழுக்கு இல்லாமல் செய்ய முடியவில்லை.
பாத்ரூமிற்குள் போனவள் ஹீட்டரை திறந்துவிட்டு வெது வெதுப்பான நீரில் தலைக்கு முழுகி அங்கிருந்த பாத் டவலில் தனது உடம்பை சுற்றிக்கொண்டவள் வெளியில் வந்து ஆண்கள் போன்று வெட்டியிருந்த முடியை எளிதாக உலர்த்தி கையினாலேயே வாரி விட்டு ஒழுங்கு படித்திக்கொண்டாள்.
மணி இன்னும் ஆறுகூட தாண்டாத நிலையில் காபி எதுவும் ஆர்டர் பண்ணுவோமா என்று எண்ணியவள் தனது கை இருப்பை ஆராய்ந்து பார்த்தவள் சொற்பமாக இருப்பதைக் கண்டு, வேணாம், காபி கூட இங்க ரொம்ப காஷ்லியா தான் இருக்கும். ரிஷி வந்தால் அவனின் செலவில் காலை சாப்பாட்டை முடித்துக்கொள்வோம்.
இங்கிருந்து ஊருக்கு கிளம்ப எனக்கு டிக்கெட் எடுக்க அதுகூட அவசர செலவுக்கென கொஞ்சப் பணம் இருப்பது அவசியமென நினைத்தவள் படுக்கையில் குப்பற படுத்துக்கொண்டாள் நேற்றிலிருந்து சாப்பிடாததால் தலைவலிக்க ஆரம்பித்தது.
கண்களை இருக்க மூடி கொஞ்சம் தூங்கினால் இவ்வலி சிறிதாவது மட்டுப்படுமென நினைத்தவள் . ஆயிரத்தில் இருந்து பின்னோக்கி நம்பர்களை மனதிற்குள் சொல்ல ஆரம்பித்தாள்.
அவளுக்கு தூக்கம் வராத வேளைகளில் இதுபோல யுத்திகளை உபயோகிப்பாள். சரியாக பூஜ்யம் வருவதற்குள் அவள் உறங்கி விடுவாள். அந்த டெக்னிக் இன்றும் அவளுக்கு கைகொடுத்தது ,ஆனாலும்....
தூகத்திற்குள் ஆழ்ந்து செல்லும் முன்னே அவளின் மொபைலில் தொடர்ந்து வந்த அழைப்பொலி அவளை எழுப்பிவிட்டது. முதல் இருமுறை அந்த ரிங்டோன் எதுவோ கிணற்றுக்குள் இருந்து அழைக்கும் அபாய ஒலிபோல கேட்டது.
மூன்றாம் முறை ஒலித்தபிறகே, ஐயோ அது தனது மொபைல் ரிங்க்டோன் என நினைத்து வேகமாகா எழுந்தவள் டிஸ்பிலேயை பார்த்ததும் அழைத்தது ரிஷி எனக் காட்டியதும், வேகமாக அட்டன் பண்ணி “ஹலோ...” என்றவளிடம்.
“ஹப்பாடா ஒரு வழியா மொபைல் அட்டன் பண்ணிட்டீங்க, ரெண்டு மூணு முறை காலிங் பெல் அழுத்தினேன். மூணு தடவை கால் பண்ணி பார்த்தேன். நீங்க டோர் திறக்கலை, அதனால ரூமில் இல்லபோலன்னு நினைச்சு திரும்பி போக நினச்சேன்”
“அச்சோ..., இருங்க இதோ வரேன். கொஞ்சம் கண் அசந்துட்டேன் எனச்சொல்லிக்கொண்டே தான் கலட்டிப்போட்டிருந்த உடையை அவசர அவசரமாக உடுத்திக்கொண்டு வந்து கதவை திறந்தாள் கனிமொழி .
திறந்ததும் கனி மொழியை பார்த்தவன் “என்ன ஆச்சு உங்க டிரஸ்க்கு?” எனக் கேட்டான் . அவளின் புழுதி தோய்ந்த உடையை கண்டு.
“உள்ள வாங்க சொல்றேன்” எனச் சொல்லிக்கொண்டே அவன் வர வழிவிட்டு கதவை அடைத்துவிட்டு உள்ளே வந்தவள்.
“உட்காருங்க” என்று கட்டிலை காண்பித்தவள் டிரஷிங் டேபிளின் முன்னிருந்த ஸ்டூலை எடுத்து அவனுக்கு எதிரே போட்டு உட்கார்ந்துகொண்டு
“நான் அக்ஸராவோட புது பங்களாவில் இருந்து தப்பிச்சு வந்ததோட அடையாலம் தான் இது” எனதனது ஆடையை சுட்டிக்காட்டினாள்.
மும்பை வந்து இறங்கியதும் அக்ஸராவின் டிரைவர் தன்னை புதிதாக வேறு ஒரு பங்களாவிற்கு அழைத்துக்கொண்டு போனது முதல் அங்கு குடிக்க கொடுத்த தண்ணீரில் மயக்க மருந்து கலந்துள்ளதோ என்ற ஐயப்பாட்டில் குடிக்காமல் சமாளித்து, இருட்டில் தவழ்ந்தே வந்து கதைவை திறந்து வெளிவந்ததுவரை அனைத்தையும் சொல்லி முடித்தாள்.
அவள் சொன்னதை கேட்ட ரிஷி “குட், நல்லவேளை நீங்க சந்தேகப்பட்டு அந்த தண்ணீரை குடிக்காமல் விட்டீங்க. அது போலத்தான் தேன் மொழி என்கூட இருக்கிறதை பார்த்து நான் இல்லாதப்போ வலுக்கட்டாயமா அக்ஸரா அவளை தன்னோடு இழுத்துக்கொண்டு போய்விட்டாள்.
அங்கு இருந்தபோது தேன்மொழிக்கு எதனாலோ அடிக்கடி மயக்கம் உண்டாகியிருக்கு. ஹாஸ்பிடல் போய் செக்செய்து பார்த்தபோது எதுவோ வைட்டமின் குறைபாடெனச் சொல்லி மாத்திரையை டாக்டர் எழுதிக்கொடுத்திருக்கார்.
அதற்கு பிறகு அவளை காலேஜ் கூட்டிக்கொண்டு போகவரவென அவளுடன் பயின்ற காலேஜ் மேட் ஒருத்தனை அவளுக்கு பாடிகார்டாக நியமித்து வேறு எங்கும் தப்பிச் செல்லவோ என்னை சந்திக்க முடியாதபடியும் சூழலை உருவாக்கி இருக்கிறாள்.
அந்த நேரம் தேன்மொழியின் உடல்நிலை நாளுக்கு நாள் வீக் ஆகிக்கொண்டே போயிருக்கு. ஒருமுறை அவள் மிகவும் உடலுக்கு முடியாமல் ஹாஸ்பிடலில் அட்மிட்டாகி இருந்தாள்.
அப்பொழுது அவளின் பிரண்டு மூலம் ஹாஸ்பிடலில் அவள் இருக்கும் விஷயத்தை தேன்மொழி எனக்குத் தெரிவித்தாள்.
மற்ற இடங்களில் பாதுகாப்பு மீறி என்னால் அவளை சந்திக்க முடியலை. தேன்மொழியின் மொபைலும் அவளிடம் இருந்து பறிச்சிட்டா அக்ஸரா. அதனால் அவளால் என்னுடனோ, உன்னுடனோ தொடர்பு கொண்டு பேச முடியலை.
தேன் மொழியின் பிரன்டு என் கம்பெனிக்கே வந்து அவள் நிலை சொல்லி அவளை பார்க்க என்னை ஹாஸ்பிடல் கூட்டிக்கொண்டு போனாள்.
போன இடத்தில் அவளின் திடீர் உடல் மெலிவு என்னை கலங்கடித்தது என்ன காரணம் என தேன்மொழியிடம் விசாரிர்த்தபோது அடிக்கடி முதலில் மயக்கம் வந்தது .டாக்டரிடம் காட்டியபோது வைட்டமின் பற்றாக்குறை என்று டேப்லெட் கொடுத்தாங்க.அதற்கு பிறகு உடல் நிலை ஏனோ தெரியவில்லை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி கொண்டே போகிறது
அதோடு தலைவலி என்னை பாடாய் படுத்துகிறது என்னால் எதையும் யோசிக்க முடியலைன்னு தேன்மொழி சொன்னாள்.
எனக்கு ஏனோ அவளுக்கு வைட்டமின் பற்றாக்குறை இருந்ததாக சொன்னதை ஏற்றுகொள்ள முடியலை எந்த டாக்டர் உனக்கு டிரீட்மென்ட் கொடுத்தாங்க அதுக்கு நீ இப்போ என்ன டேப்லட் சாப்பிடுற அதை என் கிட்ட காட்டு என்று கேட்டேன்.
அவள் அப்பொழுது தங்கி இருந்த மருத்துவமனையிள் வேலை செய்யும் டாக்டர் ஒருவரின் பெயரைச்சொல்லி அவர் தான் என்னை செக்பண்ணி பார்த்தார். இதோ அவர் கொடுத்த மாத்திரை இதுதானென என்னிடம் காட்டினாள்.
அந்த டேப்லட்டை அட்டை பெயரோடு போட்டோ எடுத்து அங்கிருந்தவாறே எனது நண்பனும் மருத்துவனுமான ஷையத்துக்கு அனுப்பி, அது எந்த வகையான மாத்திரை, எந்த நோய்க்கு எடுத்துக்கொள்ளும் மருந்து எனக் கேட்டான்.
அடுத்த பத்து நிமிசத்துக்குள் டாக்டர் ஷையத் அவனின் மொபைலுக்கு கால் செய்தான். பதிலை மெசேஜாக டைப் பண்ணி சொல்லாமல் உடனே நேரடியாக தொடர்பில் நண்பன் பேச வந்ததுமே, என் கெஸ் சரிதானு புரிஞ்சது. போனை ஸ்பீகரில் போட்டு “சொல்லு ஷையத், எப்படி இருக்க?” எனக் கேட்டேன்.
“ஐ ஆம் பைன் ரிஷி. நீ இப்போ அனுப்பி இருக்கியே அது ஏ சைக்கார்ஸ்டிக் டேப்லெட் அது மூளை பாதிப்பு உள்ளவங்களுக்கு கொடுக்கும் மாத்திரை. அதாவது மெண்டல் டிசாடர் இருப்பவர்களுக்கு ரொம்ப தீவிரமான சமயம் கொடுப்பது.
நல்ல ஆரோக்கியமான ஒருத்தர் அந்த மருந்தை தொடர்ந்து சாப்பிட கொடுத்தா மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவங்கள் பிரைன் டெத் என்ற நிலைக்கு போயிடுவாங்க” என்றார்.
“அதாவது ஸ்லோ பாய்சன் போல அந்த மாத்திரைன்னு சொல்றயா ஷையத்.
"நிச்சயம் அப்படித்தான். நீ சொல்றது போல இது விட்டமின் பற்றாக்குறைக்கு கொடுக்கிற மாத்திரை இல்லை.
அதே போல இந்த மாத்திரை மெண்டல் டிசாடர் உள்ளவங்களுக்கே கூட தொடர்ந்து கொடுக்க மாட்டாங்க. முதலில் இதை யாராவது உனக்கு வேண்டியவங்க சாப்பிட்டுக்கிட்டு இருந்தா உடனே நிப்பாட்டச் சொல்லு
இந்த மாத்திரையால் அவங்களோட மூலையில் எதுவும் பாதிப்பு உண்டாகி இருக்கா என நல்ல டாக்டர் ஒருத்தரை பார்த்து டிரீட்மென்ட் எடுக்கச்சொல்லு.”
எனச் சொல்லி தனக்கு இப்பொழுது முக்கியமான ஒரு வேலை வந்துவிட்டதால் பிறகு பேசுகிறேன் என மொபைல் இணைப்பை ஷையத் துண்டித்து விட்டார்.
ரிஷி ஸ்பீக்கரில் போட்டிருந்ததால் டாக்டர் ஷையத் சொன்னதை தேன்மொழியும் அவளின் தோழியும் கேட்டுவிட்டு மிகவும் அதிர்ந்து போனார்கள்.
மருத்துவமணையில் இருந்த தேன்மொழி நிர்வாகத்திடம் அவள் வெளியேறுவதை இன்பார்ம் கொடுக்காமல் ரிஷியோடு அவசர அவசரமாக நர்சோ மற்றவர்களோ பார்பதற்குள் வெளியேற நினைத்து துப்பட்டாவால் முஸ்லீம் பெண்களை போல தனது முகம் முழுவதையும் சுற்றி கவர் செய்துகொண்டு குனிந்தபடி வெளியேறி என்னுடன் காரில் தப்பித்து என் வீட்டிற்கே மறுபடியும் வந்துவிட்டாள்.
அதன் பின்பு நான் அவளை இரண்டு மூன்று டாக்டரிடம் காண்பித்தேன். நல்லவேளை அவள் நல்ல ஆரோக்கியமான உடல் நிலையில் இருந்ததால் அந்த மாத்திரையின் பாதிப்பில் இருந்து வெளியேற டிரீட்மென்ட் கொடுத்தால் விரைவில் அவள் குணமாக எல்லா சாத்தியக்கூறும் இருந்ததால் அவள் உடல் கொஞ்சம் கொஞ்சமாக ரெக்கவரானாலும் இன்னும் முற்றிலும் அந்த மாத்திரையின் பாதிப்பில் இருந்து வெளியே வரவில்லை.
நானும் தேன் மொழியும் அவளது உடல் நிலை சரியாகும் வரை கல்யாணம் செய்ய வேண்டாமென முடிவெடுத்தோம். அதனால் முதலில் என்கேஜ்மென்ட் மட்டும் செய்துகொள்வோம் என முடிவெடுத்தோம்.
அப்போ எங்க ரெண்டு பேருக்குமே ஒரு டவுட் வந்தது , நல்ல உடல்நிலையில் இருந்த அவ எதுக்கு அந்த டேப்லெட் சாப்பிடும் முன்பு அடிகடி மயக்கம் போட்டாலென டவுட் வந்தது.
அப்போ தேன்மொழி ஒரு விஷயம் சொன்னால் உனக்கு ஒரு தடவை குடிக்கும் ஜூஸில் எதையோ கலந்து உன்னை மயக்கம் போட வைத்து ரீகேபிடேட் சென்டரில் அடைத்து உன்னை பயம் காட்டினாலாமே அந்த அக்ஸரா!
ஒரு வேளை தான் சாப்பிடும் உணவில் அதே போல மயக்கம் உண்டாக்க எதையேனும் கலந்து கொடுத்து இருக்கலாம் என்ற புரிதல் வந்தது” என்றான்.
ரிஷி சொன்னதை கேட்டு அதிர்ந்த கனிமொழி “நல்லவேளை எப்படியோ உண்மை தெரிஞ்சு நீங்க தேன் மொழியை காபாத்திட்டீங்க. இல்லைன்னா தேனின் நிலைமையை நினைக்கவே பயமாயிருக்கு.
ஆமா ரிஷி உங்களோடு தேன் வந்ததுக்கு பிறகு அக்ஸராவால் எதுவும் தொந்தரவு வரலையா?
“வந்தது, ஆனா அவளுக்கு தப்பான டிரீட்மென்ட் கொடுத்ததுக்கான அத்தனை ஆதாரத்தையும் திரட்டி காட்டி நான் மிரட்டியதும் அந்த அக்ஸ்ரா விட்டுட்டா.
ஆனா நாங்க ரெண்டுபேரும் கல்யாணம், செய்யப்போரோமென்ற விஷயம் தெரிஞ்சு எங்களோடு மறுபடியும் பேச வந்தா. நாங்க ரெண்டு பெரும் கல்யாணம் செய்யக்கூடாதுன்னு மிரட்டினா” என்றான்.
“ஏன்...? நீங்க கல்யாணம் பண்றதால அவகளுக்கு என்ன பாதிப்பு? என்று கேட்டதும்.
எல்லாம் தேன்மொழியின் பேரில் டம்மி கம்பெனி ஆரம்பித்து கொஞ்ச மாதங்கள் முன்னாடி அக்ஸ்ரா நூத்துக்கணக்கான கோடி ரூபாய்க்கு பினாமியா ஆக்கியிருந்தா.
தேன்மொழி அவளை பிரிஞ்சு என்கூட சேர்ந்தா, அவள் மட்டும் கைவிட்டு போகப்போறது இல்லையே அவளோடு சேர்த்து அந்த பணமும்மில்ல அக்ஸராவின் கை விட்டுப் போயிடும்” என்றான்.
“என்னது டம்மி கம்பெனி, அதோட ஷேர் அப்படிலாம் சொல்றீங்க! தெளிவா சொல்லுங்க ரிஷி.”
“அக்ஸராவோட ஹஸ்பென்ட் யார் தெரியும்ல உலகளவில் பேர் சொல்லக்கூடிய அந்த சேனலின் சி.இ.ஓ ஹிரித்திக்வர்மா. அந்த ஹிரித்திக்கும் அக்ஸராவும் சேர்ந்து கல்யாணம் பண்ண காரணமாக இணைந்த அந்த புது சேனல் தான் காரணம் உங்களுக்கு நினைவு இருக்கா?
கடந்த ஒரு வருஷம் முன்னாடி அந்த கம்பெனியை வெளிநாட்டு நிறுவனத்துக்கு விற்றதன் மூலம் அவங்களுக்கு கிடைத்த அந்நிய பணம் எவ்வளவு தெரியுமா? தொள்ளாயிரம் கோடி...!
ஆனா கவர்மென்ட் கணக்கில் காண்பித்தது வெறும் தொண்ணூறு கோடி மட்டுமே. அந்த கணக்கில்ல் காட்டாத பணத்தை டம்மி கம்பெனி தேன்மொழி பேரில் ஆரம்பிச்சு மூணு நாலு தவணையா அவள் பேரில் இன்வெஸ்ட் பண்ணி இருக்கா அக்ஸரா .
என்னது
தொள்ளாயிரம் கோடியா...!
ஆமா அந்த அமெளன்டை ஹவாலா மூலம் கைப்பற்றியிருக்காங்க. அந்த பணத்தை புருசனும் பொண்டாட்டியும் பாதியா பிரிச்சுக்கிட்டாங்க.
சமீபத்தில் இந்தியன் பிஸ்னஸ் மேகசீனில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் பெண் தொழிலதிபர்களின் வரிசையில் எட்டாவது இடத்தை இந்தியாவைச் சேர்ந்த அக்ஸரா இடம்பிடித்ததாக வந்திருந்ததே பார்த்திருப்பேல்ல
அது எப்படி? இந்த பணத்தை வச்சு அவங்க தனிப்பட்ட முறையில் ஆரம்பிக்க திட்டமிட்டு பில்ட் பண்ணிட்டு இருக்காங்களே அந்த புதிய சேனல் அதுக்கான பண்ட் எல்லாம் அக்ஸராவுக்கு இதன் மூலமாத்தான் கிடைச்சது” என்றான்.
“ஆனா அக்ஸரா பேரில் அந்த பணத்தை இன்வெஸ்ட் பண்ணாம ஏன் தேன்மொழி பேரில் இன்வச்மென்ட் பண்ணியிருக்கா.?”
“அவ தேன்மொழி பேரில் டம்மி கம்பெனி ஆரம்பிச்சு அதில் தான் அந்த பணத்தை இன்வெஸ்ட் பண்ணியிருக்கா. பணம் அந்த கம்பெனி பேரில் இருக்கும். ஆனா அதோட ஓனர் தேன்மொழியா இருந்தாலும் அது போல ஒரு கம்பெனி உண்மையாவே கிடையாது.
தேன்மொழி கையெழுத்து போட ஸ்டாம்பு அந்த பணத்துக்காக, அம்புட்டுத்தான்.
தேன்மொழின்ற ஸ்டாம்பு அக்ஸ்ரா கைவசம் இருக்கும்னு நம்பி இத்தனையும் பண்ணியிருக்கா ஆனா இடையில் தேன்மொழி என்னோடு சேர்ந்ததும் அந்த பணம் அவள் கைவிட்டு போயிடும்ற பயம் அவளுக்கு வந்திருச்சு.
எப்படியாவது தேன்மொழியை அவள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கணும்னு நினைச்சு என்னென்னமோ பண்ணினா. ஆனா எல்லாம் முறியடிச்சிட்டோம்.
நான் கூட அந்த பணத்தை மொத்தமா அக்ஸரா பேருக்கு மாத்தி கொடுத்துடலாமா தேனு, அப்படி கொடுக்காட்டி அவ நம்மளை நிம்மதியா வாழ விடமாட்டான்னு சொன்னேன்.
தேன்மொழியோ என் மேலக்கோபப்பட்டா. ஏன்னா நானும் தேன்மொழியும் பழக ஆரம்பிச்சதே எங்க ரெண்டுபேரோட பொதுவான எதிரி அக்ஸரான்னு தெரிஞ்சதாலத்தான் என்றான்.
என்னது அக்ஸரா உங்களுக்கும் எதிரியா?
ஆமா இந்த உலகத்தில் நான் வெறுக்கும் பழிவாங்க துடிக்கும் முதல் ஆளு அவதான்.
நாங்க காதல் பண்றதுக்கு முன்னாடி எங்க ரெண்டுபேரோட பொது எதிரியான அக்ஸராவை ஏதாவது செய்து வெளியில் அவளோட சுயரூபத்தைக் காட்டி மாட்டிவிட்டு பழி வாங்கணும் என்ற நினைப்பில் தான் நானும் தேன் மொழியும் கூட்டு சேர்ந்தோம் என்றான் ரிஷி .
---தொடரும்---

No comments:
Post a Comment