anti - piracy

Post Page Advertisement [Top]


         மீரா தாத்தா வயசு 16 (ஆதன்-னின்)   
                                     அடாவடி - 01
                                              

அறிமுகப்படலம்!

வழக்கமாக கதையின் ஆரம்பத்தில் கதாபாத்திரங்களின் உருவ அமைப்பு, குணவியல்புகளை விவரிப்பது சம்பிரதாயம் மட்டுமின்றி வாசகர்களுக்கு கதாபாத்திரங்களை மனதில் பதிய வைப்பதற்கான வழிமுறையாகும்!

ஆனால் இந்தக் கதையில் முதலில் நாம் கதை எப்படிப்பட்டது என்றும், மீரா என்ற பெயருக்கான காரணத்தையும்தான் முதலில் பார்க்க போகிறோம். அடுத்து இந்தக் கதையின் ஆசிரியனாக முக்கியமான ஒன்றை வாசகர்களுக்கு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

என்னவென்றால் இக்கதையின் கதாபாத்திரங்களின் உரையாடல்கள் பேச்சு வழக்கில்தான் இருக்கும். அடுத்து இக்கதையின் ஆசிரியனான நானும் எளிமையான சொற்களில் பேச்சு வழக்கில்தான் கதையில் பேசுவேன். இதை வைத்து நாவலுக்கான உரைநடையில் எழுத்துநடை இல்லாமல் இருக்கிறதே, இவனுக்கு எழுத வாராதோ என்று நினைத்துவிட வேண்டாம். இதுவரையில் நீங்கள் படித்துக்கொண்டிருப்பது உரைநடையில் எழுதப்பட்டதைத்தான். சரி வாங்க மெல்லமா தலைப்புக்கான பெயர்க்காரணத்தை பார்ப்போம் எளிய பேச்சு வழக்கில்!

மீரா தாத்தா வயசு 16 இந்த பேருக்கான விளக்கம் பெருசா ஒன்னுமில்லங்க சாதாரணமானதுதான். பெருசும் சிறுசும் இல்லாத அளவா முறுக்கின மீசைக்கார இராசப்பன் தாத்தாதான் இந்த கதையின் ஹீரோ! ஹீரோனு சொன்னாதான் அந்தாளு ஏத்துக்குவாப்ல அதான். மனசுல அப்படிதான் அந்த ஆளுக்கு நினைப்பும்! மீசைக்கார இராசப்பன சுருக்கிதான் மீரானு கதை நடக்கபோற குறவன்பட்டி ஊருக்குள்ள சிறுசுல இருந்து பெருசுங்க வரை, அன்பாவோ, வம்பாவோ, பொறாமையாவோ கூப்பிடுங்க!

அதுசரி அதென்ன வயசு 16 அப்படினு கேட்கறிங்களா புரியுது. ஆளுக்கு வயசென்னவோ 60 வதுதான். ஆனா மனசுக்குள்ள 16னுதான் நினைப்பு. தப்பித்தவறி மீரா தாத்தானு கூப்பிட்டு வைச்சிடாதிங்க மனுசன் சாகற வரை அப்புறம் உங்கக்கூட பேசமாட்டாப்ல வீம்பு புடிச்ச வம்பான ஆளு.

ஆனா உண்மையைச் சொல்லனும்னா மனுசன் மனசளவுல மட்டுமில்லைங்க உடம்பளவுலயும் 16 வயசு பையன் கணக்காத்தான் இருப்பாப்ல. பழைய மல்யுத்த ஆளு, ஐந்தரை அடியில நல்ல உருட்டுக் கட்டையான உடம்பு. இப்பவும் ஒத்தக் கையாலதான் புல்லட்ட இழுத்து சென்டர் போடுவாப்ல. முக்கியமா இந்த புல்லட்ட பத்தி சொல்லியே ஆகனும்….. மனுசன் உடம்பு ஏதும் சரியில்லாம படுத்து குளிக்காமக் கொள்ளாம இருந்தாலும் இந்த பழைய புல்லட்ட தொடைக்காம இருக்க மாட்டாப்ல தெனமும்….

அப்புறம் மனுசனுக்கு தொழில்னு பாத்திங்கனா கெணறோட மூனு ஏக்கருக்கு பக்கம் தோட்டம் இருக்கு. காய்கறி மட்டும்தான் பயிரிடுவாப்ல. அதுவும் சொட்டுநீர் பாசனம்தான். கன்னா பின்னானு தண்ணிய செலவு பண்ணமாட்டாப்ல. வெளையறத கெடைக்கற வெலைக்கு சிறு வியாபாரிங்கக்கிட்ட வித்தது போகத்தான் மொத்த வியாபாரிக்கு கொடுப்பாப்ல…….  பெருசா செயற்கை உரம் அப்டினுலாம் போவ மாட்டாப்ல….. பூச்சி புழுவு வைச்சிதுனா "விடு விடு அதுங்களுக்கு மிஞ்சினததுதான்" நமக்குனு உயிரியல் பேசுவாப்ல…….

அடுத்து பலவருசமா சொந்த நெலத்துல திறந்தவெளி ஜிம் ஒன்ன வைச்சிருக்காப்ல. இலவசம்தான் காசில்ல, அதனாலதான என்னவோ ஒரு நாலைஞ்சி பயலுகளுக்கு மேல வரதில்ல!

நம்ம மீராக்கிட்ட உண்மையா, பெருந்தன்மையா யார் பேசுனாலும் பதில் வார்த்தை அவ்வளவு பாசமா, மரியாதையா வரும். எடக்கு பேசினா எடக்கு மடக்காத்தான் வரும். ஏன்டா வாயக் குடுத்தோம்னுதான் பொலம்பி போக வைச்சிருவாப்ல.

பல பெரிய அறிவான விசயங்களை அசால்ட்டா பேசற மனுசன். யோவ் மீரா இத அந்த தலைவரு சொல்லியிருக்காரு, இந்த தலைவரு சொல்லி இருக்காருனு யாராவது சொன்னா " அது என்னவோ தெரியாதுடே இது நான் சொன்னது அவ்வளவுதாம்டே"னு முடிச்சிருவாரு. உண்மையாவே நம்ம மீரா படிக்காத மேதை, இயல்பாவே பெரிய முற்போக்குவாதி. எந்த தலைவன் சொன்னதையும், படிச்சும் இந்தக் குணம் மீராவுக்கு வரல. மீராவோட இயல்பே இதுதான். மீராவே பெரிய தலைவன்தான்!

இந்தக் கதை அப்படினு எடுத்துக்கிட்டிங்கனா பெருசா ஒன்னும் இல்லங்க,
ஒரு மனிதனோட அழகான வாழ்க்கைதான் இந்தக் கதை!
இந்த மீரா அப்படி என்ன அழகான வாழ்க்கை வாழ்ந்தான், வாழறான், இதுல மனித வாழ்க்கையின் அடிப்படை என்னங்கறத இந்த சேட்டைக்கார தாத்தா மீராவின் வாழ்க்கை மூலம் பார்க்க போறம் அவ்வளவுதாங்க!

என்னடா முன்னுரையை அத்தியாயமா அதையும் அடாவடினு வைச்சிருக்கானேனு உங்களுக்கு தோணும்….. மீரா பெயர்க்காரணம் மாதிரி இதுக்கு எந்த காரணமும் இல்லைங்க!
இப்படி எழுதலாம்னு தோணுச்சு எழுதினன் அவ்வளவுதான்! சரி வாங்க மீராவின் ஒரு சேட்டையோட கதைக்குள்ள போவோம்!


"என்ன மீரா புல்லட்ட தொடச்சி தேய்ச்சியே சைக்கிளா மாத்திருவ போல?!"

"லேய் ராசப்பனு பேர சொல்லி கூப்டு இல்லனா வாடா போடானு கூடக் கூப்டு மீரானு சொல்லாதடே பொம்பள புள்ள பேரா இருக்கு!"

"பார்ரா ஊரே அப்டிதான் பல வருசமா கூப்டுது 60 வயசுல புத்தி வந்திருச்சாம்!"

யாருக்குடே 60 வயசு?! மனசுக்கும் ஒடம்புக்கும் எனக்கு பதினாறு தாம்டே! நீ இருவது வயசு ஆம்பளதான இந்தா இந்த புல்லட்ட வூட்டு உள்ள ஏத்தி நிறுத்துடே பாக்கலாம்?!!

"நான் கற்கால பொருள்லலாம் கை வைக்கறதில்ல ஆமா காலையிலயே எங்கயோ கெளம்பற போல?! என்னா பவர் பாண்டி படத்துல ராஜ்கிரண் ரேவதிய பாக்க போற மாதிரி பழைய சைட்  கூட ஏதாது சந்திப்பு போட போறியோ?!"

"ஏம்டே போன எவளும் பஸ் ஏறி என்னைய தேடிக்கிட்டு வந்தரக்கூடாதுனு பயந்துக்கெடக்கன் இவன் வேற, இப்ப சந்திரன் மவளதான் ரெண்டாந்தாரமா முடிக்கலாம்னு இருக்கன்!"

"யோவ் லொள்ளு புடிச்ச கெழவா அது என் ஆளுயா, அப்புறம் சிகரெட்ல சயனைட்ட வைச்சி உருட்டி குடுத்துருவன் பாத்துக்க!"

"காலேல தண்ணி புடிக்க, கடைக்க வரப்பனு போய் அந்த புள்ளய பாக்கறதுக்காக தவம் கெடக்கற மாதிரி ஆக்ட் வுட்டு சரிக்கட்டாம இங்க என்ன பேச்சுடே போ போ இல்லனா  நடக்கறதுக்கு நான் பொறுப்பில்லடே கொமரா!"

இந்தா பாத்திங்கள்ல இதான் மீரா……

ஆளு மாசத்துல ஒருமுறை கெளம்பி வெளிய ஒரு இடத்துக்கு போச்சுனா ரெண்டு மூனுநாள்  கழிச்சிதான் திரும்பி வரும்….. அங்க கெளம்பறதுக்குத்தான் இப்ப ரெடி ஆகிட்டு இருக்கு…. எந்த இடம், எதுக்கு போகுதுங்கறது எல்லாத்துக்கும் தெரிஞ்ச பரம இரகசியம்!

அது எப்படியா எல்லாருக்கம் தெரிஞ்சா அது இரகசியமா இருக்கும் அதுவும் பரம இரகசியமா இருக்கும்னு நீங்க கேட்கறது புரியுது.
மீராவுக்கு சிகரெட், சரக்குனு பழக்கம் இருக்கு. ஆனா அதேசமயத்துல ஆரோக்கியத்துலயும் ரொம்ப கவனமான ஆளு. இந்த தேதி வரை வீட்ல பிரிட்ஜ் கிடையாது. மனுசன் அப்பப்ப செஞ்சி அப்பயே சாப்ட்டு கழுவி வைக்கற ஆளு!

ஒரு நாளைக்கு மூனு சிகரெட், அதுவும் வெலை ஜாஸ்தியா இருக்க சிகரெட்டுதான், அதுவும் நைட்ல சரக்கு போடறப்பதான்….. பாதிய குடிச்சிட்டு கீழ போட்ரும் பெருசு….. சிகரெட்டோ சரக்கோ யார் முன்னாலயும் மீரா குடிக்காது. ஏன்னா நம்மளால யாரும் கெட்டுப்போயிட கூடாதுனு……. இப்ப கேட்டாலும் தான் வாழ்க்கையில செய்ற, செஞ்ச ஒரே தப்பு இதாம்யா அப்டினு வருத்தமா சொல்லும்!

சரக்குனா இப்ப கவர்மென்ட் விக்கற வெசம் கிடையாது மீரா குடிக்கறது, ஏற்காடு பின் மலைச்சரிவுல பழைய கூட்டாளிங்களோட சேர்ந்து, பழம், பனம் வெல்லம்னு போட்டு நொதிக்க வைச்சி காய்ச்சற சுத்தமான நாட்டுச் சாராயம்!

என்னாது சொந்தமா காய்ச்சறாங்களா?! ஏற்காடானு வாளப் பொளக்காதிங்க உண்மைதான்! நம்ம மீரா குடிக்க ஆரம்பிச்சதில் இருந்து இந்த நாட்டுச் சாராயம்தான் இன்னிய தேதி வரை. மீரா ஏற்காட்டு அடிவாரம் அந்தப்பக்கம் குறவன்பட்டிங்கற ஊர்லதான் பொறந்து வாழுது!

மாசத்துக்கு ஒருமுறை போய் ஊற வைச்ச பழ நொதியை காய்ச்சி தன் தேவைக்கு கடத்திக்கிட்டு வந்திரும்! இது எல்லாருக்கும் தெரியும். அதனாலதான் எல்லாருக்கும் தெரிஞ்ச பரம இரகசியம். இதல இரகசியம் என்னனா கொண்டுவர சாராயத்த எங்க வைச்சிருக்குனு யாருக்கும் தெரியாது. ஒருமுறை ஊருக்குள்ள ஆகாதவனுங்க போலீஸ்ல போட்டுக்குடுத்து, போலீஸ் வந்து தேடோ தேடுனு தேடியும் ஒன்னும் கெடைக்கல…. அப்புறம் அவங்க நம்ம மீரா கேரக்டர்ல இம்பரஸ் ஆகி ப்ரன்ட்டா ஆன பின்னால ஒரு லிட்டர் நாட்டுச் சாராயத்த இன்ஸ்க்கு குடுத்துச்சி மீரா…..

இப்ப வண்டி கிளம்புச்சுனா மீரா திரும்பி வர மூனு நாள் ஆகிடும்….. மீரா போய் சாராயத்த வாங்கிட்டு வரட்டும்…. இந்த கேப்ல அடுத்த அடாவடியில நாம மீராவோட குடும்பத்த பத்தியும், மீராவோட பிளாஷ்பேக்கையும் பார்ப்போம்!

                             சேட்டை தொடரும்! Episode 02

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib