மீரா தாத்தா வயசு 16 (ஆதன்-னின்)
அடாவடி - 02
பிளாஷ்பேக்!
குறவன்பட்டியில நம்ம மீரா பொறக்கறப்ப
குறவன்பட்டி இயற்கை கொஞ்சும் கிராமம். அப்பா அம்மா விவசாயிங்கதான் இப்ப இருக்க
மூனு ஏக்கரா அளவு நிலம்தான் அப்பவும்.!
பள்ளிக்கூட பக்கம் எட்டிக்கூட
பார்த்ததில்லை நம்ம மீரா. ஆனா பெருசுக்கு தமிழ்ல எழுதப் படிக்கத் தெரியும்.
எதையாவது கண்ணு வைச்சுதுனா அதைச் செய்யாம விடாது.
12, 13 வயசுல சிலம்பம், கபடினு கவனம் திரும்ப அப்படியே
உடற்பயிற்சி, குஸ்தினு மீரா வெரைட்டி காட்ட
ஆரம்பிச்சிடுச்சி. மாநிறம், நல்ல உடற்கட்டுனு 18 வயசுல ஆளு
குறவன்பட்டி தாண்டி சுத்துபட்டுலயும் ஹீரோ ரேன்ஞ்ல வலம்வர ஆரம்பிச்சிட்டாப்ல….
வீட்டுக்கு ஒரே பையன் வேற, நல்லா வெளையாண்டு, தின்னு ஊட்டமா வளரதுல மீராவ
பெத்தவங்களுக்கு பெருமை, பூரிப்பு. மீரா தன்னோட 18 வயசிலிருந்து
23 வரை பொலிக்காளையா திமிறிக்கிட்டு சுத்தினதுக்கு பெத்தவங்க பட்ட பெருமையும்
பூரிப்பும்தான் முக்கியக் காரணம்!
உள்ளூர் , சுத்தபட்டு ஊர் மட்டுமில்லாம குஸ்தி போட்டியில கலந்துக்க போற ஊர்வரை
மீராவுக்கு எக்கச்சக்க கேர்ள்பிரன்ட்ஸ். கவிதை எழுதத்தெரியாத கண்ணதாசன் நம்ம மீரா…..
நல்ல சோறு, உடல் பயிற்சி, குஸ்தி பயிற்சி, பொம்பள சோக்கு இதான் மீராவோட இஷ்ட வேலைகள். மீராவோட பழைய
கேர்ள்பிரன்ஸ்ல பலபேர் உள்ளூர், சுத்துபட்டுலதான் இருக்காங்க. மனுசன்
மறந்தும் கூட ரெண்டு வார்த்தைக்கு மேல பேசமாட்டாப்ல….. அவங்களுக்குலாம் மீரா தன்னோட இளமைக்கால பொக்கிசமான நினைவுகள். மீராவை
வெறுத்த பொம்பளைனு ஒருத்தரும் கிடையாது. இந்தாளோட பேச்சு, நடத்தை அவ்வளவு நியாயமா இருக்கும் பழகறவங்கக்கிட்ட!
இப்படி அடங்காத காளையா சுத்தி அலைஞ்ச
மீராவுக்கு தண்ணி இறைக்கற கரன்ட் மோட்டார் பெத்தவங்கள பறிச்சி செக் வச்சது. மீரா
தன் வாழ்க்கையில முதலும் கடைசியுமா அழுதது அன்னைக்குத்தான். மீராவுக்கு வாழ்க்கைனா
என்னனு கொஞ்சம் கொஞ்சமா அப்பதான் புரியவே ஆரம்பிச்சது. மனுசங்கள்ல யார் யார்
நம்மமேல அக்கறையா இருக்காங்க? யார் தேவைக்காக பழகறாங்க? யார் பொறாமையில இருக்காங்க இப்படி எல்லாமே புரிஞ்சது. மீராவ
பொறாமையால எதிரியா நினைச்சது 99% ஆம்பளைங்கதான்! எல்லாம் மீராவோட உருவம், குணம் இதால வந்த வெனை!
தானே ஆக்கி, தொவைச்சி, காட்ட பார்த்து தனிமை வெறுமைனு மீரா
வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கப்பதான் செல்லாயி உருவத்துல வாழ்க்கையில அன்பு,
காதலுங்கற விசயங்கள் மீரா வாழ்க்கையில உள்ள வர ஆரம்பிச்சது.
செல்லாயி இந்த கேடுக்கெட்ட மனுசங்க
உருவாக்கிய சாதிய ஏற்றத்தாழ்வுகளால தாழ்த்தப்பட்ட வகுப்பாய் பார்க்கப்பட்ட
சாதியைச் சேர்ந்தவ……. நாலரை அடிக்கு கொஞ்சம் அதிகமா உயரம்,
மாநிறமா இருந்தாலும் தோல்ல இருந்த வனவனப்பு வெளிச்சம் காட்டும்
உடம்பு அவளுக்கு. அதிராத பேச்சு, அதிர்ந்த சிரிப்புனு அவ யார்
கண்ணுக்கும் மத்த பொண்ணுங்க மத்தியில தனியா தெரியற இரகம்!
மீராவோட காட்டுல நெல் நடவு வேலைக்கு
வந்த பொம்பளைங்கள்ல செல்லாயும் ஒருத்தி. நெல் நடவு ஆரம்பிச்சி, நெல் அறுத்து கதிரடிக்கறதுக்குள்ள மீராவும் செல்லாயும் நெருங்கி
இருந்தார்கள். தன்னோட அழகுப் பத்தியான கர்வம் இல்லாம மீரா பழகுன முதல் பொண்ணுனா
அது செல்லாயிதான்.
ஒரு சுபயோக சுபதினத்தில் மீரா நாட்டுச்
சாராயத்தின் ஒதவியோட தேவையான போதையில இருக்கப்ப, மீரோவோட சைக்கிள் செல்லாயி ஊருக்கு கிளம்பியது.
செல்லாயி அப்பன், அம்மா, அண்ணன்னு குடிசையில இருக்க உள்ள போன
மீரா, இந்தந்த மாதிரி செல்லாயிக்கும்
தனக்கும் பழக்கம், தான் இன்னார் இன்னார்னு எல்லாத்தையும்
சொல்லிட்டு கல்யாணத்துக்கு சம்மதம்னா சொல்லி அனுப்புங்கனு வீட்டுக்கு வந்து
மல்லாந்து தூங்கிட்டாப்ல. ஆனா காலையில எந்திரிச்சப்பறம் ஐயோ போதையில போய்
உளறிட்டமோனு மீரா நெனைக்கல, தகவல் வருமா வராதானுதான்
கவலைப்பட்டாப்ல!
ஒரு மாசமாகியும் தகவல் வரல, பொறுத்து பார்த்து பொறுமையிழந்த மீரா முதல்ல செஞ்சது கல்யாணத்துக்கு
தேவையான சில சாமான்களை வாங்கினதுதான். சில ஆளுங்க மூலமா செல்லாயி பத்தி விசாரிக்க
பக்கத்து ஊரு காட்டு வேலையில இருக்கறதா தகவல் வர, மீரா சைக்கிள் நேரா பக்கத்து ஊருக்கு கிளம்பியது……
சைக்கிள்ல கதாநாயகன் கம்பீரமா வரத,
ரோட்டோர வயல்ல இருந்த செல்லாயி பார்த்துட்டா, ஆனா ஒரு பக்கம் பதட்டம், ஒரு
பக்கம் பரவசம் என்ன பண்றதுனு புரியாம மீராவ பாத்தப்படி நின்னா செல்லாயி…..
சைக்கிள்ல இருந்து இறங்காம செல்லாயிய
பாத்து வா னு மீரா கையால கூப்ட, செல்லாயி மறுபேச்சில்லாம மண்
ஒட்டியிருந்த கை காலோட. ரொம்ப சுமாரான துணியோட வந்து மீரா முன்னால நிக்க, சைக்கிள்ல ஏறச்சொன்ன மீரா நேரா அடிவார முருகன் கோயிலுக்கு போய்
தாலியக் கட்டி, அடிவாரத்துல இருந்த தன்னோட பழைய
கேர்ள்பிரன்ட் வீட்டுக்கு கூட்டிட்டு போய் நிறுத்தினார் மீரா ……
" நங்கைமா ஒரு சின்ன ஒதவி
வேணும்" னு ரொம்ப பவ்யமா மீரா கேட்க நங்கைக்கே ஆச்சரியமா இருந்துச்சி இது
இராசப்பதானானு!
" முதல்ல உள்ள வா ராசு ஏதோ
கடங்காரன் மாதிரி வெளிய நின்னுக்கிட்டு"னு நங்கை ரெண்டு பேரையும்
வீட்டுக்குள்ள கூட்டிக்கிட்டு போக, செல்லாயி சைக்கிள்ல ஏறுனதுல இருந்து
இதுவரை ஒரு வார்த்தைக்கூட பேசல!
நடந்த விவரங்களைலாம் மீரா நங்கைக்கிட்ட
சொல்ல, நங்கை பொறாமையா செல்லாய பார்த்தாள்.
" நங்கை இந்த பையில அவளுக்கு
எனக்கு துணிமணி, பூ, மாலைனு இருக்கு, செல்லாயி தண்ணி ஊத்திக்கனும் அப்பறம்
இதலாம் வைச்சி ஜோடிச்சி வுட்டனா நாங்க ஊருக்கு கிளம்பிருவோம்"னு மீரா சொல்ல,
நங்கை செல்லாயிய தண்ணி ஊத்திக்கிற இடத்துக்கு கூட்டி போனா……
எல்லாம் முடிஞ்சி நின்ன செல்லாயியை
பாத்த மீராவுக்கு ஏதோ சாதிச்ச குழந்தையோட குதுகலிப்பு! நங்கைக்கிட்ட சொல்லிட்டு
மாப்பிள்ளை, பொண்ணு கோலத்துல பக்கத்துல இருக்க
குறவன்பட்டிக்கு குசியா சைக்கிளை மிதிக்க ஆரம்பிச்சார் மீரா! போற வழியில
பார்த்தவங்களாம் வித்தியாசமாவும், ஆச்சரியமாவும், சிரிப்பாவும் பாக்க, குனிஞ்ச தலைய நிமிராம சைக்கிள்
பின்னாடி உட்ட்கார்ந்திருந்த செல்லாயி சைக்கிள் சீட்டியை இறுக்கமா
புடிச்சிக்கிட்டா!
ஊருக்குள்ள நுழையறப்பவே நாலஞ்சு
பொம்பளைங்க. ஆம்பளைங்கனு கூப்ட மீரா, இந்தந்த
மாதிரி இன்னார் பொண்ண கட்டிக்கிட்டேன் இவதான் எம்பொண்டாட்டினு சொல்லி வூட்டுக்கு
சைக்கிளை விட்டார் மீரா. இதெல்லாமே ஒரு காரியமாத்தான் செஞ்சது மீரா!
பொழுதுசாய பஞ்சாயத்துல இருந்து வரச்சொல்லி
மீராவுக்கு தகவல் வந்துச்சி….. செல்லாயியை கூட்டிக்கிட்டு கம்பீரமா
போய் மீரா நின்னதும் ஏற்கனவே மீராமேல பொறாமையால இருந்தவனுங்களுக்கும், சாதி, மசிருனு நிக்கறவனுங்களுக்கும் நடுமுடி
நட்டுக்குச்சி…….
பஞ்சாயத்து பெருசு ஆரம்பிச்சது…,...
" ராசப்பா நீ என்ன பண்ணிக்கறனு
தெரியுதா"
" நான் என்ன குருட்டுப்பயலா?!
எனக்கு புடிச்ச, என்னைய புடிச்ச ஒரு புள்ளய கல்யாணம்
கட்டியிருக்கேன் இதுல உங்களுக்காலாம் என்னய்யா பிரச்சினை"னு ரொம்ப ரொம்ப கூலா
மீரா கேட்க பஞ்சாயத்து கூட்டத்துக்கு கோவத்துல வாயெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிருச்சி!
இதே வேறவனா இருந்திருந்தா கம்பத்துல கட்டி வைச்சி அடிச்சிட்டுதான் பஞ்சாயத்தே
பேசுவானுங்க மழுமட்டைங்க, ஆனா மீராவ கட்டனும்னு நினைச்சாலே கை
கால்ல ஏதாவது ஒன்ன மீரா ஒடைச்சி உட்றுங்கற பயத்தால பஞ்சாயத்து பேச்சுவார்த்தைல
போகுது.
" என்னப்பா வயசு வித்தியாசம்
இல்லாம வாய்யா போய்யானு பேசிக்கிட்டு, இது
நல்லதுக்கில்ல ராசப்பா"
" ஒரு புள்ளய அவ சம்மதத்தோட
கல்யாணம் முடிச்சிக்கிட்டு வந்தத பஞ்சாயத்தக்கூட்டி வெசாரிக்கறது சில்ரத்தனமா
தெரியலையா"? மறுபடியும் அலட்சியமா கூலா மீரா
எதிர்க்கேள்வி கேட்க…….
" ராசப்பா எடக்குலாம் பேசாத,
ஊருக்கு ஒரு கட்டுப்பாடு இருக்கு மீறுனா அப்புறம் ஊரோட ஒட்டி வாழ
முடியாது சொல்றத சொல்லிட்டோம்"
" அந்த மானங்கெட்ட வாழ்க்கையே
எனக்கு தேவ மசிரில்லை. என்னத்த வாந்தி எடுக்கனுமோ சீக்கிரமா எடுத்து தொலைங்க,
பொழுது சாஞ்சி இருட்டிருச்சி புதுசா கல்யாணம் பண்ண எங்களுக்கு
ஆயிரத்தெட்டு வேலை இருக்கு, நான் ஒன்னும் முட்டிச் செத்த பய
இல்ல"னு மீரா சொல்ல, பஞ்சாயத்துல பொம்பளைங்க சத்தமில்லாம
சிரிக்க, ராசப்பன் பழைய கேர்ள்பிரன்டுங்கள
கண்ணால செல்லாயி எப்படினு விசாரிச்சிட்டு இருந்தான்…..
" இனிமே ஊருக்குள்ள நல்லது
கெட்டதுனு ராசப்பனோட எந்தத் தொடர்பையும் யாரும் வைச்சிக்க கூடாது. வைச்சிக்கிட்டா
இதேதான் எல்லாத்துக்கும்" னு ஆக்ரோசமா இதான் வாய்ப்புனு பேச ஆரம்பிச்சானுங்க…….
" ரொம்ப நல்லது என் காட்ல கால
வைச்சி எவனாவது அவன் காட்டுக்கு போனாலோ, இல்ல
ஆடு மாடுனு உள்ள வந்தாலோ சவுக்கால அடிப்பேன். இல்ல ஊருக்காக பயப்படறம் ராசப்பா
மத்தபடி உம்மேல எனக்கு எந்த பகையும் இல்ல, நாளைக்கு
ஒரு ஆபத்துனா கண்ணுல பாத்துக்கிட்டா இருந்துருவன்னு எவன் என்கிட்ட மனுசனா
எதார்த்தம் பேசறானோ அவன் காட்ல கால வைச்சிக்கலாம்"னு மீரா சொல்ல………
மீரா காட்டை தாண்டி போக
வேண்டியவங்களுக்கு படபடனு பதட்டம் வந்து, அடுத்து
மீரா சொன்னத கேட்டு நிம்மதி ஆனார்கள்!
"கடைசியா சொல்றன் பைத்தியக்காரத்தனமா
பஞ்சாயத்து மசிருனு சாதி வெறியில ஒளறிக்கிட்டு இருக்காம மனுசனா யோசிங்க, கட்ன பொண்டாட்டிய மதிச்சி நடத்தி சந்தோசமா இருங்க, முதல்ல பொவில (புகையிலை), வெத்தலய
போட்ட வாய நல்லா கழுவிக்கிட்டு பொண்டாட்டி பக்கதுல போங்க"னு சொல்லிட்டு மீரா
செல்லாயி கைய புடிச்சிக்கிட்டு சாவகாசமா வூட்டுக்கு கிளம்பியது!
பஞ்சாயத்துல இருந்த அத்தனை கல்யாணம் ஆன,
ஆவாத இளவட்ட பொம்பளைங்களுக்கு மீரா அப்ப இருந்தே கதாநாயகன்தான்.
இன்னைக்கு முழுசா ஒருத்தியோட வாழபோறனு நினைக்கறப்பதான் செல்லாயி மேலத்தான்
பொறாமைப்பட்டாங்களே ஒழிய மீரா நல்லா இருக்கனும்னுதான் நினைச்சாங்க!
மீராவின் குடிசையில் இரு உயிர்கள் கரைய
ஆரம்பித்ததிருந்தது படுக்கையில்!

No comments:
Post a Comment