anti - piracy

Post Page Advertisement [Top]


                    நீல நிலா!(ஆதன்-னின்)     

                              பாகம் - 2    

                                  அத்தியாயம்- 02


                                                       


உருகாத மெழுகு!

வீட்டிற்கு வந்த வானதி முதலில் குணசேகரனை ஹாஸ்பிடலுக்கு போகச் சொல்லிவிட்டு ஹால் சோபாவில் அமர, கதிரேசன் சலிப்பாய் ச்சேரில் அமர்ந்தான்…… சுமதி சமையல் வேலையாய் இருந்தவள் இவர்களைக் கண்டதும் ஹால் பக்கத்தில் தள்ளி காய்கறிகளை அரிபவளாய் அமர்ந்தாள்……

" என்ன கதிரேசன் ஸ்டார்ட் பண்ணினப்பவே என்ட் கார்ட் போட்ட மாதிரி ஆயிட்டிங்க"

" அம்மா நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்காதிங்க"னு கதிரேசன் சொல்ல, இந்த தைரியம் தனக்கு வெற்றியால் ஏற்பட்ட தோல்வி, அவமானத்தால் கதிரேசனுக்கு வந்ததுனு நல்லாவே தெரியும். கோபத்தை வெளிக்காட்டிக்காம சொல்லச் சொன்னாள் வானதி!

" இந்த செந்தாங்கல் மக்கள பத்தியும், அவங்க யார் யார எங்க வைச்சிருக்காங்க, ஊர் நிலவரம் என்னனு உங்களுக்கு தெரியாதுங்கமா!
இனிமே என்கிட்ட சொல்லாம குணசேகரனை வைச்சி எந்த வேலையவும் செய்யாதிங்க. உங்களுக்கு இதுல இழப்புங்கறது வேற, ஆனா நான் பெத்த பையன் அடிவாங்கிக்கிட்டு நிக்கறதுதான் எனக்கு பெரிய விசயம். தப்பா நினைக்காதிங்க"

" இல்ல கதிரேசன் நான் தப்பா நினைக்கல, நானும் உங்கக்கிட்ட பேசனும் நீங்களும் தப்பா நினைச்சுக்காதிங்க"னு வானதி அதை பழைய அதிகாரத்தில் பேசினாள்!

" பரவாயில்லங்கமா சொல்லுங்க"

" நான் இப்படிலாம் செய்ற ஆளுனு அவன  நினைக்கல"

" அந்த வெற்றி பய எமகாதகன்மா இனியாவது உஷார் ஆகிக்கோங்க"

" மிஸ்டர் கதிரேசன் நான் வெற்றிய சொல்லலை, உங்க பையன் குணாவ சொல்றேன்"னு வானதி சொல்ல கதிரேசன் முகம் சுருங்கி சின்னதானது!

" ஊர்ல இருந்து ஸ்டேசன் வந்தவங்க சொன்னதுலாம் ஞாபகமிருக்கா கதிரேசன்?!
பர்டிகுலரா அவசரத்துக்கு லேடிஸ் காட்டுப்பக்கம் கூட ஒதுங்க முடியலனு! நான் கூட ஏதோ கேலிபேசறது அப்படி இப்படினு இருப்பானு நினைச்சேன். ச்சை இவ்வளவு வல்கராகவா"னு வானதி கோபமாகவே பேசினாள்.

வானதிய குறைச்சொல்லி கொஞ்சம் அவ அதிகாரத்த குறைச்சி சமமா இருக்க அளவுக்கு பண்ணலாம்னு நினைச்ச கதிரேசனின் எண்ணத்துக்கு ஆப்பு விழுந்தது!

" அம்மா அதெல்லாமே ஜோடிச்சி சொன்ன பொய்ங்கமா, குணா பக்குவம் இல்லாதவன்தான் ஆனா அவங்க சொன்ன மாதிரிலாம் கிடையாதுங்கமா"

" கதிரேசன் காதுல விழற விசயத்துலயே எது பொய், எது உண்மைனு பர்ப்பெக்ட்டா கண்டுப்பிடிக்கற கார்பரேட் நான். என் முன்னால பேசின, பேசறதுல எது உண்மை, எது பொய்னு எனக்குத் தெரியாதா?!

அவங்க சொன்னது உண்மை! இப்ப நீங்க சொல்றது சமாளிக்கறதுக்கான பொய்! உங்க மகன் பண்றது எல்லாமே உங்களுக்குத் தெரியும். நான் இங்க சும்மா பேக்க தூக்கிட்டு கார்ல வந்து இறங்கல, 75% ஒவ்வொருத்தர பத்தியும் உங்க சைட்ல தெரிஞ்சிக்கிட்டுதான் வந்தேன்.

 நாங்க நெல்லிக்கா வியாபாரம் பண்றவங்க இல்ல கதிரேசன். நீங்க அரசியல்வாதி அதுவும் கட்சி லீடர நேர்லக்கூட பார்க்க முடியாத சாதாரணமான அரசியல்வாதி, ஆனா நாங்க அந்த லீடர் கூட அசால்ட்டா பார்ட்டி பண்றவங்க புரியுதா?! உங்க பாலிடிக்ஸ்லாம் என்கிட்ட வேணாம்"னு வானதி தன் கெத்தை கச்சிதமா தூக்கி நிறுத்தி கதிரேசனை ஓங்கி குட்டு வைத்து, குனிய வைத்தாள்…. கதிரேசன் கப்சிப்னு அமைதியா ஒடுங்கி உட்கார்ந்தான்!

" நாங்க போறவர இனிமே உங்க பையன் வீட்டுக்குள்ள வரக்கூடாது. என்னை பத்தி பிரச்சினையில்லை. ஆனா என்னை நம்பி ஒருத்தி கூட இருக்கா, அவளோட சேப்ஃடி எனக்கு முக்கியம். சராசரியான ஆம்பளையா இருந்திருந்தா நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஆனா குணா சைக்கோவா இருக்கான் இந்த விசயத்துல. இதனால உங்களுக்கு நிச்சயம் பிரச்சினை வரத்தான் போகுது உஷாரா இருந்துக்கோங்க"னு சொன்ன வானதி சுமதிய பார்க்க சமையலறைக்கு போனாள்……

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த நேகாவுக்கு மீண்டும் வானதி பற்றியான நல்லெண்ணமும், பிரமிப்பும் இதயத்துக்குள் ஒட்டிக்கொண்டது!

சுமதிக்கு நடந்த விசயங்கள் எதுவுமே தெரியாததால் பேசியது முழுதாய் புரியவில்லை. ஆனால் குணசேகரன் பற்றியான பேச்சு வானதி மீதான கசப்பைக் குறைத்திருந்தது…..

கதிரேசனை குணாவை இழுத்து தட்டி வைத்தாள்……
நேகாவின் பாதுகாப்பு தனக்கு ரொம்ப முக்கியம் என்று பேசி நேகா மனதிற்குள் மீண்டும் பழைய இடத்தில் அமர்ந்தாள்.
ஏதோ இரண்டு மூன்று நாளா விலகி நடந்த சுமதியை மீண்டும் தன்மீதான பழைய மரியாதைக்கு கொண்டுவந்தாள்.
குணாவின் தேவை இனி ஏற்படாது, அவனை பழைய மாதிரியே வீட்டிற்கு வெளியேவும் வைத்துவிட்டாள்…….

ஒரே கல்லில் நாலு மாங்காய்! கடைசியில் வீசின கல்லையும் அடுத்த முறை வீசுவதற்கு எடுத்து வைத்துக்கொள்ளும் வித்தை எல்லாம் வானதி என்ற பெயரில் உலாவும் சோழத்தின் குந்தவைக்கு மட்டுமே சாத்தியமான விசயம்!
……………

வீட்டிற்கு வெளிய ஆடு, மாடுகள் கட்டும் இடத்திற்கு வந்த சுமதி, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அறிவுக்கு போன் அடித்தாள்!

" ஹலோ சொல்லு சுமதி"

" அறிவு எதாவது பிரச்சினையா?!"

" ஏன் உனக்கு எதுவும் தெரியாதா?!" என்ற அறிவு நடந்து முடிந்த அத்தனையையும் சொல்ல, சுமதி மெதுவாய் அழ ஆரம்பித்தாள்…..

இடையில் வந்த வெற்றி போன்ல யார்கிட்ட, என்னனு விசாரிச்சு போனை வாங்கி பேசினான்…..

" ஹலோ நான் வெற்றி பேசறன் சுமதி, உனக்கு நடந்த எதுவும் தெரியாதா"

" சத்தியமா தெரியாது வெற்றி. தெரிஞ்சிருந்தா அங்கையே வந்துருப்பேனு" கண்ணைத் துடைத்தப்படி பேசினாள்….

" சுமதி நீ வரதுக்காக நான் கேட்கல, சொல்றத பொறுமையா கேளு."

" ம்"

" உனக்கு இந்த விசயம் தெரியாத மாதிரியே அப்படியே இரு. வீட்ல யார்கிட்டயும் காட்டிக்காத, குறிப்பா வானதிக்கிட்ட…. அவங்கக்கூட எப்பவும் இருக்க மாதிரியே இருக்கனும். எதையும் காட்டிக்காத சரியா"

" ம் காட்டிக்கல"

" சரி. உங்க அண்ணனை எந்த பகைனும் அடிக்கல, அவன் செஞ்சது பெரிய தப்பு அதுக்காகத்தான் அடிச்சோம். மனசுல எதுவும் வைச்சுக்காத"

" இல்ல அப்படிலாம் எதுவும் நினைக்கல. நீங்க பத்ரமா இருங்க அது போதும்"னு சொன்ன சுமதி உடைஞ்சு அழ ஆரம்பித்தாள்…. வெற்றிக்கு எப்படி சமாதானப்படுத்தனு தெரியல!

" சுமதி அழாத நான் வைக்கறன்"னு டக்னு போனை கட் பண்ண வெற்றி மனசுக்குள்ள ஏதோ குற்றயுணர்ச்சி அழுத்த, போனை அறிவுக்கிட்ட குடுத்துவிட்டு கட்டில்ல போய் உட்கார்ந்தான்…….

கதிரேசனும் வானதியும் பேசின விசயங்களை பற்றி சுமதி சொன்னதை வெற்றியிடம் சொன்னான் அறிவு. பொறுமையா கேட்ட வெற்றி……

" மச்சான் அந்த பொண்ணுக்கிட்ட எல்லா நல்ல குணமுமே இருக்கு. ஆனா மனசளவுல அந்த பொண்ணு வறட்டு கெளரவங்கற மோசமான விசயத்துக்கு அடிமையா இருக்கு. வாழ்க்கையில உண்மையான நிம்மதி, சந்தோசம் எதுனு அந்த பொண்ணுக்கும் தெரியல, யாரும் சொல்லியும் தரல, இப்ப சொல்லித்தர யாருக்கும் தைரியமும் இல்லை.

இப்பக்கூட அந்த பொண்ணை ஜெயிக்கனும் அப்படிங்கற எண்ணம்லாம் இல்லடா அறிவு எனக்கு. வாழ்க்கைனா என்னனு அந்த பொண்ணுக்கு புரிய வைக்கனும்னுதான் நினைக்கறேன்"னு உண்மையான பரிதாபத்தோட சொன்னான் வெற்றி.

" என்னடா மச்சான் பண்ணனும் அதுக்கு"

" அந்த பொண்ணோட அறிவு, பணத்தால மனுசங்களோட மனச ஜெயிக்க முடியாதுனு புரிய வைக்கனும்டா. அதுக்கு முதல்ல அது செய்ற வேலைகள்ல தோல்விகள உருவாக்கனும். நிலைமை கெடறப்பதான் மச்சான் மனுசனுக்கு வாழ்க்கையே புரிய ஆரம்பிக்கும்"

"முடியுமா மச்சான்"

" கண்டிப்பா முடியும்டா பொறுத்து பாரு"னு சொன்ன வெற்றி தூயவன் நம்பருக்கு போன் அடித்தான்……
………………..

பெட்டில் நிம்மதியாய் தூங்கிக்கொண்டிருந்த நேகாவை பார்க்க கொஞ்சம் பொறாமையாய் இருந்தது வானதிக்கு!

மொபைலை எடுத்தவள் புவனாம்மாவுக்கு போன் அடித்தாள்….

" குட்டிமா என்னடாமா பண்ற? சாப்டியா? நல்லா இருக்கியா? வசதிலாம் பரவாயில்லையாடாமா?னு புவனாம்மா கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக…….

" ஹஹஹ புவனாம்மா போதும் போதும்! ரொம்ப நல்லா இருக்கன். நீங்க எப்படி இருக்கிங்க?!"

" நல்லா இருக்கம்டா எல்லாரும். அம்மா மாத்திரை போட்டு படுத்துட்டாங்க எழுப்பவா?!"

" இல்ல இல்ல வேண்டாம் சும்மாதான் பண்ணேன்"

" நீயா கூப்டாதான் உண்டு, வேலையில இருக்கப்ப நாங்க கூப்டா கோவிப்படாமா, அதான் என்ன பண்றதுனு தெரியாம இருந்தம்"

" நாளைக்கு கார் வரும் புவனாம்மா, அப்பாவும், கந்தசாமியும் வீட்டுக்கு வராங்க,, நீங்க நாலு பேரும் இங்க கெளம்பி வரீங்க. நான் அப்பாகிட்ட சொல்லிட்டன். ஓகேவா"

" அப்படியாடாமா வரோம்டா"னு புவனாம்மா பேச, மேல கொஞ்ச நேரம் பேசிட்டு போனை வைத்தாள் வானதி!

வரதராஜனின் ஓயாத தொந்தரவால்தான் முன்ன இங்க வரதராஜன் வரதுக்கு சரினு சொல்லியிருந்தாள் வானதி. ஆனா இப்ப இருக்க மனநிலைக்கு புவனாம்மா, தனலட்சுமி பக்கத்தில் இருக்க மனசுக்கு தேவைப்படுது வானதிக்கு. அதனால்தான் எல்லாரையுமே வரச் சொல்லிவிட்டாள்!

மனசில் பல எண்ணம் ஓடிய வானதி அப்படியே கண்ணையர்ந்தாள். நேரில் எதிரியாய் திமிறும் வெற்றி ஏனோ இன்று அவள் கனவில் உரிமையான நண்பனாய் அவளது அருகில் அமர்ந்து அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டு இருந்தான். இந்த மனம்தான் எத்தனை விந்தைகளைக்கொண்ட கடல்!
…………….

வீட்டிற்கு வெளியே கட்டில் போட்டு வெற்றி, அறிவு, வேலுச்சாமியென படுத்திருக்க, மரகதம் பிரன்டையை ஆய்ந்தப்படி அவர்களது பக்கத்தில் அமர்ந்திருந்தாள்…….

" ய்யா வெற்றி திருவிழா வேலைகளாம் இன்னையிலருந்த மூனாவது நாள் ஆரம்பிக்கனும்யா நீ"

" தெரியும்பா"

" விழா முடியற வரை இந்த பேக்டரி வேலைகள தள்ளி வைச்சிடுய்யா, ஏன்னா இந்த திருவிழா வேலைக்கான தலைமையா உன்ன தேர்ந்தெடுத்ததுதான் நாள நீ ஊருக்கு தலைமையா வந்து மக்களுக்கு வேலைச் செய்றதுக்கான சுழிய்யா. இதுல நீ காட்டற தெறம, பொறுப்புதான் உன்ன நிலையா வைக்கும்யா"

" சரிப்பா"னு சொன்ன வெற்றி அத்தோடு நிறுத்திக்கொண்டான்!

" ஏன் மரகதம் உம்புருசருக்கு என்னையலாம் தலைவராக்கற ஐடியா வராதா"னு அறிவு வம்பிழுக்க……

" டே அதுக்கு பேருல மட்டும் அறிவிருந்தா போதாதுடா" வேலுச்சாமி சொல்ல…..

" ஏன் என் புள்ள அறிவுக்கு என்ன கொற, ஆயிரம் அறிவு இருந்தாலும் ஊருக்குள்ள இருக்க கெழடு கட்டைங்களுக்கும் புடிக்கற அழவன்தான் எம் பையன்"னு மரகதம் சிரிப்பா சொல்ல…..

" அப்புடி சொல்லு மரகதம். நாளைக்கு ஒருநாள் எம்.எல்.ஏ மந்திரினு ஆவறனா இல்லையானு பாரு"

" நீ வரலாம்டா அறிவில்லனாலும் நல்லவன், இப்ப இருக்கறவனுங்களுக்கு நீ கோடி ஒசந்தவன்"னு வேலுச்சாமி பேச்சு போக…….

ஆகாயத்த பார்த்தப்படி கொஞ்சநேரம் முன்பு தூயவன் சொன்னதை அசை போட்டப்படி பல எண்ணங்கள் ஓட கண்ணை மூடினான் வெற்றி!
வெண்ணிலவொன்று நீல மேகத்திற்குள் ஒளிந்து நீலமாய் சிரித்தது. உறக்கத்தில் மெது மெதுவாய் அந்த நீல நிலவு வானதியின் முகமாய் மாற ஆரம்பித்தது!

மனிதர்களை வெறுக்கத் தெரியாத
ஆயுதப்போராளி போராளி இவன்!
         
 Episode-2-01                                                    ---தொடரும்---

2 comments:

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib