வழக்கமாக கதையின் ஆரம்பத்தில் கதாபாத்திரங்களின் உருவ அமைப்பு, குணவியல்புகளை விவரிப்பது சம்பிரதாயம் மட்டுமின்றி வாசகர்களுக்கு கதாபாத்திரங்களை மனதில் பதிய வைப்பதற்கான வழிமுறையாகும்!
ஆனால் இந்தக் கதையில் முதலில் நாம் கதை எப்படிப்பட்டது என்றும், மீரா என்ற பெயருக்கான காரணத்தையும்தான் முதலில் பார்க்க போகிறோம். அடுத்து இந்தக் கதையின் ஆசிரியனாக முக்கியமான ஒன்றை வாசகர்களுக்கு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
என்னவென்றால் இக்கதையின் கதாபாத்திரங்களின் உரையாடல்கள் பேச்சு வழக்கில்தான் இருக்கும். அடுத்து இக்கதையின் ஆசிரியனான நானும் எளிமையான சொற்களில் பேச்சு வழக்கில்தான் கதையில் பேசுவேன். இதை வைத்து நாவலுக்கான உரைநடையில் எழுத்துநடை இல்லாமல் இருக்கிறதே, இவனுக்கு எழுத வாராதோ என்று நினைத்துவிட வேண்டாம். இதுவரையில் நீங்கள் படித்துக்கொண்டிருப்பது உரைநடையில் எழுதப்பட்டதைத்தான். சரி வாங்க மெல்லமா தலைப்புக்கான பெயர்க்காரணத்தை பார்ப்போம் எளிய பேச்சு வழக்கில்!
மீரா தாத்தா வயசு 16 இந்த பேருக்கான விளக்கம் பெருசா ஒன்னுமில்லங்க சாதாரணமானதுதான். பெருசும் சிறுசும் இல்லாத அளவா முறுக்கின மீசைக்கார இராசப்பன் தாத்தாதான் இந்த கதையின் ஹீரோ! ஹீரோனு சொன்னாதான் அந்தாளு ஏத்துக்குவாப்ல அதான். மனசுல அப்படிதான் அந்த ஆளுக்கு நினைப்பும்! மீசைக்கார இராசப்பன சுருக்கிதான் மீரானு கதை நடக்கபோற குறவன்பட்டி ஊருக்குள்ள சிறுசுல இருந்து பெருசுங்க வரை, அன்பாவோ, வம்பாவோ, பொறாமையாவோ கூப்பிடுங்க!
அதுசரி அதென்ன வயசு 16 அப்படினு கேட்கறிங்களா புரியுது. ஆளுக்கு வயசென்னவோ 60 வதுதான். ஆனா மனசுக்குள்ள 16னுதான் நினைப்பு. தப்பித்தவறி மீரா தாத்தானு கூப்பிட்டு வைச்சிடாதிங்க மனுசன் சாகற வரை அப்புறம் உங்கக்கூட பேசமாட்டாப்ல வீம்பு புடிச்ச வம்பான ஆளு.
ஆனா உண்மையைச் சொல்லனும்னா மனுசன் மனசளவுல மட்டுமில்லைங்க உடம்பளவுலயும் 16 வயசு பையன் கணக்காத்தான் இருப்பாப்ல. பழைய மல்யுத்த ஆளு, ஐந்தரை அடியில நல்ல உருட்டுக் கட்டையான உடம்பு. இப்பவும் ஒத்தக் கையாலதான் புல்லட்ட இழுத்து சென்டர் போடுவாப்ல. முக்கியமா இந்த புல்லட்ட பத்தி சொல்லியே ஆகனும்….. மனுசன் உடம்பு ஏதும் சரியில்லாம படுத்து குளிக்காமக் கொள்ளாம இருந்தாலும் இந்த பழைய புல்லட்ட தொடைக்காம இருக்க மாட்டாப்ல தெனமும்….
அப்புறம் மனுசனுக்கு தொழில்னு பாத்திங்கனா கெணறோட மூனு ஏக்கருக்கு பக்கம் தோட்டம் இருக்கு. காய்கறி மட்டும்தான் பயிரிடுவாப்ல. அதுவும் சொட்டுநீர் பாசனம்தான். கன்னா பின்னானு தண்ணிய செலவு பண்ணமாட்டாப்ல. வெளையறத கெடைக்கற வெலைக்கு சிறு வியாபாரிங்கக்கிட்ட வித்தது போகத்தான் மொத்த வியாபாரிக்கு கொடுப்பாப்ல……. பெருசா செயற்கை உரம் அப்டினுலாம் போவ மாட்டாப்ல….. பூச்சி புழுவு வைச்சிதுனா "விடு விடு அதுங்களுக்கு மிஞ்சினததுதான்" நமக்குனு உயிரியல் பேசுவாப்ல…….
அடுத்து பலவருசமா சொந்த நெலத்துல திறந்தவெளி ஜிம் ஒன்ன வைச்சிருக்காப்ல. இலவசம்தான் காசில்ல, அதனாலதான என்னவோ ஒரு நாலைஞ்சி பயலுகளுக்கு மேல வரதில்ல!
நம்ம மீராக்கிட்ட உண்மையா, பெருந்தன்மையா யார் பேசுனாலும் பதில் வார்த்தை அவ்வளவு பாசமா, மரியாதையா வரும். எடக்கு பேசினா எடக்கு மடக்காத்தான் வரும். ஏன்டா வாயக் குடுத்தோம்னுதான் பொலம்பி போக வைச்சிருவாப்ல.
பல பெரிய அறிவான விசயங்களை அசால்ட்டா பேசற மனுசன். யோவ் மீரா இத அந்த தலைவரு சொல்லியிருக்காரு, இந்த தலைவரு சொல்லி இருக்காருனு யாராவது சொன்னா " அது என்னவோ தெரியாதுடே இது நான் சொன்னது அவ்வளவுதாம்டே"னு முடிச்சிருவாரு. உண்மையாவே நம்ம மீரா படிக்காத மேதை, இயல்பாவே பெரிய முற்போக்குவாதி. எந்த தலைவன் சொன்னதையும், படிச்சும் இந்தக் குணம் மீராவுக்கு வரல. மீராவோட இயல்பே இதுதான். மீராவே பெரிய தலைவன்தான்!
இந்தக் கதை அப்படினு எடுத்துக்கிட்டிங்கனா பெருசா ஒன்னும் இல்லங்க,
ஒரு மனிதனோட அழகான வாழ்க்கைதான் இந்தக் கதை!
இந்த மீரா அப்படி என்ன அழகான வாழ்க்கை வாழ்ந்தான், வாழறான், இதுல மனித வாழ்க்கையின் அடிப்படை என்னங்கறத இந்த சேட்டைக்கார தாத்தா மீராவின் வாழ்க்கை மூலம் பார்க்க போறம் அவ்வளவுதாங்க!
என்னடா முன்னுரையை அத்தியாயமா அதையும் அடாவடினு வைச்சிருக்கானேனு உங்களுக்கு தோணும்….. மீரா பெயர்க்காரணம் மாதிரி இதுக்கு எந்த காரணமும் இல்லைங்க!
இப்படி எழுதலாம்னு தோணுச்சு எழுதினன் அவ்வளவுதான்! சரி வாங்க மீராவின் ஒரு சேட்டையோட கதைக்குள்ள போவோம்!
"என்ன மீரா புல்லட்ட தொடச்சி தேய்ச்சியே சைக்கிளா மாத்திருவ போல?!"
"லேய் ராசப்பனு பேர சொல்லி கூப்டு இல்லனா வாடா போடானு கூடக் கூப்டு மீரானு சொல்லாதடே பொம்பள புள்ள பேரா இருக்கு!"
"பார்ரா ஊரே அப்டிதான் பல வருசமா கூப்டுது 60 வயசுல புத்தி வந்திருச்சாம்!"
யாருக்குடே 60 வயசு?! மனசுக்கும் ஒடம்புக்கும் எனக்கு பதினாறு தாம்டே! நீ இருவது வயசு ஆம்பளதான இந்தா இந்த புல்லட்ட வூட்டு உள்ள ஏத்தி நிறுத்துடே பாக்கலாம்?!!
"நான் கற்கால பொருள்லலாம் கை வைக்கறதில்ல ஆமா காலையிலயே எங்கயோ கெளம்பற போல?! என்னா பவர் பாண்டி படத்துல ராஜ்கிரண் ரேவதிய பாக்க போற மாதிரி பழைய சைட் கூட ஏதாது சந்திப்பு போட போறியோ?!"
"ஏம்டே போன எவளும் பஸ் ஏறி என்னைய தேடிக்கிட்டு வந்தரக்கூடாதுனு பயந்துக்கெடக்கன் இவன் வேற, இப்ப சந்திரன் மவளதான் ரெண்டாந்தாரமா முடிக்கலாம்னு இருக்கன்!"
"யோவ் லொள்ளு புடிச்ச கெழவா அது என் ஆளுயா, அப்புறம் சிகரெட்ல சயனைட்ட வைச்சி உருட்டி குடுத்துருவன் பாத்துக்க!"
"காலேல தண்ணி புடிக்க, கடைக்க வரப்பனு போய் அந்த புள்ளய பாக்கறதுக்காக தவம் கெடக்கற மாதிரி ஆக்ட் வுட்டு சரிக்கட்டாம இங்க என்ன பேச்சுடே போ போ இல்லனா நடக்கறதுக்கு நான் பொறுப்பில்லடே கொமரா!"
இந்தா பாத்திங்கள்ல இதான் மீரா……
ஆளு மாசத்துல ஒருமுறை கெளம்பி வெளிய ஒரு இடத்துக்கு போச்சுனா ரெண்டு மூனுநாள் கழிச்சிதான் திரும்பி வரும்….. அங்க கெளம்பறதுக்குத்தான் இப்ப ரெடி ஆகிட்டு இருக்கு…. எந்த இடம், எதுக்கு போகுதுங்கறது எல்லாத்துக்கும் தெரிஞ்ச பரம இரகசியம்!
அது எப்படியா எல்லாருக்கம் தெரிஞ்சா அது இரகசியமா இருக்கும் அதுவும் பரம இரகசியமா இருக்கும்னு நீங்க கேட்கறது புரியுது.
மீராவுக்கு சிகரெட், சரக்குனு பழக்கம் இருக்கு. ஆனா அதேசமயத்துல ஆரோக்கியத்துலயும் ரொம்ப கவனமான ஆளு. இந்த தேதி வரை வீட்ல பிரிட்ஜ் கிடையாது. மனுசன் அப்பப்ப செஞ்சி அப்பயே சாப்ட்டு கழுவி வைக்கற ஆளு!
ஒரு நாளைக்கு மூனு சிகரெட், அதுவும் வெலை ஜாஸ்தியா இருக்க சிகரெட்டுதான், அதுவும் நைட்ல சரக்கு போடறப்பதான்….. பாதிய குடிச்சிட்டு கீழ போட்ரும் பெருசு….. சிகரெட்டோ சரக்கோ யார் முன்னாலயும் மீரா குடிக்காது. ஏன்னா நம்மளால யாரும் கெட்டுப்போயிட கூடாதுனு……. இப்ப கேட்டாலும் தான் வாழ்க்கையில செய்ற, செஞ்ச ஒரே தப்பு இதாம்யா அப்டினு வருத்தமா சொல்லும்!
சரக்குனா இப்ப கவர்மென்ட் விக்கற வெசம் கிடையாது மீரா குடிக்கறது, ஏற்காடு பின் மலைச்சரிவுல பழைய கூட்டாளிங்களோட சேர்ந்து, பழம், பனம் வெல்லம்னு போட்டு நொதிக்க வைச்சி காய்ச்சற சுத்தமான நாட்டுச் சாராயம்!
என்னாது சொந்தமா காய்ச்சறாங்களா?! ஏற்காடானு வாளப் பொளக்காதிங்க உண்மைதான்! நம்ம மீரா குடிக்க ஆரம்பிச்சதில் இருந்து இந்த நாட்டுச் சாராயம்தான் இன்னிய தேதி வரை. மீரா ஏற்காட்டு அடிவாரம் அந்தப்பக்கம் குறவன்பட்டிங்கற ஊர்லதான் பொறந்து வாழுது!
மாசத்துக்கு ஒருமுறை போய் ஊற வைச்ச பழ நொதியை காய்ச்சி தன் தேவைக்கு கடத்திக்கிட்டு வந்திரும்! இது எல்லாருக்கும் தெரியும். அதனாலதான் எல்லாருக்கும் தெரிஞ்ச பரம இரகசியம். இதல இரகசியம் என்னனா கொண்டுவர சாராயத்த எங்க வைச்சிருக்குனு யாருக்கும் தெரியாது. ஒருமுறை ஊருக்குள்ள ஆகாதவனுங்க போலீஸ்ல போட்டுக்குடுத்து, போலீஸ் வந்து தேடோ தேடுனு தேடியும் ஒன்னும் கெடைக்கல…. அப்புறம் அவங்க நம்ம மீரா கேரக்டர்ல இம்பரஸ் ஆகி ப்ரன்ட்டா ஆன பின்னால ஒரு லிட்டர் நாட்டுச் சாராயத்த இன்ஸ்க்கு குடுத்துச்சி மீரா…..
இப்ப வண்டி கிளம்புச்சுனா மீரா திரும்பி வர மூனு நாள் ஆகிடும்….. மீரா போய் சாராயத்த வாங்கிட்டு வரட்டும்…. இந்த கேப்ல அடுத்த அடாவடியில நாம மீராவோட குடும்பத்த பத்தியும், மீராவோட பிளாஷ்பேக்கையும் பார்ப்போம்!
சேட்டை தொடரும்!
பிளாஷ்பேக்!
குறவன்பட்டியில நம்ம மீரா பொறக்கறப்ப குறவன்பட்டி இயற்கை கொஞ்சும் கிராமம். அப்பா அம்மா விவசாயிங்கதான் இப்ப இருக்க மூனு ஏக்கரா அளவு நிலம்தான் அப்பவும்.!
பள்ளிக்கூட பக்கம் எட்டிக்கூட பார்த்ததில்லை நம்ம மீரா. ஆனா பெருசுக்கு தமிழ்ல எழுதப் படிக்கத் தெரியும். எதையாவது கண்ணு வைச்சுதுனா அதைச் செய்யாம விடாது.
12, 13 வயசுல சிலம்பம், கபடினு கவனம் திரும்ப அப்படியே உடற்பயிற்சி, குஸ்தினு மீரா வெரைட்டி காட்ட ஆரம்பிச்சிடுச்சி. மாநிறம், நல்ல உடற்கட்டுனு 18 வயசுல ஆளு குறவன்பட்டி தாண்டி சுத்துபட்டுலயும் ஹீரோ ரேன்ஞ்ல வலம்வர ஆரம்பிச்சிட்டாப்ல….
வீட்டுக்கு ஒரே பையன் வேற, நல்லா வெளையாண்டு, தின்னு ஊட்டமா வளரதுல மீராவ பெத்தவங்களுக்கு பெருமை, பூரிப்பு. மீரா தன்னோட 18 வயசிலிருந்து 23 வரை பொலிக்காளையா திமிறிக்கிட்டு சுத்தினதுக்கு பெத்தவங்க பட்ட பெருமையும் பூரிப்பும்தான் முக்கியக் காரணம்!
உள்ளூர் , சுத்தபட்டு ஊர் மட்டுமில்லாம குஸ்தி போட்டியில கலந்துக்க போற ஊர்வரை மீராவுக்கு எக்கச்சக்க கேர்ள்பிரன்ட்ஸ். கவிதை எழுதத்தெரியாத கண்ணதாசன் நம்ம மீரா…..
நல்ல சோறு, உடல் பயிற்சி, குஸ்தி பயிற்சி, பொம்பள சோக்கு இதான் மீராவோட இஷ்ட வேலைகள். மீராவோட பழைய கேர்ள்பிரன்ஸ்ல பலபேர் உள்ளூர், சுத்துபட்டுலதான் இருக்காங்க. மனுசன் மறந்தும் கூட ரெண்டு வார்த்தைக்கு மேல பேசமாட்டாப்ல….. அவங்களுக்குலாம் மீரா தன்னோட இளமைக்கால பொக்கிசமான நினைவுகள். மீராவை வெறுத்த பொம்பளைனு ஒருத்தரும் கிடையாது. இந்தாளோட பேச்சு, நடத்தை அவ்வளவு நியாயமா இருக்கும் பழகறவங்கக்கிட்ட!
இப்படி அடங்காத காளையா சுத்தி அலைஞ்ச மீராவுக்கு தண்ணி இறைக்கற கரன்ட் மோட்டார் பெத்தவங்கள பறிச்சி செக் வச்சது. மீரா தன் வாழ்க்கையில முதலும் கடைசியுமா அழுதது அன்னைக்குத்தான். மீராவுக்கு வாழ்க்கைனா என்னனு கொஞ்சம் கொஞ்சமா அப்பதான் புரியவே ஆரம்பிச்சது. மனுசங்கள்ல யார் யார் நம்மமேல அக்கறையா இருக்காங்க? யார் தேவைக்காக பழகறாங்க? யார் பொறாமையில இருக்காங்க இப்படி எல்லாமே புரிஞ்சது. மீராவ பொறாமையால எதிரியா நினைச்சது 99% ஆம்பளைங்கதான்! எல்லாம் மீராவோட உருவம், குணம் இதால வந்த வெனை!
தானே ஆக்கி, தொவைச்சி, காட்ட பார்த்து தனிமை வெறுமைனு மீரா வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கப்பதான் செல்லாயி உருவத்துல வாழ்க்கையில அன்பு, காதலுங்கற விசயங்கள் மீரா வாழ்க்கையில உள்ள வர ஆரம்பிச்சது.
செல்லாயி இந்த கேடுக்கெட்ட மனுசங்க உருவாக்கிய சாதிய ஏற்றத்தாழ்வுகளால தாழ்த்தப்பட்ட வகுப்பாய் பார்க்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவ……. நாலரை அடிக்கு கொஞ்சம் அதிகமா உயரம், மாநிறமா இருந்தாலும் தோல்ல இருந்த வனவனப்பு வெளிச்சம் காட்டும் உடம்பு அவளுக்கு. அதிராத பேச்சு, அதிர்ந்த சிரிப்புனு அவ யார் கண்ணுக்கும் மத்த பொண்ணுங்க மத்தியில தனியா தெரியற இரகம்!
மீராவோட காட்டுல நெல் நடவு வேலைக்கு வந்த பொம்பளைங்கள்ல செல்லாயும் ஒருத்தி. நெல் நடவு ஆரம்பிச்சி, நெல் அறுத்து கதிரடிக்கறதுக்குள்ள மீராவும் செல்லாயும் நெருங்கி இருந்தார்கள். தன்னோட அழகுப் பத்தியான கர்வம் இல்லாம மீரா பழகுன முதல் பொண்ணுனா அது செல்லாயிதான்.
ஒரு சுபயோக சுபதினத்தில் மீரா நாட்டுச் சாராயத்தின் ஒதவியோட தேவையான போதையில இருக்கப்ப, மீரோவோட சைக்கிள் செல்லாயி ஊருக்கு கிளம்பியது.
செல்லாயி அப்பன், அம்மா, அண்ணன்னு குடிசையில இருக்க உள்ள போன மீரா, இந்தந்த மாதிரி செல்லாயிக்கும் தனக்கும் பழக்கம், தான் இன்னார் இன்னார்னு எல்லாத்தையும் சொல்லிட்டு கல்யாணத்துக்கு சம்மதம்னா சொல்லி அனுப்புங்கனு வீட்டுக்கு வந்து மல்லாந்து தூங்கிட்டாப்ல. ஆனா காலையில எந்திரிச்சப்பறம் ஐயோ போதையில போய் உளறிட்டமோனு மீரா நெனைக்கல, தகவல் வருமா வராதானுதான் கவலைப்பட்டாப்ல!
ஒரு மாசமாகியும் தகவல் வரல, பொறுத்து பார்த்து பொறுமையிழந்த மீரா முதல்ல செஞ்சது கல்யாணத்துக்கு தேவையான சில சாமான்களை வாங்கினதுதான். சில ஆளுங்க மூலமா செல்லாயி பத்தி விசாரிக்க பக்கத்து ஊரு காட்டு வேலையில இருக்கறதா தகவல் வர, மீரா சைக்கிள் நேரா பக்கத்து ஊருக்கு கிளம்பியது……
சைக்கிள்ல கதாநாயகன் கம்பீரமா வரத, ரோட்டோர வயல்ல இருந்த செல்லாயி பார்த்துட்டா, ஆனா ஒரு பக்கம் பதட்டம், ஒரு பக்கம் பரவசம் என்ன பண்றதுனு புரியாம மீராவ பாத்தப்படி நின்னா செல்லாயி…..
சைக்கிள்ல இருந்து இறங்காம செல்லாயிய பாத்து வா னு மீரா கையால கூப்ட, செல்லாயி மறுபேச்சில்லாம மண் ஒட்டியிருந்த கை காலோட. ரொம்ப சுமாரான துணியோட வந்து மீரா முன்னால நிக்க, சைக்கிள்ல ஏறச்சொன்ன மீரா நேரா அடிவார முருகன் கோயிலுக்கு போய் தாலியக் கட்டி, அடிவாரத்துல இருந்த தன்னோட பழைய கேர்ள்பிரன்ட் வீட்டுக்கு கூட்டிட்டு போய் நிறுத்தினார் மீரா ……
" நங்கைமா ஒரு சின்ன ஒதவி வேணும்" னு ரொம்ப பவ்யமா மீரா கேட்க நங்கைக்கே ஆச்சரியமா இருந்துச்சி இது இராசப்பதானானு!
" முதல்ல உள்ள வா ராசு ஏதோ கடங்காரன் மாதிரி வெளிய நின்னுக்கிட்டு"னு நங்கை ரெண்டு பேரையும் வீட்டுக்குள்ள கூட்டிக்கிட்டு போக, செல்லாயி சைக்கிள்ல ஏறுனதுல இருந்து இதுவரை ஒரு வார்த்தைக்கூட பேசல!
நடந்த விவரங்களைலாம் மீரா நங்கைக்கிட்ட சொல்ல, நங்கை பொறாமையா செல்லாய பார்த்தாள்.
" நங்கை இந்த பையில அவளுக்கு எனக்கு துணிமணி, பூ, மாலைனு இருக்கு, செல்லாயி தண்ணி ஊத்திக்கனும் அப்பறம் இதலாம் வைச்சி ஜோடிச்சி வுட்டனா நாங்க ஊருக்கு கிளம்பிருவோம்"னு மீரா சொல்ல, நங்கை செல்லாயிய தண்ணி ஊத்திக்கிற இடத்துக்கு கூட்டி போனா……
எல்லாம் முடிஞ்சி நின்ன செல்லாயியை பாத்த மீராவுக்கு ஏதோ சாதிச்ச குழந்தையோட குதுகலிப்பு! நங்கைக்கிட்ட சொல்லிட்டு மாப்பிள்ளை, பொண்ணு கோலத்துல பக்கத்துல இருக்க குறவன்பட்டிக்கு குசியா சைக்கிளை மிதிக்க ஆரம்பிச்சார் மீரா! போற வழியில பார்த்தவங்களாம் வித்தியாசமாவும், ஆச்சரியமாவும், சிரிப்பாவும் பாக்க, குனிஞ்ச தலைய நிமிராம சைக்கிள் பின்னாடி உட்ட்கார்ந்திருந்த செல்லாயி சைக்கிள் சீட்டியை இறுக்கமா புடிச்சிக்கிட்டா!
ஊருக்குள்ள நுழையறப்பவே நாலஞ்சு பொம்பளைங்க. ஆம்பளைங்கனு கூப்ட மீரா, இந்தந்த மாதிரி இன்னார் பொண்ண கட்டிக்கிட்டேன் இவதான் எம்பொண்டாட்டினு சொல்லி வூட்டுக்கு சைக்கிளை விட்டார் மீரா. இதெல்லாமே ஒரு காரியமாத்தான் செஞ்சது மீரா!
பொழுதுசாய பஞ்சாயத்துல இருந்து வரச்சொல்லி மீராவுக்கு தகவல் வந்துச்சி….. செல்லாயியை கூட்டிக்கிட்டு கம்பீரமா போய் மீரா நின்னதும் ஏற்கனவே மீராமேல பொறாமையால இருந்தவனுங்களுக்கும், சாதி, மசிருனு நிக்கறவனுங்களுக்கும் நடுமுடி நட்டுக்குச்சி…….
பஞ்சாயத்து பெருசு ஆரம்பிச்சது…,...
" ராசப்பா நீ என்ன பண்ணிக்கறனு தெரியுதா"
" நான் என்ன குருட்டுப்பயலா?! எனக்கு புடிச்ச, என்னைய புடிச்ச ஒரு புள்ளய கல்யாணம் கட்டியிருக்கேன் இதுல உங்களுக்காலாம் என்னய்யா பிரச்சினை"னு ரொம்ப ரொம்ப கூலா மீரா கேட்க பஞ்சாயத்து கூட்டத்துக்கு கோவத்துல வாயெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிருச்சி! இதே வேறவனா இருந்திருந்தா கம்பத்துல கட்டி வைச்சி அடிச்சிட்டுதான் பஞ்சாயத்தே பேசுவானுங்க மழுமட்டைங்க, ஆனா மீராவ கட்டனும்னு நினைச்சாலே கை கால்ல ஏதாவது ஒன்ன மீரா ஒடைச்சி உட்றுங்கற பயத்தால பஞ்சாயத்து பேச்சுவார்த்தைல போகுது.
" என்னப்பா வயசு வித்தியாசம் இல்லாம வாய்யா போய்யானு பேசிக்கிட்டு, இது நல்லதுக்கில்ல ராசப்பா"
" ஒரு புள்ளய அவ சம்மதத்தோட கல்யாணம் முடிச்சிக்கிட்டு வந்தத பஞ்சாயத்தக்கூட்டி வெசாரிக்கறது சில்ரத்தனமா தெரியலையா"? மறுபடியும் அலட்சியமா கூலா மீரா எதிர்க்கேள்வி கேட்க…….
" ராசப்பா எடக்குலாம் பேசாத, ஊருக்கு ஒரு கட்டுப்பாடு இருக்கு மீறுனா அப்புறம் ஊரோட ஒட்டி வாழ முடியாது சொல்றத சொல்லிட்டோம்"
" அந்த மானங்கெட்ட வாழ்க்கையே எனக்கு தேவ மசிரில்லை. என்னத்த வாந்தி எடுக்கனுமோ சீக்கிரமா எடுத்து தொலைங்க, பொழுது சாஞ்சி இருட்டிருச்சி புதுசா கல்யாணம் பண்ண எங்களுக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கு, நான் ஒன்னும் முட்டிச் செத்த பய இல்ல"னு மீரா சொல்ல, பஞ்சாயத்துல பொம்பளைங்க சத்தமில்லாம சிரிக்க, ராசப்பன் பழைய கேர்ள்பிரன்டுங்கள கண்ணால செல்லாயி எப்படினு விசாரிச்சிட்டு இருந்தான்…..
" இனிமே ஊருக்குள்ள நல்லது கெட்டதுனு ராசப்பனோட எந்தத் தொடர்பையும் யாரும் வைச்சிக்க கூடாது. வைச்சிக்கிட்டா இதேதான் எல்லாத்துக்கும்" னு ஆக்ரோசமா இதான் வாய்ப்புனு பேச ஆரம்பிச்சானுங்க…….
" ரொம்ப நல்லது என் காட்ல கால வைச்சி எவனாவது அவன் காட்டுக்கு போனாலோ, இல்ல ஆடு மாடுனு உள்ள வந்தாலோ சவுக்கால அடிப்பேன். இல்ல ஊருக்காக பயப்படறம் ராசப்பா மத்தபடி உம்மேல எனக்கு எந்த பகையும் இல்ல, நாளைக்கு ஒரு ஆபத்துனா கண்ணுல பாத்துக்கிட்டா இருந்துருவன்னு எவன் என்கிட்ட மனுசனா எதார்த்தம் பேசறானோ அவன் காட்ல கால வைச்சிக்கலாம்"னு மீரா சொல்ல………
மீரா காட்டை தாண்டி போக வேண்டியவங்களுக்கு படபடனு பதட்டம் வந்து, அடுத்து மீரா சொன்னத கேட்டு நிம்மதி ஆனார்கள்!
"கடைசியா சொல்றன் பைத்தியக்காரத்தனமா பஞ்சாயத்து மசிருனு சாதி வெறியில ஒளறிக்கிட்டு இருக்காம மனுசனா யோசிங்க, கட்ன பொண்டாட்டிய மதிச்சி நடத்தி சந்தோசமா இருங்க, முதல்ல பொவில (புகையிலை), வெத்தலய போட்ட வாய நல்லா கழுவிக்கிட்டு பொண்டாட்டி பக்கதுல போங்க"னு சொல்லிட்டு மீரா செல்லாயி கைய புடிச்சிக்கிட்டு சாவகாசமா வூட்டுக்கு கிளம்பியது!
பஞ்சாயத்துல இருந்த அத்தனை கல்யாணம் ஆன, ஆவாத இளவட்ட பொம்பளைங்களுக்கு மீரா அப்ப இருந்தே கதாநாயகன்தான். இன்னைக்கு முழுசா ஒருத்தியோட வாழபோறனு நினைக்கறப்பதான் செல்லாயி மேலத்தான் பொறாமைப்பட்டாங்களே ஒழிய மீரா நல்லா இருக்கனும்னுதான் நினைச்சாங்க!
மீராவின் குடிசையில் இரு உயிர்கள் கரைய ஆரம்பித்ததிருந்தது படுக்கையில்!
---தொடரும்---
பிளாஷ்பேக்!
மெதுவா மீரா - செல்லாயி குடும்ப வண்டி காதல், காமம், காட்டு வேலைனு நகர ஆரம்பிச்சது. நகர ஆரம்பிச்சதும் மீரா செஞ்ச மொத வேலை செகன்ட்டா வெலைக்கு வந்த புல்லட்ட வாங்குனதுதான். வேற ஒன்னுமில்ல தான் நல்லா இருக்கறத பாத்து ஊர்க்காரனுவ வயிறெரியனும் அதுக்குத்தான். நீங்க எவனும் இல்லனாலும் நான் நல்லாதான்டா இருப்பனு காட்டத்தான்…..
காட்டுனாலும் மரண காட்டு காட்னாப்ல மீரா….. செல்லாய வலுக்கட்டாயமா புல்லட்ல ஏத்திக்கிட்டு ஊர ரவுண்ட் வரது மீராவுக்கு குஷியான விசயம். ஊருக்குள்ள இருக்க பல புருசனுங்க தன் பொண்டாட்டிக்கிட்ட வசவு வாங்க இந்த புல்லட் பவனி முக்கியக் காரணம்….. ராசப்பன பாத்தியா பொண்டாட்டிய அப்படி வைச்சிருக்கான் இப்படி வைச்சிருக்காங்கறதுதான் பல குடும்பத்துக்குள்ள சண்டைக்கான காரணமாவே இருந்துச்சி! பொம்பளைங்க நாலு பேரு ஒன்னா சேர்ந்தா செல்லாயியோட உழைப்ப, துணிமணிய, நகை நட்ட பத்தி பேசறதுதான் வாடிக்கையா இருந்துச்சி!
அதுவும் பொண்டாட்டிய நல்ல துணிமணி உடுத்தச் சொல்லி ஊர ரெண்டுதாரம் ரவுண்ட் வந்து அப்பவே மாசத்துக்கு ஒருக்கா சினிமாவுக்கு கூட்டிட்டு போவாப்ல மீரா! இந்த சினிமாவுக்கு போறது, நல்ல துணிமணி செல்லாயிக்கு வாங்கித் தரதெல்லாம் ஊர்க்காரனுங்க வயிறெரிய இல்ல, செல்லாயி மேல இருந்த காதலால…..
கல்யாணம் ஆன புதுசுல மீரா காட்டுக்கு வேலைனு யாரும் வரல, வந்தா மத்த காட்டுக்காரங்க வேலைக்கு கூப்ட மாட்டாங்கனு பயம். அந்த நேரத்துல மாட்டுக்கு ஈடா மண்ணுல கெடந்து உழைச்சா செல்லாயி. மூனு ஆம்பளைங்க ஆரோக்கியத்த ஒடம்புல வைச்சிருந்த மீரா உண்மையாவே காட்டுல மாடு மாதிரிதான் உழைச்சாப்ல…… தள்ளி வைச்ச ஊர்க்காரனுங்க எப்படா ராசப்பன் வந்து கால்ல விழுவானு காத்திருக்க மீராவோ செல்லாயிங்கற தனி உலகத்துல வாழ்ந்தாப்ல…. நாளாக நாளாக ஊர்க்காரனுங்கதான் மீராக்கிட்ட பேச ஆரம்பிச்சானுங்க…..
காட்டு வேலைக்கு ஆள் கெடைக்காம கஷ்டப்பட்டப்பதான் மீரா முக்கியமான ஒரு முடிவை எடுத்தாப்ல. செல்லாயி குடும்பத்த கூட்டிக்கிட்டு வந்து காட்டுல நல்லதா மண் சொவரு வைச்சி புதுக்குடிசை கட்டி குடி வைச்சாரு…..
ஊருக்குள்ள ஒரே சலசலப்பு, கடுமையான எதிர்ப்பு…… மறுபடியும் பஞ்சாயத்துனு ஓலை வேற……
இந்த முறை தனியா பஞ்சாயத்துக்கு போன மீரா யாரையும் பேசவிடல, தான் பேசி முடிச்சதும் அங்க நிக்கவும் இல்ல….. மீரா பேசினது இதைத்தான்……
" ஊர விட்டு தள்ளி வைச்சவன பத்தி உங்களுக்கு என்ன கவலை வெங்காயம்லாம்?!
என் வூட்ல, நிலத்துல நான் என்ன வேணா பண்ணுவன். வேணும்னா போலீஸ்ல போய் கேஸ் குடுங்க! அவங்க வரட்டும் நான் சொல்லிக்கறன்……
உள்ளூர் கடையில நான் எந்த பொருளும் வாங்கறதில்ல…… டவுன்ல புல்லட்ல என் பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு போய் வாங்கிட்டு வரன்!
உள்ளூர் கெணத்துல தண்ணி எடுக்கறதில்ல,
என் வூட்டு கெணத்துல கெடக்கற தண்ணியே ஏழு ஊருக்கு போதும்!
உள்ளூர் கோயில்ல கும்பிடறனு நிக்கறதில்ல.
எனக்கு சாமி கும்புடற பழக்கமும் இல்ல,
எம் பொண்டாட்டி வந்து நின்னுர கூடாதேனு வூட்டு வாசல்லயே செலை வைச்சி குடுத்திருக்கேன்!
என் காட்டுல வெளையறத எதையும் இங்க விக்கறதில்லை,
வெளையறத டவுன்லதான் விக்கறன்!
இப்புடி உங்க சகவாச மசிரே வேணாம்னுதான் கொஞ்சம் கூட ஒட்டாம, எங்கிட்ட பேசறவங்கக்கிட்ட பேசறதோட நிறுத்திக்கிட்டு போய் தொலைங்கடானு போறன். மீறி சும்மா நசநசனு பைத்தியக்கார நாய்ங்க மாதிரி கொழச்சிங்கனா நேராபோய் கேஸ குடுத்து வக்காளி உள்ள தள்ளி கேஸூ கோர்ட்டுனு அலைய வுட்றுவன். மூடிக்கிட்டு இருந்திங்கனா நல்லது இல்லனா நாசம் பண்ணி முடிக்கற வரை ஓயமாட்டன் சொல்லிபுட்டன்"
மெதுவா ஆரம்பிச்ச மீரா கடைசியா உருண்ட நெஞ்சு திமிற சிங்கம் மாதிரி கர்ஜனை பண்ணிட்டு புல்லட்ட ஸ்டார்ட் பண்ணி கிளம்பி போய்ட்டாப்ல!
அதுக்கப்புறம் ஒரு பயலும் செல்லாயி குடும்பத்த பத்தி வாயத் தொறக்கல. ரெண்டு குடும்பமும் காட்ல உழைச்சாங்க வர இலாபத்துல செல்லாயி குடும்பத்துக்கு தேவைக்கு அதிகமாவே குடுத்தாரு மீரா…. மீராக்கிட்ட மட்டுமே பேசிக்கிட்டு பொழுத தாட்டுன செல்லாயிக்கு இப்ப தன் குடும்பம் கூட இருக்கறது பெரிய சந்தோசமா இருந்துச்சி!
குடும்ப வண்டி இயல்பா நல்லா வேகமா ஓட ஆரம்பிச்ச இந்த காலத்துல செல்லாயின் பேச்சு குடும்பத்துல முக்கியமான ஒன்னா மாறி இருந்துச்சி. மீராவுக்கு பொண்டாட்டிக்கிட்ட அதிகாரம் பண்ற பழக்கமோ, ஆசையோ வந்ததே இல்லை.
நாட்டுச்சாராயம் ஓவரா போறன்னைக்கு புல்லட்ட கொண்டாந்து ஊர் நடுவுல நிறுத்திக்கிட்டு பஞ்சாயத்து பேசறனு இருக்க சில ஆளுங்கள பேரச்சொல்லி சண்டைக்கு கூப்டறது மீராவோட பழக்கம். மீரா இப்புடி கூப்டறப்ப ஒரு பய வந்ததில்லை. இது மட்டும்தான் செல்லாயிக்கு மீராக்கிட்ட புடிக்காத ஒரே விசயம். அன்னைக்கு ராவு முழுசா செல்லாயி பேச மாட்டா, பக்கத்துல படுக்க மாட்டா….
ஆனா விடிஞ்சதும் செல்லாயி பாடற பாட்ட கேட்காம மீராவால தப்பிக்கவே முடியாது. தப்பிச்சாலும் வந்து மறுபடியும் சிக்கறப்ப பாட்ட கேட்டுத்தான் ஆகனும் மீரா….. இதாலயே மீரா தப்பிக்கறது இல்ல……. செல்லாயி திட்டுனாலும் மீரா வருத்தப்பட்டதில்லை. மீராவ பொறுத்தவரை பொண்டாட்டிங்கற எண்ணத்த விட அவ அவரோட காதலிங்கற எண்ணம்தான் மனசுக்குள்ள….
" மாடு மாதிரி ஒழைச்சும் மனுசி வார்த்தைக்கு இங்க எங்க மரியாதை இருக்கு"னு ஆரம்பிப்பா செல்லாயி……
" இப்ப என்னத்த உனக்கு மரியாதை இல்லாம போச்சுங்கறன் செல்லா"னு ஒன்னுமே தெரியாத மாதிரி பாவமா கேட்பாரு மீரா……
" நான்தான் சீவக்கட்ட ஆச்சே எனக்கெதுக்கு மரியாதை"
" அட பேசறதுதான் அதுக்குனு இப்புடியா பேசறது"
" அப்புறம் குடிச்சா வூட்டோட இருனு சொல்லி சலிச்சி போச்சி என்னைக்கு கேட்டிருக்க?!"
" முழுசா வூட்டோட மட்டும்தான செல்லாயி இந்த ஒரு வருசமா மனுசங்கக்கிட்ட பேசக்கூட வழியில்லாம வாயிருந்தும் ஆடு மாதிரி ரெண்டு பேரும் கெடக்கறோம்"னு மீரா உண்மையாவே வருத்தமா சொல்ல, செல்லாயி உடைஞ்சி போயிட்டா,
காத்து மாதிரி சுத்தி சந்தோசமா திரிஞ்ச மனுசன், நம்மள பாக்கபோயி இன்னைக்கு நாலு சொவத்துக்குள்ள வூடு, காடுனு கெடக்குதுனு செல்லாயி மனசுக்குள்ள மருவ ஆரம்பிச்சா……
" அதுக்கில்ல மீசைக்காரரே போதையில நிதானம் தப்பி இருக்கப்ப எதாவது நாலஞ்சி ஆளுங்க சேந்து கெட்டதா பண்ணி புட்டா என்னாகுங்கற பயம்தான் எனக்கு. வேற ஒன்னுமில்ல நீங்க போய் தண்ணிய மோந்து ஊத்திக்கிட்டு வாங்க சாப்ட்டு காட்டுக்கு போவிங்க"
" ம் என்னைக்கு இவனுவளாம் மனுச பயலுகளா மாறுவாங்கனுதான் தெரியல"னு சலிச்சப்படியே மீரா வழக்கமான வாழ்க்கைக்கு போயிடுவாப்ல….
செல்லாய கட்டிக்கிட்டு வந்த இந்த வருசத்துல இப்பதான் மொத திருவிழா வருது. திருவிழாவுக்கான ஏற்பாட்டுக்க கூட்ற இந்தக் கூட்டம்தான் ஊருக்குள்ளவும், மீரா - செல்லாயி வாழ்க்கையிலயும் ஒரு மாற்றம் வர காரணமா இருந்திச்சி!
திருவிழா ஏற்பாட்டுக்கான கூட்டம் ஆணு, பொண்ணு, பெருசு, சிறுசுனு கூட ஆரம்பிச்சது அப்பதான் மீராவுக்கு அவங்கம்மா வழியில மாமன் முறையான பொன்னுச்சாமி மாற்றத்துக்கான வெதைய போட்டுவுட்டாரு…..
" இந்த கோயில் இருக்க நெலம் மட்டும் இல்லாம, வெளிய இருந்து சாதி சொந்தம்னு இந்த குறவன்பட்டிக்கு வந்தவங்க குடும்பங்களுக்கு தங்க எடத்த காம்பிச்சி, நெலத்த திருத்தி கழனியாக்க எடத்த காமிச்சவிங்க நம்ம ராசப்பனோட பூட்டனுங்கதான்.
இன்னைக்கு இங்க காடு, வூடுனு சுத்துபட்டுல இருக்க பலபேருக்கு அடையாளம் வைச்சது அவிங்கதான். இந்த வரலாறுலாம் ஆதியில இருந்து இந்த நெலத்துல இருக்க எங்களுக்கு நல்லா தெரியும்"னு பொன்னுச்சாமி சொல்ல வந்திருந்த கூட்டம் அமைதியா முணுமுணுக்க ஆரம்பிச்சது……
பஞ்சாயத்துல தீர்ப்பு சொல்றங்கற ஆளுங்கள்ல ஒருத்தன் " சரி இப்ப அதுக்கு என்னா வந்துச்சாம்"னு கேட்க பொன்னுச்சாமிக்கு சுர்னு ஏறிக்கிச்சி……
" என்ன எங்கையோ இருந்து வந்து சாதிய காட்டி ஒட்டிக்கிட்ட கூட்டத்துக்கு சவுண்ட்டு ஜாஸ்தியா வருது…… நீங்களாம் யாருயா எம் மருமவன ஊரவுட்டு தள்ளி வைக்கறது. வூட்ல பொட்ட புள்ளய கல்யாணம் பண்ணி குடுக்காம வைச்சிருக்கோமேனு பொறுத்து போனது தப்பா போச்சு. டேய் பாண்டியா போய் நான் கூப்டனு, இங்க நடந்தத சொல்லி ராசப்பன இழுத்தாடா"னு பொன்னுச்சாமி உறும, பூர்வீகக்காரங்க, வெளிய இருந்து வந்தவங்கனு ஊரு மனசளவுல ரெண்டா பிரிஞ்சி நின்னது……
போன பாண்டியன் செல்லாயிக்கிட்ட பேசிக்கிட்டு இருந்த ராசப்பன்கிட்ட விசயத்தை சொல்ல, ராசப்பன் வெரலு தான மீறுக்க ஆரம்பிச்சது….. கெளம்புன ராசப்பன பக்குவமா பேசிட்டு வர எச்சரிக்கை பண்ணி அனுப்பி வுட்டா செல்லாயி!
கூட்டம் நடக்கற இடத்தக்கு வந்த மீரா எதுவும் பேசாம அமைதியா நின்னாப்ல……
" சரி பொன்னுச்சாமி திருவிழாவ பத்தி நாளைக்கு பேசிக்கலாம் இப்ப ராசப்பன் பிரச்சினைய பேசி முடிப்போம்" னு பஞ்சாயத்து பெருசு சொல்ல பொன்னுச்சாமி பேச ஆரம்பிச்சார்…….
" நான் போன வாரத்திலயே எங்கவழி ரத்த சொந்தங்கிட்ட பேசிட்டுதான் இங்க வந்து பேசறன். ராசப்பன் ஒரே நேரத்துல அப்பன், அம்மானு பறிக்கொடுத்த பய, இப்ப ஊருக்குள்ளயும் இப்புடி தள்ளி வைக்கறது மனுசப் பொறப்புக்கு செய்ற துரோகம். அவன் மேல போட்ட தண்டனைய திரும்ப வாங்கிக்கனும் இல்லனா எங்க வழி சொந்தங்க நாங்க தனியா பொழங்கிக்கறோம். இதான் முடிவு யோசிச்சி சொல்லுங்க"னு பொன்னுச்சாமி சொல்ல, ஊருக்குள்ள மனுசனா ஒரு ஆளு இருக்கான்பானு சந்தோசமானாப்ல மீரா…….
கூட்டத்துல கசமுச கசமுனு பேசி கடைசியா ஒருத்தன் தீர்ப்பு சொல்ற சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் ரேன்ஞ்சுக்கு ஆரம்பிச்சான்…….
" நமக்கு நம்ம இரத்தம் ராசப்பன ஏத்துக்கறதில்ல எந்த பிரச்சினையும் இல்ல,
அவன் நல்லது கெட்டதுனு பொழங்கட்டும்,
ஆனா அவன் கட்டிக்கிட்ட புள்ளைய நல்லது கெட்டதுனு அனுமதிக்க முடியாது….
ராசப்பன் தனியா எதுக்கும் வந்து போய்கிட்டும்"
மறுபடியும் மனசொடிஞ்ச ராசப்பன் பேச ஆரம்பிச்சான்…… ஆனா இந்த முறை கோவத்துக்கு பதிலா அறிவா பேசினான். வாழ்க்கை கொஞ்சக் காலத்துல நிறைய கத்து குடுத்திருந்தது அவன் பேச்சுல தெரிஞ்சது…
" எனக்கு இதுல துளியும் சம்மதம் கிடையாது. என் பொண்டாட்டிக்கு இல்லாத மரியாத எனக்கு தேவயில்ல,
நாங்க எங்க ரத்த வழி சொந்தங்களோடவே பொழங்கிக்கறோம்,
அதேமாதிரி கோயில் நெலம், கோயில் எங்க ரத்த வழி சொந்தங்களோடது அதனால இனிமே இந்த கோயில் சம்ந்தமான எதையும் நாங்கதான் பாப்போம்.
நாளைக்கு பொன்னுச்சாமி மாமன் தலைமையில திருவிழாவுக்கான கூட்டம் நடக்கும் விருப்பப்படறவங்க கலந்துக்கலாம்"னு பல உள்குத்துகள வைச்சி பேசி மீரா தீர்க்கமா பேசி முடிக்க…..
ஒருபக்கம் பொன்னுச்சாமிக்கு பெரும, மறுபக்கம் வெளிய இருந்து இங்க வந்த குடும்பங்களுக்கு ஊர்ல இருந்த உரிமை பறிபோவுதேனு பதட்டம்! மீரா வைச்சது பர்பெக்ட் செக் மேட்!
அடாவடி தொடரும்!
பிளாஷ்பேக்!
திருவிழா நடத்தறுக்காக கூட்டப்பட்டக் கூட்டம் பொன்னுச்சாமி, மீராவால பெரிய உரிமைப் பிரச்சினையா மாறி நிற்க, பொன்னுச்சாமி பேச ஆரம்பிச்சார்….
" என் தங்கச்சி மவன் ராசப்பன் சொன்னதுல எங்களுக்கு சம்மதம், இனிமே முடிவ ஊர் பஞ்சாயத்துதான் சொல்லனும்"
ஊர் பஞ்சாயத்துல முக்கியமான ஆளுங்கள்ல முக்காவாசி பேரு வெளிய இருந்து இங்க வந்தவங்கதான். எந்த முடிவ எடுத்தாலும் அது நட்டமாத்தான் போவும்னு பஞ்சாயத்து இழுக்க ஆரம்பிச்சது…….
" இது ஒன்னும் சரிப்பட்டு வர மாதிரி தெரியல மாமா, நாம நாளைக்கு கூட்டத்த கூட்டி பேசிக்குவோம் நான் இப்ப கிளம்பறேன்"னு மீரா பொன்னுச்சாமிக்கிட்ட சொல்லி வேணும்னே அவசரம் காட்ட……
" அட இரு மருமவனே என்னனு பாத்துட்டு ஜோடியாவே கெளம்பிருவம்"னு பொன்னுச்சாமி சொல்ல, மீரா தரையில உட்கார்ந்தார்.
ஒருவழியா வரப்போற பாதிப்ப குறைச்சிக்கற யோசனையில பஞ்சாயத்து ஆளு முடிவா பேச ஆரம்பிச்சான்……
" ராசப்பனோட பூட்டனுங்க பண்ண "சில" நல்ல காரியங்களுக்காக நாம ராசப்பனை பாக்க வேண்டியிருக்கு".............. டக்குனு இடையில் வந்தார் மீரா…….
" யோவ் அதென்ன சில?! என் பூட்டனுங்க உங்களுக்கு செஞ்சதுதான் இன்னைக்கு உங்க மொத்தமே! அதென்ன நீ எனக்கு பாவம் பார்க்கறது?! ஒழுங்கா வார்த்தைய அளந்து வுட்டனா நாளைக்கு தனிக்கூட்டம் நடக்காது இல்லனா அடக்கி வைச்சதலாம் காட்ட வேண்டியதா இருக்கும்" னு மீரா சீற,
" அட நீ உட்காரப்ப முடிவு பண்ணத வேற யாராவது ஒருத்தர் பேசட்டும்"னு பஞ்சாயத்துல வேற ஒருத்தனை பேச வுட்டாங்க…..
" ஊரோட ராசப்பனும், ராசப்பனோட ஊரும் பொழங்கலாம்,
கோயில் நிர்வாகம் பழைய படியே தொடரும்.
பூர்வீகம், வந்தவங்கனு ஒரே ஊருக்குள்ள, சாதிக்குள்ள பிரிஞ்சா அது மத்த பயலுகளுக்கு கொண்டாட்டமா போயிரும். அவ்வளவுதான்!"
இந்த முடிவு மீராவுக்கு திருப்திதான் ஆனா இவனுங்கள விடக்கூடாதுனு……
" எல்லாம் சரி ஆனா இனி எல்லா திருவிழாவுலயும் எங்க பூட்டன் மூக்கையன் வகையறாவுக்கு தனி பூசை நடக்கும், நடத்துவோம்.
ஏன்னா ஆள் யார்னு ஊரு மறந்து போனதாலதான் இங்க நான் தனியா நிக்கிறன். நாளைக்கு எங்க வகையறாவுல யாருக்கும் இந்த நெலமை வரக்கூடாதுனா இந்த மாதிரி தனி பூசை அது இதுனு தேவ! என்ன மாமா நான் சொல்றது?!
" ரொம்ப சரிதான் மருமவனே, பூட்டன் மூக்கையன் பேர்ல தனி பூசை நடக்கனும்!"
" மாமா இந்த பூசைய நீங்க முன்ன நின்னு நடத்தறது பொருத்தமாவும் சரியாவும் இருக்கும். அடுத்து இத யார் ஏத்துக்கிட்டாலும் ஏக்கலனாலும் பூசை நடக்கும். இது என்ன பெத்தவங்க மேல சத்தியம்"னு பேசி முடிக்க, ஒருவழியா சமாதானமா கூட்டம் முடிஞ்சு மக்க களைய, மீரா பொன்னுச்சாமிய வூட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்துச்சி…..
" ஏ செல்லா இது நம்ம பொன்னுச்சாமி மாமன்"னு ராசப்பன் சொல்ல, செல்லா சந்தோசமா மரியாதையா தலைய ஆட்டி தண்ணி கொண்டுவந்து குடுத்தா…….
" டே மருமவனே என் தங்கச்சி போனாலும் அவள மாதிரியே உனக்கு ஒருத்தி கிடைச்சுட்டா வுட்றாத"
" எங்க மாமா வுட, முந்தானையில முடிஞ்சிருந்தாலும் பரவாயில்ல, செல்லா மடியில இல்ல பெத்த புள்ளையா வைச்சிருக்கா என்னைய"னு மீரா சொல்ல, டக்குனு கண்ல தண்ணி கரைக்கட்ட அத காட்டிக்காம வூட்டுக்குள்ள போனா செல்லாயி!
மீரா வூட்டு முன்னால பெரிய வாசலோட, வேம்பு, புங்கைனு மரம் நெறஞ்சி அவ்வளவு காத்தோட்டமா வெக்கையிலும் கொஞ்சம் சிலுசிலுனு, எப்பவும் ரெண்டு கட்டிலோட காட்சி இருக்கும்.
கட்டில்ல உட்கார்ந்திருந்த பொன்னுச்சாமிக்கிட்ட ராவு சோறு சாப்ட்டுட்டுதான் போகனும்னு மீரா வெடக்கோழி ஒன்ன புடிக்க, பஞ்சாயத்துல புழங்கலாம்னு தீர்ப்பு கிடைச்சதால இதுவராத வராத ஊர்க்கார கூட்டாளிங்க மூனுபேர் வந்தானுங்க…. சரினு வந்தவங்கள கூப்ட்டு வாசல் கட்டில்ல உட்காரச் சொல்லி, செல்லாய தண்ணிக் குடுக்கச் சொல்லிட்டு, இன்னொரு வெடக் கோழிய சேர்த்தி புடிச்சாரு மீரா…….
" டே வந்த மூனுபேரும் அங்கையே ஒக்காரமா இங்க வாங்க, அப்புடியே கோழிய பொசுக்கி, வெட்டனும்னா ஆளுக்கொரு வாயா சீக்கிரம் சாப்டலாம்"னு மீரா தோஸ்த்துக்கள கூப்பிட மூனு பேரும் குசியா வந்தாங்க….. இத்தன நாள் தள்ளியிருந்தும் மீரா நம்மள கோவிச்சிக்கல, பழைய மாதிரியே பேசறானேங்கறதுதான் மூனு பேர் சந்தோசத்துக்கும் காரணம்!
"ஏன்டா மாப்ள காட்டுல இப்புடி கோழிக்கறியாக்கி, நாட்டுச் சாராயம்னு நாக்குல தீண்டி ஒரு வருசம் இருக்குமுல"னு கருப்பன் மீராக்கிட்ட கேட்க……
" விடுடே விடுடே இன்னைக்கு வூட்ல வைச்சி தீண்டுடிருவோம்"னு மீரா சொல்ல, முத்தான், பாண்டியன், கருப்பனுக்கு குசியோ குசி…..
அப்புடியே கடந்த கால பேச்சோட கோழிய டக் டக்னு சுத்தம் பண்ணி வெட்டி முடிச்சாங்க நாலு பேரும்…… செல்லாயிக்கிட்ட கறிய குடுக்க வூட்டுக்குள்ள போனாரு மீரா……
" செல்லா போனது எல்லாம் நல்லபடியா முடிஞ்சது…… இனிமே ஆடு மாடு மாதிரி இருக்க வேணாம். சந்தோசமா இந்த கறிய ஆக்கு….. ரொம்ப நாள் கழிச்சி வூட்டு வாசல்ல ஊர்க்காரங்க, தோஸ்த்துங்க வந்துருக்காங்க வயிறார போட்டு அனுப்புவம்"
" நீ இனிமே சாராயத்த குடிச்சுப்புட்டு நடுராத்திரியில ஊர்நடுவுல ஒத்தையா நின்னு கத்தமாட்டங்கற சந்தோசம்தான் எனக்கு ,மத்த ஒன்னும் இல்ல. ஏன்னா இங்க யாரு எங்கூட பேசலனாலும் பேசுனாலும் அது எனக்கு பெருசில்ல…. நீ இருக்க, உம்மனசுல நானிருக்கன் அதுபோதும். ஊரு, உலகம்லாம் எனக்கு ஒன்னுமே இல்ல"னு செல்லாயி சொல்ல, மீரா இதயத்துக்குள்ள இருந்த மொத்தக் காதலையும் திரட்டி, செல்லாயி உதட்ட இழுத்து முத்தமொன்ன குடுத்துட்டு வெளிய போனார்…… உண்மையாவே செல்லாயிக்கு சந்தோசமே எப்படிலாம் வெளையாட்டு, பொண்ணுங்கனு சுத்துன மனுசன் இன்னைக்கு தான் மட்டுமேனு இருக்கறதுலதான்!
5 லிட்டர் கேன் ஒன்ன கொண்டாந்து ரெண்டு கட்டிலுக்கும் நடுவுல மீரா வைக்க பொன்னுச்சாமி தவிர மத்தவங்களுக்கு புரிஞ்சது, சுத்தமான நாட்டுச் சாராயத்த குடிக்க போறம்னு! ஏன்னா ஆள கவுத்தாத போதை, அளவில்லாத பசியையும், செரிமானத்தையும் தரது நாட்டுச் சாராயம்! செல்லாயி கூட்டி வைச்ச கோழிக்கறி கொழம்பு வாசம், வாசல்ல 5 பேரு நாக்குல தண்ணி ஊற வைச்சது!
" மாமோய் உன் வாழ்நாள்ல இப்புடி ஒரு நல்ல சாராயத்த குடிச்சிருக்க மாட்ட. இன்னைக்கு குடிச்சி பார்த்து சொல்லு"னு மீரா பெரிய டம்ளார்ல பாதி ஊத்தி குடுக்க, எடுத்து குடிச்ச பொன்னுச்சாமிக்கு நடுமுடி நட்டுக்க ஊறுகாய்ல விரல வைச்சார்…….
அப்புறம் அவங்கவங்க தேவைக்கு ஊத்திக்க, பெரியத் தட்டுல வெந்த கறிய போட்டுக் கொண்டாந்து வைச்ச செல்லாயி அளவா குடிங்க சாப்டாம போயிரக்கூடாதுனு சொல்லி சோறு வைக்க போனா…….
பழைய கதை, குடும்பக் கதை, ஊர்க் கதைனு சாராயத்தோட ஓட ,ஒருவழியா பசி வந்து ஆட்டவும் சாப்பிட தயாராச்சு உழைக்கும் வர்க்கம்!
எல்லாம் பெரிய பெரிய தட்டுங்க, மீரா அம்மா வாங்கி வைச்சது மீரா சாப்டறதுக்கு. வயிறு நெறய நெறய பரிமாறினா செல்லா. சாப்ட்டு முடிச்சி வந்தவங்க கிளம்ப கருப்பன் மட்டும் நின்னான்……
" ஏன்டா மாப்ள பொண்டாட்டி தொறத்தி எதாவது உட்ருச்சா இல்ல மூனுநாளா"னு மீரா லந்து பேச செல்லாயி தலையில குட்டி வைச்சா….
" இல்ல மாப்ள ஒன்னு கேட்கனும், ஆனா கேட்டா திட்டுவியோனு பயமா இருக்கு"
" அட பயப்படாத அதுலாம் பழைய ராசப்பன் இப்ப செல்லாயி ராசப்பன் கேளு கேளு"னு மீரா சொல்ல செல்லாயி பேசலானாள்…..
" அண்ணா எதா இருந்தாலும் சொல்லுங்க அது ஒன்னும் திட்டாது"னு செல்லாயி தைரியம் குடுக்க,
" அதுவந்து மாப்ள தங்கச்சிக்கு ஜாக்கெட்டு எங்க தைக்கற"னு தயங்கி தயங்கி கேட்டு முடிச்சான் கருப்பன். மீராவும் செல்லாயிம் வந்த சிரிப்ப அடக்க முடியாம பொரையேற சிரிச்சாங்க…..
" அட குள்ள பயலே இதுக்காடா இவ்ளோ இழுவை, டவுன்லதான்டா! சரி இதக்கேட்டு என்ன பண்ண போற"
" மாப்ள நீ விதவிதமா துணி, நகை நட்டுனு வாங்கிக் குடுக்கற, புல்லட்ல தங்கச்சிய கூட்டிட்டு போயிடற, அத பாக்கற இவளுங்க வூட்ல போட்டு பாடா படுத்தறாளுங்கடா"
" ஹஹஹஹ கேட்கவே காது குளிருதுடா மாப்ள மேல சொல்லு"
" டே மாப்ள இந்த ஜாக்கெட் பிரச்சினையால வந்த சண்டையால அவ பக்கத்துல படுத்து ஏழெட்டு நாள் ஆவுது. இந்த வாரத்துல தங்கச்சிக்கூட அனுப்பி வைக்கலாம்னுதான் கேட்டன்"
" ஹஹஹ சரிடா மாப்ள அனுப்பி வைப்போம்"னு இன்னமும் சிரிப்ப நிறுத்தாம மீரா சொல்ல கருப்பன் நிம்மதியா கிளம்பி போக அப்படியே வானத்துல நிலாவை பாத்த படி கட்டில்ல மீரா மல்லாற………
" ம்க்கும் வூட்ல ரெண்டு பேரா ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தரு பாத்துக்கிட்டு இருக்கோமே மூனாவதா ஒன்ன கொண்டு வரலாம்னு இல்லாம நிலாவ பாத்துக்கிட்டு"னு செல்லாயி பொய்கோபத்துல பேச, மீரா பொண்டாட்டினா இந்த வாய்கூட இல்லனா எப்புடினு குடிசைக்குள்ள போனது அந்த காதலின் சின்னங்கள்!
வான்நிலா காய, பெண் நிலவொன்று சூரியனைச் சுட்டது முத்தங்களால்!
---தொடரும்---
பிளாஷ்பேக்!
ஒரு விசயத்த இங்க சொல்லவேண்டியது முக்கியம். கதை இப்ப நடக்கற காலம் 1985!
மீராவோட வயசு அப்ப 26 !
ஊருக்குள்ள ஒட்டுன சந்தோசத்துல காட்டு வேலைக்கு இன்னைக்கு லீவ் வுட்டுட்டாரு மீரா…. செல்லாயி எந்திரிச்சதே எட்டு மணிங்கறது பல சங்கதிகள சொல்லாம சொன்னது…..
காலையில எந்திரிச்ச மீரா செல்லாய தயாரகச்சொல்லி தானும் தாயாராகி வண்டிய எடுத்தார்…… சந்தன நிற பட்டுச்சேலைக் கட்டி, தலையில பூவுனும், நெற்றி வகிட்டுல குங்குமம்னும், காலு, கை, காது, மூக்கு, கழுத்துனு மீரா அம்மாவோட நகைங்களும், மீரா வாங்கித்தந்த நகைகளும் மின்ன, புருசன் தந்த காதலெனும் கர்வத்தோட புல்லட்ல ஏறி மீரோவோட தோளைப் பற்றி உட்கார்ந்தா செல்லாயி…… தாலிக்கட்டி முத நாள் சைக்கிள்ல புடிப்புக்கு சீட்டிய புடிச்சிக்கிட்டு குனிஞ்ச தலையோட வந்த செல்லாயின் நிலைமையும், தலையும் இப்ப நிமிர்ந்திருந்தது…..
குறுவன் பட்டியில பேண்ட் போடற நாலைஞ்சி பேர்ல நம்ம மீராவும் ஒரு ஆளு!
கருப்பு பெல்பாட்டம் பேண்ட், மஞ்சள், நீலம், சிகப்புல பூ போட்ட பெரிய காலர் வைச்ச இறுக்கமான சட்டைனு மீரா லுக் கலக்கலா இருந்துச்சி…..
புல்லட் நேரா ஊர் கோயில் வாசல்ல நிக்க செல்லாயி இறங்கினாள்! சைக்கிள் மாதிரி ஒத்த கையில புல்லட்ட இழுத்து சென்டர் ஸ்டேன்ட் போட்டுட்டு கோயிலுக்குள்ள மீரா போக, வாங்கிட்டு வந்துருந்த கற்பூரம், ஊதுவத்திய செல்லாயி கொளுத்தி வைக்க, ரொம்பநாள் கழிச்சி செல்லாயியோடு மீராவும் சாமி கும்பிட்டார்!
அடுத்து புல்லட் நேரா கருப்பன் வூட்டு வாசல்ல போய் நின்னு ஹாரன் அடிக்க கருப்பனும், வள்ளியும் வாசலுக்கு வந்து ஆச்சரியத்துல நிக்க………
" ஏன்டா மாப்ள வூடு தேடி வந்தா வாயவே தொறக்காம நிக்கறிங்க, காலையில ஏதும் பஞ்சாயத்த கூட்டி தீர்ப்ப மாத்தி புட்டானுங்களா வேலையத்தவனுங்க"னு மீரா கேட்க…..
கருப்பனும் வள்ளியும் பதறி " ஐய்யய்யோ வாங்க வாங்க உள்ள"னு கைய புடிச்சி கூட்டி போனாங்க………
" டே மீரா சாப்டாம போவக்கூடாது, நான் உன்னிய மாதிரி சொந்த காட்டுக்காரன் கெடையாது, கோழி ஆடுனு சட்டுனு அடிச்சி போட, இரு போய் கடையில ஏதாவது புடிச்சிட்டு வந்திடறன், ஏ புள்ள டீ தண்ணி ஏதாவது வை"னு கருப்பன் சொல்ல…..
" அண்ணா அதலாம் ஒன்னும் வேணாம். வூட்ல என்ன இருக்குதோ அத செய்ங்க, நாங்களும் சாப்டாம போவப்போறதில்ல"னு செல்லாயி சொல்ல வள்ளி முழிச்சா……
மெதுவா தயங்கிய வள்ளிய பேச ஆரம்பிச்சா செல்லாய பாத்து……
"ஏங்க மாவு இருக்கு இட்லி, தோசைனு சுடங்களா?!"
" எம்பேரு செல்லாயி உனுக்கு தெரியாதா?"னு செல்லாயி உரிமையா வெள்ளந்தியா கேட்க,
" தெரியுங்களே"
" அப்புறம் என்னா செல்லாயினே கூப்டு வள்ளி, உம்பேர மாமன்தான் சொன்னுச்சி வண்டியில வரப்ப"
இப்படியான செல்லாயின் பேச்சை கேட்ட வள்ளிக்கு செல்லாயி மேல இருந்த சாதி அது இதுங்கற எல்லா தப்பான எண்ணமும் போயிருச்சி. ஆனா செல்லாயி வாழ்ற வாழ்க்கை மேல இருக்க பொறாமை மட்டும் போகல!
" இதா வள்ளி இரு நானும் வாரன் சேந்து ஆக்குனா சீக்கிரம் ஆய்டும், வூட்லயும் எதும் செய்யல மாமனும் பசி தாங்காது"னு விடு விடுனு வள்ளியைக் ஓட்டிக்கிட்டு போய் சமைக்க ஆரம்பிச்சா செல்லாயி….
" ஏன் செல்லாயி நீ போட்டிருக்க நகையில எதுலாம் உங்க வூட்ல போட்டது"
" ஹஹஹ நான் இங்க வரப்ப கட்டியிருந்த துணிக்கூட மாமன் வாங்கிக் குடுத்ததுதான். வயல்ல வேலை செஞ்சவள அப்படியே இல்ல தாலி கட்ட கூட்டிக்கிட்டு போச்சு மாமன்"
" எத்தன நாளா விரும்பனிங்க?!"
" நாளும் இல்ல மாசமும் இல்ல, மாமன் பார்வையில தப்பில்ல என்கிட்ட, அதால நாள்போக நல்லா பேசுவன் அவ்வளவுதான். திடீர்னு ஒருநாள் வூட்டுக்கு வந்து பொண்ணுக் கேட்டப்பதான் மாமன் விரும்பறது எனக்கே தெரியும். அப்பதான் விரும்ப ஆரம்பிச்சன். ஆனா இதுலாம் சரிப்பட்டு வராதுனு வூட்ல அப்பன் அம்மானு சொல்ல மனச மாத்திக்கிட்டு இந்த ஊர்பக்கம் வேலைக்கு கூட வரல,
ஆனா திடீர்னு மாமன் வந்து முன்னாடி நின்னப்ப எல்லாம் உடைஞ்சு போச்சு, காலு கையில மண்ணு அழுக்கோட, கட்டியிருந்த கந்தலோட வந்தவதான், இல்லனாலும் எங்கூட்ல காது மூக்குக்கு போட்டு கட்டிக்குடுக்க கூட வசதிலாம் கெடையாது. மிஞ்சிப்போனா நாலு துணிமணி வாங்கி தந்துருப்பாங்க"னு பேச்சில் எந்தவித கெளரவமோ, பெருமையோ இல்லாம சொல்லி முடிச்சா செல்லாயி……
செல்லாயி துணிமணி, நகை நட்டு, உடம்பு வனப்பு வரை ஆழமா பாத்த வள்ளி ஆழமா ஒரு பெருமூச்சி விட்டாள்…..
" ஆமா வள்ளி ஜாக்கெட்டுக்காக அண்ணன பக்கத்திலயே வுடறதில்லையாம்" னு குறும்பா செல்லாயி கேட்க…..
" ச்சீ துப்புக்கெட்டது இதையும் சொல்லியிருச்சா!?!" னு வெட்கத்துல வள்ளி சுருண்டா……
" நாங்க இங்க வந்ததே மத்தியான ஆட்டத்துக்கு டவுன்ல படம் பாத்துட்டு டெய்லரு கடைக்கி உங்கள கூட்டிக்கிட்டு போகத்தான்"னு செல்லாயி சொல்ல, வள்ளிக்கு மாளாத சந்தோசம்……
செல்லாயியும், வள்ளியும் இட்லிய எடுத்துட்டு வர……
" என்ன கல்யாண விருந்தா நடக்குது உக்காருங்க எல்லாரும் திம்பம்"னு மீரா பொம்பளைங்கள உக்கார வைச்சாப்ல…..
சாப்ட்டு முடிச்சி கருப்பனும், வள்ளியும் டவுனுக்கு போக தயாரானார்கள்…..
"டே மீரா காசு ஒன்னும் பெருசா இல்லடா பைய்ல"னு மீரா காதுல மெதுவா கிசுகிசுத்தான் கருப்பன்….
" தெரியும்டே உன் நெலமை, காசுலாம் பிரச்சினை இல்ல"னு சொன்ன மீரா, கருப்பன் சட்டையில சில்ர நோட்டா நூறு ரூவாய திணிச்சிட்டு பஸ் ஸ்டாப்புக்கு வந்து சேரச் சொல்லிட்டு வண்டிய எடுத்து செல்லாயியோட கிளம்பினார்…..
"டே கருப்பா சேலம் பழைய பஸ்ஸ்டேன்டுல கோட்டை மாரியம்மன் கோயில் வாசல்ல நிக்கறன் பஸ் வந்ததும் ஏறி வாங்க"னு கிளம்பி போனார் மீரா……
இதயகோயில் படம் வந்து பாட்டுக்காக நல்லா ஓடிக்கிட்டு இருந்த சமயம், டிக்கெட்ட எடுத்தவங்க சினிமா கொட்டாய்க்குள் போய் உட்கார்ந்தார்கள்!
வள்ளிக்கு இதெல்லாம் வருசத்துக்கு ஒருதடவ நடந்தாலே ஆச்சரியம், அதில்லாம உடம்புக்கு ஏத்த ஜாக்கெட்ட தைக்கப் போறங்கறது பெரிய சந்தோசம்…….
ஒரு வழியா படம் முடிஞ்சி வெளிய வந்தவங்க, அக்ரஹார தெரு துணிக்கடையில வள்ளிக்கு ஜாக்கெட்ட எடுத்து, பக்கத்துல டெய்லரு கடையில தைக்க குடுத்துட்டு, கோட்டை மாரியம்மன் கோயில்ல சாமிய கும்பிட்டுட்டு கிளம்ப தயாரானார்கள்……
" கருப்பா பஸ்ஸ வுட்டு எறங்கி நேரா வூட்டுக்கு போயிராத, ஆட்டுத் தொடைக்கறி உப்புத்தடவி ஒருவாரமா வெயில்ல காய போட்டு வைச்சிருக்கன், வள்ளியோட நேரா வூட்டுக்கு வந்துரு, சாப்டுட்டு படுக்கறதுக்கு வூட்டுக்கு போவிங்க, வள்ளி வந்திரு"னு மீரா சொல்ல, செல்லாயும் சொல்லிட்டு புறப்பட்டார்கள்……
" ஏங்க கருப்பண்ணன் உங்களுக்கு ரொம்ப சினேகிதமா" னு செல்லாயி கேட்க…..
" அத்த பயதான், என்னைய மாதிரியே வூட்டுக்கு ஒரே பையன். மாமன் குடி கூத்தியா நோவுனே கொஞ்சநஞ்சம் இருந்த சொத்தையும் வித்து அழிச்சிட்டு செத்து போயிட்டாப்ல"
" ப்ச் பாவம்"
" அப்ப இருந்தே நம்ம வூட்லதான் கெடப்பான். உம் மாமியாவும் வஞ்சனை இல்லாம சோறு, பண்டம்னு போடும் கருப்பனுக்கு….
காசு பணம் காடு, அப்பனு இல்லாதவன் அதால இவன புடிக்கும், நல்ல பய ஆனா பயந்தாங்கோலி"
" ஏதாவது முடிஞ்சா ஓதவி செஞ்சி வுடுங்க பொழப்புக்கு பாவம்"
" நேரம் வரப்ப செய்வம் செல்லா, எங்க இவன் கஷ்டம் புரியாம அந்த புள்ள ஏசுது போல"
" வள்ளி நல்லா வாழனும்னு நெனைக்குதுங்க, எல்லா பொம்பளைங்களும் நெனைக்கறதுதான், புருசங்ககிட்டதான எதிர்பாக்க முடியும்"
" சரிதான். இந்த ஒரு வருசத்துல தனியாவே இருந்துட்ட இல்ல அதான் உனக்கு அப்பப்ப பேச்சு துணையா இருக்கட்டுமேனு இழுத்து வைக்கறன் வள்ளிய"
" ஹஹஹ ஒட்டுதோ இல்ல அதுவும் சாதி பாக்குதோ என்னமோ யார் கண்டா!?"
" அப்புடி சாதி பாத்தா நாம நம்மள வுட்டு தள்ளி வைச்சிருவம் செல்லா"னு மீரா சொல்ல செல்லா சத்தமா சிரிச்சா……
" நாம வூட்டுக்கு போனதும் உங்கக்கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லனும் மீசைக்காரரே"
" முக்கியமான விசயமா?! ஏன் இப்பவே சொன்னா நான் இந்திரன் ஆய்டுவனோ?!"
" ம்கூம். வூட்லதான் சொல்லுவன்"
" சரி சொல்றது நல்ல விசயமா இருந்தா முத்தம் கித்தம் குடுக்கனும் வூடுதான் சரியா இருக்கும்"
" அப்ப வாய தயார் பண்ணி வைச்சுக்கோ மீசைக்காரரே"!!!
அப்படி என்ன பெரிய நல்ல விசயத்தை சொல்லபோறா செல்லாயி?!!
பெரிய விசயம்தான்…… செல்லாயிக்கு ரெண்டு மாசம் தள்ளி போயிருக்கு. மாநிறத்துல ஒரு ஆண் கொழந்தயோ, பெண் கொழந்தயோ வயித்துல வளருது, வயசு ரெண்டு மாசம்!
முற்போக்குவாதியின் புரட்சிக்கு வித்தாய், முத்தொன்றை சுமக்கிறாள் செல்லாயி!
--தொடரும்--
நிகழ்காலம்!
அதா புல்லட் தடதடக்கற சத்தம் கேக்குதா?!
ம் நாட்டுச் சாராயம் வாங்க போன நம்ம மீரா ஊருக்குள்ள வந்துக்கிட்டு இருக்காப்ல!!! புல்லட் சத்தம் கேட்டு வூட்டுக்குள்ள இருந்து எட்டி பார்த்தான் சந்தோசு! செல்லாயி அண்ணன் மவன்தான் இந்த சந்தோசு!
செல்லாயி அண்ணங்காரனுக்கு 54 லேட்டாதான் கல்யாணம் முடிச்சான் லேட்டாதான் புள்ளையும் பெத்தான்….. மொதல்ல பொறந்தது பொண்ணு…. பக்கத்து ஊர்ல கட்டிக் குடுத்து இப்ப அதுக்கொரு மூனு வயசு பொண் கொழந்த இருக்கு…..
சந்தோசு இளையவன், கவர்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜ்ல பி.ஏ இங்கிலிஷ் லிட்டரேச்சர் ரெண்டாம் வருசம் படிக்கறான்….. அடுத்து லா படிக்க போறான்….. இந்த பய வளர்ந்ததே மீரா-செல்லாயிக்கிட்டதான்….. சரி இந்த பொடியன பத்தி எதுக்கு இவ்வளவு டீடெய்ல்னு தோணுதா?! இந்த மீராவின் வாழ்க்கை பயணத்துல இவன்தான் முக்கியமான திருப்பத்த உண்டாக்க போறவனே……. இப்ப இந்தபய பி,ஏ இங்கிலீஷ் லிட்டரேச்சர் படிக்கறதே அடுத்து லா படிச்சி ஹைகோர்ட் லெவல்ல போகனும்னுதான்….. அங்கதான் நம்ம தமிழ் செல்லாதே அதான் இங்கிலீஷ். இந்த விருப்பம், ஐடியா எல்லாமே படிக்காத மீராவோடது!
மீரா-செல்லாயிக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு!
பையன் பேரு சிவா, படிச்சது எம்.சி.ஏ, படிப்பு முடிஞ்ச ரெண்டாவது வருசம் கல்யாணமும் முடிஞ்சு இப்ப பெங்களூர்ல பொண்டாட்டி, நாலு வயசு பொண்ணோட செட்டில் கைநிறைய சம்பளத்தோட…..
பொண்ணு பேரு சுந்தரி, படிச்சது பி.காம், அப்பா அம்மா செல்லம், படிப்பு முடியறதுக்குள்ள காதல், நேரா வீட்ல சொல்லிட்டா சுந்தரி, மீரா பையனை கூப்ட்டு குடும்பத்த பத்தி விசாரிச்சிட்டு, தொழில் பொருளாதாரத்த பாத்துட்டு, அவங்க வீட்டு சம்மதத்தோட கல்யாணமும் பண்ணி வைச்சிட்டாரு…… சுந்தரிக்குத்தான் கல்யாணம் முதல்ல நடந்தது….. 5 வயசுல ஒரு பையன் 2 வயசுல ஒரு பொண்ணு, விவசாயம்னு நாமக்கல்லுல செட்டில்….. மீராவுக்கு 60 கி.மீ தூரம்….. மருமகனும் மாமனாரும் நல்ல க்ளோஸ்!
மருமக பேரு நித்தியா, மருமகன் பேரு சபரி!
பெத்த ரெண்டு புள்ளைங்களோட கல்யாணமும் காதல் கல்யாணமே! மீராவை பொறுத்தவரை காதலி இல்ல காதலிக்காத ஆனா குடும்பத்தை நகர்த்த நிரந்தரமான ஒரு தொழில் இருக்கனும். அப்பதான் காதலை ஏத்துக்குவாப்ல. காசு இல்லனா எல்லாம் கசக்கும்டா முட்டா பயலுகளானு போய்ருவாப்ல…… சரி வாங்க விட்ட இடத்துல இருந்து கதைக்குள்ள போவோம்!
வாசலுக்கு வெளிய இருந்து ஹாரன் அடிச்சாப்ல மீரா……
" என்ன மாமா"
" டே வாடே ஊருக்கு வெளிய வேலை இருக்கு போயிட்டு வந்துருவம் பொழுது வேற சாயுது"னு மீரா கூப்ட வண்டியில ஏறுனான் சந்தோசு….
" எங்க மாமா போறம்?!"
" நாட்டுக்கோழி ஒன்னு வாங்கனும்டே வாங்கியாந்தரலாம்"
" என்ன திடீர்னு நாட்டுக்கோழிலாம் சொந்தங்காரங்க வராய்ங்களா"
" இல்லடே வூட்ல நாட்டுக்கோழி ஆக்கி சாராயத்த தொட்டு ரொம்ப நாள் ஆச்சு அதான்"
சந்தோசு எதுவும் பேசல, கோழிய வாங்கிட்டு இவங்க வூடு வரப்ப கருப்பன் எங்கையோ இருந்து சாராய கேன்னோட வூட்ல இருந்தான்!
" டே கருப்பா சந்தோசு பயக்கூட சேந்து இந்த கோழிய பொசுக்கு"னு அப்படினுட்டு டிராயரோட தொட்டி தண்ணிய மோந்து ஊத்திக்க ஆரம்பிச்சாப்ல மீரா……
கறிய ஆக்கி வூட்டு வாசல்ல கட்டில போட்டு உட்காந்த மீரா கருப்பனோட மெதுவா குடிக்க ஆரம்பிக்க சந்தோசு எதிர்ல அமைதியா உட்கார்ந்திருந்தான்…….
" ஏன்டா டே பொண்டாட்டி வுட்டுட்டு போனவன் மாதிரி இருக்க"
" ஒன்னுமில்ல நீ குடி"
" அட சொல்லுடே என்னா விசயம்"
" வயசாவுதுல்ல எதுக்கு இதெல்லாம்"
" இது ஒடம்புக்கு கெடுதி இல்லடே"
" அப்ப நானும் குடிக்கவா?!"
" அடிங் அடிச்சி பல்ல ஒடச்சி புடுவன். போய் சோத்து சட்டி, தட்டு, தண்ணிலாம் கொண்டா"னு அவன அனுப்பி வைச்ச மீரா……
" டே கருப்பா போதும்…. கொண்டுபோயி கொல்லையில வைச்சிரு. இனி பய முன்னாடி வேணாம்"னு சொல்ல சந்தோசு வந்தான்…. மூனு பேரும் சாப்ட்டு காலி பண்ண, கருப்பனும், சந்தோசும் எல்லாத்தையும் கழுவ எடுத்துக்கிட்டு போனாங்க…… மீரா அப்பப்ப சமைச்சி, சாப்ட்டு கழுவி வைக்கற ஆளு! இல்லனா கோவம் வந்துரும்!
இப்ப காட்டை ஆளுங்கள வைச்சிதான் மீரா பாத்துக்குது…… முன்ன மாதிரிலாம் காடே கதினு கெடக்கறதில்ல….. சோத்த தின்ன மீரா அப்டியே வெளிய கட்டில்ல கண்ண மூடுச்சு!
விடிஞ்சி சந்தோசு கண்ணு முழிக்கறப்ப மீரா சமையல் ரூம்ல உருட்டிக்கிட்டு இருந்திச்சி…..
"வாடே குண்டாவுல டீ இருக்கு ஊத்திக்கோ, கறிய மறுபடியும் பெரட்டியிருக்கேன், சோறு வைச்சி தாரேன் மத்தியானத்துக்கு சாப்டுக்க"
" ம் ம்" னு கொட்டாவி வுட்ட சந்தோசு தண்ணித் தொட்டிக்கு போனான்…..
குடிசையா இருந்த வூட்ட புள்ளைங்க பொறந்து வளர்ந்த கொஞ்ச நாள்லயே இடிச்சிட்டு தார்சு வூடா எடுத்துக் கட்டிட்டாப்ல மீரா பாத்ரூம்லாம் வைச்சு…… ஆனா வாசலும் மரங்களும் அப்படியே இருக்கு!
சந்தோசு காலேஜிக்கு கெளம்பி நிக்க மீரா புல்லட்ட எடுத்தாப்ல பஸ்ஸ்டாப்புல கொண்டுபோய் விட……
" என்னடே ஏதோ சொன்னியே எதோ இங்கிலீஷ்னு"
" ஸ்போகன் இங்கிலீஷ் கிளாஸ் மாமா"
" எப்ப போறதா இருக்க?!"
" இந்தா வெயில்கால லீவ் வருதுல்ல அதுல போறன்"
" சரி இப்டி படிக்கற படிப்புக்கு, படிச்சிட்டு போவ போற வேலைக்கு முன்கூட்டியே ஏதாது செய்யனும்னா சொல்லிரு, எனக்கு இதுலலாம் வெவரம் கெடையாது"
"ம்"
" என்னடே ஆம்பளை பய நீ?! கலகலனு பேசறதில்லயா ஆளும் சொக்காவும்"
பஸ்ஸ்டாப் வர தப்பிச்சம்னு எறங்கினான் சந்தோசு! காலேஜ், ஸ்கூலு, வேலைக்குனு போக பஸ்டாப்புல ஆளுங்க இருக்க……
" ஏ முருகேசன் மவ செல்வி"
" என்ன மீரா சட்டலாம் பளபளக்குது"னு வம்பிழுத்தா செல்வி…… 11 வது படிக்கற புள்ள…..
" உங்கப்பன் சோறு எதாது போடறானா, இல்ல மாட்டு கொட்டாய்ல கட்டிப்போட்டு சோளத்தட்ட போடறனா ஆத்தா"
" ம் ஏன் பிரியாணி வாங்கித்தர போறியா"னு செல்வி கேட்க பஸ்ஸ்டாப்ல இருந்ததுங்க சிரிக்க ஆரம்பிச்சது……
" கட்டிக்கறனு சொல்லு ஊருக்கே பிரியாணி போட்ருவோம் என்ன ஒங்கப்பன்கிட்ட பொண்ணு கேக்க வரட்டுமா"
" ஐய்ய"
" வயசு புள்ள நல்லா தின்னு தெடமா இருக்க வேணாமா?! எதோ சோளத்தட்டுக்கு துணி மாட்டிவுட்ட மாதிரி"
" ம்கூம் காலையிலயே சாவடிக்காத பஸ் வந்துருச்சி ஸ்கூலுக்கு போய்ட்டு வந்து பேசிக்கறன்"னு பஸ்வர செல்வி எல்லாரும் ஏறினார்கள்……..
சிரிச்சப்படியே மீரா புல்லட்ட ஒதைச்சி ஊருக்குள்ள கெளம்பினாப்ல!
நேரா கருப்பன் வூட்டுக்கு போயி கூட்டிக்கிட்டு காட்டுக்கு போய் ஒரு எட்டு பாத்துட்டு ரோட்டோர டீ கடைக்கு வந்து புல்லட்ட நெழல்ல போட்டாப்ல மீரா……
" என்ன மீரா டீயா காபியா"னு நாப்பது வயசிருக்க டீக்கடைக்காரன் கேட்க……
" அந்த வெசத்த உம்பொண்டாட்டி வாய்ல வூத்துடே செத்த நேரம் அது பேசாமயாவது இருந்து தொலைக்கட்டும்"
" ஏன் நான் என்ன உன் வூட்ல வந்தா பூந்துக்கிட்டேன் என்னையச் சொல்ற"னு டீ கடைக்காரன் பொண்டாட்டி வர……
" ஓ பார்ரா இந்த புள்ளைக்கு அப்புடி வேற ஒரு எண்ணம் இருக்குது போல கருப்பா"
" யோவ் மீரா என்ன வேணும்னு சொல்லு"
" கருப்பனுக்கு ஒரு டீய போடு, எனக்கு ஒரு மோர (மோர்) குடு"னு சொன்ன மீரா வாங்கி குடிச்சப்படியே கருப்பன பார்த்தாப்ல…..
கருப்பனுக்கு கொழந்தைங்க இல்ல…… வள்ளியும் நோவுல வுழுந்து போய் சேந்துட்டா…. இந்த பய பொறந்ததுல இருந்து இப்பவரை கஷ்டத்த தவிர எதையும் பாக்கல. மனுசன் வாழ்க்கைலாம் ஒரு வாழ்க்கையானு மனசுக்குள்ள சலிச்சப்படி……
" ஏன்டா கருப்பா முடிய வெட்டி சேவிங்க பண்ணாதான் என்ன?! ரெண்டாவது கல்யாணத்துக்கு எதும் பழனிக்கு வேண்டியிருக்கியா"னு மீரா வழக்கமான சேட்டை பேச்சோட கேட்க….
" அது ஒன்னுதான் கொற, அப்பறமா பண்ணுவம்"
" உனக்கு மலைய சாய்க்கற வேலைலாம் இல்ல, இந்தா காசு போய் எந்திரிச்சி பண்ணிக்கிட்டு வா"னு காச திணிச்சி அனுப்பி வைச்சாப்ல மீரா…..
தன் வாழ்க்கையில செல்லாயிங்கற ஒருத்தி இல்லாம இருந்திருந்தானு யோசிச்ச மீராவால, இப்ப செல்லாயி இல்லையே வுட்டுட்டு போய் பத்து வருசம் ஆச்சேனு நினைக்கத் தோணல!
செல்லாயி அவர பொறுத்தவரை அவரோடதான், அதுவும் அவளுக்காக கட்டிக்குடுத்த சாமி செலைக்கு கீழ புதைச்ச இடத்துலதான் இருக்கா!
அறிவடி தொடரும்!

No comments:
Post a Comment