மெல்ல திறந்தது மனது [ஆதன்-னின்]
அத்தியாயம்-01
கதையின் ஹீரோ பேரு தேவா எம்.காம் முடிச்சிட்டு பேங்க் வேலைக்கக குரூப் எக்ஸாம் எழுதறான்! ஐந்தரை அடி உயரம், அளவான உடம்பு, உதட்டை விடக் கண்கள் பேசும் முகம்.
உயிரே படத்துல வர ஷாருக்கான் மாதிரி கோரை முடி எந்த ஸ்டைல்ல வேணாலும் சீவிக்க முடியும். இதனாலயே தினம் ஒரு லுக்கில் தெரிவான். வயது 25. சுருக்கமா சொல்லனும்னா இந்தப் பையனை ஏன் லவ்வரா செலக்ட் பண்ணக்கூடாதுனு பொண்ணுங்கள யோசிக்க வைக்கற உருவம், முக்கியமா இவன் நடத்தை. ஆனா ஆளு படிப்புல சுமார்தான்!
தம்மு சரக்குனு எந்தப் பழக்கமும் ரெகுலரா கிடையாது. எப்பவாவது ஒரு பியர், அரைகுறையா குடிக்கத் தெரியாம குடிக்கற ஒரு சிகரெட். தேவா வீடு இருக்கிறது சென்னை ஐயப்பன் தாங்கல்!
தேவாவுக்குப் பெரியவள் ரேகா! வயது 27! படிச்சது பி.ஏ ஹிஸ்ட்ரி! தானே பெரிய அறிவாளி எனக்கெதுக்குப் படிப்புனு பல அரியர் வைச்சி படிப்பை நிறுத்திட்டாங்க மேடம்!
ஒரு நாலஞ்சு வருசமா மேடம் பேஸ்புக், ட்விட்டர் வாட்ஸப்புலதான் வாழறாங்க. அதுவும் ஒரு பெண்ணியவாதியா. பெண்ணியம்னா என்னனு அம்மாக்கிட்ட பேசினிங்கனா உங்களுக்குத் தெரிஞ்ச பெண்ணியமும் மறந்து போயிரும்.
அம்மாவ ஆணாதிக்கத்தால சமையலடியில் போட்டுட்டாங்கனு பொங்குவாளே தவிர மறந்தும் சமையல் அறை பக்கம் போகமாட்டாள்! பேஸ்புக்ல பெண்ணியத்த அரைகுறையா தெரிஞ்சிக்கிட்டு அலப்பறை தர இரகம் இவள்!
கடைக்குட்டி பேரு உமா! பி.எஸ்.சி கம்யூட்டர் சயின்ஸ் படிக்கறா, அடுத்து எம்.எஸ்.ஸி, எம்.பில்., பி.எச்.டி பண்ணி கல்லூரி பேராசிரியையா போகனுங்கறது இவளோட இலட்சியம். சரியான பக்தி பழம் அம்மா மீனாட்சி மாதிரியே. இந்த மூனு பேரையும் பெத்த புண்ணியவதி பேரு மீனாட்சி. வீட்ல மீனாட்சி ஆட்சிதான்! ஆனா நல்லாட்சி!
அப்பா பேரு சந்திரசேகர் தாசில்தாரா இருக்கார். ரொம்பப் பழமை வாதி. வறட்டுக் கெளரவம் அதிகம். தான் 100% பர்பெக்கிட்டுங்கற எண்ணத்தால வந்தது. பணம் நகைனு பெருசா சேர்த்தி வைக்கமாட்டேன் படிக்கத்தான் வைப்பனு பிள்ளைங்களுக்கு விவரம் தெரிய ஆரம்பிச்ச காலத்திலயே சொல்லியே வளர்த்தினார்.
வீட்டு ஹால்ல பெரிய சேகுவேரா படம் இருக்கும் ! இந்தப் படம்தான் வீட்டின் அடையாளம்! ஆனா இந்தப் படத்தை வைச்சது தேவா! வீடு சொந்த வீடுதான்.
மேற்கொண்டு ஹீரோ குடும்பத்த பத்தி சொல்ல ஒன்னுமில்ல. தேவாவோட பால்ய நண்பன் விக்கிய பத்தி சொல்லலாம் பள்ளியிலிருந்து காலேஜ்வரை இப்ப குரூப் எக்ஸாம் எழுதப்போற வரை இன்னமும் பிரியாம இருக்காங்க! தேவா வீட்டுல இவனும் ஒரு ஆள் அவங்க வீட்ல தேவாவும் ஒரு ஆள்!
அன்று ஞாயிற்றுக்கிழமை…..
நான்வெஜ்க்காக மிடில் கிளாஸ் ஒதுக்கி வைச்சிருக்க வார நாள்….
மீனாட்சி சமைக்கத் தயார் செய்துக்கொண்டிருக்க உமா மீனாட்சிக்கு வெங்காயம் உறிக்க உதவிக்கிட்டு இருந்தாள்…..
நைட் மூனு மணி வரைக்கும் பேஸ்புக் ட்விட்டர் வாட்ஸ்அப்பில் பெண்ணியப் புரட்சி பண்ணிட்டு எட்டு மணிக்கு மேல எழுந்து டீ க்காகச் சமையலறை பக்கம் வந்தாள் ரேகா…..
"மீனு டீ குடு" என்றாள் ரேகா…அவ மீனாட்சியை அப்படிக் கூப்பிட்டுத்தான் பழக்கம்.
" பாத்திரத்துல இருக்கு சூடு பண்ணிக்கோ. எனக்கு இன்னைக்குக் கறி, மீன்னு நிறைய வேலை இருக்கு" என்றாள் மீனாட்சி….
சமையலைறையில் சம்மணம் போட்டு அமர்ந்தவள் "உமா குட்டி டீ சூடு பண்ணிக் குடேன்"னு கொஞ்சலா கேட்க, உமா சிரிச்சிக்கிட்டே டீ சூடு பண்ணித்தர,
"இப்படியே இவளுக்கு எல்லாரும் தொண்டு ஊழியம் செய்ங்க, இவ அந்தப் போன்லயே எந்நேரமும் கெடந்து வீணா போவட்டும். வயசு 27 ஆவுது ஒரு கல்யாணம்னு பேச்சை எடுக்க முடியல"ன மீனாட்சி ஆரம்பிக்க…. டீ ய எடுத்துக்கிட்டு ஹாலுக்கு வந்தாள் ரேகா……
ஹால்ல உடீகார்ந்து நியூஸ் சேனல் பார்த்துக்கிட்டு இருந்த சந்திர சேகர் அவள் கண்ணை மட்டுமே பார்த்தார்…..
"ஹாய் பா குட்மார்னிங்"
"குட்மார்னிங் இருக்கட்டும் நேரத்துக்குத் தூங்கி பழகுமா, பாரு கண்ணெல்லாம் கருவளையம் விழுது"னு சந்திரசேகர் சொல்ல எதுவும் பேசாம டிவிய பார்த்துக்கிட்டு டீ ய குடிக்க ஆரம்பிச்சாள் ரேகா….
" இங்க பாரு ரேகா உன்னோட எல்லாத்தையும் வெளியில வைச்சுக்கோ. வீட்ல காட்டாத. நேரத்துக்குச் சோறு போடறது என் கடமை என் கெளரவம் ஸோ அதை நான் ஒழுங்கா செய்றன். ஒன்னு மேற்கொண்டு ஏதாவது கரஸ்ல படி இல்லனா கல்யாணத்த பண்ணு.
கண்ட கழிசடைங்கக்கூடலாம் ப்ரன்ட்ஷிப்னு பேஸ்புக்ல அலையாத, கடைசியா என் கெளரவத்துக்குக் கெட்ட பேர கொண்டு வந்துடாத. இதைப் பேசினா வீட்ல சண்டை வருதுனுதான் அமைதியா இருக்கன். உன் தங்கச்சி உமாவ பார்த்தாவது திருந்து!"னு பேசி முடிச்சிட்டு எழுந்து பெட்ரூமுக்கு போயிட்டார்!
தெருமுனையில இருக்க டீக்கடை அடர்ந்த மர நிழல்ல இருக்கும். அங்க ஸ்பெசலா தெருவாசிகளே ஏழு சிமெண்ட் பென்ஞ்ச்களைக் கட்டி வைச்சிருந்தாங்க. வாக்கிங் போய்ட்டு சிலபல பேர் அந்தச் சிமெண்ட் பெஞ்ச்ல உட்கார்ந்து கதை பேசிட்டு போவாங்க!
தேவாவும் விக்கியும் சிமெண்ட் பெஞ்ச்ல உட்கார்ந்து எக்ஸாம் பத்தி பேசிக்கிட்டு இருக்கப்ப புல்லட்ட ஓட்டிக்கிட்டு அவங்கள ஓரக் கண்ணால பார்த்தப்படியே கடந்து போனாள் கோதை நாச்சியார் என்கிற நாச்சி!
அத்தியாயம்- 02
தேவா, விக்கியை ஓரக்கண்ணால் பார்த்தப்படியே புல்லட்டை ஓட்டிட்டு போனாளே கோதை நாச்சியார் என்கிற நாச்சி இவள்தான் இக்கதையின் எல்லாமே! தேவா வீட்டுக்கு அடுத்தத் தெருவில்தான் இவள் வீடு…..
ஐந்தடி உயரம், நடிகை அஞ்சலி போன்ற முகம். செழித்த உடல். எங்கெங்கு என்னென்ன தேவையோ அதை அங்கங்கு அளவோடு வைத்துப் பிரம்மனால் படைக்கப்பட்டவள். எப்பொழுதும் முகத்தில் தைரியம் கலந்த புன்னகை ஒன்று தவழும். அவளது மனம் போலவே கைகளும் நல்ல உறுதியானது. முன்னழகு பின்னழகு என எதிலும் குறைக்காண முடியாத தேகம். நாச்சி, நாச்சியா என அவரவர் இஷ்டத்துக்குக் கூப்பிடும் அழகான தைரியமான பெண்!
அப்பா பேரு சண்முகம். இந்த ஏரியாவில் 15 வருசமா மளிகைக்கடை வைத்திருக்கிறார். கடையும் வீடும் ஒன்றாகவே இருந்தது. முன்பக்கம் கடை பின்பக்கம் வீடு. எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவர். அதனாலயே அரசாங்கம் பிளாஸ்டிக்குக்குத் தடை விதிக்கறதுக்கு முன்னவே யூசன் த்ரோ டம்ளர், தண்ணி பாக்கெட், பீடி, சிகரெட் இதுப்போன்றவைகளைக் கடையில் விற்பதில்லை.
அம்மா பேரு கற்பகம். ஏழு வருடத்துக்கு முன்னால் மாரடைப்பால் காலமாகிவிட்டாள். அப்பொழுது 12 வது படித்து வந்த நாச்சியா அத்தோடு படிப்பைவிட்டு விட்டு அப்பாவுக்குத் துணையா கடையையும் வீட்டையும் பார்த்துக்கொண்டாள்.
10வதுல எல்லாப் பாடத்திலும் பெயிலா போன வாசுங்கற 15 வயசு பையன் கடையில் சின்னச் சின்ன வேலைகள செய்றான். வாசுவ தன் சொந்த தம்பி போலவே பார்த்துக்கொண்டாள். காலை 9 மணிக்கு வருவான் மாலை சரியா 5 மணிக்கு அவனை வீட்டுக்கு அனுப்பிடுவா நாச்சியா. அது அவன் கிரிக்கெட் விளையாடற நேரம். காலை மதியம் அவனுக்கு நாச்சியா வீட்லதான் சாப்பாடு.
இவர்கள் இருக்கும் பகுதி நடுத்தர வர்க்கமும், அதற்குக் கீழுள்ளவர்களும் வசிக்கும் பகுதி. மாதக் கடன் வாங்கறவங்க அதிகம். இதைச் சண்முகம் பார்த்துக்குவாரு. நடுத்தர வர்க்கத்துக்குக் கீழுள்ளவங்களுக்குச் சண்முகம் ஒரு தடவைக்கு மேல் கடன் தரமாட்டார்.
அதனால் இவர்கள் நாச்சியா கடையில் இருக்கும் பொழுது மட்டுமே கடைக்கு வருவார்கள். நாச்சியா கொஞ்சம் தாரளமா நடந்துக்கற ஆளு. ஆனா அவளை ஏமாத்த முடியாது. குடுக்கற கடனை கொஞ்சம் டைம் குடுத்து கரெக்ட்டா வாங்கிடுவா……
இப்ப ஓரக்கண்ணால தேவாவ பார்த்துட்டு வந்தாளே இது இவ10வது படிக்கறப்ப ஆரம்பிச்சது. இன்னும் தொடருது. ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல்தான். ஒரே ஏரியாதான் ஆனா தேவாவைவிட ஒருவருசம் நாச்சியா ஜூனியர். தேவா கிரிக்கெட் & புட்பால்ல இருந்தான். நாச்சியா அத்லெட்ல இருந்தா. அப்ப இருந்தே ரெண்டு பேருக்குமே ஒரு க்ரஷ் இருக்கு ஆனா ஹாய் ஹலோவ தாண்டினதில்லை.
இன்னைக்கு ஊர்ல இருந்து நாச்சியா அத்தை பாக்யா வந்திருந்தாள்.
நாச்சியா வைச்சிருந்த மீன் குழம்ப மணக்க மணக்க சாப்டுட்டு வழக்கமான கல்யாண பேச்சை எடுத்தாள். சண்முகமும் கூடத்தான் இருந்தார். கடைய வாசு பார்த்துக்கிறான். பெரிய வியாபாரம்னா வாசு கூப்டுவான்…..
"ஏன் நாச்சியா வயசு 24 ஆவுது நம்ம ஊர் சேலம் பக்கம் ஏதாவது வரன் தேடுனா உன் அழகுக்கு உடனே அமைஞ்சிரும்டி. ம் எனக்கொரு பையன் இருந்திருந்தா இந்தப் பிரச்சினையே இல்லை. கொஞ்சம் யோசி நாச்சியா வயசு வேற போய்க்கிட்டே இருக்கு"னு நாச்சியா அத்தை பாக்யா ஆரம்பிக்கச் சண்முகமும் சேர்ந்துக் கொண்டார்…
" சரி அத்தை பண்ணிக்கறேன் ஆனா என் படிப்புக்கு யார் மாசம் ஐம்பதாயிரம் சம்பளம் தருவாங்க அப்பாவ பார்த்துக்க விடுவாங்க?!"
"என்னடி சொல்லவர?!"
"கடையில மாசம் ஐம்பதாயிரம் இல்லங்காம கிடைக்குது. சொந்தமான வீடு வேற. நான் வீட்டோட மாப்பிள்ளை வேணும்னு கேக்கல, லோக்கல்ல மாப்பிள்ளை கேட்கறேன். அப்படி அமைஞ்சா ஒரு வேலைக்குப் போற மாதிரி கடைக்கும் வந்திருவேன், அப்பாவையும் பாத்துக்குவேன், சம்பளம் மாதிரி மாசம் ரொக்கமா பணமும் கிடைக்கும். " என்றாள் நாச்சியா!
"இதெல்லாம் அமையனுமேடி நாச்சியா!"
"அதெல்லாம் அமையும் ஏன் அமையாது?! ஏதோ பாக்கற அளவுக்கு இருக்கன். 25 சவரன் நகை இருக்கு. சொந்த வீடு இருக்கு. மாசா மாசம் கடையில இருந்து என் பங்கா 20 ஆயிரம் கிடைக்கும். இது மாப்பிள்ளை வீட்டுக்கு கசக்குமா?! நீங்க இதையெல்லாம் சொல்லி லோக்கல்ல தேடுனிங்கனா நிச்சயம் கிடைக்கும். வெத்தலய போட்டுட்டு கொஞ்ச நேரம் படுங்க" என்ற நாச்சியா கடைக்குள் போனாள்!
"டே வாசு இன்னைக்கு மீன் குழம்பு எப்படிடா இருந்துச்சி"
"செமக்கா எங்கம்மா இப்படிலாம் வைக்காது"
"நீ ஒழுங்கா எந்தக் கெட்ட பழக்கமும் பழகாம இங்க தொழிலைக் கத்துக்கிட்டு எங்கையாவது சொந்தமா கடை வைச்சி சம்பாரிச்சி குடு. உங்கம்மாவும் இந்த மாதிரி வைக்கும். போறப்ப கொழம்பு ஊத்தி தரன் எடுத்துட்டுபோய் அம்மாவுக்குக் குடு" என்றாள் நாச்சியா!
வாசுவோட அப்பா குடிச்சே செத்து போயிட்டான். அம்மா வீட்டு வேலைக்குப் போய்ப் படிக்க வைச்சது ஆனா இவனுக்குப் படிப்பு ஏறல. போன வருசம்தான் கடைக்கு வேலைக்கு வந்தான் நாணயமான பையன் காசு விசயத்துல. பொய் சொல்ல மாட்டான். ஏதாவது கிரிக்கெட் டோரன்மென்ட் இருந்தா நாச்சியா கிட்ட உரிமையா பர்மிசன் கேட்டுட்டு போய் விளையாடிட்டு திரும்பவும் ஓடி வந்துருவான்…..
வேலை மாலை 5 மணிக்கு முடிஞ்சாலும் விளையாடவோ வீட்டுக்கோ போக இஷ்டம் இல்லனா நாச்சியா வீட்லயே டிவி பார்ப்பான் அப்படியே கடையவும் பார்ப்பான். இப்ப நாச்சியாவுக்குப் புதுச் சொந்தம் இவன்தான்!
இனி அடுத்து வரும் அத்தியாயங்களில் ஒரு அழகான கதைக்குள் பயணிப்போம்
அத்தியாயம்-03
ஐயப்பன் தாங்கல்ல இருந்து கோயம்பேடு மார்கெட்டுக்கு பத்து கிலோ மீட்டர். டிராபிக் இல்லனா 15 நிமிசத்துல போயிடலாம்.
சண்முகம் காலையில நாலரை மணிக்கு கிளம்பினா ஆறு மணிக்கு காய்கறி கீரை எல்லாம் வாங்கிட்டு வந்திடுவாரு…… ஆறு மணிக்கு நாச்சியா டீ வைச்சி கடையத் திறந்துடுவாள். ஒம்பது மணிக்கு வாசு வர வரைக்கும் கடையில் அப்பாவோடு இருப்பாள். நடுவுல சமையல் வேலையும் நடக்கும்.
வாசு வந்ததும் வீட்டுக்குள்ள போனா அர மணி நேரத்துல லன்ஞ்சுக்கும் சேர்த்து முடிச்சிடுச்சிடுவா…..
பொழுது விடிய நேரமிருக்கச் சண்முகத்த எழுப்பி மார்க்கெட்டுக்கு அனுப்பிட்டு டீ போட்டு குடிச்சிட்டு….. வீட்டு முன்னால் இருக்க வேப்ப மரம் உதிர்த்த சருகுகளைக் கூட்டிச் சுத்தம் பண்ணிட்டு….. சமையலுக்குத் தேவையானதை எடுத்து வெட்டி வைக்க ஆரம்பித்தாள்…..
சண்முகம் மார்க்கெட்டில் வழக்கமான காய்கறிகளை வாங்கினாலும், பலவகையான கீரைகளை அள்ளிக்கிட்டு வருவார். முடிந்தவரை மக்களுக்கு நல்லத குடுக்கனுங்கற எண்ணம். ஏறக்குறைய எல்லாக் கீரைகளின் பேரும் அதன் பயனும் சண்முகத்திற்குத் தெரியும். கீரைக்காகவே சண்முகம் மளிகைக்கடை அந்த ஏரியாவுல பேமஸ்…..
சண்முகம் மார்கெட்ல பொருட்கள வாங்கிட்டு 6 மணிக்கு வர, நாச்சியா கடையைத் திறந்து பால் வியாபாரத்தை ஆரம்பித்திருந்தாள். வாங்கி வந்த காய்கறி, கீரைகளைக் கடையின் முன்னால் உள்ள மரப்பலைகை பென்ஞ்சில் அடுக்கி வைத்து விட்டுச் சண்முகம் வீட்டிற்குள் போய் டீ குடிச்சிட்டு கடைக்குள் வந்தார்….
"டீ குடிச்சிட்டிங்களாப்பா?"
"ம் ஆச்சு நாச்சியா"
"ப்ரண்ட் ஒருத்திக்கு வளைக்காப்பு வேளச்சேரியில ஒரு பத்து மணிக்கு போய்ட்டு வந்திடறன்பா!"
"ம் உன் பிரன்ட்டுங்களுக்கு வளைக்காப்பு, நீ எங்க பேச்சை கேட்டுருந்தனா இந்நேரம் உன் குழந்தைக்கூட நான் விளையாடிக்கிட்டு இருந்திருப்பேன்"
"அப்பா காலையிலயேவா ஒழுங்கா வியாபாரத்தைக் கவனிங்க…. கூட்டம் வந்தா கூப்டுங்க நான் சமையல் வேலையைப் பாக்கறன் வேளச்சேரி வேற போகனும்" என்றவள் வீட்டிற்குள் நுழைந்தாள்!
வேலைகளை முடிச்சிட்டு சண்முகத்துக்குச் சாப்பாடு குடுத்துட்டு வளைகாப்புக்கு தயார் ஆனாள் நாச்சியா….
"ம்மா கிளம்பிட்டியா புல்லட்ட எடுத்துக்கிட்டு போய்டாத ஸ்கூட்டியவே எடுத்துட்டு போ என்று" சிரித்தார் சண்முகம்…..
வண்டியை எடுத்து பஸ்ஸ்டாப் தாண்டி திரும்புகையில் விக்கி இல்லாமல் தேவா தனியாகப் பஸ்ஸ்டாப்பில் நிற்பதை பார்த்தாள் நாச்சியா……
"ஹாய் என்ன விக்கி இல்லாம தனியா நிக்கறிங்க அதிசயமா இருக்கு" என்றாள் நாச்சியா …..
திடீர்னு அவளா வந்து பேசினதும் அவனுக்கு என்ன பதில் சொல்றதுனு புரியல.,., கடைசியா அவக்கிட்ட பேசி மூனு மாசம் இருக்கும் அதுவும் கடையில பொருள் வாங்கறப்ப……
"என்ன பேச்சு மூச்சையே காணம்?" என்றாள் மீண்டும் நாச்சியா!
"இல்ல அதுவந்து ப்ரன்ட் மலேசியாவுல இருந்து வந்திருக்கான் அவன பார்க்க வேளச்சேரி வரை போறன்" என்று இழுத்து இழுத்து ஒருவழியா பேசி முடித்தான் தேவா….
"நானும் வேளச்சேரிதான் போறன் வாங்களேன் ட்ராப் பண்றன்"
" இல்ல பரவாயில்லை நான் பஸ்சுலயே போய்டறன்"
"அட பரவாயில்லை வாங்க வேணும்னா வண்டியை நீங்களே ஓட்டுங்க"னு கிண்டலா பின்னால் நகர்ந்து உட்கார்ந்தாள் நாச்சியா!
அப்படி இப்படினு ஒருவழியா வர சம்மதித்தான் தேவா….
நாச்சியா வண்டிய ஓட்ட பின்னாடி உட்கார்ந்தான் தேவா……
"அப்புறம் தேவா என்ன பண்றிங்க?!"
"குரூப் எக்ஸாம்க்கு ப்ரிபேர் பண்ணிட்டு இருக்கேன்"
"ம் நல்லா போகுதா?!"
" ம் ஏதோ போகுது" என்றவனின் குரலில் விரக்தி!
"என்ன மலேசியா ரிட்டன் ப்ரன்ட் கூடச் சரக்கு பார்ட்டியா"னு கூலாத்தான் கேட்டாள் நாச்சியா… ஆனா தேவா பதறிட்டான்……
"இல்லங்க பார்த்து ரொம்ப நாளாச்சி சும்மா பாக்கலாமேனு போறேன். நாளைக்கு அவன் மறுபடியும் மலேசியா போறான் அதான்"
" ஓகே ஓகே பதறாதிங்க" என்றவள் வண்டியை விரட்ட வேளச்சேரிக்கு வந்து சேர்ந்தார்கள்……
"நீங்க எங்க போகனும் தேவா?!"
"இன்னும் ஒரு ரெண்டு கிராஸ் தாண்டி" என்ற தேவா இறங்க முயற்சிக்க,
"உட்காருங்க நான் போற இடம் இங்கதான் உங்கள அங்க விட்டுட்டு வந்துக்கறேன்"னு அவன் அனுமதியை கேட்காமலேயே வண்டியை நகர்த்தினாள் நாச்சியா…..,
இடம் வந்ததும் தேவா இறங்கினான்….
"ரொம்பத் தேங்க்ஸ்ங்க" என்ற தேவாவிடம்….
"உங்களோட தேங்க்ஸ்ஸ நீங்களே வைச்சுக்கோங்க….. சரி உங்க நம்பர குடுங்க நான் போறப்ப நீங்க கிளம்பறதா இருந்தா அப்படியே கூட்டிட்டு போறன்"என்று ரொம்பச் சாதாரணமா கேட்டாள் நாச்சியா…..
ஆனா தேவா அநியாயத்துக்கு வெட்கப்பட்டுப் பயந்து ஒருமாதிரி இருந்தான்.
"ஹலோ தேவா என்னாச்சு ஏன் ஒரு மாதிரியாவே இருக்கிங்க?!
"இல்லங்க அது வந்து……" என்ற தேவா நெளிய…..
"சரி சரி நம்பர தாங்க நான் கிளம்பறனு சாதாரணமா சொன்ன சொன்ன நாச்சியா அவன் நம்பர் தர சேவ் பண்ணிட்டு கிளம்பினாள்.
தேவா உண்மையிலயே பிரமை பிடிச்சிதான் நின்னான். எப்படி இவளால பலநாள் பழகின மாதிரி இயல்பா பேச முடியுது. உலகத்த மனுசங்கள எவ்வளவு தைரியமா பேஸ் பண்றா. நாம ஏன் எதுக்கெடுத்தாலும் தயங்கறோம்னு தன்னை நினைச்சி தானே திட்டிக்கிட்டான்…
இந்தச் சந்திப்புக்காக நாச்சியா கடவுளுக்கு மனசார நன்றி சொல்லிக்கிட்டாள். பையன் ஏதாவது லவ் கிவ்னு வந்தா ஓகே சொல்லி கல்யாணம் பண்ணி லோக்கல்லயே செட்டில் ஆகிடலாங்கற எண்ணம் நாச்சியாவுக்கு. நாச்சியாவால் தன் அப்பாவை, கடையை, வருமானத்தை விட்டுத் தரவே முடியாது. அவன சும்மா வைச்சி சோறு போடனும் அப்படினாலும் அவளுக்கு ஓகேதான்.
இதான் பெண் புத்தி பின் புத்தி என்பது!
அதாவது எது செஞ்சாலும் அதனால என்ன பின் விளைவுகள் வரும்னு தெளிவா யோசிக்கறது!
ரெண்டுபேர் வாழ்க்கையிலும் இது ரொம்ப முக்கியமான நாள். தங்கள் வாழ்வில் பல மாற்றங்களை உருவாக்கப் போகின்ற நாள்!.….
அத்தியாயம்-04
ரேகா போன்ல யார்கிட்டயோ ரொம்ப உக்கிரமா பேசிக்கொண்டு இருந்தாள்!
"அவன விடறதா இல்லடி லதா"
"விடாத, அவன் போஸ்ட்ட பார்த்துட்டு எனக்கே செம கடுப்பு, பெண்ணியம்னா என்னனு கிளாஸ் எடுக்க இவன் யாரு ரேகா"?
" வெய்ட் பண்ணு போஸ்ட் போட்டு டாக் பண்ணி கிழிக்கறன். நாலு சுவத்துக்குள்ள மொபைல்ல பெண்ணியம் பேசறனு சொல்லி இருக்கான். நம்ம குரூப் எல்லாம் போஸ்ட்டுக்கு வந்திடுங்க இனி அவன் பெண்ணியம்னு பேசவே கூடாது.. ஐயோ ச்சீ"!
"என்னடி ஆச்சு ரேகா"
"காலுக்கடியில கரப்பான் பூச்சி ஓடுதடி. யா ஓகே நான் போஸ்ட் பண்றன் நீங்க அங்க வந்து சேருங்க" னு சொன்னவ அம்மா மீனாட்சியைக் கூப்ட ஆரம்பிச்சா…..
" மீனு மீனு மீனுஊ"
"எதுக்குடி கத்தறு?!
"மணி எத்தனை ஈவ்னிங் 5 ஆகுது. ஒரு காபி குடுத்தனா குறைஞ்சி போய்டுவியா?!"
"காபி போட்டு பிளாஸ்க்ல இருக்கு ஊத்திக்கிட்டு டைட்டா மூடி வை. உமா வந்துருவா"னு மீனாட்சி சொல்ல உமா வாசற்படியில் செருப்பைக் கழட்டி விட்டுட்டு உள்ள வந்தாள்….
"ஹே உமா என் போஸ்டுக்கு ஏன்டி வரதில்ல?"
"ஐய்யக் கமெண்ட்ட பாக்கவே சகிக்கல ஒரே கெட்ட வார்த்தை" என்றாள் உமா…..
"என்னது கெட்ட வார்த்தையா?! அந்தப் போனை வைச்சிக்கிட்டு இதைத்தான் பண்ணிக்கிட்டு இருக்கியா"னு மீனாட்சி கத்த அதைக் கண்டுக்காம காபிய உமாவ கொண்டுவரச் சொல்லிட்டுப் பேஸ்புக்கில் போஸ்ட் எழுதி கீபோர்ட் யுத்தத்திற்குத் தயாரனாள் ரேகா!
……………
வளைக்காப்பு வீட்டிலிருந்து கிளம்பத் தயாரான நாச்சியா தேவாவுக்குப் போன் அடித்தாள்…..
"ஹலோ"
"ஹலோ நான் நாச்சியா பேசறன். கிளம்பறேன் வரிங்களா?!
"யா நான் இப்பதான் கிளம்ப நினைச்சேன். நீங்களே அதுக்குள்ள கூப்பிட்டுட்டிங்க!" என்ற தேவாவை ஆச்சரியமா பார்த்தான் சதிஷ்….,.
"ஏன்டா பிக்சர், பியர், பிரியாணினு பெரிய பெரிய பிளான்லாம் சொல்லிட்டு போன்ல கிளம்பலாம்னு யார்கிட்டயோ சொல்ற?!
"மச்சான் என் க்ரசோட வண்டியில ஒன்னா சேர சந்தர்ப்பம் எல்லா நேரமும் அமையாதுடா. நீ அடுத்த முறை வரப்ப அசத்தறோம் ஓகே வா"னு சொல்லிட்டுச் சதிஷ் வீட்டுக்கு வெளிய வந்து நின்னவனைச் சதிஷ் பாக்க……
"ரொம்ப நல்லவன்டா நீ. இனிமே நான் இருக்கப்ப வீட்டுப் பக்கம் வந்துடாத" என்ற சதிஷ், ஸ்கூட்டியில் வந்து நின்ற நாச்சியாவை பார்த்ததும் சைலன்ட் ஆய்ட்டான்….
"ஹாய் தேவா போலாமா?!
" ம் போலாங்க"
"சரி இவர்தான் உங்க ப்ரண்டா ஏன் ஜஸ்ட் அறிமகப்படுத்தி வைக்கலாமே"னு நாச்சியா கேட்க, சதிசை அறிமுகப்படுத்தி வைத்தான் தேவா….
"டே மச்சான் விட்ராத எப்படியாவது லவ், மேரேஜ்னு இந்தப் பொண்ணுக்கூடயே செட்டில் ஆகிடு"னு சதிஷ் தேவா காதுல கிசுகிசுக்க…..,
"கொஞ்சம் பொறுடா அவ கேரக்டர் தெரியாம, எதும் பேசி வைச்சிடாத"னு மெதுவா சொன்னான் தேவா….,.
தேவா வண்டியில ஏற நாச்சியா வண்டிய டிராபிக்ல அசால்ட்டா விரட்ட ஆரம்பிச்சா!
"என்னங்க இவ்வளவு அசால்ட்டா கட் அடிச்சி போறிங்க"னு தேவா கேட்க…..
"இதே பசங்க இப்படி ஓட்டி இருந்தா கேட்டிருக்க மாட்டிங்களா"னு நாச்சியா கேட்க தேவா சைலன்ட் ஆனான்!
"தேவா உங்கக்கிட்ட ஒன்னு கேட்கனும் தப்பா நினைக்க மாட்டிங்களே"
"இல்ல கேளுங்க"
"உங்க அக்கா லூசா?! என்றாள் பட்டுனு, தேவாவுக்கே ஒருமாதிரியா ஆகிருச்சி, நாச்சியாவே தொடர்ந்து பேசினாள்!
"இதுக்குத்தான் தப்பா நினைச்சுக்காதிங்கனு சொன்னன்"
" இல்ல இல்ல பரவாயில்லை சொல்லுங்க"
" இல்ல எப்ப பார்த்தாலும் பெண்விடுதலை பெண்ணியம் பேசறனு யார் கூடவாவது கெட்ட வார்த்தையில சண்ட போட்டுக்கிட்டே இருக்கு, அதான் கேட்டேன்"னு நாச்சியா சொல்ல திருப்பி என்ன சொல்றதுனு தெரியாம தேவா முழிச்சான்.
"என்னோட ப்ரன்ட்லிஸ்ட்ல உங்க அக்கா இருக்கு. ஆனா என்னை இதுவரை நேர்ல பார்த்ததே இல்லை. வீட்டுக்குள்ளயே புரட்சி பண்ணும் போல"னு சொல்லி நாச்சியா சிரிக்க, தேவாவோ ரேகா மேல கொலவெறி ஆனான்.
"பட் தேவா உங்க தங்கச்சி உமா எனக்கு நல்ல ப்ரன்ட். நாங்க fbலயும் ப்ரன்ட்ஸா இருக்கோம். எப்பவாவது டைம் இருக்கப்ப ஐபில சின்னதா பேசிப்போம்"னு நாச்சியா சொல்ல, இது கொஞ்சம் நிம்மதியா இருந்தது தேவாவுக்கு….
அதனால இப்ப தேவா பேசினான்.
"யா உமாவுக்குப் படிப்புதான் எல்லாமே. அவ யார் பிரச்சினைக்கும் போக மாட்டா" என்றான் தேவா….
" ஹஹஹஹஹ"என்று சிரித்தாள் நாச்சியா…..
"ஏன் சிரிக்கறிங்க"
"ரெண்டு விசயம் சொல்றேன் கேட்டுக்கோங்க தேவா இனி நாம ங் போட்டு பேசிக்க வேணாம். நம்ம வயசுல ஒரு வருசம் வித்தியாசம்தான். அடுத்து உமாவ பத்தி உங்களுக்குச் சரியா தெரியல, உமாவுக்குத் தன்னைச் சுத்தி நடக்கற தப்புங்க மேல அளவுக்கதிமா கோபம் இருக்கு. அவ ஒரு கோல் வைச்சிருக்கா அதை அடையற வரை அவ இப்படி அமையாத்தான் இருப்பா" என்று நாச்சியா நிறுத்த,
தன் வீட்ல இருக்கவங்கள பத்தி நம்மள விட இவ நல்லா தெரிஞ்சி வைச்சிருக்காளேனு ஆச்சரியப்பட்டான் தேவா…..
வண்டி ஐயப்பன் தாங்கல் வந்திருந்தது…..
"அப்புறம் தேவா நான் குடுத்த நம்பர்தான் என் வாட்ஸ்அப் நம்பர். என் பேஸ்புக் ஐடி நேம் கோதை நாச்சியார் இனி நாம ப்ரன்ஸா இருப்பம் ஓகேவா"
" ஓகேங்க"
"ஓகே நாச்சியானு சொல்லுங்க"
சிரமப்பட்டு மென்னு முழுங்கி "ஓகே நாச்சியா" னு தேவா சொல்ல பை சொல்லிவிட்டு வண்டியை வீட்டுக்குள் நகர்த்தினாள் நாச்சியா…...
----தொடரும்----

No comments:
Post a Comment