anti - piracy

Post Page Advertisement [Top]

மெல்ல திறந்தது மனது (ஆதன்-னின்)
                                                   

அத்தியாயம் 13 

நேற்று நடந்ததைப் பற்றி எந்தவித சுவடும் மனதில் இல்லாமல் வழக்கம்போல் கடையைத் திறந்தவள் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தாள். நேற்று நடந்த சம்பவத்தில் தேவா சிவாவை அடித்த விதமும், பதறாமல் குரல் உயா்த்தாத அவனின் மெல்லிய உறுமலும் தேவாவின் மேல் இதுநாள் வரை இருந்த அப்பிராணி என்ற அவளின் எண்ணத்தை மாற்றி இருந்தது……

கடை, வீடென வேலைகளில் மூழ்கி இருந்தவளை 8 மணிக்கே ஓடி வந்த வாசு ஆச்சரியப்படுத்தினான்….

"என்னடா சீக்கிரமா வந்துட்ட?"னு நாச்சியா கேட்க,

"அக்கா மொபைல் எடுத்து பேஸ்புக். வாட்ஸ்அப் பாரேன்" என்று வாசு பரபரத்தான்.

காலையில் தேவாவுக்கு ஒரு குட்மார்னிங் மெசேஜ் கூடப் போடாதது அப்பதான் அவளுக்கு நினைவே வந்தது…

"அப்படி என்னடா விசயம்? நீயே சொல்லு மொபைல் வீட்டுக்குள்ள இருக்கு"னு நாச்சியா சொல்ல.

"பொடியன் ஸார் என்னமா சொல்றாரு?"னு சண்முகம் கேட்க,

"தெரியலையேப்பா ஸார் காலையிலயே சீக்கிரமா வந்து மொபைலை பார்க்க சொல்றாரு. அக்கவுண்ட்ல 15 இலட்சம் போட்டுட்டாங்களோ என்னவோ"னு நாச்சியா சொல்ல, சண்முகம் சிரித்தப்படியே வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பித்தார்! வீட்டிற்குள்ள போய் மொபைலை எடுத்து வந்தாள் நாச்சியா! கடைக்குள் வந்தான் வாசு ஆர்வமாக!

"அக்கா பேஸ்புக் போயேன்" என்று அவசரப்படுத்தினான்!

"பொறுடா இவன் வேற"னு பேஸ்புக்கை திறந்து மெதுவாய் பார்க்க ஆரம்பித்தவள் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் ஆச்சரியத்துக்குப் போனது. இன்பாக்ஸ் நிரம்பிக் கிடந்தது.

நேற்று நடந்த சம்பவத்தின் போது வேடிக்கை பார்க்க வந்த கும்பலில் சிலர் அதை வீடியோ எடுத்து பேஸ்புக், வாட்சப்பில் பரப்பி இருந்தனர்.

வீரமங்கை, வீரத்தமிழச்சி அப்படி இப்படினு இவ சிவாவை ஷாலை சுற்றி அடித்ததைப் பரப்பி இருந்தார்கள். இந்த வீடியோதான் பேஸ்புக்கில் எல்லாப் பக்கமும் கண்ணில் பட்டது. இவளுடைய பழைய போஸ்ட்ல எல்லாம் அது இதுனு பாராட்டி கமெண்டுகள் குவிந்து கிடந்தது. இன்பாக்ஸில் சொல்லவே வேண்டாம் ஒரு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மெசேஜ்கள் நிரம்பி வழிந்தது….

கூடவே சென்னையின் புருஸ்லீனு தேவா சிவாவை அடிச்ச வீடியோவும், அசிங்கப்பட்டான் ஜிம்பாடிக்காரன்னு சந்துரு சிவாவை கூட்டிக்கிட்டு போக முயற்சி பண்ணியதையும், நாச்சியா அதைத் தடுத்த வீடியோவும் பல டைட்டில்ல சுற்ற ஆரம்பித்திருந்தது…..

ஆச்சரியத்தையும் சிரிப்பையும் அடக்க முடியாதவள் சண்முகத்துக்கிட்ட அதைக் காட்டிட்டு தேவாவுக்குப் போன் அடித்தாள்…..,

குரூப் எக்ஸாமுக்கு ஐந்து நாள வைச்சிக்கிட்டு எட்டு மணி தாண்டியும் இழுத்துப் போர்த்தித் தூங்கிக்கிட்டு இருந்தவனைப் போன் ரிங் உசுப்பியது….

போனை அட்டன்ட் பண்ணியவன் கொட்டாவி விட்டபடியே "ஹலோ கோதை குட்மார்னிங்" என்றான்….

" ஹலோ சென்னையின் புரூஸ்லீ அப்படியே எழுந்து பேஸ்புக்கக் கொஞ்சம் ஓபன் பண்ணி பார்க்கவும்"னு சொன்னவள் ஏன் என்னனு சொல்லாம போனை கட் பண்ணியவள், உமாவுக்குப் போன் அடித்துப் பேஸ்புக்கை பார்க்கச் சொல்லி விட்டுப் போனை வைத்தாள்.

கடைக்கு வந்தவங்கள்ல முக்கால்வாசி பேரு நின்னு அவளைப் புகழ்ந்து பேசிட்டு போக, கடையில் கும்பல் தேங்க ஆரம்பித்தது!

பேஸ்புக்கில் நடந்த களேபரங்களைப் பார்த்த தேவாவுக்குச் சிரிப்பாவும் கொஞ்சம் பெருமையாவும் இருந்தது….. ஏதாவது செல்பிய போஸ்ட்டா போடுவான் இருவது முப்பது லைக் விழும். இப்ப அவனோட பழைய போஸ்ட் சிலது 200, 300 லைக்கை தாண்டி இருந்தது. கமெண்டில் சென்னையின் புருஸ்லீனு போய்க்கிட்டே இருந்துச்சி, காராத்தே கிளாஸ்ல எடுத்த போட்டோ ஒன்ன போஸ்ட் போட்டுட்டு கிச்சனுக்குள் நுழைந்தான்….

இதுக்கு நடுவுல உமா தேவாவோட வீடியோவ தன் பிரன்ட்ஸூக்குலாம் வாட்ஸ்அப்பில் அனுப்பிட்டு, வீட்ல இருக்க எல்லாருக்கிட்டயும் காட்டி வைத்திருந்தாள்…..

கிச்சனுக்குள் வந்த தேவாவை…..

" ஏன்டா படாத இடத்துல பட்டு ஏதாவது ஆகியிருந்தா என்னடா பண்றது"னு கொஞ்சம் கவலையா நிறையப் பெருமையோட கேட்டாள் மீனாட்சி…

தேவா உமாவை பார்த்தான்….

"அதுக்குள்ள வீட்ல எல்லாருக்கும் ஊதிட்டியா"னு உமாவை செல்லமாய் முறைக்க,

" அண்ணா இதுக்கே இப்படினா என்னை டீஸ் பண்ண பசங்கள நீ அடிச்ச வீடியோ வந்திருந்தா வேர்ல்ட் பேமஸ் ஆகிருப்ப"னு குதுகலமாய் உமா சொல்ல, டீயோடு ஹாலுக்கு வந்தான் தேவா..,.

ஆபிசுக்கு ரெடி ஆகிட்டு இருந்த சந்திரசேகர் அவனை மேல கீழ பார்த்துட்டு…..

"டைப்பிங், ஸ்போக்கன் இங்கிலீஷ், கம்யூட்டர் இப்படி எந்தக் கிளாசுக்கும் போகாம கராத்தே கிளாஸ் போனது தெருவுல ரெளடி பைய மாதிரி ஒருத்தன அடிக்கத்தானா"னு கோபமாய்க் கேட்க,

"அவன் அந்தப் பொண்ண தப்பா பேசினான் அதான்பா அடிச்சேன்" னு பவ்யமாய்ப் பதில் வந்தது….

"நாலைஞ்சு நாள்ல எக்ஸாம வைச்சிக்கிட்டு வீதியில சண்ட போட்டுக்கிட்டும், காலையில இழுத்து போர்த்திக்கிட்டும் தூங்கற, எப்படி உருப்படுவ?! நம்ம வீட்ல கல்யாணமாகாத ரெண்டு பொண்ணுங்க இருக்கு அதை ஞாபகத்துல வைச்சுக்கோ"னு சந்திரசேகர் புராணத்த ஆரம்பிக்க……

"நம்ம வீட்ல பொண்ணுங்க இருக்கறது ஞாபகத்துல இருக்கறதாலதான் அவனை அடிச்சேன்"னு கூலா சொல்லிட்டு டிவியில நியூஸ் சேனல மாத்தினான் டிவியில, பாலிமர் நியூஸ்ல "தன்னிடம் தவறாகப் பேசியவனை அடித்துத் துவைத்த வீர மங்கை"னு செய்தி ஓடியது…… ஒரே நாள்ல நாச்சியா பேமஸ் ஆகிட்டாள்…..

நாச்சியா அடிக்கற வீடியோவ பார்த்த சந்திரசேகர் "ச்சை பொண்ணாடா இது, இந்தப் பொண்ண உனக்கெப்படிடா தெரியும்"னு கேட்க.

"அவ உமாவோட ப்ரன்ட் ஸோ அதனால தெரியும்"னு நேக்கா உமாவை கோர்த்து விட்டான் தேவா…..

தேவா சொன்ன அடுத்த நொடி உமா பக்கம் சந்திரசேகர் திரும்பறதுக்கு முன்னாடி கிச்சனுக்குள் ஓடிட்டா உமா…. எப்படியோ போய்த் தொலைங்க எல்லாம் என் விதினு கிளம்பினார் சந்திரசேகர்…..

டீக்காகக் கூட ரூமை விட்டு வெளியில் வராம நாச்சியா. தேவா வீடியோவ திரும்பத் திரும்பப் பார்த்துக்கிட்டே இருந்தாள் ரேகா. குறிப்பா அசிங்கப்பட்டான் ஜிம்பாடிக்காரன்னு சந்துரு அவமானப்பட்ட வீடியோவ போஸ்ட் பண்ணவங்கக்கிட்ட கமெண்ட்ல சண்ட போட போய் மொக்க வாங்கிக்கிட்டு வந்தாள் ரேகா.

அவளால மனசுக்குள் நாச்சியா மேல எழுந்த பொறாமையை அடக்கவே முடியல….. போதா குறைக்கு , வெறும் வாய்ல பேசாம செயல்ல காட்டும் இம்மாதிரியான பெண்கள்தான் உண்மையான பெமினிஸ்ட் என்று சிலபல பிரபலங்கள் எழுதி இருந்த போஸ்ட்லாம் கடுப்பை இன்னும் அதிகமாக்கி இருந்தது!

அத்தியாயம் 14 

ரேகாவால் நாச்சியாவை பேஸ்புக் பிரபலங்கள் "உண்மையான பெமினிஸ்ட் இந்தப் பொண்ணு"தானு எழுதியதையோ இல்லை டிவி வரை அவள் முகம் வருவதையோ ஏற்கவே முடியவில்லை...

எனக்குத் தெரியாத விசயங்களா?! பெண்ணியத்திற்காக நான் எழுதாத கட்டுரைகளா இல்லை பேஸ்புக்கில் நான் போடாத சண்டைகளா? நமக்குக் கிடைக்காத அங்கீகாரம் இவளுக்கு ஒரே நாள்ல எப்படி வரலாம்? முதல்ல இவளாம் வீட்டு அடிமைப் புழு…. இவ பெமினிஸ்ட்டா? இப்படிப் பல கேள்விகள் பொறாமையால் மனதில் எழுந்து தாண்டவமாட,

முகத்தைக் கழுவிக்கிட்டு கிச்சனுக்கு வந்தவள் டீயை ஊற்றிக் குடிக்காமல் வேணுமென்றே மீனாட்சிக்கிட்ட டீ கேட்டாள்…

"பிளாஸ்க்கில் இருக்கு ஊத்திக்கோ"னு மீனாட்சி சொல்லிட்டு அமைதியா பாத்திரங்களைக் கழுவ ஆரம்பித்தாள்.

கடுப்பான ரேகா பாத்திரங்களைக் கழுவிக்கிட்டு இருந்த மீனாட்சியைத் திருப்பி நிறுத்தி "இப்ப டீ ஊத்தி தருவியா மாட்டியா?" னு கேட்க அவள் முகம் விகாரமாய் இருந்தது கோபத்தில்…

"வீட்ல யாருமில்லை நீயும் நானும்தான் இருக்கோம். ஏதாவது உன்னோட பைத்தியக்காரத்தனத்தைக் காட்டலாம்னு நினைச்சனா, களிக்கம்ப எடுத்து வெளுத்து என் மனசுல இருக்க வருசக்கணக்கான கோவத்தைத் தீர்த்துக்குவேன். ஒழுங்கா வெளியில போய்டு?னு கழுத்தை புடிச்சி ரேகாவை கிச்சனுக்கு வெளியில் தள்ளிவிட்டாள் மீனாட்சி….

திரும்பி கிச்சனுக்குள் பாயப் பார்த்த ரேகாவை "என்னடி அம்மாவுக்கு வயசாயிருச்சினு பாக்கறியா, உள்ள வந்தனு வை இன்னைக்கு உனக்குப் பூசைதான்"னு சொல்லிட்டு தேவாவுக்குப் போன் அடித்தாள் மீனாட்சி…..

"சொல்லுமா"

"டே தம்பி வீட்டுக்கு வாடா"

"ஏம்மா ஏதாவது பிரச்சினையா"னு பதறினான் தேவா…

"நான் பெத்தது ஒன்னு ஓவரா ஆடுது, என்னை அடிச்சே ஆகனுங்கற வெறியில நிக்கறா நீ கொஞ்சம் வா"னு மீனாட்சி சொல்ல விக்கி வண்டிய எடுத்துக்கிட்டு ஐந்தே நிமிசத்துல வீட்டுக்கு வந்தான் தேவா.

இந்த ரெண்டு நிமிசத்துல மீனாட்சியைத் தள்ளிவிட்டுட்டுச் சாமான்களை எடுத்து சுவத்துல வீசி எறிந்து கிச்சனை அலங்கோலப் படுத்தி வைச்சிருந்தா ரேகா…..

தேவா வீட்டிற்குள் வந்து பார்த்த காட்சி பயங்கரக் கோவத்தை ஏற்றியது அவனுக்கு.
சாமான்கள் சிதறிக்கிடக்கச் சிலிண்டர் மேல விழுந்த மீனாட்சி இடுப்பில் அடிபட அப்படியே உட்கார்ந்தப்படியே இருந்தாள்….

"ஏய் ரேகா அம்மாவ என்ன பண்ணி வைச்சிருக்க"னு சொன்னவன் கொத்தாய் முடியை பிடிச்சி இழுத்து ஹாலுக்கு வந்தவன் சோபாவில் தூக்கி எறிந்திட்டான்.

ரேகாவே இதை எதிர்பார்க்கல…..

"அம்மா மேல கை வைக்கற அளவுக்குப் பெரிய இவளா நீ அக்கானுலாம் பாக்க மாட்டேன். உன் இலட்சணம்தான் பேஸ்புக்ல சிரிப்பா சிரிக்குதே உனக்குலாம் வெட்கமே இல்லையா?"னு கோபமாய் ரேகாவை நெருங்க மீனாட்சி தடுத்து நிறுத்தினாள்.

"என்னடா பொம்பளைக்கிட்ட உன் வீரத்தைக் காட்டறியா"னு மறுபடியும் எகிற ஆரம்பித்தாள் ரேகா….

"முதல்ல நீ பொம்பளையா? அம்மா மேல எதுக்குக் கை வைச்ச இதுக்குப் பதில் சொல்லுடி"னு காட்டமாய்க் கேட்டான் தேவா……

"நீ ஊருல இருக்கவளுக்காக மத்தவன அடிப்ப ஆனா வீட்ல இருக்கப் பொம்பளையையும் அடிப்ப, நீயெல்லாம் மோசமான ஆணாதிக்கவாதிடா"னு மறுபடியும் பொறாமையால் பொங்க ஆரம்பித்தாள்…

"அதான பார்த்தேன். அம்மா இவ இப்ப பேய் புடிச்ச ஆடறதுக்குக் காரணம் என்னனா நானும், அந்தப் பொண்ணும் ஒரேநாள்ல பிரபலம் ஆனத இந்தப் பேஸ்புக் புழுவால பொறுத்துக்க முடியல அதைத்தான் உங்கிட்ட காட்டி இருக்கா"னு கரெக்ட்டா தேவா சொல்ல,

"யாரு நான் பேஸ்புக் புழுவா அவதான்டா வீட்டு புழு, அவளை வைச்சி அவங்கப்பன் சம்பாதிக்கறான். அவ அடிமைடா"னு பொறிய ஆரம்பித்தாள் ரேகா….

"ரைட்டு உனக்குப் பிரச்சினை நானும் இல்ல, உன் பிரச்சினை நாச்சியாதான். வீட்டுக்காக அப்பாவுக்காகப் படிப்ப விட்டுட்டு இன்னைக்குத் தன் சொந்த கால்ல நிக்கறா அவ உனக்கு அடிமையா, நீயெல்லாம் பெண்ணியவாதினு எங்கையாவது சொல்லிடாத நானே காறித்துப்புவேன்.

இதுல அந்தப் பொம்பள பொறுக்கி சந்துருக்காகப் பேஸ்புக்ல சப்போர்ட் வேற பண்ணி கண்டவங்கக்கிட்ட செருப்படி வாங்கற. விக்கியிலிருந்து நாச்சியா கடையில வேலை செய்யற சின்னப் பையன் வரை கேலியா பாக்கறானுங்க எனக்குக் கேவலமா இருக்கு"னு தேவா கத்த,

"யார்டா தேவா சந்துரு"னு மீனாட்சி உசாராய் கேட்டாள். ஆயிரம்தான் இருந்தாலும் ரேகா மீனாட்சி பெத்த பிள்ளைதான அதனால பதட்டமாய்க் கேட்டாள்.

"விக்கி வீதியில இருக்கான்மா, நாச்சாயாக்கிட்ட தப்பா நடந்துக்கிட்டவனும் இவனும் க்ளோஸ் ப்ரன்ட்டுங்க" என்றான் தேவா.

" என்னடா விட்டா அந்த நாச்சியாவ வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்துடுவ போல"னு சந்துருவை பத்தி பேசியதால் நாச்சியா பற்றி ரேகா பேசினாள்…

"அந்த மாதிரி ஒரு பொண்ண எம்பையன் கூட்டிக்கிட்டு வந்தா தாராளமா நான் ஏத்துக்கறேன் உனக்கென்னடி அதுல பிரச்சினை. உன்னை மாதிரி அந்தப் புள்ள ஒன்னும் உருப்படாம இல்ல உழைச்சி திங்குது"னு மீனாட்சி சொல்ல தேவாவோட முகத்துல பிரகாசம் வந்து மறைந்தது!

" ஓ அம்மா பையன் தங்கச்சி எல்லாரோட திட்டமும் இதானா? இருக்கட்டும் இது எப்படி நடக்குதுனு நானும் பாக்கறேன் அப்பா வரட்டும்"னு சூழ்ச்சியாய் பேச ஆரம்பிச்சா ரேகா, அவளோட அரைகுறை பெண்ணியம் கூட இப்ப காத்துல பறந்திருந்தது!

"உன் பொறாமைக்கு இல்லாத பொல்லாததைப் பேசி அந்தப் புள்ளைய இழுத்து தெருவுல விட்ராதடி பொறாமைப்புடிச்சவளே"னு மீனாட்சி கலக்கமாய்ச் சொல்ல,

"அப்பா வரட்டும்" என்ற வார்த்தையோட ரூமுக்குள் போய்க் கதவைச் சாத்தினாள் ரேகா!

அத்தியாயம் 15 

"டே மச்சான் வெளிய போகவே அவமானமா இருக்குடா" என்ற சிவாவின் குரலில் நாச்சியா தேவாவின் மீதான வன்மமும் அவமானமும் ஒலித்தது…..

"விடுறா ரெண்டுநாள் ஆனா எல்லாத்தையும் மறந்திடுவானுங்க. கவலைப்படாத அந்தத் தேவா பைய அக்காவ கரெக்ட் பண்றேன். வேலையை முடிக்கறேன். அந்த வீடியோவ அவனுக்கே அனுப்புறேன்" என்றான் சந்துரு….

"அப்ப அந்த நாச்சியாவ?" என்றான் சிவா!

"அவளைத்தான்டா என்ன பண்றதுனு தெரியல, குழப்பமா இருக்கு"

"அந்த நாச்சியா தேவா ரெண்டுபேரும் லவ்வர்ஸ்னு தோணுது, இதை வைச்சிதான் ஏதாவது பண்ணனும்" என்ற சந்துரு சிவாவை வீட்லயே இருக்கச் சொல்லிட்டு ஜிம்முக்குக் கிளம்பினான்!

ஜிம்மில் இருந்தவர்கள் சந்துருவை பார்த்ததும் மெதுவாகச் சிரிக்க ஆரம்பித்தனர். ஒருசிலர் சோகமா அவன்கிட்ட துக்கம் விசாரிக்க, கடுப்பான சந்துரு ஜிம்மை விட்டு வேகமா வெளியேறி வீட்டிற்கு வந்து கட்டிலில் விழுந்தான்.

நடந்த அவமானத்திற்கு எப்படியாவது ரேகாவை சீக்கிரம் படுக்கையில் வீழ்த்தி தேவாவை பழிவாங்க வேண்டுமென்ற எண்ணம் அவனை உசுப்பிவிட்டது.

மொபைலை எடுத்தவன் வாட்ஸ்அப் போகாமல் நேரடியா ரேகாவுக்குக் கால் அடித்தான்…
மொபைலில் அவன் பெயரை பார்த்ததும் கோவத்தில் இருந்தவளுக்கு மருந்தாய் இருந்தது!

"ஹலோ" என்றாள் சோகமாய்!

"ஹேய் ரேகா ஏன் வாய்ஸ் டல்லா இருக்கு"

"அந்த வீடியோ பார்த்தன் உங்கள அந்த நாச்சியா அவமானப்படுத்தி இருக்கா அந்தக் கோவத்துல இருக்கேன் டல்லாலாம் இல்ல"என்றவள் சமாளித்தவள்…..

"அறியாமையில சிலர் நடந்துக்குவாங்க அதுக்காக எல்லாம் தெரிஞ்ச நீங்க கோவப்படலாமா? என்று புகழ்ச்சியை நயமாய்த் தூவிவிட்டான் சந்துரு.,...

"புரியுது பட் உங்கள மாதிரி ஜென்டில் மேனா நடந்துக்கறவங்கள அவமானப்படுத்தறதை ஏற்க முடியல" என்று சோகம் இழையோடும் குரலில் பேசினாள் ரேகா…..

" நான் அதை நேத்தே மறந்திட்டேன் அதுல இருந்து நீங்க வெளிய வாங்க"

"ட்ரை பண்றேன்"

"சரி இன்னைக்கு ஈவ்னிங் பார்க்குக்கு வருவிங்கதான?! என்று கொக்கியை போட்டான் சந்துரு.

" ஏன் சந்தேகம்? யார் தடுத்தாலும் வருவேன்" என்ற ரேகாவிற்கு இவனை வைத்துக் குடும்பத்தைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது!

"சாி வாக்கிங் போற மாதிரி வருவிங்களா இல்ல பங்சன் போற மாதிரி வருவிங்களா? அது….
பங்சன் போற மாதிரி வரதா இருந்தா எங்கையாவது காபி ஷாப் போலாம். அதான் கேட்டன்"

"காபி ஷாப்பே போலாம்"என்றாள் ரேகா….

ரேகா அவளையறிமலே அவன்மேல் ஈர்ப்பாகத் தொடங்கிவிட்டாள். அவனின் பேச்சு, முகம். உடல்வாகு எல்லாமே அவளை ஈர்த்திருந்தது. ரேகா அவன் தன்னை லவ் பண்றான் ப்ரபோஸ் பண்ணத் தயங்கறான்னு நினைத்திருந்தாள்!..

………..

காலேஜில் ஒரே கொண்டாட்டம் உமாவுக்கு… தன்னோட டிபார்ட்மென்ட் ஜூனியர் எல்லாத்துக்கும் தேவாவோட வீடியோவ காட்டிக் கொண்டாட்டமா இருந்தாள் உமா….

"ஏய் உமா உன்னோட அண்ணன் பேஸ்புக் ஐடி நேம் சொல்லு"ணு பல நச்சரிப்புகள்….

கேட்ட எல்லாருக்குமே ஐடி நேம் குடுத்தவத் தவறாம நாச்சியா வீடியோவ காட்டி இவங்கதான் என் வருங்கால அண்ணினும் சொல்ல மறக்கல.

இன்னைக்கு அண்ணனுக்கு எக்ஸாம் எழுத புதுக் காஸ்ட்லி பேனா வாங்கி ப்ரசன்ட் பண்ணனும்னு முடிவு பண்ணினாள்…..
…………….

சந்திரசேகரருக்கு ஆச்சரியமா இருந்தது மீனாட்சி போன் பண்ணியிருந்தது…

"சொல்லு மீனா அதிசயமா போன் பண்ணியிருக்க"னு கேட்கவும்…..

மீனாட்சி நடந்ததை எல்லாம் சொல்லி அழவும் ரேகா மேல சந்திரசேகரருக்கு அளவில்லாத கோவம்….

29 வருச தாம்பத்தியத்தில் ஒருநாள்கூட மீனாட்சியைக் கை வைச்சதில்லை சந்திரசேகர். இதைக்கேட்டதும் அவரால் தாங்க முடியல…

இவர்களுக்குள்ள இருக்க வெளியில் தெரியாத அன்னியோன்யம் பிள்ளைகளுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை….

"மீனா நீ அழாத நான் வந்து பேசிக்கறன் நீ முதல்ல சாப்பிடு, அரைநாள் லீவ் போட்டுட்டு வரன்" என்ற சந்திரசேகர் கிளம்பத் தயாரானார்.

"இல்ல வேணாங்க நீங்க வேலைய முடிச்சிட்டே வாங்க"னு மீனாட்சி சொல்ல.

"இல்ல மீனா இத லூசா விட்டா அவ செஞ்சது எவ்வளவு பெரிய தப்புனு அவளுக்குப் புரியாது"னு போனை வைத்தவர் ப்யூனை கூப்பிட்டு சொல்லிட்டு வீட்டிற்குக் கிளம்பினார்!
…………..

வண்டியை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்ததுமே ரேகா ரூம் கதவைத் தட்டினார்…..

போனில் சந்துருவோடு பேசிக்கொண்டிருந்தவள் மீனாட்சிதான் இறங்கி வந்து சாப்பிட கூப்பிடறா அப்படினு அசால்ட்டா கதவைத் திறக்காமல் தொடர்ந்து சந்துருக்கூடவே பேசிக்கொண்டிருந்தாள்…..

தொடர்ந்து கதவு தட்டப்பட்டுக்கிட்டே இருக்கத் தேவாவும் மீனாட்சியும் ஹாலுக்கு வந்தார்கள்.

வெறுப்பான ரேகா கதவைத் திறக்க "பொளேர்"னு ஒரு அறை அறைந்தார் சந்திரசேகர்… தேவா. மீனாட்சி, அறைவாங்கிய ரேகா மூவருக்குமே அதிர்ச்சி…. முடியைப் பிடித்து இழுத்தவர் ஹாலில் தள்ளினார்….

"எவ்வளவு தைரியம் இருந்தா அம்மா மேல கைய வைச்சுருப்ப, நீ பண்ற யோக்கியத்துக்கு உனக்கு எல்லா வேலையையும் அடுத்தவங்க செய்யனுமா, முதல் பிள்ளையா பெத்து பாசமா வளர்த்திட்டனேனு அமைதியா போனா நீ அம்மா மேல கை வைக்கற அளவுக்கு ஆளாயிட்டியா" என்று உறுமினார்….

"இல்லப்பா இவங்கதான் அந்த நாச்சியா மருமகளா கூட்டிக்கிட்டு வருவம்"னு பேசினாங்கனு அடி வாங்கியும் சூழ்ச்சியாவே பேசினாள் ரேகா!

"எல்லாத்தையும் மீனா சொல்லிட்டாள். அவ ஒரு பேச்சுக்கு சொன்னதை வைச்சி நீ செஞ்ச தப்ப மறைக்கறியா?

அவங்க சாதி என்ன நம்பச் சாதி என்ன? தேவா என்னை மீறி கனவுலக்கூட அப்படிச் செய்யமாட்டான். உன் வேலையை இனிமே ஒழுங்கா நீதான் பார்த்துக்கனும்"னு சொல்லி சந்திரசேகர் முடிக்க.

தேவாவுக்கு இடி விழுந்த மாதிரி இருந்தது சந்திரசேகரின் இந்தப் பேச்சு!

ரேகா வாங்கிய அடியை மறந்து ஒரு வன்மத்தோட தேவாவை பார்த்தப்படியே சோபாவில் ஏறி கால்மேல் கால் போட்டு அமர்ந்தாள்!

வீட்டில் நடந்த இந்தப் பிரச்சினையால் சந்துருக்கூடக் காபி ஷாப் போகல அதுமட்டுமில்லாம வீட்ல சில முக்கியமான வேலைங்களாம் செய்யனும் அடுத்த வாரத்திலிருந்து வாக்கிங் வரதா சொல்லி இருந்தாள் சந்துருக்கிட்ட…..

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத ஏமாற்றம், கோபத்தால் ரேகாவிடம் சரியாகப் பேசாமல் இருந்தான் சந்துரு…,,!

அத்தியாயம் 16 

இப்படியே நாலு நாள் ஓடியிருக்க விடிந்தால் குரூப் எக்ஸாம்!

நைட் 9 மணிக்கு தேவாவுக்குப் போன் அடித்துக் கடைக்கு வரச்சொன்னாள் நாச்சியா! ஏன் என்னனு தேவா கேட்டதுக்கு நேர்ல வா முக்கியமான விசயம்னு போனை வைத்து விட்டாள் நாச்சியா!

மீனாட்சிக்கிட்ட எக்ஸாம் சம்பந்தமா பேச விக்கி வீட்டு வரைக்கும் போயிட்டு வரதா சொல்லிட்டுக் கிளம்பினான் தேவா……

கடை சீக்கிரமாவே சாத்தி இருக்கக் கடைக்கு வெளிய நின்றிருந்தாள் நாச்சியா…

தேவா வந்ததும் "தேவா முக்கியமான விசயம் பேசனும். உனக்கு டைமிருக்கா"னு கேட்டாள் நாச்சியா!

"ம் சொல்லு கோதை. அம்மாட்ட விக்கி வீட்டுக்குப் போறதா சொல்லிட்டுத்தான் வந்திருக்கேன்" என்றான் தேவா!

" எங்கம்மா இறக்கறப்ப நான் 12வது படிச்சிட்டு இருந்தேன்"

"ம்"

"எங்கப்பா மார்க்கெட் போறது கடைய பார்த்துக்கறதுனு ரொம்பச் சிரமப்பட்டார். இந்த மளிகைக்கடை தொழிலாலதான் சேலத்துல இருந்து இங்க வந்த எங்கப்பா வாழ்க்கையில கொஞ்சம் கொஞ்சமா முன்னேறினார்"

"ம் உங்க சொந்த ஊர் சேலமா?"

" ம் ஆமா. என்னால எங்கப்பா கடைக்காகப் படற கஷ்டத்த பார்க்க முடியல, எங்க குடும்பம் முன்னேற காரணமா இருந்த இந்த மளிகைக்கடையையும் விட முடியல அதான் 12வதுல நல்ல மார்க் வாங்கியும் படிப்பை நிறுத்திட்டு வீட்டையும் கடையையும் பார்த்துக்கிட்டேன்"

"ம்"

" இதெல்லாம் உன்கிட்ட ஏன் சொல்றன் அப்படினா உன்ன நான் விரும்பறன். கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கறேன்!"

இதைக்கேட்டதும் சந்தோசத்துல என்ன சொல்றதுனு புரியாம இதுக்கும் "ம்" என்றே பதில் சொன்னான்…

" என்ன "ம்" வாயத்திறந்து பேசு இது வாழ்க்கை பிரச்சினை"

கொஞ்சம் தைரியம் வந்தவனாய் " நானும் லவ் பண்றேன் உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படறேன்"னு ஒருவழியா சொல்லி முடித்தான்!

மனசுக்குள்ளயே தன்கிட்ட மட்டும் வெளிப்படும் அவனுடைய அப்பாவித்தனத்தை, பயத்தை, பதட்டத்தை இரசித்தப்படியே தொடர்ந்து பேசினாள்….. இதை எல்லாமே உமா வீட்டிலிருந்து போனில் கேட்டுக்கொண்டிருந்தாள். இவர்கள் இன்னைக்குப் பேசும் சூழ்நிலையை உருவாக்கியவளே உமாதான்!

" இதை எல்லாம் உன்கிட்ட ஏன் சொல்றன் அப்படினா, நம்ம கல்யாணத்துக்குப் பின்னாடியும் அப்பாவையும் கடையையும் என்னால விட முடியாது. அதான் இப்பவே சொல்லிடறன்"

"சரி"

"உங்கப்பா நம்ம கல்யாணத்தைச் சாதிய வைச்சி ஏத்துக்க மாட்டாருனு உமா சொன்னாள் உண்மையா?

"ஆமா நிச்சயமா ஏத்துக்க மாட்டார்"!

"என்ன செய்றதா நினைக்கற" என்றாள் நாச்சியா!

"குரூப் எக்ஸாம்ல பாஸ் பண்ணி வேலை கிடைச்சுட்டா அப்பா ஏத்துக்கலனாலும் எதிர்த்துக் கல்யாணம் பண்ணிக்கலாம்"

" குரூப் எக்ஸாம்ல பாஸ் பண்ணுவனு நினைக்கறியா"

"வாய்ப்பிருக்கு இல்லனு சொல்ல முடியாது"! என்றான் தேவா!

"சரி கிட்ட வா" என்றவள் அவன் கையைப் பிடித்து மெல்லிய முத்தமொன்றை தந்து தைரியமா போய் எக்ஸாம எழுது, ரிசல்ட்ட பத்தி கவலைப்படாத, நானிருக்கேன்.

கடையை விரிவுப்படுத்திக் கட்டற வேலை நாளைக்கு ஆரம்பிக்குது. முதல் வேலையா மாடியில வீட்டை கட்டிட்டு கீழ இருக்க வீட்ட லைட்டா இடிச்சி கடைய பெருசா மாத்தறம். இனிமே கடைக்குள்ள வந்தே பொருள் வாங்கலாம்" என்றவள் "சரி நீ கிளம்பு டைமாச்சு" என்றாள்!

அவளைப் பார்த்தப்படியே அங்கிருந்து கிளம்பிய தேவா நாச்சியா முத்தம் தந்த கையில தானே ஒரு முத்தம் குடுத்தான்…..

வீட்டிற்குள் தேவா நுழையவும் சந்திரசேகர் படுக்கையிலிருந்து எந்திரிக்கவும் சரியா இருந்தது.

ச்சை இன்னும் ஒரு நிமிசம் லேட்டா வந்திருக்கலாம்னு மனசக்குள்ளயே நொந்தப்படியே ரூமுக்கு போனவனைச் சந்திர சேகரின் குரல் தடுத்தது!

"நல்லா தூங்கி எழுந்திரு அப்பதான் நாளைக்கு மூளை ப்ரஷா இருக்கும் சரியா" என்றார் சந்திரசேகர்!

தூங்க போனவனை நிறுத்தி பேசிக்கிட்டுச் சீக்கிரமா தூங்கனுமாம்னு மனசுக்குள்ளயே நினைச்சவன் சரிங்கப்பா என்று ரூமுக்குள் நுழைந்தான்…

பின்னாடியே உமாவும் தேவா ரூமுக்கு வந்தாள்!

"அண்ணா நாளைக்கு நீ எழுதபோற எக்ஸாமுக்காக என்னோட சின்னக் கிப்ட்" என்று காஸ்ட்லி பேனாவை கொடுத்தாள்.

"தேங்க்ஸ்டா உமாம்மா" என்றான் தேவா…..

"ஏன்ணா நாச்சியா எவ்வளவு தைரியமா பேசுது, நீ என்னடானா ம் ம் னுட்டே இருக்கே"னு உமா கேட்கவும் அதிர்ச்சியா இருந்தது தேவாவுக்கு.

"உனக்கெப்படி தெரியும் இதெல்லாம்" என்றான் குழப்பமாக…

"நம்ம வீட்டு சூழ்நிலைய சொல்லி நாச்சியா அக்காவ ப்ரபோஸ் பண்ண வைச்சதே நான்தான்"னு பெருமையா உமா சொல்ல…..

இவள இனிமேலும் குழந்தையாவே நினைக்கக்கூடாதுனு முடிவுக்கு வந்தான் தேவா!

"சரிண்ணா கடைசியா நாச்சியா அக்கா உன்ன கிட்ட வரச் சொன்னதே எதுக்குணா"னு அப்பாவியாய் முகத்தை வைச்சிக்கிட்டு உமா கேட்க,

செல்லமாய் அவளை அடிக்கற மாதிரி தேவா கையை ஓங்க ரூமை விட்டு ஓடினாள் உமா!

நாச்சியா பேசியதும், கையில முத்தம் தந்ததும் மட்டுமே தேவா மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்துச்சி. தூக்கத்த மட்டுமில்லை நாளைக்கு எக்ஸாம் அப்படிங்கறதையும் மறந்து கற்பனையில மிதக்க ஆரம்பிச்சான்!

இப்பலாம் அடிக்கடி தேவா நாச்சியா பற்றிச் சந்துரு கேட்க ரேகா தெரிந்ததைச் சொல்லிக்கிட்டு இருந்தாள்,......

வாட்ஸ்அப்பில் சந்துருக்கு கடைசியா ஒரு மெசேஜ் அனுப்பினாள்.

"தேவாவுக்கு நாளைக்கு எக்ஸாம் எப்படியும் பெயில்தான் ஆவான் குட்நைட் சந்த்து" என்று…..

இப்ப சந்துருவ செல்ல பேரு வைச்சிக் கூப்பிடற அளவுக்கு நெருக்கம் அதிகமாகி இருந்தது. ஆனால் வெளியில் மட்டும் சந்திக்காமல் இருந்தார்கள்!

கடவுள் இப்பவும் ரேகா பக்கமே இருக்கறதால இவ தப்பிச்சிக்கிட்டே இருந்தாள்!

                                                     ----தொடரும்----

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib