anti - piracy

Post Page Advertisement [Top]

மெல்ல திறந்தது மனது (ஆதன்-னின்)
 பாகம் 2                                               

அத்தியாயம் 43 
 
அருளின் வரவிற்காக 
வாசலில் எதிர்பார்ப்போடு ரேகா நின்றிருக்க, கார் ஒன்று வந்து வாசலில் நின்றது.,... காரிலிருந்து இறங்கிய அருள் வாடகை காருக்கான பணத்தைக் கொடுத்து அனுப்பி விட்டு ரேகாவை பார்த்து ஹாய் என்க ரேகாவும் ஹாய் அருள் என்றாள்….

அருள் ஆறடி உயரத்தில், மாநிறந்தில். தூக்கிவாரி சீவியிருந்த சிகையில், உழைப்பவனுக்கே உரிய உடற்தோற்றத்தில், பழைய நடிகர் அருண்பாண்டியன் முக வெட்டில் ஒரு கம்பீரக் கலையுடன் இருந்தான்….

அவனை வரவேற்று ஹாலுக்கு அழைத்துச் சென்ற ரேகா
மீனாட்சி மற்றும் தேவா. நாச்சியா என அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்தாள்.,...

முகமன் சம்பிரதாயங்கள் முடிந்து மீனாட்சி காபி கொண்டுவர,

"டீ காபி குடிக்கிற பழக்கம் இல்லைங்க ம்மா ஆனா உங்களுக்காகக் குடிக்கிறேன்" என்றவன் சின்னச் சிரிப்போடு காபியை வாங்கிக்கொண்டான்!

சிறிது நேர பேச்சிலேயே அவன் மிக
இயல்பாக எல்லோரிடமும் இணக்கமாகி சரிசமமாக நேரம் ஒதுக்கி பேசிக்கொண்டிருந்தான்….,

"சரி மதிய சாப்பாட்டு நேரம் தாண்டி போகுது வாங்க சாப்பிடலாம், தேவா நீயும் கையைக் கழுவிட்டு வந்து சாப்பிடு" என்று மீனாட்சி சொல்ல இருவரும் கை கழுவிக்கொண்டு வந்து சாப்பிட அமர்ந்தனா்!

மீனாட்சி இருவருக்கும் பரிமாறப் பேச்சில் கள்ளக்கபடம் இல்லாததைப் போலவே சாப்பாட்டிலும் எந்தவித கூச்சமும் இல்லாமல் அருள் சாப்பாட்டைப் பாராட்டிக்கொண்டே சாப்பிட அருளை வீட்டில் எல்லோருக்குமே பிடித்திருந்தது!

சாப்பிட்டு முடித்துவிட்டுத் தொழில், நாட்டு நடப்புகள் என்று பொதுவாகப் பேசிக்கொண்டிருந்த அருள் கிளம்பத் தயாராகி, ரேகாவுக்காகக் கொண்டுவந்திருந்த சில புத்தகங்களைக் கொடுத்துவிட்டுக் கிளம்பக் காரை புக் செய்தான்!

"நீங்க குடும்பத்தோட எங்க வீட்டுக்கு நாமக்கல்லுக்கு ஒரு முறை வரனும்" என்று அருள் சொல்ல தேவா நிச்சயமாய் என்றான். பேச்சின் இடையே கார் வரவும் எல்லோருக்கும் சொல்லிவிட்டு அருள் கையசைத்தப்படி கிளம்பினான்!

அவன் கிளம்பியவுடன்
சாப்பிடுவதற்காக நாச்சியா மீனாட்சி ரேகா மூவருமே அமர்ந்து சாப்பாட்டுத் தட்டில் கையை வைக்கவும்

அரக்க பறக்க ஓடிவந்த வாசு மூச்சு வாங்கியப்படி நிற்கவும்,

"ஏன்டா என்னடா ஆச்சு" என்று நாச்சியா பதற ஆரம்பித்துவிட்டாள்,

"அப்பா திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாருக்கா நானும் தண்ணி. சோடா எல்லாம் தெளிச்சி பார்த்தேன் கண்ணையே திறக்கல"னு வாசு அதிர்ச்சியில் திக்கி திக்கி சொல்ல சில நிமிடங்கள் ஆனது…..

இதைக் கேட்ட நொடி நேர தாமதம்தான் எச்சில் கையோடு, வண்டியைக்கூட எடுக்க மறந்த நாச்சியா தெருவில் இறங்கி ஓட ஆரம்பித்து விட்டாள். சற்று சுதாரித்து வண்டியில் தேவாவும், மீனாட்சியும் கிளம்ப, செய்வதறியாமல் வீட்டு வாசலில் நின்றாள் ரேகா…

புயலெனக் கடைக்குள் நுழைந்தவள் சண்முகத்தை மடியில் போட்டுக் கன்னத்தை மாற்றி மாற்றித் தட்டி சண்முகத்தை எழுப்ப, அவரிடமிருந்து எந்த அசைவும் இல்லை!

இதற்குள் தேவா ஆட்டோ பிடித்துக்கொண்டுவர, சண்முகத்தை ஆட்டோவில் ஏற்றி, நாச்சியாவும் மீனாட்சியும் ஆட்டோவில் ஏறிக்கொள்ளத் தேவா வண்டியில் பின் தொடர்ந்து போனான்….

பிரபல தனியார் மருத்துவமனையின் முன் ஆட்டோ நிற்க, தேவா உள்ளே ஓடிச்சென்று ஸ்ட்ரெச்சரை ஆட்களோடு எடுத்துவர, மருத்துவனை ஊழியர்கள் ஸ்ட்ரெச்சரில் ஏற்ற, ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார் சண்முகம்!

ஒரு மணி நேரம் போக டாக்டர் அழைக்க மூவரும் டாக்டாின் அறைக்குள் நுழைந்தார்கள்…..

" பக்கவாதம் ஏற்பட்டு இருக்கு, இடது கையும் காலும் செயலிழந்து இருக்கு….. உயிருக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை….. ஸ்பெசல் வாக்கிங் ஸ்டிக் மாதிரி பயன்படுத்தலாம். ஆனா அதுக்கெல்லாம் சின்னச் சின்னப் பயிற்சிகள் செய்து ஆறுமாசம் ஆகும். எப்படி இருந்தாலும் அவரோட ஒரு ஆள் கூட இருந்தே ஆகனும். இப்போதைக்கு ரெண்டு மூனுநாள் ஹாஸ்பிடல்ல இருக்கறது நல்லது" என்றார் டாக்டர்!

"யெஸ் டாக்டர்"

"டிஸ்சார்ஜ் ஆன பிறகு பிஸியோதெரபி வீட்டிலயே வந்து பண்ண நர்சஸ் இருக்காங்க, உங்களுக்குத் தேவைனா நீங்க கேட்கலாம்"

"ஓகே டாக்டர்"

" இப்போதைக்கு அவர் அப்படியே இருக்கட்டும் அவரை யாரும் தொந்தரவு பண்ண வேண்டாம். நாளைக்கு முழுசா மயக்க நிலை தெளிஞ்ச பின்னால அவர பார்த்துக்கோங்க, நைட் யாராவது ஒரு ஆள் கூட இருக்கலாம்!

"ஓகே டாக்டர்" என்ற நாச்சியா வெளியில் வந்து வண்டி சாவி வேண்டும் என்ற ஒற்றை வார்த்தைதான் பேசினாள் தேவாவிடம். வண்டி சாவியை வாங்கியவள் நேராகக் கடைக்குப் போக, எதுவும் புரியாமல் கடையைச் சாத்திவிட்டு கடைக்கு வெளியவே வாசு உட்கார்ந்து இருந்தான். அவனுக்குப் போனும் கிடையாது. அவனைப் பார்ப்பதற்கே பாவமாக இருந்தது நாச்சியாவுக்கு…

நாச்சியாவை பார்த்ததும் "அப்பாவுக்கு என்னாச்சுக்கா?" என்றவன் அழ ஆரம்பித்து விட்டான்!

அவனைத் தோளோடு அணைத்து பிடிச்ச நாச்சியா "ஒன்னுமில்லடா நீ அழாத கதவைத்திற" என்று சொல்ல வாசு கடையைத் திறந்தான்….

கடைக்குள் சென்று வீட்டிற்குள் போனவள் இரண்டு ஏடிஎம் கார்டுகள், கையில் கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு, வாசுவையும் கூட்டிக்கொண்டு தேவா வீட்டுக்கு விரைந்தாள்.

வண்டியை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்த நாச்சியாவிடம் என்ன கேட்பது என்று புரியாமல் ரேகா நிற்க, மொபைலை எடுத்த நாச்சியா தன் அத்தை பாக்யாவிற்குக் கைப்பேசியில் அழைத்தாள்….

பாக்யாவிற்கு எல்லா விஷயங்களையும் சொல்லி பதட்டபட வேண்டாம் நைட் 11 மணிக்கு தம்பிங்கள பஸ் ஏத்தி விடச்சொல்றேன் இங்க வந்துட்டு போன் பண்ணுங்க என்றவள் போனை கட் பண்ணிவிட்டு,

ரேகாவை பார்த்து "அப்பாவுக்கு ஸ்ட்ரோக் பட் உயிருக்கு ஆபத்தில்லை யாரும் இன்னைக்குப் பார்க்க முடியாது ஸோ நீங்க நாளைக்கு வந்து பாருங்க" என்றாள்…

என்ன பேசறதுனு புரியாததால் ம் சரி என்றாள் ரேகா….

வாசலுக்கு வந்தவள் வண்டியை ஸ்டார்ட் பண்ணி வாசுவை ஏற்றிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்து போனவள், டெபாஸிட் பணத்தைக் கட்டிவிட்டு, தேவையான மருந்துகளை ஹாஸ்பிடல் மெடிக்கலில் வாங்கிக் கொடுத்துவிட்டு வாசுவை அழைத்து நூறு ரூபாயை குடுத்து வெளியில் சாப்பிட்டு விட்டு வரச்சொல்லிவிட்டுத் தேவாவிடம் வந்தாள்…..

"தேவா அத்தை இன்னமும் சாப்பிடலை நீங்க அத்தையைக் கூட்டிக்கிட்டு வீட்டுக்கு போங்க தேவைனா போன் பண்றேன்" என்றவள் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினாள்! தேவாவிற்கு என்ன செய்வது, என்ன சொல்வதென்றே புரியாமல் அமைதியாக மீனாட்சியை அழைத்துக் கொண்டு கிளம்பினான்!

இந்தச் சூழலில் நாச்சியா யோசித்துக் கொண்டிருப்பதை வேறு யாருமே யோசித்திருக்க மாட்டார்கள்!...

அத்தியாயம் 44 

சாப்பிட்டுவிட்டு வந்த வாசுவின் கையில் ஐநூறு ரூபாயை திணித்து,

"நீ நேரா தேவா வீட்டுக்கு போய் என் ஸ்கூட்டிய எடுத்துக்கிட்டு 300 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக்கிட்டு வரப்ப உங்கம்மாவ இங்க கூட்டிக்கிட்டு வா…. போறப்ப ஆட்டோவுல போ" என்றாள் நாச்சியா….

"சரிக்கா" என்ற வாசு கிளம்பினான்…..

மீண்டும் சிந்தனையில் மூழ்க ஆரம்பித்தாள் நாச்சியா!

சாதி ஸ்டேடஸ் பாக்கற மாமனாரு, இயல்பா தைரியமா தான் சொந்தகால்ல நிக்கறதை பிடிக்காத பொறாமைப்படற நாத்தனாள், எந்தக் கர்வமும் கல்யாணத்துக்கு முன் இல்லாத காதலன் கல்யாணத்து பின்னாடி ஈகோ பார்க்கற கணவனா மாறிப் போனது, இந்த நேரத்துல விழுந்துக் கிடக்கற அப்பா,

இதையெல்லாம் மீறி என் அப்பாவின் கனவான டிபார்ட்மென்டல் ஸ்டோரை எப்படி உருவாக்க போறேன்? முதலில் இருக்கக் கடையைத் திறந்து எப்படி வியாபாரத்தை ஆரம்பிக்கப் போறேன்?

இப்படிப் பல கேள்விகள், குழப்பங்கள், வேதனைகள் சிந்தனையில் நாச்சியாவை அழுத்த ஆரம்பிக்க, கண்மூடி ஹாஸ்பிடல் சேரில் சாய்ந்திருந்தவளை நர்சின் குரல் சிந்தனையிலிருந்து எழுப்பியது!

"நீங்கதான சண்முகங்கற பேசன்ட் கூட வந்தவங்க"

"ஆமா சொல்லுங்க?"

"இதில் இருக்க மெடிசன்சுக்கு ரிசப்சன்ல பணத்தைக் கட்டிடுங்க, மெடிசன் வாங்கியாச்சு" என்ற நர்ஸ் பில்லை நீட்டினாள்….

ரிசப்சனுக்குப் போய்ப் பணத்தைக் கட்டியவளுக்கு ஒரு டீ குடித்தால் நல்லாயிருக்கும் என்று தோன்றியதால் ஹாஸ்பிடல் கேன்டினுக்குப் போய் டீயை வாங்கியவள் கேன்டினுக்கு வெளியில் மர நிழலில் அமர்ந்து டீயைக் குடித்தப்படி மீண்டும் யோசிக்க ஆரம்பித்தாள்…,

டீ குடித்து முடித்ததும் மீண்டும் வந்து ஐசியூ முன்னால் இருந்த சேரில் அமர்ந்தவள் யோசனை வந்தவளாய் தேவாவுக்குப் போன் அடித்தாள்!

"சொல்லு கோதை" என்ற தேவாவின் குரலில் இயல்பே இல்லை ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி அவனின் குரலில் இழையோடியது!

"வாசு அங்க வந்துட்டானா?"

"இல்லையே கோதை"

"சரி வாசு வந்தான் அப்படினா என் ஸ்கூட்டி சாவியையும், சார்ஜரையும் குடுத்து விடுங்க" என்று நாச்சியா சொல்ல,

"நான் திரும்ப ஹாஸ்பிடல் வரத்தான் கிளம்பிக்கிட்டு இருக்கேன்"என்றான் தேவா!

"இல்ல தேவா நாளைக்கு வந்தா போதும். மாமாக்கிட்டயும் சொல்லிடுங்க, நாளைக்கு என் அத்தை வருவாங்க அவங்கள பிக்கப் பண்ணிட்டு வந்திங்கனா போதும்" என்ற நாச்சியா அவன் அடுத்து பேசும் முன்பே போனை அணைத்தாள் பண்ணினாள்…….
……………..

ஆபிசிலிருந்து கிளம்பிய சந்திரசேகர் ப்யூன் மூலமாக ரேகாவுக்கு வாங்கிய புது வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்ததும் ஹாஸ்பிடலுக்குப் புறப்படத் தயார் ஆனார்!

புதுவண்டி வீட்டுக்கு வந்த எந்த உற்சாகமும் ரேகாவிடம் இல்லை. பிரச்சினை என்ற உடன் செயலில் இறங்கி அடுத்தடுத்த வேலைகளை ரோபோ மாதிரி செய்ற நாச்சியாவின் முகம்தான் அவளுக்கு நினைவுக்கு வந்தது. இந்த உணர்வும் பொறாமையால் உந்தப்பட்டு எழுந்த உணர்வுதான். ஆனால் அது ரேகாவுக்கே தெரியாது!

ஹாஸ்பிடலுக்குக் கிளம்பத் தயாரான சந்திரசேகரிடம் சூழ்நிலையைச் சொல்லி நாளைக்குப் போகலாம் என்று புரிய வைத்தான் தேவா!

அந்த நேரத்தில் வாசு வந்து சேர்ந்திருக்க அவனிடம் ஸ்கூட்டி சாவியையும், போன் சார்ஜரையும் தேவா குடுக்க, நொடியும் தாமதிக்காமல் தன் வீட்டிற்குக் கிளம்பினான் வாசு!

வீட்டிற்குப் போன வாசு நடந்ததைத் தன் அம்மாவிடம் சொல்ல, "அட அந்த நல்ல மனுசனுக்கா இந்த நிலைமை வரனும்" என்றவள் வாசுவோடு கிளம்பத் தயாராகவும். அவளை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்குக் கிளம்பினான்!

நாச்சியாவின் மனம் முழுவதும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதிலயே இருந்தது. கடை வியாபாரம் இதனால் பாதித்தால் அப்பா மனதளவிலும் முழுதாக முடங்கிப் போய்விடுவார் என்று நாச்சியா யோசிக்க ஆரம்பித்திருந்தாள். அவள் இப்படி நினைப்பதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. போட்டிக்குச் சின்னச் சின்னக் கடைகள் ஏரியாவுக்குள் உருவாகி இருந்தது!

வாசு தன் அம்மாவை ஹாஸ்பிடலுக்குக் கூட்டிக்கொண்டு வந்திருந்தான்….

நாச்சியாவை பார்த்ததும் வாசுவின் அம்மா சுமதி கண்கலங்க, அவளைத் தேற்றிவிட்டு ஹாஸ்பிடல் கேன்டினுக்குக் கூட்டிச் சென்ற நாச்சியா…

மூன்று பேருக்கும் வாசுவை டீயை வாங்கி வரச் சொல்லிட்டு சுமதியோடு பேச ஆரம்பித்தாள்……

"சுமதியம்மா நீங்க எனக்கு ஒரு உதவி செய்யனும்" என்று நாச்சியா கேட்கவும் பதறிய சுமதி என்னம்மா செய்யனும் சொல்லுங்க என்றாள்…..

"கொஞ்ச நாளைக்கு வாசுவை முழுசா எங்கூடவே இருக்க விடமுடியுமா?"

"அட இதுல என்னம்மா இருக்கு. நீங்களே அவனை வைச்சிக்கோங்க, எம் பையன் வெளியூர் வேலைக்குப் போயிருக்கறதா நினைச்சுக்கறேன். தேவைப்பட்டா நானே வந்து அவனைப் பார்த்துட்டுப் போயிக்கப் போறேன். நீங்க கவலைய வுடுங்கம்மா" என்ற சுமதியின் பேச்சில் உண்மையான பாசமும் அக்கறையும் இருந்தது!

"ரொம்ப நன்றி சுமதிம்மா"

"அட நீங்க வேற உங்கக்கூட இருக்கறதாலதான் அவன் பேச்சுவார்த்தை நடத்தை எல்லாமே மாறி இருக்கு, இல்லனா ஏரியா பசங்கக்கூடச் சேர்ந்து சுத்தி வீணாத்தான் போயிருப்பான்"னு சுமதி சொல்ல வாசு டீயை வாங்கி வந்து கொடுத்தான்….

"வாசு இனிமே நீ முழுசா என் கூடத்தான் இருக்கனும் உங்கம்மாக்கிட்ட பேசிட்டன் உனக்கு ஓகேதான" என்று நாச்சியா கேட்க,

"நீங்க என் அம்மாக்கிட்ட கேட்கலனாலும் நான் உங்கூடத்தான்கா இருந்திருப்பேன்"னு வாசு சொல்ல அன்பாய் அவன் தலையைக் கலைத்து விட்டாள் கோதை…..

இதற்கு நடுவில் தேவாவிடமிருந்து போன் வர,

"சொல்லு தேவா"

"டாக்டர் ஏதாவது சொன்னாரா?!

"இல்ல நார்மலாத்தான் போய்க்கிட்டு இருக்கு"

" ம் சரி" என்றான் தேவா!

"நீ நாளை கழிச்சுதான வேலைக்குப் போற?" என்று நாச்சியா கேட்க தேவா ஆமாம் என்றான்….

"நாளைக்கு ஒருநாள் நீ ஹாஸ்பிடல்ல இருந்து எங்க அத்தைக்கூடச் சேர்ந்து அப்பாவ பார்த்துக்கோ, காலையில ஏழு மணிக்குள்ள அத்தை வந்திடுவாங்க அவங்கள கூட்டுக்கிட்டு வந்திடு" என்றாள் நாச்சியா!

"ம் சரி கோதை" என்று தேவா சொல்ல,

தைரியமாய் ஒரு முடிவிற்கு எடுத்திருந்தாள் நாச்சியா!

அத்தியாயம் 45 

ஹாஸ்பிடலில் நாச்சியா, வாசு மற்றும் வாசுவின் அம்மா இருந்தார்கள்!

காலேஜ் விட்டு வந்த உமா நடந்ததைக் கேள்விப்பட்டதும் மிகவும் உடைந்து போய்விட்டாள்!

தேவா நாளைக்கு ஹாஸ்பிடல் போகலாம்னு எவ்வளவு சொல்லியும் உமா கேட்பதாய் இல்லை!

"அண்ணா நீ என்னைக் கூட்டிக்கிட்டு போறியா இல்லை நான் பஸ் ஏறி போகவா? அண்ணியோட அப்பாவ பார்க்க முடியாது ஆனா அண்ணிய பார்க்கலாம்தான? அவங்க யாரையும் வர வேணாம்னு சொன்னா நாம அப்டியே போகாம இருந்திருந்திடறதா? எனக்குத் தெரியாது நான் போகனும்" என்று பெரிய ஆர்ப்பாட்டமே பண்ணிவிட்டாள் உமா!

சந்திரசேகர் சொல்லியும் கேட்கல, போன்ல கேட்கறது மரியாதையோ அன்போ இல்லைனு போயே ஆகனும்னு தயாராகி நின்றாள் உமா!

தேவா நாச்சியா கல்யாணம் நடக்க அவர்களுக்குள் இருந்த காதல் எவ்வளவு முக்கியக் காரணமோ அதேபோல் இவர்களுக்கிடையில் இருந்த உமாவும் ஒரு முக்கியக் காரணம். இந்த வீட்டுக்கு நாச்சியாதான் மருமகளா, தனக்கு அண்ணியாக வரவேண்டும் என்பதில் உமாதான் உறுதியா இருந்து நேரத்துக்குத் தகுந்த மாதிரி பல வேலைகளைச் செய்தது!

கடைசியாக அரைகுறை மனதோடு தேவா பைக்கை ஸ்டார்ட் செய்தான். உமா ஏற பைக் கிளம்பியது. தேவாவுக்கும் போகக்கூடாது என்கிற எண்ணமில்லை. ஆனால் ஒரு ஒட்டுதல் இல்லாமல் நாச்சியா பேசுவதை அவனால் தாங்க முடியவில்லை. காலையில் வீட்டில் நடந்த சம்பவத்தை நாச்சியா மறந்ததாய் தெரியவில்லை அவனுக்கு……

உமாவை பார்த்ததும் நாச்சியாவுக்குப் பெரிய ஆறுதலாய் இருந்ததோடு உடைந்து அழவும் ஆரம்பித்துவிட்டாள். உமாவும் அழ சுற்றி இருந்தவர்களால் எப்படிச் சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை…..,

"அண்ணி அப்பா உயிருக்கு ஆபத்தில்லைனு சொன்னாங்களே அது உண்மைதான" என்று சந்தேகத்தோடு கேட்டாள் உமா!

"உண்மைதான்டா உமா ம்மா. நீ பயப்படாத" என்ற நாச்சியா ஆதரவாய் அவள் கையைப் பிடித்துக்கொண்டாள்!

நாச்சியா மற்றும் உமா இருவருக்குமிடையில் இருந்த அன்பு, பிணைப்பு, புரிதல், தேவாவுக்கே இப்பொழுதுதான் புரிய ஆரம்பித்தது!

"அண்ணி எனக்கு நாளை காலேஜ் லீவுதான் நான் நைட் இங்கேயே உங்கக்கூடத் தங்கிட்டு காலையில வீட்டுக்குப் போய்க்கிறேன்" என்று உமா சொல்ல நாச்சியா அவளைத் தடுக்கவில்லை!

தேவா நாச்சியாவிடம் என்ன பேசுவதென்றே புரியாமல் அமைதியாய் அமர்ந்திருக்க அவன் நிலை நாச்சியாவுக்குப் புரிந்தது. அவனைச் சங்கடப்படுத்த விரும்பாத நாச்சியா…..

கஷ்டம் வரும்போதுதான் பெருந்தன்மையவும், தைரியமாகவும், துணிச்சலாகவும் முடிவு எடுக்கனும் அப்படினு சண்முகம் அடிக்கடி நாச்சாவிடம் ஆரம்பத்தில் சொல்வதுண்டு!

இப்போது நாச்சியா அப்படித்தான் இருந்தாள்.
தேவா பக்கத்தில் சென்ற நாச்சியா,

"தேவா" என்றாள் நாச்சியா….

அவ்வளவு நேரமும் பேசாதவள் பேசவும் தேவா நிம்மதியடைந்தவனாய் "சொல்லு கோதை" என்றான்…..

"நீங்க கிளம்புங்க காலையில பாக்யா அத்தை வரப்ப மட்டும் போய்ப் பிக்கப் பண்ணிக்கிட்டு நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டு அத்தை ரெடியானதும் இங்க கூட்டிக்கிட்டு வந்துட்டு அப்படியே காலையில உமாவ வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போயிடுங்க " என்றாள் நாச்சியா…..

"சரி கோதை, கொஞ்ச நேரம் பொறுத்து கிளம்பறேன்" என்றவன் அங்கேயே அமர்ந்தான்!

வாசுவை கூப்பிட்ட நாச்சியா,

"வாசு ஸ்கூட்டிய எடுத்துக்கிட்டு அம்மாவ வீட்ல விட்டுட்டுப் புல்லட் சாவியை எடுத்துக்கிட்டு வா. அப்படியே அப்பாவோட மொபைலை எடுத்து நீ கையில வைச்சுக்கோ! புல்லட் கடைக்கு வெளியத்தான நிக்குது? என்றாள் நாச்சியா!

"ஆமாக்கா வெளியத்தான் நிக்குது. கடையை மட்டும்தான் சாத்தினேன். புல்லட்ட நகர்த்தி நிறுத்தல" என்றான் வாசு!

"சரி அப்படியே வெளியிலயே நிக்கட்டும்" என்றவள் வாசுவை கிளம்பி போய்ட்டு வரச்சொல்ல வாசு கிளம்பினான்!
…………….

ரேகா வேலைக்கு வந்தால் எப்படியும் ஒரு வாரத்தில் நினைத்ததை முடித்துவிடனும் என்று நினைத்த சந்துரு ரேகாவுக்குப் போனில் அழைத்துச் சாதுா்யமாகக் காய்நகர்த்த முடிவு பண்ணினான்.

"ஹலோ சொல்லு சந்துரு" என்ற ரேகா குரலில் பழைய உற்சாகம் இல்லை.. இதை மோப்பம் பிடித்து விட்ட சந்துரு மெதுவாய் பற்ற வைக்க ஆரம்பித்தான்…

" என்ன ரேகா குரல் டல்லா இருக்கு அந்த நாச்சியா திமிரா எதாவது பண்ணினாளா?" என்று சந்துரு தூபம் போட…..

"அப்படிலாம் ஒன்னும் இல்ல சந்துரு. நாச்சியாவோட அப்பாவுக்கு ஸ்ட்ரோக் வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்காங்க. என்னதான் அவ எதுவும் தெரியாத திமிர் பிடிச்சவளா இருந்தாலும் கொஞ்சம் கஷ்டமா இருக்கு" என்றாள் ரேகா!

"அவளுக்காகலாம் வருத்தப்படாத ரேகா, அவ இப்ப பாவமா இருப்பா, ஆனா நாளைக்கு மறுபடியும் உன்னை அவமானப்படுத்தறது எப்படினுதான் யோசிப்பா புரிஞ்சுக்கோ ரேகா" என்று சாத்தானாய் வேதம் ஓதினான்!

நாச்சியா மேல் வந்த இரக்கம் சந்துரு பேசபேச பழைய சம்பவங்கள் எல்லாம் நினைவுக்கு வர ரேகாவுக்குள் இருந்த மிருகம் கொஞ்சம் கொஞ்சம் விழிக்கத் தொடங்கியது!

"மன்டே நீ வேலைக்கு வரது கன்பார்ம்தான ரேகா, அந்த நாச்சியாவோட பிரச்சினைய எல்லாம் போட்டு நீ மனச குழப்பிக்காத, இந்த வேலையை விட்டா மறுபடியும் நல்ல இடத்துல நான் வேலை ரெடி பண்ண லேட் ஆகும்" என்று காரியத்தில் கண்ணாய் இருந்தான்!..

"இல்ல இல்ல சந்துரு கண்டிப்பா நாளை மறுநாள் வேலைல வந்து சோ்ந்திடுவேன். அப்பா வேலைக்குப் போறதுக்காகப் புது வண்டி எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்காரு. அதுக்கு லைசென்ஸ்க்கு வேற அப்ளை பண்ணனும்" என்று ரேகா சொல்ல…

"வாவ் புது வண்டி வந்துருச்சா சூப்பர்வ். நீ இதே மைன்ட் செட்ல இரு, நான் நைட் கால் பண்றேன். பை ரேகா" என்று போனை கட் பண்ணினான்!

நாச்சியா மீதான தன் பொறாமை உணர்வை மறைக்க, அவள் அறிவில்லாதவள் திமிர் பிடித்தவள் என்று தனக்குத்தானே ஆறுதல் படுத்திக்கொண்டாள் ரேகா….

ஒருபக்கம் பண்பை, அறிவை சொல்லும் அருள்,
இன்னொரு பக்கம் தன் எண்ணப்படியே ஒத்து பேசும் சந்துரு எனத் திடிர் திடிர் என்று மனம் நிலைக் கொள்ளாமல் தடுமாறிக்கொண்டிருந்தாள் ரேகா!
……………..

தன் அம்மாவை விட்டுட்டுப் புல்லட் சாவியை எடுத்துக்கொண்டு வந்த வாசு அதை நாச்சியாவிடம் கொடுக்க,

"சரி வாசு நீ அப்பா மொபைலை கையில வைச்சுக்கோ" என்று மொபைலுக்கு லாக்கை எடுத்துக் கொடுத்தாள்… மொபைலை வாங்கிக்கொண்டு வாசு நிற்க, நைட் சாப்பாட்டுக்கும், வீட்டுக்கு போக ஆட்டோவுக்கும் அவனுக்குப் பணத்தைக் கொடுத்த நாச்சியா,

"வாசு காலையில உனக்கு ஆறு மணிக்குள்ள போன் பண்றேன். நீ எழுந்து கடையைத் திறந்து பால் வியாபாரத்தை ஆரம்பிச்சிடு என்றவள், சண்முகம் சொல்லிக் கொடுத்திருந்த விசயங்களைச் செயல்படுத்த ஆரம்பித்தாள்.

வாசு கிளம்ப, தேவாவையும் அனுப்பி வைத்துவிட்டு உமாவோடு ஹாஸ்பிடலுக்கு வெளியே வந்து அமர்ந்தவள் கண்களை மூடி வழக்கம்போல் தன் சிந்தனையில் மூழ்க ஆரம்பித்துவிட்டாள்!

அத்தியாயம் 46 

ஆழ்ந்த சிந்தனையில் இருந்த நாச்சியா மெல்ல உமாவிடம் பேச ஆரம்பித்தாள்!

"ம் ரேகாதான் என்மேல உள்ள பொறாமையில பண்றாங்க அப்படினா
கட்டின பொன்டாட்டிக்கிட்டயே தேவாவும் ஈகோ பார்க்க ஆரம்பிச்சுட்டான் உமா"

"என்ன சொல்றிங்க அண்ணி?"

"உண்மைதான் உமா. அதான் காலையிலயே சின்னப் பிரச்சினை அது சமாதானம் ஆகறதுக்குள்ள அப்பாவுக்கு இந்த மாதிரி" என்றவள் சலிப்பாய் பேச,

"அண்ணன் உங்கக்கிட்டலாம் ஈகோ பார்க்குதா? என்னால நம்பவே முடியல அண்ணி?"

"என்னாலயும்தான் நம்ப முடியல உமா. நான் எவ்வளவோ தெளிவா எடுத்துச் சொல்லிட்டேன். நானும் என்னைச் சேர்ந்த எல்லாமே உனக்குத்தான்னு….. சொந்தக்கால்ல சுயமா நிக்கட்டும் நான் வேணாம்னு சொல்லலை. ஆனா எதுக்காக ஒரு கார்பரேட் கம்பெனிக்கு நாயா அலையனும், உழைக்கனும். அதுக்கு நம்ம கடைக்கு முதலாளியா தேவா இருக்கனும்னு நான் நினைக்கறது தப்பா உமா?" என்று மனதில் உள்ளதைக் கொட்டினாள் நாச்சியா…..,

"தப்பில்லைதான் அண்ணி. சரிவிடுங்க அதுவே அனுபவப்பட்டுட்டு வரட்டும்" என்று உமா சமாதானம் சொல்ல…..

"இதே தேவா சொந்தமா தொழில் வைச்சிருந்தா அதை நான் கூட இருந்து செஞ்சிருக்க மாட்டனா. ஏன் இந்த ஆம்பளைங்க எப்பவும் எதார்த்த வாழ்க்கையை விட்டு
ஈகோவ பிடிச்சிக்கிட்டு வெளியவே நிக்கறாங்க,
உங்கப்பா படிச்சவரு பொறுப்பான போஸ்டிங்ல இருக்கவரு ஆனா இன்னமும் சாதி ஸ்டேடஸ்னு பேசிக்கிட்டு இருக்காரு…. ச்சை என்ன உலகமோ…, ஸாரி உமா உன்னை விட்டா என் மனக்குமுறல்களைச் சொல்ல வேற ஆள் இல்ல உமா" என்றவள் அமைதியானாள்!

உமாவால் நாச்சியாவின் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ள முடிந்தது!
உமா அவளுக்கு ஆதரவாய் பேசி அவளைத் தேற்றி ஹாஸ்பிடலுக்குள் போக முற்பட….

நாச்சியா ஹாஸ்பிடல் கேன்டினில் சாப்பிட்டு விட்டுப் போகலாம் எனச் சொல்ல, கேன்டினுக்குப் போய் ஆளுக்கு மூன்று இட்லிகளைச் சாப்பிட்டு விட்டு, ஹாஸ்பிடலுக்கு வருபவர்களுக்கான ஓய்வறையில் அப்படியே படுத்தார்கள்…..

மெல்ல மெல்ல இரவு ஓட ஆரம்பித்திருந்தது!

நாச்சியா அலாராம் வைத்தப்படி நாலு மணிக்கு அலற…. எழுந்தவள் குளியலறைக்குப் போய் முகம் கழுவி வந்து உமாவை எழுப்பினாள். பாதித் தூக்கத்தில் விழித்த உமாவுக்கு ஒன்றுமே புரியவில்லை…..

"உமா நான் மார்க்கெட் கிளம்பறன். இந்த ஏடிஎம் கார்டை பத்திரமா வைச்சிக்கோ ஏதாவது மெடிசன் தேவைனா வாங்கிக்குடு. ஏழு மணிக்கு தேவா வந்ததும் நீ வீட்டுக்கு கிளம்பிடு" என்று நாச்சியா சொல்ல,

"அண்ணி இன்னைக்குக் கடையைத் திறந்தே ஆகனுமா" என்றாள் தூக்கக் கலக்கத்தோடு ….

"கண்டிப்பா" என்ற நாச்சியா, அவளை ஆறு மணிக்கு எழுந்தா போதுமென்று சொல்லிவிட்டு வெளியில் வந்து ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து கடைக்குப் புறப்பட்டாள்…..

கடைக்கு வெளியே புல்லட் நின்றிருக்க, ஸ்கூட்டியை நிறுத்திவிட்டுப் புல்லட்டை எடுத்துக்கொண்டு மார்க்கெட்டிற்குக் கிளம்பினாள்…. மார்க்கெட்டை நாச்சியா அடையும் பொழுது மணி 5.15 ஆகியிருந்தது அவசரம் அவரமாகக் காய்கறிகளைப் பழைய கோணிப்பையைக் கடையில் வாங்கிக் கட்டியவள், கீரைகளை வாங்கியும் கட்டி வைத்தாள்.

புல்லட்டில் எல்லாவற்றையும் கட்டி முடித்துக் கிளம்ப ஒருமணி நேரம் ஆகியிருந்தது!

முதலில் வாசுவுக்குப் போன் அடித்தாள், இரண்டவது ரிங்கிலே போனை எடுத்து விட்ட வாசு கடையைத் திறந்து விட்டதாகச் சொல்ல,

அடுத்து அத்தை பாக்யாவிற்குப் போன் அடித்து வந்துச்சேர எவ்வளவு நேரமாகும் என்று கண்டக்டரை கேட்கச்சொல்ல, பதில் அரைமணி நேரம் என்று வந்தது!

அடுத்து தேவாவுக்குப் போன் அடிக்க ரிங் கடைசியில் போனை அட்டன்ட் பண்ணியவன் "சொல்லு கோதை" என்றான்!

"அத்தை இன்னும் அரைமணி நேரத்துல பஸ்ஸ்டாண்டிற்கு வந்துருவாங்க இப்ப கிளம்பினா சரியா இருக்கும். கூட்டிக்கிட்டு கடைக்கு வந்திருங்க" என்றாள் நாச்சியா,

"கடைக்கா? நீ எங்க இருக்க இப்ப?" என்று குழப்பத்தோடு தேவா கேட்க,

"நான் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கடைக்குக் கிளம்பப் போறேன்" என்று நாச்சியா அசால்ட்டாகப் பதில் சொல்ல,

"இன்னைக்குக் கடையைத் திறந்தே ஆகனுமா கோதை?" என்று தேவா கேட்க,

"என் வேலையை நான்தான் பார்த்தாகனும் தேவா. நீ அத்தையை மட்டும் கூட்டிக்கிட்டு வா" என்று குத்தலாக மொழிந்தவள் கைப்பேசியை அணைத்து விட்டுப் புல்லட்டை கிளப்பினாள்!

நாச்சியா கடைக்கு வந்து சேர, வாசு கடையைத் திறந்து பால் வியாபாரத்தோடு, மளிகை வியாபாரத்தையும் பார்த்துக்கொண்டிருக்க, வாசு பெரிய நம்பிக்கையா நாச்சியாவுக்குத் தெரிந்தான்…..

வாங்கி வந்திருந்த காய்கறி. கீரைகளைக் கடையின் முன் மரப்பலகையில் அடுக்கிவிட்டு.

"வாசு கடையைப் பார்த்துக்கோ அக்கா டீ போட்டு எடுத்துட்டு வரேன்"னு வீட்டுக்குள் நுழைந்தாள் நாச்சியா!

வைச்ச டீயை வாசுவுக்கும் கொடுத்துவிட்டு தானும் கடையிலயே டீ குடிக்க ஆரம்பித்தாள் ரேகா……

அடுத்த அரைமணி நேரத்தில் தேவா பாக்யாவை அழைத்துக் கொண்டு வந்தான்…..

"வாங்க அத்தை" என்று நாச்சியா கூப்பிட,

"என்னடி இன்னைக்குக் கடையைத் திறந்து வைச்சிருக்க, உனக்கு மனச்சாட்சியே இல்லையா"னு பொறிய ஆரம்பித்தாள் பக்யா!

வண்டியில் பாக்யாவை பிக்கப் பண்ணிக்கிட்டு வரப்ப தேவா புலம்பியதை, பாக்யா இங்கு வந்து பொறிந்தாள்!

"அத்தை உள்ள டீ சூடா இருக்கு குடிச்சிட்டுச் சீக்கிரம் ரெடியாகுங்க, தேவா நீயும் டீ குடிச்சிட்டு ரெடியாகு" என்ற நாச்சியாவை,

"என்னடி மாப்பிள்ளைய வாபோனு பேர் விட்டு கூப்பிட்டுக்கிட்டு"னு பாக்யா ஆரம்பிக்க,

"அத்தை உள்ளபோய் ரெடியாகறியா இல்லை பஸ் ஏறி திரும்பி போறியா" என்ற நாச்சியாவின் பேச்சிலிருந்த கோபம் பாக்யாவை கப்சிப் என்று ஆக்கியது!

பாக்யாவிற்குக் குழந்தைகளும் இல்லை கணவனும் இல்லை. இறந்து ஆறு வருசமாகுது! கொஞ்சம் அதட்டலாய் உரிமையாய் பேசுவாள். ஆனால் ரொம்ப நல்ல மாதிாி சண்முகத்தின் சொந்த தங்கை….

"தேவா" என்று நாச்சியா கூப்பிட,

"ம்"என்றான் கொஞ்சம் கடுப்பாய்!

"நீ அத்தைய கூட்டிக்கிட்டு போய் ஹாஸ்பிடல்ல விட்டுட்டு உமாவ வீட்டுக்கு கொண்டுவந்து விட்டுட்டு, மறுபடியும் ஹாஸ்பிடலுக்குப் போய்டு, நான் நைட் ஹாஸ்பிடலுக்கு வர வரைக்கும் அங்கையே இரு" என்றாள் நாச்சியா…..

"வேறு ஏதாவது இருக்கா" என்று இப்ப வெளிப்படையா கடுப்பாவே தேவா கேட்க,

"இருக்கு, உமாகிட்ட ஏடிஎம் கார்டு இருக்கு மறக்காம அதை வாங்கி வைச்சிக்கோ"னு கூலா நாச்சியா சொல்ல, தேவாவுக்குக் கோபம் உச்சியில் நின்னது!

அதற்குள் பாக்யா வர, நாச்சியா மேல இருக்கக் கோபத்தை அடக்கியப்படி அவளை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்குக் கிளம்ப, நாச்சியா வியாபாரத்தில் கவனமானாள்!...

                                                    ----தொடரும்----

1 comment:

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib