anti - piracy

Post Page Advertisement [Top]

மெல்ல திறந்தது மனது (ஆதன்-னின்)
                                                 

அத்தியாயம் 09 

காலை 5 மணிக்கு அலாரம் வைச்சவன் நாலு மணிக்கே எழுந்து வாட்ஸ்அப்ல குட்மார்னிங் மெசேஜை நாச்சியாவுக்கு அனுப்பி வைத்துவிட்டுப் புக்கை எடுத்து விரித்து மேலோட்டமாகப் பார்க்க ஆரம்பிச்சான்…..

நாலரை மணிக்கு நாச்சியாவிடம் இருந்து கால் வர ஆச்சரியமா அட்டன்ட் பண்ணி,

"ஹலோ என்ன இந்த நேரத்துல கால்" என்றான்…

"அப்பாவுக்கு லைட்டா உடம்பு முடியலை ஸோ மார்க்கெட்டுக்கு நான் போறன். நீயும் வரியா?!" என்றாள் நாச்சியா…..

"ம் போலாம்"

"நீ ப்ரி யா இருந்தா மட்டும் வா தேவா"

"இல்ல இல்ல ப்ரிதான் வரேன்"

"சரி அப்ப பஸ் ஸ்டாப்புக்கு வந்திடு"

"ம் கிளம்பிட்டேன் வரேன்" என்றவன் உடனே ஓடாத குறையா பஸ் ஸ்டாப்புக்கு நடந்தான்.

பஸ் ஸ்டாப்பில் புல்லட்டில் காத்திருந்த நாச்சியா தேவாவை பார்த்ததும் வண்டியை ஸ்டார்ட் செய்தாள்..

"தேவா நீ ஓட்டறியா இல்ல…..,.."

"இல்ல நீயே ஓட்டு கோதை"

"நீ வரப்ப பஸ்லதான் வரனும், வாங்கற பொருள்கள எடுத்துட்டு வரனும். வண்டியில இடம் இருக்காது" என்றாள் நாச்சியா…..

"சரி "

"வரப்ப டிராபிக் இருக்காது ப்ரி யா வந்துடலாம்" என்ற நாச்சியாவிடம்…..

"அப்பாவுக்கு என்ன ஆச்சு?!" என்றான் தேவா…

"லைட்டா உடம்பு வலி நான்தான் ரெஸ்ட் எடுக்கச் சொல்லிட்டு வந்துட்டேன்"

"நீ இதுக்கு முன்ன மார்கெட்டுக்கு தனியா வந்திருக்கியா" என்றான் தேவா…..

" பலதடவ வந்திருக்கேன். இதுல என்ன இருக்கு" என்றாள் நாச்சியா!

" இல்ல சும்மாதான் கேட்டன்" என்றவன் அமைதியா இருக்க, அவர்களைத் தழுவிச்சென்ற ஈரக்காற்றும். அருகாமையும் ஏதோ ஒருவித கிளர்ச்சியை உருவாக்கி உடலில் மனதில் ஓட வைத்தது!

இதை இருவரும் அனுபவித்தப்படியே இருக்க ஆட்கள் நெருக்கம் அதிகமிருக்கக் கோயம்பேடு மார்க்கெட்டுக்குள் புல்லட் நுழைந்திருந்தது….. வண்டி அனிச்சையாய் நின்றபின் இருவரும் சுய நினைவுக்கு வந்தார்கள்….. புல்லட்ட ஸ்டாண்டில் போட்டுவிட்டு காய்கறி கீரைகளைப் பேரம் பேசி வாங்க ஆரம்பித்தாள் நாச்சியா…..

படித்தது, விளையாடியது தவிர எத்தனை விசயங்களைத் தெரியாமல் இருந்துக்கிறோம் என்று வியப்பாய், காய்கறிகளுக்கு விலைபேசிக்கொண்டு, கடை கடையாய் விசாரிக்கும் கோதையைப் பார்த்துக்கொண்டு இருந்தான் தேவா……

வாங்கிய காய்கறி கீரைகள் எல்லாவற்றையும் வண்டியில் வைத்து கட்டி முடிச்சிட்டு "ம் பர்ப்பெக்ட் எல்லாம் முடிஞ்சது"
என்ற நாச்சியா அவனைப் பார்த்தாள்……

"சரி தேவா மணி 5.50 ஆகுது நான் கிளம்பறன் நீ பஸ்ல வந்துடு. வந்துட்டு கால் பண்ணு. சில்லரை வைச்சிருக்கியா"னு கேட்ட நாச்சியாவ வெட்கமாய்ப் பார்த்தான் தேவா…

"வர அவசரத்துல பர்ஸ மறந்து வைச்சிட்டு வந்துட்டேன்"னு தேவா சொன்னான். அந்தப் பர்ஸ்ல பத்து ரூபாய்க்கு மேல இல்லங்கறது தனி டிபார்ட்மென்ட்.

ஒரு நூறுரூவா நோட்ட அவன் கையில் திணிச்சி டீ ஏதாவது குடிச்சிட்டு பொறுமையா வானு சொல்லிட்டுப் புல்லட்டை ஸ்டார்ட் செய்த நாச்சியா…..,,

"ஏரியாக்குள்ள வந்துட்டு உடனே கால் பண்ணனும் ஓகேவா" என்று குழந்தைக்கிட்ட சொல்ற மாதிரி சொல்ல தேவா சரி என்று மண்டைய ஆட்டினான்.

நாச்சியா தேவாவை பார்த்தப்படியே கிளம்ப, நாச்சியா தலை மறையும் வரை அவளையே பார்த்தப்படி நின்றிருந்த தேவா டீ கடையை நோக்கி நடந்தான்.

……….

ரேகாவை கவிழ்க்க காலையிலயே குட்மார்னிங் மெசேஜோடு பிள்ளையார் சுழியைப் போட்டான் சந்துரு……

சந்துருவின் குட்மார்னிங் மெசேஜை பார்த்த ரேகாவிற்கு இதயத்தில் குறு குறு உணர்வு….

"ஹாய் சந்துரு வெரி குட்மார்னிங்" என்று ரிப்ளை பண்ணிவிட்டு காத்திருந்தாள் ரேகா….,

கால் மணி நேரத்திற்குப் பிறகு அவனிடம் இருந்து " ஈவ்னிங் பார்க் வரிங்கதான" என்று ரிப்ளை வந்தது!

"கண்டிப்பா" என்று திருப்பி ரிப்ளை பண்ணினாள் ரேகா….

"அப்ப இன்னைக்கு ஒரு அழகியை மீட் பண்ண போறன்"னு அவன் ரிப்ளை பண்ண இவள் சிரிப்பு ஸ்மைலியை போட்டுச் சாட்டிங்கை முடித்தாள்….

மீண்டும் கால் மணி நேரம் போக அவனிடம் இருந்து வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்தது…..

"இப்ப நான் போட்டிருக்கப் போஸ்ட்ட போய்ப் பாருங்க" என்று…..

இவள் போய்ப் பார்க்க…..

இன்றைய பொழுது இனிமையாய் விடிந்ததை விட இன்றைய மாலை பொழுதுதான் இனிமையாய் முடிய போகிறதுனு போஸ்ட் பண்ணி அவன் ஜிம்மில் இருக்கும் போட்டோவை அப்லோட் செய்திருந்தான் சந்துரு!

இவள் ஒரு ஹார்டினை போட்டுவிட்டு என்ஜாய் என்று கமெண்ட் பண்ணிவிட்டு கிச்சனுக்குள் டீக்காக நுழைந்தாள். ப்ளாஸ்க்கில் இருந்த டீயை ஊற்றிக்கொண்டு ஹாலுக்கு வர மணி ஏழாகி இருந்தது….

ஹாலில் பேப்பர் படித்துக்கொண்டிருந்த சந்திரசேகரரிடம் "ஹாய் பா குட்மார்னிங்" என்றவளுக்கு எந்தப் பதிலும் சந்திரசேகர் சொல்லவில்லை….. ச்சை என்னவொரு ஆணாதிக்கத் திமிர்னு மனசுக்குள் பொங்கியவள் டீயோடு ரூமுக்குள் போய்விட்டாள்….

"ஏய் உமா தேவாவுக்குப் போன் போடு, காலைல நான் எழறப்பவே அவன் ஆளில்லை" னு மீனாட்சி சொல்ல, தேவாவுக்குப் போன் அடித்தாள் உமா…

"சொல்லு உமா"

"எங்கணா போன அம்மா கேட்க சொன்னாங்க"

நடந்ததை உமாவிடம் தேவா சொல்ல ஓரமாய் வந்த உமா ஹே செமண்ணா என்ஜாய் என்றாள் உமா…

"என்ன என்ஜாய் அவ காய்கறிலாம் வாங்கிட்டு கிளம்பிட்டா, வண்டியில இடம் இல்ல நான் பஸ்சுல வந்துக்கிட்டு இருக்கேன்"னு தேவா சொல்ல உமா சிரிச்சிக்கிட்டே போனை கட் பண்ணிட்டு மீனாட்சிக்கிட்ட தேவா குரூப் எக்ஸாமுக்காகப் புக் வாங்க ப்ரன்ட் வீட்டுக்குப் போனதா சொல்லி வைத்தாள்…..

பஸ்சை விட்டு இறங்கியதும் நாச்சியாவுக்குத் தேவா போன் பண்ணி சொல்ல. நாச்சியா அசால்ட்டா குட்பாய் ஓடிபோய் எக்ஸாமுக்கு படிக்கவும்னு சொல்லி போனை வைத்தாள்.

இங்க ரேகாவோ எப்ப ஈவ்னிங் 5 மணி ஆகும்னு காத்திருக்க ஆரம்பித்தாள்!


அத்தியாயம் 10 

மணி மாலை 4.30 ஆகியிருக்கக் கண்ணாடியில் தன்னை ஒரு முறைக்கு ஏழு முறை சுற்றிச் சுற்றி பார்த்தாள் ரேகா…..

பேரழகி இல்லைனாலும் பிரம்மனால் உடலில் ஆங்காங்கு சற்றுத் தாரளமாகப் படைக்கப்பட்ட அழகி. நடிகை ரம்யா கிருஷ்ணன் மாதிரியான முகம், செழித்த குதிரை போன்ற உடல் என ஆண்களை ஏங்க வைக்கும் தோற்றம் ரேகா உடையது. இன்று கொஞ்சம் ஒப்பனையால் இன்னும் கிறங்கடிக்கும் தோற்றத்தில் இருந்தாள்.

இவளை இன்று பார்க்க மீனாட்சிக்கே ஆச்சரியமா இருந்தது…. பிங் கலர் டாப் வொய்ட் லெகின்ஸ் லூஸ் ஹேர் என வெய்ட்டா ரெடியாகி இருந்தாள் ரேகா!

" என்னடி இன்னைக்கு உன்ன பொண்ணு பாக்க வரதா ஏதும் உங்கப்பா சொல்லலையே"? என்றாள் மீனாட்சி நக்கலாய்…

"ஏன் என்ன பிரச்சினை உனக்கு இப்ப"னு கொஞ்சம் கோபமாவே கேட்டாள் ரேகா….

"இல்லடி இவ்வளவு அழகா ரெடியாகி இருக்கியே அதான் கேட்டேன்"னு மீனாட்சி சொல்ல, அழகுனு சொன்னதால மீனாட்சிக்கிட்ட வாய்ச்சண்டை போடற ஐடியாவை கைவிட்டாள் ரேகா!

"நான் இன்னையில இருந்து வாக்கிங் போகப் போறன். உடம்ப ஸ்ட்ரெட்ச் பண்ணி பிட்டா வைக்கப் போறன்" என்றாள் மிடுக்கா……

"சரிடி நம்ம மொட்டை மாடியில வாக்கிங் போக எதுக்கு இவ்வளவு மேக்கப்லாம்னு கேட்கறேன்?" என்றாள் மீனாட்சி….

மீண்டும் மீனாட்சியோட வாய்ச்சண்டைக்குத் தயாரான ரேகா "இப்ப நான் நம்ம மொட்டை மாடியில வாக்கிங் போறதா உன்கிட்ட சொன்னனா" என்றாள் சீற்றமாக…..

" அப்ப பக்கத்து வீட்டு மாடியில போகப் போறியா சரி சரி அப்படியாவது இளை"னு மீனாட்சி சொல்ல கோபத்தின் உச்சிக்கே போனாள் ரேகா….

"இங்க பாரு மீனாட்சி தேவையில்லாம என்னைக் காண்டேத்தாத, நான் நல்ல மைன்ட் செட்ல இருக்கன்"னு ரேகா பல்லைக் கடிச்சிக்கிட்டு சொல்ல……

இந்த நேரத்தில் காலேஜ் முடிச்சி வீட்டுக்குள் நுழைந்த உமாவும் ரேகாவை பார்த்து ஆச்சரியமானாள்!

"அக்கா வாவ் செம" னு உமா சொல்ல கூலான ரேகா "தாங்க்ஸ்டி" என்றாள்!

"இப்படியே தினமும் குளிச்சிடுக்கா"னு உமா சொல்ல, வந்த கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாம டீபாய் மேல இருந்த சொம்பை பிரிட்ஜ் மேல வீசி எறிஞ்சாள் ரேகா…..

"அக்கா கூல் கூல் ஸாரி, இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க ஏதாவது பங்சனுக்குப் போறியா"னு ரேகாவை சமாதானப்படுத்திய உமா, ரேகாவை அடிக்கக் கை ஓங்கிய மீனாட்சியைக் கிச்சனுக்குள் ஒதுக்கினாள்..

"இல்லடி நம்ம ஏரியா பார்க்குக்கு வாக்கிங் போறன்" என்றாள் ரேகா….

"ஏக்கா வாக்கிங் போக இப்படிக் குளிச்சி செமயா ரெடியாகி யாராவது போவாங்களா? நல்ல வேர்க்க வேர்க்க நடந்துட்டு வந்துதான குளிக்கனும்"னு உமா சொல்ல…

"சரிதான்டி இன்னைக்கு முதல்நாள் இல்லையா அதான் இப்படி ரெடி ஆய்ட்டன். நாளையில இருந்து நார்மலா போறன்"னு சொல்லி ரேகா எஸ்கேப் ஆக ரேகா மொபைல் சிணுங்கியது!

"ஹலோ"

"ஹாய் சந்துரு பேசறன்"

அவன் குரலைக் கேட்டதும் வீட்டில் நடந்ததை எல்லாம் மறந்தாள் ரேகா….

" சொல்லுங்க சந்துரு?!"

" கிளம்பிட்டிங்களா?"

"யா 15 மினிட்ஸ் அங்க இருப்பன்" என்றவள் வீட்டு வாசற்படியைத் தாண்டினாள்!

ரெண்டு தெரு தாண்டி நடந்தவள் ஒரு மூட்டையைக் கட்டிக்கிட்டுப் புல்லட்டில் நாச்சியா போறதை பார்த்ததும் தன் அழகின் மீதான கர்வத்தைத் தொலைத்திருந்தாள்.

காரணமே இல்லாமல் நாச்சியா மேல் பொறாமையும் ஒருவித கோபமும் ரேகாவுக்கு ஆழ்மனதில் உருவாகி இருந்தது. அதை அவளால் அழிக்க முடியவில்லை. அப்படி ஒரு எண்ணமும் அவளுக்கில்லை.

பார்க்கிற்குள் நுழைந்தவள் சந்துருவுக்குக் கால் பண்ண அட்டன்ட் பண்ணிய சந்துரு திரும்பி பார்க்கச் சொன்னான். ரேகா திரும்பி பார்க்கவும், மர நிழலில் நின்றிருந்த சந்துரு அவளை வருமாறு கையால் சைகை செய்ய, அவனை நோக்கி போனாள் ரேகா….

கிரே கலர் ஜீன்ஸ் வொய்ட் & பிளாக் கலர் வர மாதிரியான டைட்டான டீ சர்ட்டில் ஜிம் உடம்பை எடுத்துக் காட்டியப்படி நின்றிருந்த சந்துருவை நெருக்கத்தில் பார்க்கவும் கொஞ்சம் தன் வசம் இழக்கவே செய்தாள் ரேகா…..
…………..,.

டீ கடை சிமெண்ட் பெஞ்சில் வழக்கம்போல் உட்கார்ந்து, குரூப் எக்ஸாமுக்கு படிக்காம, எக்ஸாம் பற்றிப் பேசிக்கிட்டு இருந்த விக்கிக்கு போரடிக்க,

"டே தேவா அப்படியே பார்க் வரை போய்ட்டு வரலாமா?! என்றான்!

" போலாம்தான் ஆனா ஒரு பாப்கார்ன் வாங்கக்கூடக் காசில்லடா விக்கி" என்றான் தேவா.

"என்கிட்ட இருக்கு வா போலாம்" என்று விக்கி சொல்ல இருவரும் பார்க்கை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்…..

………..

ஹாய் ரேகா. ஹய் சந்துரு என்ற சம்பிரதாயங்கள் முடிந்ததும் சந்துரு அவள் அழகைப்பற்றி நேராகப் பேசியதும் ரேகா வெட்கப்பட்டுத் தலையைக் கீழ குனிந்தவாறே பேச ஆரம்பிச்சாள். சந்துரு மனதில் இவளை எப்ப படுக்கையில வீழ்த்தவோங்கற எண்ணமே இருந்தது!

"எப்படிங்க வீட்ல இருந்து தப்பிச்சி வந்திங்க" சந்துரு ரேகா வீட்டை ஒரு சிறை மாதிரி ரேகாவுக்குத் தோண வைக்கக் கேட்க,

"அத ஏன் கேட்கறிங்க வரதுக்குள்ள ஆயிரம் கொஸ்டின் வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சி சந்துரு" என்றாள் ரேகா…,.

" இந்தப் பழமைவாதிங்கள, ஆணாதிக்கவாதிகளை நாம திருத்தறதுக்குள்ள நம்ம இளமையே போய்டுங்க ரேகா"என்று காரியமா பேசி வைத்தான் சந்துரு….

சந்துரு பேசிக்கொண்டே இருக்கையில் விக்கியோடு தேவா பார்க்கிற்குள் நுழைவதை ரேகா பார்த்துவிட்டாள்!

அத்தியாயம் 11 

தேவா வருவதைப் பார்த்ததும் சந்துருவிடம் சொல்லி விட்டு எழுந்து வேகமாய் நடக்க ஆரம்பித்தாள் ரேகா. அதே நேரத்தில் ரேகாவை தேவா பார்த்து விட்டான்….

ஆச்சரியமான தேவா விக்கிக்கிட்ட ரேகாவை காட்டி விட்டு அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்…. விக்கியோ சந்துரு அங்க நின்றதை கவனித்துவிட்டான். விக்கி இருக்கும் வீதியில்தான் சந்துருவும் இருக்கிறான். சந்துருவை பற்றி அரசல் புரசலாக விக்கிக்கு தெரியும்….

"என்ன வீட்டுப் பூனை இன்னைக்குப் பார்க்ல அலையுது"னு நக்கலாய் தேவா கேட்க, வழக்கமாய்க் கோபப்படும் ரேகா ஒரு சின்னப் பதட்டத்தோடு நல்ல முறையில் பேசினாள்…..

" இல்ல உடம்பு வெய்ட் போடுது அதான் இனி தினமும் பார்க்ல மார்னிங் ஈவ்னிங் வாக்கிங் போலாம்"னு இழுத்தாள் ரேகா…..

"அதெல்லாம் கரெக்ட்தான் ரேகா ஆனா ஹை ஹீல்ஸ் போட்டுக்கிட்டு வாக்கிங் போற ஆளு உலகத்திலயே நீ ஒருத்திதான்"னு விக்கி சொல்ல, தன் மடத்தனத்தை நினைத்து மனதுக்குள் நொந்துக்கொண்டாள் ரேகா..,.

இதே வேற சூழ்நிலையா இருந்திருந்தா விக்கிக்கிட்ட சண்டைக்குப் போயிருப்பாள் ரேகா. வகையா சிக்கிட்டோம்னு அமைதியா இருந்தாள்.

விக்கி சின்ன வயசுல இருந்தே ரேகாவை பேர் சொல்லி வா போனுதான் கூப்டுவான். ரேகாவை விட ரெண்டு வயசு சின்னவன். தேவாவை விட ஒரு வயசு பெரியவன் விக்கி…..

"இல்ல வாக்கிங் போற வசதிலாம் பார்க்ல எப்படி இருக்குனு பார்க்க வந்தன்"னு சமாளித்தாள் ரேகா!

சிவ பூஜையில் கரடி நுழைந்த மாதிரி வந்த தேவாவையும், விக்கியையும் மனசுக்குள் கண்டபடி கெட்ட வார்த்தைகள்ல திட்டிக்கிட்டு இருந்தான் சந்துரு.

அப்பவும் அவன் பார்வை ரேகாவின் பின்னழகின் மீதே இருந்தது. இவக்கிட்ட இருந்து காச புடுங்க முடியலனாலும் எப்படியாவது இவளை அனுபவிச்சிடனும். அந்தச் சிவா பயலுக்கும் இவளைத் தரக்கூடாதுனு மனசுக்குள் அவனா கற்பனை பண்ணிக்கிட்டுத் திட்டம் போட்டான்!

"சரி சரி வா இந்தப் பார்க் எனக்குப் பழக்கம்தான் அப்படியே பாப்கார்னை கொறிச்சிக்கிட்டே பார்க் வாக்கிங் போக வசதியா இருக்கா? சல்லி பசங்க தொந்தரவு பார்க்ல இருக்கானு பார்ப்போம். பார்த்தா சல்லி பசங்க தொந்தரவு இருக்கும்தான் போல"னு விக்கி சொல்ல எப்படிடா சொல்றனு ரேகா கேட்டாள்!

"அந்த மரத்துக்கு அடியில பிளாக்&வொய்ட் டீ சர்ட்ல நிக்கறானே ஒருத்தன் அவன் பேரு சந்துரு, அவனை வைச்சிதான் சொல்றேன். அவன் எங்க வீதிதான்"னு விக்கி சொல்ல ரேகா பதட்டமானாள் விக்கி கண்டுப்பிடிச்சிட்டானோனு!

"ஏன்டா விக்கி அவன அப்படிச் சொல்ற"னு தேவா கேட்க,

"வீதிக்குள்ள அப்படித்தான்டா பேசிக்கறாங்க தேவா" என்ற விக்கி பார்க்கை சுத்திவர நடக்க ஆரம்பிச்சான்…..

பார்க்கில் இருந்த சந்துருவுக்குச் சிவா போன் பண்ணினான்..

"ஹலோ சொல்டா சிவா"

"டே மச்சான் சந்துரு உன்ன விட்டுட்டு லைட்டா சரக்கு போட்டுட்டன் ஸாரிடா மச்சான். நீ எங்க இருக்க?

"நான் எங்க வீதியில இருக்கன்"னு பொய் சொன்னான் சந்துரு ஏன்னா ரேகாவை முழுசா அனுபவிக்கனும்னு யாருக்கும் தரக்கூடாதுனு பிளான் பண்ணியிருந்தான்….

"சரி மச்சான். நான் அந்த மளிகைக்கடைக்காரி நாச்சியாக்கிட்ட போய் லைட்டா பேச்சுக் குடுக்கறன். நீ லைன்ல அப்படியே கேளு, செட்டாகுமா ஆகாதானு சொல்லு மச்சான். நீதான் இதுல கிங் ஆச்சே" என்றான் சிவா….

"சரி சரி பார்த்து பேசு நான் லைன்லயே இருக்கன்"னு சொன்னவன் ஹெட் செட்ட மாட்டிக்கிட்டு காதை கூர்மையாக்கினான் போனில். கண்ணை மட்டும் ரேகா மேலயே வைத்திருந்தான்!
……………

கடையில் வாசுவோட நாச்சியா வியாபாரத்தில் இருந்தாள். சண்முகம் அரிசி மண்டிவரை போயிருந்தார். இந்த நேரத்தில்தான் போதையில் கடைக்கு வந்தான் சிவா!

"ஹலோ அந்தக் காரக்கடலை எவ்வளவு" என்றான் சிவா….

அவன் மிதமான போதையில இருக்கறது நாச்சியாவுக்கும் வாசுக்கும் தெரிய, நாச்சியா அமைதியா இருந்தாள்…. வாசு 15 ரூபா எனப் பதில் சொன்னான்….

"ஹாய் நாச்சியா நான் உங்க பேஸ்புக் ப்ரன்ட் சிவா இங்க நாலாவது கிராஸ்லதான் இருக்கேன். என்னைத் தெரியலையா"னு சிவா ஆரம்பிச்சான். அப்பவும் நாச்சியா அமைதியா இருந்தாள்.

"ஏங்க பேச மாட்டிங்களா"னு மறுபடியும் சிவா நோண்ட வாசு காரக்கடல குடுத்தான், அதை வாங்கியவன் காசு தராம தொடர்ந்து நாச்சியிக்கிட்ட பேசிக்கிட்டே இருக்க….

பொறுமை இழந்த நாச்சியா,

"உனக்கு இப்ப என்ன வேணும்" என்றாள்….

"உங்க ப்ரன்ட்ஷிப்தான் வேணும்"னு சிவா சொல்ல….

"ஸாரி, நீங்க வாங்கினதுக்குக் காசக் குடுத்திட்டு கிளம்புங்க" என்றாள் நாச்சியா..,..

"ஓஹோ நைட் 11 மணி வரைக்கும் பேஸ்புக்ல பச்சை லைட் எரியுது என்கூடப் பேசினா குறைஞ்சிருவியா" என்றவன் கையை மடக்கி மசல்ஸ காட்ட.

போனை எடுத்த நாச்சியா தேவாவுக்குப் போன் பண்ணி எங்க இருக்கனு கேட்டுட்டு, உடனே வரச்சொல்லிட்டுப் போனை வைத்தாள்!

"என்னடி நீ நைட்ல கடலை போடறவனுங்கள வரச்சொல்றியா வரச்சொல்லு. எத்தனை பேர்கூட நீ சுத்தறனு தெரிஞ்சிக்கறன்"னு சிவா சொன்னதும் பொறுமை இழந்தாள் நாச்சியா…..

"டே விக்கி நீயும் ரேகாவும் பார்க்க சுத்தி பார்த்துட்டு வீட்டுக்கு வாங்க நாச்சியா அவசரமா கூப்டுது பார்த்துட்டு வரேன்"னு கிளம்பினான்…..

கொஞ்சம் நேரம் போன்ல நடக்கறத கேட்ட சந்துரு நிலைமை மோசமாவதை உணர்ந்ததும் சிவாவை கூட்டிக்கிட்டு வர அவசரமா கிளம்பினான்!

தோளில் குறுக்காய் போட்டுக் கட்டியிருந்த ஷாலை அவிழ்த்தாள் நாச்சியா!

அத்தியாயம் 12 

அவிழ்த்த ஷாலோடு கடையில் இருந்து வெளியில் வந்த நாச்சியா இப்ப பேசுடா என்றாள்…..

"என்னடி பெரிய பத்தினி மாதிரி ஸீன் போடற"னு அவன் சொல்லி முடிக்கறதுக்குள்ள,
கையிலிருந்த ஷாலை அவன் கழுத்தில் போட்டு சுழற்றி இழுத்துப் பிடித்து நிறுத்தினாள்….,.

இழுத்து ஒரு கையால் பிடித்தவள் மறு கையால் குனிந்து வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் நடுவில் குத்த ஆரம்பித்தாள்……

கண நேரத்தில் நடந்த இந்தத் தாக்குதலால் அவனுக்கு எதுவுமே புரியல, கழுத்தில் சுத்தியிருந்த ஷாலில் இருந்தும் தப்பிக்கவும் முடியல, வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் இடையில் குத்து விழுவதால் மூச்சு திணற ஆரம்பித்தது….. இதே நேரத்தில் கூட்டமும் கூடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்திருந்தது!

அதேநேரத்தில் தேவாவும், சந்துருவும் அங்க வர,

தேவா நாச்சியாவைக் கட்டுப்படுத்தி அவளிடமிருந்து அவனை விடுவித்தான்….. அடியிலிருந்து தப்பிச்சவன் வெறியில கெட்ட வார்த்தையில திட்டிக்கிட்டே நாச்சியாவின் முடியைப் பிடித்து இழுத்தான்……

அவன் கையிலிருந்து நாச்சியா தலைமுடியை விடுவித்து விட்டு தேவா அவளை ஒரே ஒரு நிமிசம் ஓரமா நில்லுனு கெஞ்சாத குறையா சொல்ல நாச்சியா தள்ளி நின்றாள்…

சிவாவை பிடித்துச் சந்துரு வைத்திருந்தான்…

மார்புக்கு குறுக்கே கையைக் கட்டியப்படி சிவா சந்துரு முன்னால நின்ன தேவா….

"முன்ன பேசினியே ஒரு கெட்டவார்த்தை அதை இப்ப பேசு" என்றான்….

"என்னடா பண்ணுவ"னு சிவா அந்தக் கெட்ட வார்த்தையை மறுபடியும் சொல்ல,

ஒரே ஒரு குத்துக் கீழ்தாடையில் குத்தினான் சிவாவை குத்தினான் தேவா, சந்துருவின் பிடியிலிருந்த சிவா மயங்கிச் சரிந்து விழுந்தான்….,

"உன் பேர் சந்துருவா, உன் ப்ரன்டா இவன்",என்ற தேவாவின் குரலில் ஒரு வீரத்துறுவியின் கம்பீரம் இருந்தது.

நாச்சியாவாலயே இதை நம்ப முடியல. ஆனா தனக்காக ஒருத்தன தனக்கானவன் அடிச்சி சாய்ச்சத நினைக்கறப்ப சந்தோசமாவும், பாதுகாப்பாவும் உணர்ந்தாள் நாச்சியா. இதை அனுபவிச்ச பெண்களுக்குத்தான் இந்தச் சுகம் தெரியும்……

சந்துரு பதட்டத்தோட ஆமா என்றான்…..

"உன் ப்ரன்ட்டுக்கு மயக்கம் தெளிஞ்சதும் சொல்லு இதுக்குப் பேர்தான் நாக்அவுட் பஞ்ச்னு" என்ற தேவா நாச்சியா கிட்ட வந்து தலைமுடியைச் சரிச்செய்யச் சொல்லிட்டு. வாசுக்கிட்ட ஒரு சோடா கேட்டு வாங்கி, அதைச் சிவா மூஞ்சியில சந்துருவ தெளிக்கச் சொன்னான்… இதெல்லாம் நடக்கறப்ப பெரிய கூட்டமே கூடியிருச்சி….

சிவா மூஞ்சியில சந்துரு சோடாவை தெளிக்கத் தெளிக்கக் கொஞ்சமாய்க் கண் விழித்தான்…
அடுத்த ஐந்து நிமிசத்தில் எழ முடியாம ரோட்டோர திட்டில் சாய்ந்து உட்கார்ந்தான்…..

"நீயெல்லாம் ஒரு மனுசனாடா தனியா இருக்கப் பொண்ணுக்கிட்ட போய்த் தேவையில்லாம பேசி வைச்சிருக்க, ஸாரி மேடம் நான் கூட்டிக்கிட்டு போயிடறன்"னு நல்லவன் வேசத்த சந்துரு போட…..

" ஹலோ மேன் உங்கள இப்ப யார் இவன கூட்டிக்கிட்டுப் போகச் சொன்னது??.. போலீசுக்கு எப்பவோ போன் பண்ணியாச்சி, போலீஸ் வந்ததும் ஸ்டேசன்ல விட்டுக் கம்ளெய்ண்ட் தரன், அதுக்கப்புறம் போலீஸ் விட்டா உங்க ப்ரண்ட்ட எங்க வேணா கூட்டிக்கிட்டு போங்க.

இவன் எல்லாத் தப்பையும் பண்ணுவான். நீங்க திட்டற மாதிரி திட்டுவிங்க அப்புறம் ஜென்டில்மேனாய் ஸாரி கேட்பிங்க நாங்க உடனே சரினு போய்டனுமா போய் ஓரமா நில்லுங்க"னு நாச்சியா சொல்ல இப்ப சந்துரு அவமானப்பட்டு நின்னான்…..

அரிசி மண்டிக்கு போயிட்டு வந்த சண்முகம் கடை முன்னாடி கூட்டமா இருக்கறத பார்த்ததும் பதட்டமானார்… கூட்டத்தை விலக்கிக்கிட்டு உள்ள வரவும் நாச்சியா வீட்டுக்குள்ள கூட்டிட்டு போய் நடந்த எல்லாத்தையும் விபரமா சொல்ல சண்முகம் கோபமானார். அப்புறம் தேவா வந்து என்ன செஞ்சானு சொன்ன பிறகு அமைதியானார்……

ஒருவழியா போலீஸ் வந்தது… வந்தவர்கள் அவனைத் தூக்கி வண்டியில போட்டுட்டு, எஸ்.ஐ அந்தப் பொண்ணு யாருமானு கேட்க நாச்சியா முன்ன வந்து நான்தான் ஸார் என்றாள்.

"கம்ப்ளெயின்ட் குடுக்கறியாமா" னு எஸ்.ஐ கேட்க,

"இனி எங்க கடைக்கு வந்து எந்தப் பிரச்சினையும் பண்ண மாட்டனு எழுதிக்குடுத்தா கம்ப்ளெயின்ட் குடுக்கல ஸார். இல்லனா கம்ப்ளெயின்ட் குடுக்கறன் ஸார்" என்றாள் நாச்சியா……

"சரி சரி ஸ்டேசனுக்கு வாம்மா" என்று எஸ்.ஐ சொல்ல ஜீப் கிளம்பியது!

"அப்பா நீங்க இங்கையே இருங்க கடைய சாத்த வேணாம். நான் தேவா கூடப் போயிட்டு வந்திடறன்" என்ற நாச்சியாவிடம்,

"இல்லமா அதுவந்து"னு சண்முகம் இழுக்க,

"தேவா வண்டிய எடுங்க"னு நாச்சியா சொல்ல, தேவா புல்லட்டை எடுத்தான்.

"நான் போய்ட்டு வந்திடறன் பா"னு நாச்சியா சொல்ல, புல்லட் கிளம்பியது!

ஸ்டேசன் வாசலில் தேவா புல்லட்டை நிறுத்த அவன் தோள் பிடித்து இறங்கினாள் நாச்சியா!

அதேநேரத்தில் ஸ்டேசனுக்குள்ள ஒரு சின்னக் கவனிப்பை சிவாவுக்குக் கவனிச்சிக்கிட்டு இருந்தார் எஸ்.ஐ…..

உள்ளே நாச்சியாவும் தேவாவும் போக, உள் ரூமிலிருந்து லைட்டா நொண்டியப்படி வந்தான் சிவா……

"இங்க பாரும்மா இனி உங்க கடை பக்கமே வரமாட்டனு எழுதி தரானாம் என்ன சொல்றிங்க?" என்றார் எஸ்.ஐ

"ஓகே ஸார் இது போதும்" என்றாள் நாச்சியா!

ரைட்டர் சொல்ல சிவா தன் கைப்பட எழுதி கையெழுத்து போட்டு கைநாட்டு வைச்சான். அதுல எஸ்.ஐ கையெழுத்து போட்டார்!

"இந்தாமா இந்தப் பேப்பரை ஒரு ஜெராக்ஸ் எடுத்துட்டு வாங்க"னு ரைட்டர் சொல்ல, தேவா போய் ஜெராக்ஸ் எடுத்துட்டு வந்தான்.

ஒரிஜனல நாச்சியாட்ட குடுத்த ரைட்டர் ஜெராக்ஸ ஒரு பைல்ல பின் பண்ணி வைச்சார்….

"சரிமா நீங்க போலாம். இனிமே இவன் ஏதும் கலாட்டா பண்ணான் அப்டினா உடனே போன் பண்ணுங்க, பாத்ரூம்ல வழுக்கி விழுந்திட்டானு ஒரு கையை உடைச்சி விட்டுடறோம்.
டேய் உன்னைக் கூட்டிக்கிட்டு போக யாருக்காவது போன் பண்ணுடா" ரைட்டர் சொல்ல.

சிவா சந்துருவுக்குப் போன் பண்ணி விசயத்த சொல்ல, நான் ஸ்டேசனுக்கு வெளியிலதான் நிக்கறன் இரு வரேனு ஸ்டேசனுக்கு உள்ள போய்ச் சிவாவ கூட்டிக்கிட்டு வந்தான் சந்துரு….

தேவா பைக்க எடுக்க அவன் தோளை இறுக்கமா பற்றி ஏறி நாச்சியா உட்கார,. சந்துரு ரெண்KNடு பேரையும் முறைச்சிக்கிட்டே வண்டியை ஸ்டார்ட் பண்ணினான்…….

நாளைக்கு நடக்கப் போவதின் விளைவு இவங்க நாலு பேருக்குமே தெரியல!

                                                       ----தொடரும்----



1 comment:

  1. சூப்பர் இப்படியே கண்ட்டண்யூ பண்ணுங்க

    ReplyDelete

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib