anti - piracy

Post Page Advertisement [Top]

 



யாரோவாகிய பின்பும் தினமும்
எதோ வகையில்
உன்னை நினைவு படுத்தும் நிகழ்வுகள்
நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.
யாரும் அறியாமல்- உன்
தடங்களை தேடிப்பார்க்கிறேன்.
என்னால் விட்டுவிட முடியாத
உன் நினைவுகளை- நீயும்
சுமந்துகொண்டு திரியவேண்டும்
என எதிர்ப்பார்க்கிறேன்.
எதிர்ப்படும் வேளைகளில் சட்டென்று
ஒளிந்து கொள்கிறேன்.
பாதைகள் மாறினாலும் அன்று
அமர்ந்து பேசிய மரத்தின்
நிழலில் நினைவுகளில்
ஓய்வெடுக்கிறேன்.
தீபாஸ்

*************************************************************************


ஆகாயத்தில் மினுக் மினுக் கென்று
ஆயிரம் கண்கள்
அதில் ஒளிவட்டமாய் உன் முகம்.
இருள் வீதியில் மெல்ல மெல்ல
நகர்ந்து உலாவுகின்றாய்.
உன் அக ஒளியில் பிரகாசிக்கும்
ஆயிரம் கண்களில்
நானும் ஒருத்தியாக ஆசைகொண்டு
வான் படிக்கட்டு ஏறுகிறேன்.
உன் காதலென்னும் கருணையை
எட்டிப்பிடிக்க
ஆசைமேவ உன்னை அழைக்கிறேன்.
இருளின் போர்வைக்குள் ஒளிந்து ஓடி
கண்ணாமூச்சு ஆடுகிறாய்.
கையில் அகப்படாமல் கள்ளமாய்
சிரிக்கின்றாய்
எட்டிப்பிடிக்க நீயென்ன கனியா?
இருளின் வெளிச்சப்புள்ளி
உன்னையும் காதலையும்
கைக்கொள்வதென்பது
கனவில் மட்டுமே சாத்தியம்
கள்ளனும் நீயும் ஒன்று
தூங்கும் நேரத்தில் மட்டுமே
சஞ்சரிக்கின்றீர்கள்
தீபாஸ்

*********************************************************************************


வெகுநாள் சென்று
அண்ணாச்சி கடையில்
வாங்கிய இனிப்பின் ருசியை
நுகரமுடியவில்லை.
உன்னோடு அதை பகிர்ந்தே
உண்டு பழக்கபட்ட ஏன்னால்
இன்று நீ இல்லாமல்
உண்ண முடியவில்லை.
பசியோடு எட்ட காத்திருந்த
நாய்குட்டிக்கு இரையாகியது
அந்த இனிப்பு.
பிடித்ததை வாங்குவதற்கும்
அனுபவிப்பதற்கும் உண்டான
வித்தியாசம் புரிந்தது.
நீ அருகில் இல்லையெனில்
எல்லாம் இருந்தும்
நுகர்ச்சிக்கு என்னில்
பிழை வந்துவிடுகிறது.
தீபாஸ்

*****************************************************************************************
விடியாத இரவுகள்
பள்ளிசெல்லும் வயதில் நானும் புளியம்பழம் பொறுக்கப் போய்
கிடைக்கும் காலணா காசு கூட சுள்ளி பொறுக்கி வந்து
வீட்டில் ஆத்தாகிட்ட குடுத்தேன்
மில்லுவேலைக்கு போன அக்கா வீட்டுக்கு வந்து துவையல்
அரைச்சுக் கொடுக்க காத்திருக்கச் சொன்ன ஆத்தா
புள்ள பெத்த மகராசியா காலை நீட்டி இளைப்பாறுவாள்
பாதிகண்ணு சொக்கையில மூத்தவ நறுக்குன்னு கிள்ளி
கஞ்சி குடிச்சிட்டுத் தூங்குன்னு வசவாலே தாலாட்டுப் பாடுவா.
சுண்டிப்போன வயிறும் கால் கஞ்சியிலே நிரம்பிப்போகும்
கண்ணு மூடி தூங்கையில மழை கூரையப் பொத்துக்கிட்டு ஒழுகும்
மழைத்தண்ணீர் பொத்தல்பாயை நனைச்சு கோழி குஞ்சாய்
சுருண்டுகிடத்தவளை குளிர் கரத்தால் தொட்டணைத்து
வெடவெடக்க வைக்கும்.
சொர்க்கமான தூக்கத்தை கெடுக்கும் ஒழுகும் வீடு வேணாம் ஆத்தா
ஒழுகாத மச்சுவீடு கட்டி வாழுவோமே நாமும்.
குடிகாரன் பெத்தமவளே வீட்டில நாலும் பொட்டச்சியா பொறந்துப்புட்டு
மச்சுவீட்டு கனவ நானும் தண்ணியில தான் எழுதணும்.
மச்சு வீட்டுக்காரன் உனக்கு தாலிகட்டி கூட்டிப்போய் மகாராணியா
வாழவைப்பான் உனக்காவது விடியட்டும் என்றார்.
ஆளான உடனே அப்பனுக்கு தப்பாம பொழுதடைஞ்சா போதையில் இரட்டை ஆளாகும் ஆளுக்கு கட்டிக்கொடுத்து அடிமாடாய் ஆக்கிபுட்டார்.
போதையில் ஊருக்குள்ள சலம்பல் செய்து இழுத்துவிடும் வம்புக்கு பயந்து வீட்டுக்குள்ள இழுத்து போட்டு கதவை சாத்தினேன்.
பாதிபொணமா கனப்பவனை முந்தானையில் அடக்கிவச்சு பொலபொலன்னு கண்ணீர் ஊத்தும் போது என் குமுறலுக்கு எசப்பாட்டா வானவளும் ஒப்பாரினாள்
மச்சுவீட்டு பொத்தல் வழி ஓடிவந்த மழைத்தண்ணீர் எரியும் மனச அணைப்பதாக எண்ணி என்னை நனைச்சு ஒழுகாத வீட்டுக்கனவை விடியாமல் ஆக்கிபுட்டாள்.
தீபாஸ்

******************************************************************************************************

நேசமதை உன்னிடம்
பகிரவில்லையென
நீ சொல்வதை- என்னால்
ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
உன்னை பார்த்ததும் மலரும்
என் உதடும், கண் விழியும்
பகிரும் அன்பை விடவா
என் வார்த்தைகள் நேசத்தை
உணர்த்திவிடப்போகிறது.
இருந்தும் நான் சொல்லுமிடத்திலும்
நீ கேக்குமிடத்திலும்
இல்லையெனும்போது
வார்த்தைகள் அங்கே
மெளனமாக இருப்பதுதான்
அழகென்பேன்.
வாய்வார்த்தையால் மொழியாத
நேசம் கூட.
உனக்கான கண்ணியத்தை
காக்கும் பொறுப்பு தவறாது
நன்மை செய்வதாகும்
நம் நேசத்தின் சிறப்பதுவே.
வாய் மொழியாத நேசத்துக்கு
ஆயுள் அதிகம்.
தீபாஸ்

******************************************************************************


நீ இளைப்பாற வந்து தங்கும்
வேடந்தாங்கலாக மட்டும்
நானிருக்க நினைத்திருந்தால்
என் அழகை மட்டும்
நீ புகழ்வது போதுமென
நினைத்திருப்பேன்.
வாழ்க்கையே நீயென
நினைத்ததினால்
அழகோடு அறிவையும்,
சந்தோசத்தையும், துக்கத்தையும்
உன்னோடு செலவழிக்க
பிரயாசைப்படுகிறேன்.
இளமையும் அதன் வனப்பும்
பருவத்தோடு முடிந்துவிடும்.
என் தன்மையின் அழகே
ஆயுளுக்கும் என்னோடு
தொடர்ந்துவரும்.
கிழப்பருவம்வரை என்னை
நீ கொண்டாட
அழகோடு என் அத்தனை
தன்மையையும் நீ கொண்டாடி
தீர்க்க வேண்டுமென
பிரயாசைப்படுகிறேன். .
தீபாஸ்


*********************************************************************************

என் மனக்கிளையில்
தானாக வந்து
அமர்ந்த பறவை நீ.
என்னதென்று நான்
கூறாமலே
என் காயத்திற்கு
மருந்திட்டதும் நீ.
எதிர்பார்ப்பு ஏதுமில்லாத
சமயத்தில்
பேசாமலே அன்பை எனக்குள்
விதைத்ததும் நீ
காரணம் சொல்லாமலே
கண் காணா தூரம்
பறந்து சென்றதும் நீ
உன்னை நான் அழைக்கவோ
தேடவோ விரும்பவில்லை
நான் உணர்ந்த அன்புக்கு
இளைக்கும் துரோகமது
எனக்கொள்கிறேன்.
எங்கோயோ இருக்கும்
உன்னிடம் பேசாவிட்டாலும்
உன் நினைவுகளுடன்
இன்றும் காதல்
கொண்டுள்ளேன்.
மொளனங்களில் வளர்த்த
அன்பு வார்த்தைகளில் முட்டி
முறிந்துவிட கூடாதென
மறுபடி உன்னை நான்
என் இடத்தில்
அமரவிடாமல் செய்ய
கிளைகளை
ஒழிக்கப் பார்க்கிறேன்.
தீபாஸ்


***************************************************************************


அன்பில்லை என்ற பின்னும்
முன்பு இல்லையென சொல்லாமல்
கொடுத்த அன்பின் சுவை
தந்த கிறக்கம்
இன்னும் என்னில்
ஒட்டிக்கொண்டுள்ளது.
என் பிடித்தமில்லா
எதையாவது
என்னிடம் திணித்து
என்னை எட்டவே
நிறுத்தியிருந்தாலாவது
நெஞ்சின் அலைப்புறுதலில்
மனச்சோர்வுக்கு
ஆளாகாமல் இருந்திருப்பேன்.
தீபாஸ்.


*********************************************************************************


பிடி அன்புக்கு பஞ்சமாகி
நலிந்து மெலிவுற்று
வெற்றுப்பாத்திரத்தின்
சுமை தாளாது
பாரம் இறக்க
ஒரு கைப்பிடியேன்
என கண்களால்
இறைஞ்சி நிற்கிறேன்.
எச்சில் கைக்கொண்டு
விரட்டியடிக்கிறாய்.
உன் கையில் ஒட்டியிருக்கும்
பருக்கை வீணாக சிதறுகிறது.
சிதறிய பருக்கையில்
எழுதியிருந்த கருணை
வீணாகியது
அதை ஏக்கமுடன் பார்த்தபடி
கடந்து போகிறேன் -வெற்று
பாத்திரத்தின் பாரத்தோடு.
தீபாஸ்


********************************************************************************


அவனின் நேர், எதிர் மறை
பக்கங்களை புரிந்ததால்
எளிதாக அவனுடன்
சேர்ந்து பயணிக்கிறாள்
அவளைப்பற்றிய புரிதலில்
அவனுக்கு குறையிருந்தும்
அன்பென்கிறான் காதலென்கிறான்
அவளது அக்கறையில் குளிர்காய
செய்யும் ஜாலம் அதுவென
அறியாதவளா அவள்!.
பொய்யாகும் நேசமதில்
சற்று குளிர்காய்கிறாள்.
புரிதலில்லா நேசத்தின்
வண்ணக்கோடுகள்
மனவானில் வானவில்லாகி
சட்டென்று மறைந்து போகும்.
.
.தீபாஸ்


*******************************************************************************






No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib