மெளனத்தை மொழிபெயர்த்த மாயோள் (தீபாஸ்)
சாப்பாட்டு மேஜையின் முன் காலை உணவை எடுத்துக்கொள்ள வந்து அமர்ந்த தயாவளவன் “ஹெல்த் டிரிங்ஸ் மட்டும் போதும் சுபா, மார்னிங் டிப்பன் ஐட்டம் சாப்பிட்டா ஜீரணமாக மாட்டேங்குது. இந்த பூரியையும் பொங்கலையும் சாப்பிட்டுப்போனா மீட்டிங் அட்டன் பண்ண முடியாம அசிடிட்டி பாடாய் படுத்தும்” என்றதும்.
“ ஏற்கனவே ஹெல்த் டிரிங்க்ஸ் உங்களுக்கும் இந்திரனுக்கும் சேர்த்து ரெடி பண்ணச் சொல்லி எடுத்துவச்சிட்டேங்க.
அங்க பாருங்க, உங்க அம்மா இந்திரனுக்கு பத்து பூரியை தட்டில வைக்க அவனும் உள்ள இறக்கிட்டு அடுத்து பொங்கலையும் சாப்பிட ரெடியாகிட்டான். இப்பவும் நீங்களும் நானும் எவ்வளவு பிட்டாயிருக்கோம். நம்ம வீட்டு வாரிசை இப்படி சாப்பிட வச்சு செனப்பன்னி போல பெருக்க வச்சிட்டாங்க உங்க அம்மா.
என்னையும் அவனையும் சேர்ந்து பார்க்குறவங்க இவனின் சைஸை பார்த்து உங்க மகனாங்க இவர்..?னு கேக்குறாங்க. இந்திரனின் டயட்டை உங்க அம்மாவாலத்தான் சரி பண்ண முடியாம போகுது. அவனோட நாக்குக்கு வகையா செஞ்சு கொடுத்து கெடுத்துட்டாங்க ” என கோபத்துடன் பேசினார். .
“என் பேரனை பார்த்து செனப்பன்னின்னு என் முன்னாலேயே சொல்ல உன் பொண்டாட்டிக்கு எம்புட்டுத் தைரியமிருக்கணும்...
தியா அவகிட்ட சொல்லி வை. என் பேரனை இனி இப்படி சொன்னா நான் பொல்லாதள் ஆகிடுவேன். இந்திரன் கொஞ்சம் பூசுனது போல இருக்கான்..
அவனுக்கு சின்ன வயசுலயிருந்து பேக்கரிஐட்டம், சாக்லேட்டு, பீசா, பர்க்கருன்னு கண்டதையும் வாங்கிக்கொடுத்து கெடுத்தது உன் பொண்டாட்டிதான்.
வெளியில் ஓடியாடி விளையாட போனா வெயிலில கருத்துருவ போகாதன்னு சொல்லி சொல்லி' வளர்த்தாள். அழுக்குப்படாம இருக்கிறதுதான் நாகரீகம்னு தோட்டகார மாரியப்பன் பிள்ளைங்க கூட சேர்த்து விளையாட விடாம கையில வீடியோ கேமைக்கொடுத்து உட்கார வச்சு இந்திரனை கெடுத்ததும் அவதான்.
இவ நல்லா மினிக்கி கிட்டு கார்ல சமூகசேவை செய்றேன்னு அவளைப்போல நாலு ஊர்சுத்திகளை சேர்த்துகிட்டு கார்லயே சுத்திட்டு புள்ளையை கவனிக்காம விட்டுட்டா. இப்போ என்னைய குறை சொல்ல வந்துட்டா உன் பொண்டாட்டி!” என தனது மகன் தயாவிடம் மருமகளுக்கு போட்டியாக சண்டைக்கு களம் இறங்கினார் விமலாராணி.
யாருக்காக இருவரும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்களோ அந்த இந்திரசித்தோ பூரியை காலி செய்து விட்டு பொங்கலையும் ருசி பார்த்துவிட்டு மொபைல் பார்த்துகொண்டே எழுந்தவன் தனது பேக்பேக்கை எடுத்துக்கொண்டு “பாட்டி பை..! மாம் பை..!” என்று சொல்லிவிட்டு வாசல் நோக்கி நகர்ந்தான்.
மாமியாரின் பேச்சில் கோபமான சுபா. “இங்க பாருங்க, உங்கம்மா என்னைய ஊர்சுத்தின்னு மட்டமா பேசுறாங்க நீங்களும் அதை கேட்டுகிட்டே இருக்கீங்க..!?” என்று தனது கணவனை தனது பக்கம் இழுக்க முயலும் சத்தம் இந்திரனின் காதில் எட்டியும்,
அவர்களின் வீட்டில் இது அன்றாட நிகழ்வுதான் இந்த பஞ்சாயத்துகுள் மாட்டாமல் இருப்பதுதான் நல்லது என நினைத்த இந்திரசித் தான் உடுத்தியிருந்த உடைக்கு மேட்சாக இருந்த அந்த கட்சூவை மாட்டிக்கொண்டு வாசலில் இறங்கினான்.
இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு போவதை விட்டு, வெயில் தூசிக்கு பயந்து பள்ளிசெல்லும் பையனைப்போல வினையம் புடிச்ச இந்திரசித்தை இன்றும் கார்டிரைவர் முருகனே காலேஜுக்கு கூட்டிக்கொண்டு போய் விட்டு மீண்டும் கூட்டிவர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார்.
வளர்ந்த குழந்தை போல அவனின் செயல்கள் இருந்தாலும் பெண்களை ஈர்ப்பதற்கு தன்னுடைய செல்வச் செழிப்பைக்கொண்டு கைக்கொள்ள நினைப்பான். வயது ஆணுக்கே... இருக்கும் அத்தனை சபலமும் கொண்டவனாக இருந்தான் இந்திரசித்.
மொழு மொழுவென்று உயரமாக வெள்ளாவியில் வச்சு வெளுத்த தோற்றத்துக்கு சொந்தக்காரனான அவன் விலையுயர்ந்த ஆடை சகிதமாக கல்லூரியில் வந்து இறங்கும் இந்திரசித்திற்கு, அவனே ராஜகுமாரன் என்ற எண்ணம்.
பெண்களோ அவனை அமுல்பேபி என்ற அழைப்போடு அவன் விடும் ஜொள்ளை கேலிசெய்தபடி எட்டவே நிறுத்தி விடுவார்கள்.
சிறுவயதிலிருந்து மக்களிடையே உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வினை சொல்லி வசதியில்லாதவர்களை இகழ்வாக பார்க்கவும், செல்வந்தர்களுடன் பழகுவதுதான் நம்ம ஸ்டேடஸ்க்கு சிறந்ததென்றும் அதுவே பெருமை எனச்சொல்லி குறுகிய வர்க்கப்போதனைகளுடன் வளர்க்கப்பட்டவன் இந்திரசித்.
தன்னை போன்ற செல்வந்தர் வீட்டுப்பெண்ணும் மாடல் யுவதியும் அழகியுமான லத்திகாவினை எப்படியாவது தன்வயபடுத்தி மற்றவர்கள் முன் தன்னுடையளென்று கைக்கோர்த்து வளம் வரவேண்டும் என்ற ஆசை அவனை துரத்தியது,
இந்த கல்ச்சுரல் விழா முடிவதற்குள் அவளை எப்படியாவது இம்ப்ரஸ் செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தான்.
புகழ்பெற்ற அந்த கல்லூரியில் ஆடிட்டோரியத்தில் நாளை நடக்கவிருக்கும் கல்ச்சுரல் புரோகிராமிற்கான ஒத்திகை நடந்துகொண்டிருந்தது.
விழாவின் நிகழ்வுகளுக்கான ஒத்திகை கடந்த இரு நாட்களாக நடந்துகொண்டிருந்ததால் அன்றாட வகுப்பு எதுவும் நடக்கவில்லை. விழாவை முன்னின்று நடத்தும் பொறுப்பை மாணவன் தடாகனிடம் ஹச்.ஓ.டி ஒப்படைத்திருந்தார்.
மேடைக்கு அருகில் நின்றுகொண்டிருந்த தடாகனையும் அவனிடம் சென்று பேச ஆசைபடும் பெண்களையும் தள்ளிநின்று கடுப்போடு பார்த்துக்கொண்டிருந்தான் இந்திரசித்.
என்னைவிட இவன் என்ன பெரிய ஆளா? என் ஸ்டேட்டஸ் என்ன? என்கிட்டே இருக்கிற காரோட வேல்யூவென்ன?
ஒரு ஓட்டை பைக்கை வச்சுகிட்டு ரவுடி போல திமிரா சுத்திக்கிட்டு இருக்கிறான். போயும் போயும் இவன் கிட்ட ஏன் நான் ஆசைபடும் இந்த லத்திகா உட்பட எல்லாப் பொண்ணுங்களும் வழிஞ்சுகிட்டு நிக்கிறாங்க?
தடாகனையும் அவனை சுற்றி இருக்கும் பெண்கள் பட்டாளத்தையும் பார்க்கும்போதே... கடுப்பாகியது இந்திரசித்துக்கு.
இவன் இருக்கும் போது லத்திகாவின் கவனத்தை தன்னால் ஈர்க்க முடியாதென்று எண்ணியவன். அவள் அவனிடம் வழிவதை பார்க்கும் சக்தி இல்லாமல் ஆடிட்டோரியத்தின் வாசல் வரை வந்தவன், உள்ளே செல்லாமல் திரும்பி கேன்டியன் பக்கம் நடையை கட்டினான்.
லாபியை விட்டு சில அடிகள் மட்டுமே கடந்த நிலையில் "சித்... இந்திரசித் " என்று தனக்கு பின்னாலிருந்து கேட்ட அழைப்பிலேயே அது யாரெனக் கண்டுகொண்டவன் ‘இவன் எதுக்கு என்னை கூப்பிடுறான்?’ என நினைத்துக்கொண்டே திரும்பிப் பார்த்தான்.
தடாகன் அவனை நோக்கி நீண்ட எட்டுகளை வைத்த படி ஒரு கைத்தூக்கி நில்லு எனச் சொல்லி அருகில் வந்தான்.
கேள்வியாக அவனை பார்த்துக்கொண்டு நின்றவனிடம் “கேண்டியனுக்கு தானே போற..? வா நடந்துகிட்டே பேசலாம்” என்றபடி அவனுடன் இணைந்து கொண்டான் தடாகன்.
“ம்... ஆமா. என்ன புதுசா என் கூட? உன் பிரன்ஸ் எல்லோரையும் அங்க விட்டுட்டு என் கூட ஜாயின் பண்ற?" என்றதும்.
“காரணம் இருக்கு சித். லத்திகாவை எனக்குப் பிடிக்கலை ஆனா என்னையவே சுத்திவாரா. உனக்கு அவளை பிடிச்சிருக்குன்னு எனக்குத் தெரியும் அதான் ஒரு முடிவோட உன்கூட பேச வந்தேன்”. என்றான்.
“என்னது..!? லத்திகாவை உனக்குப் பிடிக்கலையா..!? ஒவ்வொருத்தனும் அவளை போல ஒருத்தி நமக்கு செட்டாகாதான்னு தவிச்சுகிட்டு இருக்காங்க. அவளுக்கு வேணும், உன் பின்னாடி வழிஞ்சுகிட்டு வாரால்ல உனக்கு அவளை பார்த்தா இழப்பமாத் தான் தெரியும்” என்றான்.
“ஷ்... தேவையில்லாமப் பேசாத. உனக்கு லத்திகா வேணுமா...? வேணாமா? அவ உன்னைய திரும்பி பார்க்கணுமா...? வேணாமா?” எனக் கேட்டான்.
“முடியுமா அது? அவ என்னைய ஜோக்கரா நினைக்கிறா! சாம்பார் சாதம்ன்னு ஒதுக்கி வைக்கிறா? நீ சொல்றது எப்படி நடக்கும் ?” என்றான்.
“உன்னோட ஆட்டிடியூடை கொஞ்சம் சேன்ஜ் பண்ணனும் அதோட உன் பாடியை கொஞ்சம் ஷேப் பண்ணனும். மத்தபடி அவளை அட்ராக்ட் பண்றதுக்கான காசு, காரு, பங்களான்னு எல்லாம் உன்கிட்டயிருக்கு” என்றான்.
“இருக்கு... இருக்கு... ஆனா... பிறகு எதுக்கு எல்லாவளும் என்னைய விட்டு உன் பின்னாடி சுத்துறாங்க?”
“ஹா..ஹா..ஹா... அந்த சீக்ரட்டை உனக்கு கத்துத்தரட்டா? நான் சொல்லிக்கொடுத்துட்டா லத்திகா மட்டுமில்ல உன் பின்னால நீ நினைக்கறவங்களை எல்லாம் சுத்த வைக்கலாம். கத்துக்கிட நீ ரெடியா?” என்றதும்
“வாவ்... இப்போவே ரெடி.,.!! ஆமா.... நீ எதுக்கு இதெல்லாம் எனக்கு சொல்லித்தாரேன்கிற?” என்றதும்.
“உன்னை பார்த்தா பாவமாயிருந்துச்சு சரி நமக்கு தம்பி போல இருக்கானே ஹெல்ப் பண்ணலாம்னு நினச்சேன். ஆனா நீ ஓவரா கேள்வி கேக்குற. அதனால நான் கிளம்புறேன்” எனச் சொல்லி அவனை விட்டு தடாகன் விலகி நடக்க ஆரம்பித்தான்.
“இல்ல... இல்ல.. கேள்வி கேக்கலை நான் என்ன செய்யணும்?” என்றதும்.
“கல்ச்சுரல் முடிஞ்சதும். அதற்கடுத்த நாள் காலையில் ஜாகிங் போக கிளம்பி நேரா உன் வீட்டுக்கு தான் வருவேன் இந்திரசித், நல்லா கேட்டுக்கோ என் டூ வீலரில் வருவேன் உன்னை பிக்கப்பண்ண. அதில் என்கூட வர ரெடியாயிரு” எனச் சொல்லி விலகி நடந்தான் தடாகன்.
இதுவரை தடாகனை விட்டு சற்று எட்டவே நின்று அடிமனதில் அறியாமல் எழுந்திருந்த பொறாமையோடு அவனைப் பார்ப்பான் இந்திரசித். ஏனோ அவன் வழியவந்து தன்னிடம் பேசியதும் அந்த பொறாமை தீரவில்லை என்றாலும் அது சற்று மட்டுப்பட்டது..
பெரிய இவனோ என்று ஒருவனிடம் வெளிக்காட்டாத பகைமையை மனதினுள் வளர்த்துவைத்திருக்கும் நபர் அவரே வழிய வந்து நம்மிடம் சாதாரணமாக பேசி நட்பு பராட்டும் போது, சட்டென்று அவர்களின் மேல் உண்டான அபிப்ராயம் உடைந்து போகும்.
'பரவாயில்லை, பொண்ணுங்க அவன் பின்னாடி சுத்தினாலும் அது பற்றிய தற்பெருமை இல்லாமல் இயல்பாக தடாகன் இருக்கிறான், வழியவந்து நட்பு பாராட்டுகிறான் இவன் கூட பழகினால் அவனோட கேர்ள் பிரன்ஸ் கூட நமக்கும் பழக்கம் வாய்க்கும். லத்திகாவும் இவன் குரூப்பில் இருப்பதால் ஈசியா பேசி என் பக்கம் இழுக்க சான்ஸ் கிடைக்கு'மென நினைத்தான் இந்திரன்.
சொன்னது போலவே அன்றிலிருந்து மூன்று மாதத்திலேயே தன்னுடைய லைப் ஸ்டைலுக்குள் தடாகன் இந்திரசித்தை கொண்டுவந்திருந்தான். பெரும் பணம் கொண்டவனும் பெரும் தீரம் கொண்டவனும் இணைந்து தங்களுக்குள் எழுதபடாத ஒரு ஒப்பந்தத்தின் கீழ் பயணப்பட ஆரம்பித்திருந்தனர்.
அத்தியாயம் 01
அவசர அவரமாக அந்திகை அலுவலகம் போக கிளம்பிக்கொண்டிருந்தாள் காலை உணவை அவளுக்கு மேஜையில் எடுத்துவைத்த அவளின் அம்மா சரோஜா “எதுக்கிடி இம்புட்டு அவசரமா கிளம்புற? நீ என்ன அடுத்த இடத்துக்கா வேலைக்குப் போற? உன் சொத்த அத்தை மகன்கிட்ட தானே வேலைக்குப் போற” என்றதும்.
“அம்மா....!” என்று அவளின் பேச்சை ஆட்சேபிக்கும் படி குரலெழுப்பிய அந்திகை
“இந்த நெனப்போட நீ சுத்துறது நல்லதுக்கு இல்லை. சொந்த அண்ணன் மகள் அப்படின்ற காரணத்துக்காகவும். வாழ்ந்து கெட்டுபோன பொறந்து வீட்டை அம்போன்னு விட்டுடக் கூடாதுன்னும் அத்தை என்னை படிக்க வச்சு அவங்க கம்பெனியிலேயே ஒரு பெரிய போஸ்டில எனக்கு வேலையும் போட்டுக் கொடுத்துட்டாங்க.
நான் இப்போ அதுக்கு நன்றிக்கடனா அவங்க கம்பெனிக்கு வேலைக்குப் போறேன். நம்ம லிமிட் தெரிஞ்சு நின்னுக்கிடணும். அதோட சுபா அத்தை பெத்து வச்சிருக்கிற எங்க கம்பெனி சி.ஈ.ஓ இந்திரசித் அத்தான் எந்நேரமும் பொண்ணுங்க கூடவே சுத்திகிட்டு இருக்கிறார். அவரை போய் எனக்கு முடிச்சுப் போட்டு பேசுறீயே நீ எல்லாம் ஒரு தாயா?” என்றாள்.
"பணக்காரனா இருந்தா அப்படித்தான்டி இருப்பான். நீ அவங்க வீட்டுக்கு மருமகளா போனாபின்னாடி உன் கண்ட்ரோலில் வச்சுக்கோ” என்றார்.
“கடவுளே...! ஏம்மா இப்படியிருக்க? உன்னை எல்லாம் திருத்த முடியாது. முதலில் அத்தானை கம்பெனி நிர்வாகத்த அவரோட கையில் வச்சுகிடச்சொல்லு.
ஆபீஸ் வருறதே கையெழுத்து போட மட்டும்தான். அந்த வளர்ந்து கெட்டவன் நீட்டும் இடத்தில எல்லாம் கையெழுத்தை போடுறாங்க.
அதோட கம்பெனியோட முடிவு எல்லாத்தையும் அந்த வளர்ந்து கெட்டவனையே எடுக்க விட்டுட்டு அத்தான் ஊர்சுத்த போறது ஒன்னும் எனக்கு சரியாப்படலை”
என்றபடி தட்டில் அவளின் அம்மா எடுத்து வைத்திருந்த ஐந்து இட்டிலிகளில் இரண்டை எடுத்து மீண்டும் ஹாட் பாக்ஸில் வைத்துவிட்டு மூன்றை மட்டும் அவசர அவசரமாக விழுங்கியவள் தனது ஹேன்ட்பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்ப ரெடியானாள்.
இந்திரன் வேறு ஒருவனிடம் கம்பெனியின் பொறுப்பை கொடுத்துவிட்டு ஊர் சுத்துகிறான் என்று சொன்னதும் மகள் சாப்பிட்டு முடித்ததை கூட கவனியாமல் எதுவோ யோசனைக்குப் போன சரோஜா வாசல் நோக்கி போனவளை “ஏட்டி அந்தி இதை உன் அத்தைக்காரி காதுல போட்டு வைக்கணுமே” என்றார்.
“நானும் அதே யோசனையில் தான் இருக்கேன்மா. நான் அங்க வேலையில் ஜாயின் பண்ணி ஆறு மாதம் தானே ஆகுது. ஆனா எனக்கு முன்னாடியிருந்தே அந்த வளர்ந்தவன் அங்க தான் வேலை பார்க்கிறான்.
கம்பெனியில் அத்தானுக்கு நிகரான மரியாதை அவனுக்கும் இருக்கு. சொல்லப்போனா அத்தனைவிட பொறுப்பில் இருக்கிறவங்க அவனுக்குத்தான் பயப்படுறாங்க. அவனும் அவன் மூஞ்சியும் அந்த திமிர் புடிச்சவனை பார்க்கவே எனக்கு பிடிக்கலைம்மா” என்றாள்.
“சுபாவீட்டில இருக்க ஒவ்வொருத்தரையும் நான் கவனிச்சு வச்சுருக்கிறேன். நீ யாரைச் சொல்ற? அப்படி யாருடி எனக்குத் தெரியாத ஆளு? புதுசா வளர்ந்து கெட்டவன்னு எல்லாம் சொல்ற, அவனுக்கு பேர் இல்லையா..?? அவன் எனக்கு தெரியாத ஆளா?” எனக் கேட்டார்.
“எல்லாம்... உனக்குத் தெரிஞ்சவன் தான். அத்தானோட பிரன்டு தடாகன். அத்தை வீட்டுக்கு கூட அப்போ அப்போ வரும்ல அந்த ஜந்துவைத்தான் சொல்றேன்” என்றாள்.
“ஓ... அவனா..? சுபா வீட்டுல இருக்கிற அந்த கிழவி, முதற்கொண்டு அத்தனைபேரும் அவன் வீட்டுக்கு வரும்போது பிரியமா மரியாதையா பேசுறதை நான் கவனிச்சிருக்கேன்.
சுபாவோட சொந்த நாத்தனார் நானு. என்னை விட வீட்டில அவனுக்குத்தான் வரவேற்பு ஜாஸ்தியா இருக்கும். அப்பவே எனக்கு பொசு பொசுன்னு ஏரிச்சல் பத்திகிட்டு வரும்.
என்னத்தையாவது சுபாகிட்ட சொல்லி அவனை இந்திரனை விட்டு தள்ளி நிற்க வைக்கிறேன். அப்போ...! ஆபீசிலும் உன்னை விட அவனுக்குத்தான் செல்வாக்கு அதிகமா?” என்றார்.
“எம்மா நீ வேற, நான் என்ன அர்த்தத்தில் சொல்றேன் நீ எந்த அர்த்தத்தில் கொண்டு போற? இப்போ யாருக்கு அத்தை வீட்டில் மதிப்பு மரியாதைன்னு போட்டி நடத்தி என்ன ஆகப்போகுது.
கம்பெனி முடிவுகள் மொத்தமும் அந்த தடாகனே எடுக்கிறான் அவர் சொல்ற இடத்தில் வாசித்துப் பார்க்காம கூட இந்த இந்திரன் அத்தான் கை எழுத்து போடுறாங்க. இதெல்லாம் சரியில்லைன்னு எனக்குப்படுது.
வீட்டு ஆட்கள் முன்னாடின்னா, நான் உரிமையா ‘அத்தான் கவனம், வாசித்து கையெழுத்துப் போடுங்கன்னு சொல்ல முடியும்’ ஆனா ஆபீசில் அவர் பாஸ், நான் எம்ப்ளாயி உரிமையெடுத்து மத்தவங்க முன்னாடி பேச முடியாது.
அது மட்டுமில்லை அந்த தடாகனை கண் மூடித்தனமா நம்பி பொறுப்பு அத்தனையையும் அத்தான் கொடுத்துறுக்காங்க. அவனுக்கு எதிரா நான் பேசினா நிச்சயம் அத்தான் என்னைத்தான் கோவிப்பார்ன்னு தோணுது.
அதுதான் அத்தை காதில் என் ஆதங்கத்தை சந்தர்ப்பம் பார்த்து போட்டு வைக்கணும்னு நினைக்கிறேன். அவங்களே அத்தானை அலார்ட் பண்ணுறதுதான் பெஸ்ட்” எனச்சொல்லியவள்.
ஹய்யோ உங்ககூட பேசியே டைம் வேஸ்ட் பண்ணிட்டேன். இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு என் கிட்டதான் பைல் இருக்கு நான் போகணும்
ஏற்கனவே அந்த வளர்ந்தவனுக்கு என்னை பார்த்தா புடிக்க மாட்டேங்குது. லேட்டா போனா அதை சாக்கா வைத்து அத்தானை எனக்கு எதிரா அவன் திருப்பிடப்போறான் வாரேன்மா, பை... எனச்சொல்லி சிட்டாக வாசலில் நிறுத்தியிருந்த அவளின் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு ஆபீசுக்கு பயணிக்க ஆரம்பித்தாள்.
எப்பொழுதும் காலை ஒன்பது மணிக்குத் தான் அலுவலக வேலை நேரம் தொடங்கும் ஆனால் இன்று முக்கியமான ஒரு பெரிய ப்ராஜெக்ட் கையெழுத்தாக உள்ளது. அது தொடர்பான முக்கிய பேச்சு வார்த்தைகள் நடைபெற இருந்தது அதற்கான முக்கிய தரவுகள் அடங்கிய பைல் இவளின் வசமிருந்தது .
மேலும் முக்கிய பதவியில் வகிக்கும் அனைவரும் மீட்டிங் ஆரம்பிக்கும் முன்னரே கூடி பேசி தங்களின் கம்பெனியின் நிலைபாட்டை தெளிவுபடுத்திக்கொள்ள ஒவ்வொரு செக்ஷன் வாரியாக உள்ள ஹையர் ஆபீசர்ஸ் மட்டும் ஏழரை மணிக்கே வரச்சொல்லி சர்குலர் தடாகன் அனுப்பி இருந்தான்.
அவள் அலுவலகத்துக்குள் நுழைந்தபோது நேரம் எட்டை தொட்டுவிட்டது. அலுவலகத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தனது வண்டியை நிறுத்திவிட்டு ஓட்டமும் நடையுமாக அந்த பிரமாண்டமான அலுவலகத்துக்குள் நுழைந்தாள்
ரிசப்சனில் இருந்த பெண் வழக்கமான புன்னகையுடன் “குட்மார்னிங் மேடம்” என்றாள்.
“குட்மார்னிங், மேலே லாபியில் மீட்டிங் ஸ்டார்ட் ஆகிடுச்சா சிஸ்டர்..?” என்று பரபரப்புடன் அங்கிருந்த பயோமேட்ரிக்சில் தனது வருகையை பதிந்துகொண்டே கேட்டாள்.
“ம்.. ஸ்டார்ட் ஆகிடுச்சுன்னு தான் நினைக்கிறேன் மேடம். வேகமா போங்க என்று அவள் பதில் கொடுக்கவும் ஓட்டமும் நடையுமாக அங்கிருந்த லிப்டில் இரண்டாம் தளத்தில் இருந்த லாபிக்கு போய் சேர்ந்தாள்.
மூடியிருந்த அந்த மீட்டிங் காலின் கதவை தள்ளி திறக்கவும் உள்ளிருந்த வந்த குளுமை அவளின் முகத்தை அறைந்து அவளின் வேர்வை வடிந்திருந்த இடங்களை தாக்கிய குளுமையைக்தை கூட அனுபவிக்க முடியாமல் தடாகனின் முறைப்பும் அதைத்தொடர்ந்து அலட்சியமான பார்வையையும் அவளின் புறம் அவன் வீசியதில் உண்டான கடுப்பையும் வெளிக்காட்ட முடியாமல்.
“எக்ஸ்கியூஸ்மி, சாரி பார் தி டிலே, என பொதுவாக சொல்லியவள் தன்னிடம் இருந்த பைலை அந்த மீட்டிங்கில் நடுநாயகமாக வீற்றிருந்த தடாகனின் முன் வைக்கவும்,
“இது எதுக்கு எனக்கு? உன்னை போல ஆட்களெல்லாம் இப்படித்தான் சொன்ன டயத்துக்கு வரமாடாங்கன்னு எனக்கு தெரியுமே. இந்த பைலில் இருக்கும் டீடைல்ஸ் எல்லாம் என் பிங்கர் டிப்ஸ்ல இருக்கு. இதில் இல்லாததும் கூட எனக்குத் தெரியும் என்றவன்
“வெங்கட்..” என்று தனக்கு இடது புறம் நின்றுகொண்டிருந்தவனிடம் கை நீட்ட அவன் ஒரு கோப்பை அவனிடம் கொடுக்க அதை வாங்கிகொண்டு அங்கு கூடியிருந்தவர்களிடம் விட்ட இடத்திலிருந்து பேச்சை தொடந்தான் தடாகன்.
அந்திகையின் முகம் அவமானத்திலும் கோபத்திலும் சிகப்பு வண்ணத்தை பூசிக்கொண்டது அவள் முகம் மட்டுமல்ல மனமும் தகித்தது. இவனுக்கு என்னை பார்த்தா எப்படி தெரியுது. அத்தானின் சீட்டில் அமர்ந்திருக்கிற திமிர் என்று மனதினுள்ளே அவனை அர்ச்சித்தபடி இருக்கையில் அமர்ந்தாள்.
அந்த சீட்டில் இந்தரசித் இப்பொழுது அமர்ந்திருந்தால் இவளை இந்த அளவு அவமானப் படுத்தியோ நோகும்படியோ பேசியிருக்க மாட்டான் என்ற உண்மை புரிந்ததால் தடாகனின் மேல் மேலும் அவளின் கோபம் வலுத்தது.
----தொடரும்----

No comments:
Post a Comment