anti - piracy

Post Page Advertisement [Top]

 

பனி இரவில் தணலாவாய்

பாகம்-1

 

அத்தியாயம்-01

அன்று காலைமுதல் அழகுநிலா சாப்பிடாமல் படுத்தபடியே இருந்தாள்.

அடியே...! அழகி ஏன்டீ சண்டித்தனம் பண்ற. பொட்டச்சிக்கு இம்புட்டு புடிவாதம் ஆகாதுடிநீ என்னதான் முரண்டு புடிச்சாலும் உன்னைய டவுனுக்கெல்லாம் வேலைக்கு அனுப்பமாட்டேன்.

கைக்குள்ளேயே பொத்தி பொத்தி வளர்த்தாச்சு. பொறுப்பா ஒருத்தன் கையில் புடிச்சுகொடுத்துட்டா அப்புறம் உன்பாடு உன் புருசன்பாடு. தொலைவுல வேலைக்கு அனுப்பிட்டு வயித்தில நெருப்புக் கட்டிட்டு என்னால காலம் தள்ள முடியாது.

பொட்டப் புள்ளைய வேலைக்கு அனுப்பி பொழப்ப நடத்துறமாதிரி என் புருஷன் என்னைய தவிக்கவிட்டுட்டுப் போகல”, என்று சத்தம் போட்டபடி பின் கட்டில் உள்ள மாட்டுக்குத் தண்ணீர் காட்டச்சென்றாள் அழகியின் அம்மா இராசாத்தி.

அப்பொழுது காலையில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு வந்த குமரேசன்,

என்னம்மா, இன்னும் தங்கச்சியை திட்டிக்கிட்டுதான் இருக்கிறயா?” என்று கேட்டபடி வீட்டினுள் நுழைந்தவனை கண்ட ராசாத்தி,

எல்லாம் உன் தொங்கச்சிக்கு நீ கொடுக்கிற இடம் தான்.., அப்பவே அவள காலேசுக்கு படிக்க அனுப்பவேண்டாமுனு சொன்னேன், அவளுக்கு சப்போட்டுபண்ணி படிக்க அனுப்புன, இப்பபாரு வேலைக்கு போகணுமுன்னு மொரண்டு புடிச்சுக்கிட்டு, சாப்பிடாம கிடக்கிறா..

நானெல்லாம் இவவயசுல ரெண்டு புள்ளைக்கு அம்மாவாகிட்டேன். இது என்னடானா இன்னும் ஒருவருஷம் வேலைபார்த்த பிறகுதான் கண்ணாலம் கட்டிக்கிடுமாம். இது சம்பாதிச்ச பணத்துலதான்  கரையேத்தனுன்ற நெலமையொண்ணும் இங்க கிடையாது .

என்னை கட்டுன மவராசன் விட்டுட்டுப் போய்ட்டாலும், ...புள்ளைகள கரையேத்த எனக்கு வசதிய வச்சுட்டுத்தான் போனாரு,  என்று மகனை திட்ட ஆரம்பித்து, புலம்பலில் முடிக்காமல் தொடர்ந்து கொண்டே போன தன் அம்மாவை பார்த்து,

ஏம்மா..! அது படிச்ச படிப்பு வீணாகக் கூடாதுன்னு வேலைக்கு போறேன்னு சொல்லுது. போகட்டுமே, நல்ல வரன் வந்தா வேலையைவிட்டு நிப்பாட்டிட்டு கல்யாணம் முடிச்சுடலாம். ஏத்த வரன் அமையும் வரை, வீட்டில் சும்மா இருக்கிறதுக்கு பதிலா வேலைக்கு போகட்டுமே.....”

என்று தங்கைக்கு பரிந்துகொண்டு பேசிய குமரேசன், வாணி.. என்ன செய்றாமா? இவள சமாதானப் படுத்தி சாப்பிடவைக்கலாமில்ல என்று தன் மனைவியை விசாரித்தான் .

உள்ளிருந்து கணவன் பேசுவதை குழந்தையை தொட்டிலில் போட்டு ஆட்டிக்கொன்டிருந்த வாணி,

க்கும்... இவரு தங்கச்சிக்கு ஊட்டிவிடத்தான் இந்த மனுஷனுக்கு என்ன கட்டிக்  கொடுத்திருக்கிறார்களாக்கும் என்று முணுமுணுத்தபடி இருந்தாள் வாணி .

அவன் கூறியதை கேட்ட ராசாத்திஆமா….  உன் பொண்டாட்டி புள்ள சாக்கு வச்சு அவ சாப்பாட்டையே ஒரு ஆளு, அவளுக்கு எடுத்து போட்டுக் கொடுக்கணுமுன்னு சொல்ற ரகம். அவபோயி என்மகளை சாப்பிடவச்சுட்டுத்தா.... வேற வேலையைப் பாப்பா.. போடா போ...” என்று அலுத்துக்கொண்டார் .

அழகுநிலா, பெயரைப் போலவே அழகான ஒளிவீசும் களங்கமில்லா நிலவு போல முகமும் .செப்புச்சிலைபோல் உடலமைப்பும் கொண்டவள். தன் அழகை தானே அறியாதவளும், பகட்டாக பறைசாற்றத்தெரியாத சுபாவமும், துடுக்குத்தனமும்  உள்ள கிராமத்தில் வளர்ந்த பெண் .

அழகியின் குடும்பம் அந்த கிராமத்தில் ஓரளவு வசதி வாய்ப்பு கொண்ட குடும்பம் . அவளின் பதிமூன்றாம் வயதில், வயலுக்கு போன அவளின் தந்தை பாம்புக்கடிக்கு ஆளாகி இறந்துவிட்டார். 

அண்ணனுக்கும் அவளுக்கும் 7 வயது வித்தியாசம். தந்தை இறந்த சூழலில் அக்ரிகல்ச்சர் படித்துக்கொண்டிருந்த குமரேசன் வீட்டின் நிலைமை அறிந்து, தன் அம்மாவிற்கு துணையாக பொறுப்புடன்  வயல்வெளிகளின் விளைச்சலை கவனித்துக்கொண்டே தன் படிப்பினையும் தொடர்ந்து முடித்தான் .

பள்ளிப்படிப்பை முடித்தவுடனே அழகிக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டார் ராசாத்தி. ஆனால் அழகியோ  கல்லூரிசென்று படிக்கவேண்டும் என்று சாப்பிடாமல் தர்ணா செய்து பின் அண்ணனின் சப்போர்ட்டுடன் கல்லூரியில் சேர்ந்தாள்.

ராசாத்தியின் நாத்தனார் ராசாத்தியிடம்,  குமரேசனுக்கு தன்மகள் வாணிக்கும் கல்யாணம் முடிக்க வற்புறுத்தினாள். அழகிக்கு கல்யாணம் முடிக்காமல் எப்படி குமரேசனுக்கு கல்யாணம் செய்ய என்று யோசித்தாள் ராசாத்தி .

உடனே, “‘மதினி! என் அண்ணன் இருந்தால் நான் சொன்ன மறுநிமிஷம் கல்யாணத்தை நடத்தி முடிச்சிருப்பான். அண்ணன்  இப்போ இல்லாததால எனக்கு உரிமையிருந்தும் உன்கிட்ட தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிக் கிடக்கு,’ என்று சண்டைக்கு வந்தாள்.

தன் கணவனின் மீது அதிக காதலுடன் குடும்பம் நடத்திய ராசாத்திக்கு   நாத்தநாரின் விருப்பத்தை தட்டிக்களித்தால் தன் கணவனின் சொந்தம் தன்னை தவறுதலாக நினைப்பர் எனப்புரிந்து அதை  விரும்பாமல், அழகிக்கு வரன் பார்க்கும் முன்பே, தன் மகனுக்கு கல்யாணம் செய்ய மனது இல்லாமலே மணம் முடித்து வைத்தாள்.

கல்யாணம் முடிந்து மருமகள் வந்ததும், மச்சுவீட்டில் மகளுக்கு பார்த்து பார்த்து சீதனத்திற்கு சேர்த்த சாமான்களையும் நகைகளையும் பூட்டிவைத்தார் ராசாத்தி.. அந்த அறையின் சாவியை எப்பொழுதும் இடுப்பிலேயே சொறுகி வைத்திருப்பார்.

தன் மகள், கல்லூரியில் காம்பஸ் இண்டர்வ்யூ மூலம் கிடைத்திருக்கும் வேலையில் சேருவேன் என்று அடம்பிடித்து நேற்றிலிருந்து சாப்பிடாமல் கொள்ளாமல் வயிற்றை பட்டினிப்போட்டுகொண்டு  இருப்பதை பார்த்த ராசாத்திக்கு கொஞ்சம் மனம் இளகியிருந்தது.

இன்று காலை குமாரேசனும் நல்ல வரன் கிடைக்கும் வரை வேலைக்குப் போகட்டுமே.. என்று சொன்னதும் இன்னும் கொஞ்சம் மனம் இறங்கி அழகி வேலைக்கு போக சரி சொல்லிவிடலாமா? என்று யோசனையுடன் இருந்தவள்,. இருட்ட ஆரம்பித்தப் பிறகும்  சாப்பிடாமலிருந்த தன் மகளுக்கு தட்டில் சாப்பாடை எடுத்து கொண்டுபோய்

அழகி ஏட்டி இடும்பி.... எந்திரிச்சு உட்கார்ந்து சாப்புடு என்று எழுப்பினார்.

அம்மா சமையல் அறையில் இருக்கும் போது அவருக்கு தெரியாமல் வாழைப்பழத்தை மொக்கிக்கொண்டு இருந்தாள் அழகி. ராசாத்தி வரும் அரவம்  உணர்ந்து சுவர் புறம் திரும்பிப்படுத்து வாயில் இருந்ததை வேகமாக விழுங்கினாள்

எந்திச்சு சாப்பிடு....” என்று அழகியின் அருகில் தட்டுடன் அமர்ந்தார் ராசாத்தி.

அழகி தான் உடுத்தியிருந்த தாவணியை கொண்டு உண்ட சுவடு தெரியாதவாறு துடைத்துக்கொண்டே எழுந்து அமர்ந்தவள்.

அப்போ நான் வேலைக்கு போகலாம்ல ம்மா?” என்று முகம் முழுவதுவும் புன்னகையுடன் கேட்டாள் .

அது தான் என் மவன் உனக்கு நல்ல இடம் தவயரவரை வேலைக்கு அனுப்பலாமுனு சொல்லிப்புட்டான்ல, எப்படியோ நீ நினைச்சத சாதிச்சுப்புட்டேன்னு மெப்பனையா இருக்காதே.

வேலைக்குபோற இடத்தில சூதானமா வேலைக்கு போனமா.... வந்தமான்னு.......இருக்கணும். நம்ம ஊருல அங்கங்க நின்னு சோடி பொண்ணுக கிட்ட அரட்டயடிக்கிற மாதிரி சிரிச்சு பேசக்கூடாது ,கூட வேலை பார்க்கிற இளந்தாரிகளுடன்  பேசவே கூடாது .

வேலை முடிஞ்சதும் நீ தங்கியிருக்கிற இடத்துக்கு போயிடனும். கடகன்னிக்கு போற சோலியெல்லாம் உங்க அண்ணன்  உன்னை பார்க்க வரும் போது கூட போகணும். தனியா பொம்பள புள்ளைக கூட போகக் கூடாது

என்று ஆயிரம் புத்திமதிகளை  அவளுக்கு சொன்னபடி தன் மகளின் தட்டில் இட்டிலிகளையும் கோழிக் குருமாவையும் குறைய குறைய எடுத்து வைத்தார்.

தம் அம்மா சொல்லியதற்கெல்லாம் ம்...கொட்டிக்கொண்டே சாப்பிட்டவள்என்னம்மா உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகுன்னு சொல்லி நான் சாப்பிடும் போதெல்லாம் சாப்பாடு சட்டியை தள்ளி வைப்ப, இன்னைக்கு மட்டும் என்ன பாசம் பொங்கி வழியது...” என்று சொல்லி கொண்டே தட்டில் இருந்ததை வெளுத்து வாங்கிக்கொண்டு இருந்தாள் அழகி.

அழகிக்கு அசைவச் சாப்பாடு என்றாள் வஞ்சனையில்லாமல் வயிற்றில் இடம் இருக்கும். அதே நேரம் சைவச் சாப்பாடென்றாள்இம்புட்டு ஏம்மா தட்டுல வைக்கிற..... என் வயிறு என்ன பானையா? என்று கேட்டபடி தன் அம்மாவிற்குத் தெரியாமல் தன் அண்ணன் தட்டில் காய்கறிகளையும் சாப்பாட்டையும் அள்ளி வைத்துவிடுவாள்.

மகளின் குணம் அறிந்த ராசாத்தி, காய் கடிக்க உன் ருசிகண்ட நாக்கு தடிச்சுப்புடும், அதே நேரம் கறிச்சாப்பாடுன்னா ..மவன் சோத்தையும் கறியையும் ஒத்த ஆளா நீ முழுங்கிப்புடுவே... எனக்குத் தெரியாதாடி உன்வவுசி... நீ சாப்பிடாம வயித்த நேற்றிலிருந்து காயப்போட்டு கிடக்கேயேனு கூட இரண்டு இட்டிலி வைத்தால் என்னையவா நீ உரசிப் பாக்குற என்று கோபம் போல சலித்துக்கொண்டாள்

   மறுநாள் காலை வேலையில் சென்னைக்கு கிளம்பிக்கொண்டிருந்த அழகியிடம் வந்த வாணி  “உன் அண்ணன் வெளிய வண்டில காத்துக்கிட்டு இருக்காரு அழகி, வெரசா வரச்சொல்றாரு, என்று கூறினாள்.

தோளில் ஒரு பேக்கை மாட்டிக்கொண்டவள். தரையில் இருந்த இரண்டு பேக்குகளை கைக்கு ஒன்றாக தூக்குவதற்கு குனிவதை பார்த்த ராசாத்தி,  நீ எத்தனையைத்தான் தூக்குவ என்றவள்,  வாணியிடம்,நீ ஒன்ன கையில தூக்கிட்டுப்போய் அழகி அவன் அண்ணன் பின்னாடி வண்டில ஏறியதும்  கொடு என்றாள் .

அவள் அத்தை சொன்னதும் அந்த இரண்டையும் தன் கைகளில் தூக்கியவள், மனதிற்குள் சும்மாவே இந்த ராங்கிக்காரி அழகி ரொம்ப ஆட்டம் போடுவாள், இனி கைநிறைய சம்பளம் வாங்கினால் என்னை மதிக்கவே மாட்டாள். இப்பவே இவ ஆத்தாகாரி இவளுக்கு என்ன பொட்டித் தூக்க வச்சுட்டா....’  என்று மனதிற்குள் அர்ச்சனை பண்ணிக்கொண்டே நடந்தாள்.

அழகியின் அம்மாவிற்கு அவளை அனுப்புவதற்கு மனசே இல்லாமல் முகத்தை தூக்கிவைத்துக்கொண்திருந்தார். தன் மகள் மகனின் பின் பைக்கில் உட்கார்ந்ததும் முன்னால் இருந்த பெட்ரோல் டேங்கின் மேல் ஒரு பேக்கையும் இருவருக்கும் நடுவில் ஒரு பேக்கையும் வைத்ததும்.  மகளை நல்லா உட்கார்ந்துக்கோ புள்ள....” என்று கூறினாள்.

ஆனால் அழகியின் மனது பட்டணத்து வாழ்க்கையை ருசி பார்க்கும் ஆசையோடு சந்தோசமாக தன் அம்மாவையும் அண்ணியையும் பார்த்து போய்ட்டுவர்றேன் என்று கூறினாள்.

வீட்டை விட்டு போகும் மனச்சினுக்கத்தை துளி முகத்தில் பிரதிபலித்தாலும், ராசாத்தி அவளை அனுப்ப மறுத்துவிடுவாள் என்பதால் முகத்தில் மலர்ச்சியை மட்டுமே காண்பித்தாள் அழகி.

தன் அண்ணியின் கையில் இருந்த ஏழுமாத மருமகனை பார்த்து ராசுக்குட்டி டாட்டா, உனக்கு மொத மாச சம்பளத்தில நெறைய பொம்மை வாங்கிட்டு வர்றேன். அத்தைக்கு டாட்டா சொல்லுடீ செல்லம் என்று கூறினாள்.

அவள் கூறியது புரியாவிட்டாலும் தன் பேர் சொல்லி அத்தை அழைத்ததும் தன் பொக்குவாய் மலர சிரித்தான் .  அவள் அண்ணன் பைக்கை எடுத்தான்.

மதுரைமாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டியின் அருகில் உள்ள குட்லாடம்பட்டி என்ற கிராமத்துப் பெண் தான் நம் நாயகி அழகுநிலா. அவள் ஊரில் குட்லாடம்பட்டி அருவியும் கிராமத்துக்கே உண்டான இயற்கை அழகும் அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.

இன்று வளர்ந்து வரும் நாகரீகம் காரணமாக அவள் ஊரின் மக்களும் விவசாயத்தை மறந்து வொய்ட் காலர் ஜாப் மோகத்தில் பட்டணத்தை நோக்கி சென்ற வண்ணம் இருந்தனர்.

அப்படி பட்டணத்தில் வேலை பார்க்கும் இளசுகள், ஊர் திருவிழாவிற்கு வரும் போது அவர்களின் மாற்றத்தை கண்டு, அழகிக்கும் பட்டணத்தில் படித்து, பெரிய வேலைக்குப் போய் தன் அம்மாவையும் அண்ணனையும் சொந்தக் கார் வாங்கி அதில் கூட்டிச் செல்லவேண்டும்  என்ற ஆசை  சிறு வயதில் இருந்தே உண்டு.

துறுதுறுப்பும் அழகும் அருகில் உள்ளவர்களைத்  தன் கலகலப்பான பேச்சால் வசீகரிக்கும் தன்மையும்  வாய்ந்தவள் அழகுநிலா. தன்னுடைய அழகை பற்றி அறியாதவள் கல்லூரிக்குச் சென்றபின்பே சுடிதார் போடுவதற்கு அம்மாவிடம் கொஞ்சிக் கெஞ்சிக் கேட்டு வாங்கி போட ஆரம்பித்தாள்.

ஆனால் அவள் அம்மாவிற்கு அவளை தாவணி சேலையில் பார்க்கத்தான் பிடிக்கும். இந்த குழாய் மாட்டி மேல போடும் சொக்காயை அவள் விரும்பாவிட்டாலும், இன்றைய காலக்கட்டத்தில் அந்த வடக்கு இந்திய உடை நம் தமிழ் நாட்டு கிராமத்து மக்களிடமும் சென்றடைந்துவிட்டது.

தான் மட்டும் தன் மகளை சுடிதார் போடக் கூடாது என்று சொன்னால்  தன் மகளுக்கு மனதில் ஏக்கம் வந்துவிடுமோ என்ற காரணத்துக்காக மட்டும் சுடி போட அழகிக்கு அனுமதி கொடுத்தாள். .

அழகுநிலா  நீண்ட மீன்போன்ற அழகான கண்களும்  இயற்கையாகவே திரட்டிங் பண்ணாமலே வில்போன்ற அமைப்புள்ள நீண்ட புருவமும் கண் இமையில் உள்ள முடி கூட அழகாக வளைந்து புருவத்தை தொடுவதுபோல் இருக்கும்.

மையிட்ட கண்கள் பார்க்க வசீகரமாகவும், கண்மணிகளில் நிரந்தரமாக காணபபடும் துறுதுறுப்பும், அமைப்பான அளவான நீண்ட மூக்கும் அதில் இருக்கும் ஒற்றைகல்  மூக்குத்தியும் அவளில் அழகுக்கு அழகு சேர்க்கும்.

சாயம் பூசாமலே இளரோஜா வண்ணத்தில் ஆரோக்யமான அமைப்பான அழகான உதடுகளும், வட்டமும் இல்லாது நீளமும் இல்லாது அழகான முகமும் உடலில் தேவையில்லாத இடத்தில் எந்த சதையும் இல்லாவிட்டாலும் கன்னம் மட்டும் ஆப்பிள் போல் உருண்டிருக்கும்.

சந்தனநிற கன்னம்  சற்று ரோஸ் கலர் கலந்தும் இருக்கும் தன் மகளின் அழகை பார்க்க பார்க்க  அந்த அம்மன் போன்ற அழகுடைய தன் மகளை காணக் காண அவ்வளவு பூரிப்பாக இருக்கும் ராசாத்திக்கு .

ஆனால், அவளின் துடுக்குத்தனமான பேச்சும் முயல் குட்டி போன்ற துறுதுறுப்பும் அழகும் கண்டு பொத்தி பொத்தி வைத்தார் ராசாத்தி.

அவளை நல்ல இடத்தில் கல்யாணம் செய்யும் வரை தன் சிறகிற்குள்ளேயே பொத்தி வளர்க்க ஆசைப் பட்டாள். ஆனால் அவள் எவ்வளவுதான் பிடித்து பதுக்கப் பார்த்தாலும் இளங்கன்றாய் துள்ளி ஓடும் அழகியின் ஓட்டத்தை அவளால் நிறுத்தமுடியவில்லை.

இதோ எப்பொழுதும் போல் இன்றும் தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் வேலைக்குப் போகிறேன் என்று, சென்னை கிளம்பிவிட்ட தன் மகளை வழியனுப்பிவிட்டு மதுரை மீனாட்சி தாயே..... என் மகளை எந்த பிரச்சனையும் அண்டாதவாறு காப்பாத்து தாயரே...” என்ற வேண்டலுடன் நின்றார்.

சென்னையில் அந்த பெரிய பில்டிங் முன் நின்று நிமிர்ந்து பார்த்த குமரேசனுக்கு தன் தங்கை இதில் வேலையில் சேர்வதை நினைத்து பெருமையாக இருந்தது.

அழகியோ தன்னுடைய மொபைலில் இருந்து தோழி சுமதிக்கு  அழைத்தாள்.

சுமதி நான் வாசலில தான் நிக்கிறேன் நீ வந்துவிட்டயாடீ? எங்க இருக்க? யார் கூடவந்த?” என்று தொடர்ந்து கேள்வி எழுப்பினாள் அழகி.

அவள் கூறியதற்கு எதிர்புறம் குறைந்த வால்யூமில்அடியே கேள்விக்கு பிறந்தவளே.... நான் வந்து பதினைந்து நிமிஷம் ஆகிடுச்சு.உள்ளதான் உட்கார்ந்திருக்கிறேன்என்றாள் சுமதி.

ஏன் சுமதி நான் வருகிற வர கொஞ்சம் வெய்ட் பண்ணியிருக்கலாம்ல  எனக்கு கொஞ்சம் பயமா இருக்குது. நீ கூட இருந்தா உள்ள வருவதுக்கு  கொஞ்சம் தைரியமா  இருந்திருக்கும் என்றாள்.

அவள் கூறியதும்ஏன் அழகி இப்படி பயப்படுற? இங்கிலீஸ் பேசமட்டும் உனக்கு இன்னும் உதறல் எடுக்கோ? உன்னால் முடியும் அழகி.

நான் என் பெரியப்பாவோடு வந்தேன் டீ, அவருக்கு எதோ அவசர வேலை போல அதனால் என்னை உள்ளே விட்டுட்டு போகலாமுன்னு கூட வந்தார். அந்த ரிசப்சனில்  உள்ள லேடி வெளியாட்களை உள்ளே விட மாட்டேன்னு சொல்லி என்னை மட்டும் விட்டாங்க.

உனக்காக் நான் கேட் அருகில் காத்திருக்கலாம்னு பார்த்தால் புது இடத்தில தனியா நிக்க ஒருமாதிரி இருந்தது அதான் உள்ள வந்துட்டேன்.

அடியே அழகி இங்க இன்னும் நம்மளமாதிரி  மூணுபேர் இன்னைக்கு ஜாய்ன் பண்ண வந்திருகிறாங்க, அவங்க கூடத்தான் என்னை உட்கார வச்சிருக்கிறாங்க, நீ மொதல்ல உள்ள வா, மத்ததை பிறகு பேசிக்கலாம் என்றாள் சுமதி

சுமதியும் அழகுநிலாவும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். அழகுநிலா  தமிழ்வழிக் கல்வியிலே பள்ளிக்கூடங்களில் படித்தவள் கல்லூரியில் சேருவதற்கு ஏற்ற நல்ல மதிப்பெண்களுடன் தேர்ந்து கல்லூரியில் அடியெடுத்து வைத்தாள்.

முதல்நாள் கல்லூரியில் நுழைந்தவளுக்கு தனது வகுப்பறை எங்கு இருக்கிறதென தெரிந்து கொள்வதற்கு அங்கிருந்த ஓர் மாணவியிடம் அக்கா... பர்ஸ்ட் இயர் பி கம்யூட்டர் சைன்ஸ் கிளாஸ் எங்க இருக்கிறது?” என்று கேட்டாள்.

அப்பொழுது அந்த பெண் மேலும் கீழும் அழகியை பார்த்தபடிபர்டன் ப்ளீஸ் என்று கேட்டாள்.

அவளின் கேள்வியை பார்த்ததும், அச்சோ இவ என்ன பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவிடம் நயன்தாரா கேட்டதுபோல் பர்டன் பர்டன் என்று கேட்கிறாளே....... என்ன பண்ண? நம்ம பீட்டர இவகிட்ட அவுத்துவிடவேண்டியதுதான்.

என் இங்கிலீஸ் சரியா தப்பான்னு இவளை வச்சு ட்ரயலை  ஆரம்பிச்சுட்டாப் போச்சு  என்று நினைத்தபடி அவளிடம் பேச ஆங்கில வார்த்தைகளை மனதிற்குள் கூட்டினாள்.

அப்பொழுது அவளின் அருகில் இருந்த விசு, நீங்களும் பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்டா நானும் உங்க கிளாஸ் தான் வாங்களேன் எனக்குத் தெரியும் போகலாமா?” என்றான்.

ஏனோ பார்த்தவுடனே அவனின் குழந்தைத்தனமான முகமும், பேச்சும் தான் ஆங்கிலத்தில் பேச தயங்கிய நேரத்தில் ஆபத்துபாந்தனாக தன்னை காப்பாற்றியவனின் மீது ஓர் தோழமையும் உண்டானது நம் அழகு நிலாவிற்கு.

விசுவோ பயந்த அமுல்பேபி போன்ற முகத்துடன், கண்ணில் கண்ணாடியுடன் பார்க்க பயந்த சுபாவம் கொண்டவனை போல் இருக்கவும், அன்று மதியம்  சீனியர் மாணவர்கள்  அவர்களின் கெத்தை அந்த பயந்தாங்கொள்ளியிடம் காண்பிக்க முயன்று கொண்டு இருந்தனர்.விசு அழுவதுபோல் அவர்களின் முன் நின்று கொண்டிருந்தான்.

இந்தக் காட்ச்சியை பார்த்த நம் அழகுநிலாவிற்கு கோபம் வந்தது, காலையில் தனக்கு உதவிய விசுவின் அருகில் சென்றுநின்றுகொண்டுஎன்ன ராகிங்கா? இப்போதெல்லாம் ராகிங் செய்தால் அது சட்டப்படி குற்றம்னு  உங்களுக்குத்தெரியாதா?

அதென்ன அப்பிராணியா ஒருத்தனை பார்த்ததும் உங்க வீரத்த காட்டவேண்டுணும்னு  தோணுதா? இதோ வருகிறார் பாருங்க நம்ம ப்ரொபசர் அவர் முன்னாடி காட்டுங்க உங்க வீரத்தை

என்று அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்த இன்று காலையில் தங்கள் வகுப்புக்கு பாடம் எடுக்க வந்த ஆசிரியரை காண்பித்தாள்.

ப்ரொபசரை பார்த்ததும் இருந்த இடம் தெரியாமல் சென்றுவிட்டனர் அந்த சீனியர் மாணவர்கள். அன்றிலிருந்து விசுவும் அழகுநிலாவும் நல்ல நண்பர்களானார்கள்.

விசு படிப்பில் கெட்டியாக இருந்தான். அழகு நிலாவும் நன்றாகப் படிக்க கூடியவள். ஆனாலும் அவள் வளர்ந்த சூழ்நிலையும் படித்த பள்ளிகூடங்களிலும் ஆங்கிலம் பேசக்கூடிய வாய்ப்பும் இல்லாததால் புதிதாக அங்கிருந்த மொழி பிரச்சனை அவளுக்கு பயத்தைக் கொடுத்தது.

ஆனால், விசு அவளுக்கு புரியும் படி தெளிவாக ஆங்கிலத்தில்  பேசவும் படிப்பதற்கும் புரிந்துகொள்ளவும் உதவி செய்தான்.

புத்திசாலியான அழகியும் அதை உடனே புரிந்து கொண்டதால் விசுவுக்கு அவளுக்கு சொல்லிக்கொடுப்பது எளிதாகவே இருந்தது.

அப்பொழுது அழகுநிலாவின் பக்கத்தில் இருக்கும் சுமதிக்கு விசுவின் அறிவும் பொறுமையாக அழகுநிலாவுக்கு எளிய ஆங்கிலம் மூலம் பேச உதவி செய்யும் பாங்கும் அவளைக் கவர்ந்தது

மேலும் அழகுநிலாவின் துறுதுறுப்பும், நகைச்சுவைத்தன்மையும், பாசாங்கு இல்லாத இயல்பான பேச்சும், நடத்தையும் சேர்ந்து அவளை கவர்ந்ததால் அவளும் அவர்களின் நட்பு வட்டத்துக்குள் தன்னை இணைத்துக் கொண்டாள்.

சுமதி படிப்பில் கொஞ்சம் சுமாராக இருந்தாலும் அவள் அம்மாவும் அப்பாவும் கவர்மென்ட் எம்ப்ளாயியாக இருந்ததினால் அவளை வீட்டில் வைத்து கவனிக்க முடியாது ஊட்டியில் ஹாஸ்டலில்சேர்த்து படிக்க வைத்திருந்ததால் நல்ல ஆங்கிலப் புலமை பெற்றிருந்தாள்.

எனவே அழகு நிலாவிற்கு ஆங்கில அறிவை அவர்களிடமிருந்தும் சுமதி கல்வியறிவை, அழகு மற்றும் விசுவிடமிருந்து கூட்டாக பரிமாறி தங்களின் நட்பையும் வளர்த்துக் கொண்டனர்.

இதற்கிடையே சுமதிக்கும் விசுவிற்கும் இடையில் காதல் மலர்ந்தது. காம்பஸ் இண்டர்வியூவில் அழகுநிலாவிற்கும் ,சுமதிக்கும் ஒரே இடத்தில் வேலைகிடைத்தது. ஆனால் விசுவிற்கு வேறு ஓர் இடத்தில் இருவரையும் விட அதிக சம்பளத்தில் வேலை கிடைத்தது.

போனை வைத்ததும்,உன் கூடப் படிச்ச உன் தோழி பிள்ளை சுமதியும் இங்கதான் வேலைக்கு சேரப்போவதாக சொன்னேல்ல அழகி அவ கூடவா பேசின?” என்று குமரேசன் கேட்டான்.

ஆமாண்ணே.! அவள் வந்து கால்மணி நேரம் ஆச்சாம். அவள் பெரியப்பா வீட்டில் இருந்துதான் வேலைக்கு வரப்போறதா சொல்லியிருந்தாள், இப்பவும்  அவங்கதான் வந்து விட்டுட்டு போயிருக்காங்க.

உள்ள அவங்களை விடலயாம் அதே போல் உன்னையும் உள்ள விட மாட்டாங்க அண்ணே, நீ அதனால் ஊருக்கு கிளம்பு. நான் வந்தமாதிரி ஆட்டோ பிடிச்சு ஹாஸ்டலுக்கு போய்விடுவேன். நாளையில் இருந்து ஆபீஸ் பஸ்சில் போய்விடுவேன் என்றாள்.

அவள் கூறியதும்சூதானமா இருந்துக்கோ அழகி, எதுனாலும் உடனே போன் பண்ணு நேரத்துக்கு சாப்பிடு என்று கூறியவன் தன் பர்சில் இருந்து பணத்தை எடுத்து அவளுக்கு கொடுத்தான்.

அச்சோ இம்புட்டு பணம் எதுக்குண்ணே எனக்கு என்று சொல்லிக்கொண்டே, அவன் கையில் இருந்த பணத்தை வாங்கினாள் அழகி.

உடனே குமரேசன்,எதுக்குனு கேட்டுகிட்டே வாங்கி வச்சுகிட்ட அழகி? உனக்கு வேண்டாம்னா என் கிட்டயே கொடுத்துடு என்று சிரித்தபடி கூறினான் .

ம்..கூம் கிடைக்கிறத எதுக்கு விடணும்?, பாருண்ணே! எனக்கு சம்பளம் வந்ததும் உனக்கு இதவிட நெறைய ரூபா நான் தாரேன் . அம்மா குடுத்த ஆயிரம் ரூபாயை வச்சு எப்படி சமாளிக்கிறதுன்னு  நானே கவலைப்பட்டுக்கிடந்தேன்.

இங்க கேண்டீனில் ஐஸ்கிரீம் விக்குமில்ல அதை நிறைய வாங்கு சாபிடனும்னு நெனச்சு, எனக்கு இன்னும் ரூபாய் வேணுன்னு அம்மா கிட்ட கேட்டதுக்கு நான் பெத்த மவன் ஒத்தபைசா செலவழிக்க கூட யோசிச்சு பொறுப்பா இருக்கான். பொட்டச்சி நீ! பொறுபில்லாம செலவழிக்க பணம் கேட்குறேனு ஒரே திட்டு அண்ணே என்றாள்.

அம்மான்னா அப்படித்தான் சொல்வாங்க அழகி. உனக்கு மூணுமாத ஹாஸ்டல் பீசும், அட்வான்சும், இந்தமாத சாப்பாட்டுக்கு பணமும் முன்கூட்டீயே கட்டிடுவோம்னு  நான் ஏற்கனவே அம்மாகிட்ட  சொல்லிவிட்டேன்.

மத்தபடி உனக்கு தேவையானது எல்லாம் வாங்கி கொடுத்துடுவோம் பிறகு எதுக்கு கையில்  நிறைய காசுன்னு  அம்மா நினைச்சு  இருக்கும், பாவம்! அதுக்கென்ன தெரியும் பட்டணத்தில் ஆகிற செலவ பத்தி

என்று சொன்ன குமரேசன். “நீயும் பொறுப்பானதான் இருந்தாலும், நம்ம ஊரு மாதிரி இங்க அசால்ட்டா இருக்கக் கூடாது, ரொம்ப ஜாக்ரதையா இருக்கணும்.

நீ நம்ம குடும்பத்து குத்துவிளக்கு அழகி!  பத்திரமா நீ இருந்தாத்தான் நம்ம குடும்பம் கெளரவமாக வாழ முடியும். நீ ஆசைப்பட்டன்ற காரணத்துக்குத்தான்  அம்மா வேண்டாம்னு சொல்லியும் அதை சமாதானப்படுத்தி உன்னை வேலைக்கு அனுப்ப சம்மதிக்க வச்சேன்.

உனக்கு இங்க வேலை பிடிக்காட்டியோ...... அல்லது வேற எதுவும் தொந்தரவு இங்க ஏற்பட்டாலோ..... உடனே யோசிக்காமல் வேலைய உதறிட்டு  ஊருக்கு வந்துவிடனும் சரியா? என்று கூறி,அழகுநிலாவிடம் விடை பெற்று சென்றான் குமரேசன்.


அத்தியாயம்-02

ஆதித்தராஜன் ஆறடி உயரத்தில் ஆளை அசரடிக்கும் கம்பீரமான தோற்றத்தில் கூர்மையான பார்வையிலேயே எதிரில் இருப்போரை தன் ஆளுமையின் கீழ் கொண்டு வரும் இன்றைய வேகமாக வளரும் தொழிலதிபன்.

அவனின் தொழில் திறமையைக் கண்டு தொழில் அவனோடு இணைய ஆர்வம் காட்டும் தொழில் முதலாளிகள்   கொடுக்கும் பார்ட்டிகளில் கலந்துகொள்ளும் போதுதான் அவளை சந்தித்தான்.

இன்றும் அதேபோன்ற பார்ட்டியில் கலந்து கொள்ளவே அந்த பெரிய பார்ட்டி ஹாலினுள் நுழைந்தான் ஆதித்.

அவன் உள் நுழைவதை பார்த்ததும் அஜய்சந்த்  அவனை வரவேற்கும் விதமாக விரைந்து வந்து கை பற்றி குலுக்கியவர்வெல்கம்! மிஸ்டர்  ஆதித்த ராஜ் என்றவர், மற்றவர்களிடம் அவனை அறிமுகப்படுத்தினார்.

அறிமுகங்களை கவனமாக கேட்டாலும் அவனின் கண்கள் அவள் எங்கே? என்று தேடியது. ஆதித் வர்ஷாவை கண்களினால் தேடிக்கொண்டு திரும்புகையில் வர்ஷா யாரோ ஓர் ஆணுடன் புன்னகையுடன் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்தான்.

அவ்வளவு நேரமும் ஆதித் எப்பொழுது வருவான்? என்று எதிர்பார்ப்புடன் காத்திருந்த வர்ஷா அவன் வருவதற்கு சற்று முன்புதான் அவளின் தோழி ரோசி, வர்ஷாவிடம் இது மாதேஷ், என்னுடைய நண்பன்  என்று ஆர்வமுடன் அவளை பார்த்தபடி அறிமுகத்திற்காக கைகுலுக்க கைநீட்டிய அவனை அறிமுகப் படுத்தினாள் .

சிவந்த நிறத்துடன் பார்த்தவுடன் பெண்களை கொள்ளைகொள்ளும் அழகுடன் சிரித்தமுகமாக தன்னிடம் கைநீட்டிய அவனின் கை பிடித்துஹாய் ஆம் வர்ஷா என்றாள்.

அவளின் கைபிடித்து குலுக்கியவன் "நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க ‘இவ்வளவு அழகான ஒரு பொண்ணு கூட பே இந்த மாதேசுக்கு கிடைத்தது என் பாக்கியம், என்று கூறினான்

அவன் அவ்வாறு கூறியதும் சிரிப்புடன்  தேங்க்ஸ்! என்று கூறிக்கொண்டு நிமிர்ந்தவள், அவனின் பின்னால் கனல் வீசும் கண்களுடன் அவளை பார்த்துக்கொண்டு நின்ற ஆதித்தை  பார்த்தவள்

அச்சோ..! எப்போ இவன் வந்தான்? இப்படி முறைத்து வேறு பார்க்கிறானே.... என்னசெய்துதான் இவனை மாற்றுவது?’ என்ற யோசனையுடன், மாதேசிடம் நாம இன்னொருநாள் பேசலாம் என்று அவனிடம் கூறிவிட்டு ஆதித்திடம்  வந்தாள்.

அப்பொழுது தன் பின்னால் திரும்பி பார்த்த மாதேசின் கண்களும் ஆதித்தை  பார்த்து இவனா...? என்ற கேள்வி எழுந்தது மனதில். அதே நேரம் அவன் முகத்தை பார்த்த ஆதித்துக்கு  யாரை தான் பார்க்கவே கூடாது என்று தன் தாயுடன் சென்னை வந்தானோ அவனை பார்த்ததும் அவனின் முகம் இறுகியது .

ஆதித்தராஜ்  மிகவும் தன்மானம் உள்ளவன் தொழிலில் முன்னேறி நல்ல நிலைக்கு வந்து தன் அன்னையையும் தன்னையும் இழிவாக பேசியவர்களில் முன் அவர்களை விட பல மடங்கு பொருளாதாரத்தில் முன்னேறி, அவர்களே தன்னை பார்த்து பிரமிக்க வேண்டும் என்ற வெறியில் உழைத்தவன்.

இது வரை வேறு எதிலும் தன் கவனத்தை செலுத்தாமல் உழைத்து தனக்கென ஒரு தொழில் சாம்ராஜ்யத்தையே இளம் வயதிலேயே உருவாக்கியவன்,

இனிமேல் தனது தொழிலில் தன்னை யாரும் மிஞ்சிவிட முடியாத வழிமுறைகளையும் அதற்கான வலுவான அடித்தளத்தையும் போட்ட பிறகே, அவன் தனது எட்டாம் வகுப்பில் ஆரம்பித்த வெறிப் பயணத்திற்குக் கொஞ்சம் இளைப்பாற வேண்டுமென நினைத்து கொஞ்சம் தன்னை சுற்றிப்  பார்க்க ஆரம்பித்தான்.

அப்பொழுது மிகவும் அழகான வர்ஷா  தன்னை ஆர்வமாக பார்ப்பதை பார்த்தவனுக்கும் அதில்  ஆர்வம் உண்டானது. இதற்கு முன் அவன் படிக்கும் காலம் முதல் அவனின் திறமையை கண்டும் அவனின் ஆறடி  உயரத்தையும், ஆண்மைக்கே இலக்கணமாக இருந்த  உருவத்தையும், கலையான முகவடிவத்தையும், அவனின் தேர்ந்தெடுத்து உடுத்தும் உடையின் அழகாலும் ஈர்க்கப்பட்டு பல அழகான பெண்கள் அவனிடம் நெருங்கி பழக முன்வந்தனர்.

ஆனால், அதனால் தனது லட்சியம் தடை பட்டு விடுமோ! என்ற அச்சத்தில்,ஆட்சேபமான கண் பார்வையில்  அவனை யாரும் நெருங்காது தள்ளிவைத்தான் ஆதித்.   .

வர்ஷாவின் பேரழகு அவனுக்கு இப்பொழுது இளைப்பாற தேவையாக இருந்தது. மேலும் அவளும் தன்னை ஆர்வமாகப் பார்ப்பதை பார்த்தவன் அவளை தன்னவளாக ஆக்க முடிவெடுத்து காதலை சொன்ன பிறகு அவன் தொழிலில் எந்த அளவு முன்னேற வேண்டும் என்று இதுவரை மூர்க்கமாக இருக்கிறானோ, அதே போல் தனக்குரியவளை கட்டுப்படுத்துவதிலும் மூர்க்கமாக இருந்தான்.

இதனால் இருவருக்கும் இடையில் மோதல்கள் வர ஆரம்பித்திருந்தது. அதுவும் தொடர்ந்து இருமுறை அவன் கலந்து கொண்ட பார்டிகளில் அவனின் அப்பாவின் மூத்தமனைவியின் மகன் மாதேசைப் பார்த்ததில் இருந்து கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகியிருந்தான் . .

மாதேஷ்  அழகான பணக்கார வீட்டுப் பிள்ளை.  பெண்களை மயக்கும் சிவந்தநிறம் கொண்டவன். மாதேஷ் பெண்கள் விரும்பும்  சாக்லேட் பாய்  தோற்றத்துடன், மலர்ந்தமுகத்துடன் எதிராளியை தன் பேச்சின் மூலம் எளிதாக நட்பாக்கிக்கொள்ளும் தன்மை உடையவனாக  இருப்பான்.

ஆனால், ஆதித் கம்பீரமான களையான உயரமான எதிராளியை பார்த்தவுடன் கணிக்கக்கூடிய கூர்மையான பார்வை உள்ளவனாக யாரும் எளிதில் நெருங்க முடியாதபடி  இருப்பான் .

ஆதித் தான் பார்ப்பதர்க்கு விரும்பாத மாதேஷை  கடந்த இருமுறை தான் கலந்து கொண்ட பிசினஸ் பார்ட்டிகளில் பார்த்தான். மேலும் மாதேஷின் பார்வை வர்ஷாவையே சுத்திவருவதையும் கவனித்தான்.

வர்ஷா  பிறக்கும் போது வறுமையில் இருந்த அவள் குடும்பம் அவள் வளர வளர அவள் தந்தையின் தொழிலும்  சேர்ந்து வளர்ந்து அப்பர் மிடில்கிளாஸ் குடும்பமானது.

அவள் தந்தைக்கு அவள் பிறந்தபின், தனது வறுமை ஓய்ந்து செல்வம் பெருக ஆரம்பித்தது, தன் மகளின் யோகம் தான் என்ற எண்ணம் காரணமாக அவளுக்கு நிறைய செல்லம் கொடுத்து கேட்டதெல்லாம் வாங்கிகொடுத்து ஓர் இளவரசியைப் போல் வளர்த்துவந்தார்.

நாகரீகமான உடை அணிவதிலும் நண்பர்களுடம் பார்ட்டிகளில் கலந்து கொள்வதிலும் அதிக விருப்பம் உடையவளாக வர்ஷா இருந்தாலும் இதுவரை காதல் என்று எந்த ஆண்கள் வந்து பிரப்போஸ் பண்ணினாலும் நீ எனக்கு இணையா? என்ற ஓர் பார்வையோடு விலக்கிவைத்துவிடுவாள்.

ஆனால் முதல் முதலில் ஆதித்தை பார்த்தவுடனே அவனின் கம்பீரமான் தோற்றத்தில் ஈர்க்கப்பட்டாள். பின் தனது நட்பு வட்டாரத்தில் இருந்தவர்கள் பிரமிப்புடன், அவனின் வளர்ச்சியை பற்றியும் அவனின் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் வேலை கிடைப்பதே சாதனை போல் பேசியதை பார்த்ததும், அவனை ஆர்வமுடன் பார்க்க ஆரம்பித்தாள்.

ஆனால் அவனை காதலிக்க ஆரம்பித்த பிறகு அவளை பொறாமையாக அவளது நட்புவட்டம் பார்க்கும் போது பெருமையாகத்தான் இருந்தது.

ஆனால் அதன் பின் அவன் உடை விசயத்திலும் இரவு பார்ட்டிகளில் நண்பர்களுடன் கலந்துகொள்வதையும், ஆண் நண்பர்களுடன் கை குலுக்குதல் போன்ற செயல்களுக்கு ஆட்சேபம் தெரிவிப்பதை எல்லாம் பார்க்கும் போது அவளுக்கு கலக்கமாக இருந்தது.

இதுவரை அவளை யாரும் இது செய்யாதே அது செய்யாதே என்று கட்டுப்படுத்தியதில்லை. மேலும் அவள் உடுத்தும் உடையில் அவளது அழகு கண்டு மற்றவர்கள் பொறாமை படவேண்டும் என்றும் விரும்புபவள் அவள், அதற்காக பல ஆயிரம் ரூபாய்களில் அவள் ஆசையாக பார்ட்டிகளுக்கு போடுவதற்கென்றே வாங்கி போடும் உடைகளை பார்த்து ஆதித் அவளை ரசிப்பதை விட்டு அவளை குறை கூறுவதை அவள் விரும்பவும் இல்லை.

வர்ஷாவின் முகத்தில் எரிச்சலோடு ஆதித்தின்  அருகில் அவனது காரில் அமர்ந்திருந்தாள். ஆதித்தின்  முகம் இறுக்கமாக இருந்ததுஎத்தனை தடவைதான் உனக்குச் சொல்வது வர்ஷா  இப்பொழுது நீ போட்டிருக்கும் உடை நாம் இருவர் மட்டும் தனித்திருக்கையில் என்றால் ஒகே. ஆனால் பார்ட்டிக்குப் போய் இந்த உடையணிந்து நீ வந்தது தான் என் முதல் பிரச்சனை,

இரண்டாவது பிரச்சனை, யார் கூடவேண்டுமென்றாலும் கைகுலுக்கி சிரித்து பேசிடுவியா?, அதென்ன முன்னபின்ன தெரியாதவன் கூட உனக்கென்ன பேச்சு!” எனக் கடுகடுத்தான்.

அவன் அவ்வாறு கூறியதும், “ டோன்ட் லைக் யுவர் ஆட்டிட்டியூட் ஆதித், ஜஸ்ட் ஒன் ஹேன்ட் ஷேக்குக்கு நீங்க ரொம்ப  அலட்டிக்கிறீங்க ஆதித்.

அவன் ஒன்றும் எனக்குத் தெரியாதவன் கிடையாது என் பிரண்ட் ரோசிக்கு தெரிந்தவன் தான். அவள் தான் எனக்கு மாதேஷை  அறிமுகப்படுத்தினாள் என்றாள்.

வர்ஷா  மிக அழகாக இருந்தாள். மேலும் அந்த அழகை எந்தெந்த வகையில் எல்லாம் மெருகேற்ற முடியுமோ அவை அத்தனையும் செய்து தன்னை பார்ப்பவர்கள் தங்களை அறியாமல் அவளை மறுபடி திரும்பி பார்க்கும் வகையில் பேரழகியாகவும் அந்த அழகை படம் பிடித்துக் காண்பிக்கும் வகையில் உடையும் அணிந்திருந்தாள் .

அவள் அவ்வாறு கூறியதும், “நோ வர்ஷா, முன்னாடி நீ எப்படியும்  இருந்திருக்கலாம், இப்போ! இந்த ஆதித்தோடவள் நீ! சுலபமாக யாரும் உன்கிட்ட நெருங்கிப் பழகுவது எனக்குப் பிடிக்காது அதை நான் அலோ பண்ண மாட்டேன் என்றான்.

அவன் சொன்னதை அவள் உணர்ந்தே இருக்கிறாள். முன்பு மாதிரி இவளின் நட்பு வட்டத்தில் உள்ள ஆண்கள் அவளிடம் சகஜமாக  பேசுவதில்லை என்பதை உணர்ந்தே இருக்கிறாள் வர்ஷா.

இதற்கு முன் தனது நண்பர்களுக்குள் நடந்த பார்ட்டிகளில் அவர்களுக்கு முன் தன் காதலன் பிக் பிசினெஸ்  அண்ட் ஹேன்ட்சம் மேன் என்று காண்பிப்பதற்கு ஆதித்தை தன்னுடன் வருமாறு அழைத்திருந்தாள்.

அவனுடைய பிஸி பிசினெஸ் செட்யூலிலும் அவனது திமிரையும் எளிதாக அவனை யாரும் பார்த்துவிட முடியாது என்பதனை அவளது நட்பு வட்டம் உணர்ந்திருந்தாலும் நான் கூப்பிட்டால் அவன் வருவான் என்று அவர்களிடம் காண்பிப்பதற்காகவே  அவனை கூப்பிட்டாள்.

அவள் நினைத்தது போல் அவன் வந்ததும், எட்டாகனியான அவனை தன் கடைக்கண் பார்வையில் எட்டிப்பிடித்து விட்ட அவளை பொறாமையாக தோழிகள் பார்த்தார்கள் தான். ஆனால், அவன் வந்த பிறகு அவள் நினைக்காத சிலதும் நடந்தது.

பார்ட்டிக்கு வந்தவன் வர்ஷாவின் தோளில் கை போட்டுக்கொண்டு தன் அருகிலேயே நிறுத்திக் கொண்டான். எதிரில் இருந்த அவளின் ஆண் நண்பர்களுடன் கைகுலுக்கி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாலும் பார்வையிலேயே அவர்களை வர்ஷாவுடன் சகசமாக  பேசக்கூடாது என்று தள்ளி நிற்குமாறு கட்டளையைக் கொடுத்தான்.

அதனை அசால்டாக பாவித்த விஷ்ணுவின் தோளில் கை போட்டு பேச்சுவாக்கில் வர்ஷாவை விட்டு தள்ளி கூட்டிச் சென்றவன் அவனிடம் என்ன சொன்னானோ தெரியவில்லை அதன் பின் அங்கே அவனை காணவே இல்லை.

மேலும், அவளின் பெண் தோழிகள் ஆதித்திடம் அறிமுகத்திற்காக கை கொடுத்து குலுக்க முனைந்த போது அதனை கவனியாதது போல் பாவனை செய்து சிறு தலை அசைவுடன் அவர்களின் அறிமுகத்தை ஏற்றுக்கொண்டான். அவ்வாறு அவன் தன்னுடன் கை குலுக்குவதை தவிர்த்ததை ரோசி தனக்கு  அவமானமாக மனதினுள் எடுத்துக்கொண்டாள் .

ரோசி செல்வந்தன் வீட்டு சீமாட்டி. அவளும் வர்ஷாவைவிட பகட்டான ஆடைகளும் வைரங்களிலும் தன்னை அழங்கரித்து வந்தாலும்  வர்ஷாவின் அழகுமீதும், அவளிடம் ஆண்கள் காண்பிக்கும் ஆர்வமான பார்வையின் மீதும் பொறாமை உண்டு. மேலும் ஆதித்துடனான வர்ஷாவின் காதலை தெரிந்தபின் மேலும் அந்த நெருப்பு கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்திருந்தது.

கடந்த இருமுறை ரோசி பார்ட்டியில் மாதேஷை  பார்த்தாள். மாதேஷ், ரோஸி அப்பாவின் நண்பரின் மகன். தனது தந்தையின் ஊரான கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூரில் மாதேஷை சந்தித்திருக்கிறாள்.

மாதேஷின் செல்வச் செழுமையை அறிந்தவள் ரோசி. அவனின் தோற்றத்திலும் கலகலப்பான பேச்சினாலும் முன்பு அவனை பார்க்கும் போது ஓர் ஈர்ப்பு அவளுக்கு ஏற்பட்டிருந்தாலும் அதனை சென்னை வந்ததும் மறந்துவிடுவாள்.

ஆனால் இப்பொழுது அவனை சென்னை பார்ட்டியில் பார்த்ததும் அவன் தன்னிடம் சிரிக்க சிரிக்க பேசியது அவளுக்கு  மகிழ்ச்சியை கொடுத்தது.

வர்ஷாவிடம் உனக்குமட்டும் தான் பெரிய பிசினெஸ் மேன் கிடைத்தானா எனக்கும் செல்வந்தன் கிடைத்திருக்கிறான் பார்!” என்று காட்ட அவளிடம் மாதேஷை அறிமுகப் படுத்தி வைத்தாள்.

பாவம் ரோசி அறியவில்லை, மாதேஷ் ரோசியிடம் நெருங்கி பழகியதே வர்ஷாவை அவள் மூலம் அணுகத்தான் என்பது அவளுக்குத் தெரியாமல் போனது .

ஆதித், நான் எப்பொழுதும் மாடர்னாதான் ட்ரெஸ் பண்ணுவேன் உங்களுக்கு ஒன்று தெரியுமா ஆதித்? என்னுடைய காஸ்டியூமுக்கு ஓர் ரசிகர் பட்டாளமே இருக்கு. உங்களுக்குத்தான் என் ட்ரெஸ்ஸிங் சென்ஸ் பிடிக்கவில்லை.

நீங்க என்னை இது போடாதே அது போடாதேன்னு சொல்வது போல் நானும் உங்களை சொன்னால் உங்களால் அக்ஸப்ட் பண்ண முடியுமா?” என்றாள் .

அவள் அவ்வாறு சொன்னதும் ஓர் புருவத்தை உயர்த்தி சவால் விடுவதுபோல் ஓர் பார்வையை அவள் மீது செலுத்தியவன்நீதான் சொல்லியிருக்க, ஐம் அட்மைர் யுவர் டிரஸ்ஸிங் சென்ஸ் என்று கூறியவன்

இந்த டிரஸ் உன் அழகு மொத்தத்தையும் கடை பரப்பி காட்டுவதால்தான்  இது வேண்டாம்னு சொல்றேன் வர்ஷா. நாகரீகமான உடை உடுத்துவதை நான் ஆட்சேபிக்கமாட்டேன் ஆனால்  நாகரீகம் என்ற பெயரில் இதுபோன்ற ஆபாசமான உடையை நீ  அணிவதை இனி நான் அனுமதிக்க மாட்டேன்.உன் அழகு எனக்கு மட்டும் தான் பார்க்க, அனுபவிக்க யு காட் இட் என்றான் .வர்சாவுக்கு  அவன் கூறிய விதம் பெரும் கோபத்தை கொடுத்தது.

அதன் பின், அவள் முகத்தை திருப்பிக்கொண்டு அவனுடன் பேசாமல் உட்காந்து இருந்தாள். அவனும் அவளை சமாதானப் படுத்த முனையவில்லை.

அவள் வீட்டின் முன் அவன் காரை நிறுத்தியதும் இறங்கப் போனவளின் கை பிடித்து தன் கோர்ட் பாக்கெட்டினுள் கை விட்டு அவன் மும்பையில் அவனது நண்பனுக்கு அவன் கட்டிமுடித்த நட்சத்திர ஹோட்டலின் திறப்புவிழாவில் கலந்துகொள்ள போகையில் அங்கிருந்து அவளுக்காக வாங்கிய டைமென்ட் பெண்டன்ட், ஸ்டட் அடங்கிய பேழையை அவளிடம் கொடுத்தான்.

கீழே இறங்கப் போனவள் அவன் தன் கையில் கொடுத்ததை திறந்து பார்த்ததும்  கண்கள் அதன் அழகில் மயங்கியது. அவன் மீது இருந்த கோபம் மறைந்தது. “சூப்பரா இருக்கு ஆதித். உங்களுக்கு நல்ல ரசனை எவ்வளவு அழகா எனக்காக பார்த்து செலக்ட் பண்ணியிருக்கீங்க சோ....ஸ்வீட்ஸ் என்றவள் எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

அவ்வளவு நேரமும் இவளை பார்க்க ஆசையாக இதை  வாங்கி கொண்டு ஓடிவரும் நேரத்தில் என்னை இப்படி மூடவுட் பண்ணுமாறு நடந்து கொண்டாளே என்று கோபத்தில் இருந்தவன், இயந்திரம்போல் அவளுக்கு வாங்கியதை அவளிடம் கொடுத்தான்.

அவள் முகம் மலர்ந்து தன் கன்னத்தில் முத்தமிடவும் பதிலுக்கு அவனும் அவளை கோபம் மறைந்து அவள் உதட்டில் முத்தமிடப்போகையில் ம்...கூம் என்று அவன் முகத்தினை தடுத்தவள், “அங்கெல்லாம் கல்யாணத்திற்கு பிறகு தான் இப்பொழுது என்று தன் கன்னத்தை காட்டியவள் இங்கே!” என்று சிரிப்புடன் கூறினாள்.

ஆனால் அதிலும் அதிரடியாக அவன் நினைத்ததையே சாதித்தவன்ஓகே பை பேபி என்று அவளுக்கு, அவள் புறம் இருந்த கதவினை எட்டி திறந்து விட்டான் .

அவள் இறங்கும் போதுவீட்டிற்குள் வாருங்களேன் ஆதித். அம்மா, அப்பா உங்களை பார்க்கணும் என்றார்கள் என்றவளிடம்,

ம்..கூம் என்று தலையசைத்து மறுத்தவன், “வர்ஷு நான் இப்போ செய்துக்கிட்டுருக்கும் ப்ராஜெக்ட் முடிந்ததும் அம்மாவோட வந்து நம்ம கல்யாணத்தை பற்றி பேசவர்றேன் பை ஸ்வீட்டி! என்றவன் சென்றுவிட்டான்.

 

 

 

 

சரியாக இரவு 9.30க்கு வீட்டிற்குள் நுழைந்த ஆதித், அந்த பெரிய  வீட்டின் நடுக்கூடத்தில் இருந்த சோபாவில் அமர்ந்து, தனக்காக காத்திருந்து கண் அசந்திருந்த  தன் அம்மாவை பார்த்தவன் சத்தமில்லாமல் உள்ளே நுழைந்தான்.

வந்தவன் அவனது அம்மா ஜானகியின் அருகில் நின்று தன்னை அறியாமல் கண் அயர்ந்து இருந்த தன் அம்மாவின் முகத்தைப் பார்த்தான்

மென்மையான சாந்தம் தவழும் சுபாவமும் பார்த்தவுடன் மரியாதை கொடுக்கும் தன்மையுடன் அழகே உருவான தன் அம்மாவின் வாழ்க்கையில் சந்தோசம் மட்டும் ஏன் இல்லாமல் போனது?

நான் கூட எனது எட்டாம் வகுப்பு வரை இவரின் முகம் கொடுத்து பேசியதில்லையே! கடந்த ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஏதோ கொஞ்சம் அவருடம் இணக்கமாகப் பேசுகிறேன் என்று நினைத்தவன் ஓர் பெருமூச்சோடு சத்தம் செய்யாமல் தனது அறைக்குச் சென்று ரெப்ரஷாகி வெளியில் வந்தான் .

சாப்பாடு மேஜையின் மீது ஆதித் சாப்பிடுவதற்கு தட்டை எடுத்துவைத்துக் கொண்டிருந்த ஜானகி, “என்னை எழுபியிருகலாம்ல? நீ உன் ரூம் திறக்குற சத்தத்தில் தான் கண் விழித்தேன், வா வா பசியோட இருப்ப, இன்னைக்கு உனக்கு பிடிச்ச ஆப்பமும் தேங்காய் பாலும் செய்திருக்கிறேன்.  வந்து சாப்பிடுஎன்று புன்னகையோடு தன் மகனை அழைத்தார் ஜானகி.

எதுக்குமா நீங்க அடுப்படியில் சமைத்து கஷ்டப்படுறீங்க வேலம்மாளிடம் என்ன செய்யணு  சொன்னா செய்துடப் போறாங்க என்று கூறினான் ஆதித்.

எனக்கு இருக்கிற ஒரே சந்தோசமே உனக்கு சமைச்சு என் கையால்  பரிமாறுவதுதான் இந்த ஓர் வேலையும் செய்யாவிட்டால் எனக்கு எப்படி பொழுது போகும், காலையில் இருந்து சாயந்தரம்  வரைக்கும் நான் மட்டும் தனியா சும்மாதானே இருக்கிறேன்.

என்னமோ இந்தமாசம் அவரும் வரல உடம்பு எதுவும் சரியில்லையோ? வேறு என்னவோ? என்று கவலையாக இருக்கு. போன் பண்ணும் போது கேட்டால் நல்லாத்தான் இருக்கிறேன் கொஞ்சம் வேலை ஜாஸ்தி அப்படின்னு சொல்கிறார்

என்று தன்னை அறியாமல் புலம்பியபடி அவனுக்கு தட்டில் சாப்பாட்டை எடுத்து வைத்துக்கொண்டு இருந்தவள் தன் மகன் சாப்பிடுவதை நிறுத்தி தன்னை அழுத்தமாகப் பார்த்துக்கொண்டு இருப்பதை உணர்ந்தவள் டக்கென தனது புலம்பலை நிறுத்தி விட்டார்.

நான் வேற புள்ள சாப்பிடும் போது கண்டதெல்லாம் பேசிக்கிட்டு என்று கூறியவளுக்கு மனம் வலிக்கத்தான் செய்தது, இருந்தாலும் அவனின் முன் தன் கணவரை பற்றி பேசினால் கடந்த ஐந்து வருடமாக எதோ கொஞ்சம் தன் முகம் பார்த்து பேசும் மகன் திரும்பவும் தன்னிடம் பேசாமல் வாய்க்கு பூட்டு போட்டுக் கொள்வானோ? என்ற பயத்தில் தன் மன உணர்வுகளை தன்னுள்ளேயே போட்டு அழுத்திக்கொண்டார் ஜானகி.

அவர் மெளனமானதும் தன் தட்டில் உள்ளதை சாப்பிட ஆரம்பித்த ஆதித்துக்கு தனது தந்தையின் மேல் கோபம் எப்பொழுதையும் விட சற்று அதிகம் ஏற்பட்டது காரணம் தான் கடந்த இருமாதமாக மாதேஷை அங்கங்கு பார்ட்டிகளில் பார்ப்பதில் இருந்து அவன் மறக்க நினைத்த நினைவுகள், சிறுவயது அவமானங்கள் மற்றும் தற்போது அவன் தன் வர்ஷாவுடன் பழக முயல்வது அனைத்தும் சேர்ந்து ஓர் பொங்கும் எரிமலையின் சீற்றம் அவன் மனதில் உருவாக ஆரம்பித்திருந்தது.

அவன் அடுத்த ஆப்பத்தை தன் வாயில் பிட்டு வைத்துக்கொண்டே,உங்க புருசனின் மூத்த மகன் கொஞ்ச நாளா சென்னையில் தான் இருக்கிறான். அதனால் தான் உங்க புருஷன் உங்களை பார்க்க இங்க வராமல் இருக்கிறார். அவரிடம் சொல்லி வைங்க என்னை விட்டு என் வழியை விட்டு அவர் மகனை தள்ளியிருக்க சொல்லுங்க. நான் சினனப்பிள்ளையாக இருக்கும் போது என்கிட்டே விளையாண்டு பார்த்தமாதிரி இப்போதும் கேம்பிளே பண்ண பார்த்தான் அவ்வளவுதான். அப்போழுது விளையாண்டதுக்கும் சேர்ந்து இப்போ அவன்  அனுபவிக்கும் படி ஆகிவிடும் என்று நிதானமாக அழுத்ததுடன்  கூறியவன், சாப்பிட்டு முடித்து கை கழுவ சென்றான்.

அவன் கூறிய செய்தி ஜானகிக்கு வருத்தத்தை கொடுத்தது. இருந்தாலும் அண்ணனை பார்த்தியா ஆதித். எப்படி இருக்கான் உன் அண்ணன் தானே அவன், உன்னிடம் வம்பிழுத்தால் நீ ஒதுங்கி போய்விடு என்று கூறினார்.

அவர் அவ்வாறு கூறியதும் என்ன அண்ணனா? நான் உங்கள் புருசனையே அப்பான்னு கூப்பிடுறது இல்லை, இந்த லட்சணத்தில் எனக்கு அவன் அண்ணனாம்...? அவன் என்னுடைய எதிரி! நான் முன்னாடி படிச்சுக்கிட்டு இருந்தேன் அதனால் என்னால் உங்களை தனியா கூப்பிடுப் போய் வைத்துக்கொள்ள முடியலை. .

இப்பொழுது அப்படியில்ல. உங்கள் மகன் பிக்பிஸ்னெஸ்மேன்  அவர் உங்களுக்கு வாங்கி கொடுத்திருக்கும்  இந்த வீட்டை விட மூன்று மடங்கு பெரிய லக்சூரியஷான பல வீட்டை உங்களுக்கு நான் வாங்கி வச்சுருக்கிறேன் நீங்கதான் வர மாட்டேங்கிறீங்க.

உங்க புருசனின் அந்த மகன் என்னிடம் திரும்ப வம்பிழுத்தால் அவனை உண்டு இல்லைனு ஆக்கிவிடுவேன். உங்களையும் என்னோடு நான் வாங்கியிருக்கும்  வீட்டிற்கு வலுக்கட்டாயம் கூடிப்போய்விடுவேன் என்றான்.

அவன் அவ்வாறு கூறியதும் கண்ணில் நீருடன் நான் இந்த வீட்டை விட்டு ஒருநாளும் வெளியேறமாட்டேன் ஆதித், இந்த வீட்டை வீட்டு போகும் நிலை எனக்கு வந்தாள் நான் படிதாண்டுவதற்குள் என் உயிர் என்னைவிட்டுப்போயிடும்.

இன்னைக்கு நீ பெரிய ஆளாக இருக்கலாம் ஆதித்,  நான் உன் அம்மா என்பது எனக்கு இப்பொழுது பெருமையான விஷயம் தான், இருந்தாலும்  நான் அவரின் நிழலில் இருந்து வெளியேறினாள் இத்தனை நாள் நான் அவரின் மனைவியாக வாழ்ந்த வாழ்க்கையையும் என்னுடைய ஒழுக்கமும் கேள்விக்குரியதாக ஆகிவிடும் என்றார்

தன் அம்மா அவ்வாறு சொன்னதும் உங்களை எல்லாம் திருத்தமுடியாது என்று கோபத்துடன் சொன்னவன் வேகமாக தனது அறைக்குள் சென்று மறைந்தான்

அவன் தன் அறையினுல் சென்று மறைந்ததை சிறிது நேரம் இமை தட்டாமல் பார்த்துக்ககொண்டே இருந்த ஜானகி மணி 10 ஆனதால் ஏற்படுத்திய கடிகார மணி ஓசையால் சுயநினைவிக்கு வந்தவள் தனது அறைக்குள் சென்று மொபைலில் தனது கணவன் வேலாயுதத்திற்கு பேச நினைத்தார் ஆதித்துக்கும்  மாதேஷுக்கும் இடையில் பிரச்சனை வராமல் தடுக்கச் சொல்லலாமா என்று யோசித்தார்.

பின் ம்..கூம் இப்போ அவர் அக்கா வீட்டில் இருப்பார், நான் போன் செய்தது தெரிந்தால் அவரிடம் அக்கா பிரச்சனை பண்ணுவாங்க. என்று நினைத்து மொபைலை எடுத்த  இடத்திலேயே வைத்தவரின்  முகத்தில் ஓர் கசப்பான உண்மையை சகிப்பதற்காக வலுக்கட்டாயமாக் உதிர்க்கும்  ஓர்  சிரிப்பு  உண்டானது .

அன்று தன்னை வளர்த்த மாமா அத்தையின் மகளின் வாழ்க்கைகாக தன்னை வேறு ஒருத்தியின் கணவருக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைபட வைத்து என்னை பெறும் பாவத்திற்கு ஆளாக வைத்த ஆண்டவனே,

அதற்கான தண்டனையை இந்த ஜென்மத்திலேயே என் மகனே எனக்கு கடந்த 13வருடமாகக் கொடுத்துட்டான், இனியும் என் பாவத்திற்கான தண்டனையை எனக்கு மட்டுமே கொடு. எனக்கு பிறந்த என் மகனுக்கு வழங்கிவிடாதே என்று வேண்டினாள் ஆண்டவரிடம்.

ஆதித் சிறுவனாக இருந்த போது அவன் மனதை மாதேஷ் ரணமாக்கியது போல் (தன் மகன் இப்பொழுது இருக்கும் பொசிசனையும் கோபத்தையும் உணர்ந்தவள்) இப்பொழுதும் எதாவது  செய்ய முயன்றால்   ஆதித் அவனை சும்மா விட மாட்டான். எனவே எப்படியாவது மாதேஷை ஆதித்திடம் நெருங்காதவாறு தன் கணவனை பார்த்துக்கொள்ள சொல்லவேண்டும் என நினைத்தாள்.

மறு நாள் காலையில் வேலாயுதம் ஜாகிங் போகும் நேரம் கணக்கு வைத்து அவருக்கு போன் செய்த ஜானகி  மாதேஷ் ஆதித் பக்கம் வம்புக்கு போகாமல் இருக்கணும் நீங்க மாதேஷிடம் கொஞ்சம் சொல்லி வைங்க என்றார் ஜானகி.

ஆனால் இப்பொழுதும் மாதேஷ் பலமாக ஆதித்தின் மனதை காயப்பட வைக்கபோகிறான் என்றும் அதன் மூலம் ஆதித்தனின் கோபத்திற்கு மாதேஷ் ஆளாகப் போவதை அவர்களின் தந்தையாலும் தடுக்க முடியாது என்பதனையும்  ஜானகிக்கு விரைவில் தெரிய வரும்போது செய்வது அறியாது விழித்து நிற்கப் போகிறார்.

அந்த வொய்ட் கலர்  பி எம் டபில்யூ காரின் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கண் மூடிய வேலாயுதம்,

நேரா வீட்டிற்குப் போ முருகாஎன்று கூறினார் தனது ட்ரைவரிடம். ஆனால் அவருக்கு வீட்டிற்கு செல்லவே  விருப்பம் இல்லை.

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib