anti - piracy

Post Page Advertisement [Top]

 

                                                           நிர்வாணம்

                                                                


 காலை பத்து மணி, அப்பொழுதுதான் அலுவலகத்தில் வேலைத் துவங்கியிருந்ததால் அனைவரும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். அந்த நேரம் போலீஸ் நான்கு பேர் அங்கு வந்ததால் அலுவலர்களின் கவனம் சிதறியது

 

காவலர்களில் ஒருவர் இங்க மேனேஜர் ராம்கி யாருங்க..? எனக் கேட்டார்..

 

அதோ...” என்று கண்ணாடித்தடுப்புக்குள் அமர்ந்திருந்த ராம்கியை எல்லோரும் கைகாட்டினர்.

 

எதுக்காக போலீஸ் வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள ஆர்வமாகி மேனேஜரின் கேபினையே உற்றுநோக்கிக் கொண்டிருந்த போது அவர்களில் ஒருத்தர் தனது மொபைலை பார்த்தபடி...

 

யூ டியூப்ல ராம்கி சார்... ‘ஐயோ...செய்.’ இந்த ஆள் இப்படி மோசமானவனா இருப்பார்ன்னு நான் நினைக்கலைஎன்று பக்கத்தில் உள்ளவனிடம் சொன்னார்.

 

போலீஸ் ராம்கியின் கேபினுக்குள் சென்று அவனிடம் வாக்குவாதம் செய்கையில் ஆபீஸ் முழுவதும் இந்த வீடியோ விஷயம் பரவியது.

 

போலீஸ் உள்ளே வந்ததும் பயத்துடன், எதற்கு வந்திருக்கிறார்கள் என்ற குழப்பத்துடன் எழுந்த ராம்கியிடம்

 

யோவ் வா...வா... வந்து ஜீப்பில் ஏறுஎன்றதும்.

 

சார் நானா..? நானெதுக்கு போலீஸ் ஜீப்பில ஏறணும்..? நான் என்ன தப்புப்பண்ணினேன்..?” என்று கேட்டவனிடம் சொன்ன பதிலில் ராம்கிக்கு அதிர்ச்சியாகி படபடவென வந்தது..

 

லாவண்யாவும் அவனும் சேர்ந்து பதினைந்து லட்சம் மதிப்புள்ள பொருட்களை கையாடல் செய்துவிட்டதாகவும், . இருவருக்குள்ளும் தவறான உறவிருப்பதாகவும் அது சம்பந்தமான வீடியோ மற்றும் வாட்சப் குறிஞ்செய்திகளோடு சிக்கிக்கொண்டதாகவும் சொன்னார்கள்.

 

மேலும் போலீஸ் எத்தனை பேர் கூட இப்படி வீடியோ காலில் அசிங்கமா நடந்திருக்க..? உண்மையைச் சொல்லுஎன்றதும்.

 

சார்..சார்... அப்படி எல்லாம் இல்ல சார். பிளீஸ் சார் வேணாம் சார்என்று பின்னால் நகர்ந்தான்.

 

வா..வா.. இப்போ எதுக்கு அரஸ்ட் பண்றோம்னு புரிஞ்சதுல்ல, வந்து ஜீப்பில் ஏறுஎன்று தங்களுடன் அவனை பலியாடாக இழுத்துக்கொண்டு சென்றனர்.

 

வாட்சப்பில் வீடியோகாலில் லாவண்யாவுடன் அவன் செய்த அநாகரிகமான செயல் சமூக வலைதளத்தில் அதேநேரம்  காட்டுத்தீ போல பரவியது.

 

அவனை கீழானவனாக, காமக்கொடூரனாக மற்றவர்களின் முன் அடையாளப்படுத்தப்பட்டதால் தலைநிமிர்ந்து மற்றவர்களைப் பார்க்க  முடியாமல் அவமானத்தில் கூனிக் குறுகிப் போனான்.

 

இந்த நிலைமைக்கு செத்தே போயிருக்கலாம். ஊரில் இருக்குற என்னோட குடும்பம். நாலு வயது மகன் என்று நினைக்கையில் சபலத்தாலும் கட்டுப்படுத்தாத தன்னுடைய காம இச்சையாலும் அவனது வாழ்க்கையே இருண்ட பக்கமாக மாறியதை நினைத்து அதிர்ந்து போய் போலீசுடன் அவர்களின் ஜீப்பில் குற்றவாளியாக பயணம் செய்துக்கொண்டிருந்தான்.

 

சென்னையில் உள்ள அந்த பத்துக்குப் பத்து பேச்சுலர் அறையில் ராம்கி தனது மொபைலின் வாட்சப் காண்டாக்டில் டிபி வைத்திருந்த ஓர் பெண்ணின் உருவத்தை ஸ்கிரீனில் தொட்டுப் பெரிதாக்கிப் பார்த்துக்கொண்டிருந்தான்.

 

அவனின் அருகில் கட்டிலில் அமர்ந்த சுந்தர் மொபைல் திரையில் இருந்த அந்த பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்து யாரு...இது? புதுசா இருக்குஎன்றதும்.

 

அடையார் பிராஞ்சில் சேல்ஸ் டிபார்ட்மென்டில இருக்குற இன்சார்ஜர் பேரு லாவண்யா. ஆபீஸ் விஷயமா அடிக்கடி பேசி இருக்கேன். எடுத்ததும் தம்பின்னு தான் பேச்சை ஆரம்பிச்சா. நானும் வேற வழியில்லாம அக்கான்னு பேசவேண்டியதாகப் போச்சு.

 

அவ தம்பினதும், வயசானவளோனு நினைச்சு கடலைக்கு சரிப்படாதுன்னு ஒதுக்கி வச்சிருந்தேன். இந்த போட்டோவை பார்த்ததும் இத்தனை நாள் மிஸ் பண்ணிட்டோமேன்னு யோசிக்கிறேன்என்றான்.

 

டேய் எல்லா பொண்ணுங்களையும் கரைக்ட் பண்ண முடியாது. நீ சொல்றதை பார்த்தா தெளிவா இருக்குற பொண்ணு போல தெரியுது. உன்னால தேத்த முடியாது என்றான்.

 

எம்புட்டு தெளிவா இருந்தாலும் பேசுறபடி பேசுனா கரெக்ட் ஆகிடும் ஒரு சேலஞ்சுக்கு நம்ம வீடியோ பிரபலம் கே.டி ராகவன் பேரைச் சொல்லியே கரைக்ட் பண்ணி காட்டட்டா..??” என்றான்.

 

வெறும் வாய்வார்த்தையாக இதுவரை கடலை மட்டுமே விதைத்து தவறு செய்வதற்கு சற்று பயந்து இருந்தவனுக்கு அத்தவறை செய்ய சூழலும். கருநாக்கு சுந்தரோட வாக்குப் பலிக்கப்போகுதென்பதையும்  ராம்கி அன்று  அறிந்திருக்கவில்லை.

 

ராம்கியை அரஸ்ட் செய்த அதேவேளையில் மாதேஷ் சொல்பேச்சு கேட்டு நடந்ததால் தனது வாழ்க்கையே அஷ்தமித்து போயிடுச்சே என்று தற்கொலைக்கு முயன்ற லாவண்யாவை அவளின் வீட்டில் உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

 

அங்கு, அவள் சாப்பிட்ட விஷத்தை முறியடிக்க முயன்ற மருத்துவர்கள் விஷம் அவளின் இரத்தத்தில் கலந்துவிட்டதால் இனி அவளை பிழைக்க வைப்பது கடினம் எனக் கை விரித்துவிட்டனர்.. நினைவு தப்பிக்கொண்டிருந்தவளின் கையில் டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது.

 

அவளின் உள்ளுணர்வுகள் தனது  இந்த நிலைக்கு மாதேஷ் தான் காரணம் என்பதை தெரிவிக்க நினைத்து கடிதத்தை பற்றி சொல்ல நினைத்தாள்.

 

கண்களால் தங்கையை அழைத்து லெட்டர் என் கபோர்டில் இருக்கு என சன்னமான குரலில் சொல்லி கண் மூடினாள்.

 

லாவண்யாவும் ரோஜாவும் சகோதாரிகள். இருவரும் சகோதரிகள் போலில்லாமல் தோழிகளாக பழகி வந்தனர். அவள் மாதேஷை காதலிக்கும் விஷயம் கூட அவளுக்குத் தெரியும் .

 

சில நாட்களாக தனது அக்கா மிகுந்த மனச்சோர்வில் இருப்பதாக கணித்து விசாரித்தபோது ஆபீசில் பிரச்சனை. மாதேஷ் கூட மனஸ்தாபம் என்பதை தவிர வேறு எதுவும் லாவண்யா சொல்லவில்லை.

 

இந்நிலையில் அவளின் தற்கொலை முயற்சி மற்றும் சமூக வலை தளத்தில் பரவிய அவளின் காணொளி எல்லாம் கண்டு அதிர்ந்து போயிருந்தாள். தனது அக்கா மோசமானவள் இல்லை எதுவோ அவளுக்கு இக்கட்டு வந்துள்ளது எனப் புரிந்து அது என்ன எனத்தெரியாது அவள் கண் முழிக்க காத்திருந்தவளுக்கு அவளின் குறிப்பு ஒரு பிடிப்பினை கொடுத்து.

 

சமூகத்தின் முன் உடைந்து போன அவளின் நற்பெயரை அவள் சொன்ன லெட்டரின் வழி சரிசெய்ய முடிவு செய்து வீட்டிற்கு சென்று அவள் சொன்ன இடத்திலிருந்து மரண வாக்குமூலமாக அவள் எழுதிய அந்த கடிதத்தை எடுத்து வாசித்தாள்.

 

அதை வாசிக்க வாசிக்க நடந்தவைகள் அவளின் கண் முன்னே காட்சியாக விரிந்தன.

 

லாவண்யாவுடன் பணிபுரிபவனும்,  லவ்வருமான மாதேசிடம் மயிலாப்பூர் பிராஞ்சுக்கு மூணு பண்டல் அனுப்பினோம்னு எதுக்கு பொய் கணக்குச் சொன்ன?

 

ஏன்டா இப்படி பண்ணின...? மூணுமாசம் தொடர்ந்து ஒரு பண்டல் சேல்சுக்கு அனுப்பி இருகோம்னு நீ  சொன்னதை நம்பி நானும் லெஜ்ஜரில் என்ட்ரி போட்டு டேலி பண்ணி வச்சிருக்கேன்.

 

நேத்து மயிலாப்பூர் ஆபீசில் கலெக்சன் ரூபாய் பத்தி மேனேஜரிடம் கேக்கும் போது இரண்டு பண்டல்தான் மாசம் மாசம் பர்ச்சேஸ் பண்ணினோம். நீங்க மூணு சொல்றீங்கன்னு கேட்டாங்க.

 

நானும் கொஞ்சம் குழம்பிப் போய் வெரிபை பண்ணிட்டு பேசுறேன்னு சொல்லிட்டேன். ஆனா ராஸ்கல்...! நீ என்கிட்ட பொய் சொல்லியிருக்க. போச்சு...போ... இன்னும் ஒரு வாரத்தில் ஆடிட்டிங் வேற வரப்போகுது ஐயோ...! மாட்டப்போறோம். ஜெயிலில் கம்பி எண்ணப்போறோம்

 

எனப்புலம்பிக் கொண்டிருக்கும் போது அவளின் மொபைலில் நோட்டிபிகேசன் வந்தது..

 

இதோ பாரு மயிலாப்பூர் ஆபீஸ்ல இருந்துதான் மெசேஜ் வந்துருக்கு எனச்சொல்லி மொபைலில் வந்த குறுஞ்செய்தியின் விவரத்தை அறிய வாட்சப் பக்கத்தைத் திறந்தாள்.

 

அருகில் சற்றும் டென்சன் இல்லாமல் நின்றுகொண்டிருந்த மாதேசும் அவள் மொபைலில் வந்த குறுஞ்செய்தியை அவளுடன் எட்டிப் பார்த்து வாசித்தான்.

 

ஹாய் சிஸ்டர்

 

எப்படி இருக்கீங்க..?.

 

இரண்டு பண்டல் தானே அனுப்பியிருக்கீங்க.

 

டவுட் வெரிபை பண்ணிட்டீங்களா?

 

சரி...அதை விடுங்க.   ஹனி ட்ராப் போல மிக அழகாக இருக்கிறீர்கள் அக்கா..!

 

இவ்வளவு பியூட்டியா இருக்கிறதாலத்தான் உங்க போட்டோவைக் கூட இதுவரை வாட்சப் டிபியா வைக்காம பொத்தி வச்சிருந்தீங்களா?

 

என வரிசையாக வந்து விழுந்தது குறுஞ்செய்திகள்.

 

பாரு மாதேஷ் இதுக்குத்தான் டிபில என் போட்டோ போடாம வச்சிருந்தேன். உன்னாலத்தான் வச்சேன். பெர்சனல் யூசுக்கு மட்டும் என் போன் யூஸ் பண்ணலை நம்ம ஆபீஸ் யூஸ்க்கும் இதேதான். அதனாலத்தான் டிபில என் போட்டோ வைக்காம இருந்தேன்.” 

 

என்று அவள் மாதேசைப் பார்த்துச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளின் கையில் இருந்த மொபைலை பறித்தான் .

 

அதனால என்ன ஆச்சு..? இதுவும் நல்லதுக்குத்தான். பாரு நம்ம பிரச்சனைக்கு பழி ஏத்துக்கிட வழிய ஒரு ஆடு வந்து சிக்குது

 

எனச் சொல்லிக்கொண்டே நின்றுகொண்டிருந்தவன் லாவண்யாவின் மொபைலை அவள் பறித்துக்கொள்ள முடியாதவாறு    தூக்கிப் பிடித்து அந்த குறுஞ்செய்திகளுக்கு மூன்று சிரிப்பு மூஞ்சி எமோஜியை பதிலாகத் தட்டி விட்டான்.

 

ஏய்.... மாதேஷ். என்ன பண்ற...? அய்யோ... அந்த லூசுக்கா ரிப்ளை பண்ணுன..?” என்று கேட்டபடி மொபைலை எக்கி பறிக்க முயன்றவளிடம் அவனாகவே அதை ஒப்படைத்தான்.

 

திரையைப் பார்த்தவள் லூசா நீ..? சிரிப்பு மூஞ்சியை போய் பதிலா அனுப்பியிருக்க. அதை அட்வான்டேஜா எடுத்துக்கிட்டு அநாகரிகமா பேச ஆரம்பிச்சிடப் போறான்எனக் கோபப்பட்டவளிடம்..

 

அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன் லாவண்யா. நமக்கு வேற வழியில்லை.

 

மூணு பண்டல்...! ஒரு பண்டலில் இருக்கும் மோட்டார் பேர்பார்ட்ஷோட மதிப்பு ஐந்துலட்சம். இப்போ மூணு பண்டலுக்கும் சேர்த்து மொத்தம் பதினைஞ்சு லட்சம் நமக்கு வேணும்”. என்றவனை கேள்வியாகப் பார்த்தவளிடம்.

 

அந்த பணத்தை இவனை வச்சுத்தான் சரிக்கட்டப்போறேன். இல்லைன்னா நீயும் நானும் ஜெயிலில் கம்பிதான் எண்ணனும்என்றான்..

 

ஏய் மாதேஷ் என்ன மிரட்டுரையா..? நான் எதுக்கு கம்பி எண்ணனும்.? நீதானே பண்டல்களை கையாடல் செய்த..!”.என்றவளிடம்.

 

ஏய் நீ தான் லெஜ்ஜரில் என்ட்ரி போட்டிருக்க. முதலில் உன்னைத்தான் கேட்பாங்க. நீ கைக்காட்டியப் பிறகுதான் என்கிட்ட வருவாங்க.

 

நமக்காகத்தான் அந்த பணத்தை எடுத்தேன். ஷேர்ஸ் கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ணியிருக்கேன். லாபம் காட்டும் போது வித்து இங்க எடுத்த பணத்தைக் கட்டிட்டு லாபத்தை நம்ம கல்யாண செலவுக்கு யூஸ் பண்ணலாம்னு நினைச்சேன்.

 

நீ தானே எப்போ கல்யாணம் பண்ணப்போறேம்னு நச்சரிச்ச. ரூபாய் இல்லாம எப்படி கல்யாணம் பண்ண..?

 

அந்த பண்டல்களை என் பிரண்டுகிட்ட வித்துட்டு அதில் கிடைச்ச பணத்தை ஷேர்சில் இன்வஸ்ட் பண்ணினேன். ஆனா என் நேரம் பாதிக்கும் கீழே மார்கெட் இறங்கிடுச்சு.

 

நான் சொல்றபடி நீ  செஞ்சா இந்த பிரச்சனையில் இருந்து தப்பிச்சிடலாம்என்றவன் சொன்ன விஷயத்தைக் கேட்டு அதிர்ந்தாள் லாவண்யா.

 

ஏன்டா உன் புத்தி இப்படியெல்லாம் போகுது..! இந்த கேவலமான திட்டத்துக்கு எல்லாம் நான் கூட நிக்கமாட்டேன். என்னைப் போய் எப்படி இப்படி எல்லாம் அடுத்தவன் கூட பேசவும் செய்யவும் சொல்ல உனக்கு மனசு வந்தது.

 

நீ என்னை உண்மையாவே லவ் பண்ற, நாம இரண்டுபேரும் கல்யாணம் செய்யப் போறோமேன்னு நீ சொல்றபடி எல்லாம் உன் கூட நடந்துக்கிட்டேன். அதுக்காக கண்டவன் கூடயும் அப்படி நடந்துக்கிட நான் ஒன்னும் விபச்சாரி இல்ல.

 

கொஞ்ச நாளாவே உன் பேச்சு நடவடிக்கை எல்லாம் உறுத்தலா இருந்துச்சு எனக்கு. ஆளை விடு... நீயுமாச்சு உன் காதலுமாச்சு. வாழ்க்கை முழுதும் கல்யாணம் செய்துக்காம நான் இப்படியே இருந்துருறேன் .

 

என்கிட்ட இனி ஒரு தடவை இப்படி எல்லாம் செய்யச்சொல்லி சொன்ன.....காதலிச்சவன்னு கூட பார்க்க மாட்டேன். செருப்பு பிஞ்சிடும்என பட படவெனப் பொரிந்தாள்.

 

லாவண்யா...! என்னை மிருகமா மாத்தாத.! நான் சொல்றதை நீ செஞ்சுதான் ஆகணும். உன்னை கல்யாணம் செய்யப்போற நான்தானே இப்படிச் செய்யச் சொல்றேன்.

 

என்னை கழட்டிவிடணும்னு நினைச்சே..., நாம ஜாலியா இருந்ததுக்குறிய ஆதாரத்தை எல்லாம் வெளியில் விட்டு உன் இமேஜை டேமேஜ் ஆக்கிடுவேன்என்று மிரட்டினான்.

 

அவனின் வார்த்தைகளில் பயந்துபோன லாவண்யா மாதேஷ்  சொன்னது போல  ராம்கியுடன் வாட்சப்பில் வெட்சேட் செய்து  அவனை டெம்ட் செய்து வீடியோ சேட்டிலும் அந்த கண்றாவியை அவனுடன் தொடர்ந்து அந்த வீடியோவை ஆதாரமாக வைத்து மாதேசின் சொல்படி பதினைந்து லட்சத்துக்கு ராம்கியுடன் பேரம் பேசினாள் லாவண்யா.

 

அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று சொல்லிய ராம்கி. வீடியோ லீக் செய்தால் உன்னுடைய பேரும்தானே லீக் ஆகும் என்று பதிலுக்கு அவளிடம் சண்டை போட்டான்.

 

எனவே லாவண்யா மாதேசிடன் தன்னை இழிவான நிலைமைக்கு  ஆக்கிவிட்டாயே என்று ஆதங்கத்தில் சண்டை போட்டாள் இதனால்  மனதளவில் இருவருக்கும் பெரிய கசப்பு உண்டானது.

 

மாதேஷோ இனி அவளுடன் தான் நிம்மதியாக பழையபடி சந்தோசமாக இருக்கமுடியாது எனப் புரிந்துக்கொண்டான் அவளை கழட்டிவிட எண்ணினான்.

 

எனவே தான் கையாடல் செய்ததில் லாவண்யாவை  மாட்டிவிட பிளான்பண்ணி  அவளின் மொபைலில் ராம்கியுடன் பேசியதில் தனக்குச் சாதாகமானவற்றை எல்லாம் ஆதாரத்துக்காக  திருடி. மாட்டிவிட்டுவிட்டான்.

 

நான் பணத்தை கையாடல் செய்யலை ரோஜா, அந்த மாதேசின் வலையில் மாட்டி ஏமார்ந்து வாழ்க்கையை தொலைத்தவள் நான்.

 

முடிந்தால் அவனை இந்த கேசில் முதல் குற்றவாளியாக்கி தண்டனை வாங்கிக்கொடு ரோசா. நீயும், அம்மாவும், அப்பாவும் என்னை மன்னிச்சிருங்க. என்னால் குடும்பத்துக்கே அவமானம்...! இனி உங்க முகத்தில் முழிக்க முடியாது என்பதாலேயே இந்த முடிவுக்கு வந்தேன்!. என்னை மன்னிச்சிருங்க. பிரியங்களுடன் லாவண்யாஎன்று எழுதியிருந்தாள்.

 

அந்த லெட்டரை கொண்டு சைபர்கிரைமில் கம்ப்ளைன்ட் கொடுத்து சமூக வலைதளத்தில் இருக்கும் அவள் அக்காவின் வீடியோ பதிவினை தடை செய்யச்சொல்லி மனுகொடுத்தாள்.

 

அந்த லெட்டரை ஆதாரமாக கொண்டு மாதேஷின் மேல் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய ஏற்பாடு செய்தாள். என்ன செய்து என்ன பண்ண சென்ற லாவண்யாவின் உயிர் திரும்ப வரவாபோகிறது என்ற ஆதங்கம் எழுந்தது.

 

மாதேஷ் அவளுடன் அந்தரங்கமாக பழகிய ஆதாரத்தை கைபேசியின் உதவிகொண்டு எடுத்துவைத்து அவளை மிரட்டி அவளின் நிர்வாணத்தை வெளியிடுவதாக மிரட்டி, சபலபுத்தியுள்ள ராம்கி போன்ற நபரை கொண்டு ஆதாயம் பெற லாவண்யாவை தூண்டில் மீனாக மாட்டிவிட்டு பண வேட்டையாட நினைத்தான்.

 

அவனின் குரூர புத்தி விரித்த வலையில் லாவண்யா சிக்கினாலும் அவன் நினைத்த பணம் தேறவில்லை என்ற கடுப்பில் நிர்வாணத்தை கடை விரித்து அதில் அவள் பொசுங்கி போவதை கண்டு குரூர சந்தோசம் அடைய எண்ணி அவளின் மானத்தோடு உயிரையும் பறிக்கும் சாத்தான் ஆனான்.

 

இங்கு எதுவும் ரகசியமில்லை. கைக்கு அடக்கமாக தன்னுடைய ஆறாம் விரல்போல ஓட்டிக்கொண்ட கைப்பேசி நம்மை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டிருக்கிறது.

 

இங்கு மனிதனின் ஆதிகால நிர்வாணத்தை நாகரீகத்தை பேணிக்காக்கும் பொருட்டு ஒவ்வொருவரும் ஒளித்து வைத்திருக்கிறோம்.

 

நாலு சுவருக்குள் இருட்டில் மட்டுமே நிர்வாணமும் கலவியும் சாதகம் என்றும். அந்த நிலையில் பொதுவெளியில் காட்டப்பட்டால் அதற்கு உட்படும் நபர் அற்பமாகவும் காரி உமிழ்ந்து கல்லெறிந்து ஓட ஓட காயம்பட்டு சமுதாயத்தில் கலந்து இயல்பாக வாழத் தகுதி இழந்தவர்களாகப் பாவிக்கப்படுவர்.

 

எனவே சபலப்படுபவர்களையும், நிர்வாணத்தையும்  வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டி சக மனிதனைப் பலியாடாக்கும் கூட்டம் இங்கு பெருகிவிட்டது.

 

முறையற்ற உறவின் முடிவுகள் கருமையாகத்தான் இருக்கும். காதல் என்ற பெயரில் ஏமாறுபவர்களின் அந்தரங்கத்தை, நிர்வாணத்தை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டினால் பணியக்கூடாது.

உன் அம்மா, தங்கை, அக்கா மற்றும் உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் உள்ளது போலதான் எனது உடலும் உன் மிரட்டலுக்கு பயந்து நீ சொல்வதற்கு இசைய மாட்டேன் என அஞ்சாமல் துணிந்து நிற்க வேண்டும். அதற்கு இந்த சமூகம் அவளுக்கு உதவ வேண்டும்.

 

தகுந்த நபர்கள் உதவியுடன் அந்த மிரட்டல்காரனை பிடித்து சமூகத்தின் முன் குற்றவாளியாக நிறுத்த வேண்டும். உள்ளங்கை கைப்பேசியில் கெட்டதை தேடி பிடித்து நாசமாவதை விட்டு உபயோகமான முறையில் பயன்படுத்தவும் முடியும்..

 

பாதிப்படைந்தவர்கள் மனதாலும் புத்தியாலும் வலு சேர்க்க அவளை சார்ந்தவர்கள் பக்கபலமாக இருக்கவேண்டும். அவர்கள் இந்த உலகில் நல்ல விஷயங்களில் சாதித்து வாழ்கை சவால்களில் வெற்றிகொள்ளும் போது களங்கம் காணாமல் போய்விடும்.  

 

மனிதனின் நிர்வாணத்தை ஆராய்வதைத் தாண்டி ஆக்கப்பூர்வமான ஆராய்ச்சிகள், செய்ய வேண்டிய  பணிகள் இங்கு ஆயிரம் உள்ளது.

 

தீபாஸ்

 

 

 

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib