வாழ்வென்பது கையில்
நல்லா டிரஸ் பண்ணி, தலை வாரி மேக்கப் போட்டா மட்டும் எல்லாம் மாறிடவாப்போகுது? என்று அவள் மனசாட்சி அவளிடம் பேசியது.
அதை கேட்டதும் ஒரு விரக்தியான சிரிப்பொன்று அவளின் முகத்தில் வந்து போனது.
இவள் சந்திரா, தனது அழகுக்கும் தன் தந்தை தனக்கு சேர்த்து வைத்திருக்கும் நகைக்கும், டபட்டதாரியான தனக்கு லட்சத்தில் சம்பளம் வாங்கும் ஒருவன் மாப்பிள்ளையாக வருவான்.
அவன் தன்மீது, உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த காதலையும் காட்டுவான். தான் சிறிது முகம் சிணுங்கக் கூட தாங்காது தன்னை தேற்றுவான். தான் ஒரு பொருளை ஆசையாக பார்த்தால் அது எத்தனை விலை உயர்ந்ததாக இருந்தாலும் முயன்று வாங்கித்தருபவனாக இருப்பானென நினைத்திருந்தாள்.
ஆனால் நிதர்சனம் வேறு என்று அவளுக்கு வாய்த்த கணவன் முரளி புரிய வைத்திருந்தான்.
“சமையலுக்கு என்னென்ன காய்கறி வாங்கிட்டுவர?” என்று கேட்ட முரளியிடம் இதுபோன்ற குணங்கள் ஏதுமில்லை.
முரளியின் குரலில் தனது மண்டைக்குள் சுற்றிய கொசுவத்தி நினைவுகளிடம் இருந்து மீண்டு நடப்புக்கு வந்தவள். “தக்காளியும் கொஞ்சம் மல்லி இலையும் மட்டும் வாங்கிட்டுவாங்க. ரெண்டுநாள் முன்னாடி வாங்கின காயே இன்னும் காலியாகாம பிரிஜ்ஜில் இருக்கு” எனப் பதில் கொடுக்கவும்.
“சரி” என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் உதிர்த்துவிட்டு சாவிகள் கோர்க்கப்பட்டிருக்கும் ஸ்டேண்டில் இருந்த பைக் சாவியை எடுத்துகொண்டு வெளியேறிவிட்டான்.
அன்று சனிக்கிழமை, எப்பொழுதும் சனிகிழமையன்று பள்ளிக்கூடம் செல்லும் அவளது மகள் பவித்ராவுக்கு இன்று விடுமுறை ஆதலால் மதியம் சாப்பிட்டுவிட்டு தூங்கி எழுந்து “அம்மா எனக்கு டீ” என்றபடி நடுக்கூடத்தில் இருந்த சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியை இயக்கி அதில் பாடல்களை ஒலிக்கவிட்டாள்.
“என்ன பவி?? லீவுன்னாலே குளிக்காம செய்யாம இப்படி அட்டப்பிடிச்சு போய் அலையிற,! வயசுப்புள்ளை இப்படியா இருக்கிறது? காலையிலேயே எந்திரிச்சு குளிச்சு தலைவாரி பளிச்சுன்னு இருக்க வேணாமா? என்று கேட்டாள்.
“இப்போ குளிச்சு டிரஸ் மாத்தி நான் எங்க போகப்போறேன்? வீட்டில தான இருக்கேன்ம்மா?” என்றதும் சந்திராவுக்கு திக்கென்றானது.
கண்ணாடியில் தன்னை பார்த்து தனக்குத் தானே கேள்வி கேட்டதுக்கு என் மனசாட்சி சொன்ன பதிலையே என் மகளும் சொல்றாளே! என்னைய இப்படி வீட்டில் பார்த்துப் பார்த்துப் பழகிப்போனதால வீட்டில் இருந்தால் இப்படித்தான் இருக்கணும்ன்ற எண்ணம் பவிக்கு வந்துருச்சோ?
நானென்ன இவள் வயதில் இப்படியா இருந்தேன். எப்பவும் பளிச்சுன்னு டிரஸ்பண்ணிட்டு, வித விதமா முடியை பின்னிப்போட்டு, பவுடர், கண்மை எல்லாம் போட்டுட்டுத்தானே சுத்துவேன்.
என் அம்மா என்னை பார்த்து “வீட்டிலதானடி இருக்க, எதுக்கு நல்ல டிரஸ் எல்லாத்தையும் போட்டு பாழாக்குற?” என்பார்.
“அய்யே.... போங்கம்மா. வெளியில போனா மட்டும்தான் நீட்டா டிரஸ் பண்ணனுமா? ஊருக்கு முன்ன பவுசா காமிச்சிட்டு வீட்டுக்குள்ள மட்டும் அட்டப்புடிச்சுப் போய் உங்களை மாதிரியே என்னையும் இருக்கச் சொல்றீங்களா?. நான்லாம் எப்பவுமே நீட்டாத்தான் இருப்பேன்” எனச் சொன்னவதானே நானு.
முரளியை இதுதான் மாப்பிள்ளைன்னு காட்டும்போது கூட என் அம்மா அப்பாவிடம் ‘மாப்பிள்ளை என்னங்க இத்தனை கருப்பா, தொப்பை வச்சு மீறித் தெரியிறார் நம்ம சந்திராவுக்கு பொருத்தமா இல்லையேங்க’ என்று சொன்னதும்
அப்பாவோ “மாப்பிள்ளை வீட்டுக்கு ஒரே பிள்ளை, வேலை எதுவும் செய்யவிடாம சொத்து சொகத்தோட சந்தோசமா வளர்ந்த பையன் அப்படித்தான் இருப்பான். பிக்கல் பிடுங்கல் இல்லை, கை நிறைய சம்பாதிக்கிறான். ரொம்ப சாதுவான பையன். ஆள் மட்டும் அழகா இருந்தால் போதுமா? அழகா சோறு போடுது?” என்றார்.
அம்மா முரளியை பார்த்ததும் இத்தனை கருப்பா இருக்கிறாரென ஆட்சேபனை தெரிவிப்பதை கண்டு அப்பொழுது கடுப்பாகத்தான் வந்தது சந்திராவுக்கு.
‘நான்தானே கட்டிக்கிடப் போறேன் இவங்க எதுக்கு நிறத்தை குறையா நினைக்கிறாங்க? கருப்பா அழகில் கம்மியா இருக்கிறவங்களுக்கு அழகான மனைவி கிடைச்சா அப்படியே பொண்டாட்டிகிட்ட சரண்டர் ஆகிடுவாங்கலாம். அதனால எனக்கு இப்படிப்பட்ட புருஷன் தான் வேணும்’ என தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.
அத்தோடு முரளி தனது அழகின் மீது தீரா காதல் கொண்டு எந்நேரமும் தன்னையே சுற்றி வருவது போலவும் அவனுக்கு விளையாட்டாக போக்குக்காட்டுவது போலவும் எதிர்பாராத நேரம் பின்னாலிருந்து அவன் கட்டியணைப்பது போலவும் கல்யாணமாகும் பெண்களுக்கே உரிய கற்பனைகளுக்குள் மூழ்கிப்போயிருந்தாள் அப்போது.
எதார்த்தம் வேறாக இருந்தது முரளியோ வேலை விட்டு வீட்டுக்கு வந்தோமா டைனிங் டேபிளிலேயே அவனின் ஆபீஸ் பேக்கை போட்டோமா கைலியை மாத்தினோமா மெத்தையில் படுத்து செல்போனை நோண்டுனோமாவென இருப்பான்.
தான் அவனுக்காக பார்த்துப் பார்த்து அலங்காரம் செய்திருந்தாலும் அதேபோலத்தான் இருப்பான். அவனை ஈர்க்க எந்த மெனக்கெடல்களும் செய்யாவிட்டாலும் அப்படியேத்தான் இருப்பான் முரளி.
தன்னை கண்டு கொள்ளவே மாட்டேங்கிறானே என்ற ஆத்திரத்தில் நாமளும் கண்டு கொள்ளக்கூடாது இவருக்கு நானென்ன பித்தியா? என்று வீம்பை இழுத்து பிடித்துக்கொண்டு நான்கைந்து நாள் பேசாமல் இவள் இருந்தாலும் புரயோஜனம் இருக்காது, தான் அவனுடன் நாலு நாள் பேசவே இல்லையென்பதை கூட முரளி உணர்ந்ததாக காட்டிக்கொள்ள மாட்டான்.
எல்லாமே என் தப்புத்தான் இவர்கூட பேசாம இருந்தாலும் நேரத்துக்கு சூடா டீயும், மூணுவேளை சாப்பாடுன்னு ஆக்கிக்கொடுத்துடுறேன்ல, அதுக்கு மேல வேற எதையும் அவர் என் கிட்ட எதிர்பார்க்கலை. இத்தனை நாளா என்கிட்ட இல்லாத தேவை இனிமேலா முளைச்சிடப் போகுது?
நான் நல்லாத்தானே இருக்கேன். என் வீட்டிலேயே நான் தான் அழகுன்னு என் அம்மா அடிக்கடி சொல்வாங்களே அழகான பொண்ணுங்களை கண்டா ஆண்களுக்கு அவளை உரசிப் பார்க்கணும்னு தோணும்னு சொல்றது எல்லாம் சும்மா பேச்சுக்குத்தானா?
இவர் ஒரு நாள்கூட என் அழகில் ஈர்க்கபட்டதா காட்டிக்கிட்டதே இல்லையே. விளக்கை அணைச்சதுக்கு பின்னாடி ரசனையே இல்லாது இயந்திரத்தனமா என்னோடு கலந்ததுகூட முதல் மூனு நாலு வருசமாகத்தான். அவர் வீட்டில் சேர்த்துவைத்திருக்கும் சொத்தை பாதுகாக்க பராமரிக்க வாரிசு கிடைக்கணுமென்ற காரணத்துக்குத்தான் என்னோடு கலந்தாரோ?
மத்த நேரம் எப்படியோ விளக்கை அணைச்சுட்டா என் அருகாமை இல்லாம அவரால இருக்க முடியாது. அவருக்கு பாசத்தை வெளியில் காமிக்கத்தெரியலை அப்படின்னு முன்னாடி நான் மனதை சமாதானப்படுத்திக்கிட்டது எம்புட்டுப் பெரிய பைத்தியக்காரத்தனம்.
என்மேல அவருக்கு ஈடுபாடு இருந்திருந்தா நான் பேசாம இருக்கிறச்ச மண்ணுமாதிரி இப்படியிருக்க முடியுமா?
எதில்தான் இவருக்கு ஈடுபாடு இருக்கு?. நல்லா சாப்பிடணும் எந்நேரமும் படுக்கையில கைகாலை பரப்பிப்படுக்கணும் இருக்கிற சொத்தை டூர், ஹோட்டல், சினிமா, பீச்சுக்கு போய் செலவு பண்ணாம பூட்டி பாதுகாப்பா வச்சுக்கணும்.
கடைசிவரை இப்படி சாப்பிட்டு சும்மாயிருக்கும் போதெல்லாம் படுக்கையில் படுத்து வெட்டியா போனில் வாட்ஸப் பேஸ்புக்குன்னு ஸ்குரோல் பண்ணிகிட்டே இருக்கணும். ஆனா எதிலும் எந்த போஸ்ட்டும் போடுறதில்லை மத்த போஸ்ட்டுக்கு கூட எந்த கமெண்டும் யாருக்கும் குடுக்கிறதில்லை. இப்படி எப்படித்தான் எல்லாத்திலேயும் பிடித்தமில்லாம இவரால் இருக்க முடியுதோ?
வீட்டை கவனிக்க ஒருத்தியை கழுத்தில் தாலியக்கட்டி பிடிச்சுக்கிட்டு வந்து கூட்டுக்குள்ள அடைச்சாச்சு. இனி வீடு அவ பொறுப்பு. அது குப்பையா இருந்தாலென்ன சுத்தமா இருந்தாலென்ன நமக்கு வேண்டியது மூணு வேளை சாப்பாடு, ரெண்டு வேளை குடிக்க டீ. அதுக்கு தேவையான சாமானை வாங்கிப் போட்டுட்டு கம்முனு இருந்திடணும் என்ற டைப்பில் இருந்தான் முரளி.
இவள் சினிமா போகணும் என்றாலோ, பீச் போகணும் என்றாலோ என்னங்க வீட்டில இந்த இடத்தில் பெருசா ஊஞ்சல் கட்டினா நல்லா இருக்கும் என்றாலோ. மொட்டமாடியில் ரோஜா செடி வைக்கணும் பிளீஸ் வாங்கித்தாங்க என்றாலோ. முரளி அழைத்துப்போக முடியாதென சொல்லமாட்டான்.
அதேநேரம் வாங்கிக் கொடுப்பதுமில்லை. ‘ ம்... வாங்குவோம் ம்...இன்னொரு நாள் போகலாம், கொஞ்சம் பொறு’ என்ற வார்த்தைகள் மட்டுமே உதிர்ப்பான். பொறு என்ற வார்த்தை ஒரு மாசம் ஒரு இரண்டு மாசம் வரை என்றால் கூட கொஞ்சம் அவள் மனச் சாந்தியடைந்திருப்பாள். அந்த பொறு செய்யலாம் என்பது வருடங்கள் தாண்டி நீண்டுகொண்டே போகும்.
ஒன்றை அவள் கேட்டு வாங்கித்தர முடியாதென சொன்னால் தானே சண்டை வரும். பொறு என்று சொல்லி காலத்தைக் கடத்திச்செல்வது அப்போதைக்கு இருவருக்குமான சச்சரவுகளை தவிர்க்கவே அவ்வாறு சமாளிக்கிறான் அவன் கொஞ்ச காலம் சென்றே இவள் உணர்ந்து கொண்டாள்.
வாய்விட்டு கேட்டபின்னும், அதுவும் விரும்பி ஒரு ரோஜா செடி கேட்டும் அதை கூட தனக்காக ஆர்வமுடன் வாங்கித்தர மனதில்லாத, அதற்கான சிரத்தை எடுக்காத ஒரு மனிதருடனா இத்தனை வருசமா நான் வாழறேன் இப்படி வாழ்ந்தென்ன பயன்.
எத்தனை நாளைக்குத்தான் இப்படி மனசு ஒட்டாம பொய்யா ஊர் உலகத்துக்காக பெத்த பிள்ளைக்காகன்னு இந்த மனுஷர் கூட அன்னியோன்யமா இருக்கிறதா காட்டிக்கிட?
நானென்ன படிக்கலையா? இல்லை, எனக்கு பொய்யான இந்த வாழ்க்கை விட்டு, மூச்சு முட்டும் இந்த கூட்டைவிட்டு தனியா பறக்க திறன் இல்லையா? கொஞ்சமா காசு இருந்தாலும் அதைவச்சு ஆசை பட்டதைச்செய்து, என்னை நானே ரசிச்சு வாழுற வாழ்க்கை அற்புதமானது அழகானது.
அப்படி இருக்கிறது பட்டாம்பூச்சு சிறகை விரித்து பறக்கும் நிலை போன்றது மரத்திலிருந்து உதிரும் இலை அண்டத்தில் பற்றருந்து மிதக்கும் பரவசமான நிலையது.
அதெல்லாம் சரி, இதெல்லாம் நடக்கணும்னா நான் தனியா என் காலில் நிற்க எனக்குன்னு சம்பாத்தியம் வேணுமே!
ஏன் என்னால சம்பாதிக்க முடியாதா? கல்யாணத்துக்கு முன்னாடி வீட்டில சும்மாயிருந்து படித்தப்படிப்பு வீணாகக்கூடாதுன்னு மெட்ரிக்குலேஷன் ஸ்கூலில் டீச்சராக வேலைக்கு போனவள் தானே நானு.
எனக்கும் என் மகளுக்கும் தேவையானத என்னால சம்பாதிக்க முடியாதா? என்று எண்ணம் போகும்போதே அவள் மனம் விழித்துக்கொண்டது.
அச்சோ நானா இப்படி? பொம்பளை பிள்ளையை வச்சுகிட்டு அவளின் அப்பாவைவிட்டு பிரிந்து போகணும்னு நினைக்கிறேன்! அவர் மகளுக்கு ஒரு நல்ல அப்பாவா தேவையானதை செய்து கொடுத்து நல்லபடியாகத்தானே பார்த்துக்கிறார்.
அப்படியிருக்க என் மகளுக்கு அப்பாவின் அருகாமை இல்லாமல் போக நானெப்படி நினைக்கலாம் ஐயோ இன்னைக்கு எனக்கென்னவோ கிறுக்கு புடிச்சிருச்சு. என் மூளை தப்புத்தப்பா யோசிக்குது.
இப்போ என்ன தனியாகப் போய்தான் என்னால சிறப்பாக வாழ்ந்து காட்ட முடியுமா? என் பிள்ளைக்காக இங்க இருந்தே அப்படி வாழ்ந்து காட்ட முடியாதா?
கணவனே என்றாலும் ஒருவரை கட்டாயப்படுத்தி எனக்காக இதைச் செய் அதைச் செய்னு நச்சரித்து செய்யவைக்கிறது அற்பத்தனமானது.
இனிமே என்னுடைய சின்ன சின்ன ஆசைகளை நானே நிறைவேத்திக்கிட ஏதாவது சம்பாதிக்க முடியுமானு பார்க்கணும்.
பிள்ளையை வளர்க்கணும், அவளுக்கு படிப்பு சொல்லிக்கொடுக்கணும் வேலைக்கு போனால் அவளை நல்லா வளர்க்க முடியாம போயிடும்னு இதுவரை வீட்டில இருந்தேன்.
இப்போதான் அவள் வளர்ந்துட்டால்ல. எனக்காகவும் என்னை பார்த்து வளரும் பிள்ளைக்காகவும் நான் உற்சாகமாக இருக்கணும்.
கல்யாணத்து முன்னாடி இவர் என் கிட்டயில்ல, இவரின் பார்வைக்காக ஒன்றும் நான் வாழலை. அப்போதெல்லாம் நான் நல்லா டிரஸ் செய்து எப்பொழுதும் நீட்டாகத்தானே இருந்தேன்.
இப்போதும் எனக்காக என்னை எப்போதும் பளிச்சென்று வச்சுக்கணும். பவித்திராவுக்கு என்னைப் பார்த்து இப்படித்தான் நாமளும் எப்பொழுதும் பளிச்சென இருக்காணுனு தோணனுமென நினைத்தபடி அன்றைய வேலையை கிடுகிடுவென முடித்து அடுப்படி ஒதுங்க வைத்து படுக்கைக்குப் போனவளுக்கு நிறைய நாள் சென்று மனதிற்குள் கனத்துக்கொண்டிருந்த இயலாமை விடுபட்டு நிம்மதியான தூக்கம் வந்தது.
என்றைக்கும் இல்லாதவகையில் மறுநாளின் விடிகாலை வெளிச்சம் புத்துணர்வை அவள் மனம் போலவே அவளுள் பரவச்செய்தது.
குளித்து முடித்து புத்தம் புது பூவாக தனது சமையல் வேலையை பார்த்துக்கொண்டே. எந்தெந்த தனியார் பள்ளிகளுக்கெல்லாம் போய் அப்பிளிகேசன் கொடுக்கணும் என்று மனதினுள் கணக்கிட்டுக்கொண்டே நேர்த்தியாக அவளின் விரல்கள் சமையலுக்கான காய்கறிகளை நறுக்கியது.
தீபாஸ்

No comments:
Post a Comment