நூல்
குறிப்பு
நூல் தலைப்பு : : செவ்விழியன
ஆசிரியர் : தீபாஸ்
மொழி : தமிழ்
முதற் பதிப்பு : டிசம்பர்
2022
உரிமை : ஆசிரியருக்கு
மொத்தப்பக்கங்கள்: 385
வெளியிடுவோர்: சுயமிபதிப்பகம்
suyami2023@gmail.com
விலை : 320
எடிட்டர்: தீபாஸ்
baskardeebamasu@gmail.com
முன்னுரை
அரசு, அரசியல்வாதி இரண்டும் ஒன்றை ஒன்று
சார்ந்தது. ஒருவன் அதிகாரத்தை கைகொண்டு செயல்படவேண்டுமானால் அரசாங்க பதவியில்
இருக்கவேண்டும்.
மனிதனின் ஆகச் சிறந்த போதை அதிகாரம் கொள்வதன் மூலமே கிடைக்கிறது. இந்த அதிகாரத்தை கைகொள்ள முயற்சிக்கும் ஒருவன் தலைமை பண்பு
கொண்டு மட்டும் இருப்பது போதாது அத்தலைமை பண்பு கொண்டவன் தன்மையே அவனது அரசியலை
கட்டமைக்கும்.
அரசியலை விஷச் செடியாகவோ அல்லது
பிரச்சனைகளை தீர்க்கும் மூலிகையாகவோ ஆக்கும் வல்லமை அரசியல்வாதியை பொறுத்து
அவன் ஏற்றுள்ள பதிவியின் மூலம் அச் சமூகத்தை அவனின் தன்மை ஆட்டுவிக்கிறது.
நல்ல தன்மை கொண்ட ஒருவன் பதவிக்கு வருவதால் இச் சமூகம் சுபம் பெரும்.அவனின் செயல்பாடுகள் சமுதாயத்தின் புரையோடிய புண்களை அகற்றும்
மூலிகையாகும்..
அப்படியான நல்லதன்மை கொண்ட ஒருவன் பதவிக்கு வர முயன்றால் இங்கு என்னென்ன
சூழலை அவன் சந்திக்க நேரிடும் என்ற கற்பனையில் உருவான கதையே செவ்விழியன்.
அரசியல் சாக்கடை என்று சொல்லி அனைவரும் விலகிப் போய் அரசாங்கமே இல்லாது
போனாள் தெருக்கள் தோறும் சாக்கடை நிரம்பிப் போகும்.
ஒரு நாள்கூட அரசாங்க அச்சு சுழலாமல் நின்றால், அச்
சமூகமே ஸ்தம்பித்துவிடும். அரசியல் விட்டு தள்ளி நிற்கிறேன் அது சாக்கடை என்று
விலகிப் போய் நிற்பதாக எண்ணுகிறவர்களின் வாழ்க்கை சூழல் அந்த அரசாங்கத்தால்தான்
கட்டமைக்கபடுகிறது. விடாது அரசியல்.
நட்புடன்
தீபாஸ்
அத்தியாயம்
01
கதிரேசன் அவர்களின் சமூகத்திற்கான சாவடியைச் சேர்ந்து இருக்கும்
மைதானத்தில், என்றும் போல அன்றைக்கும் விடிகாலையிலேயே தங்களின் தெருவில்
இருக்கும் ஆர்வம் உள்ள பிள்ளைகளுக்குச் சிலம்பாட்டம் சொல்லித்தர கிளம்பினான்.
செல்லும் வழியில் இருக்கும் செவ்விழியனை எப்போதும்
போல அழைத்துக்கொண்டு போக, அவனின் வீட்டு வாசல் படியேறினான்
கதிர்.
வீட்டின்
உள்ளிருந்து செவ்விழியனின் அம்மாவின் வார்த்தைகள் வந்து அவனில் காதில் மோதியது,
“உனக்கு ஏன்டா இந்தப் பொல்லாப்பு? உனக்கு வேணாம்னா வாங்காத. எதுக்கு, வாங்குவேன்னு சொல்றவங்க கூட சண்டைக்கு நிற்கிற? ஓட்டுக்கு நிக்கிறவன் கொடுக்குறான், அவன் என்ன சும்மாவா கொடுக்குறான்?
நம்மகிட்ட வாங்கின வரிப்பணத்தை சுருட்டி வச்சிருக்க
அரசியல்வாதிகிட்ட ரூபா வாங்கறதுக்கு, எதுக்கு தயங்கணுமுன்னு கேட்குறதுல
என்ன தப்பு இருக்கு?
உன் தாத்தா நீதி, நியாயம்னு பேசி என்னத்த சாதிச்சிட்டார்? இவரைப்போல இருக்குற மத்த பெரியவங்க எல்லாம் பேரனை வம்பு சண்டைக்கு போக
விடாம அடக்கி வப்பாங்க.
ஆனா, இங்க உன்னைய தூண்டிவிடுவதே அவர்தான். எல்லாம் என் நேரம்.” என்று செவ்விழியனைச் சொல்லிக்
கொண்டிருந்தார் அவனின் அம்மா வாணி.
அமைதியாக இருந்த விழியன் கடைசியாக அவனின் தாத்தாவைப்பற்றி
சொல்ல ஆரம்பித்ததும், பேருக்கு ஏற்றாற்போல் செவ்வரியோடிய கண்ணாக மாறி பேச
எத்தனித்தான்.
சற்று எட்ட உட்கார்ந்திருந்த அவனின் தாத்தா
காளிதாஸ், அவரின் கையில், ‘ஸ்டைலுக்காக நான் உபயோகிக்கிறேன்.’ என்று வைத்திருக்கும் அந்த
நீண்ட ஊன்றுகோலை வைத்து விழியனின் முதுகில் சுள்ளென்று ஒரு போடு போட்டார்.
அதில் கோபத்துடன் அவரின் பக்கம் திரும்பியவனை, ‘ஸ்... பேசாதே!’ என்னும் விதமாக சைகை செய்தார்.
அவர் அவ்வாறு சைகை செய்ததும், “உச்!” என்ற சலிப்பு சத்தம் எழுப்பியபடி
செவ்விழியன் எழுந்து, தானும் மைதானத்துக்கு கிளம்ப ஆரம்பித்தான்.
விழியனைக் கூப்பிட வந்த கதிர், காதில் விழுந்த வாணி அம்மாவின் சத்தத்தில் உள்ளே போக தயங்கி அங்கேயே நின்று
கொண்டான்.
மனதினுள், ‘அடடா! நைட் ஆரம்பிச்ச பஞ்சாயத்து இன்னும் முடியலபோல! சகுனம் சரியில்ல அதனால உள்ளே
போக வேணாம்’ என்று நினைத்து,
“விழியா... டேய் மாப்ள, வாடா... இன்னும் என்ன பண்ற?” எனச் சத்தம் கொடுத்தான்.
அவனின் சத்தம் கேட்டு சட்டையைப் போட்டுக் கொண்டே வாசலுக்கு
வந்த விழியனைத் தொடர்ந்து வந்த அவனின் அம்மா,
“ஏன்பா கதிர், நீயாவது இவனுக்கு சொல்லக்கூடாதா? சென்னையில பார்த்துக்கிட்டு இருக்குற வேலையை விட்டுட்டு, ஹோட்டலை எடுத்து நடத்த போறேன்னு சொல்றான்.
இவங்கப்பா நடத்திக்கிட்டு இருக்கிற அந்த ஹோட்டல் என்ன
நம்ம சொந்த கடையா? பதினைஞ்சு வருஷம் லீசுக்கு எடுத்தது.
அடுத்த வருஷம் அந்தக்கடையோட லீசு முடியப்போகுது. கடை உரிமைக்காரங்க காலி பண்ண சொன்னா இப்போ இருக்கிற விலைவாசியில வாடகைக்கு
வேறு கடை போட்டு உழைச்சா கையில மிஞ்சுமா?
இதுக்காகவா இவனை படிக்க வச்சேன்? இவன் என்னமோ இங்க இருந்து தொழில் பார்த்துட்டே ஊரை மாத்திக் காட்டப் போறானாம். இதெல்லாம் நடக்குற காரியமா?
நீ பாரு, எப்படி லட்சணமா சென்னையில
வேலை பார்க்குற! அதேபோல இவனும் பார்க்கும் வேலையை காப்பாத்திக்கிட்டா
பிரச்சனை இல்லாம போயிடும்ல. நீ அவனுக்கு எடுத்து சொல்லேன்.” என்று சொன்னார்.
அவர் சொல்ல சொல்ல மனசுக்குள், ‘ஹய்யோ நிலைமை புரியாம பேசுறாங்களே! கொரோனாவால லாக்டவுன்னு வீட்டுக்கு வந்தாச்சு.
வொர்க்
ஃப்ரம் ஹோம் ன்னு உசுரை வாங்குறான். அதுவும் பாதி சம்பளம்தான்
கொடுக்குறான்.
ஒன்னுமே இல்லாம போறதுக்கு இது பெட்டர்னு காலத்த
ஓட்டிக்கிட்டு இருக்கோம். இவனுக்காவது அப்பா நடத்துற
தொழில் தெரியும். நமக்கு அதுவும் கிடையாது.’
என்று மனதிற்குள் புலம்பினாலும் வெளியில் அவரிடம்
எதுவும் சொல்லாமல், “ம் சரிம்மா.” என்ற வார்த்தையை மட்டும் உதிர்த்தான்.
அதற்குள் டிராக் பேண்ட் மாற்றிக்கொண்ட விழியன், “எம்மா, நீங்க வேற சும்மா இருங்கம்மா, நான் சொன்னா சொன்னதுதான். நீ வாடா போலாம்.” என்று கதிரிடம் சொல்லியபடி, அவனுக்கு முன்னால் இவன் படி இறங்கினான்.
“ஏலேய் விழியா, உன் அண்ணனும், அண்ணியும் பெங்களூருல இருந்து
இன்னைக்கு இங்க வர போறாங்க. அங்கே திரும்ப ஃபுல் லாக்டவுன்
போடும் சூழல் வந்திருக்குதாம்.
அதனால, நீ வேகமா வந்து மேல இருக்கும்
ரூமை காலி பண்ணிட்டு, அவங்க வந்ததும் தங்குறதுக்கு மாடியை கொடுத்துரு நீ
கீழ உன் தாத்தா ரூமுக்கு வந்துரு.” என்றார்.
அவரைத் திரும்பிப் பார்த்து, “ஏனாம், உங்க பெரிய மகனுக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு? அதெல்லாம் முடியாது.” என்று சொல்லிக்கொண்டே,
அங்கு நின்று கொண்டிருந்த அவனின் தாத்தாவிடம், ”ஒய் ஜேம்ஸ்பாண்ட், என்னைய உங்க மருமக கூட சேர்ந்து
பேசியே கவுத்தலாம்ன்னு பார்த்தீங்க உங்களுக்குத்தான் ஆப்புடி.” என்று சொல்லிவிட்டு கதிருடன் கேட்டை விட்டு வெளியில்
சென்றான்.
அவன் அவ்வாறு சொன்னதும் அவனை திட்ட வாய் திறந்த தன்
மருமகள் வேணியிடம், “ஏம்மா வேணி, நீ கத்த கத்த அவன் பிடிவாதம் கூடிக்கிட்டேதான் போகும், நான் பேசுறேன் அவன்கிட்ட!” என்று சொன்னார்.
“என்னமோ போங்க மாமா, இந்த பையன் யார் சொல்றதையும் கேக்காம அடங்காப் புள்ளையா திரியிறான்.
ஏதோ உங்களுக்கு மட்டும் கட்டுப்படுறான். ஆனா, நீங்க அவனை கண்டிச்சு வைக்காம, அவன் இழுக்குற வம்பு தும்புக்கு தூபம் போடுறீங்க.
இந்த பயலை நினைச்சாத்தான் எனக்கு வருத்தமா இருக்கு.” என புலம்பிக்கொண்டே அவரின் மூத்த மகன், மருமகள் இன்று வருவதால் விருந்து தயார் செய்ய அடுப்படிக்குள் விரைந்தார்.
இருவரும் மைதானத்தை நோக்கி நடக்கும் போது கதிர் கேட்டான்.
“என்னடா விழியா, அம்மா என்னமோ சொல்றாங்க, நீ கடை எடுத்து நடத்த
போறதா சொல்றாங்களே. அது உண்மையா?” எனக் கேட்டான்.
அவனிடம் விழியன், “கதிர் உனக்கே தெரியும், எனக்கு அங்க வேலை செட்டாகலை. எல்லோரும் படிக்கிறாங்க நாம ஒரு டிகிரி கூட வாங்காம இருந்தா ஒருத்தனும்
மதிக்கமாட்டான். அதுக்காகத்தான் இஞ்சினியரிங் முடிச்சதே, நமக்கு எல்லாம் யார்கிட்டயும் வேலை பார்க்குறது செட் ஆகாது.
சின்ன வயசுல நீ, நானு, ஸ்ரீராம் மூணு பேரும் சேர்ந்து பெருசா பிஸ்னஸ் பண்ணுவோம்னு
பேசுவோமே அதுக்கான நேரம் இப்போ வந்துருச்சு.
நேத்து நீ போனதும் ஸ்ரீ என்னய பார்க்க வந்தான். நம்ம பஸ் ஸ்டாண்டுக்கு பின்னாடி மெயின் ரோட்டுல எம்.எல்.ஏ அகத்தியனின் ஹோட்டல் ஒன்னு மூடிக்கிடக்குது.
உனக்கு அந்த கடை தெரியும்தானே? அந்தக் கடை லீசுக்கு விடுவதா தகவல் கிடைச்சிருக்கு!”
“ஸ்ரீயோட அப்பா எம்.எல்.ஏவின் கையாள் ஆச்சே!” யோசனையுடன் கேட்டான் கதிர்.
“ஆமா, அதனால எம்.எல்.ஏ கடை லீசுக்கு வரும் விஷயத்தை ஸ்ரீராம் அப்பா கிட்ட
சொல்லியிருக்கிறார். வீட்டுக்கு வந்து விஷயத்தை சொன்னதும் ஸ்ரீராமுக்கு
அந்த கடையை தானே எடுத்து நடத்தணும்னு தோனியிருக்கு!
மொத்தமாக பணம் போட்டு ஸ்ரீ மட்டும் தனியா லீசுக்கு
எடுக்க முடியாதாம். அதனால என்ன செய்யலாம்னு என்கிட்ட பேச வந்தான்.
நாம சேர்ந்து வாங்கி நடத்துவோமான்னு கேட்டேன் உன்னையும்
சேர்த்துக்கலாம்னு சொன்னேன். எனக்கு ஹோட்டல் பத்தி எல்லாம் தெரியும், சிறப்பாக கொண்டு போகலாமுன்னு சொல்லியிருக்கேன்.”
எனப் பேசிக்கொண்டே இருவரும் அவர்களின் தெருவை
அடுத்து உள்ள அந்த மைதானத்தை அடைந்தனர்.
கதிர் யோசனையுடன் விழியனிடம், “நீ சொல்றதை கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனா, நீ சொல்ற அளவு பணத்தை மூனு பங்காக போட்டால் என்னோட
பங்குக்கு 16 லட்சம் வரை நான் போடணுமே. அதுதான் முடியுமான்னு யோசிக்கிறேன்.
தங்கச்சிக்கு இப்போ வரன் பார்க்க ஆரம்பிக்கணுமாம். அம்மா சொல்லிக்கிட்டு இருக்காங்க இந்த நேரத்தில எனக்கும் 16 லட்சம்பணம்
தாங்கன்னு வீட்டில கேட்க முடியாது.” என்றான்.
அவனின் தயக்கத்தை உடைக்க விழியன் கூறினான். “உன்னால முடிஞ்சதை நீ போடு, மீதத்தை நான் என் தாத்தாகிட்ட
பேசி காசை தேத்தி சமாளிச்சிருவேன். அந்த கடை கோடிகளில் போகும். ஏதோ ஸ்ரீராம் அப்பாவால இந்த விலைக்கு வந்திருக்கு.” என்றான்.
இவர்கள் இருவரும் வருவதை முன்கூட்டியே, அங்கே வந்திருந்த ஸ்ரீராம் பார்த்துவிட்டு இவர்களை நோக்கி வந்தான்.
தங்களை நோக்கி வரும் அவனைக்கண்டு, “இன்னைக்கு என்னடா இவன் சீக்கிரமா வந்துட்டான்? எப்பவும் கம்பு சுத்தி முடிக்கும் போது தானே வருவான்.”
என அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த ஸ்ரீராமை
பார்த்து ஆச்சரியத்துடன் சொன்னான்.
அவன் சொன்னதைக் கேட்டவாறு அவர்கள் இருவரின் அருகில்
வந்த ஸ்ரீராம், “டேய் நீங்க வேற, எனக்கு நைட் எல்லாம் தூக்கமே வரலை, எம்.எல்.ஏ வோட ஹோட்டலை எப்படியும்
கைப்பத்திடணும்.
இதுபோல
சான்ஸ் கிடைக்கிறது கஷ்டம். மெயின் ஏரியாவில கடை இருக்குது. பிக்கப் ஆகிட்டா லைஃப்பில் செட்டில் ஆகிடலாம்.
அதனால நாம காலையிலேயே போய் எம்.எல்.ஏவை பார்த்து பேசிட்டு வந்துடலாம். வேறு யாரும் நமக்கு முந்திடக்கூடாதுல.” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்ட விழியன், “காலையிலன்னா எத்தனை மணிக்கு? இப்போவே மணி ஆறேகால் ஆயிடுச்சு.” என்றான்.
அதற்கு ஸ்ரீயோ “இன்னைக்கு அரைமணி நேரம் மட்டும், கம்பு சுத்த சொல்லி தந்துட்டு, கிளம்பிடலாம்டா.
நமக்குத்தான் கடை வேணும். அதுக்கு காலையிலேயே போய் எம்.எல்.ஏவை பார்த்து கடைக்கு எவ்வளவு, என்ன, ஏதுன்னு பேசி நமக்கு தரச்சொல்லி உறுதி பண்ணிடுவோம்.
அப்படியே அட்வான்ஸ் எதுவும் கேட்டாருன்னா, இரண்டு நாளில் கொண்டுவந்து தாரோம்னு சொல்லிட்டு வந்துடலாம்.” என்றான்.
“ம் சரிதான் ஸ்ரீராம், இந்த கொரோனா விட்டு தொலையாது போல. எது எப்படியோ சாப்பிடும் பொருள், ஹோட்டல் சாப்பாடு இதுகளுக்கு மட்டும் எப்பவும் டிமாண்ட் இருக்கத்தான்
செய்யும். இன்னும் கொஞ்ச காலம் மத்த தொழில் எதுவும் ஒழுங்கா ஓடாது.
நாம படிச்சு வெளியில வந்ததும், படிப்புக்கு ஏத்த மாதிரி பெரிய கம்பெனியில, வொயிட் காலர் ஜாப் பாப்போமுன்னு, நம்ம வீட்டில எல்லாரும் நினைச்சாங்க. இந்த கொரோனா அதுக்கு நல்லா ஆப்பு வச்சிருச்சு.” என்றான் கதிர்.
அவன் அவ்வாறு சொன்னதும் விழியன், “இனி படிப்புல ஆர்வமா இருக்குற பிள்ளைகள் மட்டும்தான் படிப்பாங்க போல.
ஆன்லைன் வகுப்பு, படிக்கிற எல்லா பிள்ளைகளுக்கும் ஆர்வத்தை கொடுத்துடாதுடா. நாம படிக்கும் போது கட்டாயம் ஸ்கூலுக்கு போயித்தான் ஆகணும். படிப்பு வருதோ? வரலையோ? பத்தாவது வரையாவது படிச்சே ஆகணுமுங்கற கட்டாயம் இருந்துச்சு. அதனாலத்தான் முக்கால்வாசி பேர் படிச்சோம்.
ஆனா, இனி ஆன்லைன் வகுப்பே பிரதானம்னு
வந்துட்டா படிப்பில் இன்ட்ரஸ்ட் இருக்கிற பிள்ளைங்க மட்டும்தான் படிப்பாங்க.
கொரோனாவால ஸ்கூலுக்கு போகாத அடிதட்டு வர்க்கத்து. பிள்ளைகள் எல்லாம் சின்ன சின்ன வேலை செய்ய ஆரம்பிச்சிட்டாங்க.
சின்ன வயசில் கையில புழங்குற நூறு, ஐம்பது பணம் பெரிய விஷயமா தெரியும் சின்ன வயசுல கையில காசு வச்சு செலவு
செய்து பழகிடுவாங்க. அதனால இனி ஒரு வருஷத்துக்கு பிறகு ஸ்கூல் தொறந்தாலும்
போகணுன்ற நினைப்பு வராது.
இன்னைக்கு பெரிசா தெரியுற அந்த ஐம்பது, நூறு ரூபாய் பெரிய ஆளா வந்து குடும்பம் குட்டின்னு ஆகும் போது பத்தாது. ஆனா, அப்போ படிப்பும் இருக்காது. அதனால பெரிய வேலைக்கு போயி முன்னேற வாய்ப்பும் இருக்காது.
இம்புட்டு பேரு படிச்சு இருக்குற இந்த காலத்திலேயே
சமூகத்தில் நேத்து ஓட்டுக்கு காசு தாரேன்னு சொன்னதும் யோசிக்காம ஆளா பறந்து போய் கை
நீட்டுற மக்கள்தான் அதிகம்
படிப்பறிவு இல்லாம போயிடுச்சுன்னா கூமுட்டை
சுயநலவாதிகள் கூட பணம் இருந்தா ஆட்சிக்கு வந்துடுவாங்க. நாடு உருப்பட்ட மாதிரிதான்.
ஏற்கனவே இங்க பள்ளிக்கூட படிப்பு முடிச்சு வெளியில
வந்து டாக்டருக்கோ, இன்ஜினியருக்கோ படிக்க தனியா எக்ஸாம் எழுத பிரைவேட்டில்
படிக்கிற வசதி இருக்கணுமிங்கற நிலை வந்துருச்சு.” எனப் புலம்பிக்கொண்டே போனான். அவனின் பேச்சைக்கேட்டு ஸ்ரீராம்
“விடுங்கடா தேவையில்லாம அதை பேசிக்கிட்டு. அதோ பாருங்க பிள்ளைங்க அவங்களா கம்பு சுத்திக்கிட்டு இருக்காங்க. நாம சொல்லி கொடுக்க வந்த வேலையை முடிச்சிட்டு, பொழப்பை சரி பண்ண எம்.எல்.ஏ வை பார்க்க போலாம்.” என்றான்.
***
----தொடரும்---

No comments:
Post a Comment