anti - piracy

Post Page Advertisement [Top]

                                                     செவ்விழியன்


அத்தியாயம் 02

 

   மாடியில் இருக்கும் விழியனின் உடைகள் அனைத்தும் கீழே இருக்கும் அவனது தாத்தாவின் அறைக்கு மாற்றப்பட்டிருந்தது

   கீழ் வீடு போலவே, மாடியிலும் இரண்டு அறைகள் இருந்தன. வரவேற்பு அறையும், இரண்டு படுக்கை அறைகளும் மாடியில் உண்டு. அட்டாச்டு பாத்ரூம் வசதியுள்ள ஒரு படுக்கை அறையும், அவ்வசதியில்லா மற்றொரு படுக்கை அறையும் கொண்டது மாடி.

   இரண்டில் ஒன்றில் விழியன் தங்கி மாடியில் புழங்கினான். பெரிய வீட்டிலிருந்து அவன் அண்ணன் மதிக்கு வாக்கப்பட்டு வந்த அந்த அதிசய அண்ணி திவ்யாவுக்கு சங்கடமாக இருக்குமாம். எனவே, கீழே தாத்தாவின் அறையில் விழியன் தங்கிக்கொள்ள வேண்டுமாம்

   ‘என்னங்கடா இது அநியாயமா இருக்கு? என் வீட்டுல எனக்கே இப்படி ஒரு சோதனை.என்று நினைத்துக்கொண்டான் விழியன்

   ஆனால் அவனது எண்ணத்தை வீட்டில் சொல்லாமல் அமைதியானான். அவனது அம்மா சற்று முன் மாடியிலிருந்து எடுத்து வந்து அலமாரியில்  அடுக்கியிருந்த உடைகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு, வீட்டின் பின்பக்கம் தாத்தா உபயோகப்படுத்தும் குளியல் அறைக்குச் சென்றான்

   அந்த குளியலறை வீட்டினைச் சுற்றியிருக்கும் காம்பவுண்டு சுவரையும் வீட்டு மதிலையும் இணைத்து நீளவாக்கில் மேல் கூரை சிமெண்ட் ஸ்லாபால் மூடப்பட்டு, சிமெண்ட் கிராதி கொண்டு சுவற்றின் மேல்பகுதியில் கால்வாசி வெண்டிலேசனுக்காக வைத்து கட்டப்பட்டிருந்தது

   மேலும் அதற்குள் சிறியதாக ஓர் இரும்பு கதவுடன் சேர்ந்த மறைவு குறுக்குச்சுவரும் இருக்கும். அந்த இரும்புக்கதவைத் திறந்தால் கக்கூஸ் வசதியும் இருக்கும்

   அதன் வலது மூலையில் பெரியதாக சுவற்றோடு கட்டப்பட்டிருக்கும் சிமெண்ட் தொட்டியில் முனிசிபல் தண்ணீர் வந்து விழும். அதை தேக்கி வைத்து தேவைகளுக்குப் புழங்கிக்கொள்ளவே அப்பெரிய தொட்டி மேல்மூடி வசதியுடன் இருக்கும்

   தாத்தா காளிதாஸ் முன்னால் கம்யூனிஸ்ட். தற்பொழுது அக்கட்சியில் அவர் இல்லையென்றாலும் அதன் கொள்கையில் பற்றுள்ளவர். தெருவில் முனிசிபல் தண்ணீர் வரவில்லை என்றாலோ, தெருவிளக்கு எரியவில்லை என்றாலோ விண்ணப்பம் எழுதி எல்லோரிடமும் கையெழுத்து வாங்கி, நகராட்சியிடம் பெட்டிசன் கொடுத்த பின்பே ஓய்வார்

    அரசு திட்டங்கள் பற்றிய விமர்சனங்களைச் சுற்றி உள்ளோருக்கு விமர்சிப்பார். அத்திட்டங்களை எவ்வழிகளில் பெற வேண்டும் என்ற ஆலோசனைகளை உரியோருக்கு வழங்குவார்

   இதுபோன்ற அவரின் செயல்பாடுகளால், அரசு உதவி விவரம் தேவைப்படுவோர்களிடம், ‘நம்ம காளிதாஸ் அய்யாவ போய் கேளுங்க. விவரம் தெரிஞ்ச மனிதர்.என்று பரவலாகச் சொல்லுவர்

   இத்தன்மை பிறருக்கு உதவுபவர் என்ற அடையாளத்தை அவருக்கு உருவாக்கியிருந்தது

   குறிப்பாக பாட்டாளிகளுக்கும், இயலாமையில் உள்ளோர்களுக்கும், பணத்தைக் கொண்டு உதவி செய்யாவிடிலும், இதுபோன்ற அரசு உதவிகளைப் பெற்று தருவதில் அவரின் உதவும் ஆதங்கத்தை ஓரளவு தனித்துக்கொள்பவர்

   அவர் செய்யும் இதுபோல விஷயங்களை அருகில் தனது பேரன் விழியனை வைத்துக்கொண்டே செய்வார். அவரின் சமூகம் பற்றிய ஆதங்கத்தையும் தனது பேரன் விழியனிடமே பகிர்ந்து கொள்வார். அவரது மனைவி இறந்த சமயம் அவரின் மருமகள் வயிற்றில் ஜனித்த இரண்டாம் பேரப்பிள்ளையான விழியனிடம் தனது துணையின் ஜாடையை தேடினார்

   விழியனை அவரின் தனிமைக்கு துணையாக தன் மனைவி அனுப்பிய வரம் என்று நினைத்தார். மூத்த பேரன் மதி மீது அன்பிருந்தாலும் மதி அவனுண்டு, அவன் படிப்புண்டு, அவனின் அம்மாவுண்டு என்று குறுகிய வட்டத்துக்குள் இருந்தான்

    ஆனால் துடிப்பும் குறும்பும் ஒருங்கே கொண்ட விழியனோ தன்னை பிடிப்பாக நோக்கும் அவரின் தாத்தாவைப் பற்றிக்கொண்டான். அவருடனே அதிகம் இருக்க விரும்பி அவரின் நியாய, அநியாய கொள்கைகளையும் தனதாக்கிக் கொண்டான் செவ்விழியன்.

     அந்த போராளி குணம்தான் இப்பொழுதும் மாடி முழுக்க தனது அண்ணனுக்கே தாரை வார்க்க வேண்டும் என்ற பேச்சில் காண்டானது

  ‘ஏன்? நான் அந்த இன்னொரு அறையில் தங்கி கொள்வதில் என்ன பிரச்சனை? மாடி தனியா இல்லாத வீட்டில் எல்லாம் ஒத்த அறையை கல்யாணம் ஆன ஜோடிக்கு கொடுத்துட்டு மத்தவங்க எல்லோரும் ஹாலில் படுத்து ஒரே கூரையின் கீழ ஒன்னாக குழுமி வாழலையா? அதுதானே வாழ்க்கை.

   ஆனா இங்க இவங்க மாடியில மட்டும்தான் இருப்பாங்களாம், பகல்லகூட யாரும் சும்மா அங்க போக கூடாதாம். ஆனா, மூனு வேலை கொட்டிக்கிறதுக்கு மட்டும் கீழ வருவாங்களாம்

    எங்க அம்மா வீட்டு வேலை, கடை வேலைக்கு சமுத்திரத்தை வைத்து அரைக்க வேண்டியது, நறுக்க வேண்டியது எல்லாத்தையும் செய்துவிட்டு இவுங்களுக்கும் விதவிதமா தனியா சாப்பாடு வேற செய்து வைப்பாங்களாம்

   இந்த நொண்ணன் அவன் பொண்டாட்டிய உடம்பு நோகவிடாம, சாப்பிட மட்டும் மகாராணிபோல கீழே கூட்டிட்டு வருவானாம்.என்ற கோபம் விழியனுக்கு உண்டு

   அவனின் புது பிஸ்னஸ் ஆரம்பிக்க வீட்டில் பேச வேண்டியிருந்தது. அதனால் மாடிப்பிரச்சனை பற்றிய கோபத்தை இப்போது காட்டாது அமைதி காத்தான்

    அவன் தனக்குத்தானேம்கூம்... இப்போ இதுக்காக எதுவும் பிரச்சனை பண்ண கூடாதுடா விழியாஎன அவனுக்கு அவனே மனதினுள் சொல்லிக்கொண்டான்

   ‘குளித்துவிட்டு சாப்பிடும்போது எம்.எல்.ஏ கடையை லீசுக்கு எடுக்கும் விஷயத்தை வீட்டில் பேசி, சம்மதம் வாங்கணும். இந்த தாத்தா என் பக்கம்தான் நிப்பாரு. இருந்தாலும் இந்த நேரத்தில் அவர்கிட்ட எகிறி கிட்டு இருந்தால் வேணும் என்றே காலை வாரிவிடவும் வாய்ப்பிருக்குது.

   முந்தைய நாளின் இரவில், ஸ்ரீராம் தன்னிடம் பேசவந்த போது இருவரும் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து எம்.எல்.ஏ அகத்தியனின் கடையை எடுத்து சேர்ந்து நடத்துவது பற்றி பேசிக்கொண்டிருந்தனர். வீட்டினுள் தனது அம்மாவிடம் சித்தி மாலதி பேசிக்கொண்டிருந்தார்.

   மாலதியைத் தேடி அவரின் கணவர் வாசலுக்கு வந்ததை பார்த்த ஸ்ரீராம், “அப்போ விழியா, நாம சேர்ந்து கடை எடுத்து நடத்துறோம். மத்த விஷயங்களை நாளைக்கு சொல்றேன். காலையில் ஊர் இடத்தில கம்பு சுத்த சொல்லித்தர வரும்போது பேசுவோம்.எனச் சொல்லிவிட்டு கிளம்பினான்

   மாலதியின் கணவர் கிளம்பிய அவனைப் பார்த்து, “என்ன ஸ்ரீராம், எலெக்சனுக்கு மனு தாக்கல் செய்ய நாள் நெருங்கிடுச்சு. இந்த தடவையும் ஆளுங்கட்சி சார்பா நம்ம தொகுதியில் சீட் வாங்க போறது எம்.எல்..அகத்தியன்தானே. ஓட்டுக்கு காசு போன தடவை ஐநூறு கொடுத்தது போல, இந்த தடவையும் தலைக்கு ஐநூறு கொடுத்துடுவாங்க தானே?” எனக் கேட்டார்

   அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டபடி அத்தெருவைச் சேர்ந்த இருவர் விழியனின் வீட்டை கடக்கையில், இவர்களின் வார்த்தைகளை உள்வாங்கிவிட்டு அவர்களும் பேச்சில் இணைந்தனர்

   “எப்பா ஸ்ரீராம், அப்போ ஓட்டுக்கு பிரச்சாரம் இன்னும் நாலு நாளில களை கட்டிரும். பிரச்சாரத்துக்கு ஆள் சேர்க்கும் போது போன தடவைய போல மேலத்தெருவை மறந்துடாதே. உங்க அப்பாகிட்ட சொல்லி பிரச்சார கூட்டத்துக்கு வரவங்களுக்கு ரூபாயும் புரோட்டாவும் தருவதுக்கு பதிலா இந்த தடவை எம்.எல்.ஏவை ரூபாயும், பிரியாணி பொட்டலமும் குடுக்க சொல்லு.என்றாள் ஒரு பெண்மணி.

    அப்பொழுது தனது கணவன் குரல் கேட்டதும் வாசலுக்கு வந்த மாலதி, “என்ன கற்பகம் கா, விட்டா குவாட்டர் பாட்டிலும் சேர்த்து குடுக்க சொல்லுவீங்க போல?” எனச் சொன்னார்

   எப்படித்தான் இந்த மனைவிகள் அவர்களின் கணவன்மார்களின் வருகையை மட்டும் எட்டு அரங்குகளுக்கு அப்பால் இருந்தாலும் உணர்ந்து கொள்கிறார்களோ தெரியாது.

   அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்த மாலதி சித்தி வெளியில் வந்ததும் அவரின் பின்னே அவளை வழியனுப்ப விழியனின் அம்மா வாணியும் வந்தார்.

   மாலதி அவ்வாறு கேட்டதும் அந்த பெண், “ச்சேய் அந்த கண்றாவியை நான் எதுக்கு கேட்க போறேன்? என் வீட்டுக்காரர் அதை கேப்பார். கட்சி கூட்டத்துக்கு ஆள் கணக்குக்கு போனா, சம்பளமா குடுக்குற நூறும், இருநூறும் பெரும்பாலும் அந்த மனுசர் பிடிங்கிட்டு போய் டாஸ்மார்க் கடையில கொடுத்துருவாரு. கூட்டத்துக்கு போனா சம்பளத்தோட அவருக்கு பாட்டில் சேர்ந்து கொடுத்துட்டாங்கன்னா என் கைத்துட்டு அவர்கிட்ட களவு போகாம என் கையில இருக்கும்ல!என்றாள்.

   இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே வீட்டின் உட்புறம் இருந்து வந்த அவனின் தாத்தா காளிதாஸ், “ராஸ்கல்ஸ் நீங்க இப்படி இருந்தா எங்கடா நாடு உருப்படும்? இந்த ஐநூறும், நூறும் எத்தனை நாளைக்கு உன் வீட்டு அடுப்பை எரியவைக்கும்

   காசுக்கு உங்க ஓட்ட வித்துட்டா பதவிக்கு வந்தவன் என்ன நினைப்பான்? ஒவ்வொரு ஓட்டுக்கும் இவ்வளவு பணம் கொடுத்துருக்கோம். அப்போ மொத்த செலவு இவ்வளவு ஆகியிருக்கு. ஜெயிச்சு பதவிக்கு வந்தா ஓட்டுக்கு செலவளிச்ச துட்டை அதுக்கான வட்டி இம்புட்டுன்னு கணக்கு போட்டு இந்த ஐந்து வருடத்துக்குள் சம்பாதிச்சிடணும் அப்படின்ற எண்ணம்தான அவுங்களுக்கு நிக்கும்

   அப்போ கொள்ளை அடிச்சது போக மிச்சம் மீதியானதுதான நமக்கான திட்டங்களுக்கு செலவு செய்வாங்க. நாட்டை வித்துட்டு போயிருவான்

   முன்னாடி எல்லாம் பிரச்சாரத்தப்போ தலைவர்கள் பேச்ச கேக்க ஜனங்கள் தானா திரண்டு வந்து விடிய விடிய பேச்சை கேப்பாங்க. ஆனா, இன்னைக்கு பிரச்சாரம்னாலே எதிர்கட்சியை தாக்குவதுதான் நோக்கமுன்னு ஆகிப்போச்சு

     காசுக்கு ஆட்களை வரவச்சு கூட்டத்தை கூட்டி இம்புட்டு மக்கள் ஆதரவுன்னு பொய்யா காமிச்சு அரசியல்வாதி அவனையே ஏமாத்திக்கிறான். மத்தவங்களையும் ஏமாத்துறான். அப்படி துட்டுக்கு மக்களை திரட்டுறவன் எவனுக்கும் வரலாறு தெரியல

   திட்டங்கள் பற்றிய தெளிவான அறிவு இல்ல. காருக்குள்ள இருந்தே கசங்காத வெள்ளை வேஷ்டி, சட்டையை மட்டும் மாட்டிக்கிட்டு ஜம்முனு வந்து அரசியல் பண்றேன் என கெஜட் ஆபீசர் லுக் வேற. மடிப்பு கலையாம வேஷம் கட்டி, காச காட்டி மக்களை ஏமாத்த ஷோக்கு காட்டும் சொக்கட்டான்களா இன்னைக்கு அரசியல்ல இருக்காங்களே!” என்றார்.

அப்பொழுது அவர்கள் பேச்சில் இணையப்போன செவ்விழியனைத் தடுத்தான் ஸ்ரீராம்

   ‘தான் இங்கு இருக்கும் இவ்வேளையில் அதுவும் அவரின் பிராப்பர்டியை லீசுக்கு எடுக்குற இந்த நேரத்தில் எம்.எல்.ஏவை பத்தி நெகடிவ்வா இவன் வேற வாயை விட்டு, கட்சிக்கு எதிரானவங்க நாங்கன்னு மேலிடத்தில் எவனாவது போட்டு கொடுத்துட்டானா காரியம் கெட்டுச்சு.என்ற எண்ணத்தில்

    “விழியா நாம பேசி எதுவும் ஆகப்போறதில்ல.என்றவன், “அம்மா இவனை உள்ள கூட்டிகிட்டு போய் சாப்பாடு போடுங்க‌.என விழியனின் தாயிடம் கூறியவன், விழியனைப் பார்த்து, “அப்போ நீ சாப்பிடு. நான் வரேன் விழியா! எனக்கு வேலையிருக்கு.எனச்சொல்லி அங்கிருந்து நழுவிச் சென்றுவிட்டான்.

   அவன் சென்றபின் இன்னும் இருவர் கூடினர். அவர்களிடம் மாலதி சித்தியின் கணவர், “ஆமா, நாமளா காசு வேணுமுன்னு கேக்கலையே. அவனா குடுக்குறான். ஊர் காசை கொள்ளையடிச்சு வச்சிருக்கான். அது நமக்கு சேரவேண்டிய காசுதான். யார் காசு கொடுத்தாலும் வேணாம்னு சொல்லாம வாங்கி வச்சுக்கோங்க.எனப் பொதுப்படையாக கூறினார்

   அதைகேட்ட விழியன், “ஓட்டுக்கு துட்டுன்னு எவன் கொடுத்தாலும் வாங்கிட வேண்டியதுதானா சித்தப்பா? அதெப்படி அவன் நம்மளோட பணத்தைத்தான் தரான்னு சொல்லலாம்

   இப்படி உழைக்காம கை நீட்டி காசு வாங்குங்கன்னு பெரியவங்க நீங்களே சொல்லலாமா? ஏற்பது இகழ்ச்சி அப்படின்னு நிமிர்வா வாழ்ந்த காலம் மலை ஏறிப்போச்சா

  கொள்ளை அடிச்ச பணத்தைத்தானே கொடுக்குறான்னு சொல்றீங்களே. அப்போ அவன் கொள்ளை அடிச்சதை சரின்னு ஒத்துப்போவது போல ஆகிடாதா

  இதுபோல ஓட்டை காசு கொடுத்து வாங்கியவன் ஆட்சிக்கு வந்தா, செலவழிச்ச காசை பலமடங்கா மக்களோட திட்டத்துக்கு செலவு செய்கிறதை விட கொள்ளையடிக்கிறது சரின்னு சொல்றது போல ஆகிடாதா? எப்படி இப்படி பேசுறீங்க? இங்க என்ன அரசியலா நடக்குது? அரசியலை ஒரு பிஸ்னசா மாத்தி வச்சிருக்காங்க.என்று ஆதங்கப்பட்டான்

   அவன் அவ்வாறு சொன்னதும், “ஏப்பா விழியா, உனக்குத்தான் பழமொழி சொல்ல தெரியுமா? அதே ஆத்திச்சூடியிலஐயம் இட்டு உண்சொல்லிருக்காங்கதானே! அவன்ட நிறைய இருக்கு கொடுக்குறான். நாம வாங்குறோம் அவ்வளவுதான்.என்றார்.

   “அட சித்தப்பா, ஐயம்னா உணவு. ஐயம் வேறு பிச்சை வேறு; உணவில்லாதோர்க்கு வழங்குவது ஐயம்; பிச்சை எடுப்போருக்கு நாம் இடுவது பிச்சை. அதாவது, நீங்க சொன்ன ஐயமிட்டு உண் என்பதன் கருத்து என்னன்னா, உணவு தேவைப்படுவோர் யாராவது இருப்பின் அவருக்கு உணவிட்ட பின் உண்ணுதல் வேண்டும்

   அரசியல்வாதி என்ன அப்படியா? வேட்பாளர்கள் சாப்பிட்டாதான் சாப்பிடுவானா? அவன் நமக்கு பிச்சை போடுவதாதான் நினைப்பான். பிச்சை கூட சக மனுசனுக்கு போடுவது. அவன் நம்மை சக மனுஷனா எல்லாம் பார்த்து பணம் தரலை. நம்மளை அவனோட ப்ராடெக்டா பார்க்கிறான். அவனோட தேவைக்கு உபயோகப்படுத்திவிட்டு குப்பை போல தூக்கி போட்டுட்டு போயிடுவான்.என்றான்.

  அங்கு தர்க்கம் வலுப்பதுபோல தெரியவும் செவ்விழியனின் அம்மா, “விழியா, வயிறு பசிக்குதுன்னு அப்போவே சொன்ன. உள்ள வா சாப்பாடு போடுறேன்.என விழியனை அழைத்தவர்

   தங்கையிடம் திரும்பி, “மாலதி, உன் வீட்டுகாரர் உன்னை காணோம்னு தேடி வாசல்வரை வந்துட்டாரு பாரு, நீ கிளம்பு அவரோட. நாம இன்னொரு நாள் பேசலாம்.எனச்சொல்லி அங்கு குழுமியிருந்த அந்த நான்கைந்து பேரையும் கலைத்தும் விட்டவர், மகனை வீட்டுக்குள் கைப்பிடியாக கூட்டிக்கொண்டு வந்தும் விட்டார்.

   வீட்டிற்குள் வந்ததும் விழியனிடம், “என்னடா இது தேவையில்லாம ஊருக்கு உபதேசம் பண்ண கிளம்பிட்ட? அதுவும் அந்த மனுசர் அதுதான் மாலதி புருஷன்ட போய், அந்த ஆளே கிறுக்கு புடிச்சவன். எதுக்கு தேவையில்லாம நீ வார்த்தையை விடணும்? ஊரை திருத்தவா உன்னை பெத்திருக்கேன்இங்க இருந்தா இப்படித்தான் தேவையில்லாத பிரச்சனையைப் பேசி வம்பை இழுத்துக்கிட்டு வந்துருவ. அதான் இப்போ லாக்டவுன் எல்லாம் கொஞ்சம் தளர்த்திட்டாங்கதானே. அதனால உன் பெட்டியை கட்டிக்கிட்டு சென்னைக்கு போயி உன் ஆபீசுக்கு போகும் வழியை பாரு.என்றார்.அவர் அவ்வாறு சொன்னதும், “நான் இனி சென்னைக்கெல்லாம் போகலை.என்றான் விழியன்

    “என்னடா சொல்ற, அப்போ வேலை?” என்று அதிர்ந்து கேட்டார் வாணி.

    “நான், அப்பாவை போல ஹோட்டல் நடத்தப் போறேன்.என்று அவரிடம் சொன்னான் விழியன்.

    அவன் சொல்லி முடித்த மறுநிமிடம் சரமாரியான வசவுகள் வாணியிடம் இருந்து அவனை நோக்கி வந்தது.   ‘இதுக்கு மேல இப்போ பேசக்கூடாது, நாளைக்கு அப்பா இருக்கும் போது பேசலாம்.என நினைத்த விழியன் அவரின் வசவுகளைக் காதில் வாங்காமல் தட்டில் உள்ளதை பேருக்கு வயிற்றில் தள்ளிவிட்டு மாடிக்குச் சென்று படுத்துவிட்டான்

***

                                        ---தொடரும்---

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib