anti - piracy

Post Page Advertisement [Top]

                                              செவ்விழியன் (தீபாஸ்)                              


அத்தியாயம் 04

 

       வாட்ச்மேனோ ஸ்ரீராமிடம், “அதெல்லாம் உள்ள யாரும் போக முடியாது, அய்யா இல்ல. நீங்க போயிட்டு இன்னொரு நாள் வாங்க.என்றார்.

   “என்ன வாட்ச்மேன் இப்படி சொல்றீங்க? எத்தனை காரு வாசலில் இருக்கு. அத்தனை பேரும் எம்.எல்.ஏவை பார்த்து பேச வந்து உள்ளதானே இருக்காங்க. எம்.எல்.ஏவும் உள்ளதானே இருப்பாரு.என்றான்.

    “இங்க பாரு தம்பி, அய்யா முக்கியமான பேச்சு வார்த்தையில இருக்கார். தெரியாத யாரையும் இப்போ உள்ள விடக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா ஆர்டரு எனக்கு வந்திருக்கு. நீங்க இங்க நின்னு என் கூட வாதாடுறது வேஸ்ட்.

   நீங்க என்ன சொன்னாலும் நான் உங்களை இப்போ உள்ள விடப்போறது கிடையாது. போயிட்டு இன்னொரு நாள் அய்யா ஃப்ரீயா இருக்குறப்போ வாங்க. உள்ள கேட்டுட்டு அய்யா விட சொன்னா உங்களுக்கு கேட்ட திறந்து விடுறேன்.என்றார்.

     அவ்வாறாக வாட்ச்மேனுடன் விழியன் பேசிக்கொண்டிருக்கும் போது ஸ்ரீராம், தனது அப்பாவுக்கு போன் செய்து தாங்கள் அங்கு நிற்கும் விஷயத்தை சொல்லி, “உள்ளே விடமாட்டேகிறாங்க!என்று சொன்னான்.

    “இரு நான் வந்து உள்ள கூப்பிட்டு போறேன். நீ என்ன சொன்னாலும் அவன் கேட்கமாட்டான் நான் நேர்ல வந்தாதான்.என்று சொல்லிவிட்டு உள்ளிருந்த ஸ்ரீராமின் அப்பா ரங்கராஜன் கேட்டுக்கு வந்தார்

    வந்து வாட்ச்மேனிடம், “என் பையன் தான்... அய்யா இவங்களை இந்நேரம் வரச் சொன்னாங்க.என்று சொல்லவும்,

    வாட்ச்மேன், “நீங்க சொல்றீங்கன்னு தான் உள்ள விடுறேன். எதுவும் அய்யா திட்டுனா உங்களைத்தான் கைக்காட்டுவேன்.எனச் சொல்லிவிட்டு அவர்கள் மூவரையும் உள்ளே விட கேட்டை திறந்து விட்டான்.

   அந்த கேட்டினுள் நுழைந்தவர்கள் ஒரு பத்தடி தாண்டியதும் அந்த பில்டிங்கின் முன்னால் வராண்டாவில் சற்று பெரிதாக, பிரம்மாண்டமாக இருந்த கிட்டத்தட்ட பத்து, பதினைந்து பேர் அமர்ந்துகொள்ள போட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.

   எம்.எல்.ஏ அகத்தியனுக்கு வலது மூலையில் சுழல் இருக்கை போடப்பட்டு, அதில் அமர்ந்து தீவிரமாக மற்ற இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். இவர்கள் அருகில் போக போக அவர்களின் பேச்சின் சாராம்சம் இவர்கள் காதில் துல்லியமாக விழ ஆரம்பித்தது.

   “யோவ் நைனா, எலக்சனுக்கு மனு தாக்கல் பண்ண நாள் நெருங்கிடுச்சு. எனக்குத்தான் சீட்டுன்னு மேலிடத்தில் முடிவு பண்ணியாச்சு. அதனால இப்போ இருந்தே வேலை என்னென்ன செய்யணும்கிறதை பத்தி பேசிடலாம்.

    எந்தெந்த ஏரியால நமக்கு ஓட்டு கன்ஃபார்மா விழும், எந்தெந்த எடத்துல நமக்கு அகெய்ன்ஸ்ட்ட ஓட்டு போகுன்னு நினைக்கிறீர்? சாதிவாரியாக ஓட்ட எப்படி எப்படி தேத்தலாம்? எல்லாம் சொல்லு

    இப்போவே எவன் எவன புடிக்கணும், பேசி கவுக்கணும்னு முடிவு பண்ணிடலாம். சீட் தாக்கல் பண்ணி அறிவிப்பு வந்த பின்னாடி செலவுக்கு மேலிடத்தில் குடுக்குற காச மட்டும் நம்பிட்டு இருக்குற ஆள் நானு இல்ல. அதை தெரிஞ்சு தான் நமக்கே சீட்டை ஒதுக்குறாங்க.என்றார்.

    அப்பொழுது நைனாவுக்கு அடுத்து உட்கார்ந்திருந்தவர், “தலைவரே! ஆனா, மேட்டுத் தெருவில கொஞ்சம் நம்ம மேல அதிருப்தி.என்று இழுத்தான்.

   “என்னய்யா சொல்றான் அவன்?” என அதற்கும் நைனாவை பார்த்தே கேட்டார் அகத்தியன்

   அதற்கு அவர், “அந்த தெருவுல போன தடவை ஓட்டு மொத்தமும் நம்மளுக்குத்தான் விழுந்துச்சு. ஆனா அதுக்கு பிறகு தண்ணி பிரச்சனை, அந்த தெருவை ஒட்டி இருக்குற அந்த ஓடை, சாக்கடையா மாறி குப்பக் கிடங்காவும் மாறியிருக்குற பிரச்சனைன்னு எதையும் நாம கண்டுக்கலையாம். அதனால, இந்த தடவை அவிங்க ஏரியாக்குள்ள நாம ஓட்டு கேட்டு போனா, உள்ள விடக்கூடாதுன்னு முடிவெடுத்துருக்காங்க. அதைதான் ரத்தினம் சொல்றாப்ள!”  என்றார்.

 “அப்படியா ரத்தினம்?”

   “ஆமாங்க தலைவரே... விஷயத்தை கொஞ்சம் சீரியஸாத்தான் கொண்டு போக பார்க்குறாங்க, நம்மளை எதிர்க்கணும் என்ற விஷயத்தில தீவிரமாத்தான் இருக்காங்க.

     அதை அந்த தெருவுல உள்ள ஒரு நாலஞ்சு பேரு தூண்டி விட்டுக்கிட்டு இருக்காங்க, அந்த சமூகத்து நாட்டாமைய கூப்பிட்டு பேசி தன்னகட்டணும். அந்த நாலு பேரையும் கொஞ்சம் முடக்கிப் போடணும். அப்போதான் பிரச்சனையை  சமாளிக்க முடியும்.என்றான்.

       அதை கேட்ட அகத்தியன், “போன எலக்சன்ல ஒவ்வொரு ஓட்டுக்கும் துட்டை அள்ளி வீசி இருக்கேன். கைநீட்டி காசு வாங்கிட்டு, பிறகு அது செய்யல இது செய்யலன்னு சொல்லுதுக சனியனுங்க. கோபம் வருது. ஆனா, இது எலக்சன் நேரம் கோபப்பட்டு பிரச்சனை ஆகிடுச்சுன்னா ஓட்டு விழாது. அதை நினச்சு அடங்கி இருக்க வேண்டியிருக்கு.

   செலவழிச்ச காசை வட்டியோட நான் திரும்பி எடுத்தா தானே அடுத்த தேர்தலுக்கு செலவழிக்க முடியும்? காசு வாங்கிட்டு ஓட்டு போட்ட நாய்களுக்கு ரோசம் ஒரு கேடா?

     ஏன் நைனா அந்த ஏரியாவுல யார் பேச்சை ஜனங்க கேப்பாங்க? அந்த ஏரியா பெரியமனுசங்கன்னு சொல்ற நாலு நாட்டாமைங்க இருப்பாங்கள்ல அவங்களை ஆள்விட்டு இங்க கூட்டிட்டு வரவை. கொஞ்சம் அதுகளுக்கு கூடுதலா காச குடுத்து அங்க துள்ளிக்கிட்டு இருக்குறவங்களை எப்படி சமாளிக்கணும்னு சொல்லி அனுப்புவோம்.எனக் கூறினான்.

    அகத்தியனின் பேச்சுக்கு, “ம்... செஞ்சுரலாம். அது ஒன்னும் பிரச்சனை இல்லை‌.என பதில் கொடுத்தார் நைனா.

    அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை சற்று எட்ட நின்று கேட்டபடி கேட்ட விழியனுக்கோ, அகத்தியன் மேல் மனம் முழுதும் அத்தனை எரிச்சல் மற்றும் கோபம் உண்டானது.

   ஆனால் எதையும் வெளிக்காட்ட முடியாமல் இறுகிப் போய் இருந்தான். அதற்கு பின் எந்தெந்த ஏரியா யார் யாரை எல்லாம் பணப்பட்டு வாடாவுக்கு பிடிக்க என்று அங்கு அமர்ந்திருப்பவர்களிடம் கலந்து பேசி அகத்தியன் முடிவெடுத்தான்.

    அதன் பின் அவர்களிடம், “காலை டிபன், நம்ம தோப்புல ஏற்பாடு பண்ணி இருக்கேன். எல்லாரும் அங்க போய் சாப்பிட்டு கிளம்புங்க.என விடை கொடுத்தான் அகத்தியன்.

    பின் இவர்களின் புறம் திரும்பி, “ரெங்கா யாருய்யா அந்த மூனு பசங்க?” என அவர்கள் வந்ததை அவர் கவனித்து விட்டார் என காட்டிக்கொள்ள, தனக்கு நம்பிக்கையான எடுபிடிகளுக்குள் ஓராளாக இருக்கும் ஸ்ரீராமின் அப்பாவிடம் கேட்டார்.

     “தலைவரே... நேத்து அந்த பஸ் ஸ்டாண்ட் பின்னாடி மூடிக்கிடக்குற கடைய லீசுக்கு விடுறதை பத்தி நீங்க சொன்னதை என் பையன் கிட்ட சொன்னேன். அவனே அவன் கூட இவுங்க இரண்டு பேரை சேர்த்து கடை எடுத்து நடத்தணும்னு பிரியபட்டான். அவனோட ஃப்ரெண்ட்ஸுங்க  இவிங்க தான்

   அதான் யாரும் பேசறதுக்குள்ள முன்கூட்டி உங்ககிட்ட பேசிடுவோம்பான்னு சொன்னான். அதான்..... இப்போவே உங்க காதில போட்டு வைப்போம்னு காலையிலேயே வரச் சொன்னேன்.என்றார்.

    அவர் கூறியதை கேட்ட அகத்தியன், “எப்பா பெரிய தொகையாச்சே, அம்புட்டு காசு போட்டு லீசுக்கு எடுத்துட முடியுமா உன்னால? காசு உன்கிட்ட இருக்க வாய்ப்பில்லையே!” என்றார்.

    அவர் சொன்னதை கேட்டு அசடாக சிரித்து தலையை சொறிந்தபடி, “மொத்தமா அம்புட்டு என்னால போட முடியாது தலைவரே! அதான், மூனு பேரும் சேர்ந்து முதல் போட்டு கடையை எடுத்து நடத்துவோம்னு சொன்னான்.என்றார்.

    “ம். சரி சரி, யாருக்கோ கொடுக்குறத உனக்குன்னு கேக்கற கொடுத்துட்டா போச்சு.என்று சொன்ன அகத்தியன்

   இவர்கள் மூவரையும் பார்த்து, “இதுல ரங்கா மவன் எந்த ஏரியான்னு எனக்குத் தெரியும் நீங்க ரெண்டு பேரும்?” எனக் கேள்வி தொக்கி நின்றார்.

    அதற்கு கதிர் பதிலளித்தான். “நாங்க மூணு பேருமே மஞ்சப்பூ தெரு தானுங்கய்யா. எல்லாரும் ஒன்னுக்குள்ள ஒன்னு தான்.என்று பூடகமாக எல்லோரும் ஒரே இனம் எனக் குறிப்பிட்டான்.

   ஏனோ செவ்விழியனுக்கு பேசவே பிடிக்கவில்லை. சற்று முன்பு கூட்டத்தில் பேசப்பட்ட சாரம்சங்கள் அவனை மனதளவில் அத்தனை கொதிப்படையச் செய்திருந்தது

    அவனின் நிலையை முழுவதும் உணர்ந்து கொண்டவன் கதிரும் ஸ்ரீராமும்

   ‘எம்.எல்.ஏ பேசுறதை கேட்ட இந்த விழியன் காண்டாவானே......

    கடை டீலிங் நல்லபடி முடியிற வரை இவன் வாயை தொறக்காம இருக்கணும் ஆண்டவா!’ என ஸ்ரீ பயந்தான்.

    ஆனால், அகத்தியனோ இவர்கள் மூவரில் நிமிர்வுடன் நின்ற விழியன் மேல் ஆராய்ச்சியுடன் பார்வையை செலுத்தினார்

    மற்ற இருவரும் ஒருவித பவ்வியத்துடன் நின்றிருந்தனர். எனவே விழியனின் உடல்மொழி கண்டு, “இது யாரு ரெங்கா?” என விழியனை சுட்டிக் கேட்டார்.

    “தலைவரே, அவன்தான். எங்க தெருவுல போன தடவை நீங்க ஓட்டு கேட்டு வரும்போது தெருவுக்கு என்னென்ன தேவை இருக்குன்னு பெட்டிசன் கொடுத்தாரே முன்னால் கம்யூனிஸ்ட் காளிதாஸ், அவரோட பேரன். பேரு விழியனுங்க.என்றார்.

   “செவ்விழியன்னு சொல்லுங்க மாமா!என ஸ்ரீராமின் அப்பாவிடம் சொன்னான் விழியன்

     “, அப்போ தாத்தா போல நல்லா பேசுவன்னு சொல்லு. நம்ம கட்சியில பசங்க உறுப்பினரா சேர்ந்து இருக்காங்களா?” எனக் கேட்டார் அகத்தியன்.

    உடனே ஸ்ரீராம், “நான் காலேஜ் முடிச்சதும் மெம்பராகிட்டேன். நம்ம கட்சியில உறுப்பினர் கார்டு எல்லாம் என்கிட்ட இருக்கு. ஆனா, இவிங்க ரெண்டு பேரும் எந்த கட்சியிலேயும் மெம்பரா சேரல. ஒரு தடவை தான் நாங்க எல்லாம் ஓட்டே போட்டிருக்கோம்.என்றான்.

    “அப்போ, உடனே மத்த ரெண்டு தம்பிகளையும் நம்ம கட்சியில் உறுப்பினராக்கிடுங்க. எலெக்சன் வருதுல்ல. உன் பேரு என்ன சொன்ன செவ்விழியன்தானே. உன் தாத்தாவுக்கு உங்க ஏரியால நல்ல செல்வாக்கு இருக்குதுல்ல. அதனால நீ, நம்ம கட்சியில் சேர்ந்து இறங்கி வேலை பார்த்தா கொஞ்சம் வெயிட்டா இருக்கும்.

   இந்த தடவையும் நானே இங்க எம்.எல்.ஏ ஆகிட்டேன்னு வைங்க, அந்த ஹோட்டல் உங்களுக்குத்தான் லீசுக்கு கொடுப்பேன். அதுவும் ஐம்பதே லட்சத்துக்கு. என்ன தம்பிகளா இறங்கி வேலை பார்ப்பீங்கதானே?” என்றார்.

   அவர் அவ்வாறு சொன்னதும் விழியன், “அய்யா நாங்க எறங்கி வேலை பார்க்கலாம் தான். ஆனா பாருங்க, எங்க தெருவுக்கு தண்ணியே சரியா வர மாட்டேங்குது. அதோட எங்க தெருல இருக்குற பப்ளிக் டாய்லெட்டில் கூட தண்ணி இல்லாம அடைச்சு போட்டுட்டாங்க.

   ஒரு பத்து பதினைஞ்சு வீடுகள்ல கக்கூஸ் வசதி இல்ல. அந்த வீட்டுகாரங்க எல்லாம் அந்த டாய்லெட்டை தான் யூஸ் பண்றாங்க. அது அடைச்சு போட்டதால அந்த வீட்டுல இருக்குற பொண்ணு பிள்ளைங்க பாவம் கஷ்டப்படுறாங்க.

   அதனால அந்த டாய்லெட்டிலும் தண்ணி வசதி உடனே ஏற்பாடு செஞ்சு, தொறந்து விட வழி செஞ்சா நல்லா இருக்கும். அதுபோல ரேஷனில் சீனி போடணும்னா ரவை வாங்கித்தான் ஆகணும், கோதுமை வாங்கணும்னா, சோப்பும் சேமியாவும் வாங்கித்தான் ஆகணும் இல்லன்னா போட முடியாது போ...னு விரட்டுறான் ரேஷன் கடைக்காரன்.

     அன்றாடங்காட்சிங்க நாங்க என்ன பாயாசமா கிண்டப்போறோம்? சேமியா வாங்கச்சொல்லி கட்டாயப்படுத்துறான். அனாவசிய செலவு பண்ற நிலைமையிலேயா இருக்கோம்னு புலம்புறாங்க. அதை நீங்க வந்து என்னன்னு கொஞ்சம் கேக்கணும்.என்று மேலும் பேசப் போனவனை தடுத்த ரெங்கா

   “விழியா அதெல்லாம் பக்காவா நம்ம ஏரியாவுக்கு தலைவர் செஞ்சு கொடுத்துடுவாரு. இப்போ நாம பேச வந்ததை பத்தி மட்டும் தலைவர்கிட்ட பேசுப்பா!என்றார்.

       அவரிடம் விழியன், “மாமா, அய்யா தான் கட்சியில சேரச் சொல்லி அவர் எம்.எல்.ஏவாக எங்களை இறங்கி வேலை பார்க்கச் சொல்லி சொன்னாரு.

  அதான், இதெல்லாம் செய்யச் சொன்னேன். உடனே செஞ்சு தந்துட்டா இதைச் சொல்லி அவருக்கே ஓட்டை போடுங்கன்னு நாங்க சொல்லலாம்ல அதுக்குத்தான் சொன்னேன்.என்றான்.

     அவன் அவ்வாறு சொன்னதும் அகத்தியன், “இங்க பாருடா, பய பாயிண்டை பிடிச்சுட்டான். ரங்கா இப்போ என்ன செய்றீருன்னா நாளைக்கே அந்த கக்கூஸ் தண்ணி பிரச்சனையை சரி செஞ்சு, அது தொறந்து விடச் சொல்லு.

      தண்ணி சப்ளைக்கு என்னோட பி..கிட்ட நான் சொன்னேன்னு சொன்னா அரேஞ் பண்ணிடுவான். அப்படியே முனிசிபல் தண்ணிக்கு வண்டி தண்ணி அடிக்கச் சொல்லு.

     இவனைப் போல விவரமா மக்களும் நல்லது செய்யணும்ன்ற எண்ணம் இருக்குறவங்க தான்யா நம்ம கட்சிக்குத் தேவை. அப்போ தம்பி நீ சொன்ன பிரச்சனையில இரண்டையும் நாளைக்கே சரியாக்கிடுறேன்.

   அந்த ரேஷன் கடை பிரச்சனையும் கூப்புட்டு பேசி என்ன எதுன்னு விசாரிச்சு சரி பண்றேன். அதே போல நீங்க சொன்னதுபோல நம்ம ஏரியால என்னோட சேவையைச் சொல்லி ஓட்டை நம்மளுக்கே போட வச்சு இந்த தடவையும் அமோகமா ஜெயிக்க வச்சிருங்க.எனச் சொன்னார்.

   கூட்டத்தில் அவர் பேசியதிற்கும் இப்போது தங்களிடம் பேசுவதற்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டு,

  எல்லாம் இந்த நாற்காலிக்காக போடுற இரட்டை வேஷம். இருடி, இந்த தடவை நீ ஜெயிக்க கூடாதுன்னு அத்தனை வேலையும் பார்க்க நானே களம் இறங்குறேன்.என மனதினுள் சொல்லிக்கொண்டான் விழியன்.

அப்போ, ரொம்ப சந்தோசம் தம்பிகளா! கடை அட்வான்ஸ் உங்களால எவ்வளவு இப்போ கொடுக்க முடியுதோ, இன்னும் ஒரு பத்து நாளில வந்து கொடுத்துடுங்க.

   நான், வேற யாருக்கும் லீசுக்கு விடுறதை பத்தி இனி யோசிக்க மாட்டேன். இன்னும் ஒன்னு ஞாபகம் வச்சுக்கோங்க. எலெக்சன் ஜோலி எல்லாம் முடிஞ்ச பிறகுதான் ரிஜிஸ்ட்ரேசன் எல்லாம் பண்ண முடியும்.

  அதுவரை என்னால வேற எந்த ஜோலி பத்தியும் யோசிக்க முடியாது. அதே போல என்னை ஜெயிக்க வைக்கிறது உங்க ஜோலி மறந்துடாதீங்க. அப்போ பார்ப்போமா!என அகத்தியன் எழுந்து நின்று கை குவித்தார் விடைகொடுக்கும் முகமாக..இவர்களும் பதில் வணக்கம் சொல்லிவிட்டு அந்த பங்களாவை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

                                                               ---தொடரும்---

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib