செவ்விழியன் (தீபாஸ்)
அத்தியாயம் 05
வீட்டிற்குள் நுழைந்த விழியனை எதிர்கொண்ட அம்மா வாணி
மனதினுள், ‘சென்னையில போய் வேலை பார்க்குறதுக்கு
விருப்பமில்லைனு சொல்றவனை நான் கட்டாயப்படுத்தக் கூடாதாம், அவரும் சொல்றாரு வீட்டு
பெரியமனுஷனும் சொல்றாங்க..
கேட்டரிங் படிக்க ஆசைப்பட்டவனை நாம கட்டாயப்படுத்தி
இன்ஜினியரிங் போனு அனுப்பினோம். அவனும்
கடனேன்னு படிச்சு முடிச்சு இதோ ஒரு வருஷமா
நம்ம சந்தோசத்துக்காக சென்னைக்கு வேலை பார்க்க போனான்.
ஆனா, அவனுக்கு அது செட் ஆகலை. தோளுக்கு மேல வளர்ந்துட்டான். இனி பிள்ளைங்க முடிவுக்கு குறுக்க நிக்க கூடாது. முடிஞ்சவரை சப்போர்ட்டா இருப்போம்னு சொல்லிட்டாங்க.
இனி நான் என்னத்த சொல்ல. இதையாவது உருப்படியா செஞ்சு முன்னேறினா நல்லது தான்.
ஆனா, எம்.எல்.ஏ வை பார்க்கப்
போயிட்டு வந்ததில் இருந்து உம்முன்னு அங்கிட்டு இங்கிட்டு அலையிறானே ஒழிய, போன காரியம் என்னாச்சுன்னு சொல்ல மாட்றானே!’ என யோசனையோடு மகனை நோட்டமிட்டார்
வாணி.
‘இன்னும் ஒரு மணி நேரத்தில் பெரியவன் வேற பொண்டாட்டியோடு
வந்துருவான். அதுக்குள்ள இவன் வாய தொறந்து சொன்னாத்தானே....
மதி வந்த பிறகு அவன் கிட்டயும் இது பத்தி கலந்து பேசி
ஒரு முடிவெடுக்கணும். இந்த பய பாட்டுக்கு திடீர் திடீர்னு முடிவெடுத்து எல்லோரையும்
கிறுக்கு புடிக்க வைக்கிறானே!
என்னை இப்படி புலம்பவிட்டுட்டு குப்புற படுத்திருக்கான். அங்க என்ன நடந்துருக்கும்?’ என மனதிற்குள் தர்க்கம் செய்து
கொண்டிருந்தார்.
அப்பொழுது, எப்போதும் போல காலை உணவிற்கு பின் வெளியில் சென்று தனது வயதொத்த நண்பர்களுடன்
அளவளவி விட்டு திரும்பும் அவனின் தாத்தா காளிதாசும் வீட்டினுள் நுழைந்தார்.
உள்ளே வந்தவர் மருமகளிடம், “எம்மா வாணி தண்ணி கொடும்மா, இந்த வெயிலுக்கு எம்புட்டு
தண்ணி குடிச்சாலும் தாவு அடங்கவே மாட்டேங்குது.” என அடுக்களை வாசலில் நின்று
சத்தம் கொடுத்தார்.
அவருக்கு தண்ணீர் கொண்டு வந்து நீட்டிய வாணியிடம், “ எம்.எல்.ஏ கிட்ட கடை அட்வான்ஸ் பத்தி
பேச போறேன்னு சொல்லிட்டு போனவன் வந்துட்டான் போல, வெளியில அவனோட பைக்கும் வாசலில் செருப்பும் கிடக்குது. பய உன்கிட்ட ஏதாவது சொன்னானா?” எனக் கேட்டார்.
“என்னத்த சொன்னான்? ஒன்னும் சொல்லல! வந்ததில் இருந்து அவன் மூஞ்சியே
சரியில்லை. உள்ள போய் கவுந்து படுத்து கிடக்குறான்.” என்றார் வாணி.
அதைக்கேட்டு யோசனையுடன், “ஏனாம், நீ என்ன ஏதுன்னு விசாரிக்கலையா?” எனக் கேட்டார்.
“நான் எதுக்கு கேக்கணும், நாம சொல்லித்தான் அவன் எல்லாம் முடிவு பண்றானா? அவனுக்கு கடை எடுக்க பணம் வேணுமுன்னா அவனா வந்து கேக்கட்டும்.
ஆனா, அவன் மூஞ்சிய பார்த்தா போன
விஷயம் நல்லபடியா முடியலையோன்னு தோனுது. நீங்க போய் உங்க பேரன்கிட்ட
விசாரிங்க மாமா, பெரியவன் பொண்டாட்டியோட வரதுக்குள்ள என்ன ஏதுன்னு என்கிட்ட
சொல்லுங்க.” என்றார் வாணி.
அறைக்குள் சென்ற காளிதாஸ் அவன் உறங்காமல் படுத்திருக்கிறான்
எனக் கண்டு கொண்டார்.
எனவே, “என்ன தொரை? என்னமோ எம்.எல்.ஏ கிட்ட அவரோட கடையை லீசுக்கு எடுக்குறதை பத்தி பேசப்போறேன்னு போனவன், வந்து வீட்டில எதுவும் சொல்லாம இப்படி கவுந்து படுத்திருந்தா என்ன அர்த்தம்? ஏன் கடையை உங்களுக்கு குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாரா எம்.எல்.ஏ?” எனக் கேட்டார்.
அவர் அவ்வாறு கேட்டதும் அதற்கு மேல் மனதில் உள்ள வெம்மையை
மறைக்க முடியாமல் அவரிடம் தனது ஆதங்கத்தைக் கொட்டினான்.
“ஏன் தாத்தா, இவனெல்லாம் ஒரு எம்.எல்.ஏன்னு கொண்டு போய் ஒய்யாரத்தில தூக்கி வச்சிருக்கோம். சரியான கிரிமினலா இருக்கான். வர எலக்சன்ல அந்த கட்சியில் மறுபடி அவனுக்குத்தான் சீட் கொடுக்குறாங்க. ஆனா, இந்த தடவை அவனை ஜெயிக்க விடக்கூடாது தாத்தா. வேற ஒரு நல்ல கேன்டிடேட்டா பார்த்து ஜெயிக்க வைக்கணும்.” என ஆதங்கத்துடன் சொன்னான்.
“வேற யாரை ஜெயிக்க வைக்க போற விழியா? ஒன்னு இவன் வருவான், இல்லனா இப்போ எதிர்கட்சியில
இருக்குற இவனைப்போல வேற ஒருத்தன் வருவான்.” என்றார்.
“ஏன் தாத்தா, இங்க நல்லவங்க யாருமே அரசியல்வாதியா இல்லையா? அரசியல்வாதினாலே கொலைகாரன், கொள்ளைக்காரன் தான்னு ஆகிடுச்சு. அரசியல்வாதி கூட பழக்கம் இருக்குன்னா கூட அவனை பார்த்து பயந்து ஒதுங்கிப்
போறது போல ஆகிடுச்சு.
அரசியல்வாதி இருக்குற பகுதியில
நடமாடக்கூட, ஏன் சத்தமா பேசக்கூட பயமா இருக்கு.
இதோ இன்னைக்கு நான் போன எம்.எல்.ஏ வீடு இருக்குற தெருக்குள்ள போனதும் அங்க... அங்க...
குண்டர்கள் நிக்கிறாங்க. கொஞ்சம் சத்தமா எதுவும் பேசினா
கூட நம்மை பொளந்து கட்டிடுவாங்களோன்னு பயமா இருக்கு. அப்படிப்பட்டவன் எப்படி நல்லது செய்வான்? அரசியல்வாதினாலே கொலைகாரன் கொள்ளைக்காரன் தானா? ஏன் தாத்தா இங்க நல்லவங்க
யாருமே அரசியல்வாதியா இல்லையா?” எனக் கேட்டான்.
அவன் சொன்னதைக் கேட்ட அவனின் தாத்தா, “அதான், இங்கயிருக்கிற அரசியல்வாதி எல்லாம் கொள்ளையடிக்கிறவன்னு
நீ சொல்லிட்ட தானே. கொள்ளையடிக்கிறவன் யாரு?
திருடன் கிட்டயே கஜானா சாவியை பல வருசமா நாம கொடுத்துட்டோம். அந்த திருடன் என்ன பண்ணுவான். அவனோட திருட்டு கும்பலுக்கு பலமான அஸ்திவாரம் எழுப்புவான், அது தான் இங்க நடந்துருக்கு.
அரசியல்வாதிங்கற போர்வையில் உள்ள திருடன் கிட்ட நாம
ஆட்சியை கொடுத்து கஜானா காசை செலவு செய்ற அதிகாரத்தையும் இரண்டு தலைமுறையா கொடுத்துட்டோம்.
அரசாங்கம் திட்டங்களை போடுவதும், செயல்படுத்துவதும் இந்த அரசியல்வாதிகளை வைத்துத்தான். இந்த அரசியல்வாதிங்க திட்டத்துக்கு ஒதுக்கும் பணத்த தன்னோட திருட்டு கூட்டங்களோடு
பகிர்ந்து உண்டு ருசி கண்ட பூனையா கொழுத்துட்டான்.
ருசி கண்ட திருட்டுப் பூனை இனி அந்த ருசியை விடுமா? அந்த ருசிய தக்க வச்சுக்க என்னென்ன செய்யணுமோ! யாரை யாரை குத்தி கவிழ்க்கணுமோ! அத்தனைக்கும் அடியாள் திரட்டி தன்னோட கூட்டமா கொள்கைன்ற போர்வையை போர்த்தி, நல்லவன்ற முகமூடிய மாட்டி அரசியலில் வேட்டையாடிட்டு இருக்கிற அவனோட தேவை
பணம். அந்த பணத்தை சம்பாதிக்க அதிகாரம் மட்டுமே அவங்களோட
குறிக்கோள்.
அந்த பணம் வச்சிருக்குற பெரும் வியாபாரிகள் கூட இப்போ
இந்த அரசியல்வாதிகள் கூட கூட்டணி வச்சுக்கிறாங்க. வியாபாரியோட எண்ணம் பணம் சம்பாதிப்பது. அதுக்கு வியாபாரத்தை பெருக்க பணத்தால் அரசியல்வாதிகளை வளைத்து தங்களின்
கையாளாக வைத்திருக்காங்க பெரும் வணிகர்கள் விழியா!
இப்போ அரசியலில் உள்ளவங்க அரசியல் பலமும், பண முதலைகளின் பலமும் கொண்ட கூட்டமா இருக்குது. அதனாலதான் சாதாரண மக்கள் அரசியல்ன்னு சொன்னாலே அலறி அடிச்சுக்கிட்டு ஓடிடுறாங்க.
என் புள்ள டாக்டர் ஆகணும், இஞ்சினியர் ஆகணும், பெரிய ஆடிட்டர் ஆகணும்னுதான்
சொல்றாங்களே தவிர யார் வீட்டிலாவது என் மவன் எம்.எல்.ஏவாகணும், மந்திரியாகணும், பிரதமராகணும், நல்ல அரசியல் தலைவராக ஆசைப்படுறாங்களா? குழந்தைகளுக்கு அந்த எண்ணத்தை விதைக்கணும்னு நினைக்கிறாங்களா? ம்ஹூம் பயம். அரசியல்வாதின்னா ரவுடியா தன்
பிள்ளை வளர்ந்து நிக்கணும்ற அளவு அரசியல்வாதின்ற பிம்பம் மக்கள் மனதில் அத்தனை அகோரமா
பதிஞ்சிருக்கு.” என்றார்.
“அப்போ அரசியல்னாலே இப்படித்தான்னு எல்லாரும் ஒதுங்கிக்கிட
வேண்டியதுதானா?” எனக் கேட்டான் விழியன்.
“மனிதன் எப்போ குழுவாக வேட்டையாடி பகிர்ந்து உண்ண ஆரம்பிச்சானோ, அன்னைக்கே அரசியல் ஆரம்பிச்சிடுச்சு. பகிர்ந்து குடுக்க ஒரு தலைவன், அத்தலைவனைச் சுற்றி அவனின் மேல் நம்பிக்கை இருக்கிற ஒரு கூட்டம் எப்போ
உருவானதோ, அப்பவே அரசியல் என்பதும் உருவாகிடுச்சு.
அரசியல் இல்லைனா ஒரு நாகரீகமான சமூகம் உருவாக முடியாது. குழுவாக வாழும் மனிதர்கள் தங்களின் பிராந்தியத்தை பாதுகாக்க, அதற்கான பொருளாதார கட்டமைப்பை உருவாக்க, ஒரு ஒழுங்கின் கீழ் அச்சமூகம் செயல்பட, சட்டங்கள் இயற்றப்பட அரசாங்கமும் அரசியலும் அதற்கான அரசியல்வாதிகளும்
தேவை விழியா.
அரசாங்கமும் அது இயங்க அரசியலும், அரசியல்வாதிகளும் இல்லை என்றால் ஒரு ஒழுங்கான வாழ்க்கை முறை யாருக்கும்
வாய்க்காது. ஒரு நாளைக் கூட யாராலும் எளிதாக கடக்க முடியாது.
ஒரு நாடு நல்ல முறையில் சிறப்பாக செயல்பட, மக்கள் அமைதியாக வாழ, வாழ்க்கை தரம் உயர, அறிவில் உயர, தேவையான கல்வி கிடைக்க, நல் ஒழுக்கம், பண்பாடு காக்க, நல்ல அரசியல் அந்நாட்டில் நிலவ வேண்டும்.
ஆனால், அரசியலில் தலைமைப் பொறுப்பில்
இருக்கிறவன் அறிவாளியாக பலபேரை தனக்கு கீழே திரட்டி ஒரு கட்டுக்கோப்பான ஒரு கட்சியை
உருவாக்கிக் கொள்ளும் தலைமைப் பண்பு கொண்டவனாக இருந்தால் மட்டும் போதாது. உண்மையான மக்கள் நலம் விரும்பியாக இல்லாமல் அவர்களுக்கு சேவை செய்யும்
பண்பு இல்லாதவனா இருந்தால் அவன் செலுத்தும் ஆட்சி நல் ஆட்சியாக இருக்காது விழியா...!” என்றார்.
விழியன், அவன் தாத்தா சொன்னதைக் கேட்டு, “அப்போ சேவை பண்றவங்களே இங்க இல்லையா தாத்தா? அப்படி இல்லன்னு சொல்ல முடியாது! நீங்களே படிக்க முடியாத பிள்ளைகளுக்கோ அல்லது ஏழ்மையில் மருத்துவச்செலவு
செய்ய முடியாம திணறுபவர்களுக்கோ உதவி கிடைக்க லெட்டர் கொடுத்து, பூபதிராஜா அவங்களை பார்த்து அந்த லெட்டரை கொடுங்க, அவர் உதவி செய்வார்ன்னு சொல்லி அனுப்பியதை நான் பார்த்திருக்கேனே.
அவங்களும் அவர்கிட்ட போய் உதவி கேட்டு பயனடைந்து இருப்பதையும்
நானே பார்த்திருக்கேனே. ஏன் தாத்தா அவரையே நம்ம தொகுதியில்
சுயேட்சையா நிக்க சொன்னா என்ன? அவர் போல சமூக சிந்தனை, அக்கறை உள்ளவங்க பதவிக்கு வந்தாத்தான் நாடு உருப்படும். நீங்க எனக்கு லெட்டர் குடுங்க தாத்தா நான் அவரை பார்த்து பேசுறேன்.” என்றான்.
அவன் அவ்வாறு சொன்னதும் காளிதாஸ் சொன்னார். “நீ நினைக்கிறது போல அரசியலுக்கெல்லாம் அவர் வரமாட்டார். நிறைய சொத்துள்ள மனுஷன். அதே போல உதவணும்ற மனசும் உள்ளவர். ஆனா, அரசியலில் எல்லாம் ஆர்வம் கிடையாது.
எனக்குத் தெரிஞ்சு ஒரு இருபது இருபத்தைந்து வருஷம்
முன்பு உன் வயசு இருக்கும்போது, ஒரு தடவை எலக்சன்ல பூபதி சுயேட்சையா
போட்டி போட்டிருக்கார். ஆனா ஜெயிக்கலை. அது பல கஷ்டத்தையும் அனுபவத்தையும் அவருக்கு குடுத்துருச்சு என நினைக்கிறேன், அதான் இந்த அரசியலே எனக்கு வேணாம்னு ஒதுங்கி இருக்கார்” என்றார்.
“என்ன சொல்றீங்க தாத்தா? ஏற்கனவே எலக்சன்ல நின்னுருக்காரா அவர், அப்போ கட்டாயம் அரசியல் பற்றிய புரிதல் இருக்கும். நான் அவரைப் போய் பார்த்தே ஆகணும்.
நம்ம ஏரியாவில் இவர் போல மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறவங்கதான்
ஆட்சியில் இருக்கணும். பிளீஸ் தாத்தா, உங்க பேரன், நான் அவர்கிட்ட பேசணும்னு
லெட்டர் கொடுங்க. அப்போதான் அவரை பார்க்க அவரின் பங்களாவிற்குள் என்னை
விடுவாங்க. பிளீஸ், பிளீஸ், பிளீஸ் தாத்தா!” என்றான் விழியன்.
“வேணாம் விழியா. உன் அம்மாவுக்கு நீ இப்படி அரசியல் பக்கம் போறது எல்லாம் சுத்தமா பிடிக்காது. உன்னை ஊர் வம்பை இழுத்து போட்டு செய்ய வைக்க தூண்டுறது நான்னு என்
மேல அவளுக்கு வருத்தம் இருக்கு. உன் அண்ணனை பாரு படிப்பு, வேலை, கல்யாணம்னு செட்டில் ஆகிட்டான்.
இது போல அரசியல்ல இறங்கினா தனிப்பட்ட வாழ்க்கையில்
நீ செட்டில் ஆக முடியாது. அப்படி ஒரு நிலையில் உன்னை
வச்சு, உன் அம்மாவால பார்க்க முடியாது, அதுவும் இல்லாம நீ சென்னையில் கம்பெனி வேலைக்கெல்லாம் போக இஷ்டமில்லைனு
சொன்னதை கேட்டு, நீ எப்படியாவது செட்டில் ஆனா போதும்னு முடிவுக்கு வந்தாங்க.
‘பிஸ்னஸ்தான் செய்வேன்னு ஒத்தக்காலில் நிக்கிறான், அதாவது உருப்படியா செய்யட்டும், நாம கூட துணையா நிப்போம்னு’ பேசி முடிவெடுத்துருக்காங்க. நீ அதையும் செய்யாம, அரசியல் அது இதுன்னு இறங்கினா
அவங்களுக்கு ரொம்ப வருத்தம் ஆகிடும். சரி அவங்ககிட்ட என்ன பதில்
சொல்லப்போற ஹோட்டல் லீஸ் எடுக்குறதைப் பத்தி?” எனக் கேட்டார்.
“வீட்டுல அம்மா அப்பாட்ட சொல்லணும் தாத்தா. ஆனா, அவங்க எதிர்பார்ப்பை என்னால் பூர்த்தி செய்ய முடியாது
அதுக்கு மன்னிப்பு கேக்கணும். அதேபோல நான் எனக்கு தேவையான
எதுக்கும் யார்கிட்டயும் போய் நிக்கமாட்டேன். அதே போல என்னோட பாதை இது போல விஷயத்துல திசை மாறிப்போயிடுச்சுனா என்னை
நம்பி வர பொண்ணோட எதிர்பார்ப்பை என்னால பூர்த்தி செய்ய முடியாது.”
இதை விழியன் சொல்லும்போது அவனின் மனதில் வெண்ணிலாவின்
முகம் மின்னி மறைந்தது. அதை நீண்ட மூச்சுடன் சமாளித்தவன்
அதனால, “நான் கல்யாண லைப்பை பத்தியோ! ஏன் கல்யாணம் செய்வேனான்னு கூட தெரியல?” என்றான்.
“விழியா! டேய் என்னடா இப்படி சொல்ற? கல்யாணம் பண்றதே சந்தேகமாம்ல ஒழுங்கா வேலையை பார்த்தமா, கல்யாணத்த முடிச்சு அதோட நாலு நல்லது செய்தோமான்னு இருக்குறதா இருந்தா
மட்டும் தான் நான் சப்போர்ட் பண்ணுவேன். இல்லன்னா உனக்கு எதிரா நிக்கிற
முதல் ஆளே நானாத்தான் இருப்பேன்.” என்றார்.
அவர் அவ்வாறு சொன்னதும், ‘தாத்தாவ சமாளிச்சுருடா விழியா’ என மனதிற்குள் சொன்னபடி, “ஹஹாஹா... அட ஜேம்ஸ்பாண்டு, உங்களை டென்சன்
ஆக்கிட்டேனா? சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன். நம்மளால ஒண்டிக்கட்டையா எல்லாம் வாழ முடியாது.” என்று சொன்னவன்,
“ஆனா, வாழ்க்கையை ரசிச்சு வாழணும்னா
கொஞ்சம் என் மனசு சொல்றதை செஞ்சாத்தான் எனக்குன்னு வரும் துணையோடு நான் சந்தோசமா இருக்க
முடியும் தாத்தா.
நீங்களே எத்தனை தடவை என்கிட்ட சொல்லியிருக்கீங்க. பாட்டி உங்க மேல அத்தனை அன்பு வச்சிருந்தாங்கனாலும், ‘நானும் அவ பிள்ளைகள் மட்டும் என்ற சுயநலம் மட்டும்தான் இருக்கும். கொஞ்சம் கூட என்னோட பொதுநல கருத்துக்களோ அதை சார்ந்த என்னோட உணர்வுகளோ
அவளுக்கு பெரியதாகப்பட்டது கிடையாது. அதை என்னமோ பெரிய அபத்தமாத்தான்
பார்ப்பாள்.
அவ அன்புக்கு கட்டுப்பட்ட என்னாலும் அவளை மீறி மனதினுள்
அத்தனை ஆசை இருந்தாலும் முழுமூச்சா செய்ய நினைக்கிற நிறைய பொது காரியங்களில் கலந்துக்க
முடியாம ஒதுங்கி நின்னுட்டேன்’ சொன்னீங்கதானே!” என்றான்.
அவன் அவ்வாறு சொன்னதும், “ஆமாம் சொன்னேன் விழியா, அதுனால என்ன கெட்டுப்போயிருச்சு? மில் சூப்ரவைசரா ஏழை குடும்பத்தில் பிறந்து ஆளான நான், இந்த வீட்டையும் கட்டி, ஒத்த மகனுக்கு வேண்டிய எல்லாம்
என்னால செஞ்சு கொடுக்க வைத்து,
இதோ நான் ரிட்டயர்டு ஆன பணத்தை அப்படியே பேங்கில்
போட்டு அந்த வட்டியை எடுத்து தேவைக்கு சொர்ப்பமா கிடைக்கும் பென்சன் பணத்தையும் கொண்டு
சொகுசா இருக்குறேன்.
இதெல்லாம் சாத்தியமானது அவ அப்படி இருந்ததாலத்தான். இல்லைன்னா இந்த வீடும் சாத்தியமில்லை. என் பேங்க் பேலன்சும் சாத்தியமில்லை. நடுத்தரவர்க்கம் என்ற நிலைக்கும் நாம வந்துருக்க முடியாது.” என்றார்.
அவர் அவ்வாறு சொன்னதும், “அப்போ பினான்சியலா தன்னிறைவு ஆகுறது மட்டும்தான் ஒவ்வொருத்தரோட வாழ்க்கையிலும்
முக்கிய குறிக்கோளா தாத்தா?
இப்படி ஒவ்வொருத்தரும் தன் குடும்பம் மட்டும் நல்லா இருந்தா போதும், அதுக்கு தேவையானதை செய்ய எந்த அளவும் வளைந்து கொடுக்கலாம். நமக்கு எதுக்கு வம்புன்னு ஒதுங்கி போகலாம்ன்னு கற்று கொடுத்த எங்க முன்னால்
தலைமுறையின் வழிகாட்டுதல், எங்க கொண்டுவந்து நிறுத்தி
இருக்கு? முதுகெலும்பில்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்கி இருக்கு.
‘பாதகஞ் செய்பவரைக் கண்டால் நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா- அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா’ன்னு பாடிய பாரதியின் வரிகளை வெறும் பாட்டோடு நிறுத்திக்கணுமா?
ஒதுங்கிப்போ, நமக்கெதுக்கு வம்பு, மாப்பிள்ளைன்னு பார்த்தா அவனுக்கு
காசு பணம் இருப்பதோடு, தான் உண்டு தன் வேலையுண்டுன்னு ஒதுங்கிப் போற தன்மை
உள்ளவனா இருக்கணும் போன்ற குணங்களை இங்க வரையறை வச்சுது யார் தாத்தா? பொது நலத்தில் அக்கறை உள்ளவனா இருக்குறவனை, அந்த தீரம் உள்ளவனை கொண்டாடிய நம் சமூகம் ஏன் தாத்தா மறைஞ்சு போச்சு?
தனி மனுஷ வாழ்க்கையில் சுயநலமே பிரதானமா ஆனதால இன்னைக்கு
சமூகத்தில் பொதுநலம் கேள்வி குறியாகிடுச்சு. எனக்கு சுயநலமில்லா வாழ்க்கை வேணும். சுத்தி இருக்கும் மக்களை கொஞ்சமாவது பொதுநலத்தை நினைக்க வைக்கணும்.
அதுக்கு காசு பணம் மேல ரொம்ப ஆசை இல்லாத, உயிர் வாழ சம்பாதிச்சா போதுமென, இருக்குறதை கொண்டு பகிர்ந்து உண்டு நிறைவா வாழும் குணம் உள்ள பொண்ணு வேணும். அப்படி ஒருத்தியை பார்த்துட்டா மனைவியா கல்யாணம் செய்துக்குவேன்.” என்றான்.
“என்ன விழியா இப்படிச் சொல்லிட்ட? அப்போ தெற்குத் தெருவில உள்ள
அந்த பொண்ணு?” என்று இழுத்தார். தனக்கு அவனின் விஷயம் தெரியும் என காண்பிக்க.
“தாத்தா... உங்களுக்கு எப்படி தெரியும்? ஆனா, அவ... அவ வேணாம் தாத்தா. அவளோட எதிர்பார்ப்புக்கும் என்னோட லைஃப் ஸ்டைலுக்கும் ஒத்துவராதுன்னு
சொல்லிட்டா! யோசிச்சுப் பார்த்தா அவள் சொல்றதும் சரிதான்.
ஒரு நாளைக்கு மூனு நேரமும் சாப்டாச்சா, குட் மார்னிங், குட் நைட்டுன்னு பேசியவள், இதோ ஒரு வாரம் ஆச்சு. ஆனா எந்த மெசேஜும் இல்லை. எந்த போனும் இல்லை.
என்கூட ஒரு நாள் பேசாம இருந்தாலும் கிறுக்கு பிடிச்சிடும்
செத்துருவேன்னு சொன்னவ, நான் தொடர்ந்து அவள்
கிட்ட சென்னை வேலை எனக்கு பிடிக்கலை விடப்போறேன்னு என் நிலை புரியவைக்க, ஒரு ஐம்பது தடவையாவது போன் பண்ணுறேன். ஆனா எடுத்து விளக்கம் கேட்க கூட அவ பிரியப்படலை. இனி அவ எனக்கு வேணாம்.
என்னோட சிந்தனைகளுக்குள் அவளை வலுக்கட்டாயமா இழுப்பது
நல்லது இல்ல. இப்போவாவது இது எனக்குப் புரிஞ்சுச்சே. கல்யாணம் செய்து ஒருத்தரை ஒருத்தர் வெறுத்து பிரியறதுக்கு இப்போவே பிரியிறது
மேல். என்ன கொஞ்ச காலம் மனசு வலிக்கும்... ஆனா, அதுவும் கடந்து போயிடும்ல தாத்தா.” என்றான்.
***
----தொடரும்----

No comments:
Post a Comment