anti - piracy

Post Page Advertisement [Top]

                                              செவ்விழியன் (தீபாஸ்)                             


அத்தியாயம் 11

 

  மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஊர் ராஜபாளையம். அங்குள்ள ராக்காச்சி அம்மன் கோவில் சிற்றருவி தான் விழியன் தனிமை வேண்டி போகும் இடம்

  இப்பொழுதும் அவனின் இருசக்கர வாகனம்  அங்கேயே விரைந்தது. மாந்தோப்புகளுக்கு இடையில் இயற்கை அன்னையின் அழகில் லயித்தபடி பயணம் செய்தவன், எதிர்வரும் சில்லென்ற காற்றை சுவாசிக்கும் போதே அவனின் மனம் சற்று நிலை கொள்ள ஆரம்பித்தது.

  வழியில் ஓடும் சிற்றோடையில் இறங்கிக் கடந்தே ராக்காச்சி கோயிலுக்குப் போக வேண்டும்

  சுற்றி உள்ள ஊர்களில் இருந்து அந்த கோயில் சாமியை குலதெய்வமாக கொண்டவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தவும், வாரிசுகளுக்கு கெடா வெட்டி, முடியிறக்கி, காது குத்தவும் கூட்டம் கூட்டமாக அங்கு வருவார்கள்.

  அது வனப்பகுதி, சுற்றுலா தளம் கிடையாது. இருந்தாலும், காலம் காலமாய் அக்கோயிலுக்கு வரும் சுற்று வட்டார மக்களை தடை செய்ய முடியவில்லை.

  மேற்குத்தொடர்ச்சி மலையில் எங்கோ ஒரு மூலையில் தூரல் விழுந்தால் மாயமாக சிற்றோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து, அவ்வோடையை கடக்கும் ஆட்களை இழுத்துக்கொண்டு போய்விடும்.

  எனவே எப்பொழுதும் அந்த சிற்றோடையைக் கடந்து ராக்காச்சி அம்மனையும் சிற்றருவியையும் தரிசிக்கும் மக்கள் ஒரு எச்சரிக்கை மனநிலையிலேயே அங்கு பயணம் செய்வர்.

  விழியன் எப்போதும் தனியாக வரும் வேளைகளில் அருவிக்கரையை நாட மாட்டான். சிற்றோடை அருகில் அமர்ந்து தண்ணீரில் பாதம் நனைய விட்டு சற்று ஆழமான இடம் சென்று முங்கிக் குளிப்பான்.

  அங்கு அவனின் முன்னோர்கள் காலத்திலிருந்து வழிவழியாக அவர்களின் கைக்கு வந்திருக்கும் மாந்தோப்புக்கு சென்று, அங்கு காவலுக்கு போட்டிருக்கும் சோமுவிடம் பேசி மாங்காய்கள் பறித்து உண்டுவிட்டு வருவது வழக்கம்.

  அங்கு பரம்பரையாக தோப்பு வைத்திருப்பவர்கள் ஒன்றும் மிகப்பெரிய செல்வந்தர்கள் கிடையாது.

  அதே போல இவர்களின் தோப்புகளை கண்டு பெட்டி நிறைய பணத்தை கொண்டு வந்து இவர்களின் வறுமையை சாதகமாக்கி வாங்க முயல்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

  வாழ்க்கையில் எந்த ஒரு கஷ்டம் வந்தாலும் பரம்பரையாக பாதுகாத்து கொண்டாடப்படும் அவர்களின் தோப்புகளையும் அதன் நிலங்களையும் யாருக்கும் விட்டுக்கொடுக்கவோ விலை பேசவோ மாட்டார்கள்.

  இன்றும் சிற்றோடையில் கால் நனைத்து உட்கார்ந்திருந்தான். ஆனால் முடிவெடுப்பதில் குழப்பமாகவே இருந்தது. தண்ணீரில் முங்கி நீராடி, மண்டைச்சூடு தணித்தால் தான் ஒரு முடிவுக்கு வர முடியும் என நினைத்தான்.

  தனது டூவீலரையும், மொபைலையும் தோப்பில் காவல் இருக்கும் சோமுவிடம் ஒப்படைத்துவிட்டு குளிக்கலாம் என எழுந்தான்.

  அங்கு சில குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே சிக்னல் கிடைக்கும். வழக்கமாக வரும் அவனுக்கு எந்த இடத்தில் லேசான டவர் கிடைக்கும் எனத் தெரியும். அந்த இடத்தை கடக்கும் போது யாராவது போன் செய்திருக்கிறார்களா பாப்போம் என மொபைலை எடுத்தால் கதிரிடம் இருந்து அவனுக்கு போன் வந்தது.

  ‘இவனை காத்திருக்க சொல்லிட்டு நான் பாட்டுக்கு கிளம்பி வந்துட்டேன். திட்ட போறான்.என நினைத்தபடி மொபைலை எடுத்தவனிடம், “டேய் எங்கடா இருக்க? நான் கிரஹா மேடம் கூட எஃப்பி மெசெஞ்சர்ல பேசினேன்டா. அவங்க என்ன முடிவெடுத்திருக்கீங்கனு கேட்கிறாங்கடா.

  நான் கொஞ்ச நேரத்தில் அவங்களுக்கு பதில் சொல்றேன்னு சொல்லிட்டு உன்னை தேடி உன் வீட்டுக்குப் போனேன். என் கெட்ட நேரம் நீ உன் வீட்டில் இல்லை. அங்க எல்லாரும் என்னை வில்லனை பார்ப்பதுபோல பார்த்தாங்கடா

  அதில உங்க அம்மா ஒரு படி மேலே போய் உன்னைய உருப்புடாம போறதுக்கு ஏத்தி விடுறதே நான் தான்னு என்கிட்டயே என்னைய ஜாடையா  திட்டுறாங்கடா.

  எப்படியோ என்னமோ சொல்லி சமாளிச்சு உங்க வீட்டில இருந்து எஸ் ஆகுறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு. நீ பாட்டுக்கு மாற்றம் வேணும் புதிய களம் அமைப்போம்ன்னு வாட்சப்ல குரூப்ப சேர்த்து பசங்களை கிளப்பி விட்டுட்ட. ஆனா, வீட்டுல உள்ளவங்களை மீறி எப்படிடா இதெல்லாம் சாத்தியமாகும்

  என்னமோ பெருசா செய்றோம்ன்னு ஒரு பரபரப்பும் இருக்கு. அதே நேரம் ஐயய்யோ இதெல்லாம் எங்கே கொண்டு போய் நம்மளை நிறுத்துமோன்னு பயமாவும் இருக்கு.

  டேய் விழியா, இப்போ நீ எங்க இருக்க? இதுக்கு முன்னாடி நான் உனக்கு இரண்டு தடவை ஃபோன் பண்ணினப்போ, யுவர் ஃபோன் இஸ் அவுட் ஆஃப் ரீச்ன்னு வந்தது.என படபடவென பேசினான்.

  “நான் எங்க தோப்புக்கு வந்துருக்கேன் கதிர்.என்றான் விழியன்.

  “டேய் என்னடா திடீர்னு? சரி போகும் போது என்னையும் கூட கூட்டிட்டு போயிருக்கலாம்ல! மனுசனாடா நீ? காட்டுக்குள்ள ஒத்தையில போறீயே, உன்னை எல்லாம் பெத்தாங்களா அல்லது செஞ்சாங்களா?

  சரி நீ ஒன்னும் குளிக்க வேணாம். அப்படியே யூ டேர்ன் போட்டு இங்க வா. ஒரு வேலையை ஆரம்பிச்சிட்டு என்னைய மட்டும் வாட்சப் குரூப்லேயும், கிரஹா மேடத்துக்கிட்டையும் தனியா மாட்டி விட்டுட்டு நீ எஸ் ஆக பார்க்குறயா?

  நீ வரல... நான் இப்போ பசங்களை கூட்டிட்டு அங்க வந்துருவேன் பார்த்துக்கோ!” என்றான்.

  அவன் அவ்வாறு சொன்னதும் சிறிது நேரம் யோசித்தவன், “கதிர், நீ சொல்றதும் நல்லாத்தான் இருக்கு. இன்னும் அரைமணி நேரத்தில் நம்ம வாட்சப் குரூப்பில் இருக்குற பசங்களில் எத்தனை பேரை உன்னால் திரட்ட முடியுதோ அத்தனை பேரையும் கூட்டிக்கிட்டு இங்க வந்துரு

  நேர்ல பசங்க கூட உட்கார்ந்து பேசுனாத்தான் நானு எலெக்சன்ல நின்னா, கூட நிப்பாங்களானு தெரிஞ்சுக்கிட முடியும்

  அதுக்கு பிறகு முழு மூச்சா எலெக்சன்ல இறங்கிப் பார்ப்போமா வேணாமான்னு முடிவெடுப்போம்.எனச் சொன்னான்.

  “டேய் விழியா, லாஸ்ட் நிமிஷத்தில் வான்னு சொன்னா பசங்க என்ன சொல்வாங்களோ? பேசி பார்த்துட்டு கூப்பிடுறேன்.எனச் சொல்லிவிட்டு மொபைல் இணைப்பை துண்டித்தான்.

  “இவன் பாட்டுக்கு கூட்டிட்டு வான்னு சொல்லிட்டான். என்னத்த சொல்லி இவிங்களை வர வைக்க?” என யோசித்தான்.

  ‘எலெக்சன் பத்தி பேசுவோம் முடிவேடுப்போம் வாங்கன்னு சொன்னா வருவாங்களா?’ என்ற சந்தேகம் கதிருக்குள் முளைத்தது.

  ‘ஓடையில் தண்ணி நிறைய போகுது, மாங்கா சீசன் வேற விழியன் குளிக்க வாங்கடான்னு கூப்பிடுறான். கோழி, மீன் எல்லாம் காட்டுல அவன் தோப்பில் வெந்துகிட்டு இருக்கு வந்து ஜாயின் பண்றவங்க பண்ணிக்கோங்கன்னு சொல்லுவோம்.

  அவிங்களையே டூவீலரை எடுத்துட்டு வாங்கன்னு கொளுத்தி போடுவோம். கறிச்சோறு, தண்ணில ஆட்டம்ன்னு சொன்னா, அம்புட்டு பயலும் அடிச்சு புடிச்சிட்டு ஓடி வருவாங்க.என கணக்குப் போட்டான் கதிர்.

  கதிர் அந்த இருபத்தி ஏழுபேர் கொண்ட வாட்சப் குரூப்பில், ‘ராக்காச்சி அம்மன் கோவிலுக்கு வரணும்னு நினைக்கிறவங்க, அதுவும் இந்த குரூப் உறுப்பினர்கள் மட்டும் வரலாம். கூட குரூப்பில் இல்லாதவங்களை கூட்டிட்டு வர அலோவ்டு இல்லை.ன்னு மெசேஜ் போட்டு,

  கூடவே, ‘விழியன் தோப்பில் மீன், கோழி சமையல் ரெடி ஆகிட்டு இருக்கு. டூவீலர் எடுத்துகிட்டு வரணும்னு நினைக்கிறவங்க சாவடி கிரவுண்டில் அரை மணி நேரத்தில் ஆஜர் ஆகுங்க.எனவும் மெசேஜ் டைப் செய்து குரூப்பில் அனுப்பி விட்டான்.

  அவன் நினைத்தது போன்றே, ‘என்னப்பா அரைமணி நேரத்தில் வரச்சொல்ற? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, கொஞ்சம் முன்ன பின்ன ஆகலாம். நான் ஜாயின் பண்ணிக்குவேன்.’

  ‘டேய் மச்சான், நேத்தே சொல்றதுக்கென்ன? அய்யோ நான் இது தெரியாம வேற வேலையில் கமிட் ஆகிட்டேனே! இருந்தாலும் எப்படியும் சமாளிச்சு வந்துருவேன்.என்றும்,

  ‘டேய் கதிர், எனக்கு ரொம்ப நாளா சரக்கு இப்படி பசங்களோட சேர்ந்து அடிக்கணும்னு ஆசை. அதுக்கு ரெடி பண்ண முடியுமாடா?’ என்பது போன்ற விதவிதமான மெசேஜ்கள் குரூப்பில் குவிந்தன.

  அத்துடன் பசங்க மட்டும் அந்த குரூப்பில் இருக்கோம் என்ற நினைப்பில் ஏட்டிக்குப் போட்டியான குளியல் என்ஜாய், தண்ணீர் பார்டியில் என்ஜாய் பண்ணுவது போல் இருக்குற இமேஜ்களும் வாட்சப் குரூப்பில் வந்து குவிந்தன.

  இதை எல்லாம் பார்த்த கதிர், ‘அட கொக்கா மக்கா! நேத்துவரை கொள்கை அது இதுன்னு இந்த குரூப்பில் பேசிட்டு இருந்தவங்களை இப்படி கிளப்பி விட்டுட்டேன்னு விழியனுக்கு தெரிஞ்சா அம்புட்டுத்தான்.

  பிறகு எப்படி பசங்களை கிளப்பி அங்க கூட்டிட்டு போக. என்னைய கூட்டிட்டு வரச்சொன்னா இப்படித்தான் செய்வேன்.

  அங்க போனதுக்கு பிறகு மாங்காயை மீனாவும் கோழியாவும் நினைச்சு சாப்பிட சொல்லிடணும். குளியல் மட்டும் ஒரு ரவுண்டு பசங்களோடு போய் முங்கி எழுந்துடணும்.என எண்ணியபடி பைக்குடன் கிரவுண்டில் போய் நின்றான்.

  சரியாக அரைமணி நேரத்தில் இரண்டு இரண்டு பேராக பைக்குகளில் வந்து சேர்ந்தனர். ஒரு ஆறு பேரை தவிர்த்து அத்தனை பேரும் வந்து சேர்ந்து விட்டனர்.

  “டேய், மாஸ்க் போட்டுக்கோங்க! இரண்டு இரண்டு பைக்கா இடைவெளி விட்டு போகணும். மொத்தமா போனா போலீஸ்காரன்ட மாட்டி கப்பம் கட்டி மீண்டு போக முடியாது.எனச் சொன்னான்.

  கதிர் விழியனுடன் தோப்பிற்கு ஏற்கனவே நிறைய முறை சென்றிருந்ததால் சரியாக அவர்களுடன் அங்கு சென்று அடைந்தான்.

  விழியன் கதிரிடம் பேசிவிட்டு அவனின் தோப்புக்கு சென்ற நேரம், தோப்பு காவலாளி சோமு இரண்டு காட்டு முயல்களை சட்டத்துக்கு புறம்பாக பிடித்து கொன்று சமைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தான்.

  விழியன் திடுதிப்பென்று அங்கு வரும் விஷயம் அவர் அறிந்திருக்கவில்லை.

  “என்ன சோமு இப்படி? தெரிஞ்சா பிரச்சனை ஆகிடும்.என்று அவரின் செயலை கண்டு லேசாக அதட்டல் போட்டான்.

  அதற்கு சோமுவோ, “தம்பி, நான் காட்டுக்குள்ள வேட்டைக்கு போகலை. நம்ம தோப்புக்குள்ள வந்துச்சு பிடிச்சு அடிச்சிட்டேன். கழிவுகளை எல்லாம் தென்ன மரத்துக்கு உரமா போட்டு புதைச்சிட்டேன்.

  இல்லன்னா நைட்டு விலங்குகள் இரத்த வாடைக்கு இங்க வந்துரும். நீங்க வந்ததும் நல்லது தான்.

  இரண்டு முயலும் சேர்ந்து எப்படியும் நாலு அஞ்சு கிலோ கறி தேறும் நான் ஒருத்தனா எப்படி காலி பண்ணன்னு யோசனை பண்ணிட்டு இருந்தேன்.எனச் சொன்னார்.

  அவர் அவ்வாறு சொன்னதும் விழியன் யோசித்தான். ‘பசங்களை பார்ட்டி, விருந்து அப்படின்னு ஏமாத்தி ஆசை காட்டி தான் இந்த கதிர் கூட்டிக்கொண்டு வருவான்.எனப் புரிந்து வைத்திருந்தான்.

  காட்டுச் சூழலுக்கு பழக்கம் உள்ள சோமு இவர்களின் காட்டில் காவலாளியாக பணியில் அமர்ந்திருப்பவர்.

  இரவு அங்கு கட்டி வைத்திருக்கும் ஒற்றை மோட்டார் ரூமில் தங்கி கொள்வார். அந்த அறை சற்று பெரியதாக இருக்கும். அதில் சமையலுக்கு தேவையான சட்டி, பானை, கொஞ்சம் மசாலா சாமான்கள் எல்லாம் வாங்கி வைத்திருப்பார்.

  எனவே விழியன் அவரிடம், “சோமு ஒரு இருபது பசங்க இங்க வருவாங்க. உங்களால இந்த கறியை வச்சு அவங்களுக்கும் சேர்ந்து சாப்பாடு ரெடி பண்ண முடியுமா?” எனக் கேட்டான். 

  இவன் கேட்டதும், “நான் ஆக்கிருவேன் தம்பி. ஆனா, நம்ம சமையல் புடிக்குதோ என்னமோ? இருந்தாலும் நீங்க சொல்லி செய்யாம இருப்பேனா? தெரிஞ்ச அளவு சமைச்சு வைக்கிறேன். பசங்க நம்ம தோப்புக்கு வராங்க, நாம தான கவனிக்கணும்.எனச் சொல்லி சமையலில் மும்முரமாகி விட்டார்.

  ஆர்பாட்டமாக இரண்டு இரண்டு பேரை சுமந்தபடி ஒன்பது பைக்குகளில் ஒன்றன் பின் ஒன்றாக வந்து இறங்கினர்.

  சோமுவிற்கு உதவியாக சமைக்க தண்ணீர் பிடித்துக் கொடுத்து, தனக்கு தெரிந்த அளவில் வெங்காயம் அரிந்து கொடுக்க என்று பிசியாக இருந்தான் விழியன்

  வந்து இறங்கியதும் கதிர் விழியனிடம், “டேய் என்னமோ சமையல் எல்லாம் நடக்குது? நான் கூட பசங்களை வரவைக்கிறதுக்கு ஒரு பேச்சுக்குத்தான் இங்க கோழி, மீன் எல்லாம் வெந்துகிட்டு இருக்குன்னு சொன்னேன். ஆனா, உண்மையிலேயே இங்க கறி வேகுது!” என்றான்

  அவன் சொன்னதை கேட்டு, “ஹாஹாஹா... உன் புத்தி எனக்குத் தெரியும் கதிர். அதுதான் காட்டில் இரண்டு வளர்ப்பு முயல் இருந்தது. அதை அடிச்சு பசங்களுக்கு தெரிஞ்ச அளவு சோமுவை சமைக்கச் சொன்னேன்.என்றான்

  காட்டு முயலைப் பிடித்து அடித்தோம் எனத் தெரிந்தால், அதுவும் தான் அரசியலில் இறங்கும் இந்த நேரம் தெரிந்தால், அதுவே பின்நாளில் இஸ்யூ ஆகும் என புரிந்து சாணக்கிய அவதாரம் பூசிக்கொண்டான் விழியன்.

  அருகில் இருந்த சோமு அவன் அவ்வாறு சொல்லவும், ‘அப்படியா?’ என்னும் விதமாக அவனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார்.

  ‘ஆமா! அப்படித்தான், நீயும் சொல்லணும்.என்ற கட்டளையை கண்களால் அவருக்கு பிறப்பித்தான்.

  அவரும் அவன் வார்த்தையை மறுத்து கூறாமல், ஆமாம் என்னும் விதமாக அமைதியாகி விட்டார்.

  ஆனால், கதிரைத்தான் கூட வந்த நட்பு வட்டம் வார்த்தையால் வறுத்து எடுத்தனர். “டேய் மீன் ஃபிரை, கோழி குருமா, குஸ்கா அப்படி எல்லாம் சொல்லி ஆசை காட்டிட்டியேடா! நாங்களும் அத்தனையும் சாப்பிடுறது போல கனவு கண்டுட்டு வந்தா அம்புட்டும் பொய்யா?” என கோபத்துடன் கதிரிடம் எகிறினர்.

  உடனே கதிர், “நான் என்ன பண்ண? எலெக்சன்ல நிக்கிறது பத்தி எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து பேசி முடிவெடுக்கணும்ன்னு உங்களை எல்லாம் கூட்டிட்டு வாங்கன்னு காட்டுக்குள்ள இருந்து இவன் சொல்றான்.

  அதுதான், இப்படி சொன்னாத்தான் எல்லோரையும் வேகமா திரட்டி இங்க இழுத்திட்டு வர முடியும்னு பொய் சொன்னேன்டா. நண்பனுக்காக இந்த பொய் கூட சொல்லக் கூடாதா?” என்று பொய்யாக வருந்துவது போல நடித்தான்.

  அப்பொழுது சோமு வந்தவர்களிடம், “தம்பிகளா, மீன், கோழி கூட ஊருக்குள்ள கிடைக்கும். ஆனா, இப்படி கிடைக்கிறதை வச்சு இயற்கையான சூழல்ல விறகு அடுப்புல வெறும் உப்பு மிளகா போட்டு சமைச்ச இறைச்சி கிடைக்கிறது தான் கஷ்டம். நீங்க போய் குளிச்சிட்டு வாங்க. அதுக்குள்ள கறி நல்லா பதமா வெந்துரும்.

  நானும் உங்களுக்கு சாப்பிட பரிமாற நம்ம தோப்புல நல்லா பெருசான தேக்கு இலைகளா பார்த்து பறிச்சு வச்சிடுவேன்.என்றார்.

  அப்போது விழியன், “குளிக்க போகலாம். ஆனா, அதுக்கு முன்ன... நான் எலெக்சன்ல நின்னா என்கூட சேர்ந்து களத்துல இறங்கி வேலை பார்க்க எத்தனை பேர் ரெடியா இருக்கீங்க? அதை சொல்லுங்க கேப்போம்.

  நான் எலெக்சன்ல நிக்கிறதுக்கு காரணம்…” கடை லீசுக்கு எடுக்குற விஷயமா எம்.எல்.ஏ அகத்தியனை பார்க்கப் போனதில் இருந்து அங்கு நடந்த அகத்தியன் அவனது கட்சி ஆள்களிடம் நடத்திய பேச்சை கேட்டதும்

  அதனால அகத்தியன் போன்ற ஆட்கள் இனிமே பதவிக்கு வரக்கூடாதுன்னு பூபதி ராஜாவை பார்க்க போனதும் அவர் விழியனையே எலெக்சன்ல நிக்கச் சொல்லி சொன்னதும்

  அவரின் தங்கையான கிரஹா மேடம், அவங்க டிரஸ்ட் மெம்பர்ஸ், லேடீஸ் கிளப் மக்களை எல்லாம் திரட்டி தனக்கு எலெக்சன்ல சப்போர்ட் பண்ணுவதாகவும், அதற்கான ஆலோசனையும் பின்னால் இருந்து செய்து தருவதாக கூறியது முதற்கொண்டு சொல்லி முடித்தான்.

  அவன் சொல்லி முடித்ததும் வந்திருந்த நண்பர்களில் பெரும்பாலானோர், “சரி தான்டா! இனி இங்க அது போல அரசியல்வாதி வரக்கூடாதுடா.என்று சொன்னார்கள்.

  அவ்வாறு சொல்வதை கேட்ட விழியன், “வரக்கூடாது தான். ஆனால், ராஜபாளையம் அதை சுற்றி இருக்கிற பஞ்சாயத்து எல்லாம் சேர்ந்து தான் நம்ம ஊர் தொகுதி.

  எல்லா ஏரியா மக்களும் இருக்காங்க. பெரும்பான்மையா உள்ளவங்களுக்கு நான் யாருன்னே தெரியாத நிலையில என்னை எப்படி ஆதரிப்பாங்க? ஆனா, அவங்களை ஆதரிக்க வைக்கணும் அதுக்கு பிரச்சாரம் பண்ணனும்

  அது ஒன்னும் அத்தனை ஈசி இல்லை. ஒவ்வொரு ஏரியாவில் இருக்குற நமக்குத் தெரிஞ்ச பசங்க மூலம் அங்க இருக்குற பெரிய ஆட்களை பிடிச்சு மக்கள் முன் அறிமுகமாகணும்.

  நிறைய வேலை இருக்கு. ஏரியா வாரியா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பக்கம் கவனிச்சுக்கணும். நிறைய எதிர்ப்பு வரும், கேலி கிண்டல் வரும், எதிர்மறை கருத்து வரும் அத்தனையும் சமாளிச்சு நிக்கணும்

  குறிப்பா வெற்றி, தோல்வி இரண்டையும் ஏத்துக்குற மனநிலை இருக்கணும். ஆனா, தோல்வியை நினைச்சு தளர்ந்து போகாத தன்மை நம்ம ஒவ்வொருத்தர் கிட்டயும் இருக்கணும்

  தூய அரசியல் களப்பணி மட்டுமே நம்மளோட முதல் நோக்கமா இருக்கணும். இது இந்த தேர்தலோட முடிஞ்சு போயிடக் கூடியதா இருக்கக் கூடாது.

  எப்பவும் மக்களுக்கான களப்பணியில் முன்னாடி இருக்கிற ஒரு டீமா இருக்கணும். இத்தனையும் மனசில வச்சுகிட்டு என்கூட நிக்க போறது யார் யாருன்னு சொல்லுங்க.என்றான்.

  அவன் தீவிரமாக இதெல்லாம் பேசவும் நண்பர்களுக்குள் சலசலப்பு அடங்கி ஓர் ஆழ்ந்த அமைதி உண்டானது. உள்ளூரில் வேலை பார்க்கிற நான்கு பேர் முதலில் முன் வந்தனர்

  “எங்களுக்கு உன்னை தெரியும் விழியா. எப்பவும் நியாயமா இருப்ப, யாருக்கு ஒரு பிரச்சனை என்றாலும் முன்ன நிப்ப நீ. நாங்க உன் பக்கம் எப்பவும் நிப்போம் விழியா.என்றனர்.

  அவர்கள் அவ்வாறு சொன்னதும் இன்னும் ஒரு ஆறு பேர் சேர்ந்து, “விழியா, நீ என்ன செய்யன்னு சொல்லுடா. நீ சொல்றதை செய்வோம். நமக்குள்ள ஒருத்தர் இதுபோல காரியம் செய்யணும்னு நினைக்கும்போது நாங்க பக்கப்பலமா இருப்போம்டா.என்றனர்.

  அப்படியே எல்லோரும் ஒன்றன்பின் ஒன்றாக விழியனின் பக்கம் நிற்பதாக கூறி ஒன்றிணைந்தனர். அதன் பின் ஒவ்வொருவரும் தேர்தலை எதிர்கொள்ள தங்களது கருத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

  ஆனால், கதிர் மட்டும் நைசாக நழுவி, அந்த மோட்டார் ரூமின் வெளிப்புறத் திண்ணையில் சோமு ஆக்கி வைத்திருந்த முயல்கறியை தேக்கு இலையில் பரிமாறிக் கொண்டு, தனியாக ருசி பார்க்கிறேன் என்ற சாக்கில் உண்டு கொண்டிருந்ததை நண்பர்கள் கவனித்து விட்டனர்.

  “டேய் அங்க பாருடா! அவன் மட்டும் மொக்கிகிட்டு இருக்கான்.எனச் சொல்ல

  அவனை நோக்கி, “ஏலேய் மாப்ள! எங்களை எல்லாம் விட்டுட்டு நீ மட்டும் திங்கிறியே, உன்னை எல்லாம்...” என்று திட்டிக் கொண்டே அவனை நோக்கி ஓடி வந்தனர்

  கதிரோ சத்தமாக

மென்புலத்து வயல் உழவர்

வன்புலத்துப் பகடு விட்டுக்

குருமுயலின் குழைச் சூட்டோடு 

நெடுவாளை அவியல்.

  முல்லை நிலத்தில் தன் எருதுகளை மேயவிட்டு, சிறிய முயலின் குழைவான இறைச்சியோடும், பல்வேறு வகை அவியல்களோடும் பழைய சோற்றை உண்ண மறுத்த நிலா உழவன் பற்றிய புறநானூறு பாடல்டா இது

  சங்க காலத்தில இப்படி எல்லா வகை இறைச்சிகளையும் நம்ம தமிழ் மக்கள் ரசித்து உண்டதுக்கான பாட்டை அதோட சூழ்நிலையோட பாடி இருக்காங்கடா

  டேய் எவனும் என்கிட்ட வரக்கூடாது. அப்படி என்கிட்ட வந்து கறியில கை வைக்கணும்னா என்னைய தோக்கடிக்கணும்டா!

  ஆடு, கோழி, மீன் இன்னும் என்னென்ன கறி இருக்கோ, அதில் ஒரு பேரை சொல்லுங்க. நான் சங்க கால நூலில் வந்த பாடலுடன் அந்த கறி எந்த சூழலில் புசிக்கப்பட்டதுன்ற விவரத்தை டான் டான்னு சொல்லுவேன்

  அப்படி சொல்ல முடியாம நான் தோத்து போயிட்டா இன்னைக்கு நான் பட்டினி. என்னை பார்க்க வச்சு நீங்க சாப்பிடலாம்!” என்றான்.

                              ***

                                                              ---தொடரும்---

 

 

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib