anti - piracy

Post Page Advertisement [Top]

                                                   செவ்விழியன் (தீபாஸ்)


அத்தியாயம் 15

 

  மீட்டிங் முடியும் நேரமாகியும் இன்னும் விழியனும் கதிரும் அங்கு வந்து சேராததால், கிரஹாவிற்கு ச்சே, சின்னப் பசங்கன்றது சரியாகத்தான் இருக்கு... நான் வரச்சொன்ன நேரத்தை தாண்டி அரைமணி நேரம் ஆகிடுச்சு.

  மீட்டிங் முடிச்சதும் முக்கியமான விஷயம்  பேசணும். நம்மை சந்திச்சுப் பேச ஆட்கள் வருவார்கள் எனச்சொல்லி இங்க இருக்கிற எல்லோரையும் காக்க வைப்பது அம்புட்டு நல்லா இருக்காதே.என யோசித்த கிரஹா, விழியனின் மொபைல் நம்பருக்கு டயல் செய்தாள்.

  அவள் டயல் செய்ததும் அழைப்பை ஏற்றவர், “யாரும்மா பேசுறீங்க?” என்றார்

  “நான் கிரஹா, இது விழியன்றவரோட நம்பர் தானே?”

  என்று யாரோ வயதானவர் பேசுவதைக் கண்டு குரல் பேதத்தில் குழப்பமறைந்து  கேட்டாள்.

  “இது என்னோட போன் இல்லம்மா. பெரிய மில் ரோட்டில் பைக்கில இரண்டு இளவட்ட பசங்க வந்துகிட்டு இருந்தப்போ ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு.

  நல்லவேளை நான் ஸ்பாட்டில் இருந்ததால் உடனே ஆம்புலன்சுக்கு போன் போட்டுட்டேன். இந்த போன் ஆக்ஸிடெண்ட் ஆன இடத்தில் கிடந்தது. அந்தப் பசங்களோடதா தான் இருக்கும்.

  ஒருத்தனுக்கு ரொம்ப அடி. இன்னொருத்தருக்கும் அடிதான். ஆனா, உசுருக்கு பயம் இல்ல. இரண்டு பேரையும் ஜி.ஹெச்சுக்கு ஆம்புலன்சில் கொண்டு போயிருக்காங்க.என்றார்.

  அவர் சொன்னதும் அதிர்ச்சியில் ஒரு நிமிடம் பேச மறந்து பின் சுதாரித்து, “சார் அந்த போனை ஜி.ஹெச்சுக்கு வந்து என்னிடம் கொடுக்க முடியுமா

  நான் இன்னும் பத்து பதினைந்து நிமிசத்தில் ஹாஸ்பிட்டலுக்கு வந்துருவேன். என் பேர் கிரஹா. நான் மில் முதலாளி பூபதிராஜாவோட தங்கச்சி.என்றாள்.

  “என்னது முதலாளி பூபதிராஜாவோட தங்கச்சியா? உங்களுக்கு வேண்டியப் பட்டவங்களுக்கா ஆக்சிடெண்ட் ஆச்சு? இதோ இப்பவே நான் ஜி.ஹெச்சுக்கு வாரேன் மேடம்.எனச் சொன்னார் அந்த நபர்.

  கிரஹா மீட்டிங் முடிவதற்கு முன்பே முக்கியமானவர்களுக்கு ஆக்சிடெண்ட் நடந்திருப்பதாக கூறி ஹாஸ்பிடல் விரைந்து வந்தாள்.

  ஹாஸ்பிடலில் ரிசப்சனில் பெரிய மில் ரோட்டில் பைக் ஆக்சிட்டென்டில் காயம்பட்டு அட்மிட் ஆகியிருப்பவர்கள் எந்த பிளாக்கில் இருக்கிறார்கள் என விசாரித்து ஆபரேஷன் தியேட்டர் இருந்த ஈ.பிளாக்கிற்கு வந்தடைந்தாள்.

  கிரஹாவை பார்த்தவர்கள், யார் அவள் என்ற விவரமும் அவளின் செல்வாக்கும் புரிந்தவர்களாய் இருந்தனர். மேலும் அவளுக்குத் தெரிந்த மருத்துவரும் பணியில் இருந்தார்.

  ஆதலால் அவர்களிடம் ஃபோன் செய்து அவள் விசாரிக்க, அவரே நேராக கிரஹாவை தேடி வந்து அவளை ஆப்பரேசன் பிளாக்கிற்கு அழைத்துச் சென்றார்.

  ஆபரேஷன் தேட்டர் அறைக்கு வெளியில் விழியன் கை, கால் மற்றும் தலையில் கட்டுடன் அமர்ந்திருந்தான். அவனின் கையில் இருந்த மொபைல் ஆக்சிடெண்டில் தவற விட்டதால் மற்றவர்களை அவனால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

  மேலும் ரோட்டில் அவர்கள் இருவரும் சென்று கொண்டிருந்த வாகனத்தை பின்னால் இடிப்பது போல கனரக வாகனம் வருவதை கண்டு சுதாரித்து ஓரமாக ஓதுங்கியதால் இவர்கள் இருவரும் உடல் நசுங்காமல் தப்பித்தார்கள் இல்லையேல் வண்டி இவர்களும் மொத்தமாக நொறுங்கியிருப்பார்கள்.

  இவர்களின் பைக் வேகத்தில் இருந்ததால் பின்னால் லேசாக அக்கனரக வாகனம் தட்டியதில் வண்டியில் இருந்து இருவரும் தூக்கி எறியப்பட்டனர்.

  எறிந்ததில் கை, கால்களில் பலத்த அடியுடன் தட்டுத்தடுமாறி எழுந்த விழியன், சற்றுத் தொலைவில் தலையில் இரத்தம் சொட்ட துடித்து கொண்டிருந்த கதிரிடம் வேகமாக வந்தான்.

  அதே வேளையில் எதிரில் வந்த இருவர் அந்த ஆக்சிடெண்ட் கண்டு பதறி, அவர்களின் அருகில் வந்தவர்கள் உடனே ஆம்புலன்சுக்கு போன் செய்தனர்.

  நல்லவேளை இவர்களின் கெட்ட நேரத்திலும் நல்ல நேரம் ஆம்புலன்ஸ் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஸ்பாட்டுக்கு விரைந்து வந்துவிட்டது.

  கடந்த அந்த ஐந்து நிமிடமும் நரகமாக கழிந்தது விழியனுக்கு.

  துடித்துக் கொண்டிருந்த தனது நண்பனின் தலையில் வழிந்த ரத்தத்தை கட்டுப்படுத்த தன்னுடைய சட்டையை கழட்டி அவன் தலையில் இறுக்கமாகக் கட்டு போட்டான்.

  கதிரின் உணர்வு தப்புவதைத் தடுக்க அவனின் கன்னத்தில் தட்டி அவனை முழிக்க வைத்து, “டேய் கதிர், உனக்கு ஒன்னும் இல்லடா. இதோ ஆம்புலன்ஸ் வந்துடும் பொறுத்துக்கோ என்கிட்ட பேசு.எனப் புலம்பினான்.

  தனது உடம்பில் பட்ட காயத்தில் இருந்து ரத்தம் வருவது கூட உணராது சொரணை இழந்து, அவனை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று எண்ணம் கொண்டு துடித்துக் கொண்டிருந்தான்.

  ஜி.ஹெச் வந்ததும் கதிரின் நிலை கண்டு உடனே தலையில் சிகிச்சைக்கு ஏற்பாடு நடந்தது.

  ஒன்று மட்டும் உறுதி, அரசு மருத்துவமனையின் உள்ளே சென்றுவிட்டால் உயிர்களை காப்பத்தில் எந்தவித சலிப்பும் எழுவதில்லை. முடிந்த அளவில் அதற்கான அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டு விடுகின்றனர்

  ஆனால் அத்தோடு அவர்களின் பணி முடிவடைந்ததாக ஒரு மெத்தனப் போக்கு அங்கு நிலவுவது என்னவோ உண்மை.

  ஆமாம் கதிர் தலையில் ஏற்பட்ட காயத்திற்கு சர்ஜிக்கல் அறையில் அவனுக்கான ஆபரேஷன் செய்து அவன் உயிர் பிழைக்க முதல் வகை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, அவனது உயிருக்கு ஆபத்து நீங்கிவிட்டது என டாக்டர் கூறிச் சென்றது வரை விழியன் தனக்கு ஏற்பட்டிருந்த காயத்திற்கு எந்த சிகிச்சையும் செய்ய அனுமதிக்கவில்லை

  அதன் பின்பே அவனின் அடிபட்ட காயத்தின் வலியை உணர்ந்து அதற்கு சிகிச்சை அளிக்க ஒத்துழைத்தான். அதே நேரம் அங்கு வந்து சேர்ந்தாள் கிரஹா.

  கிரஹா வருவதற்கும், விழியனின் மொபைலில் பேசிய அந்த நபர் அங்கு வந்து சேர்ந்த நேரமும் ஒரே சமயமாக இருந்தது.

  மொபைல் வைத்திருக்கும் ஆள் தனியாக அங்கு வரவில்லை கூடவே எம்.எல்.ஏ அகத்தியனும் வந்து சேர்ந்தார்.

  “தம்பி இந்தா உன் போன்.என்று தன்னிடம் இருந்த மொபைலை நீட்டினான் அகத்தியன்

  கிரஹாவை பார்த்தபடி, “பார்த்தியா தம்பி. பெரிய இடத்தில் சப்போர்ட் இருக்குதுன்னு நமக்கு எதிரா நீ கிளம்பியதால என்ன ஆச்சுன்னு பார்த்தேல்ல... ஆனாலும் உனக்கு ஆக்சிடெண்ட் ஆனதும் காப்பாத்த உடனே ஸ்பாட்டில் நின்னு ஆம்புலன்சை வரவச்சதும் என் ஆளுதான்.

  எத்தனை பெரிய சப்போர்ட் இருந்தாலும் என் முன்னாடி எதுவும் வேலைக்கு ஆகாதுன்னு இப்போ புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.என்றார்.

  அவர் அவ்வாறு சொன்னதும் விழியன், “அப்போ எனக்கு ஏற்பட்ட ஆக்சிடெண்டுக்கு காரணம் நீங்க தானா? இதோ, உள்ள என் பிரண்ட் உயிருக்கு ஆபத்தான நிலையில் இங்கு வந்து சேர்ந்தான். அவன் உயிருக்கு எதுவும் ஆகியிருந்தா இப்போ ஒரு கொலைகாரனா என் முன்ன நின்னு இருப்பீங்க.என்றான்.

  அவன் அவ்வாறு சொன்னதும், “அட அட அடடா... என்ன தம்பி இன்னும் பச்ச புள்ளையாவே இருக்கீங்க?

  இது ஒரு வார்னிங் தான். அப்படியே ரோட்டில் சாகட்டும்னு விடாம காப்பாத்திய நானே உங்கள் கதையை அங்கேயே முடிக்க சொல்ல எம்புட்டு நேரமாகியிருக்கும்?

  ஆனா, நான் அப்படி செய்யலை. ஒரு சான்ஸ் குடுத்து பார்ப்போம்னு நினச்சேன். இது உனக்கும் உன் கூட இருக்கிறவனுக்கும் மறு ஜென்மம்னு நினச்சுக்கோ. இத்தோட ஒதுங்கிகிட்டா நல்லது.என்றார்.

  ஒரு கூடையில் இருந்த பழங்களை அவனுக்கு அருகில் வைத்துவிட்டு விடைபெறும் தோரணையில் கை கூப்பினார்.

  கிரஹா மேடத்தை பார்த்து, “அம்மணி நீங்க பெரிய இடத்து பொண்ணு. இங்க எல்லாம் உங்க ரேஞ்சுக்கு வருவது அம்புட்டு பாதுகாப்பு கிடையாது.

  கொரோனா காலம் வேற பார்த்து இருந்துக்கோங்க. வீட்டில் அண்ணனை கேட்டதா சொல்லுங்க.எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

  விழியனுக்கும் கிரஹாவுக்கும் அத்தனை கோபம் எழுந்தது.

  இதுக்காகவே எலெக்சன்ல நான் கட்டாயம் நிப்பேன் மேடம். என் பிரண்டோட இந்த நிலமைக்கு காரணமான இந்த ஆளை இனி சும்மா விடக்கூடாது. இந்த ஆளை பதவியில் இருந்து இறக்கியே ஆகணும்.எனச் சொன்னான்.

  அப்பொழுது, “சார் பேசண்டை பெட் மாத்தணும் ஒரு பைவ் ஹன்ரட் கொடுங்கஎனச் சொல்லி அங்கு பணிபுரியும் கம்பவுண்டர் வந்து நின்றான் விழியனிடம்.

  ஆக்சிடெண்டான போது அவன் சட்டையை கூட கழட்டி கதிரின் தலையில் ரத்தம் வழிவதை தடுக்க கட்டிவிட்டு விட்டான். அவன் வைத்திருந்த பர்ஸ் என்ன ஆனதென்று அவனுக்கு நினைவில்லை.

  இப்பொழுது வெறும் ரத்தக்கறை படிந்த பனியனுடனும் முட்டிகளில் உராய்வால் கிழிந்து போன பேண்டுடன் இருந்த விழியனிடம் தற்சமயம் ஒரு பைசா கூட இல்லை.

  எனவே அந்த கம்பவுண்டரிடம், “சார் அதுவும் உங்க டியூட்டி தானே. என்கிட்ட இப்போ ஒத்த பைசா இல்ல. வீட்டில் உள்ளவங்க வந்தாத் தான்.என இயலாமையில் கூறினான்.

  “சாரே எத்தனை கேஸ் இதே போல நாங்க பார்க்கணும். துட்டு கொடுத்தா எல்லாம் பக்காவா நடக்கும். இல்லாட்டி என்னைக் குத்தம் சொல்லி பிரயோஜனம் இல்லை.எனச் சொல்லி

  அங்கிருந்து நகர போகையில், “இந்தாங்க முதலில் அவரை பத்திரமா சிப்ட் பண்ணுங்க.எனச் சொல்லி இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை அந்த கம்பவுண்டரிடம் நீட்டினாள் கிரஹா.

  அவனும் கொஞ்சம் கூட சங்கோஜமே இல்லாது அவள் கொடுத்த ரூபாயை வாங்கிக் கொண்டு அங்கிருந்து ஆபரேஷன் அறையில் இருந்து கதிரைத் தீவிர கண்காணிப்பு பிரிவு பகுதிக்கு மாற்ற சென்றான்.

  கிரஹா வரும்போது அவளுடன் அங்கு வந்த டாக்டர் சரண் அவசர வேலை என்று வந்ததால், “இதோ வருகிறேன்.என சென்றவர் அங்கு வந்தார்.

  விழியனோ தன்னிடம் பைசா கூட இல்லாததால் கிரஹாவை தடுக்க முடியாத சங்கடத்துக்கு ஆளானான்.

  எம்.எல்.ஏ அகத்தியன் கொடுத்துச் சென்ற தனது மொபைலில் இருந்து நண்பர்களை அழைத்து ஆக்சிடெண்டாகி தாங்கள் மருத்துவமனையில் இருப்பதாய் கூறி, கதிரின் வீட்டில் பக்குவமாக பேசி கூட்டிக் கொண்டு வருமாறு சொல்லியவன், கொஞ்சம் பணத்தையும் கொண்டு வந்து தருமாறு கூறினான்.

  கிரஹாவோ அங்கு வந்த டாக்டர் சரணிடம், “என்ன டாக்டர் இது? பொதுமக்களுக்கு வரிப்பணத்தில் இருந்து இலவச ட்ரீட்மெண்டுக்கு உருவாக்கிய கவர்மெண்ட் ஹாஸ்பிடல் தான் இது. இங்க வரும் மக்கள்கிட்ட காசு கேட்பது எந்த விதத்தில் நியாயம்?” என்றாள்.

  “நீங்க சொல்றது சரிதான் மேடம். ஆனால் என்னோட டியூட்டி மருத்துவம் பார்க்கிறது மட்டும்தான். பொதுவா இங்கே வரும் சீரியஸ் கேஸ் எல்லாத்தையும் முடிஞ்ச அளவு ட்ரீட்மெண்ட் கொடுத்து உயிர் பிழைக்க வச்சுடுவோம்.

  முடியாத பட்சத்தில் தான் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்புவோம். நாங்க உயிர் பிழைக்க வைக்கிறதில் காட்டும் அக்கறையோடு எங்க டியூட்டி முடிஞ்சுடுது.

  அதுக்கு பின்பு அவர்களை நல்லபடி கவனித்து அப்சர்வேசனில் வைத்து எங்களுக்கு ரிப்போர்ட் அனுப்புறதுக்கும் மேற்படியான படுக்கை வசதி மற்றும் போஸ்ட் சர்ஜிக்கல் பார்மால்டி எல்லாம் எங்களின் நேரடி பார்வையில் வச்சுக்கிட முடியாது.

  அதுக்கு இங்க பெரிய டீமே இருக்கு. அதன் நிர்வாகத்தில் டாக்டர்ஸ் நாங்க தலையிட முடியாது. ஆனா ஒன்னு உறுதியா என்னால சொல்ல முடியும்.

  தனியார் மருத்துவமனை போல சுத்தமும், துட்டு கொடுப்பவங்களுக்கும் பெரிய இடத்து ஆளுங்களுக்கும் சிறப்பு கவனிப்பு போன்ற பாகுபாடு இங்க உள்ள குறையாயிருக்கலாம்

  ஆனா, இங்க டேஞ்சர் கட்டத்திலோ அவசர சிகிச்சையிலோ அனுமதிக்கப்படுறவங்களோட உயிரை முடிந்த அளவு போராடி டிரீட்மெண்டில் பிழைக்க வைக்க அத்தனை முயற்சியும் பிரதிபலன் எதுவும் எதிர்பார்க்காது டாக்டர்ஸ் கடமையை மட்டுமே கண்ணாக செய்து எழுப்பிவிட்டுடுவோம்.என்றார்.

  விழியன் மொபைலில் பேசி முடித்துவிட்டு அந்நேரம் அவர்களின் அருகில் வந்தான்

  அவனிடம் டாக்டர், “என்னப்பா இங்க வரும் போது நீங்களும் உங்க பிரண்டும் எப்படி வந்தீங்க? வந்ததுக்கு பிறகு இங்க சரியான டிரீட்மெண்ட் கொடுத்து இப்போ உங்க பிரண்டை எழுப்பி விட்டுட்டோம்ல. பணம் அது இது அப்படின்னு அப்போ ஏதாவது பேசி டிரீட்மெண்டை தாமதப் படுத்தினோமா?” எனக் கேட்டார்.

  “ம்கூம் இல்ல டாக்டர்என்றான்.

  “நாங்க எங்க வேலையை சரியா செய்ததால் இப்போ உங்க பிரண்ட் உயிரோட இருக்கார் சரி தானே?” என்றவரிடம்,

  “ம்... சரியான நேரத்தில் ஆம்புலன்சில் வந்து சேர்ந்ததும் உடனே அவசர பிரிவுக்கு கொண்டு போய் தேவையான டிரீட்மெண்ட் கொடுத்து என் கதிரை காப்பாத்தி கொடுத்துட்டீங்க டாக்டர்.

  நான் அவனுக்கு என்னவாவது ஆகிடுமோன்னு. ரொம்ப பயந்துட்டேன். இப்போ தான் எனக்கு உயிரே வந்தது போல இருக்கு.என்றான்.

  “இனி பயம் இல்ல, ஆனா, எழுந்து நடக்க எப்படியும் ஒரு மாசம் ஆகும். நிறைய ரத்தம் வெளியே போயிடுச்சு. கவனமா டாக்டர் கொடுக்கிற மருந்து மாத்திரையோட சத்தான ஆகாரம் எடுத்துகிட்டா சீக்கிரம் சரியாகிடுவாங்க.

  இங்க உங்களைப் பெரிய பெரிய ஆட்களெல்லாம் வந்து பார்க்குறாங்க. அதனால் நல்ல பசை உள்ள பார்டின்னு மத்த ஸ்டாப்ஸ் காசு எதிர்பார்ப்பாங்க.

  அவங்களோட எதிர்பார்ப்பு தப்புதான். ஆனால், இது என்னோட ஹாஸ்பிடல் இல்ல. நான் தட்டிக் கேட்டா பல சிக்கல்கள் எனக்கு வரும். அதை பேஸ் பண்ற சக்தி எனக்கில்ல.

  இருந்தாலும் எனக்கு வேண்டியவங்க கவனிச்சுக்கோங்கன்னு ஒரு வார்த்தை சொல்லி வைக்கிறேன்.என அவனிடம் சொன்னார்.

  “அப்போ கிரஹா மேடம் நான் கிளம்பட்டா? எனக்கு இது டியூட்டி டைம்.என்று சொன்ன டாக்டர் சற்று தயக்கத்துடன்

  “உங்க ஹெல்த் கண்டிஷனுக்கு இங்க ரொம்ப நேரம் நிக்கிறது சரியில்லை மேடம். இந்தச் சூழல் உங்களுக்கு மைக்கிரேன் வரவைக்கும். நீங்க சீக்கிரம் இங்கிருந்து கிளம்பிடுங்க.எனச் சொன்னார்.

  “ம் இதோ கொஞ்ச நேரத்தில் கிளம்பிடுறேன். உங்க டியூட்டி என்னால் டிஸ்டர்ப்பாக வேண்டாம். பை டாக்டர். ஏதாவது உதவி தேவைப்பட்டா உங்களை நான் காண்டாக்ட் செய்வேன்.என்றவளிடம்,

  “ம் எப்பவும் நீங்க என்கூட பேசலாம். பார்ப்போம் மேடம் பை.என அங்கிருந்து கிளம்பினார்.

***

                                          ---தொடரும்---

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib