விழியோரத் தேடல் நீ (தீபாஸ்)
தேடல் - 4
மறுநாள், வனிதா சொன்னது போலவே கவியின் வீட்டிற்குக் கவிழையாவை கடைக்குக் கூட்டிக்கொண்டுபோக வந்துவிட்டாள். கவி அப்பொழுதுதான் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்...
“வா வனித்தா!” என்ற பார்வதி, “நீயும் கொஞ்சம் சாப்பிடும்மா" என்றார் .
“நான் ஏற்கனவே சாப்பிட்டாச்சு ஆன்ட்டி, இருந்தாலும் உங்கள் கைப்பக்குவம் என் அம்மாவிற்கு வராது அதனால் இப்போது கொஞ்சமா வைங்க" என்று சொல்லிவிட்டு சாப்பிட மேசையில் அமர்ந்தாள்.
அதனைப் பார்த்த கவிழையா சிரித்துக்கொண்டே, “அப்போ உங்கள் வீட்டில் சாப்பிட்டது?” என்று கேட்டாள்
.
“அப்பச் சாப்பிட்டது பசிக்கு. இப்ப சாப்பிடுவது ருசிக்கு” என்று சொல்லிக்கொண்டே சாப்பிடத் தொடங்கினாள்.
அப்பொழுது பார்வதி, “ஏம்மா இந்தக் கொளுத்தற வெயிலில் ட்ரெஸ் எடுக்கப் போகணுமா? அப்பாகூடச் சாயங்காலம் போகலாமே!” என்றதும்.
“அம்மா நான் எடுக்கும் ட்ரெஸ்ஸைப் பத்தி அப்பாவிற்கு அபிப்ராயம் சொல்லத் தெரியாது. அதற்கு வனித்தா தான் சரி. பொம்பளைப்பிள்ளைகள் தனியாக ஆறு மணிக்கு மேல வெளியில் போகக்கூடாதுனு சொல்லி அனுப்பமாட்டீங்க. அதனால் வெயிலா இருந்தாலும் பரவால்ல இப்போவே போய் எடுத்துட்டு வந்துவிடுகிறோம்” என்று கூறினாள்.
அன்று போன அதே மாலிற்குச் சென்று ஸ்கூட்டியை விட்டு இறங்கியதும் அங்கிருந்த செக்யூரிட்டி ஓடி வந்து “நான் ஸ்கூட்டியை பார்க் பண்ணிவிட்டு சாவியை உங்களிடம் கொடுத்து விடுறேன் மேம்” என்றவரை, கவி, வனி இருவரும் அதிசயப் பிறவியைப் பார்ப்பதுபோல் பார்த்துவைத்தனர்.
“என்னமோ நாம BMW காரில் வந்து இறங்குவதைப்போல் இவர் ஓவரா ட்ரீட் பண்றாரே.... நமக்கு இது சரிப்பட்டு வராது” என்று வனியிடம் தாழ்ந்தகுரலில் கூறிய கவிழையா,
‘இருக்கட்டும் சார்! நாங்களே நிறுத்திக்கிடுவோம்” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்கள்
அவருக்குத்தான் தன்னிடம் பிறப்பிக்கப்பட்ட மேலிடத்து உத்தரவினை நிறைவேற்றமுடியாத பயத்துடன் அவர்கள் பின்னாடியே சென்று நிறுத்த வழி செய்துகொடுத்துச் சென்றார்.
அன்று போன அதே கடைக்கு இருவரும் போனார்கள். கடையின் முன் அன்று இருந்த தள்ளுபடி வாசகம் இன்றில்லை. எனவே கவிழையா, “ஏய் வனி தள்ளுபடி இன்னைக்குக் கிடையாது போல அதனால என் பட்ஜெட்டில் வாங்க முடியாதுப்பா...” என்றாள்.
“இவ்வளவுதூரம் வந்தாச்சுக் கவி... உள்ளேபோய்ப் பார்த்துடலாம் வா!” என்று கூற, சரி என்று தலையசைத்த கவியும் வனியுடன் அக்கடையின் உள்ளே நுழைந்தாள். அக்கடையின் விற்பனையாளர்,
“உங்களுக்கு எந்தமாதிரியான கலெக்சன் வேண்டும்” என்றதும்.
“வுமென்ஸ் ஆபீஸ்வியர் கலெக்சன்ஸ்” என்று கவியிடம். அங்குக் காண்பித்த உடை அனைத்தும் கவிழையா சொன்னதுபோல் விலை தலைசுற்ற வைத்தது.
உடனே கவிழையா, “சார்! ஆயிரம் ரூபாய்க்குள் இருந்தால் காட்டுங்கள். இல்லைன்னா நாங்கள் போறோம்” என்று கூறிக்கொண்டிருக்கும் போது அக்கடையின் தொலைபேசி அழைத்தது.
அதில் பேசியப்பின் விற்பனையாளரின் போக்கே மாறிவிட்டது. “மேடம் இன்று இங்க நீங்கள் வாங்கும் எல்லாமே ஆயிரம் ரூபாய்க்கு உள்ளேதான், இந்தக் கடையின் ஓனருக்கு இன்று பிறந்தநாள் அதனால உங்களுக்கு இந்த ஆபர் கொடுத்திருக்காங்க” என்று கூறி டிரஸ்களை அவள் முன் குவித்து உட்காரச்சொல்லி உபசரித்துச் சாப்பிட கூல்காபி வரவழைத்துக் கொடுத்தார்.
வனி கவியிடம், “இன்று உனக்கு அதிர்ஷ்டமான நாள் என்று காலண்டரில் போட்டிருக்கும். வீட்டிற்குப் போய்ப் பார்த்துவிட்டுச்சொல்லு”, என்று கூறிக்கொண்டே அக்கடையில் அவர்களுக்குத் தேவையான உடையை எடுத்து முடிக்கும்போது அங்கு மஹிந்தனும் கதிரும் அங்கு வந்தனர்,
கவிழையா பணம் செலுத்தி ரசீது வாங்கும் வரை மஹிந்தனின் பார்வை கவிழையாவை பின்தொடர்ந்து கொண்டிருந்தது.
மஹிந்தன் அக்கடைக்குள் நுழையும்போதே கவிழையா பார்த்துவிட்டாள். இந்த மூஞ்சியை எங்கயோ பார்த்திருக்கிறோமே...?! என்று நினைக்கும்போதே அன்று அவனைப் பாத்ததும் அதன் பின் நடந்த நிகழ்வுகளும் அவளுக்கு ஞாபகம் வந்தது. அதனால் அவள் வெறுப்பாக முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டாள்.
ஆனாலும் அவனின் பார்வை தன்னைத் தொடர்வதை அவளால் உணரமுடிந்தது. எனோ! அப்பார்வையில் அவளுக்கு நடுக்கம் பிறந்ததால், வனித்தாவின் கையை இருக்கி பிடித்துக்கொண்டாள். ஆனால் வனித்தாவோ இது எதையும் உணரவில்லை. அதனால்...
“ஏன்டீ என் கையை இந்த அழுத்து அழுத்துற” என்றாள்.
“அன்னைக்கு நாம் இங்க வந்தோம்ல அப்ப ஒருத்தன் நான் கீழே விழப்பார்த்தபோது என்னைய கீழே விழாமல் பிடிச்சதுக்குப் பின்னாடி வம்பு செய்தான்ல... அவன் நம்மளையே முறைச்சு பார்க்கிறான்டீ...!” என்றாள்.
உடனே வனித்தா திரும்பி பார்த்தாள். அவள் பார்த்ததும் “ஹாய்...!” என்று கூறி, மஹிந்தன் கை அசைத்தான். பக்கத்தில் நின்ற கதிர் சுவாரஸ்யமாக அவர்களை வேடிக்கை பார்த்தான்.
அறிமுகம் இல்லாத ஒருத்தன் எதோ நீண்டகாலம் பழகியவர்களைப் பார்த்துச் செய்வது போலக் கையசைத்து ஹாய்! சொன்னவிதத்தில் யோசனையுடன் அவனைப் பார்த்த வனித்தா...
“கவி அவன் நம்மளை பார்த்து ஹாய் சொல்லுறான்டீ...!” என்றாள்.
உடனே கவிழையா எரிச்சலுடன் “இப்படித்தான் அவனைப் பார்த்துவைப்பயா?” எனக் கடிந்தாள்
“என்னடீ கவி, நீதானே அவன் முறைக்கிறானு சொன்ன...! எவன் அவன் நம்மைப்பார்த்து முறைக்கிறதுனு பார்த்தேன். இது ஒரு குத்தமா...?” என்று கூறினாள் ...
“நீ பார்த்தது குதத்மில்லை. அவனுக்குத் தெரியும் படி பார்த்தததான் தப்பு..., இப்பபாரு அவன் உன்னைய பார்த்து கையை ஆட்டி திரும்பவும் வம்பிழுக்க ஆரம்பிச்சுட்டான்...” என்றாள் கவி... நாம அவனைக் கவனிக்காதது மாதிரி சீக்கிரம் வெளிய போய்விடுவோம்...”
என்றவள் ஒரு கையில் வனித்தாவைப் பிடித்துக்கொண்டு மற்றொரு கையில் ட்ரெஸ் எடுத்த பைகளைத் தூக்கிக்கொண்டு விறுவிறு என்று வாசலை நோக்கி சென்றாள்...
உடனே மஹிந்தன் “ஏய்...! மெதுவா நட பேபி, அன்னைக்கு போலத் திரும்ப நீ விழ நான் பிடிக்கனு சீன் கிரியேட் ஆகிடப்போகுது....” என்றான்.
அவனின் உரிமையானவர்களிடம் பேசுவதைப் போன்ற தோரணையினால் பேபி என்ற அழைப்பில்வெகுண்ட கவிழையா
“நீங்கள் யாரு சார்...? யாரோ ஒருத்தர் என்னை எப்படிப் பேபின்று கூப்பிடலாம்...?, இதுபோலப் பேச்சையெல்லாம் உங்ககூட வந்தாங்களே ஒரு பொண்ணு, அவளோடு வைச்சுக்ங்க.... இன்னும் ஒரு தடவை என்கிட்ட இதுபோன்று நடந்தா... நான் மனுசியாவே இருக்க மாட்டேன்” என்றுகூறி,
“வாடீ போகலாம்” என்று தோழியை அங்கிருந்து இழுத்துக்கொண்டு சென்றாள் கவி.
அவளின் கோபத்தைக் கண்ட மஹிந்தன் “எங்க போயிடப்போகிறாள் நம்ம கிட்டத்தானே வேலைக்கு வரப்போறா அப்போ பார்த்துக்கிடலாம்” என்று கதிரிடம் கூறியபடி மால் விட்டு வெளியே வந்து காருக்காகக் காத்திருந்தான். அவன் காரும் வாசலுக்கு வந்தது...
அவன் காரில் ஏறும் போது அங்கு வந்த கவியும் வனியும் அவனை அதிர்ச்சியுடன் பார்ப்பதை பார்த்து ஒருநிமிடம் அவன் கண்கள் பளிச்சிட்டது பின் அவன் உதடுகள் “கண்டுபிடிச்சிட்டாள்”, என்றுகூறி பின் கவியைப்பார்த்து கண்சிமிட்டிவிட்டுக் காரில் சென்றுவிட்டான்...
வனித்தா அதிர்ச்சியுடன் “கவி! இத்தனை நாள் நம்மள ஃபாலோ பண்ணிய கார் இவனுடையது தான்போல...!” என்று கூறினாள்.
.
“ஆமாம் வனி அன்னைக்கு நீ சொன்னதுபோல என்னைய பலிவாங்க கிளம்பி வந்துட்டான் போல...! எனக்குப் பயமாக இருக்குதுடி!” என்றாள்.
தன் தோழி பயப்படுவதைப் பார்த்த வனித்தா “கவி உடனே இதை உன் அப்பாட்ட சொல்லிடு” என்று கூறினாள்.
“அச்சச்சோ! நீ அப்பாவிடம் உளறிடாத! ஏற்கனவே எனக்குக் கல்யாணம் செய்யணும்னு பேசினாங்க.... நான் தான் கெஞ்சி ஒரு வருடம் வேலைக்குப் போகப் பெர்மிசன் வாங்கியிருக்கேன். இதைச் சொன்னால் பயந்துபோய் வேலைக்கு அனுப்பமாட்டாங்க, கல்யாணம் பண்ணி புருஷன் வீட்டிற்கு அனுப்பிவிடுவாங்கள்” என்றவள்...
இனிமேல் பகலில் கூட வெளியில எங்கயும் தனியாகக் கொஞ்சநாள் போகக்கூடாது... மஹிந்தன் சாப்ட்வேர் கம்பெனி பஸ் எங்க வீட்டிலயிருந்து நடக்குற தொலைவில் உள்ள மெயின்ரோட்டில் போறதை பார்த்திருக்கேன்.... அதில தான் வேலைக்குப் போகணும், ஸ்கூட்டியில் போகக்கூடாது....” என்று கூறினாள்..
“ஒரு சில மாசம் அவனோட கண்ணில படாம இருந்தாச்சுன்னா அவன் அவனுடைய வேலையைப் பார்க்க போயிடப் போறான்” என்று அவளுக்கும் சேர்த்துச் சமாதானம் சொல்லிக்கொண்டாள்.
அவன் பெயர் ‘மஹிந்தன்’ என்பதையும், அவனிடம்தான் அவள் வேலைக்குப் போகப்போகிறோம் என்பதையும் கவிழையா அறியவில்லை......
******
அன்று காலை கவிழையா வீட்டில் “அம்மா இங்க வாங்க, வருண் என்னுடைய பேனாவை கொடுக்கமாட்டேனு வம்புசெய்றான்...” என்று தன் ரூமில் இருந்து கத்திக்கொண்டு இருந்தாள் கவி.
பார்வதிவோ கோபத்துடன் “நான் அடுப்படியில் வேலைபார்க்கவா? அல்லது உங்க ரெண்டுபேருக்கும் வழக்கு தீர்க்கவா?” என்றார்.
வருண் கவியிடம் “உன்னால என்கிட்ட இருந்து பிடுங்க முடிந்தால் பிடிங்கிக்கோ...” என்று சொல்லிவிட்டு முன் அறைக்கு ஓடி வந்தான்.
அவனைத் துரத்திக்கொண்டு வந்த கவி அவன் கையில் இருந்த பேனாவினை பறிக்க.... பேனா மூடி மட்டும் கவியின் கையில் இருந்தது, பேனா கீழே விழுந்துவிட்டது....
அப்பொழுது, “இங்க என்ன சண்டை...?” என்று கேட்டுக்கொண்டு வந்த ஈஸ்வரன் கீழே விழுந்த பேனாவை எடுத்தார். அப்பேனாவின் முனி முறிந்திருந்தது.
அதைப்பார்த்து கவலையோடு கவிழையா “இன்னைக்கு நானு வேலையில ஜாயின்செய்யுறப்போ முதல் முதலில் சைன்பண்றதுக்குனு வாங்கிய புதுப்பேனா இப்படி உடைஞ்சுபோச்சே...!” என்றாள்.
அதனைக் கேட்ட பார்வதிக்கு ஏனோ அது அபசகுனமாகப்பட்டது.
வருண் “சாரி... கவி...! இப்படி உடையும்னு நான் நினைக்கலை” என்றான்.
ஈஸ்வரன், “அவன் தான் ஸாரி கேட்டுட்டானே கவி, நீ போகுற போது வழியில வேற பேனா வாங்கிக்கலாம்...” என்றார்.
ஈஸ்வரனிடம், “இன்னைக்கு முதல் நாள் கவி வேலைக்குப் போறதால நீங்களும் கூடப்போய், அவள் வேலை பார்க்குற இடத்தைப் பார்த்துட்டு வாங்க...” எனச்சொன்னாள் பார்வதி.
கவியிடம், “நீ கிளம்பிட்டு சாமிக்கு விளக்கேத்தி சாமிகும்பிட மறக்காதே” என்றும் கூறினாள் பார்வதி.
ஈஸ்வரன் தன் மகளுடன் அவள் வேலையில் ஜாயின் செய்யும் நிறுவனத்திற்கு வந்தவர் அவளுடன் அங்கிருந்த ரிசெப்சனுக்குச் சென்றதும், அங்கிருதவள் “குட்மார்னிங் மே ஐ ஹெல்ப் யூ?” என்று கேட்டாள்.
அவளிடம் கவிழையா தன் பணி நியமன உத்தரவை காண்பித்தாள்
அதை அங்கிருந்த தொலைபேசிமூலம் உறுதிசெய்துவிட்டு கவிழையாவை மட்டும் உள்ளே செல்ல அனுமதித்தாள்.
கவிழையா தன் தந்தையிடம் விடை பெற, “அப்பா” என்று அழைத்தாள்.
அவர் அவள் கூப்பிடுவதைக் கவனிக்காமல் அந்தக் கட்டிடத்தின் பிரமாண்டத்தையும் அங்குப் பணிபுரியும் மற்ற பணியாளர்களின் நாகரிகமான தோற்றத்தையும் அவ்வலுவலகத்தின் தூய்மையையும் பார்த்து தன் மகளும் அங்கு வேலைபார்ப்பதில் பெருமை அடைந்தார்.
திரும்பவும், அப்பா! என்ற அழைப்பில் தன் மகளைப் பார்த்து வாழ்த்துக் கூறி தான் வாங்கிய புதுப் பேனாவை அவளிடம் கொடுத்துவிட்டு வெளியேறினார்.
கவிழையா ஆர்வமாகவும் சிறிது தடுமாற்றதுடனும் உள் நுழையும் போது அவளை எதிர்கொண்டு அழைத்துச் செல்ல வந்த பிரசாத்...
.
“நான் பிரசாத், நீங்க கவிழையா தானே” என்று புன்னகையுடன் அவளிடம் அறிமுகமாகியவன், “நான் இங்கு ஹைச்.ஆர் ஆக இருக்கிறேன்” என்றுகூறிவிட்டு “வெல்கம் டு அவர் ஹோம்” என்று கூறி அழைத்துச்சென்றான்
அத்தளத்தில் இருந்த ஓர் அறையைக் காண்பித்து “அங்க இன்னும் நான்கு நியூ ஹேன்டிடேட்ஸ் உட்கார்ந்துக்கிட்டு இருப்பாங்க. நீங்க போய் அவர்களுடன் வெய்ட் பண்ணுங்க... நம்ம டிபார்ட்மென்ட் ஹெட் உங்களை வந்து பார்ப்பார்” என்று கூறிச்சென்று விட்டான்.
அங்கு அவள் அமர்ந்த சிறிது நேரத்திலேயே அங்கு வந்தவர் “ஹாய் ஐ ஆம் யுவர் டிபார்ட்மென்ட் ஹெட் ராம்” என்று கூறி கவிழையாவைத் தவிர மற்ற நாலுபேரிடம் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட சொனான்...
கவிழையாவிடம் “மிஸ் கவிழையா, ஃபாலோ மீ...” என்று கூறி உள்ளே கூப்பிட்டுக்கொண்டு போய் எம் டீ மஹிந்தன் என்ற அறையின் கதவைத்திறந்து உள்ளே சென்றான்.
அந்த எம்.டீரூம் பார்ப்பதற்கு மிகப் பிரம்மாண்டமாக இருந்தது, இரண்டு ஜோடி மேஜையும் இருந்தது. ஒன்றில் மஹிந்தன் எம் டி என்று போர்டும் இருந்தது ஆனால் அதன் இருக்கை காலியாக இருந்தது...
மற்றொரு இருக்கையில் உட்கார்ந்திருந்த பெண், “கவிழையா! நான் எம்.டீ மஹிந்தனின் செக்ரட்டரி உமா...” என்றுகூறி எதிரில் இருந்த இருக்கையைக் காண்பித்து அதில் கவிழையாவை உட்காரச்சொன்னாள்.
அமர்ந்தவளிடம “ஆல்திபெஸ்ட் மிஸ் கவிழையா” எனச்சொல்லி வேலையில் சேருவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பம் போடச்சொல்லி தாள்களைக் கொடுத்தாள் உமா.
அதைக் கையில் வாங்கிப் பார்த்த கவிழையா அதிர்ச்சியுடன் எழுந்து “மேடம் இது செக்ரட்டரி போஸ்ட்கான காண்ட்ராக்ட் லெட்டர். நான் ஐ.டி.ஸ்டூடன்ட் நீங்க வேறயாரோனு நெனச்சு என்கிட்ட இதில் சைன் பண்ணச்சொல்றீங்க...” என்றாள்
அதற்கு உமா “மிஸ் கவிழையா உங்களைச் செலக்ட் செய்தது இந்த வேலைக்குத் தான், நான் இன்னும் ஒருசில மாதத்தில் ப்ரமோசனில் சிங்கப்பூர் போகப்போறேன்....
இந்தச் செக்ரட்டரி போஸ்ட்டில உள்ளவங்க ஐ.டி ஸ்டூடண்டா இருந்தா பாஸ்க்கு ஹெல்ப்பா இருக்கும். அதனால உங்களை இந்தப் போஸ்ட்டுக்குச் செலக்ட் செய்திருக்கோம்....
நான் இங்க இருந்து போற்குள் உங்களுக்கு என்னென்ன வேலை... எப்படிச் செய்யனும்... எல்லாம் சொல்லித் தந்துடுவேன்...” என்றுகூறினாள்.
“மத்த ஐ.டி.ஸ்டாப்ஸ் சேலரியை விட இரண்டு மடங்கு சம்பளம் இதில் அதிகம். ஏன்னா கம்பெனி சீக்ரட்டை வெளியில் கசியவிடாம இருப்பது இந்தவேலையில ரொம்ப முக்கியம். உங்களுக்கு எதுவும் இதில் ஆட்சேபனை இருந்தால் இப்பொழுதே சொல்லிவிடுங்க மிஸ் கவிழையா...” என்று கூறினாள்,
கவிழையா குழம்பியபடியே “நான் இதில் ஜாய்ன் பண்ணுறேன்...” என்று கூறினாள்,
உடனே உமா பேச்சுக் கொடுத்துக்கொண்டே ஒப்பந்த தாள்களைக் கொடுத்தாள், அவள் காட்டிய இடங்களில் கையெழுத்துப் போட்டாள் கவி.
கவிழையாவின் இக்கையெழுத்தால் அவள் தலையெழுத்தே மாறிப்போவதை அவள் அறியவில்லை.
கவிழையா அவளின் அப்பாவுடன் வந்ததில் இருந்து, அவள் தன் அறையில் இப்பொழுது இருப்பதுவரை சிசிடி கேமராவில் பார்த்துக்கொண்டிருந்த மஹிந்தனுக்கு முகத்தில் சிரிப்புடன் கூடிய ரசனையுடன், கவிழையாவை அணுஅணுவாக ரசித்துக் கொண்டிருந்தான்.
அவளின் கண்களும் அதில் தோன்றும் பாவனைகளும் மஹிந்தனை அவள் மேல் பித்தம் கொள்ளவைத்தது “மை பேபி, இனி நீ என்னோடுதான். எங்கயும் ஓட முடியாது“ என்று கேமராவில் கவியைப் பார்த்துக்கொண்டே முனுமுனுத்தான்.
அப்பொழுது அவன் அறைக்குள் படீர் என்று கதவை திறந்துக்கொண்டு ஐஸ்வர்யா நுழைந்தாள்.
அவன் அலுவலக அறைக்குள்ளே இருந்த அந்த லக்ஷ்ஸூரியஸ் அறையில் இருந்து கொண்டு தான் சிசிடி கேமராவில் கவியைப் பார்த்துக்கொண்டு இருந்தான்...
கவிழையா கையெழுத்துப் போடும்வரை தான்தான் எம்.டீ என்று கவிக்குத் தெரியக்கூடாது என்று கவனமாக இருந்தான், அவள் கையெழுத்துப் போட்டபின்தான் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தான்...
.
இப்பொழுது ஐஸ்வர்யா வந்ததைப் பார்த்தும், அவனுக்கு வந்த நிம்மதி திரும்பவும் போய்விட்டதை உணர்ந்தவன். “இப்ப எதற்கு இங்கு வந்த...?” எனக் கோபமாகக் கேட்டான்.
ஐஸ்வர்யா அவன் கையில இருந்த ஐ போனை வெடுக்கென்று பிடுங்கினாள்,
மஹிந்த் அப்பொழுதுதான் கவிழையாவின் கண்களைத் தனது மொபைலில் ஸ்க்ரீன் பிச்சராக வைத்து முடித்திருந்தான்
அவனிடம் இருந்து பிடுங்கி அதன் மெசேஜ்களைச் செக் செய்தாள்.
அவள் தங்கள் ரெண்டுபேருக்கும் கல்யாணம் முடிவாகியதற்கு அவளின் நட்புவட்டத்தில் உள்ளவர்களுக்கு ‘காலை பத்துமணிக்கு’ இருவரும் சேர்ந்து பார்ட்டி கொடுக்க அவனை வரச்சொல்லி பதினைந்துக்கும் மேற்பட்ட மெசேஜ்களை அனுப்பி இருந்தாள்.
அவன் ரிப்ளே பண்ணாததால். நைட் வீட்டில் உள்ள லேன்ட்லைனில் மஹிந்தனிடம் பேசி “ஏன் எனது மெசேஜ்க்கு பதிலளிக்கவில்லை” எனக் கேட்டாள்.
மஹிந்தன், தான் மெசேஜ் பார்க்கவில்லை என்றும் நாளை தான் அந்தப் பார்ட்டியில் கலந்துகொள்வதாகவும் கூறியிருந்தான்.
இன்று காலை ஏழுமணியில் இருந்து பலமுறை அவனுக்கு வரும்படி மெசேஜ் அனுப்பியும் அவன் பார்ட்டிக்கு வராததால் அவளுக்குப் பெறும் அவமானமாகப் போய் விட்டது.
அதனால் கோபத்துடன் அவன் இருக்கும் இடம் வந்தாள், ஆனால் ஆபீசில் அவளை உள்ளே அனுப்ப மறுத்தனர் அதனால் அவள் கோபம்கொண்டு,
தான் மஹிந்தனின் வருங்கால மனைவி என்று கூறி பளார் என்று அவளை விட மறுத்தவனை அடித்துவிட்டு அதே கோபத்துடன் உள்ளே வந்தாள்
மஹிந்தன் அத்தனை மெசேஜையும் பார்த்தும், வராமல் இங்கு ஹாயாக உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தவள் “இதற்கு என்ன அர்த்தம்...?” என்று கேட்டாள்...
அதனால் கோபம்கொண்ட மஹிந்தன் “நீ என்கிட்ட இப்படிக் கோபம் எல்லாம் படக்கூடாது..., எனக்கு உன்கூட வெளியே எல்லாம் கைகோர்த்து வரமுடியாதுனு ஒரு தடவை உன்னைக் கூட்டிகிட்டுப் போனதில் தெரிஞ்சிருச்சு..., இதற்குமேல இங்கு இருந்து சத்தம் போட்ட இந்தக் கல்யாணமே நடக்காது... நான் நிறுத்திடுவேன்...” என்று கூறினான்....
அவன் கல்யாணம் நடக்காது என்று கூறியதும் தன்னுடைய கோபத்தை மறைத்து அவனிடம் குலைந்து பேசுவதைபோல் பாவனைச்செய்து,
“என்ன மஹிந்தன்...?! எதுக்கு இத்தனை கோபமா....ம், இதுக்குப்போய்க் கல்யாணத்தை நிறுத்தணும்னு அபசகுணமாகய் பேசணுமா...? வரமுடியாத சூழ்நிலையில நீங்கள் இருந்திருப்பீங்க....” என்றவள், “‘பை’ டே கேர்” என்று கூறி அவன் கன்னத்தில் இதழ் பதித்து வெளியேறினாள்....
அவள் வெளியே செல்லும் போது அவள் முகமும் மனமும் சீற்றத்தில் கொதித்துக்கொண்டு இருந்தது.
இக்கல்யாணம் முடியவில்லை என்றால் தன்னைத் தன் நட்பு வட்டத்தில் இப்பொழுது பொறாமையாகப் பார்க்கும் கூட்டம், தன்னைக் கேலிபார்வையாகப் பார்க்கும், அதனால் இக்கல்யாணம் மட்டும் எக்காரணத்தையும் கொண்டும் நின்று விடக்கூடாது என்றும், கல்யாணம் முடிந்துடன் இதற்கெல்லாம் சேர்த்து நன்கு மஹிந்தனைப் பழிவாங்குவேன் என்றும் நினைத்துக்கொண்டு வந்தவள்
யோசனையுடன் வந்ததால் கவனிக்காமல் எதிரில் வந்த கவிழையாவின் மேல் இடித்து விழப் போனவளை கவிழையா தாங்கிப்பிடித்தாள்...
அப்பொழுது கவிழையாவின் முகம் பார்த்தவளுக்கு அவள் கண்களைப் பார்த்தவுடன் அது மஹிந்தனின் மொபைல் ஸ்கிரீனில் பார்த்த கண்கள் என்பதனை உணர்ந்தவள், நின்றுகொண்டு அவளை உற்றுப்பார்த்தாள்,
இவள் அன்று மாலில் மஹிந்தனுடன் வாதாடிக்கொண்டிருந்தவள் தானே என்று கண்டுகொண்டாள். உடனே தன்னைச் சுதாரித்துக்கொண்டவள் இவளால் தான் மஹிந்தன் தன்னைத் தவிர்க்கிறான் போல என்று மனதினுள் நினைத்துக்கொண்டாள்
கவியைப் பார்த்து “ஸாரி.. ஸாரி.. நான் கவனிக்காம உங்கள் மேல் மோதிட்டேன்...” என்றவள், வெளியில் நட்புடன் சிரிப்பதுபோலப் பவனைச் செய்துகொண்டாள்.
கவியுடன் கைகுலுக்கத் தன் கரம் நீட்டி, “நான் மஹிந்தனின் பியான்ஷி ஐஸ்வர்யா.... நீங்கள்.... ? என்று கேட்டாள்.
கவிழையாவிற்கு அவளை எங்கோயோ பார்த்த நியாபகம் ஆனால் எங்குப் பார்த்தோம் என்பது நினைவில் கொண்டுவர இயலவில்லை.
இந்நிலையில் நட்புடன் தான் வேலையில் சேர்ந்திருக்கும் மஹிந்தன் நிறுவனத்தின் எம்.டியோட பியான்ஷி அவள் என்று தெரிந்ததும் கவிழையாவும் சிரித்துக்கொண்டே “நான் மஹிந்தன் சாரின் செக்ரட்டரி கவிழையா, இன்றுதான் வேலையில் சேர்ந்திருக்கிறேன்...” என்றாள்.
உடனே அவள் வேலையில் சேர்ந்ததுக்கு வாழ்த்துக்கூறி “பை! திரும்பவும் சந்திப்போம்....” என்று கூறிச்சென்றுவிட்டாள்.
மஹிந்தன், ஐஸ்வர்யா முத்தமிட்ட கண்ணத்தை ஒரு முகச்சுளிப்புடன் துடைத்துவிட்டு, இவளுடன் ஒரு பத்துநிமிடம் இருக்கவே என்னால் முடியலை. இந்த ஐஸ்வர்யாவை ஏன் கல்யாணம் செய்ய ஒத்துக்கொண்டோம்.... என்று நினைக்கையில் அவன் தலைவலிப்பது போல இருந்தது.
எனவே தலையை அழுத்திப் பிடித்துக்கொண்டு உட்கார்தான்
அப்பொழுது சிசிடி கேமரா மூலம் தன் அலுவலக அறையில் நடப்பதை பார்த்தான் அதில் ஐஸ்வர்யாவை தாங்கிய கவிழையாவையும் அதன் பின் நடந்த அத்தனையையும் பார்த்த மஹிந்தன், ஐஸ்வர்யாவின் பேச்சில் இருந்த போலித்தன்மையை உணர்ந்தான்.
எப்படியோ அவள் கண்டுபிடித்துவிட்டாள் எப்படி...? என்று நினைத்துக்கொண்டு தன் அருகில் இருந்த போனை பார்த்தான் அதில் மெசேஜ் வந்ததற்கு அறிகுறியாக ஒளியும் ஒலியும் வந்தது. அப்பொழுது திரையில் கவிழையாவின் கண்களைப் பார்த்ததும் இதை ஐஸ்வர்யா பார்த்தது நினைவு வந்தது.
ஐஸ்வர்யாவை, கவியிடம் நெருங்க விடக்கூடாது, என்று முடிவெடுத்தான். அவ்விசயத்தைத் தள்ளிவைத்துவிட்டு, உதட்டில் புன்னகையுடன் “இப்பொழுது உன்னிடம் கொஞ்சம் விளையாட வருகிறேன் பேபி” என்று கூறி அவ்வலுவலக அறைக்குச் சென்றான்.
மஹிந்தன் உள்ளே இருந்த அறையில் இருந்து வருவதைக்கண்ட கவிழையா, ‘இவன் எங்கே இங்கு வருகிறான்!’ என்று நினைத்துக்கொண்டு அவனை யோசனையுடன் பார்த்தாள் கவி.
அப்பொழுது எதிரில் அமர்ந்திருந்த செக்ரட்டரி எழுந்து மஹிந்தனிடம், “பாஸ் மிஸ் கவிழையாவிடம் எல்லாத்துலேயும் சைன் வாங்கிட்டேன்” என்று சொல்லியபடி மஹிந்தனிடம் கொடுத்தாள்.
அவள் பாஸ் என்றவுடன், இவனா எம்.டி. மஹிந்தன்? என்று குழம்பிப்பார்க்கும் போதே ஒப்பந்த தாள்களை வாங்கிக்கொண்டு எம் .டி மேசையில் அவன் அமர்ந்தான்.
“குட் ஜாப் உமா” என்று கூறி, “உமா நீங்கள் ராமிடம் கொடுத்த பிராஜெக்ட் எந்த அளவில் முடிந்திருக்கிறது என்று பார்த்துவிட்டு வாங்கள்...” என்றுகூறி அனுப்பிவைத்தான்.
அவள் வெளியே சென்றதும், அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்த கவிழையாவை பார்த்து, “இப்பொழுது நான் யாருனு தெரிஞ்சிக்கிட்டேள்ல?” என்று சொல்லிமுடிக்கும் முன்பே
கவிழையா “எனக்கு இங்க வேலை பார்க்க விருப்பம் இல்லை...” என்றுகூறி வெளியேற போகும்போது, ஒரு எட்டில் அவள் அருகில் வந்து கையைப் பிடித்துத் தடுத்த மஹிந்தனை பார்த்து “கையை விடுங்க இல்லன்னா உங்க மரியாதையை நீங்களே கெடுத்துக்கப் போறீங்க” என்று கூறி கண்களில் கோபத்துடன் பார்த்தாள்.
அவளின் கண்களைப் பார்த்துகொண்டே “விடமுடியாது அப்படி என்ன செய்வ...?” என்று மஹிந்தன் சொன்னவனை...
அவளின் மற்றொரு கையால் அடிப்பதற்கு ஓங்கியதும்... ஓங்கிய கையை அடிக்க விடாமல் பிடித்துக்கொண்டு கோபத்துடன். அவளின் இரு கைகளையும் அவளுக்குப் பின்னால் கொண்டுசென்று பிடித்து... தன் அருகில் அவளை இழுத்துக்கொண்டு வந்தவளின் தேகம் அவனை உரச.. தன்னை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களையும் உதடுகளையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டே “என்னைக் கோபப்படுதுவது உனக்கு நல்லதில்லை கவிழையா....?” என்று உறுமினான்.
அவன் கண்களின் கோபத்தையும், இருக்கிப் பிடித்ததினால் ஏற்பட்ட விலியினாலும் பயந்த அவளின் உடல் நடுங்க ஆரம்பித்தது.
அவள் நடுங்கவும் தன்னுடைய பிடியை தளர்த்திவிட்டு தன் மேஜையின் எதிரில் உள்ள இருக்கையைக் காண்பித்து அதில் அவளை உட்கார் என்று சொல்லி தன் இருக்கையில் அமர்ந்தான் மஹிந்தன். கவிழையாவிடம் தன் மேஜையில் வைத்திருந்த ஒப்பந்த பத்திரத்தை தூக்கிக்காண்பித்து அதில் உள்ளதை கூறினான்,
“இந்த ஓப்பந்தப்படி நீ, என்கிட்ட மூணு வருடம் வேலை செய்ய ஒத்துக்கிட்டு கையெழுத்துப் போட்டிருக்க..., நீயாவே வேலைசெய்யாம வெளியேறிப் போகணும்னு நினைத்தால் ‘ஐம்பது இலட்சம் ரூபாய்’ எனக்குத் தருவதாக ஒத்துக்க்கிட்டு கையெழுத்து போட்டிருக்க....” என்று கூறினான்.
அதைக் கேட்ட கவிழையாவிற்கு ஒரு நிமிடம் அதிர்ச்சியில் பேச்சுவர மறுத்தது “இது அநியாயம்... இப்படி நடந்துக்க உங்களுக்குக் கொஞ்சம்கூட மனச்சாட்சியில்லையா....?” என்று கேட்டாள்.
அதற்கு மஹிந்தன், “என் மனம் சொல்றதைத்தான் நான் செய்றேன், நீ சொல்வதுபோல யோசித்தால் நான் இவ்வளவு சக்சஸ்புல் பெர்சனாய் வந்திருக்க முடியாது....” என்றவன்.
“எனக்கு நான் நினைப்பது நடக்கணும்.... அப்படி நடக்க என்ன செய்யணும் என்பதைமட்டுமே நான் யோசிப்பேன்...” என்றான்.
அவன் பேசுவதக்கேட்ட கவிழையா, “நான் மாலில அன்னைக்கு உங்களைத் திட்டியதுக்காக இப்படியா நடந்துக்கிறீங்க....?" என்றவள் தன்னை நிதானப்படுத்திகொண்டு...
“நான் அதுக்கு உங்களிடம் அதற்கு மன்னிப்புக் கேட்கிறேன், தயவுசெய்து என்னை மன்னிச்சு விட்டுடுங்க. எனக்கு உங்ககிட்ட வேலை பார்க்க விருய்ப்பம் இல்ல...” என்றாள்.
அதனைகேட்ட மஹிந்தன் மனதுக்குள், ‘உன்னை என்னிடம் வரவைப்பதற்கு இதைத்தவிர வேறு வழியில்லை பேபி..” என்று நினைத்துக்கொண்டு, வெளியில் “உன்னுடைய மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது” என்று கூறினான்.
அதைக்கேட்ட கவிழையா மனம் சிறிது அமைதியடைவதற்குள் மஹிந்தன் கூறினான் “ஆனால் அதற்கு நீ நான் விரும்பும்படி நடந்துக்கிட்டா.... இந்த வேலையைவிட்டு இப்பவே போயிடலாம்” என்று கூறினான்.
அவன் எதுவோ விபரீதமாகச் சொல்லப்போகிறான் என்று அவள் மனம் எச்சரிக்கை மணி அடித்தது.
மஹிந்தனோ அவளை அழுத்தமாகப் பார்த்துக்கொண்டே... “என்ன விருப்பம்னு கேட்கமாட்டயா பேபி...?” என்றவன் அவளது பதிலை எதிர்பார்க்காமல் “நீ கேட்கலை என்றாலும் நான் சொல்லிடுகிறேன்....” என்றவன்
தனது தொண்டையைச் செருமிக்கொண்டு “உனக்கு எல்லாம் நான் கொடுக்கிறேன் வீடு, கார், பணம், நகைன்னு நீ எது கேட்டாலும் தருறேன்... அதை வாங்கிகிட்டு நீ எனக்காக.... நான் வாங்கிகொடுக்குற வீட்டில.....” என்று மேலே பேசமுற்பட்டவனின் பேச்சை கேட்க இஷ்டப்படாமல்...
அவள் தன் காதுகள் இரண்டையும் கைகளால் மூடிக்கொண்டு “நிப்பாட்டு உன் உளறலை” என்று கத்தினாள்.
“நீ நினைக்கிறது உன் கனவிலும் நடக்காது..... உன்னுடைய கீழ்த்தரமான விருப்பத்திற்கு இணங்கும் சாக்கடை நானு இல்லை....” என்று கூறிவிட்டுக் கண்களில் கண்ணீர் வழிவதை தன் புறங்கையால் துடைத்துக்கொண்டாள்....
“இந்த ஆபீசில் வேலை செய்றேன் எனக்கு ஐம்பது இலட்சம் பணம்ன்றது ஈசியான விஷயம் கிடையாது.... ஆனால் அத்துமீறி எதுவும் நீ என்கிட்ட நடந்துக்க நினைச்ச...., ஒன்று உன் உயிர் போகும் அல்லது எனதுயிர் போகும்....”, என்று உதடு உடல் எல்லாம் நடுங்க கூறியவள்,
“நான் நாளையில் இருந்து என் வேலையில் ஜாய்ன் பண்ணிக்கிறேன்....” என்று கூறி தன் கைப்பையை எடுத்துக்கொண்டு விறுவிறு என்று வெளியேறினாள்.
----தொடரும்---
No comments:
Post a Comment