உதிர்ந்தும் துளிர்த்தேன் உன்னால் (தீபாஸ்)
அத்தியாயம் 07
துர்க்கா மொபைலை அடிக்கடி எடுத்துப் பார்த்துக் கொண்டே இருந்தாள். ஒவ்வொருமுறை அழைப்பு வரும்போது எல்லாம் பாய்ந்து சென்று எடுத்தாள். ஆனால் அவள் எதிர்பார்த்த சாந்தி அக்காவின் அழைப்பு மட்டும் வரவே இல்லை.
ஆபீசில் இருக்கும் போது எப்பொழுதும் அவளின் மீது ஒற்றைப் பார்வையை வைத்திருக்கும் விக்னேஷ்க்கு அவளின் செயல் எரிச்சலை கொடுத்தது.
‘நான் இங்க இருக்கும் போது இவள் யாரோட போன் காலுக்காக இப்படி தவிச்சிக்கிட்டு இருக்காள்...?’ என்ற கேள்வியுடன் அருகில் வந்தவன்.
“இப்போ என்ன ஆச்சு துர்க்கா...? எதுக்கு இத்தனை டென்ஷனா இருக்க..?” என்றான்.
“ரெண்டுநாளா அக்காவுக்கு போன் பண்ணிட்டே இருக்கேன் அவள் எடுக்கவே இல்ல... அதுதான் கால் வரும் போது எல்லாம், அவள்தான் போன் பண்றாளோனு பார்க்கிறேன்...” என்றாள்.
“அதுக்காகவா இத்தனை டென்ஷன்..?”
“ரெண்டுநாளைக்கு முன்னாடி லாஸ்ட்டா அவள்ட்ட பேசுறப்போ என்ன சொன்னா தெரியுமா..?”
“என்ன சொன்னாங்க...?”
“அக்காக்கு நான் போன் பண்ணினேனா..., என் போனை அட்டன் பண்ணியவ... ‘ஊருக்கு கிளம்பிட்டு இருக்கேன் துர்க்கா, அவரு என்கிட்ட உடனே ஊருக்கு கிளம்பு, உங்க அம்மா வரச்சொன்னாங்கனு வந்து நிக்கிறார்.
எதுக்கு அவசரமா வரச் சொன்னாங்க’னு அம்மாட்ட கேட்டீங்களானதுக்கு... அதெல்லாம் உங்கம்மா சொல்லலை எதுக்குன்னு தெரியாதுனு சொல்லிட்டார்.
அதனால நான் வீட்டுக்குப் போயி பார்த்துட்டு, எதுக்கு வரச் சொன்னாங்க... என்ன ஏதுன்னு உ னக்கு சொல்றே’னு சொன்னா. ஆனா இதுவரை போனும் பண்ணலை நான் போன் பண்ணினாலும் எடுக்கல...
எனக்கு பயமா இருக்கு விக்கி, வீட்டில யாருக்கும் என்னமோ எதோனு ஒரே பதட்டமா இருக்கு” என்றாள்.
“அப்படியெல்லாம் எதுவும் இருக்காது. ஒரு வேளை போன் டவர் எடுக்காத ஏதாவது ஹில்ஸ் ஸ்டேசனுக்கு போயிருக்கலாம்”
“இல்ல விக்கி... மாமா எங்க வீட்டுக்கு போகணும்னு சொல்லித்தான் அக்காவை கூட்டிட்டுப் போனார்..” என்றாள்.
“உன்னைய தனியா விட்டா இப்படி உங்க வீட்டையே நினைச்சுக்கிட்டு ஏதாவது கற்பனை பண்ணி அழுதுட்டு இருப்ப. ஆபீஸ் முடிஞ்சதுல்ல, என்கூட வா... வெளில போலாம்” என்றான்.
“வெளிலயா எங்க போறோம்..?”
“எங்கனு சொன்னால்தான் கூட வருவியா...?”
“அப்படி சொன்னேனா...? சிஸ்டத்தை சட்டவுன் பண்ணிட்டு வாரேன்” என்றவள் அவளும் அவனுடன் வெளியில் கிளம்பினாள்.
விக்னேஷ்காக பெற்றவர்களை விட்டு வந்தவள். இனி அவனோடு தான் வாழ்க்கை என்று உறுதியாக இருந்தாள்.
அவனோடு சந்தோசமாக காதல் வாழ்கையை அனுபவிக்க விடாமல் பெற்றோரை எதிர்த்து வெளியில் வந்ததால் குற்றவுணர்வு அவளை கொன்றுத்தின்றது.
அந்த துக்கத்தில் இருந்து தப்பிக்க, அவன் அருகில் இருக்கும் போது பெற்றோரின் நினைவை மறந்து காதலில் லயித்துப் போக ஆரம்பித்து இருந்தாள்.
ஆனால் தனிமையில் இருக்கும் போது அவனின் நினைவை விட வீட்டு நினைவே அவளை ஆக்கிரமித்து கண்ணீரை வரவழைத்தது. மனதை திசைத் திருப்ப அவளும் மனம் உவந்தே விக்னேஷூடன் கிளம்பிவிட்டாள்.
இன்று விக்னேஷ் அவளை வெளியில் கூட்டிச்செல்ல வேண்டும் என்று முன்னமே முடிவெடுத்து விட்டான்.
அவளிடம் தங்கள் காதல் கை கூடியதற்கு நண்பர்களுக்கு ‘ஹார்ட் ராக் கஃபே’யில் பார்ட்டி கேட்கிறார்கள் போவோமா..? என்று கேட்டால் முடியாது என்றே சொல்வாள் என்ற புரிதல் இருந்தது.
எனவே அங்கு ஏற்பாடு எல்லாம் செய்துவிட்டு, ‘அவளிடம் சொல்லாமல் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டால்... இன்வைட் பண்ணிய நண்பர்களும் வந்துவிட்டால்... தவிர்க்க முடியாமல் பார்ட்டியில் ஜாயின் பண்ணிடுவாள்’ என்றே திட்டமிட்டு உடன் அழைத்துச் சென்றான்.
நாகரீகமான உடை, தோற்றம், ஆண்களுடன் சகஜமாக பேசும் தன்மை துர்க்காவிடம் இருந்தாலும். அவள் சில விசயங்களில் வரைமுறைகளுக்கு உட்பட்டே நடந்துகொள்வாள். அவள் தவிர்க்கும் விஷயங்களில் பப் கல்சரும் ஒன்று.
விக்னேஷ் “ஹார்ட் ராக் கஃபே” க்கு முன் பைக்கை நிறுத்தியதும் இறங்கியவள் இங்கு எதுக்கு கூட்டிட்டு வந்திருக்கான்..? என்ற யோசனையுடன் அவனைப் பார்த்ததும்.
“நம்ம லவ் சக்சஸ் ஆனதுக்கு ஃப்ரெண்ட்ஸ் பார்ட்டி கேட்டாங்க. அதுக்குத் தான் வந்துருக்கோம்.
கொலீக்ஸ்ல நம்ம குளோஸ் சர்க்கிளில் இருக்கிறவங்களும், என்னோட ஃப்ரெண்ஹூம் முன்னாடியே வந்துட்டாங்க...” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே. ரியா அவளை நோக்கி வந்தவள்.
“வந்தாச்சா... பார்ட்டி கொடுக்க வேண்டிய ஆட்களே லேட்டா வந்தா என்ன அர்த்தம்...? மத்த எல்லாருமே வந்தாச்சு. உள்ள உங்களுக்காகத்தான் வெயிட்டிங்... நாங்க உட்கார்ந்திருக்க டேபிளுக்கு உங்களை கூட்டிட்டு வரச்சொல்லி ஹர்சன் என்னைய அனுப்பிவிட்டான்” எனச்சொல்லி முன்னால் நடந்தாள்.
துர்க்காவுக்கு விக்னேஷ் நினைத்தது போலவே மறுக்க முடியாதநிலை. ஆனாலும் அவனுடன் நடந்துக்கொண்டே
“விக்கி... எனக்கு இதுபோல இடம், ஹாட்டிரிங்க்ஸ் எல்லாம் அலர்ஜி... ஒரு வார்த்தை கூட என்கிட்ட கேக்காம ஏற்பாடு பண்ணிட்டீங்கள்ல.
ஆனா ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் வந்துட்டாங்க... இனி நான் பிரச்சனை பண்ணினா நல்லா இருக்காது. இந்த ஒரு தடவை மட்டும் தான் இங்க வருவேன் ஓகே வா...” என்றாள்.
‘ஹப்பாடா... நல்லவேளை நம்ம பிளான் வொர்க் ஒவுட் ஆகிருச்சு. என்று ஆசுவாசபட்டுக்கொண்டவன்.
“சரி.. சரி... உள்ள வந்து இதுபோல கோபமா முகத்தை வச்சுக்காத சிரிச்சபடி இருக்கணும் ரைட்டா...” அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே உரசி ஒட்டி நடந்தபடி நண்பர்களிடம் வந்தான்.
அவர்கள் பார்வைக்கு இருவரும் நெருக்கமாக பேசியபடி வந்தது ரொமாண்டிக்கான லவ்வர் போன்ற தோற்றத்தை கொடுத்ததால்.
அவர்களை பார்த்து “ஹாய்...” என்று ஆரவாரக் கூச்சல் இட்டனர். எனவே இருவரும் அசடு வழிந்தனர்.
துர்க்காவோ அவனை விட்டு சட்டென விலகி நின்றவள். அதெல்லாம் இல்ல... சும்மாதான் பேசிட்டு வந்தோம்..” என்று சங்கடத்துடன் சொல்லி முடித்ததும் விக்னேஷ், மறுபடியும் அவளின் கைப்பிடித்து இழுத்து நெருங்கி நின்றபடி
“ஹேய் கைய்ஸ், சும்மா இருங்க. நீங்க கிண்டல் பண்றதால என் டார்லிங் தள்ளிப் போறா...” என்றபடி தனக்கு அருகில் அவளை அமர்த்திக்கொண்டான்.
நெளிந்துகொண்டே அவனின் அருகில் அமர்ந்தாலும் அவள் வீட்டாரின் புறக்கனிப்பால் உண்டாகியிருந்த அநாதரவான நிலைக்கு அவனின் நெருக்கம் ஆறுதலை வழங்கியது.
அவளுடன் வேலை செய்யும் இருபாலரும் பார்ட்டியில் இருந்தபடியால் கலகலத்துப் பேசி கூட்டதுடன் ஒன்றிப் போக துர்க்காவால் முடிந்தது.
அனைவரும் அவர்களுக்கு விருப்பமான தந்தூரி, கிரில்டு, வகை அசைவ உணவுகள் பர்க்கர், பீசா போன்ற வெஸ்டன் ஃபூட்ஸ் எடுத்துக்கொள்ள துர்க்காவுக்கும் அவளுக்கு பிடித்த உணவை கேட்டு வரவழைத்துக் கொடுத்தான் விக்னேஷ்.
மேலும் வந்தவர்கள் ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் உணவுடன் பீரையும் வரவழைத்து எடுத்துக்கொள்ள துர்க்காவுக்கு சங்கடமாய் ஆனது.
விக்கியிடம் தனித்த குரலில் “விக்கி லைட்டா எடுத்துக்கோ... கொஞ்சம் கொஞ்சமாய் இந்த பழக்கத்தை மட்டும் விட்டுடனும் சரியா..? எனக்கு ஆரஞ் ஜூஸ் சொல்லு...” என்றாள்.
அவனும் அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் இன்னும் நெருக்கமாய் அமர்ந்து அவளின் காது மடலில் தனது மூச்சுக் காற்று படும் தொலைவில் நெருங்கி
“உனக்கு பிடிக்காட்டி இதெல்லாம் விட்டுடுறேன். அதுக்காக இன்னைக்கு மட்டும் எனக்கு கம்பெனி குடு. உனக்கு ரெட் வொயின் ஆர்டர் பண்றேன். அது போதை இருக்காது” என்றான்.
காதலனின் நெருக்கமும் அவளின் மூச்சுக் காற்றும் துர்க்காவை படபடப்பாக்கியது. அந்நிலையில் இயல்பாய் பேச முடியாமல் வார்த்தைகள் தடுமாறியது. இருந்தாலும்.
“ஹேய்... என்ன விளையாடுறீங்களா..? மத்தவங்க குடிச்சாலே எனக்குப் பிடிக்காது... என்னைப் போய் பீர் எடுத்துக்க சொல்ற...?” என்று படபடப்புடனும் இமைகள் பட் பட்டென அடிக்க பேசியவளின் முக பாவம், அவளின் அழகையும், பெண்மையின் வசீகரத்தையும் கடை பரப்பியது...
அதில் சொக்கிப் போனவன் மனதினுள் சிரித்தபடி “பிளீஸ் பேபி... ஒரு கர்டசிக்காக எடுத்துக்கோ... மாட்டேன்னு நீ மட்டும் ஆரஞ் ஜூஸ் குடிச்சா ஒருமாதிரி நம்மகூட வந்துருக்க மத்த கேர்லஸ்க்கு ஃபீல் ஆகும்” என்றான்.
***
துர்க்காவின் அறையில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். தனது கட்டிலில் அமர்ந்திருந்தவள் மனதினுள் ‘நல்லவேளை படத்துல காட்டுறது போல கட்டில சுற்றி பூவெல்லாம் தொங்க விடல...!’ என்ற ஆசுவாசப் பட்டுக் கொண்டாள்.
கட்டிலுக்கு அருகில் இருந்த டீபாயின் மேல் வெள்ளித் தட்டில் பழங்களும் செம்பில் பாலும் இருந்தது. கல்யாண சமுக்காளம் மெத்தை விரிப்பின் மீது மடித்து வைக்கப்பட்டிருந்தது.
ருக்குவும், மகாவும் அவளை கேலி செய்வதுபோல புத்திமதிகளைச் சொல்லி தலை நிறைய தொடுத்த மல்லிகை மலர்களை வைத்துவிட்டு லேசான ஒப்பனை செய்து மெத்தை விரிப்பின் மேல் கல்யாண சமுக்காளத்தை விரித்துவைத்துவர்கள், “நாங்க கிளம்புறோம், கொஞ்ச நேரத்தில் உன் மாப்பிள்ளையை அனுப்பி விடுறோம்” நன்று நமுட்டுச் சிரிப்புடன் சொல்லி சென்று விட்டார்கள்.
அவர்கள் சென்றதும் முதல் வேலையாக அந்த சமுக்காளத்தை எடுத்து மடித்து வைத்தாள். அதிக்கப்படியாக தலையில் சூடிவிட்ட பூவை எடுத்துவிட்டு அளவான பூவை மட்டும் தலையில் வைத்துக்கொண்டாள் ஏனோ முதலிரவு ஏற்பாடுகளை உள்ளம் சிறிதும் ஏற்றுக்கொள்ளவில்லை.
தன்னுடைய விருப்பமின்மையை சொன்னால் எப்படி எடுத்துக்கொள்வானோ..? ஒருவேளை எனக்கு இப்போதைக்கு வேணாம்னு சொல்றதை தப்பா புரிஞ்சு வீட்டில பெரியவங்ககிட்ட சொல்லி பிரச்சனை பண்ணினா...? என்ற எண்ணமே மனம் முழுக்க ஒருவித படபடப்பை உண்டுபண்ணியது.
ஆனா அவருமே என்மேல ஆசைப்பட்டு தாலியை கட்டி பொண்டாட்டியா ஆக்குனதுபோல தெரியலையே.... ஒருவேளை அவருக்கும் என்கூட நெருக்கமா பழக கொள்ள நேரம் தேவைப்படுதோ...?
எதுக்கு, இதுவா அதுவான்னு யோசிச்சு மூளையை கசக்கணும்...? வந்ததுமே பட்டுன்னு ‘கொஞ்ச நாள் friends ஆக இருந்து நமக்குள்ள புரிதல் வந்ததும் மத்ததெல்லாம் வச்சுக்குவோமா..?’ அப்படின்னு கேட்டுடுவோம்.
அதுக்கு அவர் சொல்ற பதிலை வச்சே அவர் என்ன ஐடியால இருக்காருன்னு தெரிஞ்சுக்கிடலாம். கழுத்துல தாலியை கட்டிட்டார் இனி அவர்கூடத்தான் என் வாழ்க்கை... முடிஞ்ச அளவு ஸ்மூத்தா லைபை எடுத்துட்டுப் போகப் பாப்போம். என்று தனக்குள் முடிவெடுத்து கணவனுக்காக காத்திருந்தாள்.
விக்னேஷ் கையில், அழகுமலரின் பேரில் பத்திரமாகி இருந்த சொத்தை தனது பேருக்கு மாத்த டாக்குமென்ட் ரெடிபண்ணியதை வைத்திருந்தான்.
ராதாவோ மகனிடம், “டேய் கண்ணா... இன்னைக்கேவா அவளை இதில் சைன் பண்ணச்சொல்லி பேசப் போற...? அவசரப் படுறயோனு தோணுது. கொஞ்சம் பொறுத்திருந்து பேசலாம்” என்றாள்.
“அம்மா... அவக்கூட குளோசா இருந்துட்டா பிறகு என்னைய விட்டு போகாம அட்டையா ஒட்டிக்கிடுவா... அவக்கூட நல்லவிதமா பேசிப்பழகி அப்படி ஒரு சிக்கலில் மாட்ட நான் ரெடியா இல்ல, இந்த கல்யாணத்துக்கு காரணமான அந்த நிலத்தை என் பேருக்கு மாத்தி உங்க கிட்ட கொடுத்துட்டு நான் பெங்களூருக்கு கிளம்பிப் போயிட்டே இருக்கணும்.
அப்பா கடனை அதை வச்சி நீங்க சரி பண்ணிக்கோங்க. அந்த நிலத்தை வாங்க பார்ட்டி ரெடியா இருக்குதுன்னு சொன்னீங்க தானே...?
அவளும் படிப்பு முடியிறவரை இங்க இருந்து நம்ம வீட்டுக்கு வர போறது இல்ல, நானும் அவளைப் பார்க்க இங்க வரபோறது இல்ல. நான் அவக்கூட பேசப் பழக ஆர்வம் இல்லாம இருக்கிறதுலேயே புரிஞ்சு அவளே என்கிட்ட இருந்து விலகிட்டா நல்லது’” என்றான்.
டேய் கண்ணா... என்னடா இப்படிப் பேசுற...? சீதனமா கொடுத்த அந்த ஒரு நிலம் மட்டும் போதுமா..? கோடிக்கணக்கான சொத்துடா... அம்புட்டுக்கு உன் பொண்டாட்டிதான் வாரிசு...’
அம்மா... அப்பா, கடனை அடைக்கணும்னு என்கிட்ட வந்து கேட்டீங்க. அதுக்காக மட்டும் தான் அவள் கழுத்துல தாலியை கட்டினேன். அதுக்கான ஷோர்சை உங்களுக்கு வாங்கிக் கொடுத்துட்டா அதுக்கு பிறகு இந்த பட்டிக்காடு கூட எந்த கமிட்மென்டும் நான் வச்சுக்கிடப் போறது இல்ல...
என் வொய்ப் இப்படித்தான் இருக்கணும்னு எனக்கு கனவு இருக்கு அதுக்கு இவள் சுத்தமா செட் ஆக மாட்டாள்.
இந்த கல்யாணத்தில் இருந்து நான் சேஃபா வெளிய வருறதுக்கு ஒரே வழி அவக்கூட டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்றது தான்”
என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போது அந்த அறையின் கதவு தட்டப்படும் ஓசையில் அவர்களின் பேச்சு நின்றது.
ராதா வேகமாகச் சென்று கதவை திறந்ததும் வெளியில் இருந்த ராதாவின் சொந்த அண்ணன் கண்ணன் “நேரம் ஆகிருச்சு, என்று சொன்னவர் ரூமிற்குள் எட்டிப் பார்த்து
“மாப்ள வா... உனக்கு அழகி ரூம் தெரியும்ல, கிளம்பு...” என்றார்.
ராதா கதவை திறக்கச் சென்றதுமே கதவுக்கு முதுகை காட்டி திருப்பி நின்றபடி பத்திரத்தை போட்டிருந்த பனியனுக்குள் இட்டு மறைத்து வைத்தவன் அவர் அழைத்ததால் திரும்பிப் பார்த்து...
“ம்...” என்று ஒற்றை வார்த்தை உதிர்த்துவிட்டு அறையை விட்டு வெளியில் வந்தான். மனதிற்குள் அவளிடம் எவ்வாறு பேசி கையெழுத்து வாங்க வேண்டும் என்பதற்கான வார்த்தைகளை திரட்டி சொல்லிப் பார்த்துக்கொண்டே சென்று அழகியின் அறைக்கதவை தள்ளித் திறந்து உள்ளே நுழைந்தான்.
---தொடரும்---

No comments:
Post a Comment