anti - piracy

Post Page Advertisement [Top]

 உதிர்ந்தும் துளிர்த்தேன் உன்னால்                                                                         (தீபாஸ்)



அத்தியாயம் 06

அழகியின் அப்பா கதிரேசன் எளிமை விரும்பி. தமிழர் மரபின் மீது பற்றுக் கொண்டவர். அந்த காலத்தில் அவரின் திருமணமும் தமிழ்த் திருமணப்படி தான் நிகழ்ந்தது. மகளின் திருமணத்தையும் அவ்வாறே நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் ஊரில் மூத்தவரான கண்ணப்பன் அறிவுறுத்தலின் படி ஏற்பாடு செய்திருந்தார்.

மணப்பந்தலை மலர் மாலைகளாலும் விளக்குகளாலும் அழகுபடுத்தி இருந்தார்.

குத்துவிளக்கு, குட விளக்கு, கிளை விளக்கு, கைவிளக்கு முதலியவற்றை ஏற்றி மணமேடையை  அலங்கரித்திருந்தார்.

பெருவிவசாயியான கதிரேசன், வண்ணம் தீட்டிய மண்பானை மற்றும் மர உரல்களை ஆங்கங்கே வைத்து மணமேடையை தமிழ் முறைப்படி அலங்கரித்து இருந்தார்.

மணவறையில் மணமக்களுக்கு உட்கார போடப்பட்டிருந்த பலகையின் முன் இரண்டு முக்காளிகளை வைத்து மாப்பிள்ளை பெண்ணுக்கான திருமண உடைகளை அதாவது,   பெண்ணுக்கான முகூர்த்தப் புடவையும் மாப்பிள்ளைகான முகூர்த்த வேஷ்டியும் தனித்தனி  தாம்பாலத்தில் வைக்கப் பட்டிருந்தது.   

அதற்கு முன்பு தலைவாழை இலை கிழக்குத்திசையில் போடப்பட்டு அதில்  மூன்று பிடி பச்சரிசியைப் பரப்பி வைத்தும்... அதன் மீது வாழைப்பூ வடிவ பித்தளை செம்பினை மஞ்சள் குங்குமத்தால் அலங்கரித்தும் வைத்திருந்தார்.

அச் செம்பில் தூய நீர் நிரப்பி, மாவிலை கொத்தை அதனில் பரப்பி அதற்கு மேல் மஞ்சள் தடவி குங்குமப் பொட்டு வைத்து அலங்கரித்த தேங்காய் ஒன்றை வைத்திருந்தார்.

செம்பின் அருகில் அரைத்த மஞ்சளை பிடித்து வைத்து குங்குமப் பொட்டு வைத்து அலங்கரிக்கப்பட்டு இருந்தது..

செம்புக்கு மற்றொரு பக்கத்தில் ஒரு தட்டில் மஞ்சள் கலந்த பச்சரிசி பரப்பி அதில் மஞ்சள் பூசி குங்குமப் பொட்டு வைத்த தேங்காயில் பொன் தாலி கோர்த்திருத்த  மஞ்சள் கயிற்றை சுற்றி வைத்திருந்தார்.

திருமணத்தை  ஆசானாக மணமுடித்து வைக்க முன்னால் அமர்ந்திருந்த கண்ணப்பன் ஏற்பாட்டை சரிபார்த்தார். தான் சொன்னது போல ஏற்பாடுகளை செய்ததில் திருப்தி அடைந்தார்.

“முகூர்த்தம் நெருங்கப் போகுது மாப்ளைய வரச் சொல்லுங்கய்யா, ஆசீர்வாதம் வாங்கி மனையில இருக்கிற வேஷ்டி சட்டைய வாங்கிட்டுப் போய் உடுத்தி வரச்சொல்லணும்.

அம்மா நாச்சி, பொண்ணையும் அழைச்சிட்டு வரச் சொல்லு முகூர்த்தப் புடவை வாங்கிட்டுப் போய் மாத்திட்டு வந்து மனையில உட்கார வைக்கணும்ல  முகூர்த்த நேரம் நெருங்குது...” துரிதப்படுத்தினார்.

தனது அறையில் மஞ்சள் தேய்த்து குளித்து, தலைமுழுகி சாம்பிராணி அகில் புகை இட்டு, உலர்த்திய நீண்ட கூந்தலை பின்னி தாழம்பூ மல்லி கொண்டு சடையாரம் சூட்டி கண்ணுக்கு மையிட்டு தோழி கட்டாயப்படுத்தி உதட்டுக்கு பட்டும் படாமலும் லிப்டிக்ஸ் போட்டுவிட்டதால் சிவந்திருந்த உதடுகளுடன் நெற்றியில் வட்ட பொட்டு வைத்து நெற்றிச் சூடி முதல்கொண்டு ஒட்டியாணம் வரை பரம்பரை பரம்பரையாக வந்த பழைமை மாறாத தங்க ஆபரங்களைச் சூடி, பச்சைநிற பட்டுடுத்தி அம்மன் சிலை வடிவில் ஓவியமாய் வரையும் அழகு முகத்துடன் அமர்ந்திருந்தாள் அழகு மலர்.

அவளின் அறைக்குள் நுழைந்த அவளுடன் படிக்கும் தேன் மொழி, கவிதா, ஆயிஷா, நதியோ ஆகியோர் இளமைக்கே உரிய துருதுருப்புடன் கலகலத்து போசிக்கொண்டே அவளின் அறைக்குள் வந்தார்கள். வந்தவர்களில் தேன்மொழி

“அழகி, மாப்பிள்ளையைப் பார்த்தோம், செம ஹேன்சம்மா இருக்கார், இவரை கல்யாணம் பண்றதுக்கா மூஞ்சை தூக்கி வச்சுகிட்டு உட்கார்ந்திருக்க...?” என்று சொல்லியதும்

“ஆமா.. ஆமா விட்டா உனக்கு பதில் இவள் மணையில உட்கார்ந்துருவா போல... அப்படி ஜொல் ஊத்தினா உன் ஆளப் பார்த்து” என்று கவிதா சொன்னதும்.

“சி... சீ... என்ன பேச்சுப் பேசுற...? நீயும்தான் உன் முண்டக்கண்ணை விரிச்சு ஆ...னு மாபிள்ளையப்  பார்த்த...” என்றாள்.

“ஏய்... ரெண்டுபேரும் உங்க சண்டையை இங்கயும் ஆரம்பிக்காதீங்க, நாம அழகி கல்யாணத்துல கலந்துகிட்டு அவளை சந்தோசப்படுத்த வந்துருகோம்... தேவையில்லாம பேசி அவளை இன்னும் அப்செட் பண்ணாதீங்க” என்றாள் ஆயிஷா.

அப்பொழுது அங்கே “முகூர்த்தப் புடவை கொடுக்க பொண்ணை கூப்பிடுறாங்க ரெடியா...?” என்றபடி நாச்சியாரும் அவருடன் இன்னும் இரு பெண்களும் வந்து சேர்ந்தனர்.

“அழகி, அம்மாக்கூட வந்திருக்க ரெண்டுபேரில் யாருடி உன் நாத்தனார்...?”

“பச், அவள் வரலை. லண்டன்ல இருந்து வர லீவ் கிடைகலையாம்”

எனச் சொன்னபடி எழுந்தவளை வந்திருந்த பெண்கள் கைபற்றி அழைத்துப் போக தோழிகள் உடன் வர சபைக்கு வந்தாள்.  அங்கு ஏற்கனவே விக்னேஷூம் வந்திருந்தான்

மணமக்களை கிழக்கு நோக்கி அமர வைத்து மஞ்சள் பிள்ளையார் முன்பு வைத்திருந்த விளக்கை ஏற்றி

பிடியதன் உருவுமை கெளமிகு கரியது

வடிகொடி தனதடி வழிபடு மவரிடம்

கடிகண பதிவர அருளினன் மிகுகொடை

வடிவினர் பயில்வலி வலமுறை இறையே

இறைவழிபாடு பாடிய படி கண்ணப்பர் மஞ்சள் கலந்த அரிசி, உதிரி மலர் ஆகியவற்றை மணமகன் கையில் கொடுத்து பிள்ளையாரை வழிபாடு செய்தார்கள்.

மேலும் அவர் அரசங்கிளை ஒன்றை, அங்கிருந்த சுமங்கலி பெண்கள் மூவருடன் மணமக்களையும் எழுந்து போய் பந்தலின் ஓரத்தில் நாட்டு வைக்க சொன்னார்.

மாவேலை ஆலமதை அடக்கித் தன்னுள்

மண்ணுலகம் அண்டமெலாம் வளர்ந்துதானேர்

காவேயின் முன்னுகித்த அரசிற் றேன்றிக்

கடம்புபுனை குருந்தினுக்குத் துணைய தாகித்

தூவேதத் தலைகாண்டற்கு அரிய தாகித்

துன்பமுறு பிறவியெனுந் துகள்சேர் வெய்யில்

ஆவேனைத் தன்னடியாம் நிழலிற் சேர்த்த

அத்திதனைப் பத்தி செய்து முத்தி சேர்வோம்

என்று மந்திரம் ஓதியவர் கால்களுக்கு மஞ்சள், குங்குமம் இட்டுத் துணியைக் கொண்டு கால் கட்டு  போட்டு விடச் செய்த்தார்.

வாழையிலை மீதிருந்த இரண்டு கும்பங்கைளை இறைவன் இறைவியாக தூப தீபங்களை காட்டி பாடல்களை ஓதி மணமக்களை வழிபாடு செய்ய வைத்தார்

மணமகனுக்கு முக்காலியின் மீதிருந்த தாம்பாளத்ததில் இருந்த புதுத் துணி மீது பூ, வெற்றிலை, பாக்கு வைத்து திருப்பாடலை ஓதி கொடுத்தார்.

அதே போல மணமகளுக்கும் ஆடை கொடுத்தார

கண்ணப்பன் ஆசீர்வதித்து எடுத்துக்கொடுத்த புடவை இருக்கும் தாம்பாளத்தை அவள் வாங்கிக்கொண்டு உடுத்திக்கொள்ள மணமகள் அறைக்கு அழைத்துச் செல்லப் பட்டாள்.

அதேட்போல விக்னேஷூம் அவனுக்கான உடையிருந்த தாம்பாளத்தை  வணங்கி வாங்கிச்சென்றான்.

செல்லும் வழியில் விக்னேஷ் தனக்கு அருகில் இருந்த அம்மா ராதாவின் காதில்

 “என்னம்மா, புரோகிதர் கூட வைக்கலை உங்க அண்ணன்..?  நீ என்னமோ கல்யாணத்தை கல்யாணமா  பார்க்கணும்னு சொல்ற...?  அம்புட்டு சொத்து வச்சுருக்க உன் அண்ணன் ஒத்த மகளுக்கு இம்புட்டு கஞ்சத்தனமா கல்யாணம் பண்றார்....! உண்மையாவே சொத்து பத்து இருக்கா..?  நமக்கு காசு தேறுமா..?” என்றான்.

“டேய்.. கொஞ்சம் அடக்கி வாசிடா... யார் காதுலயாவது விழுந்துடப் போகுது...

எங்க அண்ணன் தமிழ் முறைபடி தான் கல்யாணம் பண்ணினான் அதே போல மகளுக்கும் பண்றாராம். அவங்க எல்லாம் இப்படித்தான்.  உனக்கு கிராண்டா கல்யாணம் பண்ணலைன்னு வருத்தமா..?” என்றாள்.

“எனகென்ன வருத்தம். நானே இந்த கல்யாணம் எந்த அளவு கமுக்கமா பண்ண முடியுமோ அப்படி நடக்கணும்னு ஆசைப்படுறேன். 

நம்ம ஊருல ஜே.. ஜே.. னு வச்சா அத்தனை பேருக்கும்  என் கல்யாணம் தெரிஞ்சிரும். இந்தப் பட்டிக்காட்டில் சிம்பிலா இப்படி நடந்தாத்தான்  நல்லது. அப்போதான்  என்னோட ஃப்ரெண்ட்ஸ், கொலீக்ஸ் யாருக்கும் இப்படி ஒருத்திக்கூட எனக்கு கல்யாணம்ற விஷயம்  தெரியாமல் இருக்கும். எனக்கு இது போதும்” என்றான்.

மணப்பந்தலுக்கு அரக்குநிற பட்டுப்புடவையில் கோவில் சிற்பமென நடந்து வந்தாள் அழகு நிலா, அதேபோல விக்னேஷூம் பட்டு வேஷ்டி சட்டையில் அங்கு வந்தவன் பார்வையில் அத்தனை அலட்சியம் இருந்தது.

மனங்கள் இணையாமல் வந்தவர்களை திருமணப் பந்தத்தில் இணைக்க  மணமேடையில் இருவரையும் அமர சொன்னார் கண்ணப்பன்.

ஒரு தட்டில் பச்சரிச்சி வெற்றிலை பாக்கு மஞ்சள் பூசிய தேங்காய் பழம் மஞ்சள் கோக்கப்பட்ட இரண்டு மஞ்சள் நாண் வைத்து  திருமணம் தடையின்றி நடைபெற திருவருட் காப்பாக இந்த நானை கையில் கட்டுகிறேன் எனச் சொல்லி மணமகன் வலக்கையில் கட்டிவிட்டார்

மணமகளுக்கு காப்புப் பாடல் பாடி இடக் கையில் காப்பு கட்டி விட்டார் அதனை அடுத்து பெற்றோர் வழிபாடு செய்ய வைத்தார்.

மணப்பெண் வலக்கையை மண மகனின் வலக்கையில் வைத்து இருவரின் பெற்றோரும் அவர்களின் கைகளில் கீழ் வைக்க சொல்லி நீர் வார்த்து இருவருக்கும் திருமணம் செய்ய சம்மதிக்கிறோம் என சொல்லச்சொல்லி சொல்லியதும் .

பொன் தாலி தாம்பாலத்தில் வெற்றிலை, பாக்கு, தேங்காய், பூ, பழம் முதலியவற்றோடு சபையில் இருப்போர் தொட்டு ஆசீர்வாதம் வாங்க கொடுத்து வாங்கினார்

மணமகன் வடக்கு பக்கம் அமர்ந்துர்ந்திருக்க மணமகள் அவனின் இடப்பக்கம் அமர்ந்திருக்க மங்கல நாண் வழிபாடு செய்து

மணமகனின் உடன் பிறந்தவள் ஒரு தட்டில் திருவிளக்கு ஏற்றி மணமகளின் பின் புறம் ஏந்தி நிற்கச் சொல்லி

ஆசிரியர் மங்கல நாணை மணமகன் கையில் கொடுத்தார்

மணமகள் பெண்ணின் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சு போட்டான்.

விக்னேஷ் அழகுமலர் கல்யாணம் பெரியோர்களின் விருப்பபடி நடந்து முடிந்தது.

கழுத்தில் தாலி ஏறும் வரை அருகில் இருந்த விக்னேஷின் மீது ஒட்டாத தன்மையுடன் இருந்த அழகியின் கையேடு அவனின் கை உரசியது. அந்த ஸ்பரிசம் தாலிகட்டி கணவன் என்ற பந்தம் கொடுத்த உணர்வில் சின்ன படபடப்பு அவளுக்கு உண்டானது.

விக்னேஷூமே அதன் பின் அவளிடம் முகத்தைத் திருப்பவில்லை, சாதாரணமாய் தள்ளி உட்கார், வா, நின்னுட்டே ஆசீர்வாதம் வாங்குவோம் என்று தேவைப்படும் இடத்தில் இயல்பாய் அவளுடன் பேச்சுக் கொடுக்கவும் செய்தான்.

அவன் பேச்சுக்கு அழகி வளைந்து, குலைந்து, வெட்கப்பட வில்லை.அதேபோல இன்னும் மனத்தால் அவனுடன் நெருங்காத நிலையில் தாலிகட்டி சில வார்த்தை மட்டும் பேசியதும் கணவனுக்கு அழகி பதில் தர தயங்கவில்லை.

அதைத்தாண்டி ஏனோ அவளுக்கு இன்னும் அவன்மேல் ஒரு நெருக்கமோ தனக்கு உரியவன் என்ற எண்ணமோ உருவாகவில்லை.

விக்னேஷ் மனதோ... அங்கு அவனை பார்ப்பவர் எல்லோரும் ஹீரோ இமேஜ் கொண்டு பார்த்ததும். அவனுக்குள் ஒரு கர்வம் உருவாக்கி இருந்தது. ஆனால் புதுமனைவி அவ்வாறு பார்க்காதது அவனின் ஈகோவை தொட்டுச் சென்றது.

மேலும் அவன் பெரிய மனது வைத்து அவளுடன் சில வார்த்தைகள் பேசியதும் அவளுக்கு புருஷன் என்ற நினைவில்   ஹார்மோன் மாற்றம் உண்டாகி விடும் என்று தப்புக்கணக்குப் போட்டிருந்தான்.

அவ்வாறு இல்லாமல் தேவைக்கு இயல்பாய் அவள் பதில் கொடுத்ததாள் அவளை உற்று கவனித்தான்.

அவளின் அந்தத் தன்மையால் ஏறெடுத்து பார்த்தவன். நல்லாத்தான் இருக்கா...? ஆனா திமிரு... சொத்து இருக்குன்ற திமிரு போல...

ஆனாலும் பட்டிகாடு... பட்டிக்காடு தான்.  மஞ்சளை போய் உடம்பு முழுக்க அப்பிகிட்டு நிக்கிறா...

கொஞ்சம் கூட ஃபேஷன் பத்தி தெரியாது போல.. அப்படியே பட்டிக்காடா மேக்கப் பண்ணி இருக்காள்.

கல்யாணத்துக்கு மேக்கப் பண்ணிவிட ஒரு பியூடீசியன் கூட வைக்கலை போல...  என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

இருந்தும் அவனின் அம்மா சொன்னதை நினைவில் கொண்டு டாக்குமென்டை நம்ம பேருக்கு மாத்தி வாங்குணுமே... அவளை அதுவரை கைக்குள்ள போட்டு வச்சுக்கணும்  என்ற எண்ணத்தில் இயல்பாய் அவளிடம் பேசவும் கையேடு கைகோர்த்தும் நிற்க ஆரம்பித்தான்.

ஆனால் அவன் பேச்சில் காதலும்... கண்களில் அவளுக்கான தேடலும்.  எதிர்பார்க்கும் அழகிக்கு அது கிடைக்கவில்லை. அதனை கண்டிருந்தால் ஒருவேளை அழகிக்கும் மஞ்சள் தாலி அவன் கையாள் கழுத்தில் ஏறிய மகிமையில் அவனின் மேல் காதல் பூ மலர்ந்திருக்கும்.

கொஞ்சம் கொஞ்சமாக அவனை புருஷனா ஏத்துக்கிட பழகிக்கணும். என்று தனக்குள் நினைந்ததால்  முகம் திருப்பாமல் கேட்டதுக்கு இயல்பாய் பதில் பேசியபடிஅவன் பிடித்திருந்த கையை விலக்கிகொள்ளாமல்  நின்றிருந்தாள்.

அதன் பின் தொடர்ந்து நடந்த சடங்குகள் பால், பழம் கொடுக்கும் சடங்குகள் எல்லாம் முடிந்ததும். இரவில் சாந்தி முகூர்த்த நேரம் குறித்திருந்ததால் அதுவரை இருவரையும் தனித்தனி அறையில் தங்க வைக்கப்பட்டனர்.

நாச்சியார் மகளை குளித்து இரவு விஷேசத்துக்கு உடுத்த ஆடை எடுத்து வைத்தபோது “அம்மா...” என்று தயக்கத்துடன் அழைத்த மகளை வாஞ்சயுடன் திரும்பிப் பார்த்தார் நாச்சியார்.

“அம்மா... நான் காலேஜ் முடிக்கணும் அதுக்கு அப்புறம் இந்த ஏற்பாடு எல்லாம் வச்சுக்கலாமே...” என்றாள்.

வேகமாக வாசலை திரும்பிப் பார்த்தவர் தங்களின் பேச்சு  பிறர் காதில் விழாமல் இருக்க வேகமாக சென்று கதவை உள்தாழ்பால் போட்டு வந்து மகளிடம் அமர்ந்தவர்.

“அட கிருக்கச்சி... அதுதான் நீ படிப்பு முடிக்கிற வரை இங்க நம்ம வீட்டிலேயே இருக்கலாம்னு பேசி முடிவு பண்ணிட்டோம்ல. இங்கபாரு மாப்பிள்ளை, மூணு நாளுதான் ஊர்ல தங்குவார், அதுவரை மட்டும்தான். அதுக்குப் பிறகு அவரும் பெங்களூர்க்கு வேலைக்கு போயிடுவார்”

“அதாம்மா... அவர் ஊருக்கு போய் வேலையை பார்க்கட்டும் நானும் படிப்பை முடிச்சுக்கிறேன். அதுக்குள்ள மனசால நான் அவர்கூட குடும்பம் நடத்த தயாராகிடுவேன். இப்போ இதெல்லாம் வேணாமே...” என்றாள்.

“இங்க பாரு அழகி கல்யாணம் நடந்தா... அதுக்கு பிறகு நடக்குற,  இதெல்லாம் இயல்பான விஷயம்தான்.

புது பொண்ணு தானே நீ அதனால இப்படி இருக்கும். ஏற்கனவே ரெண்டுபேரும் பிரிஞ்சு இருக்கப் போறீங்களே... எப்படி உங்களுக்குள்ள அன்னியோன்யம் வளரும்...?னு நானே கவலைப்பட்டுகிட்டு இருக்கேன்.

அம்மா சொன்னா கேட்ப தானே...  இப்படி நீ பேசுறது யார் காதுலயாவது விழுந்தா தேவையில்லாத பேச்சு வரும்...” என்று சொன்னார்.

அவருக்குமே மனதிற்குள் அவசரப்பட்டுட்டோமோ... ரெண்டுபேரும் புதுசா கல்யாணம் ஆனவங்க போலயா இருக்காங்க...?

எஞ்சினியர் மாப்பிள்ளை கைநிறைய சம்பளத்தோட கண்ணனுக்கு லச்சணமா இருக்கார் அப்படின்னு மட்டும் பார்த்து தப்புப் பண்ணிட்டோமோ... ?

என் பொண்ணுக்கு என்ன குறை..? மாப்பிள்ளை முறுக்கோடு மத்தவங்ககிட்ட  மாப்பிள்ளை சுத்துறது சரி.. ஆனா புதுப் பொண்டாட்டிக் கிட்டயுமா...?

ஏற்கனவே ரெண்டும் இப்படி இருக்குதுக...  இதுல சாந்திமுகூர்த்தத்தையும் தள்ளி வச்சா ரெண்டும் ஒன்னுமண்ணா பழகாம  ஆளுக்கு ஒருபக்கம் இழுத்துக்குட்டு போயிடும்.

காலகாலத்தில் அது அது முறைபடி நடந்தாத் தான் நல்லது என்று எண்ணியவர் மகளை பேச்சில் சமாளித்து கடவுளை வேண்டி எளிமையான அலங்காரத்துக்கு வேண்டியதை எடுத்து வையத்து விட்டதை உறுதிப் படுத்திகொண்டார்.

“அழகி குளிச்சிட்டு எடுத்து வச்சிருக்க இந்த சேலையை உடுத்திக்கோ... நான் போய் உன்னை ரெடிபண்ண மகாவையும் ருக்குவையும் அனுப்;பி வைக்கிறேன்” எனச் சொல்லி வெளியேறினார்.

*****

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib