உதிர்ந்தும் துளிர்த்தேன் உன்னால் (தீபாஸ்)

அத்தியாயம் - 13
கனி அரசுவின் இருபத்தி எட்டு நாள் மருத்துவமனைய வாசம் விட்டு வீட்டிற்கு இன்றைக்கு அழைத்துவர ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது..
இனி தனியாக முன்பு போல அவரால் நடக்க முடியாது என்றாலும் மருந்து, மாத்திரையின் உதவியாலும் பிசியோதெரபி வீட்டிற்கு வந்து அவருக்கு கை கால் அசைவுக்கு பயிற்சி கொடுக்க ஏற்பாடு பண்ணியதாலும் ஓரளவு நடக்க வாய்ப்பு உள்ளதாக நம்பிக்கை கொடுத்திருந்தனர் டாக்டர்ஸ்.
இந்நிலையில் வீட்டில் அவரின் அறையில் இனி தேவைப்படும் என்று வாக்கரையும், கட்டிலுக்கு அருகிலேயே உணவு எடுக்கத் தோதாக ரோலிங் மேஜையையும் வாங்கிக் கொண்டு வந்து இறக்கினான் தேவா...
துர்க்காவின் லவ்வர் விக்னேஷ் பற்றி அவன் கேள்விப்பட்ட விஷயங்கள் திருப்தியாக இல்லாததால் அடுத்து என்ன பண்ண என்ற யோசனையுடனேயே அளந்தான்..
மாமா இருக்கும் நிலையில், அவரிடமோ அல்லது அத்தை சுப்புவிடமோ தான் கேள்விப்பட்ட விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள முடியாது என்பதை உணர்ந்திருந்தான்.
துர்க்காவிடம் அவனின் காதலனைப் பற்றிய விஷயத்தை, தானே சொல்லிப் புரியவைக்க முடியுமா என்ற சந்தேகம் அவளுக்கு உண்டானது.
தான் சொன்னால் அவள் நம்புவாளா...? அவளை நான் கல்யாணம் செய்ய மறுத்தக் கோபத்தில் அபாண்டமாய் பழி போடுவதாக எண்ணி விட்டாள் என்ன செய்ய...? என்று நினைத்தான். அவன் அவ்வாறு நினைக்க காரணம் இருந்தது.
துர்க்கா, அன்று தந்தை தாயிடம் கோவித்துக் கொண்டு வீட்டை விட்டுப் பெட்டியோடுக் கிளம்பித் தெருவைத் தாண்டி ஆட்டோ ஸ்டேண்டை நெருங்கிக் கொண்டிருந்தாள்.
அன்று காலையில் அவள் பெங்களூரில் இருந்து வந்து வீட்டிற்குள் நுழைந்த போது எதிர் கொண்ட தேவா, அவளிடம் சம்பிரதாயமானப் பேச்சுடன் முடித்துக் கொண்டு அச்சாபீஸ் சென்று விட்டான். வேலை முடித்து விட்டுத் பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தான்.
அவன் கண்களில் நடந்து வந்து கொண்டிருந்த துர்க்கா தட்டுப்பட்டாள். ஏற்கனவே அவளுடன் தனிமையில் பேச வேண்டும் என்று நினைத்திருந்தான்.
வீட்ல ரெண்டு பேருக்கும் கல்யாண ஏற்பாடு பண்றாங்க. நான் அது சரிபட்டு வராதுன்னுச் சொன்னேன் கேக்கலை.
உனக்கு இஷ்டம் இல்லைன்னா, என்னை வேணாம்னு நீ சொல்லி விடு துர்க்கா. நான் உனக்கு சப்போர்ட் செய்கிறேன்’ என்று சொல்ல நினைத்திருந்தான்.
ஆதலால் வழியில் அவளைக் கண்டதும், இப்போதே இவளிடம் பேசிடலாம் என்று நினைத்தவன், அவள் கையில் லக்கேஜ் இருப்பதைப் பார்த்ததும்... அதுக்குள்ள எங்க கிளம்பிட்டா...?
ஒரு வேளை வீட்டில எங்க மேரேஜ் பத்தி பேச்செடுத்ததால சண்டைப் போட்டு, வீட்டை விட்டுக் கிளம்பிட்டாளோ...? என்று சிறு வயதில் இருந்து அருகில் பார்த்துக் கணித்த அவளின் குணத்தை வைத்து யூகித்தான்.
எனவே அவள் சென்ற வழியில், குறுக்கே சென்று தனது டூ வீலரை நிறுத்தினான்.
அவளுக்கு இவனால் தான் தனக்கு இந்த நிலைமை என்றக் கோபம் இருந்ததாலோ என்னவோ காட்டமுடன்,
“ஒழுங்கா வழிய விட்டு நில்லுங்க” என்றாள்.
“நீ வா.. வந்து வண்டியில் ஏறு, எதுனாலும் வீட்டில் போய் பேசிக்கலாம்” என்றதும்,
“என்கிட்ட இப்படி உரிமையாக் கூப்பிடுற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க. காலையில தானே சொன்னேன், என்னை நீங்க பிக்கப் பண்ண வர வேணாம்னு. அது அப்போதைக்கு மட்டும் இல்ல, எப்பவுமே எனக்காக நீங்க எதையும் செய்ய வேணாம். எப்பவுமே என்னை விட்டுத் தள்ளியே நில்லுங்க...”
“துர்க்கா, என்னப் பேசுற..? நான் உனக்கு நல்லதுக்கு தான் சொல்றேன்” என்றதும்,
“தேவையில்லை, உங்களாலத் தான் எல்லாமே... என் பின்னாடி வராதீங்க” கோபமுடன் விலகிச் சென்று நின்றுக் கொண்டிருந்த ஆட்டோவில் ஏறி சென்றாள்.
அவளை ஃபாலோ பண்ணிச் செல்வதா... வேணாமா...? யோசித்துக் கொண்டிருந்த போது, மொபைலில் அவன் அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
அட்டன்ட் செய்தவனை, ‘உடனேக் கிளம்பி வா, உன் மாமா வீட்டுல நிலவரம் சரி இல்லை’ என்று கண்ணம்மா சொன்னதும் வீட்டிற்குச் சென்று விட்டான்.
அன்று நடந்த சம்பவத்தை மனதில் கொண்டு, தன்னை அவள் தவறாக எண்ணி உள்ளால், அவளைக் கல்யாணம் செய்ய தான் ஆசைப்படுவதாக நினைத்து அதனால் தான் அவள் வீட்டில் பெற்றோருடன் சண்டை போடும் நிலை வந்தது என்றுக் கோபம் கொண்டுள்ளாள்.
இந்நிலையில் தான் அவளின் காதலனைப் பற்றிய விஷயங்களைக் கூறினாள். செவி கொடுப்பாளோ மாட்டாளோ என்ற சந்தேகம் உண்டானது,
எனவே ‘சாந்தியை வைத்து அவள்கிட்டப் பேச வைக்கலாம்’ என்று நினைத்தான். தான் அவளின் காதலன் விக்னேஷைப் பற்றி அறிந்த விஷயங்களைச் சொல்லி அவளிடம் உசாராக இருக்கும்படிச் சொல்ல நினைத்தான்.
இத்தனைக்கும் விக்னேஷின் பெங்களூர் ஆட்டத்தை மட்டுமே அங்குள்ளவர்கள் மூலம் தெரிந்து கொண்டிருந்தான்.
விக்னேஷ் உள்ளூர்க்காரன் என்ற விவரம் கூடுதலாக தெரிந்ததால், அவனின் குடும்பம் பற்றி விசாரிக்க நேரடியாகவே அவன் களம் இறங்க முடிவெடுத்தான்.
இவ்வாறாக யோசித்தவன் மாமனின் அறையில் கொண்டு வந்த சாமான்களை, அதற்கான இடத்தில் வைக்கச் சொல்லி விட்டு ஹாலுக்கு வந்தான்.
சாந்தியை பத்து நாட்களில் ஊருக்கு வரச்சொல்லி விட்டு கணவன் சென்றிருந்தாலும், மேலும் நாட்கள் கடந்திருந்தது. தந்தையை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்தப் பின்பே சென்னைக்கு செல்ல வேண்டுமென உறுதியாக அங்கேயே இருந்து விட்டாள்.
இன்று மதியம் தந்தையை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்ததும், இரவு சென்னைக்கு கிளம்ப அவளின் லக்கேஜை ரெடி செய்து வைத்து விட்டு ஹாலுக்கு வந்தவள், தேவா அங்கு அமர்ந்திருப்பதைக் கண்டு யோசனையுடன் அவன் அருகில் வந்தாள்.
பொதுவாக தேவைக்கு மேல் அங்கு அவன் நின்றதில்லை. பருவத்தில் மகள்கள் இருந்ததாலோ என்னவோ பெண்களை பெற்று வைத்திருக்கும் சுப்பு அத்தை, அவனை இங்கு வந்த புதிதில் அனாவசியமாக அங்கு நிற்கும்படி விட்டதில்லை.
அவனுமே அவரின் மனநிலை புரிந்து மாமன் இருக்கும் நேரம் அறிந்து, தேவை என்றால் மட்டுமே பங்களாவிற்குள் வந்து நிற்பான்.
காலம் செல்லச் செல்ல சுப்புவுக்கு அவனின் குணம் பிடிபட்டுப் போக அவனின் பெரியாள் தன்மை அவரைக் கவர்ந்ததால் குடும்பத்தில் ஒருவனாக சுப்புவும் அவனை ஏற்றுக் கொண்டாள்.
இருந்தும் அவனோ ஆரம்பத்தில் இருந்து இன்று வரை மாமனுக்கு தேவை என்றால் மட்டும் முன்னாடி வந்து நின்று உதவுபவன் மற்ற வேளைகளில் அனாவசியமாய் அங்கு நின்றதில்லை.
எனவே அங்கு அமர்ந்திருந்தவனிடம் வந்தவள், “அப்பாவை இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடலாம்ல தேவா மாமா..?” என்றதும்,
“ம்... காலையில டாக்டர்ஸ் ரவுன்ட் வந்துப் பார்த்துட்டு என்னென்ன மருந்து சாப்பிடலாம் எப்படிக் கவனிச்சுக்கணும்னு சொல்லிட்டு, டிஸ்ஜார்ச் பண்ண எழுதிக் கொடுத்துருவார். மதியம் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடலாம். அது பிரச்சனை இல்லை, ஆனா துர்க்கா விஷயத்தை நினைச்சு கவலையா இருக்கு சாந்தி. நீ தான் அவள் கிட்ட பேசணும்” என்றான்.
“என்ன விஷயம் மாமா...?”
“துர்க்கா லவ் பண்ற அந்த விக்னேஷ் பத்தி கேள்விப்பட்டது எதுவும் சரியா இல்லை. துர்க்காவுக்கு முன்னாடி இன்னும் ரெண்டு பொண்ணுங்க கூட நெருக்கமானப் பழக்கம் இருந்துருக்கு. லவ் பண்ணி கழட்டி விட்டுருக்கான்.
அதுமட்டும் இல்ல, ரெகுலரா பப்புக்கு போய் தண்ணி அடிக்கிறப் பழக்கம் இருக்கு. அதோட துர்க்கா இப்போ அவன் கூட தங்கி இருக்கிறதாக் கேள்விப் பட்டேன். கேட்டதும் ஒரு மாதிரி கலக்கமா இருக்குது. நீ அவள் கிட்டப் பேசிப் பார்க்கிறயா..? என்றான்.
“என்ன மாமா சொல்றீங்க ஹாஸ்டல்ல தானே இருக்கிறதா நான் இங்க வர்றதுக்கு முன்னாடி சொன்னா...! ஆனா அவன் கூடவே தங்கி இருக்கிறாள்னா, அப்போ கல்யாணமே பண்ணிக்கிட்டாளா?” என்றதும்,
“இல்ல, லிவ்விங் டுகதர்ல இருக்கிறதா, அவள் வேலைப் பார்க்குற ஆபீஸ்ல உள்ளவங்க மூலமா தகவல் கிடைச்சிருக்கு.
இதுல ஒரு நல்ல விஷயம் என்னென்னா, அவன் நம்ம ஊர்க்காரன் தானாம். அதனால ஃபேமிலியைப் பத்தி விசாரிச்சு வைக்கிறேன். நீயும் நான் சொன்னதை எல்லாம் அவள்கிட்டச் சொல்லு, அதுக்குப் பின்னாடி அவளோடப் பதிலைத் தெரிஞ்சு அடுத்து என்ன பண்ணலாம்னு பார்க்கலாம்” என்றான்.
*****
செல்வந்தர்கள் வசிக்கும் பகுதி அது. அந்த ஏரியாவில் இருக்கும் மூன்று தெருக்களிலும் இருக்கும் வீடுகள் பெரிய பெரிய பங்களாக்களாக இருந்தது.
மூன்று தலைமுறையாக நகைக் கடைத் தொழிலை மேற்கொண்டு வரும் எம்.பி.ஆர் நகைக்கடையின் வாரிசுகள் நான்கு பேரின் பங்களாக்களும் அங்கு தான் வரிசையாக பிரமாண்டமாய் அமைந்திருந்தது.
அக்குடும்பத்தின் தொழிலை நிறுவிய மருதப்பிள்ளையின் மூத்த மகன் செல்வகுமாரின் குடும்பம் வசிக்கும் பங்களா மற்ற மூன்று பங்களாவை விட அளவில் பெரியது.
அனைவரும் முன்பு தாய் தந்தையுடன் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்த பல நினைவுகளின் பொக்கிஷத்தோடு, பெரியவர் கடைசி காலம் வரை ஆட்சி புரிந்த மாளிகை அது.
இன்னமும் எம்.பி.ஆர் நகைக்கடைக்காரர் வீடு என்றால் சட்டென்று அந்தப் பங்களாவைத் தான் அடையாளம் காட்டுவார்கள். மூத்தவர் என்பதால் அண்ணனுக்கு அந்த பங்களா வசம் ஆனதாக மற்ற மூன்று தம்பிகளுக்கும் அவர்களின் மனைவிமார்களுக்கும் மனதிற்குள் இன்று வரை பொறாமை உண்டு.
மூத்தவர் செல்வகுமாருக்கும் நந்தினிக்கும் கல்யாணமாகி ஏழுவருடங்கள் சென்றே, பிள்ளை பாக்கியம் கிட்டியது. ஆதலால் மூத்தவன் செல்வகுமாரின் மகன் தம்பிகளின் பிள்ளையை விட இளையவனாக ஆகிப் போனான்.
செல்வகுமார் மற்றும் நந்தினிக்கு அரிதாய் கிடைத்த பிள்ளைச் செல்வம் தான் பூபதி ராஜா.
வெளிநாட்டில் மேற்படிப்பு முடித்து விட்டு இந்தியாவில் கணினி நிறுவனம் ஒன்றை ஆரம்பித்த பூபதிராஜா துன்பம் என்றால் என்னவென்றே அறியாதவன். அவனின் வாழ்வை காதலி வடிவில் வந்த இஷானியால், அக வாழ்வில் தோல்வி அடைந்து அவனின் மனம் சுக்கு சுக்காக உடைந்து போனது.
அவளால் கல்யாணம் என்ற கான்செப்டின் மீதே நம்பிக்கை இல்லாமல் ஆகிப் போனான். அதில் இருந்து தன்னை மீட்டு எடுக்க லண்டனின் தொழிலை விரிவுபடுத்திக் கொண்டு அங்கேயேத் தங்கிவிட்டான்.
நந்தினி மகனைக் கண்ணில் காண முடியாத துக்கத்திலும் ஒற்றை மகன் கல்யாணம் செய்யாத வேதனையிலும் கவலை கொண்டதால் அவளின் உடல்நிலை மோசமானது.
மருத்துவமனையில் அனுமதித்திருந்த அம்மாவைக் காண பறந்து வந்தப் பூபதியை, தனது உடல்நிலையை காரணம் வைத்து தங்களுடன் இழுத்துப்பிடித்து வைக்க முயன்று கொண்டிருந்தாள் நந்தினி.
அதன் முதற்கட்டமாகவே அன்று, கல்லூரியை அவன் பொறுப்பு எடுத்தே ஆகவேண்டும் என்றும் அவரின் தாத்தாவின் கடைசி ஆசை என்றும் சொல்லி மகனை கணவருடன் கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்.
பூபதிராஜாவோ அம்மாவின் பிபி அதிகமாகி மயங்கி விழுந்து மருத்துவமனையில் சேர்த்ததை அறிந்து, லண்டனில் இருந்துப் பறந்து வந்திருந்தான். அவன் வந்தப் பின்பே மூன்று நாட்களுக்கு பின் கண் திறந்த அம்மாவைக் காண அவரின் முன் கலக்கமுடன் வந்து நின்றிருந்தான்.
“மிஸ்டர் பூபதி, உங்க அம்மாவுக்கு மருந்து நீங்க தான். எங்க மெடிசின் எல்லாம் அப்போ தான் வேலை பார்க்கும். நீங்க அவர் மனதை நல்ல விதமாக வைத்திருந்தாளல் அவர்களின் ஆயுள் அதிகரிக்கும். இல்லைன்னா விளைவுக்கு நாங்கள் பொறுப்பு இல்லை” என டாக்டர்ஸ் சொல்லி விட்டார்கள்.
அதனால் அம்மாவின் விருப்பத்தைத் தட்ட முடியாமல் தனது லண்டன் தொழிலை ஓரங்கட்டி விட்டு இந்தியா வந்து விடச் சம்மதித்திருந்தான். அதற்கு ஆறுமாதம் டைம் கேட்டவன், இன்று லண்டன் சென்று அங்கிருக்கும் தொழிலை மேற்கொள்ள வேறு ஒருவரை அமர்த்திவிட்டு வருவதற்கு லண்டனுக்கு கிளம்ப ஆயத்தம் ஆகிக் கொண்டு இருந்தான்.
அவனின் அறைக்கு வந்த செல்வகுமார் “பிளைட்டு எட்டு மணிக்குத் தானே, இப்பவேக் கிளம்புற..?” என்றப் படி அவனிடம் வந்து நின்றார்.
“வெளிலக் கொஞ்சம் வேலை இருக்குப்பா... முடிச்சிட்டு நேரா ஏர்போட்டுக்கு போயிடுவேன், என்னமோ கையில கொண்டு வந்துருக்கீங்க...?” என்றதும்,
கையில் தரகரிடம் வாங்கிய பொண்ணுங்க போட்டோவை மகனிடம் தயக்கமுடன் நீட்டியபடி, “நீ ஆறுமாசம் கழிச்சு இங்க வந்ததும் இதுல இருக்கிற ஒரு பொண்ணு கூட உனக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணலாம்னு அம்மா நினைக்கிறா...” என்றதும்,
“பிளீஸ் பா என்னைக் கம்ப்பல் பண்ணாதீங்க, இதுக்குத் தான் நான் லண்டன்லையே இருந்துற நினச்சேன். அம்மா கைக்காட்டிய பொண்ணு தானே இஷானி, அவளைப் போல இந்த போட்டோஸில் இருக்கிறப் பொண்ணுங்க குணமும் இருக்காதுன்றதுக்கு எந்த கேரண்டியும் இல்ல.
நான் கல்யாணம் என்ற ரிஸ்க் எடுக்க இப்போதைக்கு விரும்பலை. என்னைக் கட்டாயப்படுத்தினால் லண்டனை விட்டு இங்க வந்து தங்குற, என்னோட ஐடியாவ நான் வாபஸ் வாங்கிடலாமானு யோசிக்க ஆரம்பிச்சிடுவேன்” என்றான்.
“சரி விடு, நீ கல்யாணம் செய்ய சம்மதிக்க கொஞ்சம் டைம் எடுக்கும்னு உன் அம்மாக்கிட்ட சொல்லி வைக்கிறேன். அதுக்காக இங்க வராம இருந்துடாத, உன்னக் கண்ணுல பார்த்ததும் தான் உன் அம்மா கொஞ்சம் தேறி வந்துகிட்டு இருக்கா. நீ ஆறுமாசத்துல லண்டன் வேலையை ஓரம் கட்டிட்டு இங்க வந்துர்றேனு அவளுக்குச் சத்தியம் பண்ணி தந்திருக்கிறதால இப்போ கொஞ்சம் சமாதமாகி இருக்காள்” என்றார்.
ஆனாலும் ஒரு விஷயத்தை நீ புரிஞ்சுக்கிடணும், எனக்கும் உன் அம்மாவுக்கும் பிறகு, வாழ்கையில உனக்குன்னு ஒருத்தர் வேணும். எவ்வளவு சொத்து பத்து இருந்தாலும் உரிய மனுஷங்க துணைக்கு இல்லாட்டி, வாழ்க்கை வெறுமை ஆகிடும். எல்லாப் பொண்ணுங்களும் இஷானி போல இருக்க மாட்டாங்க. உங்க அம்மா போல பொண்ணுங்களும் உண்டு” என்றார்.
அவனின் மேல் காதல் உள்ளதாய் சொன்ன இஷானியின் மேல் தனது ஒட்டு மொத்த அன்பையும் கொட்டியவனுக்கு, அவள் காதல் தன் மீது அல்ல தனது சொத்து பத்து மீதுதான் என்பதை அவளின் இன்னொரு முகத்தைப் பார்த்ததால் கண்டு கொண்டவன் உடைந்து போனான்.
அவளின் கடந்த கால வாழ்கையின் கருப்பு பக்கத்தை கண்டவன், அவளுடன் நடக்க இருந்த தனதுக் கல்யாணத்தை நிறுத்தி இருந்தான். இருந்தாலும் அவனின் இளமைக்கு தீனி இட்டு, தூண்டிவிட்ட அவனின் மோகத்தை தணிக்க, தாய் தந்தை கண் மறைத்து லண்டனின் பணத்திற்கு தாராளமாய் தன்னைத் தாரை வார்க்கும் பெண்களில் தாகம் அடங்கிக் கொண்டான்.
அவன் பார்த்த இது போன்றப் பெண்களால், தனது அம்மா தவிர்த்து மற்றப் பெண்களின் மீது அவனுக்கு நல்ல எண்ணம் இல்லாது போனது.
ஆனால் அன்று அவனின் காலேஜில் லாபியில் ஜன்னல் அருகில் நின்றுக் கொண்டிருந்த போது ஜன்னலுக்கு அந்தப் பக்கம் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்த இரு பெண்களின் ஒருத்தியின் பேச்சு அவனுக்கு சுவாரஸ்யத்தை தந்திருந்தது.
தனக்குப் பெண்கள் மேல் இருக்கும் இத்தகைய எண்ணம் போல, அவளுக்கு ஆண்கள் மேல் அத்தகைய எண்ணம் இருப்பதைக் கண்டு கொண்டான்.
ஜன்னல் வழி எட்டி அவளின் முகம் பார்த்தவனுக்கு அவள் கல்லூரி மாணவி என்பது தெளிவானது.
சிறுபெண் என்று அவளை ஒதுக்க நினைத்தவனுக்கு, முன் வரிசையில் அமர்ந்து இருந்தவளின் மேல் அடிக்கடி அவனை அறியாமல் பார்வைப் படர்ந்தது.
அவனுக்கும் அவளுக்கும் தோற்றத்திலோ உருவத்திலோ துளியும் பொருத்தமில்லை என்பது அவனுக்குப் புரியாமல் இல்லை. அதை விட பெரிய தவறு அவர்களின் கல்லூரியில் படிக்கும் பெண் அவள். வேலியே பயிரின் மேல் கண் வைக்கக் கூடாது என்ற எண்ணம் மனக்கட்டுப்பாட்டை விதைத்தது.
காலம் இருவருக்கும் என்ன வைத்திருகிறது என்பதை இனி வரும் அத்தியாயங்களில் காணலாம்.
*****
No comments:
Post a Comment