anti - piracy

Post Page Advertisement [Top]

 உதிர்ந்தும் துளிர்த்தேன் உன்னால் (தீபாஸ்)


அத்தியாயம் 12

அத்தியாயம் 12


இன்று காலையில் மகள் காலேஜுக்குப் போனதும் அவர்களின் வீட்டுக்கு நாச்சியா, ஒரு டம்ளர் சீனி தாயேன். ரேசன்ல நாளைக்குச் சீனி போட்டதும் கொண்டு வந்து கொடுத்துடுறேன்எனச் சொல்லிக் கொண்டே, அவர்களின் பங்காளி வீட்டு மூத்த மருமகளும், ராதாவின் உடன்பிறந்த அண்ணனின் மனைவியுமாகிய செவ்வந்தி உள்ளே நுழைந்தாள்.


வந்தவளை எதிர்கொண்ட நாச்சியார் வா செவ்வந்தி, சீனி தானே வேணும் உட்காரு கொண்டுட்டு வாரேன்எனச் சொல்லி சமையல் அறைக்குள் போனவள் மனதில்,


ஒரு டம்ளர் சீனிக்காகவா ஒம்போது வீடு தள்ளி வந்துருக்கப் போறா..? ஏதாவது என் காதில மாப்பிள்ளையப் பத்திய விஷயத்தைப் போட சீனி வாங்குறதச் சாக்கா வச்சு வந்திருப்பாள்...!என்று எண்ணிக் கொண்டு, டம்ளர் நிறைய சீனியைக் கொண்டு போய் கொடுத்தவளைப் பார்த்து,


எங்க அழகி காணோம்..?” என்றாள் செவ்வந்தி.


அவ காலேஜுக்கு போயிருக்கா, அவளை எதுக்குத் தேடுறீக...?”


இங்கப் பாரு நாச்சியா, நேத்து நைட்டு என் நாத்துனா ராதா போன் பண்ணினா... அப்போ நாந்தேன் அவள்கிட்ட என்ன ராதா, அழகிய.. உன் மவனுக்குக் கல்யாணம் பண்ணி வருஷத்துக்கும் மேல ஆகுது... இன்னும் உன் மவன் கூட சேர்ந்து வாழாம இங்கயே இருக்கா...! இப்படியே இருந்தா என்ன அர்த்தம்? அப்படின்னுக் கேட்டேனா...என்றதும்,


என்ன சொன்னாஹ உன் நாத்தனா...? படிச்சுகிட்டு இருந்த என் மவளை சொந்தம் விட்டுப் போகக்கூடாதுன்னு வழிய வந்துப் பொண்ணு கேட்டாளேன்னுப் புத்தியக் கடன் கொடுத்துக் கட்டிக் கொடுத்தேன்...


கட்டிகிட்டவன் ஒருநாள் பொழுது கூட இதுவரை பொண்டாட்டின்னு என் மகள் கிட்டப் பாசமா ஒரு வார்த்தைப் பேசலை..! ஆனா உன் நாத்தனா ராதா, ஊர்காரிங்க கிட்ட போனைப் போட்டு, என் மவள் புருஷனை மதிக்கலைன்னு, அபாண்டமாப் பலி போட்டுக்கிட்டு திரியிறாள்.... பொண்ணைப் பெத்த வயிறு, பத்திக்கிட்டு எரியுதுஎன்று ஆதங்கத்துடன் பேசியவளிடம்,


இங்கப் பாரு நாச்சி எனக்குத் தெரிஞ்ச விஷயத்தை உன்கிட்டக் கேக்குறேன் உண்மையானு சொல்லு...என்றதும்,


என்னென்னு கேளு... சும்மா, உண்மையச் சொல்லுனுக் கேட்டா, என்னத்தை நான் சொல்வேன்...?” என்றதும்,


ரோட்டு மேட்டுல இருக்கிறப் பத்து ஏக்கர் இடத்தைக் கல்யாணத்துக்கு சீதனமாக் கொடுக்கிறதாச் சொல்லிட்டு கொடுக்கலையாம்ல...?” என்றதும்,


யார் அப்படிச் சொன்னது...? நிச்சயத்துல நூறு பவுனு, ஐஞ்சு லட்சம் ரொக்கம்னு பேசி முடிவு பண்ணித்தான் கல்யாணத்துக்குப் பரிசம் போட்டாங்க. எல்லாம் பேசி நிச்சயம் முடிஞ்சு கல்யாணத் தேதி குறிச்சு, பத்திரிக்கை அடிக்கும் போது ராதா வந்து, அந்த நிலத்தைக் கல்யாணச் சீரா கேட்டாள்.


நான் கூட, நிச்சயம் அப்போ இதெல்லாம் பேசலையே... இப்ப எதுக்கு உங்கத் தங்கச்சி, நிலத்தை எல்லாம் சீரா கொடுங்கன்னு கேக்குறாவ..?னு கேட்டேன்.


அதுக்கு எங்க வீட்டு மனுஷன், என்னைக்கு இருந்தாலும் அம்புட்டும் என் மகளுக்குத் தானே....?


அந்த நிலத்தை இப்பவே எம் மகள் பேருல எழுதி வச்சுட்டா, அழகி வாழப் போகும் போது எதுவும் குறையாப் பேசாம இருப்பாங்க... அப்படின்னுச் சொல்லிட்டு உடனே என் மக பேருக்கு பத்திரம் எழுதி, பதிவு பண்ணிட்டாகளேஎன்றாள்.


அப்படியா சங்கதி...?, என்கிட்ட என்ன சொன்னாக தெரியுமா...?”


சொல்லு, அதையும் தான் தெரிஞ்சுக்கிறேன்என்றதும்,


அவள் மகன், உன் மகள்கிட்டப் பொண்டாட்டின்ற உரிமையில, நீ இங்கயும் நான் பெங்களூர்லையும் எதுக்கு இருக்கணும்...?.


என்னோட வேலையை விட்டுட்டு, இங்கயே நான் தொழில் பண்ணுறேன். அதுக்கு சீதனமா எனக்குக் கொடுக்கிறதாச் சொன்ன அந்த இடத்தை என் பேர்ல பத்திரம் மாத்திக் கொடுனுக் கேட்டதாவும்...


அதுக்கு உன் மகள் உங்க அப்பன் வீட்டுத் துட்டுல பிஸ்னெஸ் ஆரம்பிங்க..., எதுக்கு என் அப்பன் வீட்டுச் சொத்தக் கேக்குறீங்க...? அப்படின்னு, கண்டமானிக்கு அவனைப் பேசிப்புட்டாளாம்ல...?” என்றாள்.


இங்கப் பாருங்க மதினி, என் மகளை ஒன்னும் நாங்க மரியாதை மட்டு இல்லாமப் பேசுறது போல வளர்த்து வைக்கலை,


அவள் சின்னப் பொண்ணு, கல்யாணத்துக்குச் சீதனமாக் கேட்டதும், என் மகள் பேருல நிலத்தை எழுதிட்டோம்.


அவரு பேருக்கு வேணும்னா, எங்ககிட்ட நேராக் கேட்டு இருக்கலாம், இதுவரை என் மவள் என்கிட்ட எதுவும் புருஷனைக் குறைவாச் சொல்லலை, இதுபோல நிலத்த மாப்பிள்ளை பேருக்கு மாத்தித் தர சொன்னாருன்னு எதுவும் சொல்லலை...


நாங்களே ரெண்டும் கல்யாணமாகி, இப்படி ஒட்டாம கிழக்கையும் மேற்கையுமா இருக்குறாகளே....! எப்படி சரிப் பண்ணனுத் தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்கோம்.


என் மவள்கிட்ட, வந்ததும் விசாரிச்சுப் பார்க்குறோம். அப்படி இந்த நிலப் பிரச்சனை தான் இப்படி ஒட்டாம, மாப்பிள்ளை இருக்கக் காரணம்னா அந்த நிலத்தை மாப்பிள்ளைப் பேருல மாத்திப் பிரச்னையை உடனே சரிப் பண்ணிடுறேன்எனச் சொல்லி அனுப்பினார்.


அதன்பின் வீட்டுக்கு வந்த கணவனிடம், செவ்வந்தி வந்து சொன்னதைப் பகிர்ந்து கொண்டவளுக்கு, மகள் தங்களிடம் ஒருவேளை இத்தனை நாளும் இதைச் சொல்லாமல் மறைத்து வைத்துவிட்டாளோ...? என்றச் சந்தேகம் உண்டானது.


நன்றாக யோசித்துப் பார்த்தால் வேற பிரச்சனைக்கும் வழி இல்லையே... என்றுப் பிரச்சனையின் அடிநாதத்தை யூகித்தார் நாச்சியார்.


வரட்டும் அந்தக் கழுதை, வந்ததும் எம்புட்டுப் பெரிய விஷயத்தைச் சொல்லாம இருந்திருக்காள்னு, அந்த அதிகப் பிரசிங்கியை நறுக்குனுக் கேள்வி கேக்கணும் என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.


******


கல்லூரி பஸ் விட்டு இறங்கி, வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்த அழகியிடம், தனம் புகுந்த வீட்டுக் கஷ்டத்துலக் கை கொடுக்கலாம்லஎன்றுச் சொல்லியதைக் கேட்டதும், கோபம் பொத்துக் கொண்டு வந்தது அழகிக்கு.


எனவே தனம் அக்கா, எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது, நீங்க சொன்னதுப் போல நான் வேணும்னு ஐத்தை என்னையக் கட்டுனாங்களா...? இல்ல எம்ம வீட்டு சொத்துபத்து வேணும்னுக் கட்டுனாகளான்ற சந்தேகம் எனக்கு முன்னாடி இருந்தது.


அதுக்கு, என்றப் பாட்டன், பூட்டன், அப்பன் சம்பாதிச்சு வச்ச சொத்துக்காகத் தான், அவுக மவனுக்கு என்னைக் கல்யாணம் செய்தாங்கனு, கல்யாணமான அன்னைக்கேத் தெளிவாப் பதில் கிடைச்சிருச்சு...


நீங்க சொல்றது போல அவுக வீட்டுக் கடனை அடைக்க எம்ம வீட்டுப் பணத்தை எடுத்துக் கொடுக்க நான் ஒன்னும் இளிச்சவாயி இல்ல.


ராதா ஐத்தயோட மகன், என் கழுத்துலத் தாலியக் கட்டிட்டு பெங்களூர்ல எனக்கென்னனு போய் ஏன் உட்கார்ந்துக் கிட்டாகனு, அவுககிட்டக் காரணத்தைக் கேட்டுட்டு வந்து என்கிட்ட நியாயம் பேசணும்.


அதை விட்டுப்புட்டு தாலிக் கட்டிட்டு, மறுநாளே பெட்டியைத் தூக்கிட்டு நடையை கட்டிக்கிட்டவகளுக்கு வக்காலத்து வாங்கிட்டு என்கிட்டப் பேசக் கூடாது சொல்லிப்புட்டேன்என்று படபடவெனப் பட்டாசாய் பொரிந்து விட்டு விறுவிறுவென நடந்து போய் வீட்டிற்குள் நுழைந்தாள்.


வீட்டிற்குள் கோபத்துடன் நுழைந்தவளைக் கண்ட அவளின் அம்மா காலேஜ் விட்டு வீட்டுக்குள்ள வரும் போதே எதுக்கு டி டங்கு டனக்குன்னு வர்ற..?


பொண்ணா லச்சணமாப் பொறுமையா இல்லாம இருந்ததாலத் தான் இப்போ உன் வாழ்கையே ஆட்டம் கண்டுகிட்டு நிக்குதுஎன்று நாச்க்சியார் வார்த்தையை விட்டார்.


ஏற்கனவே மனம் நொந்து வந்தவளை, அம்மாவே அவ்வாறுப் பேசியதும் அழுது கொண்டே போய், தனது அறையில் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டாள்.


உள்ளிருந்து மனைவிப் பேசியதைக் காதில் வாங்கிய படி வந்த கதிரேசன், “அப்படியே செவுட்லயே அப்பப் போறேன், புள்ளைக்கிட்ட எப்படிப் பேசணும்னு அறிவு இருக்கா டி உனக்கு...?” என்றவர், வேகமாய் போய் மகளின் அறைக் கதவைத் தட்டியபடி,


அழகி, எம்மாடி அழகி அவள் தான் அறிவில்லாமப் பேசிப்புட்டா... அதுக்காக இப்படியா அழுதுக்கிட்டுப் போய் ரூமுக்குள்ள வந்து உட்காருவ? கதவைத் தொறமா...என்றுத் தட்டவும் திறந்தவள் அழுதுகொண்டே,


அம்மாவே என்னைய இப்படிப் பேசுனா எப்படிப்பா... ?” என்றதும்,


உனக்கும் மாப்பிள்ளைக்கும் இடையில என்ன நடந்ததுன்னு நீ சொல்லாதக் கோவத்துல அப்படிப் பேசிப்புட்டா...


மாப்பிள்ளை உன்கிட்ட அந்த நிலத்தை, அவர் பேருக்கு எழுதிக் கொடுனுக் கேட்டாராம்ல உண்மையாமா..?” என்றார்.


பதில் சொல்லாமல், தலையைக் குனிந்தபடி அவள் நிற்பதைப் பார்த்து நாச்சியார், பாருங்க... நீங்க எம்புட்டு பொறுமையாக் கேக்குறீங்க.,.. ஆமா இல்லைன்னு ஏதாவது பதில் சொல்றாளாப் பாருங்க?


அமுக்கடியாத் தலையைத் தொங்கப் போட்டு இருக்கிறதைப் பார்க்கும் போதே, கேள்விப் பட்டது உண்மைன்னுத் தெரியலையா உங்களுக்குஎன்று சத்தம் போட்டார்.


எம்மாடி, உன்கிட்ட மாப்பிள்ளை முகம் கொடுத்துப் பேசாம இருக்கிறதுக்கு என்னக் காரணம்னு எத்தனைத் தடவைக் கேட்டோம்.


கல்யாண அன்னைக்கு நல்லாத் தானேப் பேசுனார். மறுநாளுல இருந்தே, அவர் போக்கே ஒரு மாதிரி இருக்குதே...


உங்க ரெண்டுப் பேருக்குள்ள அன்னைக்கு நைட்டு எதுவும் பிரச்சனை வந்ததான்னுக் கேட்டோமே, அப்போக் கூட ஒண்ணுமே நீ சொல்லலையேமா...என்றார்.


அப்பா அன்னைக்கு நைட்டு என்கிட்ட அவர் பாசமா ரெண்டு வார்த்தை கூடப் பேசலப்பா. எடுத்ததும், அந்த நிலத்தை அவர் பேருக்கு மாத்தக் கையெழுத்துப் போடச் சொன்னாருப்பா...


எனக்கு என்னமோச் சொத்துக்கு ஆசைப்பட்டுத் தான் அவுக என்னையக் கல்யாணம் பண்ணிகிட்டாகனு தோணிருச்சு... அதுதான் நான் கையெழுத்துப் போடமாட்டேனு சொல்லிட்டேன்பா...என்றாள்.


மகள் அவ்வாறுப் பேசியதும், கவலை மற்றும் யோசனையுடன் அமர்ந்து விட்டார் கதிரேசன்.


நாச்சியாரோ... அறிவு இருக்குதாடி உனக்கு? அந்த இடத்தை அவர் பேருக்கு மாத்த நீ கையெழுத்துப் போடாத காரணத்துக்காகத் தான் மாப்பிள்ளை உன்கூட வாழாமத் தள்ளி இருக்குறாரா...?


இத்தனை நாளா என்ன செஞ்சு உன்ன உன் புருஷன் கூட வாழ வைக்கணு தெரியாம, நானும் உன் அப்பாவும் புலம்பினப்போ ஒரு வார்த்தை இதைப் பத்தி நீ சொன்னியா...?” என்றார் கோபத்துடன்.


சொல்லி இருந்தா அப்பாவும் நீங்களும் உடனே கையெழுத்துப் போடச் சொல்லியிருப்பீங்க, அப்படி அந்த நிலத்தை அவர் பேர்ல மாத்திக் கொடுத்தாத் தான் என் கூட அவர் வாழுவார்னா, அந்த வாழ்கையே எனக்குத் தேவை இல்ல. அது தான் உங்ககிட்டச் சொல்லலைஎன்றாள்.


புருசனோடச் சேர்ந்து வாழுற வாழ்கையை விடவா அந்த நிலம் உனக்குப் பெருசாப் போச்சு..?


எங்ககிட்ட நடந்ததைச் சொல்லி இருந்தா, இந்நேரம் ஊரு உலகத்துல மத்தக் கல்யாணம் ஆனப் பொண்ணுங்க போல உன்னையும் வாழ வச்சுப் பார்த்து இருப்போமே...!.


இப்படிக் கமுக்கமா இருந்து, யானை தன் தலையில தானே மண்ணைப் போட்டது போல போட்டுகிட்டயே ...என்று புலம்பினார்.

*****


துர்க்கா நினைத்ததுப் போல ஒரு மாதத்தில் விக்னேஷால் கல்யாண ஏற்பாடுகளைச் செய்ய முடியவில்லை, இன்றோடு அவனுடன் அபார்ட்மெண்டில் தங்க ஆரம்பித்து நாற்பது நாளுக்கு மேல் ஆகிவிட்டது.


கோவிலில் கல்யாணம், நட்சத்திர விடுதியில் விருந்து என்று எல்லாவற்றையும் ஆடம்பரமாகத் திட்டமிட்டான். துர்க்காவோ, ஆடம்பரமான ஏற்பாட்டை எதிர்த்தாள். அதனால் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு உண்டானது.


விக்னேஷ் பெர்சனல் லோன் போட்டு வந்த பணத்தில், கல்யாண ஏற்பாட்டை மேற்கொண்டவனுக்கு, இன்னுமே செலவுக்கு காசு தேவைப்பட்டதால், துர்க்காவையும் கல்யாணச் செலவுக்கு லோன் போட வற்புறுத்தினான். அதனால் அவள் கேள்விக் கேட்க ஆரம்பித்தாள்.


உங்க கையில இருக்கிறதை வச்சி சிம்பிளாப் பண்ணலாம் விக்கி, பத்தாததுக்கு என்கிட்ட இருக்கிற சேவிங்ஸூம் தாரேன். லோன் எடுத்து, செலவு பெருசா பண்ண வேணாமேஎன்றதும்,


இதைவிட சிம்பிளா பண்ணினா கொலீக்ஸ் முன்னாடி நம்ம ஸ்டேட்டஸ் என்ன ஆகுறது...? எனக்கு என் ஸ்டேட்டஸ் ரொம்ப முக்கியம் துர்க்கா. ரெண்டுப் பேரும் வேலை பார்க்கிறோம் இன்னும் நிறையச் சம்மதிக்கலாம். இந்த மொமண்டை ரசிச்சு வாழணும்என்று அவன் வாதாடினான்.


இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த மாதவன் மனதினுள், இந்தக் கல்யாணமே செல்லுபடியாகாது. அதுல இப்படிப் பண்ணனும் அப்படிப் பண்ணனும்னுச் சண்டை வேறயா...?’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தான்.


அப்பொழுது துர்க்கா அவனைப் பார்த்து ப்ரோ, உங்க ஃப்ரெண்டுக்கு கொஞ்சம் நல்லது, கெட்டதை எடுத்துச் சொல்ல மாட்டீங்களா...? லைஃப் ஸ்டார்ட் பண்ண முன்னாடியே கடன்ல ஆரம்பிக்க வேணாம்னு எடுத்துச் சொல்லுங்கஎன்றாள்.


மனதினுள் இந்தப் பிள்ள பாவம், இவனோடத் திட்டம் புரியாமக் கல்யாணம் வரை இறங்கிருச்சு. என்னையும்ல ஆட்டத்துல ஒரு சாட்சியா இழுத்து விடப் பார்க்குறாங்களே....என்று நினைத்தவன்.


என் பேச்சை எல்லாம் இவன் மதிக்க மாட்டான் துர்க்கா. நீங்களே பேசி ஒரு முடிவுக்கு வாங்கஎன்றவன் விக்னேஷிடம்,


அப்போ நான் கிளம்புறேன் டா... அதுதான் துர்க்கா வேணாம்னு சொல்லுறாங்களே. தாஜ் ஹோட்டலில் ஹால் புக் பண்ணப் போக வேணாம்என்றான்.


டேய்.. டேய்.. இருடா... அதுதான் இத விட சிம்பிளா பண்ணக் கூடாதுன்னு சொல்லிட்டேனே... என்றவன், துர்க்காவிடம் வரும் போது ரெண்டுப் பேருக்கும் டிபன் வாங்கிட்டு வந்துடுறேன். நீ ரெடி பண்ண வேணாம்எனச் சொல்லி விட்டு மாதவனுடன் வெளியேறினான்.


பைக்கில் விக்னேஷின் பின்னாடி அமர்ந்த மாதவன், “உனக்கு பயமே இல்லையா டா...? ஏற்கனவே தாலி கட்டியப் பொண்டாட்டி உனக்கு இருக்கிறாங்க. இப்போ அடுத்ததா துர்க்காவையும் கல்யாணம் பண்ணப் போற... பிரச்சனை ஆகிடுச்சுனா தூக்கி உள்ள வச்சிருவாங்கடா...என்றான்.


முதல் கல்யாணம் பண்ணுனதே சொத்துக்காகத் தான். அந்த சொத்தையே என் பேருக்கு மாத்தி கொடுக்கமாட்டேன்னு சொல்ற அந்தப் பட்டிகாடு எனக்கெதுக்கு...?


உனக்கு இன்னொன்னு தெரியுமா... துர்க்கா ஒன்னும் ஏப்ப சாப்பயான வீட்டுப் பொண்ணு இல்ல, அவ யார் தெரியுமா...? நம்ம ஊரு சின்னக்கனி நோட் புக்ஸ் என்டர்பிரைசஸ் தெரியும்ல?”


அதெப்படிடா தெரியாம இருக்கும், நல்லாத் தெரியுமே... ஆமா அதுக்கும் துர்க்காவுக்கும் என்ன சம்மந்தம்...?


அதோட ஓனர் யார் தெரியுமா... துர்காவோட அப்பா...


என்னடா சொல்ற..? அது பெரிய இடம்ல...


ஆமா டா, துர்க்காவோட மாமன்காரன் தான் பிரிண்டிங் பிரசை இப்போ பார்த்துக்குறான். துர்க்காவை அவனுக்குத் தான் கல்யாணம் பண்றதா அவங்க வீட்டில் முடிவு பண்ணினாங்க. ஆனா இவள் அவனைக் கட்டிக்க மாட்டேனுச் சொல்லி, எனக்காக வீட்டை விட்டு வெளியில் வந்துட்டா...


என்னடா சொல்ற, பெரிய இடத்துலக் கை வைக்கிற. பின்னாடி உன் குட்டு வெளிப்பட்டாத் தொலச்சிடுவாங்க டா...என்றான்.


டேய் அதெல்லாம் யோசிக்காமலயா ரிஸ்க் எடுத்துருப்பேன். உனக்குத் துர்க்காவைப் பத்தித் தெரியாதுடா... அவள் பார்க்கத் தான் மாடர்னா இருக்கா.. ஆனா இன்னுமே சில விஷயங்களில் கட்டுப் பெட்டிதான். என் கூடப் படுத்துட்டதால, இனி வேற ஒருத்தனுக்கு கழுத்தை நீட்ட மாட்டா... அதோட தாலியையும் கட்டிட்டா, என்னை விட்டுக் கொடுக்கவே மாட்டா...


அதுமட்டும் இல்ல, அவள் அப்பனுக்கு, இவளும் இவள் அக்கானு ரெண்டுமே பொண்ணுங்க தான். ஆண் வாரிசு இல்ல, அவருக்கும் வயசாகிடுச்சு, காசு பணம் இருக்குதே தவிர அவர் தாட்டியமான ஆள் கிடையாது.


அதனாலத் தான் அவர் பிஸ்னசையும் அவளையும் அவர்கிட்ட வேலை பார்க்குற சொந்தக்காரனுக்கேக் கட்டி வச்சிட நினைக்கிறார். வேலைக்கு வச்சிருக்க அவன் ஒன்னும் பெரிய ஆளா இருக்க சான்ஸ் இல்லை. அவனைச் சமாளிக்கிறது பெரிய விஷயமா இருக்காதுஎன்று தேவாவினை அன்டர் எஸ்டிமேட் பண்ணினான்.


ஏற்கனவே இவள் அப்பா உடம்புக்கு முடியாதவர். இப்போ அதோட ஹார்ட் அட்டாக்கும் சேர்ந்துடுச்சு. ரொம்பநாள் அவரு உயிரோடு இருக்கப் போறது இல்ல, அவர் மண்டையைப் போட்டதும் கோடிகணக்கான சொத்து துர்க்காவுக்கு ஆட்டோமேட்டிக்கா வந்துரும்.


அதுக்கு முன்னாடி அவள் கழுத்துலத் தாலி கட்டிட்டா அந்த பிரசுக்கு நான் தான் முதலாளி,


எங்க அம்மா மட்டும் அவசரப்பட்டு, அந்தப் பட்டிகாட்டுக் காரியை எனக்கு கட்டி வைக்காம இருந்திருந்தா, அழகான மாடர்னான துர்க்காவோட சேர்ந்து சொத்தும் எனக்கு வர எந்த தடங்கலும் இருந்திருக்காது.


இப்பவும் ஒன்னும் பிரச்சனை இல்ல, அந்தப் பட்டிக்காடு அவள் சொத்தை என் பேருக்கு மாத்தி கொடுக்காததால, அவக்கூட வாழவே இல்லை. அதனால அவளை ஈசியா வெட்டி விட்டுடலாம்னு யோசிச்சேன்.


ஆனா என் அம்மா அங்க எதுவோ கேம் பிளே பண்ணி, அந்த பட்டிக்காடு பேர்ல இருக்கிறச் சொத்தை என் பேர்ல மாத்த ஏற்பாடும் பண்ணிட்டதாச் சொன்னாங்க.


இன்னும் ஒரு வாரத்துக்குள்ள காரியத்தைக் கச்சிதமா முடிச்சிடுறதாச் சொல்லி இருக்காங்க.


அப்படி நடந்துட்டா... அடுத்த நாளே அந்தச் சொத்தை வேற ஆளுக்கு மாத்தி விட்டுட்டு காசு பார்த்துடுவேன்.


அடுத்த மாசமே அவளைப் பிடிக்கலைன்னு ஏதாவது பிரச்சனை பண்ணி டைவர்ஸ் அப்ளை பண்ணிடுவேன். ஏற்கனவே ஒரு வருஷம் மேல, நாங்க கல்யாணம் ஆன நாளில் இருந்து பிரிஞ்சு இருக்கிறதைக் காரணம் காட்டினா டைவர்ஸ் உடனே கிடைச்சிடும்என்றான்.


அவன் சொன்னதைக் கேட்ட மாதவன் மனதினுள் அடப்பாவி நீ உத்தமன் இல்லைன்னு தெரியும், ஆனா இந்த அளவு திட்டம் போட்டு மோசம் பண்ற வில்லனா இருப்பனு நான் நினைக்கலையே...


ஐயோ கடவுளே! வேலை தேடி வந்து இவன் கூட தங்கிட்டேன். இப்போ இவன் செய்ற தப்பு எல்லாம் தெரிஞ்சுகிட்டு கூடவேச் சுத்திக்கிட்டு இருக்கேன். நாளைக்கு இவன் செய்ற அக்கிரமத்துக்கு எல்லாம் நானும் துணை போனேன்னு எனக்குப் பிரச்சனை வந்துட்டா...?” என்றப் பயம் மாதவனுக்கு உண்டானது.


எனவே விக்கி... டேய் விக்கி, பெண் பாவம் பொல்லாததுடா... எனக்கு என்னமோப் பயமா இருக்குதுடா...என்றான்.


****

 


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib