anti - piracy

Post Page Advertisement [Top]


மீரா தாத்தா வயசு 16! (ஆதன்-னின்)
அடாவடி - 03 
                                                     

பிளாஷ்பேக்!

மெதுவா மீரா - செல்லாயி குடும்ப வண்டி காதல், காமம், காட்டு வேலைனு நகர ஆரம்பிச்சது. நகர ஆரம்பிச்சதும் மீரா செஞ்ச மொத வேலை செகன்ட்டா வெலைக்கு வந்த புல்லட்ட வாங்குனதுதான். வேற ஒன்னுமில்ல தான் நல்லா இருக்கறத பாத்து ஊர்க்காரனுவ வயிறெரியனும் அதுக்குத்தான். நீங்க எவனும் இல்லனாலும் நான் நல்லாதான்டா இருப்பனு காட்டத்தான்…..

காட்டுனாலும் மரண காட்டு காட்னாப்ல மீரா….. செல்லாய வலுக்கட்டாயமா புல்லட்ல ஏத்திக்கிட்டு ஊர ரவுண்ட் வரது மீராவுக்கு குஷியான விசயம். ஊருக்குள்ள இருக்க பல புருசனுங்க தன் பொண்டாட்டிக்கிட்ட வசவு வாங்க இந்த புல்லட் பவனி முக்கியக் காரணம்….. ராசப்பன பாத்தியா பொண்டாட்டிய அப்படி வைச்சிருக்கான் இப்படி வைச்சிருக்காங்கறதுதான் பல குடும்பத்துக்குள்ள சண்டைக்கான காரணமாவே இருந்துச்சி! பொம்பளைங்க நாலு பேரு ஒன்னா சேர்ந்தா செல்லாயியோட உழைப்ப, துணிமணிய, நகை நட்ட பத்தி பேசறதுதான் வாடிக்கையா இருந்துச்சி!

அதுவும் பொண்டாட்டிய நல்ல துணிமணி உடுத்தச் சொல்லி ஊர ரெண்டுதாரம் ரவுண்ட் வந்து அப்பவே மாசத்துக்கு ஒருக்கா சினிமாவுக்கு கூட்டிட்டு போவாப்ல மீரா! இந்த சினிமாவுக்கு போறது, நல்ல துணிமணி செல்லாயிக்கு வாங்கித் தரதெல்லாம் ஊர்க்காரனுங்க வயிறெரிய இல்ல, செல்லாயி மேல இருந்த காதலால…..

கல்யாணம் ஆன புதுசுல மீரா காட்டுக்கு வேலைனு யாரும் வரல, வந்தா மத்த காட்டுக்காரங்க வேலைக்கு கூப்ட மாட்டாங்கனு பயம். அந்த நேரத்துல மாட்டுக்கு ஈடா மண்ணுல கெடந்து உழைச்சா செல்லாயி. மூனு ஆம்பளைங்க ஆரோக்கியத்த ஒடம்புல வைச்சிருந்த மீரா உண்மையாவே காட்டுல மாடு மாதிரிதான் உழைச்சாப்ல…… தள்ளி வைச்ச ஊர்க்காரனுங்க எப்படா ராசப்பன் வந்து கால்ல விழுவானு காத்திருக்க மீராவோ செல்லாயிங்கற தனி உலகத்துல வாழ்ந்தாப்ல…. நாளாக நாளாக ஊர்க்காரனுங்கதான் மீராக்கிட்ட பேச ஆரம்பிச்சானுங்க…..

காட்டு வேலைக்கு ஆள் கெடைக்காம கஷ்டப்பட்டப்பதான் மீரா முக்கியமான ஒரு முடிவை எடுத்தாப்ல. செல்லாயி குடும்பத்த கூட்டிக்கிட்டு வந்து காட்டுல நல்லதா மண் சொவரு வைச்சி புதுக்குடிசை கட்டி குடி வைச்சாரு…..

ஊருக்குள்ள ஒரே சலசலப்பு, கடுமையான எதிர்ப்பு…… மறுபடியும் பஞ்சாயத்துனு ஓலை வேற……

இந்த முறை தனியா பஞ்சாயத்துக்கு போன மீரா யாரையும் பேசவிடல, தான் பேசி முடிச்சதும் அங்க நிக்கவும் இல்ல….. மீரா பேசினது இதைத்தான்……

" ஊர விட்டு தள்ளி வைச்சவன பத்தி உங்களுக்கு என்ன கவலை வெங்காயம்லாம்?!
என் வூட்ல, நிலத்துல நான் என்ன வேணா பண்ணுவன். வேணும்னா போலீஸ்ல போய் கேஸ் குடுங்க! அவங்க வரட்டும் நான் சொல்லிக்கறன்……

உள்ளூர் கடையில நான் எந்த பொருளும் வாங்கறதில்ல…… டவுன்ல புல்லட்ல என் பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு போய் வாங்கிட்டு வரன்!

உள்ளூர் கெணத்துல தண்ணி எடுக்கறதில்ல,
என் வூட்டு கெணத்துல கெடக்கற தண்ணியே ஏழு ஊருக்கு போதும்!

உள்ளூர் கோயில்ல கும்பிடறனு நிக்கறதில்ல.
எனக்கு சாமி கும்புடற பழக்கமும் இல்ல,
எம் பொண்டாட்டி வந்து நின்னுர கூடாதேனு வூட்டு வாசல்லயே செலை வைச்சி குடுத்திருக்கேன்!

என் காட்டுல வெளையறத எதையும் இங்க விக்கறதில்லை,
வெளையறத டவுன்லதான் விக்கறன்!

இப்புடி உங்க சகவாச மசிரே வேணாம்னுதான் கொஞ்சம் கூட ஒட்டாம, எங்கிட்ட பேசறவங்கக்கிட்ட பேசறதோட நிறுத்திக்கிட்டு போய் தொலைங்கடானு போறன். மீறி சும்மா நசநசனு பைத்தியக்கார நாய்ங்க மாதிரி கொழச்சிங்கனா நேராபோய் கேஸ குடுத்து வக்காளி உள்ள தள்ளி கேஸூ கோர்ட்டுனு அலைய வுட்றுவன். மூடிக்கிட்டு இருந்திங்கனா நல்லது இல்லனா நாசம் பண்ணி முடிக்கற வரை ஓயமாட்டன் சொல்லிபுட்டன்"

மெதுவா ஆரம்பிச்ச மீரா கடைசியா உருண்ட நெஞ்சு திமிற சிங்கம் மாதிரி கர்ஜனை பண்ணிட்டு புல்லட்ட ஸ்டார்ட் பண்ணி கிளம்பி போய்ட்டாப்ல!

அதுக்கப்புறம் ஒரு பயலும் செல்லாயி குடும்பத்த பத்தி வாயத் தொறக்கல. ரெண்டு குடும்பமும் காட்ல உழைச்சாங்க வர இலாபத்துல செல்லாயி குடும்பத்துக்கு தேவைக்கு அதிகமாவே குடுத்தாரு மீரா…. மீராக்கிட்ட மட்டுமே பேசிக்கிட்டு பொழுத தாட்டுன செல்லாயிக்கு இப்ப தன் குடும்பம் கூட இருக்கறது பெரிய சந்தோசமா இருந்துச்சி!

குடும்ப வண்டி இயல்பா நல்லா வேகமா ஓட ஆரம்பிச்ச இந்த காலத்துல செல்லாயின் பேச்சு குடும்பத்துல முக்கியமான ஒன்னா மாறி இருந்துச்சி. மீராவுக்கு பொண்டாட்டிக்கிட்ட அதிகாரம் பண்ற பழக்கமோ, ஆசையோ வந்ததே இல்லை.

நாட்டுச்சாராயம் ஓவரா போறன்னைக்கு புல்லட்ட கொண்டாந்து ஊர் நடுவுல நிறுத்திக்கிட்டு பஞ்சாயத்து பேசறனு இருக்க சில ஆளுங்கள பேரச்சொல்லி சண்டைக்கு கூப்டறது மீராவோட பழக்கம். மீரா இப்புடி கூப்டறப்ப ஒரு பய வந்ததில்லை. இது மட்டும்தான் செல்லாயிக்கு மீராக்கிட்ட புடிக்காத ஒரே விசயம். அன்னைக்கு ராவு முழுசா செல்லாயி பேச மாட்டா, பக்கத்துல படுக்க மாட்டா….

ஆனா விடிஞ்சதும் செல்லாயி பாடற பாட்ட கேட்காம மீராவால தப்பிக்கவே முடியாது. தப்பிச்சாலும் வந்து மறுபடியும் சிக்கறப்ப பாட்ட கேட்டுத்தான் ஆகனும் மீரா….. இதாலயே மீரா தப்பிக்கறது இல்ல……. செல்லாயி திட்டுனாலும் மீரா வருத்தப்பட்டதில்லை. மீராவ பொறுத்தவரை பொண்டாட்டிங்கற எண்ணத்த விட அவ அவரோட காதலிங்கற எண்ணம்தான் மனசுக்குள்ள….

" மாடு மாதிரி ஒழைச்சும் மனுசி வார்த்தைக்கு இங்க எங்க மரியாதை இருக்கு"னு ஆரம்பிப்பா செல்லாயி……

" இப்ப என்னத்த உனக்கு மரியாதை இல்லாம போச்சுங்கறன் செல்லா"னு ஒன்னுமே தெரியாத மாதிரி பாவமா கேட்பாரு மீரா……

" நான்தான் சீவக்கட்ட ஆச்சே எனக்கெதுக்கு மரியாதை"

" அட பேசறதுதான் அதுக்குனு இப்புடியா பேசறது"

" அப்புறம் குடிச்சா வூட்டோட இருனு சொல்லி சலிச்சி போச்சி என்னைக்கு கேட்டிருக்க?!"

" முழுசா வூட்டோட மட்டும்தான செல்லாயி இந்த ஒரு வருசமா மனுசங்கக்கிட்ட பேசக்கூட வழியில்லாம வாயிருந்தும் ஆடு மாதிரி ரெண்டு பேரும் கெடக்கறோம்"னு மீரா உண்மையாவே வருத்தமா சொல்ல, செல்லாயி உடைஞ்சி போயிட்டா,

காத்து மாதிரி சுத்தி சந்தோசமா திரிஞ்ச மனுசன், நம்மள பாக்கபோயி இன்னைக்கு நாலு சொவத்துக்குள்ள வூடு, காடுனு கெடக்குதுனு செல்லாயி மனசுக்குள்ள மருவ ஆரம்பிச்சா……

" அதுக்கில்ல மீசைக்காரரே போதையில நிதானம் தப்பி இருக்கப்ப எதாவது நாலஞ்சி ஆளுங்க சேந்து கெட்டதா பண்ணி புட்டா என்னாகுங்கற பயம்தான் எனக்கு. வேற ஒன்னுமில்ல நீங்க போய் தண்ணிய மோந்து ஊத்திக்கிட்டு வாங்க சாப்ட்டு காட்டுக்கு போவிங்க"

" ம் என்னைக்கு இவனுவளாம் மனுச பயலுகளா மாறுவாங்கனுதான் தெரியல"னு சலிச்சப்படியே மீரா வழக்கமான வாழ்க்கைக்கு போயிடுவாப்ல….

செல்லாய கட்டிக்கிட்டு வந்த இந்த வருசத்துல இப்பதான் மொத திருவிழா வருது. திருவிழாவுக்கான  ஏற்பாட்டுக்க கூட்ற இந்தக் கூட்டம்தான் ஊருக்குள்ளவும், மீரா - செல்லாயி வாழ்க்கையிலயும் ஒரு மாற்றம் வர காரணமா இருந்திச்சி!

திருவிழா ஏற்பாட்டுக்கான கூட்டம் ஆணு, பொண்ணு, பெருசு, சிறுசுனு கூட ஆரம்பிச்சது அப்பதான் மீராவுக்கு அவங்கம்மா வழியில மாமன் முறையான பொன்னுச்சாமி மாற்றத்துக்கான வெதைய போட்டுவுட்டாரு…..

" இந்த கோயில் இருக்க நெலம் மட்டும் இல்லாம, வெளிய இருந்து சாதி சொந்தம்னு இந்த குறவன்பட்டிக்கு வந்தவங்க குடும்பங்களுக்கு தங்க எடத்த காம்பிச்சி, நெலத்த திருத்தி கழனியாக்க எடத்த காமிச்சவிங்க நம்ம ராசப்பனோட பூட்டனுங்கதான்.

இன்னைக்கு இங்க காடு, வூடுனு சுத்துபட்டுல இருக்க பலபேருக்கு அடையாளம் வைச்சது அவிங்கதான். இந்த வரலாறுலாம் ஆதியில இருந்து இந்த நெலத்துல இருக்க எங்களுக்கு நல்லா தெரியும்"னு பொன்னுச்சாமி சொல்ல வந்திருந்த கூட்டம் அமைதியா முணுமுணுக்க ஆரம்பிச்சது……

பஞ்சாயத்துல தீர்ப்பு சொல்றங்கற ஆளுங்கள்ல ஒருத்தன் " சரி இப்ப அதுக்கு என்னா வந்துச்சாம்"னு கேட்க பொன்னுச்சாமிக்கு சுர்னு ஏறிக்கிச்சி……

" என்ன எங்கையோ இருந்து வந்து சாதிய காட்டி ஒட்டிக்கிட்ட கூட்டத்துக்கு சவுண்ட்டு ஜாஸ்தியா வருது…… நீங்களாம் யாருயா எம் மருமவன ஊரவுட்டு தள்ளி வைக்கறது. வூட்ல பொட்ட புள்ளய கல்யாணம் பண்ணி குடுக்காம வைச்சிருக்கோமேனு பொறுத்து போனது தப்பா போச்சு. டேய் பாண்டியா போய் நான் கூப்டனு, இங்க நடந்தத சொல்லி ராசப்பன இழுத்தாடா"னு பொன்னுச்சாமி உறும, பூர்வீகக்காரங்க, வெளிய இருந்து வந்தவங்கனு ஊரு மனசளவுல ரெண்டா பிரிஞ்சி நின்னது……

போன பாண்டியன் செல்லாயிக்கிட்ட பேசிக்கிட்டு இருந்த ராசப்பன்கிட்ட விசயத்தை சொல்ல, ராசப்பன் வெரலு தான மீறுக்க ஆரம்பிச்சது….. கெளம்புன ராசப்பன பக்குவமா பேசிட்டு வர எச்சரிக்கை பண்ணி அனுப்பி வுட்டா செல்லாயி!

கூட்டம் நடக்கற இடத்தக்கு வந்த மீரா எதுவும் பேசாம அமைதியா நின்னாப்ல……

" சரி பொன்னுச்சாமி திருவிழாவ பத்தி நாளைக்கு பேசிக்கலாம் இப்ப ராசப்பன் பிரச்சினைய பேசி முடிப்போம்" னு பஞ்சாயத்து பெருசு சொல்ல பொன்னுச்சாமி பேச ஆரம்பிச்சார்…….

" நான் போன வாரத்திலயே எங்கவழி ரத்த சொந்தங்கிட்ட பேசிட்டுதான் இங்க வந்து பேசறன். ராசப்பன் ஒரே நேரத்துல அப்பன், அம்மானு பறிக்கொடுத்த பய, இப்ப ஊருக்குள்ளயும் இப்புடி தள்ளி வைக்கறது மனுசப் பொறப்புக்கு செய்ற துரோகம். அவன் மேல போட்ட தண்டனைய திரும்ப வாங்கிக்கனும் இல்லனா எங்க வழி சொந்தங்க நாங்க தனியா பொழங்கிக்கறோம். இதான் முடிவு யோசிச்சி சொல்லுங்க"னு பொன்னுச்சாமி சொல்ல, ஊருக்குள்ள மனுசனா ஒரு ஆளு இருக்கான்பானு சந்தோசமானாப்ல மீரா…….

கூட்டத்துல கசமுச கசமுனு பேசி கடைசியா ஒருத்தன் தீர்ப்பு சொல்ற சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் ரேன்ஞ்சுக்கு ஆரம்பிச்சான்…….

" நமக்கு நம்ம இரத்தம் ராசப்பன ஏத்துக்கறதில்ல எந்த பிரச்சினையும் இல்ல,
அவன் நல்லது கெட்டதுனு பொழங்கட்டும்,
ஆனா அவன் கட்டிக்கிட்ட புள்ளைய நல்லது கெட்டதுனு அனுமதிக்க முடியாது….
ராசப்பன் தனியா எதுக்கும் வந்து போய்கிட்டும்"

மறுபடியும் மனசொடிஞ்ச ராசப்பன் பேச ஆரம்பிச்சான்…… ஆனா இந்த முறை கோவத்துக்கு பதிலா அறிவா பேசினான். வாழ்க்கை கொஞ்சக் காலத்துல நிறைய கத்து குடுத்திருந்தது அவன் பேச்சுல தெரிஞ்சது

" எனக்கு இதுல துளியும் சம்மதம் கிடையாது. என் பொண்டாட்டிக்கு இல்லாத மரியாத எனக்கு தேவயில்ல,
நாங்க எங்க ரத்த வழி சொந்தங்களோடவே பொழங்கிக்கறோம்,
அதேமாதிரி கோயில் நெலம், கோயில் எங்க ரத்த வழி சொந்தங்களோடது அதனால இனிமே இந்த கோயில் சம்ந்தமான எதையும் நாங்கதான் பாப்போம்.
நாளைக்கு பொன்னுச்சாமி மாமன் தலைமையில திருவிழாவுக்கான கூட்டம் நடக்கும் விருப்பப்படறவங்க கலந்துக்கலாம்"னு பல உள்குத்துகள வைச்சி பேசி மீரா தீர்க்கமா பேசி முடிக்க…..

ஒருபக்கம் பொன்னுச்சாமிக்கு பெரும, மறுபக்கம் வெளிய இருந்து இங்க வந்த குடும்பங்களுக்கு ஊர்ல இருந்த உரிமை பறிபோவுதேனு பதட்டம்! மீரா வைச்சது பர்பெக்ட் செக் மேட்!

Episode 02                                              அடாவடி தொடரும்!
                                                                     Episode 04

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib