மெளனத்தை மொழிபெயர்த்த மாயோள் (தீபாஸ்)
வாசகர்களுக்கு வணக்கம் தொடர்ந்து கடந்த ஒரு சில மாதமாக பதிவுகளை தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்துகொள்ள இயலவில்லை. இன்னும் சில நாட்கள் வரை அதாவது இன்னும் ஒரு மாதகாலம் (ஜூன்2௦)இதே நிலைதான் நீடிக்கும் சூழல் உள்ளது. எனினும் கிடைக்கும் சில மணி நேரத்தை கதை களத்துடன் பயணிக்கலாம் என நினைக்கிறேன்.
அத்தியாயம் -௦2
இந்திரசித் தனது கருப்பு நிற ஆடிகாரில் வந்து இறங்கி உள்ளே நுழைந்தான். அவனின் தலை தென்பட்டதுமே அங்குள்ள அனைவரின் கவனமும் அவனை நோக்கியே திரும்பியது.
ஆறடி உயரத்தில் சந்தன நிற கட்டான உடல் கொண்டவன் அதனை எடுப்பாக பளீரென்று எடுத்துக்காட்டும் மைபுளூ கலர் கோர்ட் உடுத்தியிருந்தான். அது அவனின் தோற்றத்தை வசீகரமானதாக ஆக்கியிருந்தது.
பெண்களே பொறாமைகொள்ளும் அவனின் அழகிய தோற்றத்தில் அங்கு பணியில் இருக்கும் பெண்களின் கண்கள் காதலாகியது.
மேலும் எப்பொழுதும் அவனின் தோளில் தொற்றிக்கொண்டு வரும் மாடன் யுவதியை உடன் அழைத்துக்கொண்டு வராமல் தனித்து வந்திருந்தான்.
காரணம் இன்றைய ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை தடாகனின் மூலமும் தனது அப்பா தயாவளவனின் மூலமாகவும் அறிந்திருந்தான்.
அவர்களின் தொழிலில் பக்க பலமாகயிருக்கும் தடாகனுக்கு கணிசமான சம்பளத்தை கொடுத்து தன்னுடன் இருத்திவைத்திருந்தான் இந்திரன்.
தன்னுடைய இன்றைய பிட்டான தோற்றத்திற்கு தொழில் சாதனைகளுக்கும் காரணமான தடாகனை தனக்கு கீழே பணியின் அமர்த்தியிருந்தாலும் தனது ஆளுமையின் கீழே அவனை கொண்டுவர இயலவில்லை என்ற ஆதங்கம் இந்திரசித்துக்கு இருந்தது.
அவனின் எக்ஸ் காதலியான லத்திகா முதற்கொண்டு இந்திரனின் தோற்றத்திலும் செல்வச்செழிப்பிலும் ஈர்க்கப்பட்டு அவனுடன் சுற்றித்திரியும் பெண்களின் கண்கள் வரை ஏனோ தடாகணை கண்டதும் அவனின் மேல் மயக்கம் கொள்ளும்.
இத்தனைக்கும் அவன் அவர்களை ஈர்க்க தன்னைப்போல எந்த மெனக்கிடல்களும் செய்வதில்லை. தன்னைவிட இரண்டு இன்ச் கூடுதல் உயரத்திலும் மாநிறத்திலும் இருக்கும் அவனுக்கு, காமா சோமாவென எந்த உடை போட்டாலும் பொருத்தமாகவும் டிரண்டியாகவும் காட்டுவதன் மாயம் அவனுக்கு புரிவதே இல்லை.
மேலும் இரும்பை போன்ற உறுதியான தோற்றத்திலிருக்கும் தடாகனின் தசை நார்கள் அவனின் செயல்களுக்கு ஈசியாக வளைந்து கொடுக்கும் பாங்கு ஜிம்னாஸ்டிக் பயின்றவனோ என்றே எண்ண வைக்கும். மேலும் அவனின் எதிரில் உள்ளவர்களை பேச்சில் மெஸ்மரிசம் செய்யும் ஆற்றலும் அவனுக்கு இருந்து.
இந்த அடையாளங்கள் எல்லாம் தனிப்பட்ட முறையில் எந்த பேக்ரவுண்டும் இல்லாத நிலையிலும் அவனை ஒற்றை சிங்கத்தின் தோற்றத்தில் ஹீரோவாக அடையாளப்படுத்தியது.
இந்திரசித் கல்லூரி படிப்பு முடித்ததுமே அவனது குடும்பத் தொழிலை பொறுப்பு எடுக்க உள்நுழையும் போதே தடாகனை அவனின் சார்பாக அவனின் கீழிருந்து பொறுப்புகளை மேற்கொள்ள அழைத்துவந்தான்.
ஆரம்பக்காலத்தில் தொழிலின் நெளிவு சுளிவுகளை அவனுக்கு கற்றுகொடுக்க அவனது தாத்தா வாமனனும் தந்தை தயாவளவனும் உடன் இருந்தனர்.
இந்திரனைவிட தடாகன் படுவேகமாக தொழில்களை உள்வாங்குவதிலும் அதன் நெளிவு சுளிவுகளை கையாண்டதும் தொழிலின் செயல்பாடுகளுக்கான தடாகனின் ஆலோசனைகளும் பிரமிக்க வைப்பதாக இருந்ததால் தடாகன் இந்திரசித்தின் உடன் இருக்கிறான் அதனால் இந்திரசித் அவனது தொழிலை நல்லபடி கொண்டு போய்விடுவான் என்ற நம்பிகை வைத்தே முழு பொறுப்பையும் அவனியம் ஒப்படைத்தனர்.
அவர்கள் நினைத்ததுபோலவே அதன் பின் அவர்களின் தொழில் வளர்ச்சிப்பாதை மிக வேகமாக இருந்தது. வருட டேர்னோவர் இரண்டு மடங்காகப் பெருகியது கணிசமான அளவு லாபமும் தொழில் வட்டங்களில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக சி.வி.ஐ நிறுவனம் அடையாளப்படுத்தும் விதமாகவும் வளர்ச்சியிருந்தது.
இத்தனையையும் செய்தது தடாகன். இந்திரஜித் அவன் காட்டும் இடத்தில் கையெழுத்து மட்டுமே போடுவான். இன்னது செய்கிறேன் என்ற அறிவிப்பை மட்டுமே தடாகன் இந்திரசித்திடம் அறிவிப்பான்.
அங்கிருக்கும் அலுவலர்கள் இந்திரசித்தை கண்டாள் முதலாளி, அழகான இளைஞன், சுற்றிலும் பெண்கள் படைசூழ வாழ்கையை ஜாலியாக அனுபவிப்பவன் என்ற கண்ணோட்டத்திலேயே காண்பர்,
ஆனால் தடாகனின் தலையைக் கண்டால் வேலைபார்ப்பவர்களிடம் ஒரு டிசிப்பிளினும் தாங்கள் செய்யும் பணியில் கூடுதல் கவனமும் கொடுக்க ஆரம்பித்துவிடுவர். அவனின் மேல் மரியாதையும் பயமும் கொண்டிருந்தனர்.
தொழில் நல்ல வளர்ச்சிப் பாதையில் போனாலும் இதெற்கெல்லாம் காரணமாக இருக்க வேண்டிய இந்திரனின் பங்கு அதில் சொற்பமே எனப் புரிந்து அவனை தந்தை தயா கண்டிக்க ஆரம்பித்தார்.
“தடாகன் நல்லாத்தான் பிஸ்னசை பார்த்துகுறான். அதுக்காக நீ முழுசையும் அவன் பொறுப்பில் விட்டு ஊர் சுத்திக்கிட்டு இருக்கிறது நல்லதில்லை! ஒழுங்கா கம்பெனியில் அவன் கூட உட்கார்.
எதோ காரணத்துக்காக தடாகன் கம்பெனியைவிட்டு வெளியில் போனாலோ அல்லது நாம வெளியேத்தணும்னு நினைச்சாலோ அதன் பின் பொறுப்புகளை அவனைப்போலவே சரியா கையாள உனக்கு தெரியணும். அதற்கு நீ பழகணும்.
அவனும் உன் வயசு தானே!! உன்கூட ஒன்னாத்தானே படிச்சான். அவனுக்கிருக்கிற ஸ்மார்ட்டும் அறிவும் உனக்கு ஏன்டா இல்லாமப்போச்சு?” என்று அடிக்கடி திட்ட ஆரம்பித்தார்கள் இந்திரனின் அப்பாவும் தாத்தாவும்..
எனவே தனக்கும் தொழில் தெரியும் எனக்காண்பிக்க நினைத்து தடாகனின் நிர்வாகத்தில் மூக்கை நுழைத்து தனது எண்ணங்களை அவனுக்கு எதிராக செயல்படுத்தினான்.
தடாகன் இந்திரன் உள்ளே வந்து தனது பணியில் இடையூறுகள் செய்ய ஆரம்பித்ததுக்கு எந்த ஆட்சேபனையும் செய்யவில்லை. “உன்னோட தொழில் உன்னோட விருப்பம். நீ நினைச்சதை பண்ணலாம் பாஸ்...!” எனச் சொல்லிவிட்டான்.
அதேபோல அவன் வீம்புக்கு செய்கிறான் தான் சிங்கம் போல உலாவிய அவனது இடத்தில் தன்னை சிறுநரியாக்க பார்க்கிறான் எனப்புரிந்து முழுவதையும் அப்படியே போட்டுவிட்டு ஒருவாரம் கண்காணாமல் போய்விட்டான்.
‘நீ போனால் என்ன? என்னால் நடத்தமுடியாதா? என்று வீம்புக்கு தான் சொன்னதையே செயல்படுத்தியதன் காரணமாக பெரும் சரிவை நிறுவனம் சந்திக்கும் சூழலுக்கு ஆளானது.
அந்த நேரம்தான் பெரியவர் வாமனனுக்கு ஸ்டோக் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். சூழல் கைமீறி போவதை தடுக்க முடியாத தயா இந்திரனிடம் “உடனே தடாகனை தேடிக் கூட்டிக்கொண்டுவா...!! அவனால்தான் இப்போ இருக்கிற சூழலில் நம்ம பிஸ்னசை காப்பாற்ற முடியும்” என உத்தரவு போட்டார்.
தடாகனுக்கு யாருமே இல்லை அவனது மாமா மட்டுமே சொந்தம் அவர் தான் அவனை படிக்க வைத்தார் என சொல்லியிருந்தான்.
நண்பர்கள் யாருக்கும் அவன் எங்கே போயிருப்பான் எனத் தெரியவில்லை. தடாகனின் தன்னுடைய தனிப்பட்ட விஷயங்களை யாருடனும் பகிர்ந்துகொண்டதில்லை எனவே எங்குபோய் அவனை தேட என யோசித்துகொண்டிருந்த வேளையில் இருவரை பற்றிய நினைவு வந்தது.
இந்திரன் கல்லூரியில் கடைசி வருடப் படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது தடாகனின் மாமாக்கு தெரிந்த பையன்கள் அவர்களின் கல்லூரியிலேயே வந்து சேர்ந்திருந்தனர்.
அவர்கள் தடாகனை கல்லூரி வளாகத்தில் தனிமையில் வந்து சந்திப்பதையும் அவர்களுக்கு புத்தகங்கள் தடாகன் வாங்கி கொடுப்பதையும் இந்திரன் பார்த்திருக்கிறான்.
அவர்களை பிடித்தால் தடாகனை பிடித்துவிடலாம் என கல்லூரியில் தற்போது இறுதி ஆண்டு படிக்கும் அந்த பையன்களை சந்தித்து தடாகனை பற்றி விசாரித்தான். “எங்கே தடாகனை பார்க்கலாம்? அவசரமாக அவனை பார்ததேயாக வேண்டும்” எனச் சொன்னான்.
அவன் அவ்வாறு சொன்னதும் “மெயில் பண்ணி பார்த்தீங்களா அண்ணா? நீங்க மெயில் அனுப்பினா உடனே ரெஸ்பான்ஸ் இருக்கும். உங்களை வந்து பார்க்க முடியும் முடியாதுன்னு உடனே அண்ணன் ரிப்ளை பண்ணிடுவாங்க: என்றார்கள் அந்த மாணவர்கள்.
இந்திரன் அவன் மொபைலுக்கு பலதடவை முயன்றான் ஆனால் அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது, மற்ற சோசியல் மீடியாக்கள் எதிலும் கடந்த ஒருவாரமாக அவன் பயண்பாடு இல்லை. எனவே அதில் முயன்று வேஸ்ட் என எண்ணி விட்டுவிட்டான். இவர்கள் சொன்னபிறகே
“நான் அவனுக்கு மெயில் மட்டும்தான் பண்ணலை. அதையும் இப்போவே டிரை பண்ணி பார்க்கிறேன்” எனச் சொல்லி அவனது ஐபோனிலேயே தடாகனுக்கு தன் சூழலை விவரித்து தனக்கு அவனின் உதவி தேவைப்படுவதாக தெரிவித்தான்.
பத்து நிமிடத்திலேயே பதில் வந்தது. ‘விடியும் முன் நான் அங்க வந்து நிற்பேன், நீ எதற்கும் கவலைப்படாதே நான் வந்து எல்லாம் சரி செய்கிறேன்’ என்ற பதில் அனுப்பினான் தடாகன்.
சொன்னது போலவே விடிந்தும் விடியாததுமாக அவனின் முன் வந்து நின்றான் நிர்வாகத்தின் குளறுபடிகளை சரி செய்யும் வேலைகளில் இறங்கியவன் பம்பரமாக செயல்பட்டு கடைசி நிமிடத்தில் பெரும் நட்டம் நடக்காமல் தடுத்து நிறுத்தினான்.
இந்திரனின் தந்தை தயாவளவனை சந்தித்து பெரியவருக்கு எதுவும் ஆகாது அவர் வாரியர், போராடி மீண்டு வந்துவிடுவார் என்றும் ஆறுதல் சொன்னான்.
அந் நிகழ்வுக்கு பின்னால் தடாகனிடம் மிகவும் நம்பிக்கையும் மறியாதையும் தயாவளவனுக்கு வந்திருந்தது.
அதன்பின் தொழில் பற்றிய விஷயங்களை தயாவளவன் தனது மகனிடம் கேட்டு அறிவதைவிட தடாகனிடமே கேட்டு தெரிந்துகொள்ளவும் கலந்து ஆலோசிக்கவும் ஆரம்பித்துவிட்டார்.
தொழிலின் முடிவுகள் அனைத்தையும் எடுத்தப்பின் வெறும் கையெழுத்து போட மட்டுமே இந்திரனை அவர்கள் அழைத்தார்கள். முழுக்க முழுக்க நிர்வாகம் முழுவதும் தடாகனின் வசமே இருக்குமாறு தயாவளவன் பார்த்துக்கொண்டார்.
இந்திரனுக்கோ தன்னை உப்புக்கு சப்பாணியாக தனது இடத்திலேயே மாற்றிவைத்த தனது நண்பனின் மேல் மனதிற்குள் இப்பொழுது வனமமும் கூடியிருந்தது.
அதற்கு மற்றொரு காரணம் லத்திகா. கல்லூரியில் அவளின் கவனம் ஈர்க்கவே இந்திரசித் தடாகனுக்கு இடையே பேச்சுவார்த்தை ஆரம்பமாகி இருவருக்குள்ளும் நட்பு என்ற போர்வையில் எழுதபடாத சில அட்ஜஸ்ட்மென்ட் உருவாகியிருந்தது.
அதாவது பணக்கார சொசைட்டி மக்களுடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள தடாகன் இந்திரசித்தை பயன்படுத்திகொண்டான். ஹய் சொசைட்டி மக்கள் கூடும் கிளப், டிஸ்கோத்தே, பிஸ்னெஸ் பார்ட்டி முதலியவற்றில் இந்திரசித்தின் பின்னால் அவனின் நண்பன் என்ற முறையில் கூட செல்ல ஆரம்பித்த தடாகன் அதன் பின் அங்கு தென்படும் பெரும் தலைகளை தனது பேச்சின் மூலம் இம்ப்ரஸ் செய்து நெருங்கி பழக ஆரம்பித்தான்.
அதன்பின் தடாகனை கொண்டு இந்திரசித்தை அடையாளம் கண்டுகொள்ளும் அளவில் அவர்களுடன் சகஜமாக பழகியிருந்தான்.
தடாகன் சாதாரண நிலையில் கால்பதிக்கும் இடங்களில் கூட அங்குள்ளவர்களிடம் அவனின் பேச்சு, உடல்வலிமை, அறிவுச்செருக்கு மெஸ்மரிசமான பேச்சு ஆகியவை மூலம் ஹீரோ இமேஜ் கொண்டவனாக உருமாறி இருப்பான்.
லத்திகாவுக்கு கல்லூரியில் படிக்கும் போதே முதலில் தடாகனின் மீது தான் நோக்கம் இருந்தது. தடாகனின் பாராமுகத்தை கண்டு கடுப்பாகியே அவனை வெறுப்பேத்த இந்திரசித்துடன் பழக ஆரம்பித்தாள்.
ஆரம்ப காலக்கட்டத்தில் இந்திரனின் இலக்கு லத்திகாவாக மட்டுமே இருந்தது. அதேபோல தடாகன் அவனுடன் சேர்ந்து வொர்கவுட் மற்றும் மாதம் ஒருமுறை டிரக்கிங் சாப்பாட்டு முறைமைகள் முதலியவற்றை நெறிப்படுத்த பாடி பிட்டிங் கமிட்மென்ட் ஆகியிருந்தான்.
இந்திரன் ஆரம்பத்தில் உடல்வருத்துவதில் மிரண்டு முடியவில்லை விட்டுவிடு என்று கெஞ்சியும் இழுத்துக்கொண்டுபோய் அவனை பழகிவிட்டதால் அவனின் உடல் திரள ஆரம்பித்தது.
அதுமட்டுமில்லை ஆரம்பத்தில் தடாகனுடன் இந்திரன் இரண்டுநாட்கள் வெளியே போக ஆரம்பித்ததை கவனித்த சுதா மூன்றாம் நாள் மகனை அழைத்துபோக வந்த தடாகனை உள் அழைத்து 'எங்கு போகிறீர்கள்' என்று விசாரித்தார்.
தனது நண்பனை தன்னை போல கட்டான ஜிம்பாடியாக்க டிரைனிங் கொடுக்க கூட்டிக்கொண்டு போகிறேன் என்று சொல்லிய தடாகன் அவரிடம் இந்திரனின் டயட்டில் செய்ய வேண்டிய மாற்றத்தையும் கூறினான்.
தடாகனை பார்த்ததும் அவனின் தோற்றமும் பாடிலாங்குவேஜ் மற்றும் அவனின் பேச்சில் ஈர்க்கப்பட்டு தான் ஆசைப்பட்டது போல் தனது மகனை சரி செய்ய இது நல்ல நல்ல சந்தர்பம் என்ற எண்ணமும் தடாகனின் மேல் உண்டான நம்பிக்கையாலும் அவனுடன் சேர்ந்து ஒத்துழைக்க ஆரம்பித்தார் அதன் முடிவு சில மாதங்களிலேயே இந்திரனிடம் தென்பட்டதால் மகிழ்வும் கொண்டார்.
லத்திகாவும் இந்திரனின் மாற்றத்தை கவனித்தால் என்னதான் தடாகனை வெறுப்பேத்த என்று இந்திரனுடன் பழகினாலும் தனக்காக மெனக்கெட்டு கடுமையாக முனைந்து எடை குறைத்து கட்டான உடலுக்கு சொந்தகாரனாக மாறியவனின் மேல் சிம்பத்தியில் காதல் பிறந்தது.
இருவரும் காதல் புறாக்களாக இந்திரசித் ஆசைப்பட்டதுபோல கைகோர்த்து திரிந்தனர். அவனின் இந்த மாற்றம் பலரின் கவனத்தை கவர்ந்தது குறிப்பாக அவன் ஆசைப்பட்டது போல பெண்களின் கவனமும் அவனிடம் திரும்பியது.
லத்திகாவுடன் காதலில் இருந்த இந்திரசித் அவனை நோக்கி விட்டில் பூச்சியாக வந்து விழும் மற்ற பெண்களை திரை மறைவாக டிஸ்கோத்தே பப் போன்ற இடங்களில் சந்தித்து சல்லாபிக்க ஆரம்பித்தான்.
அவனை மற்ற பெண்களுடன் பார்க்கும் லத்திகாவின் தோழிகள் அவளிடம் போட்டுகொடுத்தனர் அவனிடம் கேள்விகேட்ட லத்திகாவை “அதெல்லாம் ஜஸ்ட் டைம் பாஸ்க்கு” என்று சொன்னதில் அருவருப்பு கொண்டாள்.
எனவே அவனையும் தடாகனையும் ஒப்பிட்டு பெண்கள் விஷயத்தில் கண்ணியமாக இருக்கும தடாகனே பெஸ்ட். அவனைத்தான் நான் லவ் பண்ணினேன் இடையில் புகுந்து சிம்பத்தி கிரியேட் பண்ணி உன்னோட வலையில் என்னை விழ வச்சிட்ட, என்று குற்றம் சுமத்தி அவனை விட்டு விலகி விட்டாள்.
அதனால் இந்திரனுக்கு சுயம் சுட்டது. அவள் அவனை விட்டு விலகியது அதுவும் தன்னை கீழாக தடாகனை மேலாகச்சொல்லி விலகியது அவமானமாக ஆகியது. அந்த வருத்தத்தை மறக்க மறைக்க குடியையும் பெண்களையும் அனுபவிக்க ஆரம்பித்தான்.
நிறையமுறை தடாகனையும் அந்த வட்டத்துக்குள் இழுக்க முயன்றான். ஆனால் தடாகன் மது மாது இரண்டிலும் கட்டுப்பாடாக இருந்தான் பெண்களுடன் மரியாதையாகவும் அதேநேரம் கரிசனமாகவும் நடந்துகொள்வானே தவிர தவறான நோக்குடன் எந்த பெண்ணையும் இதுவரை அவன் திரும்பியும் பார்த்ததில்லை.
அவனின் எக்ஸ் காதலி லத்திகா காரணமாக தடாகனின் மேல் சற்று கான்டாக இருந்த இந்திரன் தனது குடும்பத்தொழிலில் தான் முடிவெடுக்க முடியாமல் டம்மியாக மாற்றப்பட்டு வெறும் ரப்பர் ஸ்டாம்பாக மாறியதற்கான காண்டும் தடாகனின் மீது வந்திருந்தது.
இருந்தாலும் நிர்வாகத்தை கையில் எடுத்து அதன் அழுத்தத்தை வாங்கிகொள்ளவும் மற்ற தனது சுகபோக வாழ்க்கையை துறக்கவும் மனதில்லாததால் அடக்கியே வாசித்தான். சம்பளத்துக்குத்தானே வேலை பார்க்கிறான் எனக்கு கீழத்தான் அவனென்று அவனுக்கு அவனே சமாதானபடுத்திக்கொண்டான்.
இந்த நிலையில்தான் நேற்று டைனிங் டேபிளில் சாப்பிடும் நேரம் இன்று நடக்கவிருக்கும் ஒப்பந்தத்தை பற்றியும் அதன் சாரம்சத்தை பற்றியும் அவனின் தந்தை தயாவளவன் இந்திரனிடம் சற்று விரிவாக சொன்னார்.
அத்தோடு நிற்காமல் “கொஞ்சம் தடாகனிடம் தொழிலை கத்துக்கோ இந்திரன், எத்தனை நாளைக்குத்தான் இப்படி வெட்டியா சுத்திகிட்டு இருக்கப்போற?”. ஒரு நாள் பிஸ்னசை ஒட்டுமொத்தமா நீயேதான் பார்கனும்ற நிலைமை வந்தா என்ன செய்யப்போறயோ?
பரம்பரை பரம்பரையா வளர்த்து நமக்குன்னு உருவாகியிருக்கிற அடையாளத்தை நம்மையெல்லாம் நாலுவேளை பசியாற வைக்கிற தொழிலை நம் அந்தஸ்த்து கெளரவத்துக்கான அடையாளத்தை தொலைச்சிடாதடா” எனச் சொல்லியிருந்தார்.
இதோ இன்றுகூட எஸ்.எம்.ஜி மருத்துவமனை தனக்கு சொந்தமான பிரமாண்டமான மருத்துவமனைக்கான கட்டிடத்தை பல ஏக்கர் நிலபரப்பில் அமைத்துத்தர அவர்களின் சி.வி.ஐ நிறுவனத்தில் ஒன்றான ஸ்கை டவர் பில்டர்சிடம் ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் கோடிகளில் கம்பெனிக்கு லாபம் கிடைப்பதோடு இவர்களின் தொழிலில் அடுத்தபடி முன்னேற முக்கிய காரணியாகவும் இந்த பிராஜெக்ட் அமையும் என்பதால் எப்படியாவது இந்த ஒப்பந்தத்தை நல்லபடி முடித்துவிடவேண்டும் என நிர்வாகம் எண்ணியது.
தமிழகத்திலேயே மிகப்பிரமாண்டமான கட்டிடமாக இந்த மருத்துவமனை கட்டப்படும். இந்த மருத்துவமனை கட்டியபின் தமிழகத்தின் அடையாலமாக இந்த கட்டிடம் விளங்கவேண்டும் என்ற நிபந்தனை முன்கூட்டியே இவர்களிடம் வைக்கப்பட்டிருந்தது.
இதை கட்டித்தருவதால் உலக அளவில் இவர்களின் கட்டுமானத்தொழிலின் மதிப்பு அதிகரிக்கும். போன்றவிஷயங்களை தடாகன் மூலமும் கேட்டு தெரிந்துகொண்ட இந்திரன் அந்த ஒப்பந்தத்தில் தான் கையெழுத்து போடவேண்டியத்தின் அவசியத்தை உணர்ந்து அந்த பிரமாண்டமான நான்கு அடுக்கு அலுவலகத்துக்குள் நுழைந்தான்.
இவ்வாறாக இந்திரன் வருவதற்கு சற்றுமுன்பு முக்கிய அலுவலர்களுடன் கலந்து பேசிய தடாகன் செய்யவேண்டிய பணிகள் அதற்கான திட்டங்கள் எந்தெந்த துறைக்கு யார் யார் இன்ஜார்ச் எவ்வளவு பணம் ஒதுக்கப்படும் என்பதை எல்லாம் சொல்லி துறைவாரியாக திட்டங்களை விவரித்து தனித்தனியாக ரிப்போர்ட் ரெடிசெய்யச் சொல்லியவன் மதியம் மூன்றுமணிக்கு மீட்டிங்கில் ஒவ்வொருவருவராக எக்ஸ்பிளைன் செய்து சப்மிட் செய்யவேண்டும் என்று சொல்லி விடைகொடுத்தான்.
எல்லோரையும் வெளியேறச்சொல்லிய தடாகன் அந்திகையை மட்டும் தன்னுடன் தனது கேபினுக்கு வரச்சொல்லி சென்றான்.
அவனை தொடர்ந்து சென்ற அந்திகையிடம் இந்த புராஜெட் செய்துமுடிக்க தேவையான தோராயச் செலவினங்களை அவன் சொல்ல டிக்டேட் எடுக்கச் சொன்னவன் சொற்ப விகிதத்திலேயே லாபத்தை சேர்த்து ப்ராஜெக்ட் பைனல் அமவுன்ட் சார்ட் ரெடி செய்யச் சொன்னான்.
----தொடரும்---

No comments:
Post a Comment