anti - piracy

Post Page Advertisement [Top]

                           மெளனத்தை மொழிபெயர்த்த மாயோள் (தீபாஸ்)

                                                     

                                 

WhatsApp%20Image%202022-04-13%20at%2010.07.53%20PM

அத்தியாயம் ௦4 

ஓட்டமும் நடையுமாக தடாகனை நெருங்கிய நேரம் அவளின் மொபைல் சத்தமெழுப்பியது அனிச்சையாக கைகள் மொபைலை எடுத்து டிஸ்பிளேயை பார்த்தபோது சுதா அத்தையிடமிருந்து அழைப்பு வந்திருந்தது..

மனதினுள் ‘காண்ட்ராக்ட் கைநழுவி போனது அத்தைக்கு தெரிஞ்சிருச்சோ? விசாரிக்க கூப்பிடுறாங்களோ...? என்ற பயத்துடன் அழைப்பை ஏற்றவளிடம்.

“அந்திகா உடனே கிளம்பி வீட்டுக்கு வா, மாமா கொஞ்சம் டென்சனா  உனக்காக காத்துகிட்டு இருக்கார்” என்றதும்.

“இதோ கிளம்பிட்டேன்த்த, நேரா வீட்டுக்கு வந்துடுறேன்” எனச்சொல்லி மொபைலை வைத்தாள்.

அவள் அத்தை என மொபைலில் பேச ஆரம்பித்ததுமே அவளை நோக்கி திரும்பி நின்றவன் அவள் பேசி முடித்த மறு நொடி.

அவளிடம் விஷமமாக தம்சப் விரல் காட்டி சிரித்தபடி “ஆல் தி பெஸ்ட்” என சொல்லி வெற்றிச் சிரிப்புடன் வாசலில் அவனுக்காக காத்திருந்த காரில் ஏறி அகன்று விட்டான்.

வெளியேற்றாத கோபம், தன்னால் நிறைவேறாத கம்பெனி ஒப்பந்தத்தின் பொருட்டு எதிர்கொள்ளபோகும் கேள்வியென எல்லாம் சேர்ந்து தடாகனின் மேல் அத்தனை ஆத்திரம் உண்டானது. எல்லாம் இவனால் தான் எனத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

அத்தானின் வீக்னசை பயன்படுத்திக்கிட்டு கம்பெனி நிர்வாகத்தை கைக்குள்ள போட்டுக்கிட்டு ஆட்டம்போடுற இவனை அடையாளம் காட்டிக்கொடுக்க நான் டிரை பண்றேன்னு என்னைய மாட்டிவிடப் பார்க்கிறான்.

இன்னைக்கு லிப்டுக்குள் என்கிட்ட இவன் நடந்துகிட்டதையும், பேசுனதையும் அத்தைகிட்டையும் மாமாகிட்டையும் சொல்லி இவன் முகத்திரையை கிழிச்சு கம்பெனியை விட்டு துரத்தணும்.

என்கிட்டயே இப்படி தப்பா பேசுரவன் சாதாரன ஸ்டாப்ஸ் மாட்டுனா என்னலாம் பண்ணுவான். பொறுக்கி... பொறுக்கி... கிரிமினல்! என்று அவனை சகட்டுவாக்கில் அர்ச்சனை செய்துகொண்டே ஸ்கூட்டியில் இந்திரசித்தின் பங்களாவை அடைந்தாள்.

யாரும் எளிதாக அந்த பங்களாவினுள் நுழைய முடியாது. செக்யூரிட்டீ தடை செய்யாமல் உள்ளே விடும் ஒரு சிலரில் அவளும் அடக்கம்.

கேட் திறந்ததும் உள்ளே நுழைந்தவள் அங்கு இவளுக்கு முன் கிளம்பிய தடாகனின் கார் இருப்பதை கண்டதும், ஐயய்யோ இவனையும் வச்சுகிட்டா என்னைய பேச வரவச்சாங்க?

அவன் அங்கு இருப்பதை நினைத்து முதலில் அதிர்ந்தவள் நான் எதுக்கு இவனை பார்த்து பயப்படணும்? அவனுக்கே பயமில்ல, கம்பெனிக்கும் அத்தை வீட்டுக்கும் விசுவாசமா இருக்கிற நான் எதுக்கு பயப்படணும்?

என்று எண்ணியபடி ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு பங்களாவின் முகப்பில் நுழைந்ததும் அவள் எப்போதடா வருவாளென்று காத்திருந்த சுதா அவளை எதிர்கொண்டு

“என்ன குளறுபடி செய்திருக்க அந்தி? உன்னால முக்கியமான காண்ட்ராக்ட் கைநழுவி போயிடுச்சுன்னு சொல்லி அவர் உன் மேல கோபமா இருக்கார்..!” என்றதும்.

“ப்ராஜெக்டுக்கு ஆகும் செலவோட இதுக்கு கோட் செய்திருந்த அமவுண்டை கம்பேர் பண்ணி பார்த்ததில் நமக்கு லாபமே இல்லாம இருந்தது அதைத்தான் அத்தான்கிட்ட சொன்னேன்த்த.

மிஸ்டர் தடாகன் அதற்கான விளக்கத்தை அத்தான்கிட்ட முன்னமே தெளிவா சொல்லியிருந்தா கோட் செய்த லாபத்துக்கான பேர்சண்டேஜை அத்தான் மாத்தியிருக்க மாட்டார் அத்தை” என்றதும்.

“ஏய் அந்தி, உனக்கு தடாகன் பத்தி சரியா தெரியலை. அவன் ஒன்னு செய்தா அது சரியாத்தான் இருக்கும். மாமாகிட்ட எதையாவது சொல்லி சமாதானப்படுத்து போ...போ.... ஆபீஸ் ரூம்ல உனக்காக காத்துக்கிட்டிருக்கார்“

எனச் சொல்லி பங்களாவின் முகப்பில் இருந்த அந்த விசாலமான பெரிய திண்ணையின் வலது பக்கமிருந்த வாசலை சுட்டிக் காட்டினார்.

 

தொழில் நிமித்தமாகவீட்டிற்கு வரும் ஆட்களை அந்த அறையில்  அமரவைத்து பேசுவார் தயா.

தயங்கித் தயங்கி கதவை திறந்து உள்ளே அவள் செல்லும் போது தடாகனின் குரலே அவள் காதில் மோதியது.

உள்ளே நுழைந்தவள் காதில் தடாகனின் வார்த்தை மோதி “அடேய்....” என்று அதிர்ச்சியடைய வைத்தது.

“சார், நான் ஜஸ்ட் இந்திரசித் பிரண்டு தானே. ஆனா அந்திகா உங்க பேமிலி ரிலேடிவ் அப்படியிருக்க கம்பெனியில எனக்கு அவங்களை விட அதிகம் முக்கியத்துவம் இருப்பது அவங்களுக்கு பிரஸ்டீஜ் இஸ்யூவாயிருக்கு.

அவங்களுக்கு நான் அங்க வொர்க் பண்றது பிடிக்கலையாம். என்னைய வெளியேற்ற அவங்கட்ட நான் மிஸ்பிஹேவ் பண்றதா உங்க கிட்ட கம்ப்ளைன்ட் கொடுக்கவும் தயங்க மாட்டாங்களாம்” என்றான்.

அவன் அவ்வாறு சொன்னதும். இந்திரசித்தே ‘சேச்சே உன்னைப்போய் அப்படி யாராவது சொல்லுவாங்களா? அப்படிச் சொன்னா இத்தனை வருஷம் உன் கூட பழகின நான் நம்புவேனா?” என்று சொல்லவும்

அந்திகா மனதினுள் நான் இவனை போட்டு கொடுக்கப்போறேன்னு தெரிஞ்சிகிட்டு முந்திக்கிட்டான். இனி இவனைப்பத்தி நான் என்ன சொன்னாலும் எடுபடாது என்ற உண்மையை புரிந்ததும் ‘ஹய்யோ..’ என்றானது.

அவள் உள் நுழைவதை ஏறிட்டவர் “அந்திகா..., நீ இப்போதான் நம் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருக்க. ஆனா தடாகன் எப்பவோ  கம்பெனியில் ஜாய்ன்பண்ணி இக்கட்டான நேரமெல்லாம் சரியான முடிவெடுத்து கம்பெனியயை காப்பாத்தியிருக்கார்ன்ற விஷயம் உனக்குத் தெரியாது” என்றதும்.

“மாமா மிஸ்டர் தடாகன் வொர்க் பண்றதில் எனக்கு பிடிக்காம போறதுக்கு எங்களுக்கிடையில் எந்த பிரச்சனையும் இல்லை.

எஸ்.எம்.ஜி மருத்துவமனை கட்ட நாம போட்ட பட்ஜெட்டும் அதை செய்து முடிச்சு கொடுக்க அவர் கோட் பண்ணிய அமவுண்டயும் கம்பெர்பண்ணி பார்த்தேன் லாபமே இல்லாம இருந்தது . அதைத்தான் அத்தான்கிட்ட சொன்னேன்.

மிஸ்டர் தடாகன் கொட்டேசன் ரெடி பண்றதுக்கு முன்னாடி கோட் பண்ணுற அமவுண்ட் பற்றியும் அதற்கு நாம ஸ்பென்பண்ற தொகைபற்றியும். அதில் உள்ள டுவிஸ்ட் எல்லாத்தையும் இன்பார்ம் பண்ணியிருந்தா இந்த குளறுபடி வந்திருக்க வாய்ப்பில்லை தானே?” என்றாள்.

“என்கிட்ட தடாகன் மீட்டிங் ஆரம்பிப்பதுக்கு ஒரு மணிநேரம் இருக்கும்போது ரிப்போர்ட் அனுப்பிட்டார் அந்திகா. “அதில் எஸ்.எம்.ஜி சைன் பண்ற அக்ரீமென்டில் பில்டிங்கன்ஸ்ரக்சனுக்கு தேவையான எல்லா ராமெட்டீரியலும் நம்மளோட கம்பெனி தயாரிப்புகளையே யூஸ் பண்றதா மென்சன் பண்ணியிருக்கிறதா சொல்லியிருக்கார்.

மேலோட்டமா பார்த்தா லாபம் இல்லாதது போலத்தான் தெரியும் ஆனா இந்த பில்டிங் சப்ளைபண்ற ஒவ்வொரு பொருளுலேயும் அதற்கான கணிசமான லாபம் நமக்கு கிடைக்கும்.

கன்ஸ்ரைக்சன்ல கிடைக்கும் லாபம் கம்மியா இருந்தாலும் மத்ததில் கிடைக்கும் லாபம் அதை ஈடுகட்டிரும். வெளி இடத்தில் கட்டுமானத்துக்கு தேவையான பொருட்களை எடுத்து இந்த ரேட்டில் பண்ணிக்கொடுத்தால் தான் நமக்கு பிரச்சனை ஆனா நம்மகிட்ட இருக்கிற மூலப்பொருள் வச்சு கட்டி கொடுத்தா கனிசமா லாபம் பார்க்கலாம்றதை தெளிவா மென்சன் பண்ணியிருந்தார்” என்றார் தயா.

அவர் சொன்னதுமே அந்திகைக்கு பொறிதட்டிவிட்டது. தன்னை வைத்து மீட்டிங்கை அரேஜ் செய்துகொள்ளும்படி அத்தான்கிட்ட சொல்லிட்டு வெளியில் போய் நல்ல பிள்ளையா இவருக்கு டீடைல்ஸ் அனுப்பியிருக்கான்.

காண்ட்ராக்ட் கேன்சலானால் அதை பற்றி இதுபோல கேள்வி வரும்போது தப்பித்துகொள்ள எல்லாம் செய்திருக்கான் இந்த வளர்ந்தவன். ஆத்தாடி எம்புட்டு கிரிமினலா மூளைக்காரனா இருக்கான். இவன்கிட்ட ஜாக்கிரதையா தான் இருக்கணுமென எண்ணிக்கொண்டாள்.

தயாவோ மேலும் தடாகனிடம் “நான் அந்திகைட்ட சொல்லி வைக்கிறேன் . இனி கம்பெனியில உன்னோட டெசிசனுக்கு மறுவார்த்தை பேசாம அவள் கோவாப்ரேட் பண்ணுவாள்” என்றவர்.

“சொந்த பந்தமெல்லாம் வீட்டோட நிறுத்திக்கணும் அந்தி. கம்பெனியில் நீயும் மத்தவங்களைப்போல ஒரு சாதாரன ஸ்டாப்ஸ்ன்ற எண்ணத்தோட ஆபீஸ் போகமுடிஞ்சா போ.

இல்லாட்டி நீயே வேலையை ரிசைன் பண்ணிட்டு போயிடு. உன் மேல நானா ஆக்சனெடுத்தா சுதாவுக்கு பிடிக்காது.

எனக்கு உன்னைவிட தடாகன்தான் முக்கியம் அவரோட டெடிகேசன்ல தான் கம்பெனி இந்த அளவு வளர்ந்திருக்கு. நீ போலாம்” எனச் சொல்லிவிட்டார்.

அவர் அவ்வாறு சொன்னதும் அவளுக்கு முள்மேல் நிற்பதுபோல ஆகிவிட்டது. வந்தவளை உட்காரக்கூட சொல்லாமல் அவர்கள் மூவரும் உட்கார்ந்திருக்க தன்னை நிற்கவைத்து எச்சரித்து வெளியேற்றியது அவமானமாக இருந்தது.

இவள் வாசல்நோக்கி செல்லும்போது “டோன்ட்வொரி சார், எஸ்.எம்.ஜி  இன்னும் வேற யார்கூடயும் அக்ரீமென்ட் சைன் பண்ணலை. நான் பாலோ பண்ணிகிட்டுதான் இருக்கேன். எப்படியாவது நமக்கே பேசி முடிச்சிடுவேன்” எனச்சொன்னது இவள் காதினுள் விழுந்தது.

வெளியில் வந்தவள் இந்திரனின் வீட்டினுள் சென்று அவளின் அத்தையை சந்திக்க கூட மனமில்லாமல் சோர்ந்த நடையுடன் தனது ஸ்கூட்டியை எடுத்துகொண்டு வெளியேறினாள்.

நன்றிகடன் மட்டும் யாருக்கும் படக்கூடாது, என் குடும்பச்சூழல் காரணமாக அத்தை என்னை படிக்கவச்சு ஒரு நல்ல வேலையும் அவங்களோட சப்போர்ட்டில் வாங்கி கொடுத்திருக்காங்க.

அந்த நன்றிகடன் மட்டும் இல்லைன்னா இவங்க கிட்ட நான் தலை நிமிர்ந்து நின்றிருப்பேன். என்கிட்ட தவறே இல்லாதபோதும் அவமானப்பட்டாலும் அதை பெரிதுபடுத்தாம தாங்கிக்க வேண்டியதாயிருக்கு.

அக்கம் பக்கத்துக்காரங்களிடம் வட்டிக்கு கடனா வாங்கினா கடனை வட்டியோடு திருப்பி கொடுத்துட்டா போதும் அதோட முடிஞ்சது. ஆனா படிக்கவைக்க வீட்டுப் பொருளாதாரத்தில் சப்போர்ட்டுண்டு என் தாய், தகப்பன் செய்வதற்கு பதில் இவங்க செய்ததால் நன்றிக்கடனாளி ஆகிட்டேன். என் காலம் முழுக்க நான் எவ்வளவு பெரியயிடத்தில் இருந்தாலும் இதை அடைக்க முடியாது.

பிள்ளைகளை மத்தவங்ககிட்ட நன்றிக்கடன் படவிடாத பெத்தவங்க கிடைக்கிறது வரம். இந்த அப்பாவும் இப்படி வேலைக்கு போகாம வெட்டியா ஊரை சுத்திகிட்டு இருக்காம இருந்திருக்கலாம்.

என் அம்மாவும் அவங்க டீச்சர் வேலைக்கு போய் கிடைக்கிற காசுல என்னைய அதற்குத்தக்க கவர்மென்ட் ஸ்கூலில் படிக்க வச்சு ஆளாக்கி இருக்கலாம்.

அதைவிட்டு பெரிய வசதியான வீட்டு பிள்ளைகள் படிக்கிற ஸ்கூலில் அத்தைகிட்ட காசு வாங்கி என்னைய படிக்க வச்சிருக்க வேணாம்.

நான் சின்னவளா இருக்கும் போதே அப்பா வாங்கிய கடனை கேட்டு கடன்காரங்க வீட்டில வந்து கேக்கும்போது அதை பிரட்டிக்கொடுக்க அம்மா படும் கஷ்டம் பார்த்து போதும்னு சொல்ல கத்துக்கிட்டேன்.

ஆனா என் அம்மாவும் அப்பாவும் எப்படியோ கடனை கிடனை வாங்கி என்னைய வசதியா வாழ வைக்கிறேன்னு சொல்லியும் நம்ம குடும்ப கவுரவத்துக்கு நம்ம ஸ்டேட்டஸ்க்குனு சொல்லி வெட்டிக்கெளரவம் பார்த்து மத்தவங்கட்ட வாங்கி எனக்கு செஞ்சு செஞ்சு கடன்காரியா என்னை நிறுத்திட்டாங்க.

என எண்ணிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தவளுக்கு அவளின் அப்பாவின் குரலே நாரசாரமாக காதில் விழுந்தது.

“நான் ஆம்பளை, நீதான் என் வீட்டுக்கு வாழ வந்துருக்க. நான் சொல்றதைத்தான் நீ கேக்கணும்” எனச்சொல்ல.

“பொண்டாட்டி பிள்ளையை உட்கார வச்சு சாப்பாடு போடுறதுதான் ஆம்பளைக்கு லட்சணம்னு நானும் ஆயிரம் தடவை சொல்லிட்டேன் வெட்டியா ஊர் சுத்திகிட்டு இருக்கிற உங்களுக்கு நான் தான் வேலைக்குப் போய் சாப்பாடு போடுறேன் “ என்றார் அவளின் அம்மா சரோஜா.

“உன்னை யார் வேலைக்குப் போகச் சொன்னா? பொங்கி போட அரிசி, பருப்பு தானே வேணும். நான் என் தலைய அடமானம் வச்சாவது உனக்கு கொண்டு வந்து கொடுக்கிறேன்” என்றதும்.

“போதும் சாமி, அடமானம் வக்கிறேன் அடமானம் வைக்கிறேன்னு நான் போட்டுட்டு வந்த நகை. தோட்டம் தொறவு எல்லாம் கடனில் மூழ்கிப் போச்சு. மிஞ்சி இருக்கிறது குடியிருக்கிற இந்த வீடு மட்டும்தான் இதையும் இல்லாம ஆக்கிடாதீங்க” என்று அவள் சத்தம் போட.

உள் நுழைந்தவள் எப்பொழுதும் கேட்கும் இந்த கூச்சல்களை இன்று ஏனோ சகிக்க மாட்டாமல்  

“அம்மா கொஞ்சம் ரெண்டு பேரும் அமைதியா இருக்கீங்களா? வேலை விட்டு வந்தா கொஞ்சமாவது இந்த வீட்டில் ரெஸ்ட் எடுக்க முடியுதா? அங்கயும் டென்சன் இங்கேயும் டென்சன்” என ஓங்கி சத்தம் போட்டதும். அவளின் அம்மா அப்பா இருவரும் கப்பென்று வாயை மூடி அதிசயமாக இவளை பார்த்தனர்.

ஆம்! பொதுவாக அவள் இவ்வாரு சத்தம் போடுபவள் கிடையாது . வீட்டிற்குள் நுழைந்தவள் இவர்கள் இருவரும் சண்டையிட்டு கொண்டிருந்தால் தனது அறைக்குள் போய் முடங்கி கொள்வாள்.

இரவு உணவு உண்ண அழைக்கும் போதுதான் வெளிவருவாள். அந்திகையின் அம்மா சரோஜாவுக்கு, எப்பொழுதும் அவள் அப்பாவுடன் எதற்காவது மல்லுகட்டிக்கொண்டே இருப்பது வழக்கமான ஒன்றுதான்.

ஆனால் அதுவும் அவருக்கு பழகிப்போய்விட்டதோ என்னவோ! தகராறு முடிந்த மறுநொடி எதுவுமே நடக்காதது போல சரோஜா வழக்கமான வீட்டு வேலைகளை செய்வதும் தன மகளுக்கு உணவு சமைத்து கொடுத்து பசியாற்றுவதிலும் சுணக்கம் காட்டமாட்டார்.

இவர்களின் தாத்தா காலத்தில் அந்த குடும்பம் அப்பகுதியில் ஓரளவு பேர் சொல்லும்படி வாழ்ந்த குடும்பம். குடியிருக்கும் வீடு தவிர்த்து சில சொத்துக்களும் இருந்ததுதான்.

ஆனால் வேலைக்கே போகாமல் உட்கார்ந்து சாப்பிட்டால் கோபுரமும் கட்டாந்தரையாகும். இரும்பும் கரைந்து போகுமல்லவா. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான் ஆனது.

                        ---தொடரும்---

 

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib