தனது பேரனின் மனம் அலைக்கழிப்பில் உள்ளதை கண்ட காளிதாஸுக்கு. விழியனின் வாட்டம் போக்க வேண்டும் என்ற உந்துதல் உண்டானது.
எனவே, “விழியா, விடுய்யா விடுய்யா... உன்னோட நல்ல மனசுக்கு உனக்கு
எல்லாமே நல்லதா தான் அமையும். நீ ஆசைப்படுவது போல ஒருத்தி
உன் மேல ஆசையோட வருவா! உன்னோட பொண்டாட்டி ஏற்கனவே எங்கேயோ பிறந்து உனக்காக
வளர்ந்து இருப்பா. நேரம் கூடி வரும்போது, காலம் உன் கண்ணுல அவள காட்டும்..” என்றார்.
“தாத்தா, அவ வரும்போது வரட்டும். ப்ளீஸ் தாத்தா, இப்போ அந்த பூபதிராஜா கூட
நான் பேசுறேன். ஏதாவது ஒன்னை உருப்படியா செஞ்சேன்னு திருப்தி பட்டாத்தான், லைஃப்பில் தனிப்பட்ட முறையில் நான் செட்டிலாகணும்னு முடிவு பண்ணிட்டேன்.
உங்களுக்கே தெரியும் ஒன்னு செய்யணும்னு நினைச்சுட்டேனா, அதை செஞ்சு முடிக்காம வேற எதிலேயும் நான் கவனம் செலுத்த மாட்டேன்ற விஷயம். அதனால ஒரு தடவை மட்டுமாவது பூபதிராஜாவை சந்திச்சு பேசி எலக்சன்ல நிக்க
வைக்க முயற்சியாவது செய்து பார்க்கிறேனே தாத்தா.” என்றான்.
அவர் ஒரு நிமிடம் வாசலை நோட்டமிட்டார். தாங்கள் இருவரும் பேசுவதை அவ்வப்போது எட்டிப் பார்த்து கொண்டு என்ன பேசுகிறோம்
எனப் புரிந்து கொள்ள முனையும் மருமகள் வாணி நிற்கிறாளா? என நோட்டம் விட்டார்.
வாணி அடுப்பங்கரைக்குள் சென்றுவிட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு, “விழியா, மத்தவங்களுக்குத்தான் லெட்டர். உனக்கு பேசணும்னா நான் ஃபோன் பண்ணியே அவரிடம் சொல்றேன்.” எனக்கூறி அவர் மொபைல் நம்பரை எடுக்க, ஃபோன் நம்பர்கள் குறித்து வைத்திருக்கும் அந்த நோட்டை எடுக்கச் சென்றார்.
அதை பார்த்த விழியன், “தாத்தா ஸ்மார்ட் ஃபோன் வாங்குங்கன்னு எத்தனை தடவ சொல்லுறேன். வாங்க மாட்றீங்களே. அதே நோக்கியா பட்டன் போன்தான்
வச்சுக்குவேன்னு அடம்புடிக்கிறீங்க. சரி அதை விடுங்க, ஒருநாள் அந்த நோட்டில் இருக்குற எல்லா நம்பரையும் இதில் பதிஞ்சு கொடுக்குறேன்.” எனச் சொன்னான்.
“போடா, போடா... இதையே எத்தனை தடவை சொல்லிட்ட, ஆனா அந்த ஒருநாள் தான் வரவே மாட்டேங்குது.” எனச் சொல்லிக்கொண்டே பூபதிராஜா மொபைல் நம்பரை நோட்டில்
பார்த்து டயல் செய்தார்.
“ஹலோ பூபதிராஜாவா? நான் காளிதாஸ் பேசுறேன்.” என்றார்.
“நல்லா இருக்கேன், நீங்க நலமா, வீட்டில் எல்லோரும் சௌக்கியமா?” எனக் கேட்டார்.
“என் பேரன் செவ்விழியன் கடை லீஸ்க்கு எடுக்க எம்.எல்.ஏ அகத்தியனை பார்க்கப் போனான். அங்க கட்சி ஆளுகளுக்குள்ள நடந்த சம்பாசனையை கேட்டவன் ரொம்ப கொந்தளிச்சு
போயிட்டான். இந்த எலக்சன்ல அந்த ஆளுக்கு எதிரா நல்ல மனசு உள்ள ஒருத்தரை
நிப்பாட்டணும்னு நினைக்கிறான். அதுக்கு உங்களைப் பார்த்து
பேச நினைக்கிறான்.”
“ம் சரிதான். உங்களுக்கு இப்போ அரசியல் எல்லாம் பெரிய இன்ட்ரஸ்ட் இல்லைன்னு நான் அவன்கிட்ட
ஏற்கனவே பேசிட்டேன். ஆனா அவன் ஒரு தடவை உங்களை பார்த்துப் பேசணும்னு முடிவோட
நிக்கிறான். நீங்களே அவன்ட உங்க நிலைப்பாட்டையும் நிலவரத்தையும்
சொன்னா சாந்தம் ஆகிடுவான்.” என்றார்.
“ஓ... அப்போ நாளைக்கு காலையில் அவனை
உங்க வீட்டுல வந்து பார்க்க சொல்றேன். நீங்க என் மேல மரியாதை வச்சு
எனக்காக அவன்கிட்ட பேசுறேன்னு சொன்னீங்களே, அதுவே எனக்கு போதும். ம் நல்லதுங்க அப்போ வச்சிடுறேன்.” எனச்சொல்லி மொபைல் இணைப்பை துண்டித்தார்.
“விழியா, நாளைக்கு காலையில் எட்டரைக்கு
டான்னு பூபதிராஜா வீட்டுக்குப் போய் அவரோட பேசிடு. பிறகு மத்ததை பத்தி முடிவெடு! அதுவரை இதை நமக்குள்ளேயே வச்சுக்குவோம்.
வீட்டில என்னைய மாட்டிவிட்டுடாதே விழியா... நான் வயசானவன், வயசுல வாங்குற வசவு பேச்சுகளை
துடைச்சு போட்டுட்டு போறது போல இப்போ போக முடியாது.” என்றார்.
“அட ஜேம்ஸ்பாண்டு, இம்புட்டுத்தான் உங்கள் வீரமா? சரி அதை விடுங்க. நான் யார்கிட்டயும் நீங்கதான்
எனக்கு பூபதிராஜாவோட அறிமுகம் கிடைக்க ஹெல்ப் பண்ணினீங்க அப்படின்றதை சொல்ல மாட்டேன்
போதுமா?” என்று பேசிக் கொண்டிருக்கும் போது வீட்டு வாசலில் கார்
வந்து நிற்கும் ஓசை கேட்டது.
“டேய் விழியா... மதியும் அவன் பொண்டாட்டியும் வந்துட்டாங்க.” என சொல்லிவிட்டு அவசர அவசரமாக தனது கைத்தடியை எடுத்து
கொண்டு வாசலுக்கு விரைந்தார் காளிதாஸ்.
ஆனால் விழியனோ எந்தவித அலட்டலும் ஆர்ப்பாட்டமும் இல்லாமல்
சாவகாசமாக அங்கிருக்கும் கண்ணாடி பார்த்து தலைவாரி விட்டு அசால்டாக வாசலுக்குச் சென்றான்.
காருக்குள் இருக்கும் லக்கேஜ்களை இறக்கி வைத்துக் கொண்டிருந்தனர்
மதியும் அவனது மனைவி திவ்யாவும். அங்கு அவர்கள் இருவரும் இறக்கியிருந்ததை
கைக்கொள்ளும் அளவில் எடுத்த வாணி உள்ளே வைக்கப் போயிருந்தார்.
வாசலுக்கு வந்த விழியன் நிலை சுவற்றில் சாய்ந்து நின்று
கொண்டு, “டேய் மதி, வந்தாச்சா!” என்று தனது அண்ணனை பார்த்துக்
கேட்டான்.
அவன் அவ்வாறு கேட்டதும் மதி திரும்பாமலே, “ம் ஹப்பா... ஒரு வழியா வீடு வந்தாச்சு, என்னவொரு வெயிலு, இந்த வெக்கையில் டிராவல் பண்ணி
வருவதுக்குள்ள போதும் போதும்னு போயிடுச்சு.” என்று சொல்லிக்கொண்டே லக்கேஜ்களை
இறக்கினான்.
ஆனால் அவனின் மனைவி திவ்யாவோ, விழியன் தன் கணவனை டா போட்டு கூப்பிடுகிறானே என்ற கோபத்தில் அவனை திரும்பிப்
பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்.
அவள் முறைப்பதைக் கண்டுகொள்ளாமல், “அண்ணியாரே வாங்க, அடேயப்பா எம்புட்டு லக்கேஜு! அங்க இருக்குற வீட்டையே ஒதுக்கிவிட்டு வந்துட்டீங்க போல!” என நக்கலாக கேட்டான்.
அப்பொழுது கையில் தூக்கிக்கொண்டு போனதை உள்ளே வைத்து
விட்டு திரும்பி வந்த வாணி, “டேய் விழியா, மதிக்கு கல்யாணம் ஆகிடுச்சு இன்னும் என்ன டா போட்டு பேசுற? ஒழுங்கா அண்ணா வாங்க போங்கன்னு பேசு.” என்று அதட்டியவர்,
“மசமசன்னு நிக்காம அண்ணன் கூட சேர்ந்து சாமான்களை வண்டியில்
இருந்து இறக்கி வீட்டுக்குள்ள கொண்டு வா.” என்று சொல்லிவிட்டு மருமகள்
திவ்யாவிடம்,
“நீ எதுக்கும்மா பெட்டி தூக்குற? வெயிட்டா இருக்கும், உள்ள வா அவிங்க இரண்டு பேரும்
சேர்ந்து இறக்கி உள்ளே கொண்டு வந்துருவாங்க” எனச்சொல்லி மருமகளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.
விழியன் அவர்கள் உட்செல்வதை திரும்பிப் பார்த்து உறுதி
செய்துவிட்டு, “டேய் மதி, இனி உன்னை, அண்ணன் வாங்க போங்கனு சொல்லி
நான் பேசணுமாம், அம்மா சொல்றாங்க.” எனச் சொன்னான்.
அதனை கேட்டவன், “எப்பா சாமி, உனக்கு எப்படி சொல்லி கூப்பிட
பிரியமோ அப்படி கூப்பிடு. வந்ததுமே என் வாயை கிளறி வம்பிழுக்காதே!” என்றான் மதி. இருவரும் கைகளில் பொதிகளுடன் உள்ளே நுழைந்தனர்.
உள்ளே வந்தவர்களை எதிர்கொண்ட திவ்யா தனது கணவனிடம், “அந்த பிளாக் டிராலியை மட்டும் இப்போ மாடிக்கு தூக்கிட்டு வாங்க. கோவிட் காலத்தில வெளில இருந்து வந்து அப்படியே வீட்டில் மிங்கிளாக வேண்டாம். போய் குளிச்சு டிரஸ் மாத்திட்டு கீழே வரலாம்.” எனச் சொல்லிவிட்டு வாணியிடம் ,
“அத்தை, மாடி நாங்கள் யூஸ் பண்ண ரெடியாத்
தானே இருக்கு?” எனக் கேட்டாள்.
“அதெல்லாம் நீங்க வரப் போறதை மதி ஃபோன் பண்ணி சொன்னதுமே, நான் சமுத்திரத்தை வைத்து மாடியை சுத்தபடுத்தி வச்சிட்டேன். ரெண்டு பேரும் போய் துணிமணி மாத்திட்டு வாங்க. நீங்க வந்ததும் சாப்பிட ரெடியா சாப்பாட்டை மேஜையில் எடுத்து வைக்கிறேன்.” எனச் சொன்னார்.
அவர்கள் செல்வதை கண்டு கொள்ளாது தன் அம்மா சமைத்து
வைத்திருந்த பதார்த்தங்களை சுவை பார்த்துக் கொண்டிருந்தான் விழியன்.
மதியும், திவ்யாவும் மாடிக்குப் போனதும்
தனது அம்மாவிடம், “என்னம்மா மட்டன் மட்டும் செஞ்சிருக்கீங்க, மத்த ஊருவது, பறக்குறது எதையும் காணோம்?” என்றான்.
அதற்கு அவர், “மதிதான் மட்டன் மட்டும் போதும். இந்த வெயிலில் டிராவல் பண்ணிட்டு மத்ததை சாப்பிட்டா உடம்பு தாங்காதுன்னு
ஃபோனில் சொல்லிட்டான்.” என்றவர்,
“சரி, அதை விடு விழியா, காலையில் ஏதோ என்னமோ பண்ண போறேன், அதுக்கு எம்.எல்.ஏவை பார்த்து பேசப்போறேன்னு சொல்லிட்டுப் போன. ஆனா, வந்ததும் எதுவும் சொல்லாமல் கவுந்தடிச்சு படுத்துகிட்ட. அது பத்தி நேரடியாக கேட்க கூடாதுன்னுதான் நினைத்தேன்.
அதுக்காகத்தான் உன் தாத்தாவிடம் மதி வருவதுக்குள்ள
உன்கிட்ட விசாரிச்சு சொல்லுங்கன்னு சொன்னேன். ஆனா, அவரும் உன்கூட சேர்ந்து கதை பேச ஆரம்பிச்சிட்டாரு. உன் அண்ணி வருவதுக்குள்ள சொல்லு விழியா! போன விஷயம் என்ன ஆச்சு? என்ன முடிவு பண்ணி இருக்க?” எனக் கேட்டார்.
“அம்மா அங்க நடந்த சூழல் எனக்கு மனசுக்கு ஒப்பலை, வேற ஏதாவது கடைய பார்க்கலாம்.” என்றான்.
“என்னடா சொல்ற மனசு ஒப்பலையா? வேற கடை தேட போறியா? அங்க என்ன நடந்ததுன்னு முழுசா
சொல்லேன். எந்த வேலை செய்ய போறேன்னு முடிவு பண்றவரை சென்னை வேலையில்
இருந்து விலகிடாத விழியா!” எனச் சொன்னார்.
“போங்கம்மா, அதெல்லாம் இனி அந்த சென்னை வேலைக்குப் போறதா இல்லை. நான் ஒன்னும் சும்மா அப்படியே வெட்டியா வீட்டிலும் இருந்துட போறதில்லை. சில சில ஆபீஸ் டிசைன் வொர்க் வீட்டில் இருந்தே ஆன்லைன்ல செய்ய ஆர்டர்
கிடைக்கும். அதில பெருசா வருமானம் கிடைக்காட்டிலும் என்னோட தேவைகளுக்கு
இப்போ அது போதும்.
நீங்களும் கொஞ்சம் என்னை புரிஞ்சிக்கோங்கம்மா. எப்ப பாரு இதை செய்யி, அதை செய்யின்னு சொல்றீங்களே
தவிர எனக்கு பிடிச்சதை செய்யின்னு என்னைக்காவது சொல்லி இருக்கீங்களா? இந்த தடவை நான் ஆசைப்பட்டதை தான் செய்யப்போறேன். நீங்க என்ன சொன்னாலும் என் முடிவ மாத்திக்க போறதா இல்லை.” என டென்சனுடன் பேச ஆரம்பித்தான்.
“என்னடா விழியா இப்படி பேசுற? நான் உன்னை பெத்தவடா. நான் சொல்லாம உனக்கு யாரு
நல்லது, கெட்டது எடுத்துச் சொல்லுவாங்க! இந்த காலத்தில் படிச்சு நல்லா சம்பாதிச்சாலே பொண்ணு கிடைக்கிறது கஷ்டம்.
நீ என்னடா என்றால் கையில இருக்குற களாக்காயை விட்டுட்டு, மரத்திலிருக்கிற பலாக்காய் வேணுமேன்னு அடம்பிடிக்கிற. அதல பாதாளத்தில் விழுந்துடுவியோன்னு பயமா இருக்கு எனக்கு. நான் சொல்லுற பேச்சை கேட்க மாட்டியா நீ?” என்று இன்னும் வார்த்தைகளை கொட்ட போன மருமகளிடம்,
“விடும்மா வாணி, மதி இப்போதுதான் வீட்டுக்குள்ள வந்திருக்கிறான். வந்ததுமே பிரச்சனை பற்றி அவன் பொண்டாட்டி முன்னாடி பேசினா அவனுக்கு சங்கடமாகிடும். இதோ அவுங்க இரண்டு பேரும் வருவது போலத் தெரியுது, பிறகு பேசலாம்.” என அப்போதைக்கு அந்த பேச்சை
ஒத்திப் போட்டார் தாத்தா காளிதாஸ்.
விழியனோ மிகவும் அமைதியாகி விட்டான் அவன் மனதினுள்
பல கேள்விகள்.
காலையில் தன்னுடன் கதிரேசனை அழைத்துக்கொண்ட செவ்விழியன், தொழிலதிபரும் சமூக சேவையை சத்தமில்லாமல் செய்பவருமான பூபதிராஜாவை பார்க்க, அவரின் இல்லம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் பயணப்பட்டுக் கொண்டிருந்தான்.
“டேய் விழியா, எங்கடா போறோம்? நீ கூப்பிட்டதும் என்ன ஏதுன்னு
கேக்காம நான் வந்தேன்ல. அதுக்காகவாவது போற இடத்தை
சொல்லேன்டா!” என்றான்.
“மில் முதலாளி பூபதிராஜா வீட்டுக்கு!” என்று பதில் சொன்னான் விழியன்.
“அங்க எதுக்குடா? ஒருவேளை அவரின் மில்லில் எதுவும் பெரிய போஸ்டிங் காலியா இருக்கா, அந்த வேலையை நமக்கு ஒதுக்குறதை பத்தி பேச கூட்டிட்டு போறியா? அப்படி எல்லாம் இருக்காதே. மில்லில சூப்ரவைசர் வேலைன்னா.” என இழுத்துக் கொண்டு போனவனை,
“ம்ஹூம் இல்ல கதிர், அவரை வேலை செய்யச் சொல்ல போறேன். அதுவும் எம்.எல்.ஏவா நம்ம தொகுதியில இறங்கி வேலை செய்யச் சொல்லப் போறேன்.” என்றான்.
அவன் அவ்வாறு சொன்னதும், “டேய் என்னடா சொல்ற? நான்தான் எப்பவும் லூசு போல
உளறுவேன். இன்னைக்கு என்னடா நீ உளறுற?” என்றான் கதிர்.
“உளறல கதிர், உண்மையாவே அவரை எலக்சன்ல நிக்க சொல்லப்போறேன். அதுக்குதான் நாம ரெண்டு பேரும் இப்போ அங்க போறோம்.” என்றான்.
அவன் சொல்லி முடிக்கும் போது, “வண்டியை நிறுத்து விழியா... வண்டியை நிறுத்து... டேய் டேய் வண்டிய நிறுத்துடா!” எனக் கூவினான் கதிர்.
அவனின் குரலில் இருந்த பதட்டத்தில், “என்னடா?” எனக் கேட்டபடி அவனின் பதற்றம் தொற்றிக்கொள்ள, வண்டியை சடனாக நிறுத்தினான் விழியன்.
“என்ன ஆச்சா? நீ சொன்னதை கேட்ட பிறகு உன் பின்னாடி வர எனக்கு என்ன லூசா பிடிச்சிருக்கு? நாம ரெண்டு பேர் மட்டும் போய் பெரிய வி.ஐ.பி கிட்ட எலக்சனுக்கு நில்லுங்கன்னு சொல்லுவோமாம். அவரும் உடனே சரிங்க தம்பி, அந்த கடவுள் போல வந்து சொல்றீங்க, நானும் நிக்கிறேன்னு சொல்லுவாராம்.
இதப்பாரு விழியா நாம ரெண்டு பேரும் சாதாரண பட்டதாரிங்க. நம்ம கூட அவர் பேசுறதே பெரிய விஷயம். ஒரு கூட்டமா பெரிய பெரிய ஆட்கள் கூட போய் பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயம்
இது.” எனச் சொன்னவனை பார்த்து விழியன் கோபமாக முறைப்பதை கண்டு,
“இங்க பாருடா இப்போ எதுக்கு முறைக்கிற? சரி நீ சொல்றது போலவே போய் பேசுவோம். ஆனா இப்ப இல்ல, நம்ம கூட ஸ்ரீராமையும் கூட்டி
கிட்டு போவோம்டா. கூட இன்னும் ஒரு ஆள் இருந்தா பேச வசதியா இருக்கும்ல!” எனச் சொன்னான் கதிர்.
மனதிற்குள், ‘கடவுளே இவன் சரின்னு சொல்லிடணும் அங்க போய் பேசி அசிங்கமாகிட கூடாது’ என்று நினைக்க, அவன் நினைத்ததற்கு எதிர்ப்பதமாக
விழியனிடமிருந்து கோபத்துடன் பதில் வந்தது.
“அந்த டேஷ்சை பத்தி பேசாத என்கிட்ட. அன்னைக்கு அந்த எம்.எல்.ஏவை பார்த்துட்டு வெளியில வந்து பேசும்போது தான் ஸ்ரீராமுக்கு அந்த ஹோட்டல்
மோகம் புடிச்சுருக்கும் விஷயம் புரிஞ்சது.
நான் ஒத்த வார்த்தை தான் அந்த எம்.எல்.ஏ அகத்தியனை சொன்னேன் அதுக்கே எம்புட்டு கோபப்பட்டான். அந்த எம்.எல்.ஏவை ஓட்டுப் போட்டு பதவியில உட்கார வச்ச மக்களை எல்லாம் அற்பமா நினைச்சு
பேசுறான். அவன் கொள்ளையடிக்கிறதை கம்முன்னு பொத்திகிட்டு பார்க்கணும்னு
சொல்றான். எதிர்க்கிறவங்ககளை ஒழிச்சு கட்ட பிளான் போடுறான்!
இத்தனையும் கேட்டுட்டு எதுவும் கண்டுக்காம அந்த எம்.எல்.ஏ ஹோட்டலை லீசு எடுக்கணும்ற காரணதுக்காக அவனின் பக்கம்
நிக்கணும்னு சொல்றானே ஸ்ரீராம்.
தண்ணி வண்டி அனுப்புறேன், கக்கூஸ் தொறந்து விட ஏற்பாடு
செய்றேன் அப்படின்னு அந்த எம்.எல்.ஏ சொன்னதை பெருசா பேசுறான் அவன்.
தண்ணி, கக்கூஸ் வசதி இரண்டும் நமக்கு
அவசியம்தான். ஆனா அந்த அவசியத்தை புரிஞ்சுகிட்டா அந்த எம்.எல்.ஏ நமக்கு ஏற்பாடு செய்றான்? இல்ல, எலக்சன் வருதுல்ல அதுக்கு லஞ்சமா நினைச்சு பண்றான்.
இப்போ அவன் தானே நம்ம தொகுதி எம்.எல்.ஏ, அப்போ அடிப்படை வசதி செய்வது அவரோட வேலைதான். அந்த எம்.எல்.ஏ வோட கருப்புப் பக்கத்தை கண்டுக்க கூடாதுன்னு சொல்றான்.
இதை எல்லாம் நான் சொன்னதுக்கு ஸ்ரீராம் என்ன சொன்னான்னு
கேட்டேல்ல, அகத்தியனை அப்படி எல்லாம் பேசக்கூடாதாம், எந்த அரசியல்வாதி நேர்மையா இருக்கான்? நீயே நாளைக்கு ஏதோ ஒரு சூழல்ல பதிவியில உட்கார்ந்தா அகத்தியனை போலத்தான்
நடந்துக்குவேன்னு என்னை பார்த்து சொல்றான்.
அந்த இடத்துல அப்படிப்பட்டவன் தான் உட்கார முடியுமாம். நமக்கு நம்ம பொழப்பு முக்கியமாம். அந்த கடை வச்சு அவன் ஆயிரம் கனவு கண்டு கிட்டு இருக்கானாம். இனி இதுபோல எம்.எல்.ஏ சரியில்ல கொள்ளையடிக்கிறான்னு நான் உளறுனா என் வாயையே பஞ்சர் ஆக்கிடுவானாம்!
அவன் அப்படி பேசியதும் அவன் வாயை உடைக்கணும்ன்னு தான்
முதலில் தோனுச்சு. ஆனா அப்படி பண்ணினா நமக்குள்ள பகை மட்டும்தான் வளரும். அதுதான் அடக்கிக்கிட்டேன்.
அவனும் அந்த எம்.எல்.ஏவை போல பணத்துக்குப் பேராசை பட ஆரம்பிச்சிட்டான். அதுக்காகவே இன்னொரு நல்ல கேண்டிடேட்டை அகத்தியனை எதிர்த்து நிக்க வைக்க
எல்லா ஏற்பாட்டையும் செஞ்சு முடிச்சுட்டு, அவனுக்கும் வேப்பிலை அடிச்சு நம்ம பக்கம் இழுக்கலாம். அதுவரை இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேணாம்.” என்றான்.
***
---தொடரும்---

No comments:
Post a Comment