anti - piracy

Post Page Advertisement [Top]

                                             செவ்விழியன் (தீபாஸ்)                      


அத்தியாயம் 07

 

    கதிர் விழியனிடம், “டேய் விழியா நீ சொல்றதெல்லாம் நடக்குற காரியமா....?

    இங்க அவனவன் பிழைப்பை பார்த்துட்டு கம்முன்னு போனா தான் சேதாரமில்லாம வாழ முடியும்.

      இங்க நாற்காலிக்கு சண்டை போடும் பிசாசுங்க கூட மல்லுக்கட்டிக்கிட்டு நாம அரசியல்ல இறங்கினா அவ்வளவுதான் கதை கந்தல்

    விழியா... நல்லா யோசிச்சுக்கோ. நீ படிக்கிறப்போ அங்க நடக்குற பாலிடிக்ஸை தட்டி கேட்டதுக்கே எத்தனை தடவை உன் அப்பா, அம்மா பிரின்சிபால் முன்னாடி வந்து பதில் சொல்ல வேண்டியது வந்தது.

    பெத்தவங்க அடி உதைக்காக கடைசியில நீ மனசுக்குள்ளயே குமுறிட்டு கம்முன்னு இருக்க வேண்டியதும் நடந்திருக்கு.என சூழ்நிலையை விளக்கினான்.

      அதற்கு விழியன், “கதிர் அப்போ இருந்து நம்மளை பணிஞ்சு போக வச்சது நம் வீட்டில உள்ளவங்கதான்.

    இப்படி எல்லோரும் பிரச்சனைன்னா நமக்கு எதுக்குன்னு ஒதுங்கி போனா, கடைசியில் யாரு நல்லதுக்கு துணை நிக்க? அநியாயத்துக்கு எதிரா குரல் கொடுக்க?

     இப்படி எல்லோரும் ஒதுங்கி போறதால் தான் அட்டூழியம் செய்றவங்களோட அராஜகம் பெருகி போச்சு.

    எம்.எல்.ஏ பேசுனதை நீயும் தானே கவனிச்ச? அதுபோல ஆட்கள் கிட்ட நாடு போச்சுன்னா எதிர்காலத்தில காசு வச்சிருக்கிறவன் கிட்டயும், தடி எடுக்குறவன் கிட்டயும் நாடு இருக்கும்.

    அவங்ககிட்ட எல்லோரும் அடிமையா போயிட வேண்டியதுதான். இதுக்கு ஏதாவது நான் செய்யணும்.

    என்னால சாதிக்க முடியுதோ முடியலையோ அதைப்பத்தி எல்லாம் கவலைப்பட மாட்டேன்.

    ஆனா, என்னாலான முயற்சி செய்தேன்ற ஒரு திருப்தி எனக்கு கிடைக்கும் கதிர். அது போதும்டா எனக்கு.

    இதுக்கு முன்னாடி நான் சின்ன பையன். அம்மா, அப்பா நிழலில இருந்தேன். ஆனா, இப்போ வளர்ந்தாச்சு. நான் என்ன செய்யணும் எது நல்லது, எது கெட்டதுன்னு பிரிச்சு பார்க்கிற வயசு வந்திருச்சு.

   வீட்டுல அம்மாவோட எமோசனல் பிளாக்மெயிலை சமாளிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா சமாளிச்சுத்தான் ஆகணும். நல்லவேளை அவங்களுக்கு நான் மட்டும் பிள்ளை இல்லை

   அவங்களோட ஆசைக்கு ஏத்தது போல சமத்தா அவங்க நினைச்சதுபோலவே செட்டில் ஆகியிருக்கிற என் அண்ணன் ஒருத்தன் இருக்கான்.என்று பேசினான்.

     அவன் சொல்வதை எல்லாம் கேட்ட கதிர், “டேய் விழியா, ஆனா நான் வீட்டுக்கு ஒத்தே ஒத்த ஆம்பளை பிள்ளைடா.

      நீ போனா, நானும் உன் பின்னாடியே பழக்க தோஷத்தில் வந்துருவேன். எங்க அம்மா, அப்பா பாவம்ல!என்றான்.

   அவன் அவ்வாறு சொன்னதும், “ஹாஹாஹா... மவனே நீ வராட்டி நான் உன்னை கட்டி தூக்கிட்டு போயிடமாட்டேன்... நண்பன்டா நீ!என்றான்.

   “டேய் ச்சேய், மொறப் பொண்ண கட்டிக்க மாமன் கடத்திட்டு போறது போல என்னைய தூக்குவேன்னு சொல்ற, அய்யே... இந்த கருமத்துக்கு தான் என் ஆயா உன் கூட சேராத சேராதன்னு ஆயிரம் புத்திமதி சொல்லுச்சு.என்றான்.

    “உங்க ஆயாவுக்கு உன்னைவிட என்னையத்தான் ரொம்பப் பிடிக்கும். அந்த பொறாமையில் என் லட்டு பேபி மேல பழியப் போடாத கதிரு.என்றான்.

   “அதை விடு விழியா, இப்போ சீரியஸாகத்தான் கேக்குறேன். சென்னை வேலைக்கு போகாம கொஞ்சமா கிடைக்கும் ஆன்லைன் ப்ராஜக்ட் மட்டும் பார்த்தா, மாசம் ஏதோ மூவாயிரமோ நாலாயிரமோ தான் கிடைக்கும்

    ஏற்கனவே சென்னை வேலைய விடப்போறேன்னு சொன்னதுக்கே உனக்கும் வெண்ணிலாவுக்கும் இடையில் பிரச்சனையாகிப் போய் கிடக்குது.

    இதுல இந்த விஷயம் உன் ஆளுக்கு தெரிஞ்சா ரெண்டு பேருக்குள்ள நிறைய சண்டை வரும்.

    நீ வெண்ணிலாவை கல்யாணம் செய்யப் போறது உறுதி தானே! அப்போ அந்த பிள்ளைக் கிட்ட கலந்துக்கிட்டு முடிவெடுத்துருக்கலாம்.என்றான்.

     “இல்ல கதிர், பிரேக்கப்னு முடிவு பண்ணிட்டேன். ம்ஹூம் இரண்டு பேரோட குணத்துக்கும், மைன்ட் செட்டுக்கும் ஒத்துவராது.

    என்னை எமோசனலா பிளாக்மெயில் பண்ணி பண்ணி அவ நினைக்கிறதை என்கிட்ட சாதிச்சுக்கிட பார்க்குறா.

    என்னோட மனநிலையை யோசிக்க தெரியலைன்னா கூட அதை நான் புரிய வச்சிடுவேன். ஆனா என்னோட மைன்ட் செட்டே தப்புன்னு நினைக்கிறா.

    காசு, பணம்தான் முக்கியம் அவளுக்கு. ஆனா, எனக்கு தேவைக்கு காசு போதும்.

   என்னை சுற்றி இருக்குற பிரச்சனைகளை காசு பணம் சம்பாதிகணும்கிற ஆசையில் கண்டுக்காம போக என்னால முடியாது.

       அதனால நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் செய்தோம்னா கடைசிவரை இந்த நீயா நானா போராட்டம் தொடரும்.

    ஏன், இப்போவே அந்த போராட்டம் தொடங்கிருச்சு. என் மேல இருக்குற அவளோட காதலும் காணாம போக ஆரம்பிச்சிடுச்சு.

      இந்த ஸ்டேஜில் பிரிஞ்சிடுறது பெஸ்ட். கசந்து போயி ஒருத்தரை ஒருத்தர் வெறுத்து பிரியறதுக்கு பதில், அவ மனசுல என்னோட இருந்த பசுமையான நினைவுகள் இன்னும் சாகாம இருக்குற இந்த ஸ்டேஜில் பிரிஞ்சிடலாம்னு நினைக்கிறேன்.

     அவளோட மொத்த வெறுப்பை சம்பாதிக்க நான் விரும்பலை.என்றான்

   “டேய் என்னடா இப்படி சொல்ற? வெண்ணிலா உன் மேல அத்தனை பிரியம் வச்சிருக்குதுடா. இதெல்லாம் பாவம்டா!என்றான் கதிர்.

   “நீ வேற கதிர், அவ சென்னைக்கு எப்ப போனாளோ, அன்னைக்கே வேற வெண்ணிலாவா மாற ஆரம்பிச்சிட்டா.

    நீ முன்னாடி இருந்த வெண்ணிலாவா அவளை நினச்சுக்கிட்டு இருக்க. ஒரு வகையில் அவள் இதை எதிர்பார்த்துத்தான் இருப்பா!

     “விழியா, இப்படி எல்லாம் அவளை விடுவதுக்கு சாக்கு சொல்லாதடா. பெண் பாவம் பொல்லாதது. நல்லா பழகிட்டு இப்படி கழட்டி விடுறது வேணாம். அதுவும் நீ இப்படி பண்ண கூடாது

     என் பிரண்ட் நல்லவன்னு பெருமையா சொல்லுவேன். ஆனா நீ அந்த பிள்ளைய விட்டுட்டேன்னு அவ வருத்தப்பட்டு எதுவும் தப்பான முடிவெடுத்துட்டானா உன்னை கேள்வி கேக்கும் முதல் ஆளே நானாகத்தான் இருப்பேன்.என்றான்.

***

   பூபதிராஜா வீட்டில் அவரது மனைவி சாந்தா, சாப்பாட்டு மேஜையில் அமர்ந்திருந்தவரின் முன் தட்டு வைத்து அவருக்கு சாப்பாடு எடுத்து வைத்துக்கொண்டே, ‘எப்படி இவரிடம் பேச்சை ஆரம்பிக்க?’ என்ற தயக்கத்தோடு அவருக்குத் தேவையானதைப் பரிமாறிக் கொண்டிருந்தார்.

    தனது மனைவி சாந்தாவின் உடல் மொழியிலேயே அவரின் உள்ளம் உணர்ந்து கொண்ட பூபதி ராஜா,

     ரொம்ப நேரமா என்கிட்ட எதுவோ சொல்ல தயங்கி தயங்கி என் மூஞ்சியவே பார்க்குற என்னது? எதுனாலும் சொல்லிடு. கேக்க வந்ததை கேக்காம மனசுக்குள்ள வச்சா டென்ஷன் தான் ஏறும்.என்றார்.

   “உங்க தங்கைய பத்தித்தான் பேச வந்தேன். ஆனா நீங்க கோபப்படுவீங்களோன்னுதான் சொல்ல யோசிக்கிறேன்.என்றார் சாந்தா.

    “அதுவும் கிரஹாவ பத்தி சொல்றதா சொல்லிட்ட. இனி என்னென்னு தெரிஞ்சுக்காம நானும் இங்க இருந்து நகற மாட்டேன். ம்... சொல்லு!என்றார்.

    அவர் சொல்லு என்றதும் தன்னைச் சுற்றி கண்களால் நோட்டம் விட்டார் சாந்தா

    அதை கவனித்த பூபதிராஜா, “அவ உள்ள இல்ல. அவளும் தினேசும் டென்னிஸ் விளையாட வெளிய கோர்ட்டுக்கு போயாச்சு.என்றார்.

    “அவளுக்கு என்னங்க நாம குறை வச்சோம்? புருஷன் இல்லாதவ புள்ளையோட நம்ம கூடவே வந்துருக்கா. அந்த வருத்தம் அவளுக்கு தெரியக்கூடாதுன்னு நீங்களும் பார்த்து பார்த்து அவளுக்குச் செய்றீங்க.

    ஆனா, அவளோ நம்ம குடும்ப மானத்தை குழிதோண்டி பொதைக்கிறது போலவே ஒவ்வொன்னும் செய்றா.

       சமூக சேவை செய்ய போறேன்னு தெருத்தெருவா நாலு ஆம்பளைங்க கூட போய் பிட் நோட்டிஸ் கொடுக்குறா! அதை பார்த்துட்டு நாலு பேர் என்கிட்ட போன் பண்ணி குறை சொல்றாங்க.

     எப்பேர்பட்ட குடும்பத்தில இருக்கோம் என்ற எண்ணம் இல்லாம இருக்கா. நாலு பேரு நாலு விதமா கதை கட்டி விட ஆரம்பிச்சா நல்லாவா இருக்கும்!

     இன்னார் குடும்பத்து பொம்பளை அப்படின்னு பேசுறது நம்ம குடும்பத்துக்குத் தானே அசிங்கம்

     நம்மளுக்கும் ஒரு பொம்பளைப் பிள்ளை இருக்கு. பின்னாடி அவளையும் உங்க தங்கச்சியை வச்சு எடை போட்டா நல்ல இடத்தில் சம்பந்தம் எப்படி பண்ண முடியும்?

     உங்க தங்கச்சி டிரஸ்ட் ஆபீசிலிருந்து உதவி தேவைன்னு சொல்லுறவங்களுக்கு, முடிஞ்சதை செக்காவோ கேஸாவோ கொடுத்துட்டு நீட்டா கெளரவமா அடக்காமா இருக்காம, தெருவுல நாலு ஆம்பளைங்களோட இறங்கி வேலை பார்க்குறது நல்லாவா இருக்கு?

       புருஷன்காரன் கூட இருந்தாலாவது நாக்கு மேல பல்ல போட்டு நாலு பேரு பேச பயப்படுவான். ஆனா புருஷன் இல்லாத பொம்பளை நிலை அப்படி கிடையாது.

    ஆம்பளைகளோட பார்வையும் ஆண்களோட அவளை பார்க்குற மத்தவங்க வாயும் ஆயிரம் கதை கட்டும்.  

    அவ பையனுக்கு விவரம் தெரியறதுக்கு முன்னாடியே அவளுக்கு இரண்டாவதா ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சிடணுமுன்னு சொன்னேன்.

     அப்படி பண்ணியிருந்தா அவன் பாடு உங்க தங்கை பாடுன்னு போயிருக்கும். நான் அப்போ சொன்ன எதையும் கேக்கமாட்டேன்னு சொன்னவ அடக்கமா வீட்டில இருக்கணும்ல. நீங்க கொஞ்சம் அவளை கண்டிச்சு வைங்க.என்றார்.

     அவளை ஏறிட்டு பார்த்தபடி பூபதி ராஜா கூறினார். “கிரஹா மேல மத்தவங்க பார்வை எப்படியும் இருக்கட்டும். உன்னோட பார்வை எப்படின்னு சொல்லு?” என்றார்.

    அவரின் வார்த்தையைக் கேட்டு, “கடவுளே...!” என்று அதிர்ந்து கூறியவள் கண்களில் கண்ணீர் துளிகள் முட்டிக்கொண்டு நின்றன.

    ஆனால் அதை வழியவிடாமல் சமாளித்தபடி, “இதுக்குத்தான் நான் உங்ககிட்ட சொல்ல யோசித்தேன்.என்றாள்.

     “இங்க பாரு சாந்தா... சொல்றவங்க ஆயிரம் சொல்லுவாங்க. ஆனா நம்ம கிட்ட அவளை இதுபோல மோசமா பேசுறவங்களை திட்டி அவங்க மறுபடி பேச இடம் கொடுக்காம செய்யணும்.

    எங்க வீட்டு பிள்ளைய பத்தி எங்களுக்கு தெரியும் அப்படின்னு சொல்லி இருக்கணும் நீ.

     அவள் கொரோனா விழிப்புணர்வு பத்திய பிட் நோட்டிஸ் மட்டும் கொடுக்க போகல சாந்தா. கொரோனா பாசிடிவ்வால தனிமைபடுத்த பட்டவங்க குடும்பத்துக்கு சாப்பாடு ரெடி பண்ணி டோர் டெலிவரி பண்ண தனிப்பட்ட முறையில் ஆக்சன் எடுக்குறா

     அதை சிறப்பா செய்ய நினைச்சு அவளே களத்துல குதிச்சிட்டா. இதுக்கு அவளை பாராட்டத்தான் செய்யணும். அதை விட்டுட்டு நீ??? 

     இப்படி அவள் அலையிறதால அவளுக்கு கொரோனா வந்துட போகுதோன்னு பயந்து கண்டிக்க சொல்லி இருந்தா கூட நான் அவளை கண்டிச்சு வைக்க நினைச்சிருப்பேன். ஆனா நீ???” என்று சொல்லி

    “ச்சே...” என்று வெறுப்பாக ஒரு சத்தம் இட்டு அரைகுறை சாப்பாட்டோடு போதும் என எழுந்து கொண்டார்.

     சாந்தாவுக்கு விக்கியது போல ஆகிவிட்டது அவரின் வாதம். ஏனெனில் சாந்தா பிறந்த வீட்டிலிருந்து அவளின் வயதான அம்மா இவளிடம் இவ்வாறு கிரஹாவை பற்றி சொல்லும்போது அவரின் வாதம் சரியே என தோன்றியது அவருக்கு.

     “ஏட்டி சாந்தா, உன் நாத்தனா கிரஹா புருஷன் இல்லாதவ. அவ நாலு ஆம்பளையோட மெயினான ரோட்டில தண்ணீர் பந்தலில் நின்னு வாரவங்க போறவக்களுக்கு பிட் நோட்டிஸ் கொடுக்குறாளே, என்ன கண்றாவிடி இதெல்லாம்?

    தாலி அறுத்தவ, அதுவும் நன்னா இன்னும் தளதளன்னு இருக்கிறவ கூட நாலு ஆம்பளை நிக்கிறான்.

    அதுவும் நம்ம முக்கு வீட்டு மல்லிகா புருஷன் வேற அதில் ஒருத்தனாம். மல்லிகா என்கிட்ட வந்து சொல்லுறா.

    அவ புருசன், ‘கிரஹா மேடம் கிரஹா மேடம்னே எந்நேரமும் அந்த மனுசர் பேசுறாரு மாமிஅப்படிங்கிறா.

      ‘அந்த கிரஹா அம்புட்டு நல்லவங்க, வல்லவங்கன்னு சொல்றாரு. அதை பார்த்து தான் இந்த மனுசர் அவங்க பின்னாடி சுத்துறாங்கன்னா நினைக்கிறீங்க, அந்த பொம்பளை அம்புட்டு அழகா இருக்குது. பெரிய பையன் அவங்களுக்கு இருக்குதுன்னு நீங்க சொல்லித்தான் எனக்கே தெரியும்.

     கல்யாணம் ஆகாத சின்னப்பொண்ணு போல என்ன அழகா, ஸ்டைலா இருக்கு. அதுக்கு புருஷன் வேற இல்லையாக்கும்.

    உங்க வீட்டு மூத்த மருமகன் மில் முதலாளி பூபதிராஜாவோட  தங்கச்சியாம்ல அந்த கிரஹா மேடம். அவர் வீட்டுல தான் இருக்குறாங்களாம்ல

   என்னமோ போங்க, என்ன துட்டு இருந்து என்ன புரயோஜனம்? நாத்தனாரை வீட்டோட வச்சிருக்கிற உங்க மக பாவம்தான்னுசொல்லுறா டீ. அவளெல்லாம் உன் வீட்டை பத்தி பேசுறது போல ஆகிடுச்சு.

    உன் புருசன்கிட்ட சொல்லி இது போல பேச்சு வருது வீட்டோட அவர் தங்கச்சிய அடக்கி வைக்கச் சொல்லு. உன் குடும்ப மானம் அவளால காத்துல பறக்குது.எனச் சொன்னதும் அது சரியே என்று சாந்தாவுக்கு பட்டது.

  ஆனால் தன் கணவன் தன்னை புரிந்து கொள்ளாது இவ்வாறு பேசுகிறார் என்றே நினைத்தாள் சாந்தா

    பெரும்பாலும் இங்கே பெண்களே பெண்களுக்கு எதிராக சிந்திக்கிறார்கள். அவர்களின் மனநிலை தான் முதலில் மாற்றத்துக்கு தயாராக வேண்டும்.

      இச்சமூகத்தில் துணையில்லாது இருக்கும் ஆணையும், பெண்ணையும் கொஞ்சம் எட்டியே வைக்க நினைக்கும் சமூகம். அதுவும் பெண் என்றால் ஒரு படி மேல் சென்று அவளின் நடத்தையில் குறை சொல்லி அவரை ஒதுக்கி வைக்கவே முனைவர்.

     தன்னோட இணையை சலனப்படுத்தி விடுவார்களோ தனது வீட்டுப் பிள்ளையை அவர்களின் தனிமைக்கு இரை ஆக்கிவிடுவார்களோ? என்ற மனோபாவம் மனிதனுக்கு உண்டு. இதுபோன்ற ஆரோக்கியமற்ற சிந்தனைகள் களையப்பட வேண்டும்

    மேலை நாடுகளில் துணையை இழந்து தனித்திருக்கும் ஒருவரை ஆண், பெண் பாகுபாடின்றி வேறு துணையை தேர்ந்தெடுக்க அவர்களைச் சார்ந்தவர்கள் ஊக்கபடுத்தி இயல்பாக ஏற்றுகொள்வது உண்டு.

     அதுபோல, இங்கும் குறிப்பாக பெண்ணுக்கும் அந்த சுதந்திரத்தை எந்தவித நெருடலும் இல்லாது இயல்பாக மறுமணத்தை அவர்கள் தயக்கமின்றி பேசும் சூழலை சமூகம் அமைத்து தர வேண்டும்.

***

                                               ----தொடரும்----

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib