anti - piracy

Post Page Advertisement [Top]

                                                                                

------------பூகம்பத்தைப் பூட்டியப் பூவை (1) (தீபாஸ்)------ 

அத்தியாயம்-19 & 20

 

மினிஸ்டர் ரங்கராஜன் வீட்டில் இரவு தனது அறையின் படுக்கையில் இருந்த சந்தியாவிற்கு பொட்டு தூக்கம் கூட வரவில்லை. எப்போதடா தனது வீட்டினை சுற்றி இருக்கும் ஆட்களின் நடமாட்டம் அடங்கும் என்று காத்திருந்தாள்.

 

நேற்று காலை அவள் யாழிசையை அவள் வீட்டில் விட்டுவிட்டு காலேஜ் கிளம்பும் அவசரத்தில் வேகவேகமாக உண்டுவிட்டு கைகழுவ வாஷ்பேசின் அருகில் சென்றவளுக்கு கை இரண்டையும் பின்னால் கட்டப்பட்டு தொய்ந்த நிலையில் தன் அப்பாவின் ஆட்கள் சாம்பல்நிற சட்டையும் கருப்புநிற பேண்டும் போட்ட ஒருவனை இழுத்துக்கொண்டு தங்களது வீட்டின் பின்னால் இருந்த கெஸ்ட் ஹவுசிற்கு போவதை ஜன்னல் வழியாக பார்த்த சந்தியாவின் நெஞ்சம் பகீர் என்றது.

 

ஏனெனில், இன்று காலையில் அவள் தோழியுடன் காரில் ஏறும் போது வந்த மிதுனன் அந்தநிற உடையில் தான் இருந்தான். எனவே உற்று பார்த்தவளுக்கு அது மிதுனன்தானோ! என்ற சந்தேகம் ஏற்பட்டது.

 

எனவே வேகமாக பின் வாசலுக்கு ஓடி வந்தவளின் முன், மேலும் முன்னேற முடியாமல் வந்து நின்ற அவனின் அண்ணன், “எங்க போற?” என்றதும்,

 

“அண்ணா கெஸ்ட் ஹவுஸ்சிற்கு மிதுனனை இழுத்துட்டு போறாங்க. அப்பாட்ட சொல்லி அவனை விடச்சொல்லுங்க.”

 

தன்னைச் சுற்றிப் பார்வையை ஓட விட்ட அவளின் அண்ணன் அவள் பேசியது யாரின் காதிலும் விழுந்திருக்காது என்பதை புரிந்து கொண்டவன், அவளின் கன்னத்தில் பளீர் என்று ஓர் அறை கொடுத்தான்.

 

“இங்க பாரு நீ பார்த்தது மிதுனன் கிடையாது. அது வேற ஒருத்தன், நம்ம அப்பாவுக்கு எதிரி. இப்போ இங்க நீ யாரையும் பார்க்கல, சரியா? இங்கு நடப்பது எதுவும் வெளிய மூச்சு விடக்கூடாது புரியுதா? அப்பாவுக்கு நீ இப்படி பேசுனேன்னு தெரிஞ்சது அவ்வளவுதான். உன்னால் வீட்டு வாசல்படியை தாண்ட முடியாது. உடனே உன்னைய கல்யாணம் செய்து பேக்கப் செஞ்சு அனுப்பிடுவார். போ! போய் காலேஜ் போகிற வழியை பாரு.

 

அவன் அண்ணன் அவளை முறைத்தவாறு கூறிக்கொண்டு அங்கேயே நிற்பதை பார்த்தவள், இப்பொழுது தன்னால் எதுவும் செய்யமுடியாது என்ற நிதர்சனம் அறிந்து காலேஜுக்கு புறப்பட்டுவிட்டாள்.

 

ஒருவேளை தான் தவறுதலாக பார்த்திருப்பேனோ! அண்ணன் சொன்னதுபோல் அது மிதுனன் கிடையாதோ? என்று எண்ணியபடி காலேஜுக்கு வந்தவளுக்கு மிதுனன் காலேஜில் இல்லை என்றதுமே புரிந்துக்கொண்டாள். தான் காலையில் தனது வீட்டில் பார்த்தது மிதுனனைத்தான் என்று.

 

மேலும் அவனை தப்பிக்க வைக்க வேண்டுமானால் பொறுமையாகத் தான் காத்துக்கொண்டு இருந்தால்தான் சாதிக்கமுடியும் என்றும் எப்படியாவது மிதுனனை தன் அப்பாவிடம் இருந்து தப்பிக்க வைத்துவிடவேண்டும் என்றும் முடிவெடுத்தாள்.

 

மிதுனனை விட்டுவிடக்கூறி தனது அப்பாவிடம் கூறினால் கண்டிப்பாக தன்னுடைய தந்தை அதற்கு செவிசாய்க்கப் போவதில்லை என்பதனை புரிந்துவைத்திருந்தாள்.

 

மேலும் அவ்வாறு கேட்டுவிட்டால், தான் அவனை விடுவிக்க முயலலாம் என்ற சந்தேகம் வந்து தனது அப்பா ஜாக்கிரதையாக இருக்க ஆரம்பித்துவிடுவார். எனவே மிதுனனை தப்புவிக்க முடியாது என்பதால் சந்தர்ப்பத்திற்காக அமைதியாக காத்துக் கொண்டிருப்பதுதான் புத்திசாலித்தனம் என்று இயல்பாக இருப்பதுபோல் பாவனை காண்பித்து வீட்டிற்குள் நடமாடிக்கொண்டிருந்தாள்.

 

இரவு வீட்டில் சமையல்காரம்மா டீ போட்டுக்கொண்டிருப்பதை, அங்கு ஜக்கில் குடிக்க தண்ணீர் பிடித்து தன்னுடைய ரூமிற்கு எடுக்க வந்தபோது பார்த்த சந்தியா, “இந்த நேரம் யாருக்கு டீ போடுறீங்க முனியம்மா? என்றதும்,

 

“நம்ம வீட்டு பின்னாடி உள்ள ஊட்டுல இருக்கற மாரிதான் அவன் கூட இருக்குற ஏழுபேருக்கு டீ போட்டு கொடுக்கச்சொன்னான். அதுக்குதான் போட்டுட்டு இருக்கேன் சின்னம்மா”

 

“அப்படியா! சரி என்று சொன்னவள் வெளியேறி நேராக அவளின் அம்மா வைத்திருந்த தூக்க மாத்திரை சிலதை கையில் எடுத்துக்கொண்டு அடுப்படிக்குள் வந்தவள்,

 

“முனியம்மா போறவழியில தண்ணீர் கொட்டிடுச்சு. போ முதலில் அதை தொடச்சுவிடு. அப்பா வரும் நேரம் அவருக்கு வழுக்கிடப்போகுது” என்றதும், செய்துக்கொண்டிருந்த வேலையைவிட்டு அதை துடைப்பதற்கு சென்றாள் முனியம்மாள்.

 

அவள் போவதை பார்த்துக்கொண்டே அம்மாத்திரைகளை அங்கிருந்த பூண்டு தட்டும் குட்டி உரலில் போட்டு இடித்து பொடிசெய்து முனியம்மாள் அடுப்பைவிட்டு இறக்கியிருந்த டீயில் போட்டு அருகில் இருந்த கரண்டியில் கலக்கிவிட்டுவிட்டு வெளியில் வந்துவிட்டாள்.

 

தான் மாத்திரை கலக்கிய டீயை மிதுனனுக்கு காவல் இருந்த மாரியும், அவன் கூட இருந்த தனது அப்பாவின் மற்ற அடியாட்களும் குடித்திருப்பார்களா? என்ற யோசனையுடன் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தாள்.

 

நேரம், இரவு ஒருமணியை தாண்டி இருந்தது. தனது அப்பா இரவு பன்னிரெண்டு மணிக்கு பின்னேயே அவரது அறைக்கு போனதை அவள் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.

 

இப்பொழுது எல்லோரும் தூங்கியிருப்பார்கள் என்ற எண்ணத்தில் மெதுவாக தனது அறையில் இருந்து வெளியில் வந்தவள் பதுங்கிப் பதுங்கி கையில் சிறு கத்தியுடன் மிதுனனை வைத்திருந்த கெஸ்ட் ஹவுசின் அருகில் சென்றுவிட்டாள்.

 

தீரன் யாழிசையிடம் அவளால் பழைய வாழ்க்கைக்கு இனிமேல் திரும்பிப் போக முடியாது என்று சொல்லிவிட்டு அவனுக்கு வந்த போன் அழைப்பை அட்டன் செய்ய வெளியேறிவிட்டான்.

 

அவன் கூறியதை கேட்டும், அதற்கு முன் அவளின் நிலையை பற்றி அறிந்ததையும் இணைத்து பார்த்தவள் உள்ளம் சூழ்நிலையை ஓரளவு கிரகித்துக்கொண்டது.

 

எனவே தனக்காகவே வாழும் தனது தந்தையும் தன்னையே உயிராக நினைக்கும் ருக்கு பாட்டியையும் நினைத்து அவளின் மனம் வெதும்பியது.

 

எப்படியாவது தீரனிடமிருந்து தப்பித்து தன் வீட்டிற்கு போய்விடமாட்டோமா என்ற தவிப்பு உருவானது. மேலும் இப்பொழுது தீரனை நேரடியாக எதிர்த்தால் தன்னை ரூமிற்குள்ளேயே அடைத்து வைத்துவிடுவான். ஆதலால் தப்பிக்கும் மார்க்கம் கிட்டாமல் போய்விடுமோ! என அஞ்சினாள்.

 

எனவே அவனின் சொல் கேட்பதுபோல் அவனின் முன் நடிக்க வேண்டும் அப்பொழுதுதான் தன்னால் இந்த அறையைவிட்டு வெளியேறி தப்பிக்கும் மார்க்கம் கண்டறியமுடியும் என முடிவெடுத்தாள்.

 

தான் தப்பித்துபோகும் வரை தனது அப்பாவையும் பாட்டியையும் வானவராயர் ஐயா குடும்பம், உடன் இருந்து அவர்களின் மனம் உடைந்துபோகாமல் பார்த்துக்கொள்வார்கள் என்றும் நினைத்தாள்.

 

அவ்வாறு வானவராயரைப் பற்றி நினைக்கும் போதே ஐயாவின் மகனாக இந்த தீரமிகுந்தன் இருந்துமா இப்படிப்பட்ட காரியத்தை செய்யமுடிகிறது? என்ற கேள்வி எழுந்தது.

 

எனது ஐயாவின் மகனான தீரனை, என் மண்ணுக்கு எதிரான துரோகத்தை, தன்னால் முடிந்தவரை தடுத்து நிறுத்தவேண்டும் என்ற பலபல சிந்தனைகளுடன் அவள் மனதுடன் யுத்தம் செய்தாள்.

 

தீரனுடன் அவன் சொல் பேச்சு கேட்பதுபோல் நடிக்க வேண்டும் என்ற முடிவினால் பாத்ரூம்சென்று குளித்து அவள் போட்டிருந்த உடையையே திரும்ப உடுத்திக்கொண்டு வெளிவருவதற்கும் தீரனும் கதவை திறந்து கைநிறைய பைகளுடன் உள் வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது.

 

உள்ளே வந்தவன், யாழிசை அவனை பார்த்து செயற்கையாக புன்னகை புரிவதை கண்டு ஒருநிமிடம் புருவம் சுருக்கி யோசித்தான். பின் அவள் தன்னிடம் வேசமிடுகிறாள் என புரிந்துகொண்டுஎன்கிட்டேயேவா?’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு அவனும் அவளை பார்த்து அர்த்தமுள்ள சிரிப்பை கொடுத்தான்.

 

பின் அவன் உன் பெர்பார்மன்சை நீ காட்டிட்ட இப்போ என் பெர்பார்மன்சை பார். என்று மனதினுள் கூறிக்கொண்டே,

 

“ஹேய் பேபி கம்மான் திஸ் ஆல் போர் யூ” என்று கை நிறைய வைத்திருந்த பைகளை தூக்கி காண்பித்தான்.

 

“டுமாரோ மார்னிங் ஒரு சின்ன பார்ட்டி அதில் உன்னைய என் பியான்சியாக எல்லோருக்கும் இன்ட்ரடியூஸ் செய்யப்போறேன்.

 

அப்போ உன்னைய பார்க்க ஏஞ்சல் போல இருக்கணும். இதை என்னிடம் போட்டு காண்பி! நாளை பங்ஷனுக்கான உன்னுடைய புல்மேக்கபுக்கும் ஒரு டிரையல் பார்த்திடணும்.

 

கட்டிலின் மேல் அவன் கையில் இருந்த அனைத்து பிக் ஷாப்பர்களையும் வைத்தவன் ஒன்றை மட்டும் கையில் எடுத்து “இதை மட்டும் போட்டுட்டு வா.” என்று அவளிடம் கொடுத்தான்.

 

அவன் சொன்ன செய்தி யாழிசையின் விழியைப் பிதுங்க வைத்தது. எனினும் அவனிடம் தனது முகத்தில் தெரிந்த அச்சத்திற்கு மாறாக உதடுகளை கப்பல்போல் சிரித்தபடி வைத்து இதோ இப்போவேஎன்றவள் அந்த சேரியை உடுத்திக்கொள்ள பாத்ரூமினுள் சென்றாள்.

 

சிகப்பில் கோல்டன் நிறமுடைய பார்டர் வைத்து, அதுபோலவே டிசைனர் பிளவுஸ் அவளுக்கு அளவெடுத்ததுபோல் இருந்தது.

 

ஆனால் அதன் அழகு மற்றும் டிசைனில் எல்லாம் யாழிசையின் கவனம் செல்லவில்லை. தான் தீரன் சொன்னதை கேட்டு நடப்பதுபோல் நடிப்பது என்பது எளிதானது கிடையாது என்பதைப் புரிந்துக்கொண்டாள்.

 

ஏனெனில் அவள் தீரனுக்கு இசைந்துபோவது போல் பாவலா காண்பிக்க வேண்டுமானால் நாளை நடக்கவிருக்கும் பார்டியில் அவனின் பியான்சியாக அறிமுகப்படுத்துவதை மறுப்பில்லாமல் ஏற்பதுபோல் சபையில் நிற்க வேண்டும்.

 

அவ்வாறு தான் நடிப்பதற்கு முன் அவன் கூறியதுபோல், இது வெறும் நாடகம் தான் என்பதை அவனிடம் உறுதிபடுத்திக் கொள்ளவேண்டும் என்றும், பலதும் நினைத்தபடி உடை மாற்றியதால் அந்த சேரியின் அழகையோ தனித்தன்மையையோ அவளின் கவனத்தில் எடுக்கவில்லை.

 

அவள் உடைமாற்றிவிட்டு அந்த ரூமிற்குள் வரும் போது தீரனுடன் இன்னும் ஒருவன் இருந்தான் அவனை பார்க்கும் போதே அவன் இந்தியன் கிடையாது என்பது அவளுக்கு தெரிந்தது.

 

மேலும் அவன் அங்கிருந்த பெட்டின்மேல் நிறைய பிரஸ் மற்றும் மேக்கப் சாதன்களை கடை பரப்பி வைத்திருந்தான். அவனும் பார்க்க பேசன் டிவி சேனலில் வரும் ஆண்களைப்போல் வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் ஒருகாதில் கம்மலுடன் பிரவுன் நிற விழிகளுடன் வெஸ்டன் லுக்கில் இருந்தான்.

 

அவனின் பெயர் ஸ்டீபன். அவனுடைய ஹாபி மற்றும் பார்ட்டைம் ஜாப் மாடலிங் செய்பவர்களுக்கு மேக்கப் போட்டுவிடும் மேக்கப்மேனாக செயல்பட்டு வருபவன்.

 

ஸ்டீபன் பார்க்க அழகை ஆராதிப்பவனாக தெரிந்தாலும், அவனின் குடும்பம் ரஷ்யாவின் விவசாய குடும்பம். அவனின் குடும்ப விவசாய நிலம் பெயர் சொல்லக்கூடிய பெரிய கார்பரேட்டர்களின் தேவைக்காக அவர்களிடம் இருந்து பிடுங்கப்பட்டது.

 

அவ்வாறு பிடுங்க அந்த கார்பரேட் நிறுவனம் முயன்றபோது அதை எதிர்த்த அவனின் அப்பாவின் மரணம் அவனை மனதிற்குள் போராளியாக உருவெடுக்க வைத்திருந்தது.

 

மேலும், இமாமிக்கும் அவனுக்கும் இடையில் ஏற்கனவே அறிமுகமிருந்ததால் தீரனால் இங்கு நடத்தப்படும் கார்பரேட்டர்களுக்கு எதிரான போராட்டத்திற்கு தீரனின் புறம் நிறுத்த இமாமியால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் அவன்.

 

அவனுக்கு யாழிசையை தனது பியான்ஷி என்றுகூறி தீரன் அறிமுகப்படுத்தி வைத்தவன். அவனின் மேக்கப் திறமையை யாழிசையிடம் கூறி அவனை யாழிசைக்கும் அறிமுகபடுத்தினான்.

 

நாளை அவளது காஸ்ட்யூமுக்கு ஏற்ற மேக்கபிற்கான ஒத்திகையை இன்று அவளுக்கு அவன் இப்பொழுது செய்துவிடப் போவதாக கூறினான்.

 

யாழிசை தீரனிடம், தங்களது அஃக்ரீமெண்ட் கல்யாணத்தை பற்றி பேசி முடிவெடுத்துவிடவேண்டும் என்று நினைத்திருந்த இந்த நேரத்தில் இன்னொருவனின் முன் அதை பேசமுடியாமல் அமைதியாகிவிட்டாள்.

 

அடுத்த அரைமணி நேரத்தில் பொம்மையாக நின்ற யாழிசை ஸ்டீபனின் கைவண்ணத்தில் அழகு மெழுகுச் சிலையாகி உருமாறி நின்றாள்.

 

ஸ்டீபன் அவளுக்கு தான் போட்டுவிட்ட மேக்கப்பில் திருப்தியாகி அவளில் அபிப்ராயத்தை கேட்பதற்காக அவளின் முகம் பார்த்தான்.

 

ஆனால் அவள், அவளையே கண்களால் கபளீகரம் செய்துகொண்டிருந்த தீரனின் பார்வையை எதிர்நோக்க முடியாமல் அவஸ்த்தையாய் நெளிந்து கொண்டிருப்பதை பார்த்தவன், சிரித்தபடி தீரனிடம் “என்ஜாய் பாஸ்” என்றபடி அந்த அறையைவிட்டு வெளியேறினான்.

 

அவன் வெளியேறியதும் இதயம் லப்டப் லப்டப் என்று துடிக்க நின்றிருந்த யாழிசையை தீரன் நெருங்க நெருங்க அவள் பின்னால் நகர்ந்துகொண்டே சென்றாள்.

 

அதில் பொறுமை இழந்த தீரன் இருவருக்கும் இடையேயுள்ள இடைவெளியை இரண்டே எட்டில் குறைத்து ஒருகைநீட்டி அவளை தனது கை வளைவிற்குள் கொண்டுவந்தவன்,

 

“வாட் எ கிளாசிக் பியூட்டி யூ ஆர். ஐ வான்ட் டு கிஸ் யூ. ஷால் வீ கிஸ்?. என்று முதல் முதலில் அவளிடம் பேசிய அதே வார்த்தையை இப்பொழுதும் முணுமுணுத்தான்.”

 

தீரனிடம் அஃக்ரீமெண்ட் பற்றி பேசி முடிவெடுக்க வேண்டும் என்று அவள் நினைத்திருந்த வேளையில் அவன் தன்னை பார்த்த தீவிரமான பார்வையில் கலவரம் அடைந்திருந்த யாழிசை இவனை நம்பி அஃக்ரீமெண்ட் கல்யாணத்திற்குள் இறங்குவது சரிவருமா? என்று கேள்வியை தொக்கி நின்றவள் அவனின் வார்த்தையில் கலவரமானாள்.

 

எனவே அவனின் கைவளைவிற்குள் நின்றவள் தனது கைகொண்டு தள்ளி நிறுத்த அவனின் நெஞ்சில் கைவைத்து முயன்றாள். இம்மிகூட அவனை தன்னைவிட்டு விலக்கமுடியாத கோபத்தில் அவனின் கைவளைவிலேயே இருந்துகொண்டு அன்று போல அவன் கன்னத்தில் அறைய கை வீசினாள்.

 

அவள் இவ்வாறுதான் செய்வாள் என்பதை ஓரளவு அவன் எதிர்பார்த்துதான் இருந்தான். இருந்தபோதிலும் ஒவ்வொருமுறையும் அவள் தன்னை மறுக்கும் போதும் அவனுக்குள் எழும் சீற்றத்தை கட்டுபடுத்தமுடியாமல் அவளின் கை தனது கன்னத்தை நெருங்கும் முன் அவளை ஒருகையால் வளைத்துக்கொண்டு மற்றொரு கையால் ஓங்கிய கையை பிடித்து அவளின் பின் கொண்டுசென்றவன் அழுத்தி .தன்னுடன் அவளை நெருக்கி பிடித்தான்.

 

அத்துடன் நில்லாமல் முதலில் வளைத்துப்பிடித்திருந்த கையை விடுவித்து மேலே கொண்டுவந்து அவளின் தாடையை பிடித்து முகத்தை நிமிர்த்தி அவளின் உதடுகளில் தன் உதடு தொட நூலளவு இடைவெளி மட்டுமே இருக்க கோபத்தில் அவனது மூச்சு காற்று சூடாக அவளின் முகத்தில் மோதியது.

 

அவனின் மூச்சுகாற்று தன் முகத்தில் மோதும் நிலையில் இருக்கும் தீரன் தனது பெண்மையை கலங்கபடுத்துவதை தடுக்க முடியாத இயலாமையில் கண்களை மூடியவளின் கண்ணில் நிறைந்திருந்த கண்ணீர் அவளின் கன்னத்தில் வடிந்தது.

 

அவ்வளவு அருகில் அவளின் இதழிருந்தாலும் அவனின் பொங்கிய கோபம் கலந்த தாபத்தில் அவளின் கண்ணீர் வடிந்து பொங்கிய உணர்வை அணைத்தது.

 

எனவே அவளை வேகமாக உதறியதில் அருகில் இருந்த பெட்டில் தடுமாறி விழுந்தவளிடம் டோன்ட் மேக் மீ ஆங்ரீ. இட்ஸ் நாட் குட் பார் யூ!என்று கர்ஜித்தவன் அந்த அறையை விட்டு வெளியேறினான்.


 

அத்தியாயம்-20

 

சந்தியா, கெஸ்ட்ஹவுஸின் வாசல் படியில் கால் வைத்ததும் காவல் நாய் லேசாக உறுமிக்கொண்டே கம்பீரமான தோற்றத்துடன் சந்தியாவிடம் முன் வந்தது.

 

அச்சோ! இந்த டைகர் காவலுக்கு இருக்கும் போது எப்படி மிதுனனை உள்ளிருந்து வெளியே கொண்டுவர முடியும்? என நினைத்தவள் அதன் கழுத்து பெல்டினை கைகளில் பற்றி இழுத்துச்சென்று கெஸ்ட் ஹெவுசின் சைடில் இருந்த அதன் இடத்தில் கட்டிப்போட்டாள்.

 

பின் சந்தியா வீட்டில் காவல் இருக்கும் வாட்ச்மேன் மற்றும் அவளின் தந்தையின் அடியாட்கள் மற்றும் ஜன்னல் வழியே அவள் குடும்பத்தினர் யாரும் தன்னை கவனிக்காத வகையில் பதுங்கி பதுங்கி கெஸ்ட் ஹவுஸின் அருகில் சென்றவள் அதன் கதவை தள்ளி திறக்க முயன்றாள் ஆனால் கதவு உட்புறமாக லாக் செய்யப்பட்டு இருந்தது.

 

உடனே அந்த கெஸ்ட் ஹவுசின் பின்னால் இருந்த சமையல் அறையோடு பின் வாசலுக்கு வர ஒரு கதவு இருந்தது அது திறந்துள்ளதா? என்று பார்க்க பின்னால் சென்றாள்.

 

அந்த கதவில் கை வைக்கவும் அது திறந்திருப்பதை பார்த்து நிம்மதியடைந்தாள்.

 

அந்த வீட்டின் ஒவ்வொரு அடியும் அவளுக்கு தெரியும் என்பதால் விளக்கை போடாமலேயே வீட்டின் இருளுக்கு கண்கள் பழகியதும் கிடைத்த சிறு ஒளியிலேயே ஹாலில் எரிந்துக்கொண்டிருந்த நைட் லேம்ப் மூலம் கிடைத்த சிறு வெளிச்சத்தில் முன்னேறினாள்.

 

அந்த வீட்டின் ஹாலில் அலங்கோலமாக படுத்து உறங்கிக்கொண்டிருந்தனர் மிதுனனுக்கு காவல் இருந்த தடியர்கள்.

 

அவர்கள் குடித்த டீயில் கலந்திருந்த தூக்க மாத்திரையுடன் இரவு அருந்திய மதுவின் போதையும் சேர்ந்து ஜடம்போல் உணர்வின்றி கிடந்தனர்.

 

இருந்தும் காலடி சத்தம் வராமல் பூனைபோல அடிவைத்து உள்சென்றாள் அங்கிருந்த மூன்று ரூமையும் திறந்து பார்த்தாள்.

 

எதிலும் மிதுனன் இல்லாததால் கலவரமடைந்த சந்தியா! ஒருவேளை ஸ்டோரூமில் அடைத்துத்திருக்கிறார்களோ? என்று அதனை திறந்து பார்த்தாள்.

 

ஜன்னல்கள் ஏதும் இல்லாத அந்த அறையில் இருட்டு அப்பிக்கிடந்தது. எனவே உள்வந்து கதவை அடைத்தவள் சுவற்றை தடவி மின் விளக்கின் சுவிட்ச்சை போட்டாள்.

 

விளக்கின் ஒளியில் அவளின் கண்ணில் விழுந்த மிதுனனின் நிலை கண்டவள் நெஞ்சம் வேதனையில் துடித்தது.

 

அரை மயக்க நிலையில் உடலில் அங்காங்கே கிடைத்த அடிகளினால் ரத்தம் கன்றிய நிலையில் நாள் முழுவதும் உணவின்றி தலை தொய்ந்து நாற்காலியில் கட்டிவைத்த நிலையில் இருந்தான் மிதுனன்.

 

பதட்டத்துடன் அவனில் அருகில் சென்றவள் மிதுனன்மிதுனன் கண் முழிச்சுப்பாருங்க! என்று அவனை மயக்கத்தில் இருந்து தெளியவைப்பதற்காக அவனது கன்னத்தை தட்டினாள்.

 

அப்பொழுது உண்டான வலியினால் “ஸ் கட்டிப்போட்டு அடிக்கிற நீங்கயெல்லாம் சரியான பொட்டப்பயல்கடா” என்று அவனை அடித்த அடியாட்கள் என்று நினைத்து புலம்பினான்.

 

“ஐயோ மிதுனன் மெதுவா பேசுங்க நான் சந்தியா உங்கள இங்கிருந்து தப்பிக்க வைக்க வந்திருக்கேன்” அவனின் காதுக்கருகில் சென்று மெதுவாக கூறினாள்.

 

சந்தியா என்ற பெயர் அவனின் உணர்வை உந்தியது. எனவே நன்றாக கண்விழித்து பார்த்தவன் ஏதோ சொல்லப்பார்த்தான்.

 

“ஸ்முதல்ல இங்கிருந்து நீங்க தப்பிச்சு போகிற வழியை பார்போம்” என்றவள், அவள் மறைத்து கொண்டுவந்த கத்தியின் மூலம் அவனை கட்டியிருந்த கயிற்றை அறுத்து எறிந்தாள்.

 

அவளின் செயலையும் அவளின் முகத்தில் தன்னை பார்த்து தாரைதாரையாய் வடிந்த கண்ணீரையும் கண்டவன் மனம் தனக்காக அவள் அழுகிறாள் என்றும் தன்னை அவளது தந்தையிடம் இருந்து காக்க துணிந்த அவளின் செயலில் தெரிந்த தனது மீதான அவளின் அன்பிற்கு முன் அவன் அடிமையாகிப் போனான்.

 

நேற்று காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் ஒரே மாதிரி நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே கட்டிபோடப் போடபட்டிருந்ததால் எழுந்ததும் நிற்க முடியாமல் தடுமாறியவனை அணைத்துப் பிடித்து நிறுத்தினாள் சந்தியா.

 

அந்த நேரம் அவள் அவனை அணைத்ததில் ஒரு தாய் தன் சேயை பிடிக்கும் வாஞ்சையை உணர்ந்தான் மிதுனன்.

 

அவன், அவளின் செயலில் புதிதாய் ஒருநிமிடம் முன் உணர்ந்த அவளின் அன்பினால் விழைந்த உணர்வின் உரிமையால் அவளின் அணைப்பை அவன் ஏற்று நின்றதுடன் அவனின் கரமும் அவளை தன்னுடன் இறுக்கி அணைத்தது.

 

அவ்வாறு அணைக்கையில் அவனின் உடலில் உண்டாகி இருந்த காயங்கள் எரிச்சலையும் வலியையும் கொடுத்தது. ஆனால் அதுவும் சுகமாகவே அவனுக்கு பட்டது.

 

ஒருநிமிடத்திலேயே தன்னை நிலைபடுத்திக் கொண்டவன் நிமிர்ந்து நின்றான். பின் அவளிடம் “தாங்க்ஸ் சந்தியா என்றான்.

 

“ஸ்.பேசாதீங்க. முதலில் வெளிய போகணும்”, அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு ரூமின் லைட்டை ஆப் செய்தவள் கதவினை திறந்து எட்டிப் பார்த்தாள்.

 

அவள் உள்ளே வரும்போது எப்படிக் கிடந்தார்களோ அப்படியே இன்னும் கிடந்தார்கள் என்றபோதிலும் பதுங்கியபடி மிதுனனை கைப்பிடித்து தன்னுடன் இழுத்து நடந்தாள்.

 

மிதுனனும் அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் அவளின் பின்னால் வந்தாலும் அவனின் கண்களோ அவளின் கையில் இருந்த நடுக்கமும் தன்னை யாரும் அறியாமல் வெளியேற்றிவிடவேண்டும் என்ற அவளின் பதட்டத்தையும் அளவெடுத்துக் கொண்டே அவளின் பின்னால் அவளைப்போலவே பதுங்கியபடி சென்றான்.

 

கெஸ்ட்ஹவுஸ் வெளியே வந்து கார்டனை கடந்தவர்கள் கேட்டின் அருகில் வாட்ச்மேன் அமர்ந்திருந்த இடத்தின் பின்னால் சற்று பதுங்கி அமர்ந்ததனர்.

 

மிதுனனின் காதில், “இங்க பாருங்க என்று அவள் சுட்டிக்காட்டிய மாங்கன்றின் தண்ணீர் பாத்தியில் விடும் தண்ணீர் கொட்டுவதற்கு அடுக்கபட்டிருந்த கல்லை காட்டி, “இதை எதிர் சைடு தொலைவா தூக்கிப்போடுங்க. நான் போட்டால் தூரம் போய் விழாது. நீங்க தூரமா போடுங்க.

 

எதுக்கென்று புரிந்ததுபோல் இரண்டு கல்லை மண்தரையில் இருந்து உருவி ஒன்றன்பின் ஒன்றாக எதிர் திசையில் தூக்கிபோட்டான் மிதுனன்.

 

கல் விழுந்ததில் கார்டனில் உண்டான சத்தத்தில் வாட்ச்மேன் வீட்டின் பின்னால் உள்ள கார்டனில் எழுந்து சத்தம் கேட்ட இடத்தை பார்க்கச் சென்றான்.

 

அவன் எழுந்து போனதும் வேகமாக வாட்ச்மேன் அமரும் கூண்டுக்குள் விரைந்து சென்ற சத்தியா கேட் சாவியை எடுத்து சிட்டாக பறந்துபோய் கேட்டை திறந்தாள்.

 

அவளை தொடர்ந்து வந்த மிதுனன் கடைசிநிமிடம் சந்தியாவை இழுத்து அணைத்தவன் “எல்லோரும் அம்மாவை போல் வாழ்க்கைத் துணை வேண்டும்னு நினைப்பார்கள். இப்போ உனக்குள்ள நான் என் அம்மாவை பார்த்தேன் சந்தியா.

 

இந்த அன்பை நான் இனி நழுவ விடமாட்டேன். எனக்காக உன்னை நீ பத்திரபடுத்திவை” என்றவன் வாட்ச்மேன் திரும்புவதை கண்டு அவளைவிட்டு ஒரே எட்டில் கேட்டைத்தாண்டி நிற்காமல் ஓடிச்செல்ல ஆரம்பித்தான்.

 

ஆனால் அவன் அந்த தெருவை கடந்து செல்லும் பாதையில் குறுக்கே நின்றிருந்த காரை கடக்க நினைக்கையில் அந்த காரில் இருந்து நான்குபேர் துப்பாக்கியுடன் இறங்கி அவனை சுற்றி வளைத்தனர் அமைச்சரிடம் இருந்து தப்பித்தவன் வேறு ஒருவனிடம் மாட்டிகொண்டான்.

 

வீட்டின் பின்னால் கார்டனில் கேட்ட சத்தத்தை கவனிக்க போன வாச்மேனின் காதில் விழுந்த கேட் திறக்கும் சத்தத்தில் திரும்பி பார்த்தவன் “யாரது? கேட்டை திறக்குறது?” கத்திக்கொண்டே கழுத்தில் போட்டிருந்த விசிலை அடித்துக்கொண்டே ஓடிவந்தான்.

 

அவன் ஏற்படுத்திய சத்தத்தில் வீட்டின் அனைத்து விளக்குகளும் எரிய ஆரம்பித்தது. எனவே சந்தியாவால் வந்ததுபோல் அரவம் இல்லாமல் வீட்டிற்குள் போக இயலவில்லை.

 

சத்தத்தினால் எழுந்த ரங்கராஜன் தனது அறையிலிருந்த ஜன்னல் வழியாக பார்த்த போது பார்வை வட்டத்துள் விழுந்தது சந்தியா. அதுவும் கலவரமாக வீட்டை நோக்கி நடந்து வந்துகொண்டிருப்பதை பார்த்து, ‘இவ எதுக்கு இப்போ அங்கிருந்துவாரா? என்று வேகமாக துண்டை எடுத்துக்கொண்டு வாசலுக்கு விரைந்தார். அவரின் பின்னேயே அவரது மனைவியும் வந்தார்.

 

வாட்ச்மேன் விசில் கொடுத்தபடி ஓடி வரும்போதே சந்தியாவை கேட்டருகில் கண்டுவிட்டார். இந்த வீட்டு புள்ள எதுக்கு கல் வீசி என்னைய திசைதிருப்பி கேட்டை திறந்துச்சு? இப்போ ஐயாட்ட இதை நான் சொன்னா எப்படி அவர் நடந்துக்கிடுவாரோ?” என்று குழப்பத்திலேயே நின்றுவிட்டான்.

 

சந்தியா பின் வாசலில் வழியாக வந்ததால் முன்வாசல் உள்ளே லாக் செய்யப்பட்டு இருந்தது எனவே ரங்கராஜன் முன்வாசலை திறந்துகொண்டு வெளியில் வரும் சமயம் அவள் வீட்டின் பின் பகுதிக்குச் சென்றாள்.

 

வாசல் கதவு திறந்து ரங்கராஜன் வெளியே வருவதை பார்த்த வாட்ச்மேன் “ஐயா பின்னாடி எதோ சத்தம் கேட்டுச்சு அதை பார்க்க நான் போனப்போ சந்தியாம்மா கேட்டை யாருக்கோ திறந்து விட்டாங்க” என்று சொன்னதும் கோபத்தில் அவனின் கன்னத்தில் சப்பென்று அறைந்தார்.

 

பின்வாசலின் வழியாக சந்தியா அவளின் அறைக்கு ஓடிச்சென்று அவள் அப்பொழுது போட்டிருந்த பிரவுன் கலர் நைட்டியை கழட்டிவிட்டு பிங் கலர் இரவு உடை அணிந்துக்கொண்டு தன்னுடைய நடுக்கத்தை மறைத்தபடி தூங்குபவள் போல் படுத்துக் கொண்டாள்.

 

வாட்ச்மேனை அடித்தவர் உள்ளம் எதுக்கு சந்தியா வாட்ச்மேனை ஏமாற்றிவிட்டு கேட்டை திறந்தாள்?! என யோசித்தவரின் நெஞ்சில் உதித்த விபரீதமான காரணத்தை யூகித்து தலையை உலுக்கி உதறியபடி,

 

தனது மனைவியிடம் “என்னடீ பொட்டபுள்ளையை வளர்த்திருக்க? இப்போ என்னெத்தடி செஞ்சு வச்சுருக்கா? சத்தம் போடும்போதே அவரது மகன் சக்ரவர்த்தி அங்கு வந்தான்.

 

“என்னப்பா?” என்று கேட்டதும் “சந்தியா இந்தநேரம் யாரையோ கதவைத்திறந்து வெளியில் அனுப்பியிருக்கா!” என்றதுமே,

 

“என்னது” என்று இழுத்தபடி யோசித்தவன், அப்பா கெஸ்ட் ஹவுஸ் போய் நாம அடைத்துவைத்தவன் இருக்கானான்னு பார்க்கணும் என்றபடி அங்கு ஓடினான்.

 

அவனின் பின்னாலேயே ரங்கராஜனும் விரைந்தார். கதவை டமார் டமார் என்று தட்டியபடி “எலேதடியங்களா என்னடா செய்றீங்க?” என்று கத்தியும் விழிக்க முடியாமல் மதுவின் போதையுடன் சந்தியா கலந்த தூக்க மாத்திரையின் வீரியத்தால் “எவன்டா அது.?” என்று லேசாக குழறியபடியே அந்த தடியர்கள் எழாமல் படுத்திருந்தனர்.

 

ரங்கராஜன் தட்டியும் கதவு திறக்காததால் சக்ரவர்த்தி வேகமாக அதன் பின் வாசலுக்கு விரைந்தான்.

 

அந்த கதவு திறந்திருப்பதை பார்த்தவன் வேகமாக உள்நுழைந்து ஹாலுக்கு வந்தவன், அதன் லைட்டை ஒளிரவிட்டவன் அலங்கோலமாக போதையின் பிடியில் கதவு தட்டும் சத்தத்தில் கொஞ்சம் சுரணை வந்தாலும் எழுந்து சென்று கதவை திறக்க முடியாத நிலையில் புலம்பிகொண்டிருந்த அடியாட்களை காலால் உதைத்தவன், தன் தந்தைக்கு கதவை திறந்துவிட்டான்.

 

திறந்த மறுநொடி அவனை தள்ளிக்கொண்டு உள்நுழைந்த ரங்கராஜன் போதையில் சுயமிழந்து கிடந்த அவனின் அடியாட்களை பார்த்து பல்லை கடித்தபடி கேட்டார்,

 

“என்ன இப்படி மட்டையாகி கிடக்குறாங்களே! சரக்கடிச்சாலும் நம்ம பசங்க தெளிவாத்தானே இருப்பாங்க? என்று யோசனையுடன் நின்றிருக்க,

 

சக்ரவர்த்தியோ ஸ்டோரூமுக்கு விரைந்தான், கயிறு அறுந்து கிடந்ததை கண்டுஅப்பா அவன் தப்பிச்சுட்டான் நம்ம சந்தியா அவனை தப்பிக்க வச்சிருக்கா” என்று கத்தினான்.

 

அந்த அறையின் வாசலில் துப்பாக்கி ஏந்திய அயல்நாட்டு மனிதன் நின்றிருந்தான். அதில் ஒரு மேஜையும் எதிர்எதிராக இரண்டு இருக்கைகளும் போடப்படிருந்தது. ஓரமாக ஒருவர் மட்டும் படுக்க கூடிய கட்டில் போடப்பட்டிருந்தது.

 

அதில் படுத்திருந்த மிதுனனுக்கு கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது. அதனாலோ என்னவோ கொஞ்சம் கொஞ்சமாக உணர்வுக்கு அவன் வந்துகொண்டிருப்பதன் அடையாளமாக அவனின் கண்மணிகள் மூடிகிடந்த அவனின் இமைகளுக்குள் உருண்டுகொண்டும் புருவம் சுழித்தும், கை விரல்கள் அசையவும் ஆரம்பித்தது.

 

அதனை தனது அறையில் இருந்த திரையில் அங்கே பொருத்தப்பட்டிருந்த கேமராவின் உதவியால் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் தீரன்.

 

சுயஉணர்விற்கு திரும்பிக்கொண்டிருந்த மிதுனனின் நினைவில் அன்று காலேஜில் ரங்கராஜனின் ஆட்கள் கடத்துவதற்கு முன் சி.என்.ஜிக்கு எதிரான தனது களப்பணிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளையில் யாழிசையை கண்டவன் கண்கள் அதுவும் தனியாக இருவரும் வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடத்தை நோக்கி சென்றதை கண்டவன் நெஞ்சினில் தான் இன்று எப்படியாவது யாழிசையிடம் தன் மனதில் உள்ளதை சொல்லிவிடவேண்டும் என்ற எண்ணியிருந்ததை செயல் படுத்திவிடவேண்டும் என்ற உத்வேகம் பிறந்தது.

 

எனவே தன்னுடன் இருந்த மற்ற நண்பர்கள் அறியாமல் நழுவி அவர்களை நோக்கி விரைந்தான்.

 

ஆனால் தான் அவர்களை நோக்கி செல்வதை தூரத்தில் இருந்தே சந்தியா கண்டுகொண்டாள். அவளுடன் இருந்த யாழிசை அதனை உணர்ந்ததுபோல் தெரியவில்லை.

 

அவ்வாறு கண்டுகொண்ட சந்தியாவின் பார்வை தன்னை பார்த்து ஏக்கமாக தழுவுவதை தொலைவில் இருந்தே மிதுனனால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

 

ஏனோ அவளுக்கு தன் மீது உள்ள ஈடுபாட்டை அவளின் தந்தையை கொண்டு தான் தவிர்க்க முயன்றாலும் அவளின் பார்வையில் இருந்த தனக்கான தேடல் அபூர்வமானதாக அந்த நேரம் அவனுக்கு தோன்றியது.

 

இவ்வாறு பலயோசனைகளுடன் அவர்களின் அருகில் நெருங்கிவிட்ட மிதுனனின் வாய் ஆட்டோமெட்டிக்காக கேர்ள்ஸ்” என்று அழைத்துவிட்டது.

 

தனது அழைப்பினில் திரும்பிய யாழிசையிடம் கூறவந்த காதலை யாழிசையின் தன்மேல் ஆர்வமில்லாத பார்வையிலும் ஆனால் அவளின் அருகில் இருந்த சந்தியாவின் தவிப்பான பார்வையிலும் தடுமாறிவிட்டான்.

 

யாழிசையிடம் தான் கொண்ட ஒருதலை காதலைவிட தன்மேல் சந்தியா கொண்டுள்ள காதல் தீவிரமானதாக மிதுனனுக்கு அந்நேரம் தோன்றியது.

 

மேலும் அப்படிபட்ட சந்தியாவின் அருகில் யாழிசை இருக்கும் போது தன்னால் தான் முடிவெடுத்ததுபோல் யாழிசையிடம் தன் காதலை கூறி சந்தியாவை காயப்படுத்த அவனால் ஏனோ முடியவில்லை.

 

எனவே டக்கென்று பேச்சை மாற்றி தன் கையில் இருந்த நோட்டீஸை அவர்களிடம் கொடுத்துவிட்டு மீட்டிங் பற்றி படபடவென கூறியவன் அவர்களின் பதிலை கூட பெறாமல் வேகமாக எதுவோ துரத்துவது போல் அந்த இடத்தைவிட்டு அகன்றுவிட்டான்.

 

வாகனங்கள் நிறுத்தி வைத்திருந்த இடத்தில் யாழிசையும் சந்தியாவையும் சந்தித்துவிட்டு, ‘சே. இப்படி சொதப்பிட்டேனே தன்னையே நொந்துக்கொண்டு சுற்றி உள்ளதை கவனிக்காமல் வாகனங்களின் வழியாக சென்றுக்கொண்டிருந்ததும் அதனை தொடர்ந்து நடந்த நிகழ்வுகளும் மனக்கண் முன்னே படமாக ஓடியது.

 

மினிஸ்டர் ரங்கராஜனின் ஆட்கள் நின்றுகொண்டிருந்த வாகனங்களுக்குள் இருந்த பொலிரோவில் அமர்ந்துக் கொண்டிருந்தார்கள்.

 

அதை அறியாமல் மிதுனன் அந்த காரை சந்தியாவையும் யாழிசையும் சந்தித்துவிட்டு கடக்க முயன்ற நேரம் அதிரடியாக அந்த பொலிரோவின் கதவை திறந்து அவன் முகத்தில் துண்டைபோட்டு ஒருவன் இழுத்தான்.

 

தனது முகத்தில் படர்ந்த துண்டை கொண்டு தன்னை பின்னால் யாரோ இழுத்ததும், அத்துண்டை தனது முகத்தில் இருந்து அப்புறப்படுத்த மிதுனனின் கைகள் உயர்ந்தது.

 

அப்போது அவனின் பின் மண்டையில் ஒருவன் கட்டையால் தாக்க “அம்மா” என்று மிதுனன் கத்தியதை அந்த துண்டு அவன் வாயினில் அழுத்தி இழுபட்டதால் வெளியில் பலமாக கேட்பதை தடுத்தது.

 

மேலும் இருவர் அந்த எதிர்பாராது அடியில் மிதுனன் நிலை தடுமாறியதை பயன்படுத்தி தங்களின் காருக்குள் இழுத்து போட்டுக்கொண்டு அந்த பொலிரோ கார் பயணப்பட ஆரம்பித்தது.

 

மிதுனனின் இருபக்கமும் அமர்ந்துக்கொண்டிருந்த தடியன்கள் அவனை இறுக்கி பிடிக்க முயன்றனர்.

 

ஆனால் காங்கேயன் காளையாக திமிறியபடி யாரடா நீங்க? என்னை விடுங்கடா என்று கர்ஜித்தான்.

 

அவன் திமிரி தன்னை பிடித்திருந்தவர்களை உதர முயன்றதில் காரே ஆட்டம் கண்டது.

 

எனவே இரண்டுபேர் அவனை பிடித்தது மட்டுமல்லாமல் மற்றும் இரண்டுபேர் கையில் வைத்திருந்த கட்டையால் அவனை சரமாரியாக அடிக்க தொடங்கினர் அத்துடன் டேய் அடங்கி உக்காருறாயா? அல்லது அடிவாங்கியே சாகப்போகிறாயா? என்று கேள்வி கேட்டனர்.

 

காரில் அவனை ஏற்றுவதற்கு முன் அவன் தலையில் விழுந்த பலமான அடியில் ஏற்கனவே ஒருநிமிடம் அவனுக்கு இருட்டிகொண்டு வந்திருந்தது இப்பொழுது அதே இடத்திலேயே மேலும் இரண்டு அடிவிழுந்ததும் அவன் நினைவுத்தப்பியது.

 

திரும்ப அவனுக்கு நினைவு திரும்பும் நேரம் கைகள் பின்புறம் கட்டப்பட்டநிலையில் தரையில் படுத்திருந்தவனுக்கு கொஞ்சம் கொஞ்சமே நினைவு திரும்பி கொண்டிருந்தபோது அவனுடைய காதில்,

 

“என்னடா இப்படி கிடக்குறான். செத்துகித்து போய்ட்டானோ!” என்ற குரலும் அதனை தொடர்ந்து “இல்ல தலைவரே மயக்கமாத்தான் இருக்கான்” என்ற பேச்சு சத்தம் காதில் விழுந்தது.

 

“யாரை தலைவரென சொல்றாங்க? என்னை இவன்தான் ஆட்களைவிட்டு கடத்தி வரவச்சுருக்கான் யார் அது? என்று அடையாளம் காண்பதற்கு தனது இமைகளை சிரமப்பட்டு லேசாக திறந்து பார்த்தவன் கண்களின் விழுந்தது மினிஸ்டர் ரங்கராஜனின் உருவம்.

 

கையில் மொபைலை வைத்து யாருக்கோ டயல் செய்துக்கொண்டிருந்த ரங்கராஜன் காதிற்கு போனைக்கொடுத்து, தம்பி தீரமிகுந்தன், காலேஜ் பங்சனுக்கு கிளம்பிடீங்களா? பன்னிரெண்டு மணிக்கு அங்க வந்துருவேனு சொல்லியிருந்தேன்ல, ஆனா நான் வர லேட்டாகும். நான் கிளம்பிட்டேன்னு சொன்னபிறகு நீங்க வாங்க.

 

அதன்பின் அந்தபக்கம் பேசியவன் என்ன சொன்னானோ தெரியவில்லை. ஆனால் அதற்கு பதிலாக ரங்கராஜன், தம்பி நம்ம சி.என்.ஜிக்கு நிலத்தை கையகப்படுத்த போறதை அந்த காலேஜ் பையன் மிதுனன் தடுக்குறதுக்கு கூட்டத்தை திரட்ட பிட்நோட்டிஸ் பசங்களுக்கு இஸ்யூ செய்துட்டு இருக்கிறான் அந்த விஷயம் தெரியவந்துச்சா அதனால அவன நம்ம பசங்கள வச்சு தூக்கிட்டு வர சொல்லிட்டேன்.

 

என் முன்னாடிதான் அவன் கிடக்குறான் கொஞ்சம் கவனிச்சிட்டு நான் கிளம்பிவர நேரம் ஆகிடும். உங்ககிட்ட என் வேலையின் முதல் படியாக சி.என்.ஜிக்கு எதிராக முதல் ஸ்டெப்பை தடுத்து நிறுத்தறதுக்கான வேலையை நான் ஆரம்பிச்சுட்டேன்னு சொல்றதுக்காகத்தான் இப்போ போன் பண்ணுறேன். நான் காரியத்தில் இறங்கிட்டேனு புரிஞ்சுருப்பீங்க.

 

அதற்கு அந்த பக்கம் எதுவோ அந்த தீரன் சொன்னான். அது என்ன என்று தெரியவில்லை என்றாலும் அதற்கு பதிலாக ரங்கராஜன் கூறிய,

 

“அதனால் தம்பி நீங்க எனக்கு கொடுக்கறதா சொன்ன தொகையில அட்வான்சா ஒரு மூணுசியை இப்போ கொடுத்துட்டீங்கன்னா நல்லது” அதுக்கு அந்தபக்கமிருந்த தீரமிகுந்தன் சொன்னபதிலில்

 

முகம் முழுவதுவும் புன்னையுடன் “சரிங்க தம்பி ரொம்ப சந்தோசம் அப்போ நான் கிளம்பும்போது உங்களுக்கு போன் பண்றேன்” கைபேசியை துண்டித்தவரின் பார்வை தன்னை முழித்து பார்த்துக்கொண்டிருந்த மிதுனனின் மீதுவிழுந்தது.

 

மிதுனன் காதில் விழுந்த ரங்கராஜனின் வார்த்தைகளில் இருந்தே தன்னை எதற்காக கடத்தியிருகிறார்கள் என்பதை புரிந்துக்கொண்டான்.

 

“டேய் பய கண்முழிச்சுட்டான்டா நம்ம கெஸ்ட் ஹவுஸ்க்கு இழுத்துட்டு வாங்கடா” என்று கூறியவர் மிதுனனை பார்த்து

 

“என்ன பெரிய பருப்புன்னு உனக்கு நினைபோ! காலேஜுக்கு போனமா! டிகிரிய வாங்குனோமா, இன்டர்வியூவ அட்டன் பண்ணி வேலைக்கு போனோமானு இருக்காம பெரிய புரட்சி செய்றேன்னு கிளம்பின செத்துருவ நீ, இப்போ குடுக்குற ட்ரீட்மென்டுல அடங்குற. அப்படியில்லாட்டி நக்சலைட்னு முத்திரை குத்தி தீவிரவாதியா உன்னைய மாத்தி திகார் ஜெயிலில் போட்டா வாழ்க்கையே இல்லாம ஆக்கிடுவோம். ஒழுங்கா கேக்குறதுக்கு பதிலை சொல்லிடணும் சரியா?” ரங்கராஜனை முறைத்துப் பார்த்தான் மிதுனன்.

 

“அடிங் என்ன முறைப்பு? அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைகொடுத்து இழுத்துட்டுவாங்கடா” என்று கெஸ்ட் ஹவுஸ் நோக்கி நடந்தார்.

 

மிதுனனை இழுத்துட்டு வந்து சேரில் கட்டிப்போட்டு “எங்க மீட்டிங் போடுறதா உத்தேசித்திருந்தீங்க? யார் யாரெல்லாம் உன் கூட கூட்டு? என்று கேட்டு அவனை டார்ச்சர் செய்தனர். ஆனால் மிதுனன் அவர்களின் டார்ச்சர் அத்தனையையும் தாங்கிபடி எதுவுமே பேசாமல் ரங்கராஜனை முறைத்தபடி அமர்ந்திருந்தான்.

 

அவனின் அழுத்தம் கண்ட ரங்கராஜனின் மனதில் அவன் லேசுப்பட்டவனில்லை என்ற எண்ணம் உருவானது சாதாரண மக்களைவிட போராட்டகாரர்களின் மன உறுதி அதிகமானது. போராட்டகாரர்களின் மனஉறுதி அவர்களின் உடல் காயங்களால் தொய்ந்துவிடாது. அந்த காயங்களின் வலி அவர்களின் மனதை மேலும் புடம்போட்ட தங்கமாய் ஜொலிக்க வைக்கும்.

 

அவருக்கு தான் கல்லூரி செல்லவேண்டி நேரம் ஆகிவிட்டதால் வந்து அவனை கவனித்துக்கொள்வோம் என்ற எண்ணத்தில் எழுந்த ரங்கராஜன் தனது பி.ஏ விடம்,

 

“இந்த மிதுனன் நாம் நினைக்கிறமாதிரி சாதாரணமானவனா தெரியல! சாதாரணமான ஆளா இருந்தா இப்போ வாங்குன அடியில பாதிகூட தாங்க மாட்டான்.

 

நாம இவன குறைச்சு எடைபோட்டுட்டோம். நீ என்னசெய்ற இவன் பேக்ரவுண்ட் என்ன? யார்கூட எல்லாம் இவனுக்கு தொடர்பு இருக்குனு விசாரித்து இன்னைக்கு சாயந்தரம் எனக்கு ரிப்போர்ட் கிடைக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணு” என்று கூறியவர் வெளியேறிவிட்டார்.

 

அதன் பின் வாங்கிய அடியிலும் காலையில் இருந்து ஒட்டிய வயிறுமாக இருந்தும் அதன்பின் சந்தியாவின் நினைவினில் அவனது முகம் பூவாய் மலர்ந்தது.

 

சந்தியாவின் மூலம் தப்பித்து வெளியேறியவனுக்கு சிறிது தூரம் ஓடியதுமே ஏனோ கண்ணை கட்ட ஆரம்பித்தது. வேகமாக ஓடிவந்ததால் மூச்சு வாங்க ஆரம்பித்ததுடன் தலையில் பெரும் வலி உண்டாகி அதனை தாங்க முடியாமல் கண்கள் இருட்ட ஆரம்பித்தது.

 

அதனையும் மீறி அவன் கால்கள் முன்னேறி செல்ல சில எட்டு வைத்தவனை நான்கு பேர் வளைத்து பிடிக்க முயன்றனர்.

 

பொதுவாக மிதுனன் எப்பொழுதுமே கவனமாகத்தான் இருப்பான். ஆனால் தான் யாழிசை, சந்தியா ஆகிய இரு பெண்களால் தடுமாறி சுற்றி இருந்த ஆபத்தை உணராமல் போனதால் ரங்கராஜனின் ஆட்கள் ஏதிர்பாராமல் தன்னை தாக்கி கடத்தினர்.

 

இப்பொழுது தனது உடலில் ஏற்பட்ட திடீர் பலவீனத்தினால் அடுத்த சிலரிடம் எளிதாக மாட்டுவதை உணர்ந்துமே அவனால் ஏனோ தப்பிக்க அவனின் தலையில் ஏற்பட்ட வலி அவனை செயல்பட விடவில்லை.

 

அந்த நால்வரும் காரில் தன்னை எளிதாக ஏற்றி பயணப்பட ஆரம்பித்த நேரம் தலைவலி அவனுக்கு அகோரமானதால் “ஆ.” என்று கத்தியபடி தலையில் கைவைத்தவனுக்கு அவனின் முடிகளுக்கிடையில் ஏதோ ஒன்று தன் தலையில் குத்தி நின்றது கைக்கு புலப்பட்டதும் அதனை உருவி எடுத்தான்.

 

ஆமாம் அவனின் தலையில் கட்டையால் அடித்தபோது அக்கட்டை முறிந்து அதிலிருந்த ஒரு சிராய் துண்டு அவனின் தலையில் குத்தி நின்றிருந்தது.

 

அதனை உருவி எடுத்ததால் ரத்தம் குபுகுபு என்று வெளிவர ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து அவன் மயங்கி நினைவிழந்தது வரை இப்பொழுது நினைத்து கொண்டிருந்தான்.

 

அப்பொழுது தான் தன்னுடைய நிலை உணர்ந்தவன் தனது தலையை தொட்டுப்பார்த்ததில் அதில் பெரிய கட்டு போடப்படிருந்தது.

 

தனது கையில் குளுகோஸ் ஏறிக்கொண்டிருந்தது, ‘தான் மருத்துவமனையிலேயா இருக்கிறோம்! என்று நன்கு விழித்து சுத்தி பார்த்தான்.

 

ஆனால் தான் இருப்பது மருத்துவமனையில்லை என்பதனை உணர்ந்தவன், அவன் இருந்த ரூமின் கதவை திறந்து அங்கு உள்ளே வந்த தீரனை யார் என்று தெரியாமல் புருவம் சுழித்துப் பார்த்தபடி எழுந்து அமர முயன்றான்.

 

“ஆர் யூ ஓகே மிதுனன்?” என்று கேட்டான் தீரன். அவன் கேட்டதற்கு பதில் கூறாமல் “யார் நீங்க? இப்பொழுது எங்கு நான் இருக்கிறேன்?”

 

அவன் தமிழில் பேசவும் தீரனுமே தமிழிலேயே அவனிடம் உரையாட ஆரம்பித்தான். அவனின் தமிழ் உச்சரிப்பிலும் அவனின் பாடிலேங்வேஜ் மற்றும் ஸ்டைலில் யோசனையாக அவனை பார்த்த மிதுனன் அவன் வேறு நாட்டுக்காரன் என்பதனை உணர்ந்தாலும் அவனது முகம் அவனுக்கு பரிச்சயமனதுபோல் தோன்றியது.

 

அப்பொழுது, “நான் தீரமிகுந்தன் உன்னை நான் இங்கு கொண்டுவந்ததுக்கு ரீசன் சொல்வதற்குமுன் உன்னால் என்னுடன் சேட் பண்ற அளவு உனக்கு ஸ்டேமினோ இருக்கா?” என்று கூறிய தீரனின் வார்த்தையில் அமைச்சர் போனில் பேசிய தீரமிகுந்தன் என்ற பேர் அவனுக்கு ஞாபகம் வந்தது.

 

எனவே ரவுத்திரத்துடன் அந்த நிலைமையிலும் நீ என் மண்ணை என் தாய் பூமியை சூரையாட வந்த ராட்சசன் தானே. உன் எண்ணத்தை நிறைவேற விடமாட்டோம்” என்று கர்ஜித்தான்.

 

அவனின் தூய தமிழ் வார்த்தைகளின் அர்த்தத்தை கிரகிக்க முடியாமல் போனாலும் அவன் என்ன சொல்லியிருப்பான் என்பதனை யூகித்தவன்,

 

“கமான் மேன், நீ நினைக்கிற மாதிரி மற்றவர்கள் பார்வையில் நான் சி.என்.ஜியின் சார்பாக இங்கு வந்திருப்பது இங்குள்ள நேச்சுரல் ரிசோர்சை கன்சியூம் செய்ய வந்திருப்பவன் தான்.

 

ஆனால் ரியாலிடி அது கிடையாது. நான் ஒரு எகானமிக் ஹிட்மேனாக அனுப்பப்பட்டாலும் திஸ் பிளேஸ் இஸ் மை மதர்லேண்ட். சோ நான் இதை காப்பாத்த என்னுடைய புல் எபோர்டை ஸ்பென் பண்ணிட்டு இருக்கேன்.

 

பட் என்னுடைய அந்த முயற்சிக்கு நான் கூறுவதை நம்பி எனக்கு ஹெல்ப் பண்ணவைக்க நான் செலக்ட் செய்தவள் மிஸ் யாழிசை.

 

பட் உன்னுடைய ஒரு பிட் நோட்டீஸை வைத்து அவள் என்னை ஹேட் செய்துட்டா. சோ இனி என்னால் என்னுடைய டாட் மிஸ்டர் வானவராயரை யாழிசையின் மூலம் நல்லபடி என் மேல் எண்ணத்தை வரவைத்து இந்த பிளேசில் சி.என்.ஜி வராமல் இருக்க பிளானை செயல்படுத்த முடியாது.

 

உன்னால் சேக் ஆன என்னுடைய பிளானை உன்னைக்கொண்டே சரியாக்க நினைத்துதான் என் இடத்திற்கு உன்னை கொண்டுவந்திருக்கிறேன் மேன்.

 

“என்ன சொன்ன வானவராயர் ஐயா உன் அப்பாவா? அப்ப. நீ ரங்கராஜனிடம் போனில் பேசியதை நான் கேட்டதெல்லாம்? நீ சொல்வதை நான் எப்படி நம்ப?

 

என்று அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டான் மிதுனன்.

 

நான் வானவரயரின் சன் என்று இன்னும் அவருக்கே தெரியாது.”

 

யாழிசையை வைத்து வானவராயரையும் சந்திக்கணும்னு நினச்சேன். அதற்குமுன் தன்னை அவரின் மகன் என்று அவர் அடையாளம் தெரிந்துகொள்ள என்னிடம் என் மாம் கொடுத்திருந்த அவர்களின் பாரம்பரிய நகையை யாழிசையிடம் கொடுத்து வானவராயரிடம் ஒப்படைக்க நினைத்திருந்ததாகவும் மேலும் தான் இப்பொழுது வெளிபடையாக வானவராயரை சந்திக்க முடியாது என்றும் அதற்கு காரணம் சி.என்.ஜி நிறுவனம் இந்தியாவிற்கு தன்னை அனுப்பிய நோக்கத்தையும் கூற ஆரம்பித்தான்.

 

நான் ஒரு எகானமிக் ஹிட்மேன் ஆகத்தான் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டேன். என்னுடைய பூர்வீகம் இந்தியாவாக இருந்தாலும் நான் ஒரு அமெரிக்க பிரஜை.

 

நான் பிறந்தது, படித்தது, தொழில் செய்வது எல்லாம் அமெரிக்காவில். என்னை நான் ஒரு அமெரிக்கனாகத்தான் உணரமுடிந்தது. இங்கு வருவதற்கு முன்புவரை என்னுடைய மூளையை பயன்படுத்தி நான் பிறந்து வளர்ந்த நாட்டின் வளத்தை அதிகரிக்க அங்கு இருக்கும் பணக்காரர்களின் மூளையாக செயல்பட்டேன்.

 

உலகின் கனிம வளங்களை தம்பிடிக்குள் வைத்திருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரிடம் மடைதிறந்த வெள்ளம்போல் கொண்டுபோய் சேர்ப்பதில் என்னுடைய பங்கு மிகப்பெரியது. என்னுடைய செயலுக்கு பக்க பலமாக இருப்பது பன்னாட்டு நிறுவனங்கள், அரசாங்கம், வங்கித்தலைமை முதலியன.

 

இத்தகைய நிறுவனங்கள் சார்பில் பொருளாதாரராகிய நான் வளரும் நாடுகளுக்குச் சென்று தங்களால் மிகைப்படுத்தப்பட்ட புள்ளி விவரங்களைக் கொண்டு, உங்கள் நாட்டினில் நீங்கள் இத்தகைய திட்டங்களை செயல்படுத்தினீர்கள் என்றால் உங்களின் வளர்ச்சி இத்தனை வருடங்களில் இத்தனை சதவீதமாக உயரும்.

 

இந்த திட்டங்களுக்கு உங்களுக்கு கடன் கொடுக்க உலக வங்கியும் தயாராக இருக்கின்றது. இத்திட்டங்களை உங்களுக்காக உருவாக்கிக் கொடுக்கவும் எங்களது நாட்டு நிறுவனங்களும் தயாராக இருக்கின்றன" என்ற வாக்குறுதிகளைத் தந்து அந்த நாடுகளை கடன் வாங்க வைப்பதுதான் என் வேலை.

 

வளரும் அந்த நாடுகளும் அந்த புள்ளிவிவரங்களை நம்பி கடன் வாங்க ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் கடன் பெறத் தொடங்கிய அந்தத் திட்டங்களால் கணிக்கப்பட்ட அளவு வளர்ச்சி கிட்டாததால் வாங்கிய கடனை திருப்பித் தர இயலாது.

 

வெறும் வட்டியினை மட்டுமே கட்டிக் கொண்டு காலத்தைத் தள்ளும் நிலைக்கு அந்த நாடுகள் வருகின்றன, அந்த நிலையினை பயன்படுத்தி வளர்ந்த நாடுகளும் அவற்றின் நிறுவனங்களும் அந்த நாட்டின் வளங்களை கொள்ளை அடித்துக் கொள்ள தொடங்குகின்றன.

 

ஆனால் நான் எனது பூர்வீக பூமியை அழிக்கும் இந்த செயலை செய்ய எனக்கு விருப்பமில்லை என்று சொன்னால் வேறு ஒருவனை கொண்டு இந்த அழிவுச் செயலை நடத்தி முடித்துவிடுவார்கள் என்ற காரணத்தால் அந்த செயலை நான் செய்வதாக ஒத்துக்கொள்வதுபோல் இங்கு வந்ததையும்,

 

பின் சி.என்.ஜி உள்நோக்கத்தை வானவராயரைபோல் இந்த மண்ணின் மேல் பற்றுள்ள மக்களின் செல்வாக்கு மிக்க ஒருவரிடம் பகிர்ந்துக்கொண்டு அதை மக்களிடம் எடுத்துச்சென்று சி.என்.ஜி காலூன்றும் முன்பே மக்களின் புரட்சி மூலம் அவர்களை துரத்த நினைத்தேன்என கூறினான் தீரமிகுந்தன்.

 

மேலும் தான் நேரிடையாக வானவராயரை சந்தித்து இதனை பகிர்ந்துக்கொண்டால் தன் மேல் ஒருகண் வைத்திருக்கும் சி.என்.ஜி நிறுவனத்தின் கோபம் உங்களின் பக்கமும் திரும்பும் அதனால் உங்களை அழிவிற்கு நானே காரணமாகிவிடுவேன்.

 

எனவே தங்களுக்குள்ள உறவுமுறையை வெளிப்படையாக கூறமுடியாமல் மறைமுகமாக இதை என் அப்பாவிடம் தெரிவிக்க யாழிசையை நான் தேர்ந்தெடுத்ததாகவும் அவளிடம் கூற நினைத்திருந்தேன்.

 

ஆனால் மிதுனனின் பிட் நோட்டீஸை படித்த யாழிசை தனது மண்ணுக்கு துரோகம் நினைத்திருக்கும் கயவனாக என்னை நினைத்துவிட்டதால் அவளிடம் சமாதானமாக பேசமுடியாமல் கடத்திகொண்டுப்போய் தன் கஸ்டடியில் வைக்கும் நிலைமைக்கு ஆளானதயும் கூறினான் தீரன்.

 

தனது நோக்கத்தை விளக்கிக் கூறித்தான் அவளை தனது திட்டத்தில் இணைத்துக் கொண்டு அவளுடன் இணைந்து தான் செயல்படநினைத்ததை எல்லாம் மிதுனனின் ஓர் பிட் நோட்டீஸால் தலை கீழாக மாறிவிட்டதை உணர்ந்து கோபமடைந்தான்.

 

மேலும் இப்பொழுது யாழிசை மூலம் தன்னை நல்லவிதமாக வானவராயருக்கு உணர்த்த முடியாது உன்னால் பிளாப் ஆன என் பிளானை உன்னை வைத்தே பினிஷ் செய்ய என் இடத்திற்கு உன்னை கொண்டுவந்திருக்கிறேன் மேன் என்றான் தீரன்.


                       ----தொடரும்----

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib