ஆலனின் பாரிஜாதம்
(தீபாஸ்)
அத்தியாயம் 02
அந்த வெள்ளைக்காரன் பற்றிய யோசனையுடன் நடந்து பெரியகார வீட்டை தாண்டி தனது வீட்டிற்குப் போக நடந்த அழகி திண்ணையில் அமர்ந்திருந்த ஆலனை நோட்டமிட்டாள்... அதேநேரம் வீட்டின் உள்ளிருந்து நிலைவாசலுக்கு வந்தார் ராஜேந்திரன்.
எப்பொழுதும் கம்பீரமாக நடக்கும் நாட்டாமை ராஜேந்திரன், மகன் இறந்த சேதி தெரிந்த இந்த இரண்டு வாரத்திலேயே சட்டென மிகுந்த வயோதிகம் அடைந்த தோற்றத்தில்... தள்ளாடிய நடையோடு உள்ளிருந்து வந்து நின்றார். தனது வீட்டை பார்த்தபடி கடந்து போகும் அழகம்மையைக் கண்டவர்.
“அம்மாடி அழகி..., எங்கபோற...? இங்கன வா...” என்று சொல்லியபடி கையசைத்து அழைத்தார் அவளை.
அப்பொழுதுதான் பவித்ராவின் குடும்பம் வீட்டின் உள்ளே சென்றிருந்தது. சோகமாக அமர்ந்திருந்த சுப்பம்மாவை சுற்றி அமர்ந்திருந்த உள்ளூர் கிழவிகள் வந்த பவித்தாராவிடம்
“ஏத்தா... பவி... பாரு உன் ஆத்தால... இப்படி அல்ப ஆயுசுல தூக்கிக்கொடுக்கவா அருமை பெருமையா ஒத்த ஆம்பளைப் புள்ளைய பெத்து அருமை பெருமையா வளர்த்தாளா...!? எனச்சொல்லி ஓவென அழுகையை ஆரம்பிக்க... மற்ற கிழவிகளும் அழுகையோடு ஒப்பாரி சேர்க்க... தரையில் அமர்ந்திருந்த அம்மா சுப்பம்மாவின் அருகில் சென்று குனிந்து அவர் கன்னத்தில் வழிந்த நீரை துடைத்தாள் பவித்ரா.
அவளின் கைபிடித்து இழுத்த ஒருபாட்டி தங்களோடு சேர்த்து கட்டி கொண்டு ஒப்பாரி பாட மற்றவர்க்ழலும் சேர்ந்து ஒப்பாரி வைத்தனர். உள்ளேயிருந்து வந்த ஒப்பாரி சத்தத்திலும்... அவள் பார்வை முழுவதும் ஆலனின் மேல் குவிந்திருந்ததாலும்... நாடாமை தாத்தாவின் அழைப்பை அழகி கவனிக்கவில்லை.
“ஏத்தா அழகி, நாடாம உன்னைய தான் கூப்பிடுறாரு... நீ யாரை வேடிக்கப் பார்த்துக்கிட்டு நடக்க...?” என்று அவள் பின்னாடியே வந்த சப்பாணி சொன்னதும் ஆலனின் மீது படிந்திருந்த பார்வையைச் சட்டென விலக்கியவள் வாசலில் தன்னைக் கை நீட்டி அழைக்கும் நாடாமை தாத்தாவின் புறம் திருப்பி, “என்ன தாத்தா...?” என்றபடி அவரிடம் நடந்தாள்.
அருகில் வந்தவளிடம், “எம் பேரனுக்கு இங்கன சாப்பாடு ஒத்துக்கலை, சுப்பம்மா மவனைப் பறிகொடுத்த துக்கத்துல அழுவையா அழுது வந்த கிறுகிறுப்புனால தனியா இவனுக்கானதச் சமையக்கட்டுல நின்னு ஆக்கித்தர சக்தியில்ல...
நேத்து ராவுல சமையலுக்கு நின்ன மாரியம்மா அம்மியில காரச்சட்டினி அரைச்சு நல்லெண்ணெயில குழப்பி இட்டிலிக்கு வச்சு இவனுக்குக் கொடுத்துட்டா போல.... அதைச் சாப்பிட்டுட்டு வாயெல்லாம் எம் பேரனுக்குப் பொத்துப் போச்சு...” என்றதும்
‘அம்புட்டு ஒன்னும் காரம் இல்லையே... நானும் இங்க இருந்து எடுத்துட்டுப் போய் வீட்டுல தோசைக்கு வச்சு சாப்பிட்டேனே... இதுவே இவர் நாக்கு தாங்காதுன்னா.... சப்படீர்னு தான் ஆக்கிப் போடணும்’ என்று நினைத்தபடி செவந்து போயிருந்த அவன் உதடுகளையும் கன்னங்களையும் ஆராய்ச்சியுடன் பார்த்தவள், அவனுக்காக வருந்தும் நாட்டாமை தாத்தாவின் கவலையைப் பொறுக்காமல்.
“இப்போ என்ன தாத்தா... பாட்டிக்கு உடம்பு சரியாகுற வரை மூணு வேளைக்கும் உறைப்பு வைக்காம சப்படீர்னு நானே என் வீட்டுல சமைச்சு எடுத்துட்டு வந்து உங்க பேரனுக்கு இங்கன கொடுத்துட்டுப் போறேன்” என்றாள்.
“அதெதுக்கு உன் வீட்டுல சமைச்சு இங்கன நீ எடுத்துட்டு வரணும்...? ஃப்ரிஜ்ல பட்டரு, ஜாமு, முட்டை, பழங்கள்னு டவுனுல இருந்து இவனுக்காகவே வாங்கிவர சொல்லி அடுக்கி வச்சிருக்கேன். அதவச்சு சுப்பம்மாட்ட என்ன செய்ய... ஏது செய்யன்னு கேட்டு இங்கன வச்சே ஆக்கிக் கொடுத்துடு அழகம்மை” என்றார்.
அவர் சொன்னதும் “தாத்தா... நோ... டுமாரோ டாடிக்கு பிரேயர் முடிஞ்சதும் நியர்பை டவுனில்… குக் பண்ண ஓவன், பிளெண்டர், எல்லாம் வாங்கிட்டு வந்து நானே பிரிப்பேர் பண்ணிடுறேன்..., அதுவரை ஃப்ரூட்ஸ், எக், பிரெட் போதும் எனக்கு” என்றான் ஆலன்.
இங்கிருப்பவர்களின் சமையலை சாப்பிட்டு அரண்டு போயிருந்தான். அவனுக்கு அழகி சமையலிலும் நம்பிக்கை இல்லை எனவே பயந்து ‘நோ...’ எனச்சொன்னதைக் கண்டுகொள்ளாத அழகி, அவனை ஒரு மார்க்கமாகப் பார்த்தபடி “அப்போ இவரு உதடு செவ... செவன்னு இருக்குறதுக்குக் காரணம்... மாரியம்மாக்கா ஆக்கித்தந்த சாப்பாடுக் காரம் தாங்காம வெந்து போனதாலா...? நான் கூடப் பொம்பளைங்க போல லிப்டிக்ஸ் யூஸ் பண்ணி இருக்காங்களோனு நினச்சேன்...” என்றாள்.
அவளின் துடுக்குத்தனமான வார்த்தையைக் கேட்டு கடுப்பாகிய ஆலன் அவளை முறைத்தபடி நின்றான்.
வாசலில் அழகியின் பேச்சுக்குரல் கேட்டு உள்ளிருந்து வந்த மாரியம்மா, “ஏ...புள்ள, சாமிகும்பிடுற வேட்டிய எங்கன வச்சு..? நேத்து நீதானே எல்லாரும் போனதும் நின்னு ஒதுங்க வச்ச... நேரம் ஆகுது வா... வந்து எடுத்துத்தா...” என்றாள்.
இறந்தவர்கள் வீட்டில் மறுநாளில் இருந்து ஐயருக்கு அரிசி கொடுக்கும் பதினாறாம் நாள் காரியம் வரை தினந்தோறும் படையலிட்டு கும்பிடுவர். அதற்காக அருகில் இருப்பவர்களை அழைத்து இறந்தவருக்குப் பிடித்த பலகாரங்கள் அனைத்தும் படைத்து... தவறிப்போனவரின் அருமை பெருமை அவரின் இல்லாமை பற்றிய துக்கத்தை ஒப்பாரி பாடல் (மாறடித்து) பாடி, படையலிட்ட பலகாரங்கள் அனைத்தையும் ஒன்றாகக் குண்டாவில் போட்டு குலுக்கி வந்திருப்போருக்குக் கை நிறைய அள்ளி கொடுத்து அனுப்புவார்கள்.
இன்றும் படையலுக்காக இறந்தவரின் வேஸ்டியை முறுக்கி நீட்டுவாக்கில் பலகையின் மேல் சுவற்றில் சாத்தி நிற்கவைத்து அருகில் குத்துவிளக்கு ஏற்றி படையலிட்டு கும்பிட வேண்டும். தினமும் படையலிட்டு சாமி கும்பிட்டதும் முறுக்கி வைத்த ஆடையைப் பிரித்து உதறி மடித்துத் துண்டாக எடுத்து வைத்து விடுவார்கள். அவ்வாறு நேற்று எடுத்து வைத்த வேஷ்டியைத்தான் எடுத்துத் தரச்சொல்லி அழகியிடம் கேட்டார் மாரியம்மாள்.
நேற்று படையலில் விளக்கின் அருகில் வைத்த நிறைசெம்பு நீரை யாரோ தட்டிவிட்டதில் அவ்வேஸ்டி நனைந்திருந்ததால் எடுத்து உதறி வீட்டின் பின் பக்கத்தில் துண்டாக மற்ற துணிகள் போடாத இடத்தில் காய வைத்துவிட்டு சென்றிருந்தாள். அதை ஓடியே போய் எடுத்து வந்து கொடுத்தாள்.
****
மச்சுவீட்டில் விஸ்தாரமான அந்த அறைக்குத் தோதாக இரண்டு ஏசி, வட, தென் கோடி சுவர்களுக்கு ஒவ்வொன்றாக எதிரெதிராகப் பொருத்தப்பட்டிருந்தது. அதிலிருந்து வரும் சில்லென்ற காற்றை விட்டு ஆலன் விக்ரமுக்கு வெளியில் செல்லவே மனதில்லை.
அந்த ஊரில் அதிகப்படியான சூடும்..., எந்நேரமும் விரிய திறந்திருக்கும் வீட்டின் கதவின் வழி, ஆட்கள் இஷ்டத்துக்கு வருவதும் போவதுமாக இருப்பதும்.... அவர்கள் ஆலனை அதிசயப் பிறவிபோலக் கண்டுவிட்டு செல்வதும்... யார்யாரோ உறவினர்களென வந்து....துஷ்டி கேட்கிறேன் என்ற பெயரில் அழுது ஒப்பாரி வைப்பதுமாகிய சூழல் அவனை இயல்பாகக் கீழ் வீட்டின் அமர விடாமல் மச்சு வீட்டிற்கே துரத்தி பதுங்க வைத்தது.
இங்கு வந்த எழு நாட்களில் அவன் அவனாக இருக்க, இந்த மச்சு வீட்டின் தனிமையும், வசதியும் ஓரளவுக்கு உதவியது. ஆனால் நேற்று வந்த அவன் அத்தையின் குடும்பம் அதற்கும் ஆப்பு வைத்தது. அத்தை பவித்ராவின் மகளென வந்திருந்த கீர்த்தியின் ஆர்வமான பார்வை இறுக்கம் குறைத்து சற்று ஜாலியான மனநிலையைத் தான் முதலில் கொடுத்தது.
இங்குள்ளவர்களை விட வந்திருந்த கீர்த்தியின் நாகரீகமான தோற்றமும்.., இளவயதும்.... ஆங்கிலப்புலமையும் கண்டவனுக்குத் தெரியாத இடத்தில் பேச்சுத் துணைக்கு ஆள்கிடைத்த சந்தோசத்தை முதலில் கொடுத்தது. ஆனால் அங்கிருபவர்கள் இருவரையும் இணைத்து இவனின் பியான்ஷி (நிச்சயிக்கப் பட்ட பெண்) போலக் கேலிப் பேசுவதும்... அதனைத் தொடர்ந்து கீர்த்தி விழியில் கண்ட ஆர்வமான பார்வையும் கண்டவன் இது சரியில்லை என்று அவளிடம் இருந்தும் ஒதுங்கிப் போக முயன்றான்.
அவளிடம் ஜஸ்ட் ஃப்ரெண்ட் என்ற நிலைவிட்டு இறங்கிவர ஆலன் எண்ணவில்லை. சொல்லப்போனால் இங்கு இத்தனை நாள் அவன் தங்கி இருப்பதே ஆகப்பெரும் கொடுமையாக அவன் எண்ணினான்.
அவனின் டியரஸ்ட் டாட், ஃப்ரெண்ட், டீச்சர், மற்றும் தந்தையாக மட்டும் இல்லாது தாயுமாகிய விக்ரமின் கடைசி ஆசையை நிறைவேற்றி வைக்கவே அவன் இந்தியா வந்திருந்தான்.
அவன் தந்தை பிறந்து வளர்ந்த இடம் கோவிலாக அவன் கண்களுக்குத் தெரிந்தது. ஆனால் அவனின் லைஃப் ஸ்டைலுக்கு முற்று முரணான இங்கிருந்த சூழலால் ஆலனுக்கு மூச்சு முட்டியது.
அந்த அறையில் போட்டிருந்த இரண்டு பெரிய மரக்கட்டில்களில் ஒன்றில் ஆலன் அமர்ந்திருந்தான் மற்றொன்றில் பவித்ராவின் மாதர் இன் லா மனோன்மணி படுத்திருந்தார்.
புதிதாகச் சட்டமிட்டு வாங்கியிருந்த தனது அப்பா விக்ரமனின் புகைப்படத்தைக் கையில் வைத்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் ஆலன். இன்றைய விஷேத்திற்குப் பூஜையில் வைக்க ஆர்டர் செய்து வாங்கிய அப்போடோவையே பார்த்தவன் மனதினுள் “இவ்வளவு சீக்கிரம் என்னை விட்டுட்டு நீங்க போயிருக்க வேணாம் டாட்” எனச் சொல்லிகொண்டான். அப்பொழுது
“ஏப்பா ஆலன், டைம் என்ன...? கீழ ஐயர் வந்துட்டாரா...? நாமபாட்டுக்கு இங்கன இன்னும் உட்கார்ந்துகிட்டு இருக்கோம்...” என்ற மனோன்மணியிடம் .
“டைம் செவன் தேர்டி கிராணி... இன்னும் பிரேயருக்கு ஓன் ஹவர் இருக்கு” என்றான்.
“ஆமா... உன் தாத்தா உன்னைய இங்கயே இருக்க வைக்கபோறேனு சொல்றாரே.. இந்தப் பட்டிகாட்டில் நீ இருந்து என்னப்பா செய்யப்போற..?” என்றார்.
இச்சேதி அவனுக்குப் புதியது. நிச்சயம் அவனால் இங்கு நிரந்தரமாக இருக்கவே முடியாது. ஆனாலும் மனோன்மணியிடம் வெளிப்படையாகத் தனது மனதில் உள்ளதை சொல்ல விருப்பமில்லை எனவே “தாத்தா அதுபோல எதுவும் என்னிடம் சொல்லலையே கிராணி.., அப்படி எதுவும் கேட்டா நான் அவர்கிட்ட பதில் சொல்லிடுவேன்” என்றான்.
“என்னென்னு சொல்லுவப்பா.. யெஸ்னு சொல்லுவியா...? நோ’னு சொல்லுவியா...?” அவனின் பதில் என்னவாக இருக்குமென அறிய ஆலனின் வாயை கிளறினார். அவன் ‘யெஸ்னு சொல்லக் கூடாது’ என்று ஆசைப் பட்டார்.
சம்மந்தியோட கிராமத்து வீடும், காடுகரையும் பெருசா என்ன மதிப்பு இருந்துவிடப் போகிறது என்ற அசால்டாக இருந்துட்டேனே... இத்தனை காலம் என் மருமகளின் பிறந்த வீட்டை கண்டுகொள்ளாம... மருமகளை இந்தப் பக்கம் வரவிடாம... பிடிச்சு வச்சிருந்தது எம்புட்டுப் பெரிய தப்பாப் போச்சு...
நேத்து இங்க வந்ததால பவித்ரா அப்பா உருவாக்கி வச்சிருக்கச் செம்மரத் தோப்போட மதிப்பு தெரிஞ்சது. மூணு ஏக்கம் மரம் இப்போ முப்பது கோடி ரூயாய்க்கும் மேல ஈல்டுக்கு ரெடியாய் இருக்குதாம்ல... இந்த வெள்ளைக்கார பேரனை இங்க இருந்து தொறத்தி விடணும். அப்போத்தான் அம்புட்டும் நம்ம மகன் கைக்கு வரும். என்று தனக்குள் சொல்லிகொண்டார் மனோன்மணி.
அந்நேரம் கையில் பெரிய கண்ணாடி டம்ளர் நிறைய முலாம்பழம் மில்க் ஷேக் ரெடிசெய்து எடுத்து வந்தாள் அழகம்மை. அவளின் பின்னாலேயே மூச்சிரைக்க வேகமாய்க் கீர்த்தியும் வந்து சேர்ந்தாள். வந்தவள் “ஏய்... நீ எதுக்கு மாடிக்கு வந்த...? உன்கிட்ட வாங்கிட்டு வரத்தானே நான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்” என்று சொல்லியபடி அவளிடம் இருந்த கண்ணாடி டம்ளரை சட்டெனத் தனது கையில் பிடுக்காத குறையாக வாங்கிக்கொண்டாள்.
“இங்க பாருங்க... அதென்ன ஏய்னு வேலைக்காரவகளைக் கூப்பிடுறது போல என்னைய கூப்பிடுறீக...!? நானே நாட்டாமை தாத்தா பேரனுக்கு இங்கன சாப்பாட்டோட காரம் ஒத்துக்கலைன்னு வருத்தப்படுறாரேனு மெனக்கெட்டு செஞ்சு எடுத்துவந்தா என்னைய அதிகாரம் பண்ணிக்கிட்டு இருக்கீக..!? என்னைய பெத்தவருக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சுச்சு.... பிறகு உங்களை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாக” எனப் படபடவெனப் பொரிந்தாள்.
ஆலனுக்குமே கீர்த்தியின் இச்செயல் பிடிக்கவில்லை... அவனும்தான் வந்ததில் இருந்து பார்க்கிறானே இந்த வீட்டில் அவனின் வயதான தாத்தா பாட்டிக்கும் அவளுக்கும் உள்ள பிணைப்பை. அவர்களின் பாசப் பிணைப்பை பார்த்து அவனுக்கே பொறாமை அவள்மீது எட்டிப் பார்க்கத்தான் செய்தது.
ஆனாலும் பெரியோர்களின் வாரிசாகிய தாங்கள் வயோதிகர்களிடம் காட்டாத பாசத்தையும், அன்பையும், அக்கறையும் அவள் அவர்களுக்கு வழங்கிகொண்டிருகிறாள். இன்னும் அவர்களை உயிர்ப்போடு நடமாட இவள்தான் காரணம். அவள் மீது பொறாமைப் படுவது நியாயமில்லை என்று அமைதியாகிவிட்டவன் அவன்.
அப்படிப்பட்டவளிடம் கீர்த்திப் பேசும் முறை சரியில்லை என்று அவனே சொல்ல நினைத்தான் ஆனால் அதற்குச் சந்தர்ப்பம் கொடுக்காமல் அவளே பதிலடி கொடுத்ததைப் பார்த்து ”ஓ...காட்... எப்படி வாய் பேசுறாள்” என்று அவளைப் பார்த்தபடி நின்றான்.
---தொடரும்---
(அடுத்த Epi நாளை காலை 10 மணிக்கு)
No comments:
Post a Comment