anti - piracy

Post Page Advertisement [Top]

 

இனிக்கும் விஷம் (தீபாஸ்)

                                  

அத்தியாயம் 01

வண்ண முகில் தனது இருசக்கர வாகனத்தில் சென்னையில் பெருந்தனக்காரர்கள் வசிக்கும் பகுதியில் பயணம் செய்துகொண்டிருந்தவனின் சிந்தனை ‘எதுக்காக என்னைய வரச் சொன்னார்...? அதுவும் அவர் ஃபேமிலியோட வந்திருக்கும் போது என்னைய அங்க கூப்பிடுறாரே...?  சும்மாவே என்னைய கண்டா அவங்களுக்கு ஆகாது... ஏதாவது ஹோட்டலில் மீட்பண்ணலாமானு கேட்டா கோவப்படுறார்’ என்ற பொருமலுடன்  பெருமூச்சு விட்டுக்கொண்டான்.


'என்னால அவர் வார்த்தையை மீற முடியலையே... அவர்ட்ட நன்றிக்கடன் பட்டு இருக்கேனே... எனக்காக எதுவும் செய்வேன்னு உறுதியா நிக்கிற மனுஷன் பேச்சை தட்ட முடியல...’


தனக்குள் புலம்பிக்கொண்டே அந்த ஏரியாவின் மூன்றாம் அவன்யூவிற்குள் நுழைந்தான். அங்கிருந்த வீதிகளில் வீற்றிருந்த பங்களாக்களை கண்களால் அவதானித்தான், தனித்தனி கோட்டை சுவர்களுக்குள் ஒவ்வொரு பங்களாவும் பல கோடிகளை விழுங்கி அழகழகாய் எழும்பி நின்றிருந்தது. அத்தெருவின் அமைதியும், தூய்மையும், அகலமும், வரிசையாக நின்றுக்கொண்டிருந்த மரங்களும் இது சென்னையா...? என்ற கேள்வியை உண்டாக்கியது.


ஆம்... சென்னைக்குள் வாழும் மிகப் பெரிய செல்வந்தர்களின் குடியிருப்புப் பகுதி அது, என்பதை வண்ண முகில் உணர்ந்துக்கொண்டான்.


சரியான பங்களாவை கண்டு கொண்டு அப்பெரிய கதவின் அருகிலிருந்த வாட்ச்மேனின் கவனத்தை ஈர்க்க, ஹாரனை அடித்தான்,


பெரியவீட்டு பிள்ளையின் தோற்றத்தில், முகத்தில் மாட்டியிருந்த ஹெல்மெட் உள்ளிருந்த கண்களால் கூர்மையாய் தன்னைப் பார்த்தபடி... பளபளவென்ற கருப்புநிற (கிட்டத்தட்ட பதினைந்து லட்சம் மதிப்புள்ள’ BMW ஸ்கூட்டரில்) அந்த இருசக்கர வாகனத்தில், அமர்ந்திருந்தவனை வியப்புடன் பார்த்த வாட்ச்மேன்,  அமர்ந்திருந்த ஸ்டூலை விட்டு எழுந்து நின்றான்,


“கேட் ஓபன் பண்ணுங்க, உள்ளபோகணும்” என்றவனை சட்டென விரட்டமுடியாமல் அவனின் தோற்றம் அச்சுறுத்தியதால்,


“சார், உங்க பேர் சொன்னா இண்டர்காமில் கேட்டுட்டு....” என்று பணிவாக சொல்லிக் கொண்டிருக்கும் போதே கிரிங்... கிரிங்... என்ற டெலிபோன் சத்தம் வாட்ச்மேனை அழைத்தது.


சத்தத்தை கவனித்தவன், வேலை செய்பவர்கள் வந்து போக வலது மூலையில் மதில் சுவர்களுடன் பொருத்தப்பட்டிருந்த சிறிய பாதையின் ஒன்றைக் கதவைத் திறந்து அச்சிறு நுழைவு வாசலின் வழி பாய்ந்துச் சென்றான்.


குடைபோல் அமைந்திருந்த, வலது மூலையில் இருந்த அழகான உருளைவடிவில் கூம்பாய் ஓடுகள் பதிக்கப்பட்ட அறையில் அழைத்துக்கொண்டிருந்த இன்டர்காம் போனை எடுத்து “ஐயா...” என்றவனிடம் பிறப்பிக்கப்பட்ட கட்டளையில்.... விழுந்து அடித்துக்கொண்டு மறுபடியும் வெளியே ஓடி வந்து, வண்ணமுகிலுக்கு வழிவிட்டு கதவை விரிய திறந்து வைத்தான்.


வண்ணன் பொதுவாக அணிவது கருப்பு நிற உடைகள் தான், இன்றும் அவனுக்குப் பிடித்த கருப்புநிற பிராண்டட் டீசெர்ட் மற்றும் ஐஸ்புளூ ஜீன் ஃபேன்ட் அணிந்திருந்த ஆடையைமீறி திண்ணிய அவனின் படிக்கட்டு தேகம் வெளிப்பட்டது.


மிரட்டலான பைக்குடன் திறந்திருந்த கேட்டினுள் நுழைந்து பயணித்து வெள்ளை மாளிகையில் தோற்றத்தில் இருந்த பங்களா வாசலில் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கியவன் ஆறடி உயரத்தில் இருந்தான்.


தலை கவசத்தை கழட்டியதும், சற்று படர்ந்த நீள்வட்ட முகத்தில் இருந்த  பெரிதும் இல்லாத சிறிதும் இல்லாத சற்று இடுங்கிய கண்களால் கூர்மையாக சூழலை ஆராய்ந்தான். எடுப்பாய் நீண்ட மூக்கும் அதன் அடியில் தாடிமீசைக்குள் இளரோஜா வண்ணத்தில் இருந்த சற்று தடிப்பான உதடுகளும் அவனை அழகனாகக் காட்டியது.


சென்னையில் அவன் வசித்தாலும் இதுவரை உரிமையாய் அந்த பங்களாவிற்குள் வந்ததில்லை. இறங்கியவனை வேகமாக வந்து எதிர்கொண்ட வேலையாள் “பிளீஸ் சார்... வாங்க, உங்களை ஐயாவோட ரூம்க்கு பக்கத்து ரூமில் உட்காரவைக்க சொன்னாங்க” என்றபடி அவனை அழைத்துச் சென்றான்.


வெள்ளைக்காரன் இங்கிருந்தக் காலத்தில் கட்டப்பட்ட மாளிகை அது. ஆங்கிலேயர்களின் கட்டிட பாணியையும், செட்டிநாட்டுக் கட்டிடக் கலையையும் கலந்துக்கட்டி வெண்பளிங்கு கற்களால் உருவாகி இருந்தனர். அந்த பங்களா நான்கு தலைமுறை தாண்டி இப்பொழுது இந்தியாவின் பேர் சொல்லும் தொழில் அதிபர்களுள் முக்கியமான முகில் அதியன் வசம் வந்தடைந்திருந்தது. ஆனால் அவரின் பாட்டன் பூட்டன் வழி வந்ததல்ல... மனைவியின் வழி வந்த சொத்து அது.


தன்னை மரியாதையாய் அழைத்து வழிகாட்டிக்கொண்டு சென்ற வேலையாளைத் தொடர்து கொண்டிருந்தவன் கண்கள் அலைபாய்ந்தது. வீட்டு ஆட்கள் யாரும் அவனின் கண்களில் தட்டுப்படவில்லை. ஆங்காங்கே வேலையாட்கள் மட்டுமே வேலை செய்துக்கொண்டு நின்றனர்.


ஒருவகையில் யாரையும் எதிர்கொள்ளாதது சற்று ஆசுவாசத்தையே அவனுக்கு கொடுத்தது. ஏனெனில் தொழில் நிமித்தமாக ஏற்பாடு ஆகும் நிகழ்வுகளில் முகில் அதியன், தன்னை அவரின் மகனென சொல்லி முன்னிறுத்தும் ஒவ்வொரு முறையும் அவரின் மனைவி மற்றும் பிள்ளைகளின் குடும்பம் வெளிப்படையாகவே முகங்களை திருப்பியபடி  வெளியேறி இருக்கிறார்கள்.


இந்நிலையில் தனக்குத் தந்தையாகிப் போன முகில் அதியன் உரிமையாய் தன்னை வீட்டிற்கு உள்ளேயே வரவைத்த செயல் இங்கு பெரும் பிரளயத்தையே உருவாக்குமென அவன் நினைத்திருத்தான். அங்கு நிலவிய அமைதியை உள்வாங்கியவன், புயலுக்கு முன் வரும் அமைதியோ என்று சஞ்சலம் அடைந்தான்.


அவனுக்கு அந்த பிரமாண்டமான அறையின் கதவினை திறந்து விட்டு வாசலில் நின்றுகொண்டான் வழிகாட்டியவன், கேள்வியாய் அவனை ஏறிட்டுப் பார்த்ததும் “உள்ள உக்காருங்க சார், ஐயா இப்போ வந்துடுவாங்க” எனச்சொல்லியதும் சில்லென்ற ஏசியின் குளிர்ச்சி முகத்தில் மோதுவதை  பொருட்படுத்தாமல் அந்த அறையின் பிரமாண்டத்தை சற்றும் கண்டுகொள்ளாமல் முன்னடியில் இருந்த சோபாவில் கால்மேல் கால்போட்டு அமர்ந்தவனின் மொபைல் ஒலி எழுப்பியது.


அழைத்தது முகில் அதியன் தான், அவரிடம், “வந்துட்டேன்ப்பா.. உங்க ரூமுக்கு பக்கத்து ரூம்ல உட்காரவச்சிட்டுப் போயிருக்கார் உங்க வேலைக்காரர், இவ்வளவு கிட்ட இருந்தும் சட்டுன்னு பார்த்து பேச முடியலைல அதுக்குத்தான் வெளில மீட் பண்ணலாம்னு சொன்னேன்”


“இது உன் வீடு வண்ணன், உனக்கு அடுத்துதான் எனக்கே இங்க உரிமை இருக்கு...” என்றவரிடம்.


“எனக்கு நீங்க கொடுத்த படிப்பும் என்னோட அறிவும் போதும், வேற எதுவும் வேணாம்”


“முகில் குரூப் பொறுப்பை விட்டு நீ விலகி ஓடப் பார்க்குற வண்ணன், உன்னை தொரத்தி விடணும்னு ஆசைப்படுறவங்களுக்கு உன்னோட இந்தமாதிரியான பேச்சுச் சாதகமாயிடும் ஜாக்கிரதை, அது முகில் குரூப்புக்கு நல்லது இல்ல” என்றார் கண்டிப்பான குரலில்.


அவரின் வார்த்தையை உள்வாங்கியவன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்ததும், “முகில்... என்று அழுத்தமாக அழைத்தார், “ம்... ஓகேப்பா உங்களுக்கு பிடிக்காததை பேச மாட்டேன்”


“குட், தேட்ஸ் மை பாய், அஞ்சு நிமிஷத்தில் உன் முன்னாடி நிப்பேன். முக்கியமான விஷயம் பேசணும்” எனச் சொல்லி முடித்தார். 


அந்த பிரமாண்டமான மாளிகையின் சொந்தக்காரன்... வண்ண முகிலாகிய நானாம்...! என்ற நினைப்பில் விரக்தியான சிரிப்பு அவனின் உதட்டில் அரும்பியது,


அந்த இடத்தில் அவனால் பொருந்திப் போக முடியவில்லை, தன்னை எதற்காக இங்கே வரச்சொன்னார்...? என்ற கேள்வியுடன் அமர்ந்திருந்தான்.


அவன் அமர்ந்திருந்த அறையை சுற்றி கண்கள் ஓடியது.... அங்கிருந்த எதிலும் அவனுக்கான தடம் பதிந்திருக்கவில்லை... பிறப்பால் கிடைக்கும் சொந்தங்களும் சொத்துகளும் அவனைத் தேடி வந்தது பதின்ம வயத்தில் தான். ‘கிடைக்காமலே இருந்திருக்கலாம்..., இந்த குடும்ப அரசியலில் நானும் பகடை ஆகாமல் இருந்திருப்பேன்....’ என்ற பெருமூச்சு வெளிப்பட்டது.


****

டெல்லியில் இருந்து மூன்று நாட்களுக்கு முன் இரவு பத்துமணிக்கு மேல் புறப்பட்ட ரயிலில் அவள் வந்து கொண்டிருந்தாள். தமிழ்நாட்டின் தலை நகரமான சென்னையை ரயில் நெருங்கிக் கொண்டிருந்ததை பேர் பலகையில் கண்டறிந்து இறங்குவதற்கு ஆயத்தமானாள். 


‘அறிமுகம் இல்லாத புதிய ஊரில்... புதிய பேருடன் இனி நான்... ‘நட்சத்திரா’ பேர் நல்லாத்தான் இருக்கு...’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.


இந்த மூன்று நாளாக முதுகில் மாட்டவேண்டிய பேக் பேக்கை முன்னாள் மார்போடு கங்காரு குட்டியை போல மாட்டியவள் அதை கழட்டவே இல்லை... அமரும் போதும் தூங்கும் போதும் அதை அணைத்துக்கொண்டே பிரயானமானவளுக்கு பேக் பேக்கும் தனது அங்கமாகவே ஆக்கிப்போனது போல உணர்வு உண்டானது... 


தடக் தடக்கென்ற சத்தத்துடன் ரயிலின் ஓட்டம்  இழுத்துத் தேய்ந்துக்கொண்டே வந்ததும், எழுந்து சீட்டின் அடியில் இருந்த அந்த பெரிய டிராலிப்பேக்கை எடுத்து இறங்கத் தோதாக வைத்தவளுக்கு மூன்று நாள் பிரயாணத்தில் அழுங்கிய தனது தோற்றத்தை சரிப் படுத்தத் தோன்றியது.


முடியைக் கட்டியிருந்த பேண்டை உருவியதும், அலை அலையான கூந்தல் தோள்பட்டையை சற்றே தாண்டி முதுகில் படிந்தது, அந்த அறை அடி கூந்தலை கைகளாலேயே கோதி மறுபடியும் பேன்டினுள் அதக்கிக்கொண்டவளுக்கு.... சுற்றிலும் இருந்த இளைஞர்கள், நடுத்தர வயது ஆண்கள் மட்டுமில்லாது பெண்களின் கண்களுமே அவளின் மீது ஓரு நொடி பதிந்தே விலகியது போன்ற எண்ணமே அவளுக்கு திக் திக்கென்ற பயத்தின் அதிர்வைக் கொடுத்தது.


பேக் பேக்கை முன்பக்கம் இருந்துக் கலட்டி முதுகில் மாட்டிக்கொண்டு ‘இல்ல... யாரும் என்னையத் தொடர்ந்து வந்துருக்க வழியே இல்லை’ தனக்குத்தானே ஆரூடம் சொல்லித் தேற்றிக்கொண்டாள்.


சென்ட்ரல் ஸ்டேஷனில் இருந்து, தான் சென்று அடையவேண்டிய வுமன்ஸ் ஹாஸ்டல் அட்ரசை ஒருதடவை மொபைலில் சரிபார்த்த நட்சத்திராவுக்கு புது இடம் மனதினுள் மிரட்சியைக் கொடுத்தது...


‘எவ்வளவோ சமாளிச்சிட்டோம் வந்த நோக்கத்தை ஒரு கை பார்காமப் போகக் கூடாது... அதோட டென்த் படிக்கிற வரை தமிழ் நாட்டில் தானே இருந்தோம், தமிழ் பேச நமக்கு பிரச்சனை இல்லையே... அது போதாதா சமாளிக்க..?’ வந்ததின் நோக்கம் தீயாய் அவளுள் கனன்றுக் கொண்டிருந்தது.


‘எப்படியாவது உதித் முகிலை பார்த்துப் பேசியே ஆகணும்... விடமாட்டேன்... எனக்கு உண்மை தெரிஞ்சே ஆகணும்’ மறுபடி மறுபடி தனக்குள் சொல்லிக்கொண்டவள் சென்ட்ரல் ஸ்டேசனில் அவளிடம் இருந்த மொத்த உடமைகள் அடங்கிய பயணப் பெட்டிகளுடன் கால் பதித்தாள்.


தனது மொபைலில் செல்ல வேண்டிய வுமன்ஸ் ஹாஸ்டளுக்கு ஓலோ ஆப்பிள் டேக்சி புக் செய்துவிட்டு, ஸ்டேசனில் இருந்து எக்சிட் குறியீட்டைகொண்டு தடுமாற்றம் இல்லாமல் ஸ்டேசனின் வாயிலை வந்து அடைந்தாள்.


நின்று கொண்டிருந்த டாக்சிகளில் அவள் புக் செய்த டாக்ஸி நம்பரை மொபைலில் பார்த்து உறுதி செய்து ஏறியவள் புக்கிங் ஓடிபியை டிரைவரிடம் சொல்லிவிட்டு அருகிலேயே லகேஜ்களையும் வைத்தபடி அமர்ந்துக் கொண்டாள்.


கையில் வைத்திருந்த நட்சத்திராவின் ஆதார் அட்டையில் இருந்த போட்டோவை உற்றுக் கவனித்தாள், அதில் அன்று நட்சத்திரா போட்டிருந்த உடை மற்றும் கம்மலையே இன்றும் அணிந்திந்தாள், ஆதார் அட்டையில் இருக்கும் முகத்தை உற்றுக்கவனித்தவளுக்கு சமாலிச்சிடலாம் என்றே தோன்றியது.


இறங்கியவள் பேசிய பணத்தை பேரம்பேசாமல் கொடுக்துவிட்டு வுமன்ஸ் ஹாஸ்டளுக்குள் அடியெடுத்து வைத்தாள், முன்னாள்  கவுண்டரில் இருந்த பெண்ணிடம், கொண்டுவந்த ஐடி புரூப்பை  காண்பித்து ரூம் புக் செய்த டீடைல்ஸ் சொல்லி முடித்ததும்,


“நான் தான் இந்த ஹாஸ்டல் வார்டன், உங்க பேரு நட்சத்திரா தானே சொன்னீங்க...?, மூணு மாசம் வாடகையை அட்வான்சா கொடுத்துட்டு இதில சைன் பண்ணுங்க” என்றதும் ‘நட்சத்திரா’ என்ற பெயரையே கையெழுத்தாக இட்டவள் கண்களால் தான் இட்ட கையெழுத்தை ஸ்கேன் செய்து மனதில் பதித்து வைத்துக் கொண்டாள்.


“மேம் ரூம் நம்பர் பிப்டி ஃபைவ் தானே..? எப்படிப் போகணும்..?” என்றதும்,சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்த ஸ்வீப்பரை கையசைத்து

 “ஏய் செஞ்சி, வா... இங்க” என்று அழைத்தார், அந்த கடுகடு மூஞ்சி வார்டன் பெண்மணி,


“சொல்லுங்க வார்டன் மேடம், இவங்க யாரு, புது புள்ளையா...?” என்றதும்,


“ஆமா... அவங்கக்கிட்ட ரொம்ப வாய் பேசி வந்த அன்னைக்கே பயம் காட்டாத.., ரூம் நம்பர் அம்பத்தைந்தைக் காட்டி, விட்டுட்டு வா...” எனச்சொல்லி அவளுடன் முதல் தளத்துக்கு நட்சத்திராவை அனுப்பி விட்டார்.


“ஏம்மா... உங்க பேரு என்ன? என்ன சோக்கா சினிமா நடிகை மாதிரி இருக்க...? எந்த ஊரு நீனு..?” என்றவளிடம்.


டெல்கி எனச் சொல்ல வந்தவள் நிமிடத்தில் தன்னைச் சமாளித்துக்கொண்டு “சேலம், என்னோட பேர் நட்சத்திரா” என்றதும்


“நட்சத்திரா... அந்த நட்சத்திரம் போல பளிச்சுன்னு தான்மே இருக்க, ஆமா நீனு காலேஜ் படிக்கிறையாமே...? அல்லது வேல பார்குறயாமே...?”


“ரெண்டும் இல்லங்க, வேலைத் தேடி வந்துருக்கேன்” என்றதும்.


“சரியாப் போச்சு... இனிதான் வேலை தேடணுமா...? உன்னையப் பார்த்தா பெரிய வீட்டுப் பொண்ணு போல இருக்கு, ஆனா நீ தங்கப் போற ரூம்ல இருக்கிற ஜூலி தரை லோக்கலு. அவகிட்ட ஜாக்கிரதையா இரு...” எனச் சொல்லி அறைக்குள் விட்டுச் சென்றாள் செஞ்சி.


----தொடரும்----

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib