இனிக்கும் விஷம் (தீபாஸ்)
அத்தியாயம் 02
முகில் அதியன், நெற்றியில் விபூதி தீட்டி, வொயிட்டன் வொயிட் ஜிப்பா
அணிந்து, கண்களில் பிளாட்டினம் பிரேம் வைத்த கண்ணாடியும்... கையில் அவரது ராசிக்கு
நல்முத்து பதித்த மோதிரமும் தவிர்த்து வேறு எந்த பந்தாவும் இல்லாது இருந்தார்.
அறுபது வயதை நெருங்கியவரின் தேஜஸ் கொஞ்சமும் மங்காமல் இருந்தது.
முகத்தில் மட்டும் ஒரு இறுக்கம்.... அவரின் ஒட்டு மொத்த தொழில் சாம்ராஜ்யத்தையும்
வீழ்த்தக் கூடிய கத்தி இரண்டாவது மகன் உதித்தால் தலைக்கு மேல் தொங்கிக்
கொண்டிருந்தது.
பலத்த யோசனையுடன் தந்தையை பார்த்த வண்ணன் “என்ன பிரச்சனை...? இந்த
அளவு டல்லா உங்கள பார்த்தது இல்லையே...? என்னென்னு சொல்லுங்கப்பா, என்னால எதுவும் செய்ய
முடியுமானு பார்க்கலாம்”
“உன்னால செய்ய முடியும் வண்ணன், ஆனா....” என்று சொல்லாமல் விட்டதும்,
“ஏன் ஆனா... னு நிறுத்திட்டீங்க...? என்னால உங்க கவலைய சரி
செய்யமுடியும்னா எந்த காம்ப்ரமைசும் இல்லாம செய்து கொடுத்துடுவேன்...
யோசிக்காதீங்க சொல்லுங்க...” என்றான்.
“உதித், லாரா லவ் விஷயம்
உனக்குத் தெரியும்னு நினைக்கிறேன்... இப்போ லாரா மிஸ்ஸிங்... அவள் உயிரோடு இருக்கிறதுக்கு
சான்ஸ் இல்லைனு பேச்சு அடிபடுது. அதோடு இந்த பிரச்சனையில் முதல் குற்றவாளியா
உதித்தை சிக்க வைக்க எல்லா ஏற்பாடும் நடந்துக்கிட்டு இருக்கு” என்றார்.
அவர் சொன்ன விஷயத்தை கேட்ட வண்ணன் யோசனையுடன் “நீங்க உதித் கிட்ட
இதப்பபத்திப் பேசுனீங்களா...? என்ன சொன்னான்...?” என்றதும் அவரின் முகம் குற்றவுணர்வில்
தொய்ந்து போனது...
“அவன் என்கூட பேசுறதை நிறுத்தி மூணு வருஷம் ஆச்சு...” என்றார்.
“எல்லாத்துக்கும் காரணம் நான்தானே...”
“இல்ல வண்ணன், உனக்கு செய்த வினைக்கான அறுவடை காலம் இது...”
“அப்படி என்னதான் என் லைஃபில் நடந்தது...? என்னோட அம்மா யாரு...? பதினைந்து வயசுவர ஆசிரமத்தில நீங்க இருந்தும்
அனாதையா என்னை எதுக்கு வளரவிட்டீங்க...?
இப்படி பல கேள்விக்கு இதுவரை நீங்க பதில் சொல்லலை... உங்ககிட்ட
இதையெல்லாம் கேட்டுத் தெந்தரவு பண்ணக்கூடாதுன்னு ஃபாதர் சொன்ன காரணத்துக்காக
நானும் கேக்கலை...” என்றவனிடம்,
“அதுதான் நீயே துப்பு துலக்க ஆரம்பிச்சிட்டியே... நான் சொல்லாமலே நீயே
இதுகெல்லாம் பதிலை ஓரளவு திரட்டிட்டனு எனக்குத் தெரியும். அப்படி துப்பு தொலக்க
ஆரம்பிச்சத்தோட தொடர்ச்சியாத்தான் டிடைக்டிவ் வேலையை உன்னோட ஃபேசனா மாத்திக்கிட்ட...”
என்றவரை...
“எத்தனையோ காம்ளிகேட்டான கேசை நான் சால்வ் பண்ணி இருக்கேன்ப்பா... என்னோட
விஷயத்தில சம்பந்தப்பட்ட நீங்க வாயத்திறக்காததால. அதாவது.... உங்ககிட்ட நான் என்கொயரி
பண்ணாததால இன்னும் பசில்ஸ் கம்ப்ளீட் ஆகாமலேயே இருக்கு...” என்றவனிடம்,
“நான் சொல்லாம இருக்கிறதுக்கு காரணம், நடந்த விஷயங்களால என்னோட பிள்ளைங்களோட
நிம்மதி போயிடக் கூடாதுன்ற எண்ணத்தால கம்முனு இருந்துட்டேன். பெரியவங்களோட தப்பு
உங்களை பாதிக்காம இருக்கணும்”
“இதுக்கு மேல உங்ககிட்ட இதப்பத்திப் பேசிப் புரயோஜனம் இல்லைன்ற விஷயம்
புரியுது, ஆனா இப்போ நடக்குற உதித் பிரச்சனைக்கு தொடக்கப் புள்ளி கூட நான்
குடும்பத்துக்குள்ள வந்ததில் ஆரம்பமானது தானே...”
“வண்ணன்... என்னோட வாரிசுகள் கஷ்ட்டப்படக் கூடாதுன்னு நினைச்சேன். ஆனா
என்னோட மூத்த மகனான உன்னோட இந்த நிலைக்கு காரணமானவங்களை தண்டிக்காம விடுற அளவு நான்
நல்லவன் இல்ல...”
“அப்பாவா போயிட்டீங்க... அதனால உங்களோட இந்த வாதத்துக்கு ஹார்சா பதில்
சொல்லாம ரொம்ப டீசெண்டா சொல்ல டிரை பண்றேன்..”என்று சொன்ன வண்ணன் அழுத்தமாக அவரோட
முகத்தை பார்த்தபடி...
“உண்மையாவே என் நிலைக்கு காரணமான உங்க வொய்ப்பை தண்டிக்க நீங்க நினைச்சிருந்தா
சட்டத்துக்கு முன்னாடி அவங்க செய்ததை நிரூபிச்சு ஜெயிலில் போட்டிருக்கணும்...
ஆனா நீங்க அதைப் பண்ணலை.... தண்டனைன்ற பேரில் இன்னொரு பொண்ணுகூட
ரிலேஷன்ஷிப் வச்சுகிட்டீங்க....
தலைக்கு மேல வளர்ந்த பிள்ளைங்க இருக்கும் போது உங்க வொய்பை டைவர்ஸ் பண்ணிக்கிட்டீங்க...
அதுமட்டுமா தொழிலை அடுத்த ஸ்டேஜூகு கொண்டு போகணும்னு அந்த இல்லீகல்
ரிலேஷன் சிப்பை லீகலாக்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க...” குற்றம் சாட்டும் தொனியில்
சொன்ன வண்ணனை நிமிர்ந்து பார்த்த முகில் அதிபன்,
“மேலோட்டமா பார்த்தா நீ சொல்றது போலத்தான் தெரியும் வண்ணன், முதலில்
நீ சொன்னியே என் வொய்ப் இஷானிய குற்றவாளின்னு ஜெயிளுக்கு அனுப்பணும்னு...
அப்படி பண்ணினா என்னோட பிஸ்னஸ் லைப்பில் அது கரும்புள்ளியாகிடும்...
இஷானிக்கும் எனக்கும் பிறந்த உதித், மோனிகா பேரில் இருக்கிற என்னோட கம்பெனி ஷேர்ஸ்
டவுன் ஆகும். அதோடு அவங்க ரெண்டுபேரோட தனிப்பட்ட லைஃப் அபெக்ட் ஆகும்...
அதேபோல நான் உதித் அம்மா இஷானியை ஒதுக்கித்தான் வச்சேன் டைவேர்ஸ்
கொடுக்க நினைக்கலை...
சந்திரிக்கா சமர் கூட பிஸ்னெஸ் விஷயமா நான் அடிக்கடி சந்திச்சுப்
பேசுனதை தப்பா வெளில காமிச்சது இஷானி தான், அவள்தான் சந்திரிக்காவ நான் மூணாவதா மேரேஜ்
பண்ணவேண்டிய சூழலுக்கு கொண்டுவந்தா...
மூணு கல்யாணம் முடிச்சும் இப்போ நான் தனியாத்தான் நிக்கேன். அதுபத்தி
எல்லாம் எனக்கு கவலை இல்லை...
ஆனா இப்போ லாரா கொலைப்பழிய உதித் மேல போட நம்மோட பிஸ்னெஸ் எதிரிங்க
சிலர் ஆதாரம் ரெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க... நாம அவங்களை முந்திக்கணும்,
லாராவுக்கு என்ன ஆச்சு அப்படின்னு கண்டுபிடிச்சாத்தான் சிக்கலை விடுவிச்சு உதித்தை
காப்பாத்த முடியும்.
அப்படி உதித்தை காப்பாத்த முடியாம போச்சுன்னா... பிரச்சனை அவனோடு முடியாது...
முகில் குழுமத்தோட அடையாளத்தில ஒருத்தன் உதித் அதனால மொத்த பிஸ்னசுக்குமே கெட்ட பேரும்,
சரிவும் வரும்.
அந்த நிலை வரக் கூடாது நீ தான் என்ன நடந்ததுன்னு இறங்கி கண்டுபிடிச்சு
சரிபண்ணனும். அதுவும் சீக்ரெட்டா” என்றார்.
அதே நேரம் அந்த பங்களாவின் மற்றொரு அறையில் படுக்கையில்
உடல்நலமில்லாமல் இருக்கும் பாட்டி அமுதவல்லியின் முன்பு இருந்த இருக்கையில் கோபத்துடன்
அமர்ந்திருந்த இஷானி பெரியவளிடம்,
“கடைசி அந்த வண்ணனை இங்க பங்களாவுக்கே கூட்டுட்டு வந்துட்டார்மா...
இத்தனை காலம் எது நடக்கக் கூடாதுன்னு நான் நினைச்சேனோ அது நடந்துடுமோ....
இல்ல... முடியாது யாருக்காகவும் இந்த பங்களாவை நான் விட்டுக்
கொடுக்கிறதா இல்லை...” என்றாள்.
வண்ணன் வந்திருப்பதாக சொன்ன சேதியில் பெரியவளின் முகம் பாசத்தில்
இளகியது “உண்மையாவே துவாரகா மகன் வந்துருக்கானா...?” என்றதும்.
“அம்மா.... உண்மையாவே என்னைய பெத்தவ தானா நீ...?
நானே அந்த பொடியன் சின்னவனா இருக்கும்போதே நசுக்காம விட்டுட்டேனேனு
ஆதங்கத்துல இருக்கேன்,
என் பிள்ளைகளுக்குப் போட்டியா முளைச்சதும் இல்லாம, எனக்கே எனக்காக இந்த
பங்களா வேணும்ற ஆசைக்கு கொல்லி வைக்கிறது போல வந்து நிக்கிறான் அந்த துவாரஹா மகன்....
அவன் வந்ததைக் கேட்டு உன் முகத்தில் பல்ப்பு எரியுது...?” என்றதும் தனது மகிழ்வை படுக்கையில்
இருந்த அந்த பெரிவள் அடக்கிக்கொண்டு
“இஷானி கோர்ட் வரை போய் டைவர்ஸ் ஆகியும் உனக்கு புத்தி வரலையே... போதும்
செய்த பாவம் எல்லாம் போதும்...
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
உனக்கு டைவர்ஸ் ஆகி ஒத்தையில நிக்கிறயே... இதோட உனக்கான தண்டனை போதும்”
என்றவரிடம்
“இப்போ என்ன டைவர்ஸ் தானே ஆச்சு, நான் என்ன செத்தா போயிட்டேன், இத்தனை
காலமா அவருக்கு பொண்டாட்டியா இருந்ததுக்கு சுளையா நஷ்ட்ட ஈடு வாங்கிட்டுத்தானே
டைவர்ஸ் கொடுத்திருக்கேன்... ஆனா அவர் கொடுத்த சொத்து பத்து எல்லாம் எனக்கு பெருசு
கிடையாது... இந்த பங்களா கடைசி வரை எனக்கானதா இருக்கணும். இதுக்காக நான் எவ்வளவு
பாடுபட்டுருக்கேன்.
அப்பா இருந்திருந்தா எனக்கு இந்த நேரம் எவ்வளவு சப்போர்ட்டா
இருந்திருப்பார் தெரியுமா...?” என்ற இஷானியிடம் தனது வாதம் எடுபடாது என்ற நிதர்சனத்தில்
கண்கள் கலங்கியது.
மனதினுள் ‘அந்த மனுஷன் உன் மனசுல நஞ்சை விதைச்சிட்டு போய்
சேர்ந்திட்டாரு... அறுவடைக்கு அது காத்து நிக்குது...
கடவுளே இவளை நீதான் காப்பாத்தி திருந்தி வாழ வழிகாட்டணும்’ கடவுளுக்கு
தனது கையாலாகாத தனத்தால் வேண்டுதல் வைத்தாள் முதியவள்..
*******
ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு
நிசப்தமாக இருந்தது.
அந்த அமைதி அவளை அச்சப்பட வைத்தது...
கைகளை அசைத்தபோதுதான் அது கட்டப்பட்ட நிலையில்
இருப்பதை உணர்ந்தாள், ஆதலால் அதிர்ச்சியடைந்து சட்டென மயக்கத்திலிருந்து எழுந்தவளின்
புலன்களும் விழித்துக் கொண்டது.
கைகள் இரண்டையும் சேர்த்து வைத்துப்
போட்டிருந்த இரும்புக்காப்போடு இணைக்கபட்டிருந்த சங்கிலியை இழுத்துப் பார்த்தாள், அது கட்டிலோடு பிணைக்கப்பட்டிருந்தது...
குனிந்து தன்னை நோக்கினாள். பச்சை நிற உடை தரித்திருந்தாள், இதெப்படி..?
என யோசிக்கும் போதே அவளின் தலை முடியின்
வித்தியாசம் உணர்ந்து காப்பு பூட்டப்பட்ட கைகளைக் கொண்டு போய் தலையை தொட்டுப்
பார்த்தவள்.... அது ஒட்ட வெட்டப்பட்டிருந்தது,
தனது அழகிய முடி வெட்டப்பட்டிருப்பதில்
கண்களில் முணுக்கென கண்ணீர் துளிர்த்தது... எந்நேரமும் டெனிம் பேண்ட், ஷர்ட் மாடர்ன் உடை சகிதமாக வளம்
வருபவள் தான். அழகான அடர்ந்த கருத்த அலையலையான நெளிவுகளுடன் காணப்படும் கூந்தலை, தோளில் புரளும் அளவுக்கு பெதர் கட்
செய்து பார்த்து... பார்த்து... பராமரித்தவளுக்கு இந்த கொடுமை யார் செய்தது...?
பச்சை நிற உடை..., கைகள் இரும்புக் காப்பு, முடியை ஓட்ட வெட்டியிருத்தல், அத்துடன் நோயாளிகளுக்கான பிரத்தியோகமான
கட்டிலில் தன்னை கிடத்தி இருந்தல்... . எல்லாவற்றையும் ஒன்றோடு ஒன்றாய் தொடர்புப் படுத்திப்
பார்த்தால்.... நான் இருக்குற இடம்
மெண்டல் ஹாஸ்பிடலோ...? நெஞ்சில் பளிச்சென்ற பயத்தின் ஊசி இறங்கியது...
அவ்வாறு
யோசிக்கும் போதே அவள் இருந்த அறையின் கதவு திறக்கப்பட்டது. வெள்ளைநிற புடவையின்
ஓரங்களில் புளூ நிற பட்டையான பார்டர் இருக்கும் சேலை உடுத்தி கழுத்தில் அடையாள
அட்டையோடு செவிலியர் ஒருத்தி உள் நுழைந்தாள்.
வந்தவள் “எந்திச்சாச்சா..? என் கூட வா, டாக்டர் பார்க்க வரச்
சொன்னாங்க” என்று சொல்லிக்கொண்டே கொண்டு வந்திருந்த சாவியால் சங்கிலியில் லாக்கை
விடுவித்து அழைத்துச் சென்றாள்
அடைத்திருந்த
அறையை விட்டு வெளிவந்து நடந்துக்கொண்டே வரிசையாக இரண்டு பக்கமும் ஒரே போல அறைகள்
இருப்பதை கண்டாள்...
‘இது ஹாஸ்பிடல்தான்....
ஆனா நான் எப்படி இங்க வந்தேன்...?’ என யோசித்துக்கொண்டே செவிலியின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த அடையாள அட்டையை உற்றுக் கவனித்தாள்.
அதில் நேச்சர்
ரீஹேபிடேட் சென்டர் என்றிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தாள்.
‘போதை மறுவாழ்வு
மையத்துல நான் எதுக்கு இருக்கேன்...? எனக்கு அதுபோல எந்த பழக்கமும் இல்லையே....! கடைசியாக எனக்கு என்ன நடந்தது?
செபாஸ்டின் கூடத்தானே போனேன்... அவன்
என்கிட்ட “நீங்க இங்க உட்கார்ந்து லைட்டா ஒயின்
சிப் பண்ணுங்க. நான் உங்களை உள்ள கூட்டிட்டு போக
பெர்மிசன் வாங்கிட்டு வாரேனு சொன்னான்,
அப்போக் கூட “நோ... நோ...உங்க பாஸ்க்குதான் அந்த பழக்கம் இருக்கு. ஒன்லி பிரூட் ஜூஸ் மட்டும் தான்“ செபாஸ்டியன் கிட்ட சொன்னேனே...
“ஓகே மேடம், லெமன் சூஸ் சொல்றேனு” சொல்லிட்டுப் போய் ஜூஸ் தானே வாங்கிட்டு
வந்துக் கொடுத்தான்.
அதை கொஞ்சமா
குடிச்சத்து மட்டும்தான் நினைவில் இருக்கு அதுக்குப் பிறகு என்ன ஆச்சு....?”.
இவ்வாறாக அவள்
தன்னையும் தன்னைச் சுற்றி உள்ள சூழலையும் அனுமானித்தபடி வந்தவளை டாக்டரின் அறையினுள் கூட்டிக்கொண்டு
வந்தாள் அந்த செவிலி..
அங்கு டாக்டரின்
முன் உள்ள இருக்கையில் அவள் அமர்ந்திருந்தாள், நாற்பத்தி ஐந்து வயது போல இல்லாமல்
மிகவும் இளமையாக எதிரில் உள்ளவர்களை அசரடிக்கும் அழகுடன் செல்வச் சீமாட்டியாக
அமர்ந்திருந்தவள் கோணலான சிரிப்பை உதிர்த்தபடி பார்த்தாள்.
அவளைப்
பார்த்ததும் கோபத்தில் அருகில் இருந்த மேஜையில் இருந்த பேப்பர் வெயிட்டரை தூக்கி
அடிக்க பாய்ந்தபோது... அங்கிருந்த இருவர் ஓடிவந்து கெட்டியாகப் பிடித்துக்
கொண்டார்கள்....
“என்னைய ஒரு
வார்த்தை சொல்லி மிரட்டியதுக்கே உன்னைய எங்க கொண்டுவந்து உன்னை நிறுத்தியிருக்கேன்
பார்த்தியா....?
“எனக்கு நீ எல்லாம் ஒரு மேட்டரே இல்லை....”
என்றதும் தன்னை பிடித்தவர்களை உதறி விடுபட்டுக்கொள்ளும் நோக்கத்துடன்
துள்ளியவளை...
“ஏய்... என்ன ஆச்சு... ஐயய்யோ... ஒரு பைத்தியத்தைப் போய் எனக்கு ரூம்
மேட்டா இந்த வார்டன் கோர்த்து விட்டுருச்சே.. ஏய்... என்ன ஆச்சு..?”என்று கை
கால்களை கட்டிலில் உதறிக் கொண்டிருந்த நட்சத்திராவை எழுப்பினாள் ஜூலி.
தொப்பலாக வியர்வையில் குளித்தபடி ஜூலி உசுப்பியதால் கனவில் இருந்து
விடுபட்டு எழுந்ர்து அமர்ந்தாள் நட்சத்திரா...
----தொடரும்----
No comments:
Post a Comment