இனிக்கும் விஷம் (தீபாஸ்)
அத்தியாயம் 09
பளபளவென்ற
கருப்பு நிற மிரட்டலான பைக் மீது அதே கருப்பு நிற ஹெல்மெட், கருப்பு நிற டீசெர்ட்,
மென் சாம்பல் நிற ஜீன்ஸ். அணிந்து ஆறடி உயரத்தில் ஓங்குதாங்காக புரவி வீரனின்
தோற்றத்தில் மிரட்டலான தொனியில் “அறிவிருக்கா” என்று பேசிய குரலுக்கு
சொந்தக்காரனின் கண்கள் தன்னை கொத்தித் தின்பது போன்ற பிரம்மை உண்டானது
நட்சத்திராவுக்கு.
ஏனோ அவனின்
அத்தோற்றம் அவள் பார்த்த ஆங்கிலப்படத்தில் கண்ட டெவிலை ஒத்து இருப்பதாக பட்டதால்
சில்லென்ற பயம் அவளின் இதயத்தைத் தாக்கியது.
அவனின் பார்வை
விட்டு மறைந்துக்கொள்ளத் தோன்றியதால் சட்டென்று வலதுபக்கம் சென்ற தெருவிற்குள் வேக
எட்டுவைத்து நுழைந்துவிட்டாள். அவன் தன்னை தொடர்ந்து வந்துவிட்டால் என்ற
எச்சரிக்கை உணர்வில் அங்கு நின்றுகொண்டிருந்த குப்பைகளை எடுத்துச்செல்ல வந்திருந்த
டிரக்குக்குப் பின் தனது உருவத்தை மறைத்து நின்றுக்கொண்டாள்.
அவளின் வாய் அசைவை
வைத்தே தன்னை திட்டிய வார்த்தையை வண்ணன் யூகித்து விட்டான், சிறுபிள்ளைபோல
வேடிக்கைப் பார்த்துகொண்டு வந்தவள், தனது வண்டியில் குறுக்கே பாய்ந்து அட்டிபடப்
போவதை கண்டு.... கடைசி நிமிடம் சுதாரித்து.... சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தியதால்
அவனுக்கு வந்த டென்ஷனில் கோபத்தில் வார்த்தைகளை விட்டுவிட்டான்.
அந்த குற்றவுணர்வோடு
அவளை ஏறிட்டுப் பார்தவனுக்கு அவளின் கண்கள் பயத்தை காட்டிய விதமும். அழகான உதடுகள்
அசைந்த விதமும் “ஸ்...ஸப்ப, அழகிதான்” என்று தனக்குள் சொல்ல வைத்தது.
தன்னை
பதிலுக்கு பதில் அவள் ஏசியத்தை ஏனோ ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளத் தோன்றவில்லை,
சில நிமிடங்கள் மட்டுமே அருகில் கண்ட அவளின் உருவம் அவனின் அடிமனதில்
தங்கிவிட்டது.
இருந்தும் “ஓய்..”.
என்று அரட்டும் விதத்தில் சத்தமிட்டவனின் கண்கள், ஓடி மறைந்து போனவளை மறுபடி காண
அலைபாய்ந்தது. அவள் காணாமல் போன பிறகே.. ‘அடச் சே... ஒரு பொண்ணப் பார்த்து
நடுரோட்ல வண்டியை நிப்பாட்டிட்ட... நீயெல்லாம்...!?’ என்று மனதிற்குள் தன்னை தானே
காறி துப்பிவிட்டு அங்கிருந்து யுகாந்தனின் வீடு நோக்கி வண்டியைச் செலுத்தினான்.
அவனுக்கு
அந்தத் தெரு புதிதில்லை... அவனின் தாய் வீடு அங்கேதான் என்றாலும், தனது பிறப்பின்
பின்புலம் தேடி அலைந்தபோது அங்கிருந்த யுகாந்தன் நண்பனாய் அவனை அரவணைத்துக்கொண்டான்.
அவனின் குடும்பமும் அவனை தங்களிள் ஒருவரகாக பார்த்ததால் தயக்கம் இல்லாது நண்பன்
அழைக்கும் போது அவன் ஆசைப்படும் குடும்பக் கூட்டுன் நிழலை நண்பனின் தயவில்
அனுபவிக்க அங்கு வருவான்.
இன்றும்
பங்களாவிற்குள் நுழைந்த போது முன் வரவேற்ப்பு அறையில் அமர்ந்து கீரை சூப்
பருகிக்கொண்டே டிவி பார்த்துக்கொண்டிருந்த பாட்டி கல்யாணி “வா... வா... வா..
வண்ணன், எப்படி இருக்க? இங்க சென்னையில தான் இருக்கிறதா யுகா சொல்றான். ஆனா அவன்
வந்தாத்தான் உன்னைய இந்த வீட்டுப் பக்கமே பார்க்க முடியுது” எனச் சொல்லிக்
கொண்டிருக்கும் போதே யுகாந்தனும் அங்கு வந்து சேர்ந்தான்.
இருவரும்
ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு விலகியதும், “ஆமா வெண்ணிலா எங்க..?” என்றதும்
“அவள் அவங்க
டாட் கூட லண்டன்ல முக்கியமான ப்ராஜெக்ட்ல இருக்கா, அடுத்தத் தடவை நீ இங்க வரும்போது
பார்க்கலாம், அதுவும் எங்க ஜூனியரோடு” என்றதும்.
“வாப்...
கங்கராசூலேசன் டா.. அப்போ நான் தாய்மாமா ஆகப்போறேனா..?” இவ்வளவு பெரிய சந்தோசத்தை
வெறுமனே சொல்ற டிரீட் வேணும் எனக்கு” என்று சொல்லிகொண்டிருக்கும் போது அங்கு வந்த
யுகாந்தனின் சித்தி திவ்யாவோ,
“வாப்பா
வண்ணன், நல்லா இருக்கியா..? அப்புறமா ரெண்டுபேரும் டிரீட் கொண்டாட வெளில போலாம்.
இப்போ கை கழுவிட்டு சாப்பிட வாங்க... நீ வருவேன்னு யுகா சொன்னதால அவரும் சாப்பிடாம
வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கார்” எனேறு சொல்லிவிட்டு முன்னாள் நடக்க.
“நல்லா
இருக்கேன் ஆண்ட்டி, அங்கிளை சாப்பிடச்சொல்ல வேண்டியது தானே ஆண்டி... அவங்க சுகர்
பேஷன்ட் பசிக்கும் எனக்காக பாவம் எதுக்கு காத்திருக்க வச்சீங்க...?” என்று
வண்ணனும் டைனிங் டேபிள் நோக்கி யுகாந்தனுடன் நகர்ந்தான்.
சாப்பிட
ரெடியாக அமர்ந்திருந்த திவ்யாவின் கணவர் வருண்ராஜ் அவன் சொன்னதை கேட்டுவிட்டு..
“அதெல்லாம் பசிக்கலை, பிள்ளைங்க எல்லோரும் கல்யாணம் பண்ணி வெளில போயிட்டாங்க. எனக்கும்
என் அம்மாவுக்கும் தானேனு உப்பு உரப்பு இல்லாம சாப்பாடு போடுறா... இன்னைக்கு யுகா
வந்துருக்க புண்ணியத்தாலயும், உன்னாலயும் வெரைட்டியா ரெடி பண்ணி வச்சிருக்கா.
அப்படி இருக்கும் போது நீங்க இல்லாம நான் மட்டும் சாப்பிட உட்கார்ந்தா நல்லா
இருக்காதுல்ல...” எனச்சொல்லவும்.
“அவர் கிடக்குறார்
எதையாவது ஏட்டிக்குப் போட்டியா சொல்லிகிட்டு.... ஸுகர், பிரசருன்னு உடம்புல
வந்ததுக்குப் பிறகு வாயை கட்டினாத்தானே டாக்டர்கிட்ட போகாம தப்பிக்க முடியும், நீ
உட்காருப்பா” எனச்சொல்லி சாப்பாடு
பரிமாறிக்கொண்டே...
“ஆமா வண்ணம் போன
வருஷம் இங்கன வந்தப்போ கான்ட்ராக்டர் சிவ நாதன் மகள் துவாரஹா வீட்டுல வேலைபாத்த
ஜோதியை பத்தி எதுவோ டீடைல் வேணும்னு இங்க வந்திருந்த கங்காக்கிட்ட விசாரிச்சியே...
எதுவும் தகவல் கிடைச்சதா...?”
“எதுக்குக்
கேக்குறீங்க ஆண்ட்டி..? ஒரு வருஷம் முன்னாடி கேட்டத இப்போ வரை நினைவில
வச்சிருக்கீங்களே...!”
“நானும் ஒரு
வருஷமா இங்க இல்லையே... ரெண்டாவது உள்ளவ மாசமா இருந்தால்ல, பிரசவத்தை அமெரிக்காவுலயே
பார்த்துடணும்னு பிரியபட்டா, அதனால நானும் கூட பார்த்துகிட அங்க போயிட்டேன்ல..
இஷானி இங்க
வந்துருக்காளாம்... எனக்கு நேத்து தான் தகவல் தெரிஞ்சது. துவாரஹா இருக்கும் போது
நான் அங்க போவேன் அவள் இங்க வருவா நாங்க ரெண்டுபேரும் திக் ஃப்ரெண்ட்ஸ்
தெரியுமா...?
அவப்போய் சேர்ந்தப்
பிறகு அந்த பக்கமே அவ்வளவா போகுறது இல்ல... இஷானியும் என்கிட்ட நல்லா தான் பேசுவாள்.
ஆனா துவாரஹா அளவு இவள்கிட்ட குளோஸ் இல்லை.அதோட இவளுக்கு கொஞ்சம் ஹெட் வெயிட்டும்
அதிகம்,
அவங்க வீட்டுல
வேலை பார்த்த ஜோதி பத்தி எதுக்கு விசாரிக்கிறேனு காரணத்தோட சொன்னா. நான் இஷானிக்கிட்ட
ஜோதி பத்தி கேட்டுச் சொல்வேன்ல” என்றதும் யுகாந்தும், வண்ணனும் ஒருவரை ஒருவர்
பார்த்துக்க் கொண்டனர், மனதினுள் “போச்சு காரியமே கெட்டுடும்’ என்று
நினைத்தார்கள்.
“நோ... ஆண்ட்டி,
அதெல்லாம் எதுவும் கேக்க வேண்டாம் நான் விசாரிக்கிற கேஸ் சம்மந்தப்பட்டவங்க
வீட்டுல வேலை பார்த்த ஜோதியும் காண்ட்ராக்டர் சிவ நாதன் வீட்டுல வேலை பார்த்த
ஜோதியும் வேற வேற ஆட்கள், நான் ஒண்ணுனு நெனச்சு விசாரிச்சுட்டேன்” என்று ஏதோதோ
சொல்லி மழுப்பி விட்டான்.
சாப்பிட்டதும்
அங்கிருந்து நழுவிய நண்பர்கள் இருவரும் மாடியில் இருந்த பால்கனியில் அமர்ந்து பேச
சென்ற வேளையில் தூரத்தில் கேட் அருகே தெரிந்த உருவத்தை கண்டு சுவாரஷ்யமானான்
வண்ணன்.
கேட் அருகில்
நின்று எதையோ உற்றுப்பார்க்கும் அவள்... இங்க நான் வரும் போது பைக் முன்பு
விழுந்தவள் தானே... என்று அடையாளம் கண்டுகொண்ட வண்ணனின் பார்வை கூர்மையாக அவளின்
மீது பதிந்தது...
அப்போ இருந்து
இப்போவரை இவள் இன்னும் இங்கயே தான் சுத்திக்கிட்டு இருக்காளா... ஆமா நான் பார்த்தப்போதும்
இதேபோலத்தானே ஒவ்வொரு கேட் முன்னாடியும் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்.. என்று
யோசிக்கும் போதே வாச்மேன் அவளிடம் என்னவோ கேட்பதும் அவள் ஏதோ பதில் சொல்வதும் அதற்கு
அவர் சொன்ன பதிலை கேட்டு அங்கிருந்து அவள் நகர்வதையும் பார்த்ததும் “சம்திங் ராங்”
என்ற முணுமுணுப்புடன் கேள்வியாக அவன் புருவம் இடுங்கியது.
******
மும்பை மாளிகையில்
இருக்கும் தனது அலுவலக அறையில் சந்திரிக்கா கோபமாக அமர்ந்திருந்தாள்.
அவளின் முன்பு
நின்றுகொண்டிருந்த செபாஸ்டின் “மேம்... விசாரிச்சவரை ஒன்னு ரெண்டு பேர் மட்டும்
தான் நாம தேடிப் போறதுக்கு முதல் நாளில் அவங்க ரூம் பக்கம் போனதை பார்த்ததா
சொல்றாங்க, ஆனா ரூம்விட்டு அவங்க வெளியப் போனத யாரும் கவனிக்கலைன்றாங்க.
ஹாஸ்டல் மேனேஜ்மென்ட்
கிட்ட பேசி ஹாஸ்டல் என்ட்ரென்ஸ்ல இருக்கிற சிசிடிவி ஃபுட்டேஜ்ல கூட செக் பண்ணி
பார்த்தாச்சு. அவங்க வெளியப் போனதுக்கான எந்த தடயமும் தெரியலை.
டெல்கியை
சுத்தி அவங்க போகக் கூடிய எல்லா இடத்துலேயும் தேடிட்டோம் ஆனா கிடைக்கலை” என்றான்.
யோசனையுடன் “ஒருவேளை
டெல்லியை விட்டு எஸ் ஆகிட்டாளோ...? இப்போ எனக்கு இருக்கிற பிரச்சனைக்கு ஒரே தீர்வு
அவள் மட்டும் தான். எப்படியாவது தேடிப்பார்த்து கண்டு பிடிக்கணும். படிக்கிற
இடத்தில யாரெல்லாம் அவளுக்கு குளோஸ் ஃப்ரெண்ஸ்ன்னு பாரு செபாஸ்டின். அவள் ரூம்
மேட்டையும் ஃபாலோ பண்ணு... எனக்கு அவள் வேணும்”
“ம்...ஓகே
மேடம். அவங்க செல் நம்ரையும், மொபைலின் IMEI நம்பரை வச்சுக் கூட டிரேக் பண்ண
முடியலை. செல்லை டிஸ்போஸ் பண்ணிட்டாங்கனு நினைக்கிறன்”
“இங்க வந்தவ
எப்படியோ அலார்ட்டாகிட்டா. நாம அவளை அசால்டா நினைச்சு கோட்டை விட்டாச்சு...” என்று
சொல்லிக்கொண்டிருக்கும் போது நிதி அமைச்சரின் பெர்சனல் அலைபேசியால் இருந்து
அழைப்பு வந்தது.
இவர் எதுக்கு இப்போ
கூப்பிடுறார் என்ற யோசனையோடு “yes சார், சொல்லுங்க நான் சந்திரிக்காதான் பேசுறேன்”
என்றதும்
“என்ன மேடம்
நான் அனுமதிச்ச உங்க பில்லுக்கு FIBP (ஃபாரின் இன்வெஸ்ட்மென்ட் பிராம்டர்ன் போர்ட்)ல
இன்வேஷ்டிகேசன் வைப்பாங்க போல... என் மேல சந்தேகம் வந்துருக்கு...
உங்கக்கிட்டு
இருந்து எனக்கு கைமாறிய பணத்தைக் கூட ஸ்மல் பண்ணியிருக்காங்க, எப்படி மேடம்...?
நீங்க ரிஸ்க் வராது. வந்தா நான் பார்த்துக்கிடுவேனு சொன்னீங்களே... அதனாலத்தானே பில்லில்
நான் சைன் பண்ணி அனுமதிக் கொடுத்தேன்” என்றதும்.
“சார்...
உங்களுக்கு மட்டும் ரிஸ்க்ன்றது போல பேசுறீங்க, நீங்க சொல்றது போல என் மேல ED
(இந்திய அரசாங்கத்தின் சட்ட அமலாக்க இயக்குனர்) நடவடிக்கை எடுத்தா நானும் தான்
வசம்மா மாட்டுவேன். என்னைக் காப்பாத்திக்கவாவது நான் ஸ்டெப் எடுத்தே ஆகணும்.
கொஞ்சம் பொறுமையா இருங்க, என் ஹஸ்பென்ட்கிட்ட பேசிட்டு உங்ககிட்ட என் நெக்ஸ்ட்
மூவ் பத்தி சொல்றேன்” என்றாள்.
“உங்க
வார்த்தையை நம்புறேன் மேடம், விஷயத்தை எப்படியாவது ஆஃப் பண்ணப் பாருங்க” என்று
சொல்லி வைத்தார் மினிஸ்டர்.
வைத்ததும்
கோபத்தில் அருகில் இருந்த அழகான செராமிக் ஃப்லவர்வாசை எடுத்து ‘ஆ....’ என்று கத்திக்கொண்டே
கோபத்தில் சுவற்றில் தூக்கி அடித்தாள் சந்திரிக்கா. அந்நேரம் சரியாக முகில்
அதியனும் பங்களாவிற்குள் நுழைந்தார்.
பங்களாவின்
முன் வரண்டாவில் கால் வைக்கும் போதே முன்னடியில் வலதுபக்கம் இருந்த சந்திரிக்காவின்
ஆபீஸ் அறையில் இருந்து வந்த அவளின் சத்தமும் அதைத் தொடர்ந்து உடையும் சிலீரென்ற
சத்தமும் அவரை கலவரப்படுத்த வேகமாக அங்கே சென்று பட்டென கதவைத் திறந்தார்.
உள்ளே சிவந்த
முகமும், ஆக்ரோசமான பார்வையோடும் சந்தனத்தில் கடைந்தெடுத்த சிற்பம் போன்ற வடிவில்
கையில்லாத சிவப்பு நிற ரவிக்கை மற்றும் காட்டன் சேலை உடுத்தி நின்று
கொண்டிருந்தவளின் தோற்றத்தையும் உடைந்து கிடக்கும் பூச் சாடியையும் அதிர்ந்து பார்த்தவரிடம்.
“ஏதாவது
பண்ணுங்க முகில், இல்லன்னா நாம ஜாயின்ட்டா வித்து கணக்கில் காட்டாம பதுக்கி
வச்சிருக்க அத்தனை பணமும் போயிடும். அதோடு நாம ஜெயிலுக்கும் போகவேண்டியது
இருக்கும்.
எனக்கு கூட
ஒன்னும் இல்ல, என் பங்குப் பணத்தை அனாமத்தா லாரா பேரில் இருக்குற கம்பெனியில்
வச்சிருக்கேன். எனக்குப் பதில் லாராதான் உள்ள போகணும், ஆனா நீங்க...?” என்று கூறி
நிறுத்தினாள்.
No comments:
Post a Comment