இனிக்கும் விஷம் (தீபாஸ்)
அத்தியாயம் 10
சந்திரிக்காவோ,
தாங்கள் செய்த அந்நிய செலாவணி மோசடியில் இருந்து தப்பிக்க நினைத்தாள், அதற்கான
வேளையில் முகில் அதியனை ஈடுபட வைக்க, தீவிரமாகக் களம் இறக்கவேண்டும் என்று
யோசித்தாள். அதற்கான தூண்டுதலுக்காகவே
மாட்டினால் அவருக்குத்தான் பாதகம் அதிகம் என்று சொல்லி... பிரச்னையை ஆஃப் பண்ண முகிலனை
கிளப்பிவிட முயன்றாள்
ஆனால்
உண்மையில் பிரச்சனை பூதாகரமானால்... லாராவை குற்றவாளியாக தேடினால்... அவளைப்
பற்றிய விஷயங்களைத் தூண்டித் துருவ ஆரம்பித்தால் தனது முகத்திரை கிழிக்கப்பட்டுவிடும்
என்ற பயம் சந்திரிக்காவை ஆட்டிப் படைத்தது.
முகிலனோ தன்னை
மிரட்டும் வகையில் பேசியவளிடம், “என்ன சொன்ன சந்திரிக்கா... நீ ஜெயிலுக்கு போக மாட்டியா...?
நடந்ததுல ரெண்டுபேருக்கும் சரிபங்கு இருக்கு... சொல்லப் போனால் நான்கூட லண்டன்
விக்டர், ராயல் பேமிலியைச் சேர்ந்த லண்டன் விக்டரோட ஒவ்வொரு மூவையும் மீடியா கவர்
பண்ண அலைஞ்சுகிட்டு இருக்காங்க. அப்படி இருக்கும் போது நம்ம டெலிகாம்யூனிகேசன்
கம்பெனியை அவருக்கு கைமாத்தி விட்டு பணம் வாங்குனா... அதைப் பத்திய விஷயம் மீடியாவில் தூண்டித் துருவுனா என்ன
பண்ணனு கேட்டேன்” என்றதும்
“இப்போ என்ன
சொல்றீங்க டார்லிங்...? இந்த இஸ்யூவுக்கு நான்தான் காரணம்னு சொல்றீங்களா..?
உங்களுக்கு அதுல கிடைக்கும்னு தெரிஞ்ச பணத்து மேல ஆசை இல்ல, என்னோட கட்டாயத்தின் பேர்ல
தான் நடந்ததுன்னு சொல்ல வருறீங்களா..?”
என்று
கூர்மையாக அவரை துளைக்கும் பார்வை பார்த்தபடி அவ்வளவு நேரமும் இருந்த ஆக்ரோசத்தை சட்டென
புன்னகை என்னும் மாய்மாலத்தின் பின் மறைத்துக்கொண்டு திமிராக அவரை பார்த்தபடி அவரின்
அருகில் நடந்து வந்தாள்
அவள் தனக்கு
அருகில் நெருங்க... நெருங்க... ஏதோ மாய வலைக்குள் அவள் தன்னை வீழ்த்த வருவது போல
தெரிவதே என்று தனக்குள் சொல்லிகொண்டாலும்,
நெருங்கிவிட்டவளின்
லாவண்யங்களினால் தாக்கப்பட்டடு... தட்டுத்தடுமாறியபடி,,,”ஹேய்... நோ... நோ...
அப்படிலாம் இல்லா... எனக்குமே அந்த பண டீலிங் பிடிச்சுதான் இருந்தது...” என்றார்.
அவளோ சரேலென பின்னால்
திரும்பி செபாஸ்டியனை பார்த்ததும் அவன் சட்டென குனிந்துகொண்டு அவளின் பார்வையின்
ஆர்த்தம் புரிந்து அந்த அறையை விட்டு வெளியேறினான்.
ஹஸ்கி
வாய்சில், “ஐ நோ யூ டார்லிங், யூ கேன் டூ இட்” என்றவளின் குரல் முகிலனின்
உதட்டுக்குள் அடங்கிப் போனது.
*****
நட்சத்திரா
யுகாந்தனின் வீட்டு வாசலில் நோட்டம் இட்டுவிட்டு ஏமாற்றத்துடன் போவதை கண்டதும்
அவளைத் தொடர்ந்து போக அவனின் துப்பறியும் மூளை உந்தியது.
“யுகா... ஒரு
பத்து நிமிசத்தில் வந்துடுறேன்” எனச்சொல்லி படபடவென கீழே இறங்கி வந்து பைக்கை
எடுக்காமல் நடந்தே கேட்டுக்கு அருகில் வேகமாக வந்தடைந்தான்.
அவனை பார்த்த
வாட்ச்மேன் மரியாதையோடு எழுந்து நின்றான்.
அவரிடம் “இப்போ
ஒரு பொண்ணு உங்க கிட்ட வந்து ஏதோ விசாரிச்சிட்டுப் போச்சே.. என்ன கேட்டுட்டாள்...?”
என்றதும்.
“யாரோ “உதித்
முகிலன்”றவரை நம்ம பங்களாவில் இருக்காறானு அந்தபொண்ணு கேட்டுச்சுங்க, நான் அப்படி யாரும்
இங்க இல்லைன்னு சொல்லி அனுப்பிட்டேன்” என்று சொன்னதும் அவனின் மூளைக்குள் மணி
அடித்தது.
சட்டென
சுறுசுறுப்பானவன், அவளை மிஸ் பண்ணக் கூடாதென
அங்கிருந்து அவள் சென்ற திசையில் வேக எட்டுகள் வைத்து சென்றான். கண்ணனுக்கு
தென்படுகிறாளா என்று தேடினான்.
தூரத்தில் சென்றுகொண்டிருந்தவளை
பார்த்ததும், தேவையான இடைவெளி விட்டு பின் தொடர்ந்தான். அவளுக்கு இந்த ஏரியா
புதிது என்பதை ஆங்காங்கே திக்கு தெரியாமல் முட்டுச் சந்தில் போய் முட்டிவிட்டு
திரும்புவதை வைத்துக் கண்டு கொண்டான்.
‘இவ யாரு..? உதித்தை
எதுக்குத் தேடுறாள்....? இவளுக்கும் உதித்துக்கும் என்ன தொடர்ப்பு இருக்கும்...?’
என்று யோசித்தபடி அவள் அறியாமல் பின் தொடர்ந்தான்.
மதியத்தை
தாண்டிய பின்னும் அவளின் தேடுதல் படலம் முடியவில்லை அடுத்த தெருவில் தான் அவள் தேடிவந்த
உதித் தங்கி இருக்கிறான் என்ற விஷயம் அவளுக்குத் தெரியாததால் சோர்ந்து போனாள்.
அவளின் நடையில் ஆரம்பத்தில் இருந்த துள்ளல் இல்லை என்பதையும் வண்ணன் கண்டுகொண்டான்.
ஒருகட்டத்தில்
அவளைத் தொடர்ந்து வரும் தன்னை அவளும் கண்டுகொண்டாள் என்பதை திரும்பி திரும்பி
பதட்டமாக பார்த்தபடி வேக நடை போட்டவளின் செயலில் இருந்து புரிந்துக் கொண்டான்.
இனி இப்படி
பூசாண்டி காட்டாம அவளை பிடித்து நேரடியாகவே விசாரித்துவிடுவோம் என்று
முடிவெடுத்தவன் வேக எட்டு வைத்து அவளை நெருங்க முன்னேறினான்.
நட்சத்திராவோ
காலை பத்து மணிக்கு மேல் அங்கிருந்த தெருக்களில் சுற்ற ஆரம்பித்து மதியமாகியும்
சுற்றுவது முடியாத நிலையில் அவளின் நாக்கு
உலர்ந்து போனது.
நண்பகலைத்
தாண்டிய நிலையில் பசியெடுக்க ஆரம்பித்தது. காலையில் கிளம்பி வரும் முன்பு ஹாஸ்டல்
மெஸ்ஸில். ஆறிப்போன கல்தோசையை வெறும் கடலைமாவை கரைத்துவிட்டு வைத்திருந்த சாம்பார்,
சட்னியும் அவளுக்கு ருசிக்கவில்லை. எனவே எதையாவது வயிற்றுக்குள் தள்ள வேண்டுமே
என்ற கட்டாயத்தில் அரை குறையாக சாப்பிட்டுவிட்டு வந்திருந்தாள். எங்கும் அமராமலும்
நிற்காமலும் தொடர்ந்து நடந்துக்கொண்டே இருந்ததால் எனர்ஜி காலியாகிவிட்டது. வயிறும்
பசிக்க ஆரம்பித்தது.
சோர்வுடன்
நடந்தவளுக்கு கொஞ்ச நேரமாக தன்னை யாரோ பின் தொடர்வது போல உறுத்தல் உண்டானது.
திரும்பிப் பார்த்தால் எவரும் இல்லை என்றாலும் அவளின் உள்ளுணர்வு பொய்யில்லை என்று
தோன்றியது.
எனவே பின்னால்
திரும்பிப் பார்த்துக்கொண்டே ஒரு பங்களாவின் காம்பவுன்ட்டுக்கு அருகில் வரிசையாக
நின்றிருந்த பாக்குமரம் போன்ற தோற்றத்தில் இருந்த குட்டையான மரங்களுக்கு இடையில்
சட்டென்று புகுந்து தன்னை மறைத்துக்கொண்டு கொஞ்ச நேரம் நின்றுக்கொண்டாள்.
ஒரு
பத்துநிமிடம் சென்று தன்னை தேடியபடி அவனின் தலை தெரிந்தது... உற்றுக் கவனித்தபோது
அவளுக்கும் அவன் யாரென புரிந்துப்போனது.. காலையில் பைக்கில் தன்னை இடிக்க வந்து திட்டிய
டெவில் அவனென புரிந்ததும் படபடவென்று பயத்தால் உடல் வெடவெடக்க ஆரம்பித்தது.
“ஆத்தாடி
அவன்கிட்ட மாட்டினோம் அம்புடுத்தான், இவன் எதுக்கு என்னைய ஃபாலோ பண்ணி வாரான்,
ஒருவேளை தேடி மும்பையில் இருந்து வந்துருப்பானோ...?
அப்படி இல்லன்னா
வாயப்பொத்து இழுத்துட்டுப் போய் தப்பா நடக்க பார்ப்பானோ...? அவன் ஹய்ட்டுக்கும்
பாடிக்கும் முன்னாடி நான்லாம் சுண்டெலி... போராடி அவன்கிட்ட எல்லாம் ஜெயிக்க
முடியாது... தப்பிச்சு ஓடிடு” என்று அவளுக்குள் அவளே கவுண்டவுன் கொடுத்தாள்.
இருவருக்கும் இடையே
உள்ள இடைவெளி குறைவதை கண்டவள்.... கிட்ட வந்தா நான் ஒளிஞ்சு நிக்கிறதை பார்த்துடுவான்,
ஓடிடலாம், என்று எண்ணியவன் அங்கிருந்து வேகவேகமாக நடந்தால், அந்த தெரு ஜாயிட்
ஆகியிருந்த மெயின் ரோட்டைப் பார்த்து கிட்டத்தட்ட நடையையே ஓட்டம் அளவு வேகமாக
எட்டுவைத்து கடக்க ஆரம்பித்தாள், தன்னை பிடிக்க அவனும் வேகமாக வருவதைப் பார்த்து
ஓட்டம் எடுக்க ஆரம்பித்தாள்.
ஓடி ரோட்டுக்கு
வந்ததும் அங்கு ஆள் நடமாட்டம் இருப்பதைப் பார்த்து கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தாள்.
ஆனால் அவன்
இன்னும் வேகமாக தன்னை நோக்கி வருவதை திரும்பிப் பார்த்தவள் பயந்து போனாள்,
தப்பிக்க வழி தேடி சுற்றும் முற்றும் கவனித்தவள், சற்று தள்ளி இருந்த பஸ்
ஸ்டாப்பில், பஸ் நின்றுகொண்டிருப்பதையும் பயணிகள் பஸ்ஸில் ஏறுவதையும் கண்டாள்.
பஸ் கிளம்பப்
போவதை உணர்ந்து வேகமாக கை அசைத்தபடி ஓடிச் சென்று ஏறிக்கொண்டாள். அது எங்கே
போகிறது என்றெல்லாம் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை, பேருந்தும் அவளை அங்கிருந்து
சுமந்துக்கொண்டு விலகிச் சென்றது.
அவள் தப்பி
விட்டதை கண்டன் வண்ணன் கால்களை தடையில் உதைத்து “சே... மிஸ் பண்ணிட்டேனே.. பைக்
எடுக்காம வந்தது தப்பாப் போச்சு... அவளை சேஸ்பண்ணி இனி பிடிக்க வழி இல்லை... என்று
முணுமுணுத்தவன், மறுபடியும் யுகாந்தன் வீட்டிற்கு திரும்பி வந்தான்.
வந்தவனை “டேய்...
பைக்கை கூட எடுக்காம, நடந்தே எங்கடா போன..?” என்று யோசனையுடன் கேட்டவனிடம் நடந்ததைச்
சொன்னதும்.
“உதித் பேரைச்
சொல்லி தேடிக்கிட்டு இருக்கானா சொல்ற...? அவன் இங்க இருக்குற விஷயம் ரொம்ப நெருக்கமானவங்களுக்குத்தானே
தெரியும்..? ஒருவேளை இவள் காணாமப் போனதா தேடுற லாராவா இருக்குமோ..?” என்றதும்
யோசனையுடன்,
லாரா போட்டோ என்கிட்ட இருக்கு காலையில் தான்
எனக்கு உதித் அனுப்பினான், ஆனா போட்டோல இருக்கிற லாரா வேற கெட்டப்பில்
இருந்ததால கம்பேர் பண்ணி பார்க்கக் கூட யோசிக்காம விட்டுட்டேன்.” என்று சொல்லியபடி
மொபைலில் உதித் அனுப்பிய போட்டோக்களை எடுத்து உற்றுக் கவனித்தான்.
லாரா உதித்தோடு
நின்றுகொண்டிருந்த நிச்சயதார்த்தப் போட்டோக்களைத் தான் அனுப்பி இருந்தான். மனதில்
பதிந்திருந்த நட்சத்திராவின் உருவத்தோடு போட்டோவில்
இருந்த லாராவின் முகத்தை ஒப்பிட்டுப் பார்க்க ஜூம் செய்து பார்த்தான். கிட்டத்தட்ட
ஒரே சாயல்தான், ஆனாலும் எதோ ஒரு மாற்றம் இருப்பதாகவும் பட்டது.
புருவச்சுளிப்போடு
உட்கார்ந்திருந்தவனிடம், “என்னடா யோசிக்கிற...?” என்றதும்.
“கிட்டத்தட்ட
இதே போலத்தான் இருந்தாள் ஆனா எக்ஸாக்ட்டா சொல்ல முடியலை டா...” என்றான்.
“நீ
குழம்புறதை பார்த்தா எனக்கு என்னமோ ரெண்டுபேரும் ஒன்னா இருக்க சான்ஸ்
இருக்குதுன்னு தோணுது” என்ற யுகாந்தனை புருவத்தை இடுங்கியவாறு பார்த்தவன்,
அப்படி
இருந்தா அவள் நிச்சயம் உதித்தை தேடுறதை விட மாட்டாள், ஆனா இனி இந்த ஏரியாக்குள்ள
தனியா வரப் பயபடுவாள், அதனால உதித்தை வேற இடத்தில் தேடுவா...
வேற
இடத்தில்னா எங்கெக்க தேடுவான்னு உனக்கு ஐடியா இருக்கா..?
இருக்கு யுகா,
உதித்தைப் பத்தி நல்லா தெரிஞ்சவளா இருந்தா அடுத்து அவள் சென்னையில் தேடுற இடம் பப்பு,
டிஸ்கோத்தே போல ஹாய் கிளாஸ் செலபரடீஸ் ஜாலியா பொழுதை செலவளிக்கிற இடமாத்தான்
இருக்கனும்.
அதனால நாம
இவளை அதேபோல இடத்தில் தேடுனா கண்டுபிடிக்க சான்ஸ் இருக்கு... உதித்ததும் இவளும்
மீட் பண்றதுக்குள்ள நாம அவளை மடக்கணும், அவள் யாரு என்னென்ற விஷயம் தெரிஞ்சுக்கிட்ட
பிறகு தான் அடுத்த மூவ் என்னென்னு டிசைட் பண்ணனும்” என்றவனின் எண்ணத்தில் பல
முடிச்சுகள்.
*******
பஸ்ஸில் ஏறி
பயணித்த நட்சத்திராவோ அடுத்த நிறுத்தத்திலேயே இறங்கிக் கொண்டாள். இன்னும் அவளுக்கு
படபடப்பு அகலவில்லை,
‘யாரா
இருக்கும்...? அப்போ காலையிலேயே வேணும்னு தான் என்னைய இடிக்கிறது போல வந்தானோ...?
உதித்தை அந்த
ஏரியாவில் இருந்து தானே தேட ஆரம்பிக்கணும், ஆனா இனி அங்குட்டு தனியா போய்
மாட்டிகிட்டா...?! வேணாம் கொஞ்ச நாள் அந்த பக்கம் தலையைக் காட்ட வேணாம். அதுவரை
பப்பு டிஸ்கோத்தே போல இடங்களில் தேடலாம்” என்று அவளுக்குள் அவளுக்கே
சொல்லிக்கொண்டாள்.
அவள் பயணம்
செய்துகொண்டிருந்த பேருந்து பெண்களுக்கு கட்டணம் இல்லாத இலவசப் பேருந்து. எனவே
பிரச்சனை இல்லாமல் அடுத்து வந்த நிறுத்தத்திலேயே இறங்கிக் கொண்டாள். அந்த இடம்
எதுவென்று ரோட்டுக் கடைகளின் மேல் இருந்த போர்ட்டுகளில் எழுதியிருந்த அட்ரஸ்
வைத்து எந்த இடம் என்று தெரிந்துக்கொண்டாள்.
வகுலா அந்த
பெயர் உள்ள ஏரியாவில் தான் இருப்பதாக சொன்னது நினைவு வந்ததும் அவளை மொபைலில்
அழைத்தாள்.
ஒரு
ரிங்கிலேயே எடுத்த வகுலாவோ “டால், இப்போ தான் உன்னை கூப்பிடணும்னு நினச்சேன் ஆனா
நீயே கால் பண்ணிட்ட, சொல்லுடி என்ன விஷயம்..?” என்றதும்.
“நான் உன்
எரியாவுல தான் நிக்கிறேன். என்னை வந்து .பிக்கப் பண்ணிகிறயா..?” என்றதும்.
“ம்... வாரேன்,
லஞ்ச் டயம் தான் இது, சொல்லு எங்க நிக்கிற..?” என்றதும் தான் நின்றுக்கொண்டிருந்த
இடத்தின் அருகில் பெரிதாக தெரிந்த ஹோட்டலின் பெயரும் மேலும் சில அடையாளங்களையும்
சொன்னதும்,
“எனக்குப்
பக்கம்தான், அங்கேயே நில்லுடி இதோ இப்போ வந்துருவேன்” எனச்சொன்னாள்.
No comments:
Post a Comment