உதிர்ந்தும் துளிர்த்தேன் உன்னால் (தீபாஸ்)
அத்தியாயம் 02
துர்க்கா தேவி, பெங்களூரில் புகழ்பெற்ற
சாப்ட்வேர் நிறுவனத்தில் தனது டீம் மேனேஜரிடம், லீவ் சேங்க்சன் பண்ணியர்துக்கு “தேங்க்ஸ் சார்,” என்றவள்
மனதினுள் ‘அப்பாடா ஒருவழியா கெஞ்சிக் கூத்தாடி ஒருவாரம் லீவ் கேட்டு வாங்கியாச்சு’
என்று நினைத்துக்கொண்டே கதவைத் திறந்து வெளியில் வந்தாள். கதவின் அருகில் அவளை
எதிர்பார்த்து காத்திருந்தான் விக்னேஷ்.
“லீவ் கிடைச்சதா...?” என்று கேட்டவனை காதலுடன்
ஏறிட்டுப் பார்த்த துர்க்கா “ம்... ஒன்
வீக் லீவ்... நைட் பஸ்ல கிளம்புறேன். என்னைய பிக்கப்பண்ணி பஸ் ஏத்திவிட ஏழரைக்கு மறக்காம பி.ஜி கிட்ட வந்துருவீங்கள்ல
விக்கி..?” என்றவளிடம்.
“ஸ்யூர்... இந்த பியூட்டிக்கு சேவை
செய்றதை விட வேற என்ன வேலை எனக்கு...?, செவென்கே வந்துடுறேன்” என்றவனிடம்
“அப்பாவுக்கு முடியலைன்னு அம்மா போன்
பண்ணியதில் இருந்து ஒரே டென்சனா இருக்குது..., நீங்க சப்போர்ட்டா இருக்கிறதால
என்னால மேனேஜ் பண்ண முடியுது, தேங்கஸ்... ஐ லவ் யூ” என்று கிசுகிசுத்தவள் அவனுடன்
இணைந்து அவளுக்கான கேபிள் நோக்கி நடந்தனர்.
“ஐ லவ் யூ டூ பேபி... பாரேன் ஊருக்கு
கிளம்பும் போது இப்படி வாய்விட்டு லவ் யூனு சொல்லி மனுசனை கிளப்பி விடுற நீ...”
என்றவனை.
“அய்யே... ரொம்ப வழியுது... இது ஆபீஸ்,
சுத்திப் பாருங்க எல்லோர் கண்ணும் நம்ம மேல தான் இருக்கு. கொஞ்சம் அடக்கி வாசிங்க”
என்றவளிடம்.
“இத்தனை நாள் காக்க வச்சு, ரெண்டு
நாளைக்கு முன்னதான் என் லவ்வை அக்சப்ட் பண்ணின. அந்த சந்தோசத்தை கொண்டாட சான்ஸ்
கொடுக்காம ஊருக்கு கிளம்புறேயேனு வருத்தத்துல இருக்கேன்...
நம்ம வருத்தத்துக்காக வருங்கால மாமனாருக்கு
உடம்புக்கு முடியலைனு கிளம்புறவளை நிறுத்தக் கூடாது... இந்நேரம் லவ் டார்ச்சர்
கொடுக்க வேணாம் யோசிக்கிறேன்.
ஆனா பஸ் ஏத்திவிடும் வரை என் சாப்டான
லவ்வுலையே உன்னை குளுப்பட்டி நனைய வைப்போம்னு
ஆசைப் பட்டா... அதுக்கும் வழி கொடுக்காம என்னைய அடங்கி இருக்கச் சொல்ற...?
இது வாலிப வயசு இம்புட்டு அழகான பொண்ணை
லவ் பண்ணிட்டு எப்படி அடக்கமா இருக்க...? நோ.. வே...” என்றவனை பார்த்து.
“சீ... பே... நான் பென்டிங் வொர்க்
முடிச்சுக் குடுத்துட்டு கிளம்பணும்...
உங்க கூட அரட்டை அடிச்சா வேலை முடியாது” என்று சொல்லி அவனின் பேச்சால்
சிவந்துவிட்ட தனது கன்னத்தையும் வெட்கத்தையும் மறைக்க வேலையை சாக்கு சொல்லி விட்டு
தனது கேபினுள் புகுந்து அமர்ந்துகொண்டாள் துர்க்கா.
அவளின் வெட்கத்தை ரசித்தபடி அவள் கேபிள்
வரை உடன்வந்து விட்டுவிட்டு கடந்துபோகயில்,
அவனின் பார்வை ரசனையுடன் அவளை வருடிச் சென்றதை துர்கா உணர்ந்தாள். செல்பவனை
துர்காவும் ரசித்துப் பார்த்தாள்.
சிவந்த நிறத்தில் இன்றைய திரைப்பட
நடிகர்களுக்கு போட்டிபடும் வகையில்
மாடர்ன் லுக்கில், தாடி மீசை வைத்து, ஒரு காதில் டைமென்ட் கடுக்கன் சகிதம்
இருக்கும் நவ நாகரிகமான தனது இளம் காதலன்
விக்னேஷின் தோற்றம் துர்காவையும் மயக்கியது.
விக்னேஷ் ஐந்தரை அடி உயரத்தில் சிவந்த
நிறத்தில் அழகான முகவெட்டுடன் இருந்தான். அவனுக்கு சிக்ஸ் பேக் உடற்கட்டு இல்லை
என்றாலும் தொப்பையும் இல்லை. உயரத்துக்கு ஏற்ற
எடையுடன் இருப்பான். எப்பொழுதும் பிராண்டெட் சேர்ட், வாட்ச், ஜூ சகிதம் ஆபீசுக்கு
ஸ்போட்ஸ் பைக்கில் வரும் அவனுக்கு அங்கு பல ரசிகைகள் உண்டு. ஆனால் அவனோ அவளின் ரசிகன் என்ற எண்ணம் அவளுக்குள்
பேருவகையைக் கொடுத்தது.
துர்க்காவும் தோற்றத்தில் அவனுக்கு
சளைத்தவள் இல்லை. ஐந்தடி உயரத்தில் மெழுகு சிற்பம் போன்று பளிங்கு தேகமும் பளீரென்ற நிறமும் பார்த்து பார்த்து
பிரம்மன் வரைந்த சித்திரத்தின் தோற்றம் கொண்டவள்.
அவள் பேசும் போதும் சிரிக்கும் போதும்
கண்களும், உதடும் சேர்ந்து கவிதை பேசும். இதுவரை எத்தனை காதல் பிரபோசல் வந்தாலும்
தவிர்த்து கடந்து வந்தவளுக்கு அவ்வாறாக விக்னேஷை கடந்து செல்ல முடியவில்லை.
பார்த்ததும் விக்னேஷை அவளுக்கு
பிடித்திருந்தாலும் அவ்வளவு எளிதில் அவனின் காதலை ஏற்றுக் கொள்ளவும் வில்லை.
விடாப்பிடியாக அவளைச் சுற்றி வந்து கொஞ்சம் கொஞ்சமாக அவளின் மனதில் இடம்பிடித்து
காதலை ஏற்றுகொள்ள வைத்திருந்தான்.
நேற்று இரவு அவளின் அம்மாவிடம் மொபைலில் பேசும்
போது “துர்க்கா அப்பா நேத்து முழுக்க படபடப்பா வருது, நெஞ்சு வலிக்கிறது போல
இருக்குதுனு அனத்திட்டே இருக்கார். எனக்கு பயமா இருக்குது” என்று சொன்னதை
கேட்டதும் பதறிவிட்டாள்.
“என்னம்மா சொல்றீங்க..? ஆஸ்பத்திரிக்கு
அப்பாவை அழைச்சிட்டுப் போகாம என்கிட்டே புலம்பிக்கிட்டு இருக்கீங்க..?” என்ற
கோவப்பட்டவளிடம்.
“இப்போ எல்லாம் அடிக்கடி இப்படித்தான்
அவருக்கு ஆகுது, நேத்து நைட்டுதான் தேவாகிட்ட வருத்தப்பட்டு சொன்னேன். நாளைக்கு
காலையில் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போறேன் அத்தைனு சொல்லி இருக்கான்.
எனக்கு என்னமோ ரொம்ப பயமா இருக்குது
துர்க்கா. நீயும் இந்த நேரம் கூட இருந்தா எனக்குத் தெம்பா இருக்கும் ஆபீசில லீவ்
சொல்லிட்டு கிளம்பி வருறியா...?” என்று அவளின் அம்மா சுப்பு சொன்னதும் இதோ லீவ்
சொல்லிவிட்டு ஊருக்குப் போக ஆயத்தம் ஆகிவிட்டாள் துர்க்கா.
*****
அந்த காம்பவுன்ட்டுக்குள் இருந்த
எழுபதுகளில் கட்டப்பட்ட பங்களாவின் பின்னால் இருக்கும் கெஸ்ட் ஹவுசில் இருந்து
வெளியேறி கார் செட்டின் அருகில் நிறுத்தியிருந்த தனது பைக்கை எடுத்துகொண்டு
வெளியேற கிளம்பினான் தேவா... அப்பொழுது கேட்டின் முன்பு வந்துநின்ற ஆட்டோவில்
இருந்து இறங்கி கதவை திறந்தபடி உள்நுழைந்தாள் துர்க்கா.
டூவீலரை ஸ்டார்ட் பண்ணியவன்
உள்நுளைந்தவளை கண்டு “வா... துர்க்கா...
ஆட்டோலையா வந்த? வருறேனு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா பஸ் ஸ்டாப்பில் பிக்கப் பண்ண
கார் எடுத்துட்டு வந்துருப்பேன்ல..?” என்றவனிடம்.
“இருக்கட்டும் மாமா... பஸ் இறங்குனதும்
வரிசையா ஆட்டோ நிக்குதுல... பிறகு எதுக்கு உங்களை தொந்தரவு பண்ணனும், அப்பாவை
நேத்து ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போனீங்களா..? டாக்டர் என்ன சொன்னார்?”
என்றவளிடம்.
“கேஸ்ட்ரபுல் தான், எண்ணை, காரம் குறைவா
சாப்பாட்டில் சேர்த்துக்க சொன்னார். டென்ஷன் இல்லாம இருந்தாலே சரியாப் போயிடும்
வேற பயப்படுறது போல எதுவும் இல்லைன்னு
டாக்டர் சொல்லிட்டார்” என்றதும்.
“தேங் காட், இந்த அம்மா போன்ல பேசினப்போ
அப்பாவுக்கு ரொம்ப முடியலைன்னு சொல்லி
பயம்காட்டிட்டாங்க... அதனால தேவையில்லாம லீவ் போட்டு கிளம்பி வந்துட்டேன்”
என்றாள்.
எதற்காக அவளை வரவழைத்திருக்கிறார்கள் என்ற
விஷயம் தெரியும் அவனுக்கு, ‘தனக்கும் அவளுக்கும் திருமணம் முடிக்க துர்க்காவை
சம்மதிக்க வைத்து, நாள் குறிக்கத்தான்
இப்படி நாடகம் ஆடி அவளை வரவழைத்து
இருக்கிறார்கள். இந்த உண்மையை சொல்லிடலாமா...? ’என்று அவன் யோசித்துச் சொல்ல
வாயெடுத்தான்.
அப்பொழுது பங்களாவின் உள் இருந்து
வாசலுக்கு வந்துவிட்ட அத்தை சுப்புவை கண்டதும். சொல்லவந்ததை முழுங்கிவிட்டான்.
சுப்புவோ மகளும் தேவாவும் பேசிக்கொண்டிருப்பதை கண்டு ‘இருவருக்கும் ஜோடிப் பொருத்தம்
நல்லாத்தான் இருக்கு... கடவுளே இந்த துர்க்கா, முன்னாடி போல அவனை லேசு பட்டவனா
நினைச்சு வேணாம்னு சொல்லாம கல்யாணத்துக்கு சம்மதிக்கணும்’ என்று நினைத்தார்.
“வந்துட்டியா துர்க்கா... இந்நேரம் வருறதா
ஒரு வார்த்தை போன்ல சொல்லாம வந்து நிக்குற, சொல்லி இருந்தா தேவாவை பஸ்
ஸ்டாப்புக்கு உன்னைய கூட்டிக்கிட்டு வர அனுப்பி இருப்பேன்ல “ என்று அவரும் அதையே
சொன்னார்.
“அம்மா... நான் என்ன சின்ன பாப்பாவா.
எனக்கா வரத் தெரியும்” எனப்பேசிகொண்டே உள்ளே அவள் சொல்ல தேவா வெளியேறினான்.
சின்னப் பொண்ணைப் போய் எனக்கு கல்யாணம்
பண்ணிவைக்கணும்னு நினைக்கிறாங்க. ஆனா அவகிட்ட எனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம்
இல்லைன்னு சொல்லச் சொல்லிடணும். என்னால மாமாகிட்ட மறுத்துப் பேச முடியலை” என்று
நினைத்துகொண்டு வெளியேறினான்.
அவன் தந்தை இறந்ததும் இங்கு தாயுடம்
வந்தபோது துர்க்கா மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். குட்டிப் பெண்ணாக துருதுருவென்று ஓடியாடிக்கொண்டு
எந்நேரமும் வாயாடிக்கொண்டு இருந்த அவளின் உருவம் இன்றும் அவனுக்கு
நினைவிலிருக்கிறது.
அவளின் அக்கா சாந்தி அப்பொழுது ஆறாம்
வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள் அவள் கொஞ்சம் புஷ்டியான தேகம் கொண்டவள். மிகவும்
அமைதியானவள், தரை அதிர்ந்து நடக்காத பாவை. குரல் உயர்த்திகூட பேசமாட்டாள்.
சாந்தியை நினைத்ததுமே அவனின் மனதினுள்
உண்டாகும் ஏமாற்றத்தின் வலி இன்றுமே அவனை வதைக்கத்தான் செய்தது. ஆனால் மறுநொடியே
இப்பொழுது அவள் வேறு ஒருவனின் மனைவி என்ற நிதர்சனம் உணர்ந்து அதற்கு மேல்
அவளைப்பற்றி நினைத்துப் பார்க்கக் கூடாது என்ற மனக்கட்டுப் பாட்டுடன் தங்களின்
அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தான்.
அங்கு அச்சிட்ட நோட்டுப் புத்தகங்கள்
அனைத்தும் அளவுகள் மற்றும் தன்மைகளின் அடிப்படையில் தனித்தனியாக பிரிக்கப்பட்டு
அனுப்ப வேண்டிய இடங்களுக்கு எடுத்துச்செல்ல தோதாக பண்டல்கள் போட்டுக்கொண்டிருந்தார்கள்
வேலையாட்கள்.
*****
வீட்டிற்குள் நுழைந்த துர்க்காவோ... நடு ஹாலில் ஈஸிசேரில் சாய்ந்து அமர்ந்து
பேப்பர் வாசித்துகொண்டிருந்த தந்தையை கண்டதும். “அப்பா... எப்படிப்பா
இருக்கீங்க..?” என்றவளை நிமிர்ந்து பார்த்தவர்.
“வாம்மா.. துர்க்கா, பிராயாணம் எல்லாம் சவுரியமா
இருந்ததா...? உன் அம்மா நீ வந்தாலும் வரலாம்னு இப்போதான் சொன்னாள்” என்றதும்.
“பிறகு...? உங்களுக்கு உடம்புக்கு
முடியலை... எனக்கு பயமா இருக்குதுனு போன்ல அம்மா சொன்ன பிறகு எப்படி வராமல்
இருப்பேன்..? இப்போ உங்க உடம்புக்கு எதுவும் பிரச்சனை இல்லையே...?” என்று கேட்ட
மகளை நிமிர்ந்து பார்த்தவர்.
“வயசாகிப் போச்சுல்ல... இப்போ எல்லாம் அடிக்கடி இப்படி உடம்பு பாடாய்
படுத்தத்தான் செய்யுது, டாக்டர் எதையும் யோசிக்காம ரெஸ்ட்ல இருக்கணும்னு சொல்றார்.
ஆனா உன்னையை நல்லபடியா கரையேத்துனால்தான் நான் அமைதியா இருக்க முடியும்னு டாக்டர்க்கு
எங்க புரியப் போகுது..?” என்றார்.
“என்னையப் பத்தி நீங்க எந்தக் கவலையும் பட
வேண்டாம். நான் ரொம்ப நல்லா இருக்கேன்ப்பா. பிடிச்ச படிப்பு, வேலை, என்றவள்
மனதிற்குள் ‘மனசுக்கு பிடிச்ச காதல்’ எல்லாம் கிடைச்சிருக்கு எனக்கு. பிறகு
எதுக்கு நீங்க கவலைப் படணும்,...?” என்றாள்.
“நீ ஆசைப்பட்ட அதனால படிக்க வச்சேன்,
வேலைக்கு போகணும்னு வந்து நின்ன, கல்யாணம் கூடிவரும் வரை போகட்டும்னு அனுப்பி
வச்சிருக்கேன். ஆனா பெத்தவங்க கடமை இதோட முடியாதே உன்னைய நல்லவன் ஒருத்தன் கையில
ஒப்படைக்கணும்,
அதுமட்டுமா... என்னைய கோடீஸ்வரனாய் ஆக்குன
என்னோட சின்னக்கனி அச்சு ஆபீசை என் கண்ணுக்குப் பிறகும் இதே போல நடத்திக்கொண்டு
போற மாப்பிள்ளைக்கிட்ட தொழிலை முழுசா ஒப்படைக்கணும். இதெல்லாம் சரியா
முடிஞ்சாதான் நான் நிம்மதியா ரெஸ்ட் எடுக்க முடியும்” என்றார்.
“அப்பா... அச்சு ஆபீசை லீசுக்கு விட்டுடலாம்,
தேவா மாமாதனே இப்போதைக்கு அதை நடத்திக்கிட்டு இருக்கார், அவருக்கே லீசுக்கு
கொடுத்துட்டு அக்கடான்னு நீங்க ரெஸ்ட்
எடுங்க, அதைவிட்டுட்டு எனக்கு மாப்பிள்ளையா வருறவன் கிட்ட போய் இதெல்லாம்
ஒப்படைக்கணும்னு யோசிக்கிறது எல்லாம் தேவை இல்லாத யோசனை ப்பா” என்றாள்.
மகன் தான் சொல்லவருவதை சரியாக
புரிந்துகொள்ளாமல் பேசுகிறாள் என்ற எரிச்சலில், “இங்க பாரு துர்க்கா, என்னோட
தொழில் என் அடையாளம், அதை கட்டிக் காப்பாத்துறவன் தான் எனக்கு மருமகன்.
அப்படிப்பார்த்தா நம்ம தேவாவால் தான் என் தொழிலை இன்னும் இன்னும் பெரிய லெவலுக்கு
கொண்டு போக முடியும் . அதனால அப்பா முடிவெடுத்துட்டேன், உனக்கும் மாப்பிள்ளை தேவா
தான்” என்றார்.
அவள் இதுபோன்ற பேச்சை சுத்தமாக
எதிர்பார்க்கவில்லை... அத்தோடு அவனுக்கும் தனக்கும் இருக்கும் வயது வித்தியாசம்,
மற்றும் படிப்பு ஏற்றத்தாழ்வு , வேஷ்டி சட்டையில் வளைய வரும் அவனின் உருவம்
எதுவுமே தனக்கு கொஞ்சமும் பொருந்தாது இருக்கும் நிலையில் எப்படி இப்படி தனது தந்தை
இப்படி முடிவெடுக்கலாம்...!? என்ற அதிர்ச்சி உண்டானது அவளுக்கு.
“அப்பா... இல்லப்பா என்னால தேவா மாமாவை
கல்யாணம் பண்ண முடியாது. இந்தப் பேச்சை இத்தோட விட்டுடுங்க.” என்று சொல்லிவிட்டு
கோபமுடன் தனது அறைக்குள் போய் கதவை அடைத்துக் கொண்டாள்.

No comments:
Post a Comment