anti - piracy

Post Page Advertisement [Top]

 உதிர்ந்தும் துளிர்த்தேன் உன்னால் (தீபாஸ்)


அத்தியாயம் 01

அம்மா நாச்சியார், அடைத்து வைத்திருந்த மதிய உணவு சம்படத்தை எடுத்து தனது பேக் பேக்கினுள் வைத்த அழகு மலர் சுவர்க்கடிகாரத்தை பார்த்தாள். நேரம் 7.55 என்று காட்டியது ‘இன்னும் காலேஜ் பஸ்வர கால்மணி நேரம் இருக்கு’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

கண்ணாடியில் தனது  உருவத்தை சரிபார்த்தவள். உடுத்தியிருந்த மஞ்சள் நிற சுடிதாரில் கோட்டோவியமாய் தெரிந்த பெண்மையின் வளைவு நெளிவுகளை கண்ணுக்கு உறுத்தாமல் இருக்க துப்பட்டாவைக் கொண்டு மறைத்துச் சரிப்படுத்தப் பார்த்தாள்.

தனது சுடிதாருக்குப் பொருத்தமாக வீட்டுத் தோட்டத்தில் இன்று பூத்திருந்த மஞ்சள் ரோஜாவை சூடிக்கொள்ள   ஆசைக் கிளர்ந்தது அழகிக்கு.

அருகில் இருந்த மேஜையின் இழுப்பானை இழுத்துத் திறந்து அதனுள் இருக்கும் சின்ன கத்திரிக்கோலை எடுத்தவள்  ரோஜா மலரை பறிக்க புறவாசலுக்கு ஓடினாள்.

அங்கிருந்த மாட்டுத்தொழுவத்தில் இருக்கும் செவலைக்கு தண்ணீர் காட்ட   தொழுவுக்குள் அந்நேரம் வந்திருந்த  அவர்களின் பண்ணை வேலையாள் ‘காளி’... சினையாக இருந்த செவலைக்கு பின்புறம் சிவப்பு முடை அடிப்பதையும். அது ஒரு நிலையில்லாமல் அங்கிட்டும் இங்கிட்டும் அலைவதையும் கண்டான்.

சற்று தள்ளி வேப்பமரத்தடியில் கிடந்த கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து நோட்டில் தோட்டக் கணக்கு வழக்குகளை எழுதிக்கொண்டிருந்த  தனது முதலாளியாகிய... அழகு மலரின் அப்பா ‘கதிரேசனை’ பார்த்து  “சாமியோவ்” என்று குரல்கொடுத்தான்.

“என்ன காளி சொல்லு...” என்று நிமிர்ந்து அவனைப் பார்க்காமல் நோட்டில் எதையோ எழுதிக் கொண்டிருந்தவரிடம்

“மாட்டுக்கு செவப்பு முடை அடிக்குது... இன்னைக்கு கண்ணு ஈந்துடும்னு நினைக்கிறேன்” என்று சத்தம் கொடுத்தான்.

மாட்டுத் தொழுவத்தின்மறைவுக்கு மறுபக்கம் அவள் உருவாக்கிய வீட்டுத் தோட்டத்திலிருக்கும் ரோஜா செடியில் பூத்திருந்த மலரை கத்திரிக்கோலால்  வெட்டி எடுத்த அழகிக்கும் அவனின் வார்த்தைகள் காதில் விழுந்தது. எனவே வேகமாக இந்தப்பக்கம் வந்தவள் மருட்சியுடன் செவலையை போய் எட்டிப் பார்க்க வந்தாள்.

அப்பொழுது கணவருக்கு போனியில்  நீர் ஆகாரத்தை குடிக்க எடுத்துக்கொண்டு புறவாசலுக்கு வந்த அழகு மலரின் அம்மா நாச்சியாரும் காளி சொன்னதை காதில் வாங்கியபடி வந்தாள். காலி சொன்னதை கேட்ட தனது மகளும் மாட்டுத் தொழுவத்தை போய் எட்டிப்பார்க்கப் போவதைக்  கண்டு,

“ஏட்டி அழகி, அங்க என்ன பார்வை உனக்கு...? காலேஜ் பஸ் வருற நேரம் ஆகிடுச்சுல்ல...  இன்னும் போவாம இங்கன நின்னுட்டு இருக்க...?” என்று சத்தம் போட்டு அவளை அங்கிருந்து விரட்டி அடித்தாள் .

‘ம்..கூம் என்னைய இனி இங்கன இந்த அம்மா  நிக்கவிடாது...’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டவள், “ரோசாப்பூ பறிக்க வந்தேன்மா...  அப்போ நான் கிளம்புறேன், பை ம்மா..., அப்பா போயிட்டுவாரேன்“ என்று சத்தமிட்டபடி அவர்களின் பதிலைக்கூட நின்று காதில் வாங்காமல் வேகமாக எட்டுவைத்தாள்.

கையில் இருந்த ரோஜாவை தலையில் வைக்க மீண்டும் மேஜைக்கு அருகில் சென்று இழுப்பானை மறுபடி இழுத்துத் திறந்து கத்திரிக்கோலை வைத்தவள், அதன் உள்ளே இருந்து கேர்பின்  எடுத்து அதனைக் கொண்டு தலையில் பூவைச் சூடிவிட்டு...  தனது பேக் பேக்கையும்  எடுத்து தோள்பட்டையில் மாட்டியவள்... பஸ் ஸ்டாப்பை நோக்கி வேக எட்டு வைத்தாள். அவள் ஸ்டாப்புக்கு போகவும் காலேஜ் பஸ் வரவும் நேரம் சரியாக இருந்தது. 

அவர்கள் ஊரின் அருகில் இருக்கும் ஆர்ட்ஸ் காலேஜில் பி.காம் படித்துக்கொண்டிருக்கும் இளம் மாணவி அவள். அக்கல்லூரியில் சுற்றுப்பட்டி ஊர்களில் இருந்து தமிழ்வழிப் பள்ளியில் பயின்ற மாணவிகளும், அருகில் இருக்கும் டவுன் சிவகாசியில் இருக்கும் அரசு பள்ளியில் பயின்ற பெரும்பான்மையான மாணவிகளும் சேர்ந்து பயிலும் கல்லூரி அது. பெண்கள் மட்டும் பயிலும் வுமன்ஸ் காலேஜில் தான் அழகு மலர் படித்துக்கொண்டிருந்தாள்.

கருப்பும் இல்லாமல், சிவப்பு என்றும் சொல்லமுடியாத பொதுவான நிறத்தில் இருக்கும் அழகு மலர் பிறந்தபோது  ரோஜா வண்ணத்தில் இருந்ததாக அடிக்கடி அவளின் அம்மா நாச்சியார் சொல்லிக் காட்டுவாள். 

வெயிலில் அலைவதால் நிறம் மட்டுப்படும் போகக்கூடாது என்று சக கல்லூரித் தோழிகள் மதியநேரத்தில் கல்லூரியின் ஒரு பிளாக்கில் இருந்து தள்ளி இருக்கும் அடுத்த பிளாகிற்கு நடந்து செல்ல தயங்குவதைக் கண்டு அவளுக்கு எரிச்சலாக வரும். ஏனெனில் அவளுக்கு வெயில் , மண் இதெல்லாம்  பொருட்டே இல்லை.

விவசாயி கதிரேசனின் மகளான அவளுக்கு அப்பாவுடன் வெயில் நேரத்தில் வயலுக்குச்  செல்வதும் அங்கு வேலை பார்ப்பவர்களுடன் கலகலத்துப் பேசிக்கொண்டே வேலைகளை பார்ப்பதும், வயக்காட்டில் இருக்கும்  கிணற்றை ஒட்டி இருக்கும் பம்பு செட்டுத் தொட்டித் தண்ணீரில்  வெயில் பொழுதுகளில் மூழ்கித் திளைத்து இருப்பதும் அவளுக்கு மிகவும் பிடித்த விஷயங்கள். இவ்வாறாக இருப்பவளுக்கு வெயிலும், மழையும், மண்ணும் பொருட்டே கிடையாது.

அவளின் அம்மா நாச்சியாரோ...  “பொட்டப்புள்ளையா பொறந்துட்டு எந்நேரமும் வயக்காட்டு வெயிலிலேயே திரிஞ்சு கருத்துப் போய்கிடக்க...! பொறந்தப்போ எம்புட்டு கலரா இருந்த... இப்போ பார் வெயிலில் சுத்தி கருத்துக்கிடக்க...“ என்று அங்கலாய்ப்பாள்.

அவள் வயக்காட்டுக்கு கிளம்பும் போது எல்லாம் “ஏட்டி அழகி, நீ இப்படியே வயக்காட்டு வழி அலைஞ்சு கருத்துப் போய் இருந்தா வருற மாப்பிள்ளை பொண்ணு கருப்பா இருக்கா வேணாம்ன்னு சொல்லிடப் போறான். ஒவ்வொன்னும் கலரா ஆகுறதுக்கு ஆயிரம் கிரீமையும், குளியல் பொடியையும் மூஞ்சில பூசி பக்குவம் பாக்குறாள்க, உன்னைய அப்படியா செய்யச் சொல்லுதேன். வெயிலில போய் கருத்துப் போகாதன்னு தானே சொல்லுதேன்” என்று லீவு நாட்களில் அப்பாவின் பின்னாடியே அவளும் கிளம்பும் போது வசை பாடுவாள்.

மனைவி மகளை பேசியதும் “இங்கபாரு நாச்சி, என் மகள் முக வெட்டுக்கும், அழகுக்கும், துருதுருப்புக்கும், நல்ல குணத்துக்கும் அந்த வெள்ளைக்கார துறையே மயங்கி என்கிட்ட பொண்ணு கேட்டு நிப்பான், என் மகள் தேவதை அவளை வேணாம்னு சொல்லுற மாப்பிள்ளை குருடனாத் தான் இருப்பான். அப்படிப்பட்ட குருட்டு மாப்பிள்ளைக்கு  என் பொண்ணை நான் கொடுக்கிறதா இல்லை” என்பார்.

இப்படி மகளுக்கு சப்போர்ட் பண்ணி தேவதையாக கொண்டாடும் கதிரேசனின் தங்கை ராதா, அண்ணன் மனதை கரைத்து... அவரின் பத்து ஏக்கர் நிலத்தை தனது பெயருக்கு மாற்றி எழுத வைக்க என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு, தனது  அல்டாப்பு மகனுக்கு அழகியை பொண்ணுக் கேட்டு சீதனமாக அந்த நிலத்தை அபகரித்தால் என்ன...? என்ற எண்ணம் உண்டானது.

இதுவரை பட்டிக்காடு... என் குடும்பத்துக்கு நீங்க இணையா என்று அண்ணனின் குடும்பத்தை மட்டம் தட்டி தள்ளி நிறுத்தியிருந்தாள் ராதா, கணவனின் தொழிலில் ஏற்பட்ட திடீர் பண நெருக்கடியைச் சமாளிக்க, அண்ணன் பொண்ணு என்ற  உறவு முறையையும், அவளை பொண்ணுக் கேட்க உரிமைப் பட்டவன் மகன் என்ற முறையையும் பயன்படுத்த நினைத்தாள்.

அழகியுடன் கோடிளில் விலை போகும் நிலத்தையும் அபகரித்து வந்துவிடவேண்டும் என்ற ஆசை உண்டாகி அதற்கான திட்டம் வகுக்க ஆஈம்பித்தாள்.

******

 அச்சு ஆஃப்பீஸில் கட்டிங் செக்ஷனுக்கு வந்திருந்த பேப்பர் பண்டல்களை அதற்கான இடத்தில் அடுக்க, தனது சட்டையை கலட்டினான் தேவா... உழைப்பில் இயற்கையாய் உருவாகியிருந்த எய்ட் பேக் உடற்கட்டும்... செதுக்கிய முகவடிவமும் கொண்ட அவனின் தோற்றம் பாகுபலி படத்தில் வரும் ஹீரோவுக்கு டப் கொடுப்பதாக இருந்தது. 

அவனே இறங்கி தொழிலாளர்களுள் தொழிலாளியாக வேலை செய்ய ஆரம்பித்ததும் அங்கிருந்த பணியாளர்களுக்கும் சுறுசுறுப்பு தொற்றிக் கொண்டது.

சிவகாசியில் இருக்கும் நோட்டு புத்தகங்களுள் மிகவும் பிரசித்திப் பெற்ற சின்னக்கனி நோட்டு புத்தங்களை அச்சிடும் அச்சாபீசின் நிர்வாகி தேவகுமாரன். ஆனால் வேலையாளுக்கு இணையாக இறங்கி வேலைபார்க்கத் தயங்காதவன்.

தேவா என்றாலே தொழில் வட்டாரங்களில் அத்தனை மரியாதை உண்டு, இருபத்தேழு வயதுக்காரனுக்கு வயதைத்  தாண்டிய நிதானமும் பொறுப்பும் இருந்தது.

அவனின்  பள்ளிப்படிப்பு முடிந்த பதினேழாம் வயதிலேயே தொழில் செய்யவென சாதாரண தொழிலாளியாக அழைத்து வந்தார் அவனின் மாமா ‘கனி அரசு’.

அவரின் சின்னக்கனி அச்சு ஆபீஸில் இவனின் வருகையை அடுத்து அசுர வளர்ச்சு அடைந்து நிற்கிறது.

அச்சுத் தொழிலில் தேர்ந்த தொழிலதிபர்களுக்கு இணையாக மதிக்கக் கூடிய அளவில் அவனின் உழைப்பால்  மாமனின் தொழிலை உயர்ந்து நிறுத்தி இருந்தான்.

பொதுவாக தேவைக்குத் தாண்டி அனாவசியமான வார்த்தைகளை உதிர்காதவன் இன்று தேவைக்குக் கூட வார்த்தைகளை அளந்தே  பேசிக்கொண்டிருந்தான்.  ஆனால் அவனின் உள் மனதோ அவனிடம் அத்தனை சத்தமாக வாதாடிக் கொண்டிருந்தது.

‘இந்த மாமாவுக்கு திடீர்னு கிறுக்குப் புடிச்சிருச்சா...? துர்காவைப் போய் எனக்கு கட்டி வைக்கணும்னு ஒத்தை காலில் நிக்கிறார். அவளோ சின்னப் பொண்ணு... அதுமட்டுமா... அவளுக்கும் எனக்கும் எப்படி பொருத்தமா இருக்கும்...?’ என்றது மனம்.

கடந்த பத்துவருஷமா மாமானின் தொழிலை இராப்பகலாய்  உழைத்து இத்தனை பெரிய அளவில் உயர்த்தியவன். அவன் நினைத்தால் இப்பொழுதே சொந்தமாக தொழிலை உருவாக்க முடியும். ஆனால் அவன் அவ்வாறு செய்யாததற்கு காரணம் ‘கனி அரசு’.

அந்த அச்சு ஆபீசின் ஓனர் ‘கனி அரசு’ என்றாலும் அதன் முழு கட்டுப்பாடும், வரவு செலவு முதற்கொண்டு அனைத்தும் தேவாவின் கட்டுபாட்டில் தான் இருந்தது.

இங்கு வந்த புதிதில் அவனின் வங்கிக் கணக்கில் அப்பா இறந்ததுக்கு கிடைத்த பிராபிடென்டு ஃப்ண்டு எட்டு லட்சம் மட்டுமே இருந்தது. ஆனால் இப்பொழுது அவன் நினைத்தால் சொந்தமாக முப்பது, நாற்பது போருக்கு வேலை கொடுக்கும் முதலாளியாக அமர்ந்துகொள்ள தேவையான பணத்தை உடனே ரெடிபண்ணும் அளவில் செழுமையோடு இருக்கிறான்.

தந்தையை இழந்து நின்ற சமயம் அடுத்து என்ன செய்யவென தவித்த போது அவனின்  அம்மாவிற்கு ஒண்ணுவிட்ட பெரியம்மா பையனாகிய மாமன் கனி அரசு,  தன்னையும் தாயையும் உடன் அழைத்துவந்து அவரது வீட்டின் பின்பு இருக்கும் அவுட் ஹவுசில் தங்க வைத்து... தன்து தொழிலையும் அவனுக்கு அறிமுகப்படுத்தியதன்   காரணமாத்தை முன்னிட்டு அவரிடம் மிகுந்த விசுவாசமும் அன்பும் கொண்டிருந்தான்.

மாமன் “சின்னக்கனி அச்சுத் தொழிலின்” நுணுக்கங்களை அவனுக்கு கற்றுக் கொடுத்தாலும்  அதனைக்கொண்டு தேவாவின் உழைப்பும்... இன்றைய தொழில் நுட்பங்களையும் அவன் உள்வாங்கி, அதன்படி தொழிலை கட்டமைத்து அவர்களுக்கென தொழில் சந்தையில் தனி இடத்தை பிடித்திந்தான் தேவா.

அத்தகைய ஆஸ்தான குருவும், நலம்விரும்பியுமான மாமா கனி, அவரின் சின்ன மகளையே தனக்கு கல்யாணம் செய்துகொடுக்க நினைக்கிறார். ஆனால் துர்க்காவுக்கு பொருத்தமில்லாத என்னை கல்யாணம் செய்யச் சொல்லி அவளை கட்டாயப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் இல்லையே...

நான் அதை எடுத்துச்சொன்னாலும் என் பேச்சு அம்மாகிட்டயும் எடுபடலை, மாமா,அத்தை கிட்டயும் எடுபடலை. துர்க்கா இதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணப் போறாளோ...?’ என்ற கவலை அவனுக்கு உண்டானது.

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib