உதிர்ந்தும் துளிர்த்தேன் உன்னால்
(தீபாஸ்)
அத்தியாயம்
- 04
கட்டிலில் தலையணையில் முகம் பதித்து படுத்துக்
கிடந்தவளை “துர்க்கா.. சாப்பிட வா...”
என்று அழைக்கும் சத்தம் கேட்காமல் இல்லை. ஆனால் துளி கூட சாப்பிட மனது
இல்லை. எழுந்து போகாமல் அப்படியே படுத்துக் கிடந்தவள் ‘போயும் போயும் தேவா
மாமாவைப் போய் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிறாங்களே’ தனக்குள் புலம்பிக்
கொண்டிருந்தாள்.
அப்பொழுது அவளின் மொபைல் ஒலி எழுப்பியது.
ரிங்டோனை வைத்தே அழைப்பது விக்னேஷ் என்பதை உணர்ந்தவளுக்கு, அவனுடன் பேசினால் சற்று
தெளிவு கிடைக்கும் என்று எண்ணினாள்.
‘விக்கி கிட்ட போன்ல பேசும்போது அம்மா சட்டுன்னு உள்ள வந்து யார்கிட்ட பேசுறனு விசாரிச்சாங்கன்னா
வம்பு...’ முணுமுணுத்துக் கொண்டே எழுந்துசென்று
உள்தாழ்பாள் போட்டுவிட்டு வந்து மொபைலை
எடுப்பதற்குள் அழைப்பு நின்றுபோனது.
‘வீட்டில வேறு ஒருத்தனை கல்யாணம் செய்யச் சொல்லி கட்டாயப் படுத்துறாங்கள்னு
நானே போன் பண்ணி விக்கிட்ட சொல்லுவோமா...? சொன்னால் அவன் ரியாக்ஷன் எப்படி
இருக்கும்...?’ என்ற கேள்வி அவளுள்.
கையில் மொபைலை வைத்துக்கொண்டே யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு
மறுபடியும் மொபைலில் அழைப்பு வந்தது. விக்கி தான் என்று நினைத்தபடி கைபேசி திரையைப் பார்த்தவளுக்கு “சாந்தி” என்ற பெயரை கண்டதும்,
‘அக்கா கூப்பிடுறாள்... இந்த அம்மா தான் அவளை என்கிட்டப் பேசச் சொல்லி போன் பண்ணிருப்பா...’
என்று யூகித்தவளுக்கு அழைப்பைத் தவிர்க்க மனம் இல்லை.
“ம்... சொல்லுக்கா... ஆரூஸ்குட்டி எப்படி இருக்கான்..?” என்று அக்கா பெற்ற மகனைக்
கேட்டாள்.
“இங்க எல்லாரும் நல்லா தான் இருக்கோம்.
ஆமா ரெண்டுநாள் முன்னாடி தானே உனக்கு கால்
பண்ணி பேசினேன். அப்போ கூட ஊருக்கு போறதை
பத்தி நீ எதுவுமே சொல்லலை...”
“நான் பேசாத இந்த ரெண்டுநாளும் அம்மாகிட்ட எப்படியும் பேசிட்டு
இருந்திருப்ப, என்னைய எதுக்கு இங்க வரவச்சாங்கனு உனக்குத் தெரிஞ்சும்க்கா... இப்போக்கூட அம்மா சொல்லித்தானே என்கிட்ட பேசுற...?”
“துர்க்கா... இப்போ எதுக்கு இம்புட்டு
கோபமா பேசுற...? ஆமா நீ எப்படி வந்த,
எதுக்கு வரவச்சாங்கனு எனக்குத் தெரியும், உன்கிட்ட அதபத்தி எப்படி பேச ஆரம்பிக்கனு
தெரியாமத்தான் உன் வாயில இருந்தே வார்த்தையை இழுக்க பேச்சுக்கொடுத்தேன்... “
“அப்போ நீயும் அவுங்க பக்கம் தானா, அவங்களை போலவே தேவா மாமாவை கல்யாணம்
செய்யச்சொல்லி என்னைய கட்டாயப்படுத்தப் போறியா...?”
“துர்க்கா... யாரையும் விருப்பம் இல்லாம
இழுத்துட்டு வந்து மனையில உட்கார வைக்க
முடியாது... ஆனா நான் செய்த தப்பை நீயும் செய்யாதனு எச்சரிக்கை பண்ணலாம்ல”
“நீ என்னெக்கா தப்புப் பண்ணின...?”
“தேவா மாமாவை மிஸ் பண்ணிட்டேன் துர்க்கா.
அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சப்போ என்கிட்ட மாமாவே வந்து பேசுனாங்க.
நம்ம அப்பாட்ட என்னைய பெண் கேக்கவானு கேட்டாங்க”
“என்னக்கா சொல்ற...? மாமாவுக்கு உன்மேல
இன்ட்ரெஸ்ட் இருந்ததா...? அதுவும் தைரியமா பொண்ணு கேக்கவானு கேக்குற அளவு தைரியம்
எப்படி வந்தது...?”
“அவர் அப்படி கேட்டதுக்கு ஒருவகையில்
நானும் காரணம். உனக்கேத் தெரியும் உன்கிட்ட
சகஜமா பேசுவார், ஆனா என்கிட்ட எப்பவுமே தள்ளிதான் நிப்பார். ஆனா தூரமா இருந்தாலும்
அவர் பார்வை என்னையவே சுத்திட்டு இருக்கும்.
அவர்கூட நெருங்கிப் பழகாம இருந்தாலும்
அவருக்கு என் மேல ஆசை இருக்குறது எனக்கு அப்போ தெரிஞ்சதும் அந்த வயசுக்கே உரிய ஒரு
ஆர்வத்தில... நம்மை ஒரு ஆள் சைட்
அடிக்கிறாங்கன்ற குறுகுறுப்பில... நானும்
அவர் பார்வைக்கு தூரத்தில் இருந்தே பதில் பார்வை தந்தேன்”
“அடப்பாவி அக்கா...! இது என்ன புதுக் கதையா இருக்கு...?”
“புதுக்கதை எல்லாம் இல்ல... செத்துப்
பொதைச்ச கதைதான்”
“அப்போ நீயும் தேவா மாமாவும் ஒருத்தரை
ஒருத்தர் லவ் பண்ணுனீங்களா...!? “ .
“அப்படிலாம் சொல்ல முடியாது. என்னோட
ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேருக்கு அவர்மேல ஒரு கிரஷ் இருந்துச்சு. வேஷ்டி சட்டையில
பைக்கில் ப்ரெண்ட்ஸ் கூட போகும்போது அடிக்கடி மாமா எங்களை புல்லட்டில் கிராஸ்
பண்ணிப் போவார். எப்போ அவரோட மேன்லி லுக்
பார்த்து என்கூட இருகிறவள்ஹ ஜொள்ளு விடுவாள்ஹ. எனக்கு இப்படி ஒரு முறை மாமன்
இல்லையேனு பேசுவாள்ஹ. அதனால ஸ்கூல் படிக்கிற காலத்தில் மாமா எனக்கு ஹீரோவா தெரிஞ்சாரு.
ஆனால் காலேஜ் போனதுக்குப் பிறகு அப்பா
எனக்கு வரனா கொண்டுவந்த மாப்பிள்ளை எல்லாம் எஞ்சினியர் படிச்சவங்களா, சிட்டியில்
வேலையில இருக்கிறவங்களா இருந்தாங்க.
எனக்கு வந்த வரன்கூட தேவா மாமாவை கம்பேர்
பண்ணிப் பார்த்தேன். IT மாப்பிள்ளை, சிட்டி லைஃப் இதெல்லாம் எனக்கு பெருசா
தெரிஞ்சதால தேவா மாமா வந்து பொண்ணு கேக்கவானு கேட்டதுக்கு ‘இப்படி எல்லாம்
என்கிட்டே பேசாதீங்க’ அப்படினு சொல்லிட்டேன்.
நான் நினைச்சமாதிரியே நல்லா படிச்சு
எம்.என்.சி’ல வேலை பார்க்குற மாப்பிள்ளை, சிட்டி லைஃப், ஹோட்டல், பீச், மாலத்தீவுல
ஹனிமூன் டிரிப்ஸ்னு ஆரம்பத்தில் என்னோட மேரேஜ் லைஃப் ஜாலியாத்தான் தெரிஞ்சது, ஆனா
போகப் போகத்தான் எல்லாம் இருக்கு ஆனா எல்லாமே லோன்ல தான் இருக்குதுன்னு தெரிஞ்சது.
கையில அவர் வாங்குற சம்பளத்த சேவிங்க்ஸ்ல
இன்வெஸ்ட் பண்ணாம அம்புட்டையும் நாங்க புதுசா லைஃப்பை ஸ்டார்ட் பண்ண... என்ஜாய்
பண்ணி அனுபவிக்க... நல்லா செலவு
பண்ணினார்.
ஆனா ஆரூசை நான் மாசமா ஆனதுக்குப்
பின்னாடிதான் எங்க குழந்தையை நாங்க நினைக்கிறது போல நல்ல ஸ்கூலில் சேர்க்கவும்
அவனை லக்சூரியஸா வளர்க்கவும் எங்ககிட்ட
பணம் போதுமான அளவு இல்லைன்னு எனக்குத் தெரிஞ்சது.
அவரோட சம்பளத்தை அதுக்குப் பிறகுதான்
கவனிச்சு அனாவசியமா ஹோட்டல், பார்ட்டினு சுத்தாம, அவரையும் சுத்த விடாம இறுகிப் பிடிக்க ஆரம்பிச்சேன். சேர்த்துவைக்க
பிளான் பண்ணினேன்.
ஆனாலும் போதுமான அளவுக்கு சேவிங்க்ஸ்
எடுத்து வைக்க கூட பத்தாம கடனுக்கே அம்புட்டும் செலவு செய்ய வேண்டிய சூழல். அதனால
இவர் அப்போ இருந்த வேலைல கிடைச்ச சம்பளத்தை விட அதிகமா சம்பளம் வருறதுபோல வேலையத் தேட ஆரம்பிச்சார்.
அப்படி அவர் தேடி ஒரு நல்ல வேலை கிடைக்கிற
ஸ்டேஜ்ல இருந்தது. அதனால இருந்த வேலையை ரிசைன் பண்ணினார். புது கம்பெனில ஜாயின் பண்ண வெயிட் பண்ண
ஆரம்பிச்சார்.
ஆனா கடைசி நேரத்தில் அந்த வேலை கிடைக்காம
போயிடுச்சு. ஏற்கனவே இருந்த வேலையையும் விட்டுட்டதால வீடுக்கு , காருக்கும் லோன்
கட்ட முடியலை. அதைவிட என்ன கொடுமைன்னா நாங்க ஹனிமூன் டூர் போனோமே... அந்த
பேக்கேஜூக்கு கூட கிரிடிட் கார்டுல தான் லோன்
வாங்கி கூட்டிட்டுப் போயிருக்கார்.
ஒவ்வொரு கடனையும் கட்டச்சொல்லி போன் மேல போன்
பண்ணி கேக்க ஆரம்பிச்சாங்க. கடைசியில்
வீட்டுக்கே நேரா வந்து வாசலில் நின்னு கடனை கட்டச்சொல்லி திட்ட
ஆரம்பிச்சிட்டாங்க. அதனால நான் ஆரூசை தூக்கிக்கிட்டு அப்பாகிட்ட ஹெல்ப்
கேக்கலாம்னு நம்ம வீட்டுக்கு வந்தேன்.
அப்போ சென்னையில நீ படிச்சிட்டு இருந்த...
இங்க அப்பாவோ, நான் சொன்னதெல்லாம் கேட்டுட்டு
மாப்பிள்ளை மீது ரொம்ப கோபப்பட்டார் எப்படியாவது அவர் பிரச்சனை எல்லாம் முடிச்சிட்டு
வந்து பொண்ணாட்டி புள்ளையைக் கூப்பிட்டு
போகட்டும். அதுவரை என்னையும் ஆரூசையும் நம்ம வீட்டில் வச்சு பார்த்துகிறேனு சொல்லிட்டார். ஆனா நான் கடன்களை அடைக்க ஹெல்ப்
பண்ணுங்கப்பானு கேட்டேன்.
ஒரு கடன் மட்டும் இருந்தா என்னால சரிபண்ண
உதவ முடியும். ஆனா வீடு, கார், கிரிட்கார்ட் லோன் கல்யாணக் கடன் அப்படின்னு அத்தனையையும்
எப்படி என்னால அடைக்க முடியும்ன்னு சொல்லிட்டார்.
ஆபீஸ்ல தேவா மாமாக்கிட்ட என் நிலைமையை
சொல்லி அப்பா வருத்தப்பட்டுருப்பார் போல... அன்னைக்கு தான் எனக்கு தேவா மாமாவோட பலம்
தெரிஞ்சது.
அன்னைக்கு சாயங்காலம் நம்ம வீட்டுக்கு
என்னைய மாமா பார்க்க வந்தார்.
வந்தவர் என் ஹாஸ்பென்டோட வேலைக்கான
ரெஸ்யூமை அவர் வாட்சப்புக்கு அனுப்பச் சொன்னார். என் முன்னாடியே பிஸ்னெஸ் சர்கிள்ல
உள்ள அவரோட ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கால் பண்ணி
பேசினார்.
அவர் கைவிட்டு போனதா நாங்க புலம்பிக்கிட்டு
இருந்த வேலையை விட நல்ல வேலைய இருந்த இடத்துல இருந்தே போன்ல பேசியே ஏற்பாடு
பண்ணினார்.
அதுமட்டும் இல்ல வீட்டு லோனை மொத்தமா
அடைக்க ஒரே செக் போட்டுக் கொடுத்தார். நான் வாங்க யோசிச்சப்போ. அவர் என்ன சொன்னார்
தெரியுமா..?
“என்னோட அப்பா இறந்த வீட்டுக்குள்ள உங்க
அப்பா மட்டும் என்னைய கூட்டிக்கிட்டு வந்து தொழில் பழக வாய்ப்பு கொடுகாம இருந்திருந்தா...
இப்போ நான் என்ன ஆகியிருப்பேனு எனக்கேத் தெரியாது. இப்போ நான் நல்லா இருக்கேனா
அதுக்கு மாமா போட்ட விதை தான் காரணம், அதன் விளைச்சல் இது... யோசிக்காம இவ்வளவு
பெரிய தொகையை கொடுக்கிற அளவு நான் வளர்ந்து இருக்கேன்.
உனக்கு என்கிட்ட வாங்க சங்கடமா இருந்தா
ஒன்னு செய் இதை நான் கடனா கொடுத்ததா நெனச்சுக்கோ. எப்போ உனக்கு இந்தப்பணத்தை
திரும்பக் கொடுக்கிற சூழல் வருதோ அப்போ கொடு நான் மறுக்காம வாங்கிக்கிறேன். ஆனா நீ
கொடுக்கணும்னு நான் எதிர்பார்க்கலை” அப்படின்னு சொன்னார்.
வெளித் தோற்றத்தை வச்சு அவரை ஏப்ப சாப்பையா
நெனச்சிட்டோமேனு அப்பத் தோணிச்சு.
இப்படிப் பட்ட ஒருத்தரை மிஸ் பண்ணிட்டேனே
அப்பட்டின்ற ஃபீல் அந்த நிமிஷம் எனக்கு வந்தது. அதனாலத்தான் உனக்குச் சொல்றேன்
தேவா மாமாவை மிஸ் பண்ணிடாத...
அவர் காலேஜ்ல சேர்ந்து படிக்காம இருந்து இருக்கலாம்
ஆனா வாழ்க்கைப் பாடத்துல பி.ஹை.டி வாங்கி இருக்கார். இப்போ பெரிய பொஷிசன்ல
இருக்கார்.
உனக்கு அவர் இணையானு நீ யோசிச்சா அது
தப்பு, அவருக்கு பொண்ணு கொடுக்க பெரிய பெரிய வீட்டில் உள்ளவங்க நீ நானு ரெடியா
இருக்கிறதா அப்பா என்கிட்ட சொன்னார். ஆனா மாமாதான் ஏனோ என் கிட்ட கல்யாணத்துக்கு
கேட்டு நான் மறுத்ததுக்குப் பின்னாடி இப்போ வரை கல்யாணத்தில் இன்ட்ரெஸ்ர்ட் இல்லாமத்
தான் இருக்கார்.” என்றாள்.
“எப்படிக்கா உன்னைய லவ் பண்ணிட்டு... அவரை
விட ஒன்பது பத்து வயசுக்கு சின்னவளான என்னைய... அதுவும் காதலிச்சவளோட தங்கச்சியவே கல்யாணம் பண்ணிக்க ரெடியாகிட்டார்...?”
“இங்க பாரு துர்க்கா... அவர் ஒன்னும்
அப்பாகிட்ட உன்னை பொண்ணு கேட்கலை. அப்பாதான் அவருக்கு அடிக்கடி உடம்புக்கு முடியாம
போறதால அவருக்கு எதுவும் ஆகுறதுக்குள்ள அவர் பிஸ்னசையும் உன்னையும் தேவா மாமாகிட்ட
ஒப்படச்சுடணும்னு அவர்கிட்ட பேசி உன்னை கல்யாணம் பண்ண சம்மதம் வாங்கி இருக்கார்.
மாமா நம்ம அப்பா பேச்சை மறுத்துப்
பேசமாட்டார். அவர் ‘துர்க்கா
ரொம்ப சின்னப் பொண்ணு மாமா... நான் எப்படி அவள ...? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க...
அப்படின்னு சொல்லி இருக்கார். துர்க்கா
சம்மதிச்சா எனக்கும் சம்மதம்னு சொல்லி இருக்கார்” என்றாள்.
அதென்னவோ துர்க்காவால் தேவாவை தனக்கு
மாப்பிள்ளையாக எண்ண முடியவில்லை. அதுவும் அக்காவை விரும்பி இருக்கிறார் எனத்
தெரிந்தபின் இன்னுமே அவளின் மறுப்பு வலுத்தது. அதையெல்லாம் விட முக்கியக் காரணம்
விக்னேஷ். அவன் சொன்ன காதலை ஏற்று இவளும் காதலிக்க தொடங்கி ஒருவாரம் கூட ஆகவில்லை. தேவாவை கல்யாணம் செய்வது விக்னேஷ் க்கு பண்ணும்
துரோகம் என்று தோன்றியது. எனவே ஒரு முடிவுடன் தனது அறையை திறந்துகொண்டு வெளியில்
வந்தாள்.
ஹாலில் கிடந்த சோபாவில் அமர்ந்து போனில்
யாருடனோ தீவிரமாக பேசிக்கொண்டிருந்த அம்மாவை கடந்து சென்றாள்.
‘சாந்தி அக்காதான் என்கிட்ட பேசியதை பத்தி
அம்மாகிட்ட சொல்லிகிட்டு இருப்பாள்’ என்று கணித்தபடி ஹாலை தாண்டி தனது பெற்றோரில்
அறையில் இருக்கும் அவளின் தந்தையிடம் தனது முடிவை சொல்லச் சென்றாள்.
சாந்தியுடம் மொபைலில் பேசிக்கொண்டிருந்த
சுப்பு துர்க்கா தங்களது அறைநோக்கி செல்வதை கண்டு “உன் தங்கச்சி அப்பாகிட்ட போறாள்...
என்னென்னு பார்த்துட்டு வாரேன்” எனச்சொல்லிவிட்டு அவளும் மகளின் பின்னாடியே
அறைக்குள் வந்து சேர்ந்தாள்.
உள்ளே வந்த மகளை படுக்கையில்
அமர்ந்திருந்த கனி அரசு கேள்வியாய்
பார்த்தார்.
“அப்பா உங்ககிட்ட பேசணும்.” என்ற மகளை
கூர்ந்து கவனித்தார். அவள் முகத்தில் ஒருவித பிடிவாதல் உள்ளதை கண்டுகொண்டார்.
குரலில் கொஞ்சம் கடுமையான தொனியுடன் “பேசணுமா...?
என்ன பேசணும்?”
“பிளீஸ் பா, தேவா மாமாவை கல்யாணம் பண்ணிக்கிடச்
சொல்லி கட்டாயாப் படுத்தாதீங்கப்பா. எனக்கு மாமா வேணாம்”
“ஏன் தேவாவை வேணாம்னு சொல்ற...? அவனை விட
ஒரு நல்ல மாப்பிள்ளைய தேடிட முடியும்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எல்லா நல்லது கெட்டதையும்
யோசிச்சு தான் இந்த முடிவு எடுத்துருக்கேன் ”
“அப்பா, காரணம் இல்லாம நான் வேணாம்னு
சொல்லலை, என்னால அவரை கல்யாணம் பண்ண முடியாது. ஏன்னா நான் என்கூட வேலை பார்க்கிற
விக்னேஷை லவ் பண்றேன். அவரைத்தான் கல்யாணம் செய்ய ஆசைப்படுறேன்” என்று தைரியமாக
மனதில் உள்ளதை பட்டென்று போட்டு உடைத்தாள்.
அறைக்குள் நுழைந்த சுப்பு மகள் யாரோ
ஒருவனை காதலிக்கிறேன் என்று கொஞ்சம் கூட பயம் இல்லாமல் சொல்வதைகண்டு...
“என்ன தைரியம் இருந்தா அவர் முன்னாடியே
காதலிக்கிறேனு நெஞ்சை நிமித்துகிட்டு சொல்லுவ...?
இப்படி எல்லாம் எங்க தலையில கல்லை
தூக்கிப் போடுவேனு தெரிஞ்சிருந்தா படிக்க, வேலைபார்க்க ஆசைப்படுறனு வெளிய விட்டுருக்கவே
மாட்டேன். வீட்டுக்குள்ளயே வச்சி அடக்க ஒடுக்கமா வளர்த்திருப்பேன்..”
என்று கூறியபடி மகளின் முதுகில்
ஆத்திரத்துடன் அடிக்கும் மனைவியை அடக்கும் விதமாக.
“சுப்பு... நீ கொஞ்சம் இங்குட்டு வா...
நான் அவளுக்கு புரிய வைக்கிறேன்” என்றார் கனி அரசு.
கணவன் சொன்னதும் மகளை கோபம் கனன்ற
கண்களால் முறைத்துக்கொண்டே நின்றுவிட்டார் சுப்பு.
“இங்க பாரு துர்க்கா... நம்ம
குடும்பத்துக்கு இந்த காதல் கண்றாவி எல்லாம் செட் ஆகாது. காலம் மாறிப் போனாலும்
மாற்றத்துல நமக்கு தேவையானதை எடுத்துக்கணும் தேவை இல்லாததை ஒதுக்கிடனும்.
அதனாலத்தான் ‘சென்னையில இருக்கிற காலேஜில படிப்பேனு நீ முரண்டு பண்ணியதும், சரி, ஆசைப்பட்டுட்ட...
பொட்டபுள்ளையா இருந்தாலும் அங்க உனக்கு பாதுகாப்பு எல்லாத்தையும் வந்து பார்த்து உறுதி
பண்ணிட்டு படிக்க அனுப்புனேன்.
படிப்பு முடிஞ்சு பெங்களூரில்
வேலைகிடைச்சிருக்குனு சொன்னதும் அதேபோல அனுப்பி வச்சேன்.
அதுக்காக நீ காதல் கீதல்னு போவேன்னு
முரண்டு பண்ணினா... அதுக்கும் சரின்னு சொல்லுவேனு கனவுலயும் நெனக்காத...” என்றார்.
“என்னால என் மனசை மாத்தி உங்களுக்காக தேவா
மாமாவை எல்லாம் கல்யாணம் பண்ண முடியாதுப்பா...”
“அப்போ என் பேச்சுக்கு நீ மதிப்பு கொடுக்க
மாட்ட அப்படித்தானே...?”
“எமோஷனலா பிளாக்மெயில் பண்ணி எனக்கு
புடிக்காத கல்யாணத்தை பண்ணச்சொல்லி மிரட்டுறீங்கப்பா...
நான் இப்போ மேஜர்...
எனக்கு வருற லைப் பார்ட்னரை செலக்ட்
பண்ணுற அளவு எனக்கு மெச்சூரிட்டி இருக்கு..”
“ஓ...ஹோ... நீ மேஜர் ஆனதால இனிமேல் பெத்து வளர்த்து ஆளாக்குன எங்க சப்போர்ட்
உனக்குத் தேவையில்லை அப்படித்தானே...”
“நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை, எனக்கு
என் லைப் பார்ட்னரை சூஸ் பண்ற ரைட்ஸ் இருக்குதுன்ற அர்த்தத்தில் சொன்னேன்”
“எல்லாம் ஒன்னு தான் நீ யாருடா எனக்கு
மாப்பிள்ளை பார்க்கனு சொல்லாம சொல்ற , என் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து நான்
சொல்லுற மாப்பிள்ளையை கல்யாணம் செய்றதா இருந்தா எனக்கு மகளா இருக்கலாம், இல்லன்னா
நான் உனக்கு அப்பனும் இல்ல நீ எனக்கு மகளும் இல்ல...”
கணவரின் வார்த்தையை கேட்டு பதறிய
சுப்பு... என்னெங்க என்ன வார்த்தை ச்சொல்றீங்க...? ரெண்டு அப்பு கன்னத்தில் அப்பி
சொன்னபேச்சு கேட்டு நடக்க சொல்லுவீங்களா... அதைவிட்டு அப்பனும் இல்லை மகளும்
இல்லைன்னு தள்ளி நிறுத்தி பட்டுத் திருந்தட்டும்னு விட அவள் ஆம்பளை பிள்ளை
இல்லைங்க.” என்றவரிடம்.
“பொண்ணுன்ற நெனப்பு அவளுக்கு இல்லை
சுப்பு, நீ இப்போ சொன்னத என்ன அர்த்தத்தில் அவள் யோசிப்பாள் தெரியுமா... பட்டுத்
திருந்துறதில் கூட ஆணுக்கு ஒரு நியாயம் பெண்ணுக்கு ஒரு நியாயமான்னு தான்
விதண்டவாதமா யோசிப்பா...”
“ஸாரிப்பா, நீங்க இந்த அளவு ஸ்டப்பன்னா இருப்பீங்கன்னு
நான் எதிர்பார்கலை..., என்னால இதுக்கு மேல எனக்கு பிடித்தமில்லாததை உங்களுக்கும்
அம்மாவுக்கு புரிய வைக்க முடியும்னு தோணலை...
அம்மா கூப்பிட்டாங்கனு இங்க கிளம்பி
வந்துருக்கவே கூடாது..., இங்க உண்மையான நிலவரம் என்ன ஏதுன்னு அக்காக்கிட்ட
விசாரிச்சிட்டு வந்துருக்கணும்..., நான் கிளம்புறேன்” எனச்சொல்லி ரூமைவிட்டு
வெளியேறும் துர்க்காவின் முதுகை பார்த்து ஆத்திரத்துடன்
“கிளம்பி வீட்டைவிட்டு ஒரு அடி எடுத்து
வச்ச அவ்வளவு தான் அத்தோட பெத்தவங்க
எங்களையும் இந்த வீட்டையும் நீ மறந்திடனும்... “ என்று உடல் நடுங்க வார்த்தையில்
உறுதியோடு கர்ஜித்தார்.
ஒருநிமிடம் அசையாமல் அப்படியே நின்றவள்
எதுவும் பதில் பேசாமல் வேக எட்டு வைத்து தனது அறைக்குள் சென்றவள் கண்களில் கண்ணீர்
வழிந்தாலும் முகத்தில் பிடிவாதமும் செயலில் வீம்புடனும் தான் கொண்டுவந்த டிராலியை
எடுத்துகொண்டு வேகவேகமாக வீட்டை விட்டு வெளியேறினாள் துர்க்கா.
---தொடரும்---

No comments:
Post a Comment