anti - piracy

Post Page Advertisement [Top]


மீரா தாத்தா வயது 16 !(ஆதன்-னின்)    
அடாவடி - 05 !
                                                                       

பிளாஷ்பேக்!

ஒரு விசயத்த இங்க சொல்லவேண்டியது முக்கியம். கதை இப்ப நடக்கற காலம் 1985!
மீராவோட வயசு அப்ப 26 !

ஊருக்குள்ள ஒட்டுன சந்தோசத்துல காட்டு வேலைக்கு இன்னைக்கு லீவ் வுட்டுட்டாரு மீரா…. செல்லாயி எந்திரிச்சதே எட்டு மணிங்கறது பல சங்கதிகள சொல்லாம சொன்னது…..

காலையில எந்திரிச்ச மீரா செல்லாய தயாரகச்சொல்லி தானும் தாயாராகி வண்டிய எடுத்தார்…… சந்தன நிற பட்டுச்சேலைக் கட்டி, தலையில பூவுனும், நெற்றி வகிட்டுல குங்குமம்னும், காலு, கை, காது, மூக்கு, கழுத்துனு மீரா அம்மாவோட நகைங்களும், மீரா வாங்கித்தந்த நகைகளும் மின்ன, புருசன் தந்த காதலெனும் கர்வத்தோட புல்லட்ல ஏறி மீரோவோட தோளைப் பற்றி உட்கார்ந்தா செல்லாயி…… தாலிக்கட்டி முத நாள் சைக்கிள்ல புடிப்புக்கு சீட்டிய புடிச்சிக்கிட்டு குனிஞ்ச தலையோட வந்த செல்லாயின் நிலைமையும், தலையும் இப்ப நிமிர்ந்திருந்தது…..

குறுவன் பட்டியில பேண்ட் போடற நாலைஞ்சி பேர்ல நம்ம மீராவும் ஒரு ஆளு!
கருப்பு பெல்பாட்டம் பேண்ட், மஞ்சள், நீலம், சிகப்புல பூ போட்ட பெரிய காலர் வைச்ச இறுக்கமான சட்டைனு மீரா லுக் கலக்கலா இருந்துச்சி…..

புல்லட் நேரா ஊர் கோயில் வாசல்ல நிக்க செல்லாயி இறங்கினாள்! சைக்கிள் மாதிரி ஒத்த கையில புல்லட்ட இழுத்து சென்டர் ஸ்டேன்ட் போட்டுட்டு கோயிலுக்குள்ள மீரா போக, வாங்கிட்டு வந்துருந்த கற்பூரம், ஊதுவத்திய செல்லாயி கொளுத்தி வைக்க, ரொம்பநாள் கழிச்சி செல்லாயியோடு மீராவும் சாமி கும்பிட்டார்!

அடுத்து புல்லட் நேரா கருப்பன் வூட்டு வாசல்ல போய் நின்னு ஹாரன் அடிக்க கருப்பனும், வள்ளியும் வாசலுக்கு வந்து ஆச்சரியத்துல நிக்க………

" ஏன்டா மாப்ள வூடு தேடி வந்தா வாயவே தொறக்காம நிக்கறிங்க, காலையில ஏதும் பஞ்சாயத்த கூட்டி தீர்ப்ப மாத்தி புட்டானுங்களா வேலையத்தவனுங்க"னு மீரா கேட்க…..

கருப்பனும் வள்ளியும் பதறி " ஐய்யய்யோ வாங்க வாங்க உள்ள"னு கைய புடிச்சி கூட்டி போனாங்க………

" டே மீரா சாப்டாம போவக்கூடாது, நான் உன்னிய மாதிரி சொந்த காட்டுக்காரன் கெடையாது, கோழி ஆடுனு சட்டுனு அடிச்சி போட, இரு போய் கடையில ஏதாவது புடிச்சிட்டு வந்திடறன், ஏ புள்ள டீ தண்ணி ஏதாவது வை"னு கருப்பன் சொல்ல…..

" அண்ணா அதலாம் ஒன்னும் வேணாம். வூட்ல என்ன இருக்குதோ அத செய்ங்க, நாங்களும் சாப்டாம போவப்போறதில்ல"னு செல்லாயி சொல்ல வள்ளி முழிச்சா……

மெதுவா தயங்கிய வள்ளிய பேச ஆரம்பிச்சா செல்லாய பாத்து……
"ஏங்க மாவு இருக்கு இட்லி, தோசைனு சுடங்களா?!"

" எம்பேரு செல்லாயி உனுக்கு தெரியாதா?"னு செல்லாயி உரிமையா வெள்ளந்தியா கேட்க,

" தெரியுங்களே"

" அப்புறம் என்னா செல்லாயினே கூப்டு வள்ளி, உம்பேர மாமன்தான் சொன்னுச்சி வண்டியில வரப்ப"

இப்படியான செல்லாயின் பேச்சை கேட்ட வள்ளிக்கு செல்லாயி மேல இருந்த சாதி அது இதுங்கற எல்லா தப்பான எண்ணமும் போயிருச்சி. ஆனா செல்லாயி வாழ்ற வாழ்க்கை மேல இருக்க பொறாமை மட்டும் போகல!

" இதா வள்ளி இரு நானும் வாரன் சேந்து ஆக்குனா சீக்கிரம் ஆய்டும், வூட்லயும் எதும் செய்யல மாமனும் பசி தாங்காது"னு விடு விடுனு வள்ளியைக் ஓட்டிக்கிட்டு போய் சமைக்க ஆரம்பிச்சா செல்லாயி….

" ஏன் செல்லாயி நீ போட்டிருக்க நகையில எதுலாம் உங்க வூட்ல போட்டது"

" ஹஹஹ நான் இங்க வரப்ப கட்டியிருந்த துணிக்கூட மாமன் வாங்கிக் குடுத்ததுதான். வயல்ல வேலை செஞ்சவள அப்படியே இல்ல தாலி கட்ட கூட்டிக்கிட்டு போச்சு மாமன்"

" எத்தன நாளா விரும்பனிங்க?!"

" நாளும் இல்ல மாசமும் இல்ல, மாமன் பார்வையில தப்பில்ல என்கிட்ட, அதால நாள்போக நல்லா பேசுவன் அவ்வளவுதான். திடீர்னு ஒருநாள் வூட்டுக்கு வந்து பொண்ணுக் கேட்டப்பதான் மாமன் விரும்பறது எனக்கே தெரியும். அப்பதான் விரும்ப ஆரம்பிச்சன். ஆனா இதுலாம் சரிப்பட்டு வராதுனு வூட்ல அப்பன் அம்மானு சொல்ல மனச மாத்திக்கிட்டு இந்த ஊர்பக்கம் வேலைக்கு கூட வரல,

ஆனா திடீர்னு மாமன் வந்து முன்னாடி நின்னப்ப எல்லாம் உடைஞ்சு போச்சு, காலு கையில மண்ணு அழுக்கோட, கட்டியிருந்த கந்தலோட வந்தவதான், இல்லனாலும் எங்கூட்ல காது மூக்குக்கு போட்டு கட்டிக்குடுக்க கூட வசதிலாம் கெடையாது. மிஞ்சிப்போனா நாலு துணிமணி வாங்கி தந்துருப்பாங்க"னு பேச்சில் எந்தவித கெளரவமோ, பெருமையோ இல்லாம சொல்லி முடிச்சா செல்லாயி……

செல்லாயி துணிமணி, நகை நட்டு, உடம்பு வனப்பு வரை ஆழமா பாத்த வள்ளி ஆழமா ஒரு பெருமூச்சி விட்டாள்…..

" ஆமா வள்ளி ஜாக்கெட்டுக்காக அண்ணன பக்கத்திலயே வுடறதில்லையாம்" னு குறும்பா செல்லாயி கேட்க…..

" ச்சீ துப்புக்கெட்டது இதையும் சொல்லியிருச்சா!?!" னு வெட்கத்துல வள்ளி சுருண்டா……

" நாங்க இங்க வந்ததே மத்தியான ஆட்டத்துக்கு டவுன்ல படம் பாத்துட்டு டெய்லரு கடைக்கி உங்கள கூட்டிக்கிட்டு போகத்தான்"னு செல்லாயி சொல்ல, வள்ளிக்கு மாளாத சந்தோசம்……

செல்லாயியும், வள்ளியும் இட்லிய எடுத்துட்டு வர……

" என்ன கல்யாண விருந்தா நடக்குது உக்காருங்க எல்லாரும் திம்பம்"னு மீரா பொம்பளைங்கள உக்கார வைச்சாப்ல…..

சாப்ட்டு முடிச்சி கருப்பனும், வள்ளியும் டவுனுக்கு போக தயாரானார்கள்…..

"டே மீரா காசு ஒன்னும் பெருசா இல்லடா பைய்ல"னு மீரா காதுல மெதுவா கிசுகிசுத்தான் கருப்பன்….

" தெரியும்டே உன் நெலமை, காசுலாம் பிரச்சினை இல்ல"னு சொன்ன மீரா, கருப்பன் சட்டையில சில்ர நோட்டா நூறு ரூவாய திணிச்சிட்டு பஸ் ஸ்டாப்புக்கு வந்து சேரச் சொல்லிட்டு வண்டிய எடுத்து செல்லாயியோட கிளம்பினார்…..

"டே கருப்பா சேலம் பழைய பஸ்ஸ்டேன்டுல கோட்டை மாரியம்மன் கோயில் வாசல்ல நிக்கறன் பஸ் வந்ததும் ஏறி வாங்க"னு கிளம்பி போனார் மீரா……

இதயகோயில் படம் வந்து பாட்டுக்காக நல்லா ஓடிக்கிட்டு இருந்த சமயம், டிக்கெட்ட எடுத்தவங்க சினிமா கொட்டாய்க்குள் போய் உட்கார்ந்தார்கள்!

வள்ளிக்கு இதெல்லாம் வருசத்துக்கு ஒருதடவ நடந்தாலே ஆச்சரியம், அதில்லாம உடம்புக்கு ஏத்த ஜாக்கெட்ட தைக்கப் போறங்கறது பெரிய சந்தோசம்…….

ஒரு வழியா படம் முடிஞ்சி வெளிய வந்தவங்க, அக்ரஹார தெரு துணிக்கடையில வள்ளிக்கு ஜாக்கெட்ட எடுத்து, பக்கத்துல டெய்லரு கடையில தைக்க குடுத்துட்டு, கோட்டை மாரியம்மன் கோயில்ல சாமிய கும்பிட்டுட்டு கிளம்ப தயாரானார்கள்……

" கருப்பா பஸ்ஸ வுட்டு எறங்கி நேரா வூட்டுக்கு போயிராத, ஆட்டுத் தொடைக்கறி உப்புத்தடவி ஒருவாரமா வெயில்ல காய போட்டு வைச்சிருக்கன், வள்ளியோட நேரா வூட்டுக்கு வந்துரு, சாப்டுட்டு படுக்கறதுக்கு வூட்டுக்கு போவிங்க, வள்ளி வந்திரு"னு மீரா சொல்ல, செல்லாயும் சொல்லிட்டு புறப்பட்டார்கள்……

" ஏங்க கருப்பண்ணன் உங்களுக்கு ரொம்ப சினேகிதமா" னு செல்லாயி கேட்க…..

" அத்த பயதான், என்னைய மாதிரியே வூட்டுக்கு ஒரே பையன். மாமன் குடி கூத்தியா நோவுனே கொஞ்சநஞ்சம் இருந்த சொத்தையும் வித்து அழிச்சிட்டு செத்து போயிட்டாப்ல"

" ப்ச் பாவம்"

" அப்ப இருந்தே நம்ம வூட்லதான் கெடப்பான். உம் மாமியாவும் வஞ்சனை இல்லாம சோறு, பண்டம்னு போடும் கருப்பனுக்கு….
காசு பணம் காடு, அப்பனு இல்லாதவன் அதால இவன புடிக்கும், நல்ல பய ஆனா பயந்தாங்கோலி"

" ஏதாவது முடிஞ்சா ஓதவி செஞ்சி வுடுங்க பொழப்புக்கு பாவம்"

" நேரம் வரப்ப செய்வம் செல்லா, எங்க இவன் கஷ்டம் புரியாம அந்த புள்ள ஏசுது போல"

" வள்ளி நல்லா வாழனும்னு நெனைக்குதுங்க, எல்லா பொம்பளைங்களும் நெனைக்கறதுதான், புருசங்ககிட்டதான எதிர்பாக்க முடியும்"

" சரிதான். இந்த ஒரு வருசத்துல தனியாவே இருந்துட்ட இல்ல அதான் உனக்கு அப்பப்ப பேச்சு துணையா இருக்கட்டுமேனு இழுத்து வைக்கறன் வள்ளிய"

" ஹஹஹ ஒட்டுதோ இல்ல அதுவும் சாதி பாக்குதோ என்னமோ யார் கண்டா!?"

" அப்புடி சாதி பாத்தா நாம நம்மள வுட்டு தள்ளி வைச்சிருவம் செல்லா"னு மீரா சொல்ல செல்லா சத்தமா சிரிச்சா……

" நாம வூட்டுக்கு போனதும் உங்கக்கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லனும் மீசைக்காரரே"

" முக்கியமான விசயமா?! ஏன் இப்பவே சொன்னா நான் இந்திரன் ஆய்டுவனோ?!"

" ம்கூம். வூட்லதான் சொல்லுவன்"

" சரி சொல்றது நல்ல விசயமா இருந்தா முத்தம் கித்தம் குடுக்கனும் வூடுதான் சரியா இருக்கும்"

" அப்ப வாய தயார் பண்ணி வைச்சுக்கோ மீசைக்காரரே"!!!

அப்படி என்ன பெரிய நல்ல விசயத்தை சொல்லபோறா செல்லாயி?!!

பெரிய விசயம்தான்…… செல்லாயிக்கு ரெண்டு மாசம் தள்ளி போயிருக்கு. மாநிறத்துல ஒரு ஆண் கொழந்தயோ, பெண் கொழந்தயோ வயித்துல வளருது, வயசு ரெண்டு மாசம்!

முற்போக்குவாதியின் புரட்சிக்கு வித்தாய், முத்தொன்றை சுமக்கிறாள் செல்லாயி!

Episode 04                 --தொடரும்--                Episode 06

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib